அன்புக்குரியவர்களே!

நீங்கள் தொடர்ந்து திருமறைத்தீபத்திற்குக் காட்டிவரும் அன்புக்கும், ஆதரவுக்கும் ஆசிரியர் என்ற முறையில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் ஆதரவைவிட பத்திரிகையை வாசித்து நீங்கள் பயனடைகிறீர்கள் என்பதே பத்திரிகை குழுவுக்கு அதிக மனமகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து கடிதங்கள் எழுதி கருத்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, எங்களை ஊக்கப்படுத்தியும் வருகிற உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.

இந்த இதழில் தமிழினத்துக் கிறிஸ்தவத்தைப் பாதித்து வரும் சில ‘வைரஸ்’களை அடையாளம் காட்டியிருக்கிறோம். தமிழினத்தின் கிறிஸ்தவ மறுமலர்ச்சியை நாடி ஜெபத்தோடு உழைத்துக் கொண்டிருக்கும் நாம் தொடர்ந்து நம்மினத்துக் கிறிஸ்தவத்தைப் பாதித்து வரும் ‘வைரஸ்’களை அடையாளம் காணாமல் இருக்க முடியுமா? பழையனவற்றோடு போராடிவருகிறவேளை புதிய ஆபத்துக்களும் முளைத்துவிடுகின்றன. இவ்விதழின் முதலாவது ஆக்கம் இதை விளக்குகிறது. இந்த ஆக்கத்திற்கேற்ற அட்டைப்படத்தை சகோதரன் ஜெயபால் (மதுரை) வடிவமைத்துத் தந்திருக்கிறார்.

திருமறைத்தீபத்தை பல நாடுகளிலும் இருந்து வாசகர்கள் வாசித்துப் பயனடைந்து வருகிறார்கள். சமீபத்தில் பல வருடங்களாகப் பத்திரிகையை வாசித்து வரும் ஒரு சகோதரனின் ஆத்மீக வாழ்க்க்கும், ஊழியத்துக்கும் பத்திரிகை உதவியவிதத்தைப் பற்றி வட இந்தியாவில் இருந்து எழுதியிருந்தார். அறிந்துகொண்ட சத்தியத்தின் அடிப்படையில் தன் வாழ்க்கையை மாற்றி அமைக்க அவர் உறுதிபூண்டிருக்கிறார். சத்தியம் இப்ப டிப் பலரின் கண்களைத் திறந்துவைக்கிறது; அவர்களுடைய ஆத்மீக தாகத்தைத் தணிக்கிறது. சத்தியத்தை வாய்விட்டு வாழ்த்துகிற எல்லோருமே அதன்படி வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளும் துணிச்சலுள்ளவர்களாக இருப்பதில்லை. அது வருத்தத்திற்குரியதுதான். ஆவியானவர் மட்டுமே அத்தகைய துணிச்சலைத் தர முடியும். அந்தத் துணிவு மாம்சத்தில் பிறப்பதல்ல; பரலோகத்தில் இருந்து வருவது. லூதரிடம் அது இருந்தது, கல்வினிலும், நொக்ஸிலும் அதைப் பார்க்கிறோம். ஸ்பர்ஜனிடமும் அது இருந்தது. சத்தியத்தில் ஆர்வம் மட்டுமல்ல அதைத் தியாகத்தோடு பின்பற்றும் துணிச்சலும் நம்மக்களுக்குக் கிடைக்க நாம் ஜெபிக்கத்தான் வேண்டும். அத்தகைய ஆவிக்குரிய துணிச்சலில்லாமல் சீர்திருத்தம் ஏற்பட்டுவிட முடியுமா என்ன?

– ஆசிரியர்.

வேதத்தைவிட்டு விலகியோடும் நம்மினத்துக் கிறிஸ்தவம்

தமிழினத்தின் மத்தியிலும் ஏன், இந்தியா முழுவதுமே கிறிஸ்தவர்கள் மத்தியில் வேத அறிவு மிகவும் குறைந்து காணப்படுவதை சத்தியம் தெரிந்தவர்கள் ஒருபோதும் மறுக்கமாட்டார்கள். மெய்க்கிறிஸ்தவத்தை அதாவது வேதபோதனைகளின் அடிப்படையில் அமையும் கிறிஸ்தவத்தை இல்லாமலாக்குவதற்கு பிசாசு உலக முழுவதும் எடுத்து வரும் நட வடிக்கைகளுக்கு எண்ணிக்கை இல்லை. இதைச் செய்வதில் ஊக்கம் தளராமல் சாத்தான் ஈடுபட்டு வருகிறான். இந்த 21 ஆம் நூற்றாண்டில் அவன் மேற்கத்திய நாடுகளில் செய்துவரும் ஒரு காரியத்தை இங்கே விளக்குவது அவசியம்.

மேற்கத்திய பின் நவீனத்துவ சமுதாயம்

பின்நவீனத்துவ சிந்தனைகள் (Postmodernism) பரவிக் காணப்படும் மேற்கத்திய சமுதாயத்தில் அந்த சமுதாய சிந்தனைக்கேற்ற விதத்தில் வேதம் பற்றிய சிந்தனைகளை கிறிஸ்தவர்கள் மத்தியில் மாற்ற முயன்று வருகிறான் பிசாசு. அதாவது தெளிவான அடிப்படை சத்தியம் என்று ஒன்று இல்லை என்று நம்பி சிந்திக்கின்ற பின்நவீனத்துவ சமுதாயத்தில் சபை அமைய வேண்டுமானால் அதே சிந்தனையைப் பின்பற்றி, வேதம் அடிப்படை சத்தியத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், ஒவ்வொருவரும் தங்களுக்குகந்த விதத்தில் அதன் வார்த்தைகளை விளங்கிக்கொள்ள முடியும் என்று விளக்குகின்ற பிரசங்கிகளையும், நூலாசிரியர்களையும் பிசாசு உருவாக்கிவிட்டிருக்கிறான். இது தவறுகளும், குறைகளுமற்ற பூரணமான வேதத்தின் அதிகாரத்திற்கு சாவு மணி அடிக்கும் கைங்கரியம் என்பது சாத்தானுக்கு நன்றாகத் தெரியும். அதைப் புரிந்துகொள்ளாத பலர் பின்நவீனத்துவ சமுதாயத்தில் கிறிஸ்துவின் இராஜ்யத்தை அமைக்கிறோம் என்ற எண்ணத்தில் பிசாசின் ஊழியத்தை செய்து வருகிறார்கள். இவர்களில் ஒருவர் செடில்பேக் சபையின் போதகரும், பிரபல நூலாசிரியருமான ரிக் வொரன் (Rick Warren).

Continue reading

இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு

நீதிமானாக்குதல்

திரும்பவும் ஒருமுறை . . .

கர்த்தர் தன்னுடைய கிரிபையின் மூலமாக தன்னால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்கு இயேசு கிறிஸ்து மூலம் இரட்சிப்பை அளித்தார். உலகத் தோற்றத்துக்கு முன்பாக திரித்துவ தேவனால் திட்டமிடப்பட்டு வரலாற்றில் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட அந்த இரட்சிப்பில் ஒரு படிமுறை ஒழுங்கிருப்பதை வேதபோதனைகளில் இருந்து அறிந்துகொள்ளுகிறோம். இந்தப் படிமுறை ஒழுங்கில் அழைப்பு முதலிடத்தை வகிக்கிறது. அதற்கடுத்தபடியாக மறுபிறப்பும், அதையடுத்து மனமாற்றமும் இந்த ஒழுங்கின் அம்சங்களாகக் காணப்படுகின்றன. தத்துவ ரீதியில் இவற்றை இவ்வாறு ஆராய்ந்து படிக்கும்போது இரட்சிப்பைக் குறித்த ஆழமான அறிவைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. இந்தப் படிமுறை ஒழுங்கில் காணப்படும் கிருபைகள் எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைக்கிரமாக நிகழ்வதில்லை. இரட்சிப்பை அடைகின்ற மனித னில் இவையெல்லாம் ஒருசேர நிகழ்கின்றன. இருந்தபோதும் இரட்சிப்பாகிய கிருபையில் இத்தகைய ஒரு தத்துவார்த்த ஒழுங்கு காணப்படுகிற தென்பதையும், அவ்வொழுங்கில் அறிவுபூர்வமான ஒரு படிமுறை காணப்படுகின்றதென்பதையும் புரிந்துகொள்வது அவசியம். இவ்வொழுங்கில் காணப்படும் கிருபை வரிசைகள் இடம்மாறி அமைந்துவிட முடியாது என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, இந்த வரிசையில் அழைப்புக்கு முன்னால் வேறு எதுவும் இடம்பெற முடியாது. அழைப்பை அடுத்தே மறுபிறப்பு இடம்பெறும்.

Continue reading

கிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியம் – 5

கிறிஸ்து போதிக்கும் திருச்சபை ஊழியத்தை வேதத்திலிருந்து ஆராய்ந்து வருகிறோம். இதில் மூன்றாவது தலைப்பான சுவிசேஷ ஊழியத்தில் திருச்சபையே அதிமுக்கியமானதும், அடிப்படையானதுமான இடத்தை வகிக்கிறது. சுவிசேஷ ஊழியங்கள் எப்போ தும் திருச்சபையில் ஆரம்பித்து திருச்சபை அமைப்பதிலேயே போய் முடிய வேண்டும் என்பதை ஏப்ரல்-ஜூன் 2006 காலாண்டு இதழில் விளக்க ஆரம்பித்தோம். அவ்விதழில் கர்த்தருடைய திருச்சபையின் மகிமை புதிய ஏற்பாட்டில் விளக்கப்பட்டிருக்கும் விதத்தை ஆராய்ந்தோம். கர்த்தருடைய ஊழியங்கள் அனைத்தும் அவருடைய திருச்சபையினூடாக நடைபெற வேண்டியது எந்தளவுக்கு முக்கியமென்பதை உணர்வதற்கு அவருடைய திருச்சபையின் மகிமையைப் பற்றிய வேத அறிவு அவசியம். நாம் வாழ்கிற இக்காலப்பகுதியில் கர்த்தருடைய திருச்சபை பற்றிய அறிவு விசுவாசிகள் மத்தியில் அருகிக் காணப்படுகின்றது. திருச்சபை பற்றிய அறிவில்லாததால் அதில் வாஞ்சையின்றி கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். திருச்சபை பற்றிய உணர்வில்லாமல் புற்றீசல்போல் அதிகரித்து கிறிஸ்தவ ஊழியங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் தொகை நம்மத்தியில் எண்ணிமாளாது. திருச்சபைக்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற எண் ணப்போக்கில் அநேகர் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் மக்கள் மத்தியில் கிறிஸ்தவம் இன்றைக்கு திருச்சபையில் இருந்து முற்றாகப் பிரிக்கப்பட்டு எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. இதன் காரண மாகவே கடந்த இதழில் வேதம் திருச்சபையின் மகிமையைப் பற்றி எந்தள வுக்கு ஆணித்தரமாக விளக்குகிறது என்று பார்த்தோம்

இனித் திருச்சபையைப் பற்றி அந்த ஆக்கத்தோடு தொடர்புடைய வேதம் போதிக்கும் சில முக்கியமான உண்மைகளை இந்த இதழில் பார்ப்போம்.

Continue reading

தேவனும் மனிதனுமாய் . . .

பிலிப்பியர் இரண்டாம் அதிகாரத்தில் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியர் சபை மக்களுக்கு எழுதிய அறிவுரையில் இயேசு கிறிஸ்து தன்னைத் தாழ்த்திக் கொண்டதைப் போல அவர்கள் தங்களுடைய வாழ்க்கையிலும் தாழ்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எழுதுகிறார். இப்பகுதியில் இயேசு கிறிஸ்து தன்னைத் தாழ்த்திக் கொண்ட விதத்தை விளக்கும் பவுல் ஆறு முதல் எட்டுவரையுள்ள வசனங்களில் பின்வருமாறு குறிப்பிடுவதைப் பார்க்கிறோம்.

“அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் . . . அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு . . . தம்மைத் தாமே தாழ்த்தினார்.” (பிலிப்பியர் 2:6~8)

கிறிஸ்துவின் தாழ்த்துதல் என்று பவுல் இப்பகுதியில் விளக்குவது கிறிஸ்து மனிதரூபமெடுத்து இவ்வுலகிற்கு வந்து பட்ட பாடுகளைப் பற்றித்தான்; அதுவும் அப்பாடுகளின் உச்சகட்டமான சிலுவை மரணத்தையும் உள்ளடக்கியே பவுல் விளக்குவதைக் காண்கிறோம். இவ்விதமாக கிறிஸ்து தன்னைத் தாழ்த்திக்கொண்டது உலகத்தோற்றத்துக்கு முன்பாக பிதாவினால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுடைய பாவநிவாரணத்திற்கு வழியேற்படுத்தி அவர்களுக்கு இரட்சிப்பைப் பெற்றுத்தரவே. இதெல்லாம் நிறைவேறுவதற்கு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாகப் பிறக்க வேண்டிய அவசியமிருந்தது.

Continue reading

கிறிஸ்தவக் கோட்பாடுகள்

கேள்வி 102: விசுவாசிகளின் குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்கலாமா?

பதில்: விசுவாசிகளின் குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்கக்கூடாது. ஏனெனில், பரிசுத்த வேதாகமத்தில் அதற்கான எந்தக் கட்டளையோ, உதாரணங்களோ அல்லது உள்ளடக்கமான போதனைகளோ கொடுக்கப்படவில்லை.

(உபாகமம் 12:32; நீதிமொழிகள் 30:6; அப்போஸ். 8:12; 10:47-48).

குழந்தை ஞானஸ்நானம் (திருமுழுக்கு) என்பது என்ன?

விசுவாசிகளின் குழந்தைகளுக்கு தலையில் தண்ணீர் தெளித்துக் கொடுக்கப்படும் ஞானஸ்நானமே அது. இதன் மூலம் விசுவாசிகளின் குழந்தைகள் விசுவாசிகளைப் போலவே திருச்சபையின் அங்கமாக இணைத்துக் கொள் ளப்படுகிறார்கள்.

இந்த நடைமுறை எங்கிருந்து வந்தது? இதைப் பின்பற்றுபவர்கள் யார்?

ஆதித் திருச்சபையில் இந்த நடைமுறை இருக்கவில்லை. இயேசு கிறிஸ்துவும், அவருடைய அப்போஸ்தலர்களும் இத்தகைய நடைமுறைக்கான போதனைகளை அளிக்கவில்லை. அவர்கள் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததாக நாம் வேதத்தில் எங்குமே வாசிப்பதில்லை. இதை நாம் ரோமன் கத்தோலிக்க மதத்தில் பார்க்கிறோம். அம்மதம், தேவநீதியை ஞானஸ்நானத்தின் மூலம் மனிதனுக்குள் புகுத்தி அவனை தேவனுடைய பிள்ளையாக்கக் கூடிய கிருபையைத் தான் கொண்டிருக்கிறது என்று தவறாகப் போதிக்கிறது. அந்த அடிப்படையில் அவர்கள் கத்தோலிக்கருடைய குழந்தைகளுக்கு குழந்தை ஞானஸ்நானத்தை வழங்கி சபையில் இணைத்துக் கொள்கிறார்கள்.

Continue reading

கேள்வி? – பதில்!

கேள்வி: “கிறிஸ்தவ சபை” என்ற பெயரில் ஒரு பிரிவு நம் நாட்டில் இருக்கிறது. அது மட்டுமே உண்மையான சபை என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் அங்கத்தவர்கள் சபை ஆரம்பித்தால் கிறிஸ்துவின் பெயரில் மட்டுந்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதற்கு மத்தேயு 16:18 வசனத்தை உதாரணம் காட்டுகிறார்கள். இது எந்தளவுக்கு உண்மை என்பதை விளக்குவீர்களா? – இம்மானுவேல் எலியாஸ், தமிழ் நாடு.

பதில்: இந்த சபைப் பிரிவு பற்றியோ அதன் கோட்பாடுகள் பற்றியோ எனக்கு அதிகம் தெரியாது. ஓரளவுக்கு மட்டுமே இதைப்பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இதே பெயரில் மேலை நாடுகளில் ஒரு சபைப் பிரிவு இருக்கிறது. ஆனால், அது ‘லிபரல்’ கோட்பாட்டைப் பின்பற்றும் பிரிவாகும்.

Continue reading

திருச்சபை வரலாறு

சுவிட்ஸர்லாந்தில் சீர்திருத்தம்

அல்ரிக் சுவிங்லி (Ulrich Swingli)

சீர்திருத்தவாதம் நெருப்புப் போல் ஐரோப்பாவில் பரவியபோது லூதரின் போதனைகள் ஜெர்மனியில் இருந்து டென்மார்க், நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகளில் பரவி இறுதியில் அந்நாடுகளின் உத்தியோகபூர்வமான மதம் என்ற இடத்தையும் பிடித்தது. ஆனால், இதேவேளையில் சுவிட்ஸர்லாந்தில் இன்னொரு வகையான புரொட்டஸ்தாந்து பிரிவு உருவாகியது. ஜெர்மனியில் ஏற்பட்டதுபோன்ற புரட்சிகரமான நிகழ்ச்சிகள் எதுவும் சுவிட்ஸர்லாந்தில் நிகழாவிட்டாலும் இங்கு உருவான சீர்திருத்தம் மிகவும் முக்கியமானது. லூதரனிசத்தில் காணப்பட்டது போன்ற பாரம்பரிய விசுவாசம் சுவிட்ஸர்லாந்து சீர்திருத்தப் பிரிவில் காணப்படவில்லை. “வேதம் மட்டுமே சர்வ அதிகாரம் கொண்டது” என்ற உயர்ந்த நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டெழுந்த இப்பிரிவு படங்கள், சிலைகள், விசேஷ அம்சங்கள், யாத்திரை போகுதல் போன்ற அத்தனையையும் ஒட்டுமொத்தமாக ஆராதனையில் இருந்து விலக்கி வைத்தது. பொது ஆராதனையில் ஆர்கன் (Organ) வாசிப்பதையும் விட்டெறிந்தது. இந்தவகையில் சுவிட்ஸர்லாந்தில் உருவான சீர்திருத்தவாதம் ஜெர்மனியில் ஆரம்பித்ததைவிட மிகவும் புரட்சிகரமாக இருந்தது. இந்த சீர்திருத்தவாத பிரிவு மிக இலகுவாக பிரான்சு, ஸ்கொட்லாந்து, ஹங்கேரி, ஒல்லாந்து மட்டுமல்லாமல் ஜெர்மனியின் பெரும்பகுதிக்கும் பரவியது.

Continue reading