வேதத்தைவிட்டு விலகியோடும் நம்மினத்துக் கிறிஸ்தவம்

தமிழினத்தின் மத்தியிலும் ஏன், இந்தியா முழுவதுமே கிறிஸ்தவர்கள் மத்தியில் வேத அறிவு மிகவும் குறைந்து காணப்படுவதை சத்தியம் தெரிந்தவர்கள் ஒருபோதும் மறுக்கமாட்டார்கள். மெய்க்கிறிஸ்தவத்தை அதாவது வேதபோதனைகளின் அடிப்படையில் அமையும் கிறிஸ்தவத்தை இல்லாமலாக்குவதற்கு பிசாசு உலக முழுவதும் எடுத்து வரும் நட வடிக்கைகளுக்கு எண்ணிக்கை இல்லை. இதைச் செய்வதில் ஊக்கம் தளராமல் சாத்தான் ஈடுபட்டு வருகிறான். இந்த 21 ஆம் நூற்றாண்டில் அவன் மேற்கத்திய நாடுகளில் செய்துவரும் ஒரு காரியத்தை இங்கே விளக்குவது அவசியம்.

மேற்கத்திய பின் நவீனத்துவ சமுதாயம்

பின்நவீனத்துவ சிந்தனைகள் (Postmodernism) பரவிக் காணப்படும் மேற்கத்திய சமுதாயத்தில் அந்த சமுதாய சிந்தனைக்கேற்ற விதத்தில் வேதம் பற்றிய சிந்தனைகளை கிறிஸ்தவர்கள் மத்தியில் மாற்ற முயன்று வருகிறான் பிசாசு. அதாவது தெளிவான அடிப்படை சத்தியம் என்று ஒன்று இல்லை என்று நம்பி சிந்திக்கின்ற பின்நவீனத்துவ சமுதாயத்தில் சபை அமைய வேண்டுமானால் அதே சிந்தனையைப் பின்பற்றி, வேதம் அடிப்படை சத்தியத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், ஒவ்வொருவரும் தங்களுக்குகந்த விதத்தில் அதன் வார்த்தைகளை விளங்கிக்கொள்ள முடியும் என்று விளக்குகின்ற பிரசங்கிகளையும், நூலாசிரியர்களையும் பிசாசு உருவாக்கிவிட்டிருக்கிறான். இது தவறுகளும், குறைகளுமற்ற பூரணமான வேதத்தின் அதிகாரத்திற்கு சாவு மணி அடிக்கும் கைங்கரியம் என்பது சாத்தானுக்கு நன்றாகத் தெரியும். அதைப் புரிந்துகொள்ளாத பலர் பின்நவீனத்துவ சமுதாயத்தில் கிறிஸ்துவின் இராஜ்யத்தை அமைக்கிறோம் என்ற எண்ணத்தில் பிசாசின் ஊழியத்தை செய்து வருகிறார்கள். இவர்களில் ஒருவர் செடில்பேக் சபையின் போதகரும், பிரபல நூலாசிரியருமான ரிக் வொரன் (Rick Warren).

Continue reading