அன்புக்குரியவர்களே!

தீபத்தை மனநிறைவோடு தொடர்ந்து படித்து, கற்று கர்த்தரை மகிமைப்படுத்தி வருகிற வாசகர்கள் அனைவருக்கும், பத்திரிகையின் நலத்தில் பங்குகொள்கிற அனைவரின் சார்பாக என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய ஆண்டை நாம் வரவேற்கின்றவேளை உலகம் எங்கு போய்க்கொண்டிருக்கிறது என்பதை ஒருதடவை நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. பயங்கரவாதம் இந்த உலகத்தில் வெகுசாதாரணமானதொன்றாக நிலைபெற்று நிற்கின்றது. சக உயிர்களை மதித்து நடக்கும் மனிதத் தன்மைக்கு என்ன நேர்ந்துவிட்டது என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. ஈராக்கிலும், இஸ்ரவேலிலும், ஆப்கானிஸ்தானிலும், ஸ்ரீ லங்காவிலும் அநியாயமாக உயிர்ப்பலி அன்றாடம் நிகழ்ந்து வருகின்றது. மனிதனை மனிதனாகப் பார்க்காமல் இனத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும், அரசியல் நோக்கங்களுக்காக கொன்று குவித்து வருகின்ற மனித மிருகங்கள் உலகில் அதிகரித்து விட்டார்கள். உலகில் அமைதியோடு இருக்கும் நாடுகள் இன்று வெகுசிலவே.

மனிதனின் இருதயம் மாறினால் தவிர மற்றவனைக் கொன்று வாழும் அவனுடைய குணத்தை மாற்ற முடியாது. உலகில் எந்த மதமோ, நல்லறிஞரின் போதனைகளோ, நற்குணங்களோ இதை மாற்றி அமைக்க முடியாது. கர்த்தர் நமக்கருளித்தந்துள்ள கிறிஸ்துவின் சுவிசேஷத்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும். சுவிசேஷம் அறிவிக்கின்ற கிறிஸ்துவை இரட்சகராக மனிதன் அறிந்துகொள்ளும்வரை அவனால் மிருகச் செயல்கள் செய்வதைக் கட்டுப்படுத்த முடியாது. இன்று சுவிசேஷ ஊழியத்தின் அவசியம் என்றுமில்லாதவகையில் அத்தியாவசிய மானதாக இருக்கிறது. உலக சுகத்தையும், நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்த்துக்கொள்ளும் போக்கையும், சுயநல நோக்கங்களையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைத் தீவிரமாக நாம் பிரசங்கிக்க ஆரம்பிக்க வேண்டும். கிறிஸ்துவை வல்லமையாக ஆவியின் அனுக்கிரகத்தோடு பிரசங்கிக்க வேண்டும். ஆத்துமாக்களுக்கு இன்று கிறிஸ்து தேவை. கிறிஸ்து இல்லாமல் அவர்களால் வாழ்வில் அமைதி காணமுடியாது; அடுத்தவனை மதித்து வாழ முடியாது.

– ஆசிரியர்.

ஜோண் ஓவன்

கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்

சீர்திருத்தக் கிறிஸ்தவத்தைப் பற்றியும், அதன் பெரும் பிரசங்கிகளையும், இலக்கியங்களையும் கடந்த இரண்டு சமீபகாலமாகத்தான் தமிழினம் ஆர்வத்தோடு அறிந்து பயின்று வருகின்றது. 16ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் திருச்சபை வரலாற்றில் எழுந்த சீர்திருத்தத்திற்குப் பின்பு அதற்கு அடுத்த நூற்றாண்டில் பரிசுத்தவான்களின் (பியூரிட்டன்) திருச்சபை சீர்திருத்தத்திற்கான உழைப்பைப் பற்றி சபை வரலாற்றில் வாசிக்க முடிகிறது. 16ம் நூற்றாண்டில் மார்டின் லூதருக்கும், ஜோண் கல்வினுக்கும் பிறகு 17ம் நூற்றாண்டில் ஜோண் பனியன், ஜோண் ஓவன் போன்றோர் தோன்றி திருச்சபை சீர்திருத்தம் தொடரும்படிப் பார்த்துக்கொண்டனர். சீர்திருத்தவாதிகளும், பரிசுத்தவான்களும் (பியூரிட்டன்) திருச்சபை வரலாற்றில் அழிவற்ற இடத்தைப் பிடித்திருக்கின்றார்கள். இன்று வேதம் நம் கரத்தில் இருப்பதற்கும், கர்த்தரின் திருச்சபை இந்த உலகில் தலைதூக்கி நிற்பதற்கும், வேதபூர்வமான கிருபையின் போதனைகளையும், சீர்திருத்த போதனைகளையும் உலகறிந்திருப்பதற்கும் இவர்கள் ஆற்றியுள்ள பணி மகத்தானது.

இவர்களின் பணிகளில் மேலானது, இரத்தினக் கற்களைப்போன்ற விலைமதிப்பில்லாத அநேக கிறிஸ்தவ இலக்கியங்களை எழுத்தில் வடித்து நமக்களித்துச் சென்றிருப்பதுதான். இவையனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. சிறந்த கல்விமானான ஜோண் ஓவன் விலைமதிப்பற்ற பல முத்துக்களை நமக்களித்துச் சென்றிருக்கிறார். அவருடைய எழுத்துக்கள் அனைத்தும் பதினேழு வால்யூம்களாக இன்றும் பதிப்பில் இருந்து வருகின் றன. அவற்றில் ஒன்றுதான், அவர் எழுதிய “கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்” (The Death of Death in the Death of Christ) என்ற நூலாகும். இந்நூலுக்கு ஜிம் பெக்கர் (Jim Packer) என்ற தற்கால இறையியல் அறிஞர் ஆங்கிலத்தில் ஒரு அருமையான முன்னுரையை இருபத்தி ஐந்து பக்கங்களில் வழங்கியிருக்கிறார். ஆய்வு செய்து நீண்டதொரு முன்னுரை வழங்க வேண்டிய அளவுக்கு ஜோண் ஓவனின் வேத ஆய்வுத் திறமை இந்நூலில் அமைந்திருந்தது.

Continue reading

கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்

கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்

(The Death of Death in the Death of Christ by John Owen)

ஜெரமி வோக்கர் (Jeremy Walker)

“வாசகர்களே! நீங்கள் தொடர்ந்து இந்நூலை வாசிக்கும் எண்ணத் தைக் கொண்டிருந்தால், சிறிது நேரத்தைக் கொடுத்து இதை வாசிக்கும்படி தயவாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன். ஒரு நாடக அரங்கில் நுழைந்துவிட்டு உடனே வெளியேறிவிடுகிறவரைப் போல இந்நூலின் தலைப்பை மட்டும் வேகமாய் வாசித்துவிட்டுப் போகிறவராக இருந்தால், இதை நீங்கள் வாசிப்பதில் பயனில்லை. போய் வாருங்கள்! இந்நூலில் விளக்கப்பட்டிருக்கும் மிகமுக்கிய மான போதனைகளில் ஆர்வமுடையவர்களுக்கும், கிறிஸ்தவ சிந்தனைகளின் மூலம் ஆத்மீகத் தேவைகளைத் தீர்த்துக்கொள்ள வும், இந்நூலில் விளக்கப்பட்டிருக்கும் அரும் போதனைகளின் மூலம் பயனடையவும் விரும்புகிறவர்களுக்கு நான் ஒரு சில வார்த்தைகளை ஆரம்பத்திலேயே முன்வைக்க விரும்புகிறேன்.”

“கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்” எனும் நூலில் ஜோண் ஓவன் மேல்வரும் வார்த்தைகளையே வாசகர்களுக்கு ஆரம்ப உரையாக அளித்து நூலை எழுத்தியிருக்கிறார். அசட்டையாக நூலை வாசிக்க முற்படும் வாசகனை இந்த வார்த்தைகள் சுண்டி இழுக்காது. அவ்வாறு அவனை சுண்டி இழுப்பதற்காக ஓவன் இந்த வார்த்தைகளை அவன் முன் வைக்கவில்லை. தான் வாசகனுக்கு முன் படைக்கும் விஷயத்தின் முக்கியத்துவத்தை நன்றாக உணர்ந்திருந்த ஓவன் உடனடியாகவே விஷயத்துக்கு வந்துவிடுகிறார். தன்னுடைய நூலில் கையாளப்பட்டிருக்கும் விஷயம் அதிமுக்கியமானது என்பதால் அவர் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது நூலை வாசிக்கும் வாசகனும் அந்த நோக்கத்தோடேயே நூலை அணுக வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார். கவனத்தோடு சிந்தனையைப் பயன்படுத்தி வாசிக்கிறவர்கள் ஓவனின் நூலின் மூலம் பெரும் பயனடைவார்கள்.

Continue reading

ரிக் வோரானின் நூல்கள்

ரிக் வொரனின் (Rick Warren) இரண்டு நூல்களைக் குறிப்பிட்டு (Purpose-Driven Life, Purpose-Driven Church) இதற்கு முன்பு எழுதியிருந்தோம். அது பற்றி சிலர் எழுதிக் கேட்டிருந்தார்கள். இந்த நூல்கள் அமெரிக்காவில் நல்ல விற்பனையைக் கண்டிருக்கின்றன. இவை ஏனைய நாடுகளையும் போய் சேர்ந்திருக்கும். ரிக் வொரனின் நூல்களில் எல்லா நூல்களையும் போலப் பொதுவான நல்ல விஷயங்களும் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அவற்றில் காணப்படும் நல்ல விஷயங்களைவிட நிறைந்து வழியும் ஆத்மீக ஆபத்தை விளைவிக்கும் தவறான விஷயங்ளைப் பற்றித்தான் வாசகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவற்றில் முக்கியமானவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்:

Continue reading

தணிந்துபோகும் அன்பு – ஒக்டேவியஸ் வின்ஸ்லோ (1808-1878)

இப்போது நாம் பார்க்கப்போகிற உண்மை நம்மைத் தாழ்மைப்படுத்துகிறதும், ஆத்மீக ரீதியில் பாதிக்கக்கூடியதொன்றாகும். தேவனுடைய பிள்ளையின் வாழ்க்கையில் கிருபையின் அன்பு பெருமளவுக்கு தணிந்துபோகக்கூடியதாக இருக்கிறது என்பதே அந்த உண்மையாகும். இதன் மூலம் தேவனுடைய பிள்ளை தன்னுடைய இரட்சிப்பை இழந்துபோகலாம் என்று நான் கூறவரவில்லை; ஆனால், அதன் வல்லமை அவனில் தணிந்துபோகும் என்றுதான் சொல்ல வருகிறேன். இந்த உண்மையை நாம் அடிக்கடி வலியுறுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். விசுவாசம், அன்பு, நம்பிக்கை, பக்தி என்பனவெல்லாம் தேவனுடைய பிள்ளை துன்பத்தை அனுபவிக்கின்றபோது பெரும் பாதிப்புக்குள்ளாகி வலிமையிழந்து காணப்பட்டாலும் அவற்றை அவன் பூரணமாக ஒருபோதும் இழந்துவிட முடியாது என்று வேதம் சுட்டிக் காட்டுகிறது. அவற்றை அவன் முற்றாக இழந்துவிடலாம் என்று கூறுவது தேவனுடைய வல்லமையையும், ஞானத்தையும் குறைவுபடுத்துவதோடு, அந்தக் கிருபைகளின் அழியாத்தன்மையையும் மறுதலிப்பதில் போய் முடிந்துவிடும். தேவனுடைய அன்பு ஒருவரில் தணிந்துபோகும்போது கீழ்வரும் குணா தியங்களை அவருடைய வாழ்க்கையில் காணமுடியும்.

Continue reading

ஆத்மீகப் பின்வாங்குதல்

வில்லியம் பிளமர் (1802-1880)

கிறிஸ்தவ வாழ்க்கையில் பின்வாங்கிப் போவதை நாம் சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது. அப்படிப் பின்வாங்கிப் போவது என்பது நிதர்சனமான உண்மை. அநேகர் இதுபற்றிக் கவலைப்படுவதில்லை. பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்துவதும், கர்த்தருக்கு எதிராகப் போவதும் வெகு சாதாரணமானதொன்றாக அவர்கள் எண்ணுகிறார்கள் என்பதை அவர்களுடைய வார்த்தைகளும் செயல்களும் வெளிப்படுத்துகின்றன. கர்த்தருக்கு எதிராக இருந்துவிடப்போகிறோமே என்ற பயம் அவர்களுக்கு இல்லை. அந்தப் பயம் அவர்களைக் கட்டுப்படுத்துவதாகத் தெரியவில்லை. சிறு பாவமும் நமது சிந்தனையில் உருவாகிவிட்டால் அதைத் தொலைத்து விடுவதற்கு நாம் முயற்சி எடுக்காவிட்டால் நாம் பெரிய ஆபத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். கர்த்தரை விட்டு விலகிப்போவது இருட்டை நோக்கிப் போவதுபோலாகும்.

Continue reading

சீர்திருத்த கிறிஸ்தவம்

தேவை இன்று தமிழினத்தில்

நமது பத்திரிகை வாசகர்களுக்கு “சீர்திருத்த கிறிஸ்தவம்” என்ற பதங்கள் புதியதாக இருக்காது. கடந்த பதினொரு வருடங்களாக அதுபற்றி எழுதி வந்திருக்கிறோம். சீர்திருத்த கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கொண்டவர்களின் எழுத்துக்களையும் அறிமுகப்படுத்தி வந்திருக்கிறோம். அதன் அவசியத்தைப் பற்றியும் பல தடவைகள் எழுதி வாசகர்களின் சிந்தனைகளைத் தூண்டிவிட்டிருக்கிறோம். பதினாறாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ வரலாற்றில் கர்த்தர் செய்த பேரற்புதத்தின் விளைவே சீர்திருத்த கிறிஸ்தவம்.

நமது விசுவாசத்தைக் “கிறிஸ்தவம்” என்றும் நம்மைக் “கிறிஸ்தவர்கள்” என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டால் போதாதா? நமது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு இப்படிப் பெயர் கொடுப்பது அவசியமா? என்று சிந்திக் கிறவர்கள் நம்மத்தியில் இருக்கிறார்கள். சீர்திருத்தக் கிறிஸ்தவத்தைப் பற்றி அதிகம் தெரியாதவர்களும் இருக்கிறார்கள். இந்தப் பெயரில் தங்களையோ, தங்கள் சபைகளையோ அறிமுகப்படுத்திக்கொள்ளத் தயங்குகிறவர்களும் அதிகம். இதுபற்றி ஆத்துமாக்களுக்கு அதிகம் தெரியாதபோது இப்படி நம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதால் ஊழியத்துக்கு ஆபத்து ஏற்படும் என்று நினைப்பவர்களும் ஏராளம். இப்படிக் கிறிஸ்தவ வரலாறு, போதனைகள் என்றெல்லாம் நேரத்தை வீணடிப்பதைவிட வெறும் ஜெபத்தைச் செய்து, வேதம் வாசித்து ‘சிம்பிளாக’ இருந்துவிடுவதே மெய்யான கிறிஸ்தவம் என்று எண்ணி வாழ்கிறவர்கள் எண்ணிக்கையும் பெரிது.

Continue reading

இரட்சிப்பின் படிமுறை ஓழுங்கு

மகவேட்பு

இதுவரை இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் அழைப்பில் ஆரம்பித்து நீதிமானாக்குதல்வரையும் ஆராய்ந்து வந்திருக்கிறோம். இந்த இதழில் இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் அடுத்ததாக இடம் பெறும் “மகவேட்பைப்” பற்றி ஆராய்வோம். இதை ஆங்கிலத்தில் Adoption என்று அழைப்பார்கள். நீதிமானாக்குதலை அடுத்து வரவேண்டியது மகவேட்பே. கிறிஸ்து நமக்களித்திருக்கும் இரட்சிப்பின் ஆசீர்வாதங்களில் ஒன்று மகவேட்பு. இதனை புத்திரசுவீகாரம் என்றும் அழைக்கலாம். தத்தெடுத்தல் என்றும் இதற்குப் பொருள். கர்த்தராகிய பிதா கிறிஸ்துவின் மூலம் தம்முடைய மக்களை சுவீகாரப் புத்திரர்களாக தத்தெடுத்திருக்கிறார் என்பதையே மகவேட்பாகிய கோட்பாடு விளக்கு கிறது. இரட்சிப்பின் படிமுறை அம்சங்களில் காணப்படும் ஏனைய கிருபை களோடு பிரிக்கமுடியாத தொடர்புடையதாக மகவேட்பு இருந்தபோதும் இது ஒரு தனிப்பட்ட கிருபையாக இருப்பதை நாம் உணர்வது அவசியம். இன்னொருவிதத்தில் சொல்லப்போனால் நீதிமானாக்குதல் மகவேட்பாகாது. மறுபிறப்பும் மகவேட்பாகாது. சிலர் மறுபிறப்பினால் நமக்குக் கிடைத்துள்ள நீதிமானாக்குதலின் மறுபெயர் மகவேட்பு என்ற தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். மறுபிறப்பையும், நீதிமானாக்குதலையும்விட வேறுபட்ட தனிதன்மைளைக் கொண்டு இந்தக் கிருபை விளங்குகிறது.

Continue reading

மறவன் நொக்ஸ்

ரத்த வெறிபிடித்த
பெண்ணரசி மேரிக்கு
அஞ்சாமல் நெஞ்சுயர்த்தி
சத்தியத்தை சத்தியமாய்
முன்னின்று பிரசங்கித்து
“மனந்திரும்பு இப்போதே
மறுபடியும் வராது
இன்னோர் வேளை”
என்று அதிரடியாய்
எக்காளமிட்டார் நொக்ஸ்
ஸ்கொட்லாந்து நாட்டில்
சீர்திருத்தம் உதித்தவேளை

“பிடித்தால் விடுவேனா
உன்னை உயிரோடு”
என்ற வெறியோடு
ஏதேதோ செய்தாள்
இதயம் கல்லாக
இரகசியமாய் மேரி
தேசத்து இராணியின்
கோபத்தை உணர்ந்தும்
பிடிபட்டால் உடன்போகும்
உயிர் என்பதறிந்தும்
நிறுத்தாமல் உழைத்தார்
நொக்ஸ் தன் தேசத்தில்

னுதினமும் தேசத்து
மக்களை சந்தித்து
சீர்திருத்த வழிகாட்டி
சிந்திப்பீர், செயல்படுவீர்
செருக்குள்ள போப்புக்கு
படிப்பிப்பீர் நற்பாடமென
சிங்கம்போல் சீறி
கத்தோலிக்க அராஜகத்தை
அடியோடு சாய்க்க
அரும்பாடு பட்டார்
ஸ்கொட்லாந்து ஈன்றெடுத்த
அருந்தவப்புதல்வன் நொக்ஸ்
கத்தோலிக்கப் பிடியிலிருந்து
திருச்சபையைக்காத்து
அருளுரை, ஆராதனை
அனைத்தும் வேதத்தின்படி
சத்தியமாய் நடக்க
உத்தமமாய் போராடி
உயிரிழக்கும் வேளையிலும்
மனிதனுக்கு அஞ்சாதவன்
மண்ணில் இங்கு மாண்டானென
மறவன் நொக்ஸ்
எழுதச் சொன்னான் தன்
கல்லறையின் தலைமாட்டில்

– சுபி –