உழைப்பைப் பற்றி இந்த இதழில் சில ஆக்கங்கள் வந்திருக்கின்றன. நம்மினத்தில் பெரும்பாலான விசுவாசிகள் உழைப்பைப் பற்றிய வேதபூர்வமான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளாமல் இருக்கின்றனர். ஊழியத்திலும் நேர்மையாக, நேரத்தைப் பயன்படுத்தி உழைக்கிறவர்கள் தொகை குறைவு. வேதம் உழைப்பைப் பற்றி என்ன சொல்லுகிறது என்பதை விளக்கியிருக்கிறேன். இந்தப் போதனைகளை இறையியல் கற்று வருகின்ற ஊழியக்காரர்கள் மத்தியில் ஏற்கனவே கொடுக்கப்பட்டவை. எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்க இவற்றை இங்கே தந்திருக்கிறேன்.
காணிக்கை கொடுப்பதைப் பற்றி பல தடவை விசுவாசிகள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். காணிக்கை வாங்குவதில் நடந்துவரும் குளருபடிகள் இன்று கிறிஸ்தவ ஊழியத்தை அவிசுவாசிகள் மத்தியில் அசிங்கப்படுத்தியிருக்கின்றது. காணிக்கை கொடுப்பது பற்றிய இந்த இதழில் வந்திருக்கும் ஆக்கம் அநேகருடைய சந்தேகங்களைப் போக்கி காணிக்கை களைக் கொடுக்க வேண்டிய இடத்தில் மட்டும் கர்த்தரின் மகிமைக்காக கொடுக்க உங்களைத் தூண்டுமானால் அதுவே இந்த ஆக்கத்திற்கு கிடைத்த பலனாக அமையும்.
இந்த இதழ் தவிர்க்க முடியாத சில காரணங்களால் சிறிது தாமதமாக உங்கள் கரங்களை வந்தடையும். மன்னித்துக் கொள்ளுங்கள். இதை எழுதி முடித்து வெளியிடக் கிருபை பாராட்டிய கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன். வழமையாக வந்துகொண்டிருக்கும் சில ஆக்கங்கள் இந்த இதழில் இடம்பெறவில்லை. இனி வரப்போகும் இதழ்களில் அவை தொடர்ந்து வெளிவரும். இந்தப் பத்திரிகையை வெளியிடும் இலக்கியப் பணியில் ஈடுபட்டு வருகிறவர்களுக்காக தொடர்ந்து ஜெபியுங்கள். பிரதிபலன் எதிர்பார்க்காமல் இதை வெளியிட என் சபை மக்கள் உட்பட அநேகர் உழைத்து வருகிறார்கள். இதுவரை வந்துள்ள இதழ்களைப் போலவே இந்த இதழும் உங்களுக்கு அநேக ஆத்மீக ஆசீர்வாதங்களை அள்ளித்தர கர்த்தர் கிருபை பாராட்டுவாராக.
– ஆசிரியர்.