எங்கே, எப்படி, யாருக்குக் கொடுப்பது காணிக்கை?

காணிக்கை கொடுப்பதைப் பற்றி நீங்கள் நிச்சயம் எழுத வேண்டும் என்று தமிழக நண்பர் ஒருவர் என்னைக் கேட்டுக் கொண்டார். அது பற்றி விபரமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இருந்தது. காணிக்கை யாருக்குக் கொடுக்க வேண்டும்? எங்கே, எப்படிக் கொடுக்க வேண்டும்? என்பது பற்றி சரியான விளக்கம் இல்லாமல் இருந்து வருகிறவர்கள் நம் மத்தியில் அதிகம். இந்த ஆக்கம் இதற்கு வழி செய்யுமானால் அது கர்த்தரின் ஆசீர்வாதமாக இருக்கும்.

கூட்டங்களில் காணிக்கை கேட்பதும், பல தடவைகள் காணிக்கை எடுப்பதும், பத்திரிகைகள், சஞ்சிகைகள், இ-மெயில்கள் வாயிலாகக் காணிக்கை கேட்டுப் பலரை நெருக்குவதென்பது ஊழியங்களில் இன்று வழக்கமாக நடந்து வருகிற நிகழ்ச்சி. காணிக்கைகள் இல்லாமல் ஊழியங்கள் நடக்க முடியாது என்பது உண்மையானாலும், காணிக்கை வாங்குவதில் மட்டும் பலர் காட்டி வருகிற தீவிர ஆர்வம் பெரும் சந்தேகத்தை ஊட்டிவிடுகிறது. ஒரே கூட்டத்தில் பல தடவைகள் காணிக்கை எடுக்கும் அயோக்கியத்தனத்தை இன்று பல கிறிஸ்தவ கூட்டங்களில் பார்க்கலாம். முதல் காணிக்கையில் பணமும், இரண்டாம் காணிக்கையில் நகையும், மூன்றாம் காணிக்கையில் இதற்கு மேலும் எவ்வளவு கொடுக்க முடியும் என்ற வாக்குறுதியையும் பெற்றுப் பல தடவைகள் காணிக்கை எடுத்து கூட்டத்துக்கு வந்தவர்கள் கையில் இருப்பதையெல்லாம் இழந்துவிட்டு வீட்டுக்குப்போக வைத்துக்கொண்டிருக்கிறார்கள் அநேக போலி ஊழியர்கள். காணிக்கை எடுப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஊழியத்தைப் பெரிய வியாபாரமாக நடத்தி வருகிறவர்கள் தொகை தமிழர்கள் மத்தியில் அதிகம். கர்த்தருக்காக எதையும் இழக்கலாம் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டு வாழ்கிறவர்களே இத்தகைய போலித்தனங்களுக்கு தங்களை ஒப்புக்கொடுத்து நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள். இந்தளவுக்கு காணிக்கைப் பிரச்சனை இன்று அகோரமாக வளர்ந்து நிற்கிறது; கிறிஸ்தவ ஊழியத்தை அவிசுவாசிகளும் மதிக்கமுடியாமல் செய்து வைத்திருக்கிறது.

Continue reading