வாசகர்களே!

பத்திரிகையை வாசித்துப் பயனடைந்து வரும் நல்ல உள்ளங்கள் அனைத்திற்கும் என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய அன்பாலும், ஜெபத்தாலும் தொடர்ந்து பத்திரிகையைத் தடையில்லாமல் வெளியிட்டு வரமுடிகிறது. கடிதங்களின் மூலம் நீங்கள் அடைந்து வரும் பயன்களை விளக்கும்போது எங்கள் தலைமேல் சுமத் தப்பட்டிருக்கும் பெரிய பொறுப்பை நாம் உணர்கிறோம். பரந்து விரிந்திரிக்கும் சமுத்திரத்தில் விழும் சிறு துளி போல் இந்தக் காலத்தில் சீர்திருத்தப் பணியை தமிழர்கள் மத்தியில் செய்யப் புறப்பட்டுக் குழந்தைபோல் தவழ்ந்துகொண்டிருக்கிறது திருமறைத்தீபம். திருமறைத் தீபம இதழ்களை வாசித்துக் கண்திறக்கப்பட்டதாக எழுதும் வாசகர்களை நினைத்துப் பெற்ற தாய் அடையும் மகிழ்ச்சியை அடைகிறார்கள் பத்திரிகைக் குழுவினரும் அவர்களைச் சார்ந்தவர்களும்.

பத்திரிகை பிறந்து பல வருடங்களாகியும் தமிழ் கிறிஸ்தவம் இருக்கும் நிலையில் நாம் பெரு மாற்றத்தைப் பார்க்கவில்லை. கிறிஸ்தவர்கள் மத்தியில் நிச்சயம் இன்று ஓர் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. நம் மத்தியில் இருக்கும் போலித்தனம் எந்தளவுக்கு வேரூன்றிப் பரவியிருக்கிறது என்ற நிதர்சனமான உண்மையையும் கிறிஸ்தவர்களில் பலர் இன்று உணர்ந்திருக்கிறார்கள். போக வேண்டிய பாதை நீண்டது என்பதை நாம் ஆரம்பத்திலேயே அறிந் திருந்தோம். நடக்கும்போது கல்லும், முள்ளும் காலில் பதிந்து இரத்தம் சொட்டும் என்பதும் தெரிந்திருந்தது. கால் தவறிச் சாணத்தில் பதிந்து அசிங்கப்பட்டுவிடும் என்பதும் நமக்குத் தெரியாமலிருக்கவில்லை. பாதை யென்றொன்றிருந்து நடக்கத்தான் வேண்டும் என்ற நிலையேற்பட்டுவிட்டால் இதெல்லாம் சகஜம்தான் என்பதும் நமக்குப் புரியாமலிருக்கவில்லை. இருக்கின்ற போலித்தனத்தை எதிர்த்துப் போராடி, இருக்கவேண்டிய சீர்திருத்தத்தை நிலைநிறுத்தப் பாடுபட்டால் காலில் பட்டுவிடும் அசிங்கத்தையெல்லாம் பொறுட்படுத்த முடியுமா? பயணத்தில் ஏற்பட்டுவருகின்ற சங்கடங்களையெல்லாம் மறந்து இதயத்தைக் களிப்படையச் செய்கிறது தொடர்ந்து நம்மோடு இணைந்து நடக்கத் தொடங்கியிருப்பவர்களின் நிலையான நட்பும், நீங்காத அன்பும். பாதை நீளமானதுதான்; பயணமும் தூரமானதுதான்; தொல்லைகளும் இனித் தொடருந்தான். முடிவைப் பற்றி மட்டும் எங்களுக்கு எப்போதும் எந்த சந்தேகமும் இருந்ததில்லை.

– ஆசிரியர்.

அவதூறு சொல்லாதே!

சமீப காலமாக அவதூறு சொல்லுவதைக் (புறங்கூறுதல் அல்லது பழித்துரைத்தல்) குறித்து நான் அதிகம் சிந்திக்க நேர்ந்தது. அதற்கான காரணத்தை நான் இங்கே விளக்காமல் இருக்க முடியாது. கடந்த சில வருடங்களாக எனக்கு அறிமுகமான சில போதகர்களைக் குறித்து போதக ஊழியத்தில் இருப்பவர்களே அவதூறாக எழுதியும், பேசியும் வந்திருக்கிறார்கள். அதுபற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும், கிறிஸ்தவ நண்பர்களுக்கும் நான் பல தடவைகள் ஆலோசனை தர நேர்ந்தது. அத்தோடு வேறுசிலர் ‘நியூஸ் லெட்டர்‘ அனுப்புகிறோம் என்ற பெயரில் சபை சகோதரர்களைப் பற்றியும் ஏனைய போதகர்களைப் பற்றியும் அவதூறாக எழுதி சபைகளுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி வருகிறார்கள். சில போதகர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்கள் அல்லது தங்களோடு முரண்படுகிறவர்கள் சபையில் இருந்தால் அவர்களை அடக்குவதற்காக அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி (Private life) ஏறுக்குமாறாக அநியாயமான பழிகளை அவர்கள் மேல் சுமத்தி பகிரங்கப்படுத்துகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வேறுசிலர் சபையில் தங்களுக்குப் பிடிக்காதவர்களுடைய பெயர்களைக் குறிப்பிட்டோ, குறிப்பிடாமலோ பிரசங்க மேடையில் இருந்து அடிக்கடி அவர்களைத் தாக்கிப் பேசி வருவதை வழமையாகக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சக சகோதரர்கள் மீது குற்றஞ்சாட்டி அவதூறான செய்திகளைப் பரப்பி வரும் செயல் கிறிஸ்தவர்கள் மத்தியில் வெகு சாதாரணமாகவே இன்று நடந்து வருகிறதை நான் காண்கிறேன். தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் இது ஒரு கலாச்சாரமாக உருவெடுத்திருப்பது என்னை அதிகம் சிந்திக்க வைத்தது. அதுமட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களுக்குப் பயன்படும்படியாக இது பற்றி விபரமாக எழுத வேண்டும் என்றும் நான் தீர்மானித்தேன்.

Continue reading

திருச்சபை வரலாறு

நெதர்லாந்தில் சீர்திருத்தம்

நெதர்லாந்தை (Netherlands) ஒல்லாந்து (Holland) என்ற பெயரிலும் அழைப்பார்கள். ஐரோப்பிய நாடான நெதர்லாந்திற்கு சத்தியம் பரவி திருச்சபை சீர்திருத்தம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை இனி ஆராய்வோம். ஜெர்மனியில் கர்த்தர் லூதரின் மூலம் ஏற்படுத்திய திருச்சபை சீர்திருத்தம் தொடர்ந்து ஐரோப்பா எங்கும் பரவ ஆரம்பித்திருந்தது. பிரான்சில் அது ஏற்படுத்தியிருந்த தாக்கத்தைக் கடந்த இதழில் கவனித்தோம். நெதர்லாந்து கடலுயரத்தைவிட தாழ்ந்திருந்த நாடு. மூன்று மில்லியன் மக்களைக் கொண்டிருந்த அந்நாடு கடல் நீர் உள்ளே வருவதைத் தடுப்பதற்காக பெரும் சிரமத்துடன் கடற்கரைப் பகுதிகளில் தடுப்புச் சுவரெழுப்பி கடற்பரப்பை நன்நிலமாக்கி தங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்தினர். நிச்சயமாக அவர்களுக்கு நிலத்தின் அருமை தெரிந்திருந்தது. தங்கள் நாட்டிற்கு சமுத்திரத்தால் உண்டாகக்கூடிய ஆபத்தும் தெரிந்திருந்தது. இத்தகைய சந்தர்ப்பத்தில் வாழ்கிறவர்களுக்கு கடவுளின் அருமை தெரியும். படைத்தவர் தங்களைக் காப்பாற்றாவிட்டால் கூண்டோடு அழிந்துவிடுவோம் என்பதை இந்த மக்கள் ஓரளவு உணர்ந்திருந்தார்கள். சமுத்திரத்திடம் போராடி நிலத்தைப் பெற்று அதைப் பாதுகாத்து வாழ்ந்து வருவதால் இவர்களிடம் நாட்டுப்பற்றும் அதிகமாயிருந்தது. உழைப்பின் அருமையையும் இந்த மக்கள் உணர்ந்தவர்களாயிருந்தார்கள். இக்காலப்பகுதியில் ரோமன் கத்தோலிக்க மதம் இங்கே தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. மறுமலர்ச்சியின் தாக்கமும் நாட்டு மக்களை அதிகம் சிந்திக்க வைத்தது. மறுமலர்ச்சிக் காலத்தின் தலைசிறந்த அறிஞராக இருந்த இராஸ்மஸ் நெதர்லாந்தின் ரொட்டர்டேமைச் (Rotterdam) சேர்ந்தவராக இருந்தார்.

Continue reading

கிறிஸ்தவக் கோட்பாடுகள்

கேள்வி 104: திருவிருந்து (கர்த்தருடைய பந்தி) என்றால் என்ன?

பதில்: புதிய உடன்படிக்கையின் திருநியமங்களில் ஒன்று திருவிருந்து. கிறிஸ்து ஏற்படுத்தியபடி அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் அளிப்பதன் மூலமும், அவற்றில் பங்குகொள்வதன் மூலமும் கிறிஸ்துவின் மரணம் திருவிருந்தில் எடுத்துக்காட்டப்படுகிறது. தகுதியோடு அதில் பங்குபெறுகிறவர்கள் சரீரப் பிரகாரமாகவோ, மாம்சப்பிரகாரமாகவோ அல்லாமல் விசுவாசத்தினால் கிறிஸ்துவின் சரீரத்திலும், திரு இரத்தத்திலும், அவருடைய சகல பலாபலன்களிலும் பங்காளர்களாகி ஆத்மீக போஷாக்கடைந்து கிருபையிலும் வளர்கிறார்கள்.

(1 கொரி. 11:23-26; 1 கொரி. 10:16).

கேள்வி 105: தகுதியோடு திருவிருந்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமானவை யாவை?

பதில்: திருவிருந்தைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவர்கள் அபாத்திரமாய் திருவிருந்தில் பங்குகொண்டு ஆக்கினைத்தீர்ப்பை அடையாதபடிக்கு, கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறிந்துகொள்ளுகிறோமா என்று தங்களுடைய அறிவையும், திருவிருந்தைப் புசிக்கும்படியாக தங்களுடைய விசுவாசத்தையும், தங்களுடைய மனந்திரும்புதலையும், அன்பையும் சோதித்துப் பார்த்து புதிய கீழ்ப்படிதலோடு திருவிருந்தில் பங்குகொள்ள வேண்டும்.

(1 கொரி. 11:28-29; 2 கொரி. 13:5; 1 கொரி. 11:31; 1 கொரி. 11:16-17; 1 கொரி. 5:7-8).

விளக்கக்குறிப்பு: கர்த்தரின் வேதம் புதிய ஏற்பாட்டின் நான்கு பகுதிகளில் திருவிருந்தைப் பற்றிய விளக்கத்தைத் தருகிறது. மத்தேயு 26:26-29; மாற்கு 14:22-25; லூக்கா 22:17-20; 1 கொரி. 11:23-26. இந்நான்கு பகுதிகளிலும் திருவிருந்து பற்றிய தெளிவான விளக்கங்களைக் கர்த்தர் நமக்குத் தந்திருக்கிறார். இருந்தபோதும் இதுபற்றிய பல தவறான போதனைகளை உருவாக்கி சுவிசேஷத்தைப் பலர் குழப்பப் பார்த்திருக்கிறார்கள். திருவிருந்து பற்றிய இந்த வினாவிடைப் போதனை அத்தகைய தவறுகளில் இருந்து நம்மைக் காப்பாற்ற முனைகின்றது.

Continue reading

கிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியம் – 6

இந்த உலகத்தில் திருச்சபை ஊழியப் பணிகளை எந்தமுறையில் செய்ய வேண்டும் என்று கர்த்தர் வேதத்தில் விளக்கியிருக்கின்ற விதிகளைப் பற்றி (Principles of Mission) 11/2-2005 இதழில் இருந்து தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கிறோம். அதைத் தொடருவதற்கு சூழ்நிலைகள் இடந்தரவில்லை. இந்த இதழில் இதுவரை நாம் பார்த்திருப்பவை பற்றி சுருக்கமாகக் கவனித்துவிட்டு தொடர்ந்து திருச்சபை ஊழியப்பணிகள் பற்றி வேதம் நமக்குத் தரும் போதனைகளை ஆராய முற்படுவோம். கிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியங்களைச் செய்யவேண்டுமானால் நாம் அறிந்திருக்க வேண்டிய மூன்று முக்கிய வேதவிதிகளை இதுவரை பார்த்திருக்கிறோம்:

Continue reading

ஜோன் நியூட்டன்

இந்த வருடம் ஜோன் நியூட்டன் (John Newton) கர்த்தரை அடைந்த இருநூறாவது வருடமாகும். இங்கிலாந்தில் அடிமை வியாபாரத்திற்கெதிராகப் போராடி வெற்றிகண்ட வில்லியம் வில்பர்போர்ஸ் (William Wiberforce) ஜோன் நியூட்டனின் நெருங்கிய நண்பர். இருவரும் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள். இங்கிலாந்தில் அடிமை வியாபாரம் ஒழிக்கப்பட்ட இருநூறாவது ஆண்டும் இந்த ஆண்டுதான். ஆராதனைப் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்ற வில்லியம் கவுப்பர் (William Cowper) ஜோன் நியூட்டனின் இன்னுமொரு நெருங்கிய நண்பர். இருவரும் இணைந்து பல பாடல் களை எழுதியுள்ளனர். கப்பல்களில் பணிபுரிந்து பின்பு அடிமை வியாபாரக் கப்பல்களில் வேலை செய்து தானும் அடிமையாகி பாவத்தையும், துன்பத்தையும் அவற்றின் அடிமட்டம்வரைப் போய் ருசிபார்த்து கர்த்தரை அறியாமல் வாழ்ந்த நியூட்டனை இறையாண்மையுள்ள கர்த்தர் தன்னுடைய கிருபையால் இரட்சித்துப் பயன்படுத்தினார். அவருடைய மனந்திரும்புதல் பற்றிய சாட்சி கர்த்தரின் அளப்பரிய கிருபையை உலகத்திற்கு இன்றும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. நியூட்டன் எழுதிய நூல்களும், பாடல்களும் அவரை இன்றும் கிறிஸ்தவ உலகம் நினைவுகூரும்படிச் செய்துகொண்டிருக்கின்றன. இன்றைக்கும் கிறிஸ்தவர்களெல்லாம் பாரெல்லாம் கர்த்தரைப் பாடிப் புகழும் அவரெழுதிய “Amazing Grace How Sweet The Sound” என்ற பாடலை எவரால் மறக்க முடியும்.

ஜோன் நியூட்டன் (John Newton) 21ம் நாள் டிசம்பர் 1907ல் கர்த்தரிடம் சேர்ந்தார். இந்த வருடம் அவர் கர்த்தரை அடைந்த இருநூறாவது வருடமாகும். ஜோன் நியூட்டன் யார், அவரைப் பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும் என்று சிலர் எண்ணலாம். Amazing Grace என்ற பிரசித்திபெற்ற பாடலை எழுதியவர் ஜோன் நியூட்டன். இந்த வருடம் Amazing Grace என்ற அந்தப் பாடலின் தலைப்பில் நியூட்டனின் அருமை நண்பரான வில்லியம் வில்பர்போர்ஸைப் (William Wilberforce) பற்றிய ஒரு படத்தை ஹொலிவுட் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. இங்கிலாந்தில் அடிமை வியாபாரத்தை ஒழிப்பதற்கு எதிராகப் போராடி வெற்றிகண்டவர் வில்லியம் வில்பர்போர்ஸ். இந்த இருவருமே சீர்திருத்த சுவிசேஷ இயக்கக் கிறிஸ்தவர்கள் (Reformed Evangelical Christians). இந்த வருடம் வில்பர்போர்ஸ் அடிமை வியாபாரத்தை ஒழித்த இருநூறாவது வருடமும்கூட. ஜோன் நியூட்டன் சுவிசேஷ இயக்கப் படைப்பாளிகளில் முதன்மையானவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த இருவரும் இன்னொரு பிரசித்திபெற்ற பிரசங்கியான ஜோர்ஜ் விட்பீல்டும் சுவிசேஷ இயக்கத்தை ஒன்றிணைத்து உலகமுழுவதும் சுவிசேஷம் பரவுவதற்கு சுவிசேஷ ஊழியத்தைப் பெலப்படுத்தினார்கள்.

Continue reading

எனக்கு நானே ராஜா!

வேத போதனைகளை எந்தளவுக்கு பலர் தப்பாக விளங்கிக் கொள்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்தைத் தரவிரும்புகிறேன். அநேக பாப்திஸ்து சபைகளிலும், சகோதரத்துவ சபைகளிலும் ஒரு போதகர் அல்லது மூப்பர் மட்டுமே சபைத் தலைவனாக இருந்து, எல்லோரையும் அதிகாரம் செலுத்தி வருவதை தமிழினத்துக் கிறிஸ்தவத்தில் எங்கும் காணலாம். அத்தோடு இந்த உள்ளூர் சபைகள் அத்தனையும் எங்கள் மீது எவரும் ஆட்சி செலுத்தக்கூடாது, நாங்கள் “சுயாதீன சபைகள்” என்ற கோரஸைப் பாடிக்கொண்டு தனக்குத் தானே இராஜாவாக இருந்து வருகின்றன. இத்தகைய எண்ணப் போக்கில் என்ன தவறு இருக்கிறது என்பதை எண்ணிப் பார்ப்பது அவசியம்.

கர்த்தரின் வேதம் ஒவ்வொரு திருச்சபையும் தன்னைத்தானே ஆளூம் வசதிகளோடு இருக்கும்படி அறிவுறுத்துகிறது. அதாவது, வேதமுறைப்படி அமைந்த உள்ளூர் திருச்சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட போதகர்களும், உதவியாளர்களும் இருந்து திருச்சபை ஆளப்பட வேண்டும் என்பது இயேசு ஏற்படுத்தியிருக்கும் வழிமுறை. இதன்படி ஒரு சபையின் போதகர்களும், உதவியாளர்களும், அங்கத்தவர்களும் ஒருவருக்கொருவர் தங்களை ஒப்புக்கொடுத்து தங்களைக் கண்காணித்து வளர வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். பல போதகர்கள் அல்லது மூப்பர்கள் ஒரு சபையில் இருக்கும்படி கர்த்தர் எதிர்பார்ப்பதற்குக் காரணம் ஒரே போதகர் தானும் தவறு செய்து சபையையும் கெடுத்துவிடாமல் இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளத்தான். பல போதகர்கள் இருக்கும்போது அவர்கள் ஒருவருக்கொரு வர் தங்களை ஒப்புக்கொடுத்து இருதயங்களைக் காத்துக்கொள்ள முடியும். அவர்கள் ஒருவருக்கொருவர் accountable ஆக இருக்க வேண்டும். அதாவது ஒருவருக்கொருவர் கணக்குக்கொடுக்க வேண்டும். அப்படி அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கும், ஊழியத்துக்கும் ஒருவருக்கொருவர் கணக்குக் கொடுத்து நடந்துகொள்கிறபோதுதான் சபையாருக்கு அவர்கள் வேதத்தைப் போதித்து வழிநடத்தமுடியும்; சபையார் வேதபோதனைகளுக்குக் கட்டுப்படும்படி எதிர்பார்க்க முடியும். போதகர்கள் பொறுப்புணர்வோடு மற்றவர்களுக்குக் கணக்குக் கொடுத்து வாழ்ந்து சபையாருக்கு உதாரண புருஷர்களாக இருக்கும்போது எந்த சபை மக்களாவது அவர்களுடைய போதனைகளைப் பின்பற்றி நடக்காமல் இருப்பார்களா?

Continue reading

சத்திய வேதம்

த்தியவேதத்திற் கின்று சுத்தமாய் மதிப்பில்லை
சிந்தித்து பயத்தோடு படிப்பாரும் யாருமில்லை
அர்த்தம் தெரியாமலதன் போதனை புரியாமல்
அழுக்குப்படாமல் வெள்ளைத் துணியில் மறைத்து
கல்லை வணங்குவதுபோல் கும்பிட்டு வரும்
கூட்டம் மட்டுந்தான் அதிகம் நம்மினத்தில்

தவு மூடியிருந்த அறைக்குள் நுழைந்து
கர்த்தர் என்னோடு பேசினார் இன்று
பரிசுத்த வெண்ணங்கி அணிந்து வந்து
பளீரென்றடித்த வெளிச்சத்தில் நின்று
பரமன் இட்டார் கட்டளை எனக்கென
பல்லவி பாடுவோர் கூட்டமே அதிகம்

வேதம் உலகில் இல்லாத காலத்தில்
கர்த்தர் முகமுகமாய்ப் பார்த்துப் பேசினார்
தம் சித்தம் நாம் அறிய தயவாய் முன்வந்து
தானே நல்வழியும் நலமாய்க் காட்டினார்
சகலதும் கிறிஸ்துவில் சிலுவையில் முடிந்தபின்
அவர் சித்தம் எழுத்தில் நிறைவான தினிதாய்

ர்த்தரின் சித்தம் நமக்கின்று
கனவில் வருவதில்லை; நட்டநடு இரவில்
இயேசு நமக்கு தரிசனமும் தருவதில்லை
கையில் இருக்கும் வேதத்தைத் தியானித்து
கருத்தாய் ஜெபத்தோடு படித்தால் மட்டுமே
அறியலாம் நலமாக தேவ சித்தத்தை

த்திய வேதம் காட்டாத பரிசுத்த
வழியொன்றில்லை இந்த உலகத்தில்
நாம் போக வேண்டிய நலமான பாதையை
நேசர் அதன் மூலம் நமக்குக் காட்டுவார்
ஆவியின் வழிப்படி அறிய வேண்டியதெல்லாம்
அதிலிருக்கு படியுங்கள் அருமையாய் வேதத்தை

சுபி . . .