வாசகர்களே!

பல வேலைகளுக்கு மத்தியில் இந்த இதழை நேரத்தோடு முடித்து உங்கள் முன் வைக்க கர்த்தர் கிருபை செய்தார். தொடர்ந்து திருமறைத்தீபம் உங்களுக்கு பெரும் பயனளித்து வருவதை கேள்விப்பட்டும், கடிதங்களை வாசித்தும், பலரிடம் நேரில் கேட்டறிந்தும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும், என் சபைக்கும், என்னோடிணைந்து இந்த ஊழியத்தில் பணிபுரிந்து வருகிறவர்களுக்கும் இது நிச்சயம் ஊக்கத்தை அளிக்கிறது. தொடர்ந்து எங்களுக்காகவும், இந்தப் பணிக்காகவும் ஜெபியுங்கள்.

இந்த இதழில் பெரியவர் ரைலின் ஆராதனை பற்றிய ஆக்கம் நிறைவு பெறுகிறது. அந்த ஆக்கத்தின் நடைமுறைப் பலனை விளக்கி சுருக்கமாக எழுதியிருக்கிறேன். ரைலின் ஆக்கம் உங்கள் கண்களைத் திறந்து வைத்து கர்த்தரை உங்கள் சபையில் அவருடைய வேதபோதனையின்படி ஆராதிக்க வைக்குமானால் அதைவிட பெரிய ஆத்மீக எழப்புதல் இருக்க முடியாது. அது நடக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய இருதயத்தின் தாகம். கடந்த இதழில் வந்த பாகம் பலருக்கு ஆசீர்வாதமாக இருப்பதை அறிந்து கர்த்தருக்கு நான் நன்றி செலுத்துகிறேன். இந்த இதழில் வந்திருப்பது உங்களை மேலும் சிந்திக்கவும், செயல்படவும் வைக்கட்டும்.

அல்பர்ட் மார்டினின் ‘இயேசுவிடம் வர ஏன் சிலருக்கு மனதில்லை?’ என்ற சுவிசேஷ ஆக்கம் இந்த இதழில் வந்திருக்கின்றது. இது அருமையான சுவிசேஷப் பிரசங்கம். வாசித்து ஆத்மீகப் பலனைப் பெற்றுக்கொள்ளுங்கள். தொடர்ந்தும் இத்தகைய ஆக்கங்களை வெளியிட விரும்புகிறோம். சுவிசேஷ செய்தி என்ற பெயரில் சுவிசேஷம் கலங்கப்படுத்தப்பட்டு வருகின்ற காலப்பகுதியில் நாம் வாழுகிறோம். சுவிசேஷம் என்றால் என்ன என்பதை இந்த ஆக்கம் நிச்சயம் உங்களுக்கு தெளிவாக விளக்கும். கிறிஸ்தவர்கள் சுவிசேஷத்தைக் கேட்பதும், சுவிசேஷப் பிரசங்கங்களை வாசிப்பதும் என்னைப் பொறுத்தவரையில் மிகவும் அவசியம். கேடான நம்மிருதயத்துக்கு சுவிசேஷம் ஆத்மீக வைட்டமின் போல உதவி செய்யும். கர்த்தர் எத்தனை பெரியவர் என்பதையும், அவர் கொடுத்திருக்கும் இரட்சிப்பு எத்தனை ஆசீர்வாதமானது என்பதையும் உணர்ந்து தொடர்ந்து கர்த்தரைத் துதித்து பரிசுத்தமாக வாழ சுவிசேஷம் உதவுகிறது.

பாவத்தை அழித்தல் பற்றிய என்னுடைய ஆக்கத்தின் மூன்றாவது பகுதியும் இந்த இதழில் வந்திருக்கிறது. இந்த இதழை நல்லமுறையில் தயாரித்து வெளியிடவும், விநியோகிக்கவும் தமிழகத்திலும், ஸ்ரீ லங்காவிலும் பிரதிபலன் பாராமல் உழைத்து உதவியிருக்கும் நல்ல இதயங்களுக்கு என் நன்றி.- ஆசிரியர்

பொது ஆராதனை – ஜே. சி. ரைல் –

ஜே. சி. ரைல் ஆங்கிலேய திருச்சபையின் (Church of England) போதகராக இங்கிலாந்தில் இருந்தார். இந்த ஆக்கம் ஜே. சி. ரைலினுடைய “Knots United” என்கிற ஆக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது. இதை அவர் எழுதிய காலப்பகுதியில், உயர் வர்க்க ஆங்கிலேய ஆண்களும், பெண்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்துக்குச் செல்வதை நாகரீகமானதாக கருதி வந்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு வந்த 130 ஆண்டுகளில் இந்த எண்ணம் முற்றிலும் மாறிவிட்டாலும், ஆராதனையைக் குறித்து ரைல் எழுதியிருக்கின்ற வேதபூர்வமான கருத்துக்கள் உலகமெங்கும் வாழுகின்ற எல்லா கிறிஸ்தவர்களுக்கும் எல்லா காலத்துக்கும் பொருந்தும்விதத்தில் அமைந்திருக்கின்றது.

3. பொது ஆராதனையில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

கடவுளைக் குறித்து அதிகமாக சிந்திக்காமலும், மதசம்பந்தமான எந்த விஷயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்காமலும், இதுவரை எந்த ஆராதனைக்கும் சென்றிராதவனுமாகிய ஒரு மனிதனை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். திடீரென எப்படியோ அவனுக்கு தன்னுடைய ஆத்துமாவைக் குறித்த அக்கறை ஏற்பட்டு, விழிப்படைந்தவனாகி, மதசம்பந்தமான காரியங்களில் பங்குபெற ஆர்வமுள்ளவனாகிறான் என வைத்துக்கொள்வோம். அவன் சபைகளுக்குப் போய் பார்க்கும்போது எல்லா கிறிஸ்தவர்களும் ஒரே விதமாக கடவுளை வழிபடுவதில்லை என்பதைக் கண்டு குழப்பம் அடைகிறான். தனது பக்கத்து வீட்டுக் கிறிஸ்தவர் ஒருவிதமாகவும், தனது அலுவலக கிறிஸ்தவ நண்பர் வேறுவிதமாகவும் கடவுளைத் தொழுதுகொள்ளுகிறதைக் காண்கிறான். அவர்களில் ஒருவர் சொல்லுகிறார், தனது சபையின் மூலமாகத்தான் ஒருவன் மோட்சத்தை சென்று அடையமுடியும் என்று. இன்னொரு நண்பரோ, தான் இருக்கின்ற சபைக்கு வராத யாவரும் நரகத்திற்குத்தான் போய் சேருவார்கள் என்கிறார். இந்த வார்த்தைகளைக் கேட்டு அந்த மனிதன் என்ன நினைப்பான்? கிறிஸ்தவ வழிபாட்டில் அவசியமாக இருக்க வேண்டிய காரியங்கள் என்று எதுவுமே இல்லையா? என்று கேட்பான். நிச்சயமாக அப்படியான காரியங்கள் இருக்கின்றன. இப்போது நான் அவைகளை ஒவ்வொன்றாக உங்களுக்கு விளக்கப் போகிறேன்.

Continue reading

திருச்சபையில் பொது ஆராதனை ஜே. சி. ரைலின் ஆக்கத்தின் நடைமுறைப் பலன்கள்

பொது ஆராதனை பற்றிய ஜே. சி. ரைலின் ஆக்கம் இந்த இதழில் நிறைவுபெற்றிருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கர்த்தரின் பணியில் ஈடுபட்டிருந்த ரைல் தன் காலத்தில் தான் ஊழியப்பணி செய்து வந்த இங்கிலாந்து திருச்சபை அமைப்பின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி பொது ஆராதனையில் இருக்க வேண்டிய அம்சங்களை அருமையாக விளக்கிக் காட்டியிருக்கிறார். ரைலின் விளக்கங்கள் அவருடைய சொந்தக் கருத்துக்களல்ல. வேதத்தின் அதிகாரத்தை உணர்ந்திருந்த ரைல் வேதம் ஆராதனை பற்றி தெளிவாக விளக்கும் சத்தியங்களையே விளக்கியிருக்கிறார். அவருடைய காலப்பகுதியில் இன்றைக்கு நாம் சபை வாழ்க்கையில் எதிர்நோக்குகின்ற பல பிரச்சனைகள் அதே ரூபத்தில் இருக்கவில்லை.

ஆராதனையில் ஆடம்பரம் இருக்கக் கூடாது என்று வலியுறுத்துகிற ரைல் அதற்கு உதாரணம் காட்டும்போது ரோமன் கத்தோலிக்க மதப் போதனையின் அடிப்படையில் திருவிருந்து சுவிசேஷ சபைகளில் இருக்கக் கூடாது என்று தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார். அத்தகைய தவறுகள் அன்றைக்கு இங்கிலாந்து சபையில் இருந்து வந்திருந்ததால்தான் ரைல் அப்படி எழுத நேர்ந்தது. இன்றைக்கும் அந்தத் தவறுகள் இல்லாமலில்லை. மறுபடியும் கத்தொலிக்க மதத்தின் ஆபத்தான வழிகளில் திருச்சபை போய்விடக்கூடாது என்ற ஆதங்கத்தால்தான் ரைல் அந்த ஆபத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். இன்றைய காலப்பகுதியில் மேலும் உதாரணங்களை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. முக்கியமாக பொது ஆராதனையில் இசைக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து, ஆடம்பரமான இசைக்கருவிகளை அநேகர் பயன்படுத்தி வருகின்றனர். கர்த்தரைப் புகழ்ந்து பாட வேண்டிய சபையாரின் குரலைக் கேட்க முடியாதபடி இசைக் கருவிகளின் சத்தம் சபைகளில் காதைக் கிழித்து ஆராதனையை அசிங்கப்படுத்தி வருகின்றது. இசைக் கருவி வாசிப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். ஆராதனையில் பாடல்கள் மற்றும் சங்கீதப்பாடல்களின் இடம் எது என்றே திருச்சபை இன்று கேட்டுப்பார்ப்பதில்லை. இதைப்பற்றி கர்த்தர் வேதத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்று அறிந்துகொள்ளுகிற தாழ்மையையும், மனப்பக்குவத்தையும் பார்க்க முடியாமலிருக்கிறது.

Continue reading

இயேசுவிடம் வர ஏன் சிலருக்கு மனதில்லை? – அல்பர்ட் என். மார்டின் –

யூதர்களின் பண்டிகை நாளொன்றில் எருசலேம் மிகவும் கலகலப்பாக இருந்தது. பெதஸ்தா குளத்தின் பக்கத்தில் கலிலேயாவிலிருந்து வந்த அந்த இளம் ரபி, 38 வருஷமாக திமிர்வாதம் பிடித்திருந்த ஒரு மனிதனை நொடிப்பொழுதில் குணமாக்கியிருந்தார். அதைப் பார்த்து சுற்றியிருந்த கூட்டத்தார் பிரமிப்படைந்திருந்தனர். அதைக் குறித்து சந்தோஷப்படுவதற்கு பதிலாக, யூதமதத் தலைவர்கள், அந்த திமிர்வாதக்காரனை நோக்கி, ஓய்வுநாளிலே நீ ஏன் படுக்கையை எடுத்துக் கொண்டு நடக்கிறாய் என்று குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் அது வேலையாக இருந்தது. ஓய்வுநாளில் அவன் வேலை செய்யக்கூடாது என்பது அவர்களுடைய கொள்கை. அத்தோடு அவர்கள் இயேசு கிறிஸ்து மீதும் குற்றஞ்சாட்டினார்கள். திமிர்வாதக்காரனை சுகப்படுத்திய “வேலையை” அவரும் ஓய்வுநாளில் செய்தார் என்பதே அந்தக் குற்றச்சாட்டு. அதற்கு இயேசு, “என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார். நானும் கிரியை செய்து வருகிறேன்” என்று பதில் கூறினார். இதைக் கேட்ட அவர்களுக்கு, “அவர் தம்மை தேவனுக்கு சமமாக்கிவிட்டார்” என்ற கோபம் வந்ததே தவிர வேறொன்றும் தோன்றவில்லை (யோவான் 5:18).

Continue reading

கிறிஸ்தவனே! பாவத்தை அழி, அது உன்னை அழிக்குமுன் (பாவத்தை அழித்தல் – 3)

பவுல் கொலோசெயர் 3:5ல் ‘உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள்’ என்று கட்டளையாக அறிவிக்கிறார். கடந்த இதழ்களில் பாவத்தை அழித்தல் பற்றிய போதனை சம்பந்தமான இறையியல் குழப்பங்களை ஆராய்ந்து வந்திருக்கிறோம். முதலாவதாக, நம்முடைய சரீரங்களில் பாவத்தை அழிப்பதற்கு சடுதியாக நிகழும் எந்தக் குறுக்கு வழி ஆத்மீக அனுபவத்தையும் வேதத்தில் கர்த்தர் காட்டவில்லை. இரண்டாவதாக, கர்த்தரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து கடமையுணர்வோடும், பரிசுத்தமாகுதல் பற்றிய தாகத்தோடும் நம்மில் இருக்கும் பாவத்தை நாம் ஆவியின் துணையோடு அழிக்காவிட்டால் பாவத்தை அழிப்பதற்கு வேறு வழிகளில்லை. பாவத்தை அழித்தல் பற்றிய போதனையை விளங்கிக்கொள்ளுவதற்கு நான் மேலே விளக்கிய இரண்டு காரியங்களையும் நாம் கருத்தோடு சிந்திப்பது மிகவும் அவசியம். இனி நாம் கொலோ 3:5ல் பவுல் சொல்லுகின்ற காரியத்தை சிந்தித்துப் பார்ப்போம்.

‘உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள்’ என்று பவுல் அப்போஸ்தலன் கூறியிருக்கும் வார்த்தைகள் சுருக்கமானவைகளாக இருந்தாலும் அவற்றில் பேருண்மைகள் பொதிந்து காணப்படுகின்றன. பியூரிட்டன் பெரியவரான ஜோன் ஓவன் இந்த வார்த்தைகளுக்கு 648 பக்கங்கள் மூலம் விளக்கமளித்திருக்கிறார். அதனால், வேதத்தில் சுருக்கமாகக் காணப்படும் வசனங்களை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவற்றில் ஆழமான சத்தியங்கள் உள்ளடங்கிக் காணப்படுகின்றன. அவசரப்பட்டு வசனங்களைக் கவனித்துப் படிக்காமல் விளக்கிக்கொள்ளக் கூடிய ஆபத்து இருக்கிறது. பெரிய வசனப்பகுதிகளையும், நூல்களையும் சுருக்கமாகப் படிப்பதும் அவசியம். அதேநேரம் ஒவ்வொரு வசனங்களையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் பொதிந்து காணப்படும் சத்தியங்களைப் புரிந்துகொள்ளுவதும் மிகவும் அவசியமானது.

Continue reading

அவசியம் சிந்திக்க வேண்டிய ஓர் ஆத்மீகப் பிரச்சனை!

சமீபத்தில் போதகர்களுக்கும், ஊழியத்திலிருப்பவர்களுக்கும் நடந்த கூட்டத்தில் நான் ஒரு காரியத்தை செய்தேன். ஒரு மனிதன் கிறிஸ்துவுக்குள் வந்திருக்கிறானா என்பதை நாம் எப்படித் தீர்மானிப்பது என்ற கேள்வியை அவர்கள் முன் வைத்து அதுபற்றி ஒவ்வொருவருடைய கருத்துக்களையும் சொல்லும்படிக் கேட்டுக் கொண்டேன். ஒரு மணி நேரம் இந்தக் காரியம் பற்றி சிந்தித்து, வேதத்தைப் பயன்படுத்தி ஆராய்ந்து பார்த்தது நடைமுறைக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. கலந்து கொண்டவர்கள் இதனால் பெரிதும் பயனடைந்ததாக சொன்னார்கள்.  இன்றைக்கு ஒரு மனிதன் கிறிஸ்துவிடம் வந்திருக்கிறானா? என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை என்றளவுக்கு சுவிசேஷ ஊழியம் தரங்கெட்டு நிற்கிறதை, சிந்திக்க ஆரம்பித்திருக்கும் கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்வார்கள். அந்தளவுக்கு இந்த விஷயத்தில் அக்கறை காட்டாத நிலையை தமிழினத்து சுவிசேஷ ஊழியங்களில் பார்க்க முடிகிறது. அவசர அவசரமாக ஞானஸ்நானம் கொடுத்து ஒரு கூட்டத்தை சேர்த்துவிடுவதில் பெரும் அக்கறை காட்டி வருவதால் ஒரு மனிதனின் ஆத்துமாவில் உண்மையான ஆவிக்குரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்று அறிந்துகொள்ளுவதில் அக்கறை இல்லாத நிலை உருவாகிவிட்டது. ‘அரிசிக் கிறிஸ்தவர்கள்’ (Rice Christians), பெயர்க் கிறிஸ்தவர்கள் என்ற பெயர்கள் ஏற்படுவதற்குக் காரணமான நிலையை சத்தான சுவிசேஷப் பிரசங்கமில்லாத ஊழியம் உருவாக்கியிருக்கிறது. ஞானஸ்நானம் பாவத்தைப் போக்கி இரட்சிப்பை அளிக்கிறது என்ற தவறான எண்ணங்களும் மனந்திரும்பாது பாவிகளாக தொடர்ந்திருக்கும் போலிக் கிறிஸ்தவர்களை உருவாக்கிவிட்டிருக்கிறது. மனந்திரும்புதலும், விசுவாசமும் இல்லாமல் ஞானஸ்நானம் எடுத்து வாழ்ந்து வருகிற ஒரு பெருங்கூட்டம் நம்மினத்தில் இருந்து வருவதை யாரால் மறுக்க முடியும். எப்படியாவது ஓர் ஊழியத்தை செய்து அதைப் பலர் முன் நியாயப்படுத்திவிட வேண்டும் என்ற துடிப்பு இப்படியான போலிக்கிறிஸ்தவர்கள் கூட்டம் உருவாவதற்கு காரணமாகி விடுகிறது. நம்மினத்தில் சுவிசேஷக் கிறிஸ்தவம் மெய்யான ஆவிக்குரிய கிரியைகளைக் காண முடியாதபடி ஆவிக்குரிய வீரியமில்லாதிருப்பதற்கு இதுதான் பெருங்காரணம்.

Continue reading