வாசகர்களே

இன்னொரு இதழை நிறைவாக முடித்து உங்கள் கையில் நேரத்தோடு வந்து கிடைக்க கர்த்தர் மறுபடியும் துணை செய்திருக்கிறார். ஒவ்வொரு இதழையும் தயாரிக்கின்றபோது அவசியமான ஆக்கங்களை, சீராகத் தயாரித்து வெளியிட கர்த்தர் தன்னுடைய ஆவியின் மூலம் ஆசிரியரை வழிநடத்தி வரும் அருமையைக் கடந்த பதினெட்டு ஆண்டுகளாகக் கவனித்து அவருக்கு நன்றி சொல்லி வருகிறோம். எதை எழுத வேண்டும், எப்போது எழுத வேண்டும் என்பதிலெல்லாம் ஆவியின் வழிகாட்டுதலும், துணையும் இல்லாமல் செய்துவிட முடியாது. ஆவிக்குரிய பணிகளில் அவருடைய தூண்டுதலையும், உந்துதலையும் தொடர்ந்து அனுபவ ரீதியாகக் கண்டு வருகிறோம். இதழை முடிக்கின்ற ஒவ்வொரு தடவையும் ஆவியானவரின் வழிநடத்துதலே ‘இந்த முறையும் நிறைவாக இதழ் வந்திருக்கிறது’ என்று எங்களை உற்சாகப்படுத்துகிறது. இதை அச்சிட்டு நேரத்தோடு அனுப்பி வைக்கின்ற அச்சகத்தாரையும் இந்த நேரத்தில் நினைவுகூருகிறேன். நம் பணிக்கு அவர்கள் துணை மிகப் பெரியது. இதழ் நிறைவு பெற துணை செய்திருக்கின்ற அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!

இந்த இதழில் மறுபடியும் போதகர் அல்பர்ட் என். மார்டின் அவர்களின் அருமையானதொரு சுவிசேஷ செய்தி வந்திருக்கின்றது. அந்த செய்தியோடு, அது பற்றிய ஒரு குறிப்பையும் இந்த இதழில் தந்திருக்கிறேன். இந்த செய்தி உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். ஏனைய ஆக்கங்கள் அனைத்தையும் இந்த முறை நானே எழுதியிருக்கிறேன். அதற்குக் காரணம் வேதத்தின் முக்கியமானதொரு போதனையை இந்த இதழில் ஆராய ஆரம்பித்திருக்கிறோம். அது மனித சித்தத்தின் தன்மை பற்றியது. அது பற்றிய கோளாரான எண்ணங்கள் கிறிஸ்தவர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகின்றது. அந்த எண்ணங்கள் சுவிசேஷ ஊழியத்தைப் பாதித்து, விசுவாச வாழ்க்கையையும் கறைபடுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை அநேகர் உணராமல் இருக்கிறார்கள். நம்முடைய கருத்துக்களை அடிக்கடி ஆராய்ந்து பார்த்து, திருத்திக்கொண்டு வேத எண்ணங்கள் மட்டும் நம் இருதயத்தில் எப்போதும் நிறைந்திருக்கும்படிப் பார்த்துக்கொள்ள மனித சித்தம் பற்றி வந்திருக்கின்ற, வரப்போகின்ற ஆக்கங்கள் துணைபுரிய வேண்டும் என்பது என்னுடைய விருப்பமும், ஜெபமும்.

இதுவரை வந்திருக்கின்ற இதழ்களைப் போலவே இந்த இதழையும் கர்த்தர் பலருடைய இருதயங்களிலும் பயன்படுத்தி, சிந்திக்க வைத்து ஆவிக்குரிய வளர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்ற வாஞ்சையோடும், ஜெபத்தோடும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

– ஆசிரியர்.