வாசகர்களே!

போதக ஊழியத்தில் தொடர்ந்திருந்து இதழாசிரியராகப் பணிபுரிவதுதென்பது இலகுவானதல்ல என்பதை நான் அறிந்திருந்தபோதும் கர்த்தரின் பெரும் கிருபையால் ஒவ்வொரு இதழையும் நேரத்துக்கு முடித்து அச்சுக்கு அனுப்ப முடிகிறது. அநேகருடைய ஜெபங்கள் இதற்கு முக்கிய காரணம் என்பதை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். அச்சுப்பிழை பார்த்து துணை செய்கிறவர்களுக்கும் என் நன்றிகள். எங்களுடைய உழைப்பையும் கவனத்தையும் மீறி வந்திருக்கும் குறைகளை நீங்கள் நிச்சயம் பெரிதுபடுத்தமாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

இந்த இதழில் நான் இணைய தளத்தில் வெளியிட்ட இரு ஆக்கங்களைத் தந்திருக்கிறேன். எல்லோருக்கும் இவற்றை இணையத்தில் பயன்படுத்திக்கொள்ளும் வசதி இருந்திருக்காது என்பதால் இதில் தந்திருக்கிறேன். அதில் ஒன்றான “நடுநிலையாளனும் கரகாட்டக்காரனும்” என்ற ஆக்கத்தை இன்னும் விரிவுபடுத்தி இதில் எழுதியிருக்கிறேன். இது என்னைப் பொறுத்தவரையில் முக்கியமான ஓர் இறையியல் ஆக்கம். உங்களை இது சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்.

Continue reading

நடுநிலையாளனும் கரகாட்டக்காரனும்

நான் பணிபுரியும் சபையில் ஓய்வு நாளில் காலை வேளைகளில் 1689 விசுவாச அறிக்கைக்கான விளக்கத்தைக் கொடுத்துக்கொண்டு வருகிறேன். அதில் சமீபத்தில் ஒரு முக்கிய விஷயத்தை ஆராய நேர்ந்தது. பரிசுத்தவான்களின் விடாமுயற்சியைப் பற்றிப் போதிக்கும் விசுவாச அறிக்கை அந்தக் கிருபை ஐந்து தூண்களில் தங்கியிருப்பதாக விளக்குகிறது. அந்தப் பெருந்தூண்களில் ஒன்று கிறிஸ்துவின் மரணத்தின் மதிப்பு (Efficacious merit). இன்னொருவிதமாக விளக்குவதானால், பரிசுத்தவான்களாகிய விசுவாசிகள் தங்களுடைய விசுவாசத்தைக் காத்து அதில் வளர்வதற்குரிய பணிகளை விடாமுயற்சியுடன் செய்வதற்குக் காரணமாக இருக்கும் தூண்களில் ஒன்று கிறிஸ்துவின் மரணத்தினால் சம்பாதிக்கப்பட்ட பலன்களாகும். இது வேதம் போதிக்கின்ற உண்மை. கிறிஸ்துவின் மரணத்தினால் சம்பாதிக்கப்பட்ட பலன்களே விசுவாசி விசுவாசியாக இந்த உலகத்தில் தொடர்ந்து வாழ, வளர உதவுகிறது; அவர்கள் பரலோகத்தை நோக்கி வெற்றிகரமாக நடைபோட துணை செய்கிறது.

கிறிஸ்துவின் மரணத்தின் பலன்கள் யாருக்குரியது என்பது பற்றிய பல கருத்துவேறுபாடுகள் சுவிசேஷக் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருந்துவருகிறது. உண்மையில் இந்த விஷயத்தில் கருத்துவேறுபாடுகள் இருக்கக் கூடாது. வேதத்தின் மிக முக்கியமான போதனைகளில் நம்மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருப்பது சரியல்ல. நாம் பலவீனர்களாக இருப்பதாலும், நமது அறிவு பூரணமானதாக இல்லாமலிருப்பதாலும் நாம் வேதத்தைப் பூரணமாக புரிந்துகொள்ள முடியாமல் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கும் நிலை ஏற்படுகிறது.

Continue reading

பிரியாததும் இணையாததும்

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பற்றி இப்போது அடிக்கடி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அதற்குக் காரணம், சீர்திருத்த கிறிஸ்தவர்கள் (கிருபையின் போதனைகளை விசுவாசிக்கிறவர்கள்) சுவிசேஷம் சொல்லுவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற ஓர் அநியாயக் குற்றச்சாட்டுத்தான். இந்தக் குற்றச்சாட்டு சரியா? என்று சிந்தித்துப் பார்க்கிறேன். ஏன்? இது என்னையே நான் கேட்டுப் பார்க்க வேண்டிய கேள்வியும்கூட. இந்தக் குற்றச்சாட்டு சரியானதுதான் என்றவிதத்தில் நடந்துகொள்ளுகிற சில சீர்திருத்த கிறிஸ்தவ சபைகள் நிச்சயம் இருந்துவிடலாம். இருக்கமாட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், அதற்கு சீர்திருத்த கிறிஸ்தவம் காரணமில்லை என்பதில் மட்டும் எனக்கு முழு நம்பிக்கையுண்டு. அதை என்னால் ஆணித்தரமாகவும் சொல்ல முடியும். இப்படியான குற்றச்சாட்டுக்கு என்ன காரணம், என்று நிச்சயம் கேட்டுப்பார்க்கத்தான் வேண்டும்.

Continue reading

காலத்தால் அழியாத கர்த்தரின் கட்டளைகள்

II- பழைய, புதிய ஏற்பாட்டு நூல்களில் பத்துக்கட்டளைகள்

கடந்த இதழில் திருச்சபை வரலாற்றில் பத்துக்கட்டளைகள் சபைகளால் மதிக்கப்பட்டு நடைமுறையில் பின்பற்றப்பட்டு வந்தது பற்றியும், பத்துக்கட்டளைகளைப் பின்பற்ற அவசியமில்லை என்ற தவறான எண்ணங்கொண்டிருந்த பிரிவுகள் பற்றியும் ஆராய்ந்திருக்கிறோம். பத்துக்கட்டளைகளின் அவசியத்தை வேதத்தில் இருந்து நேரடியாக நிரூபிப்பதற்கு முன் இப்படியாக வரலாற்றில் திருச்சபையில் அதற்குக் கொடுக்கப்பட்டிருந்த இடத்தை ஆராய்ந்தது நம் நன்மைக்கே. திருச்சபை வரலாற்றில் 19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பெருமாற்றங்களே பத்துக்கட்டளைகளை இன்று திருச்சபைகளும், கிறிஸ்தவர்களும் மதித்துப் பின்பற்றாமல் இருப்பதற்குக் காரணம் என்பதையும் பார்த்தோம். இந்த இதழில் நாம் நேரடியாக வேதத்தில் பத்துக்கட்டளைகளின் அவசியம் எந்த முறையில் விளக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.

Continue reading

கவிதை

மண்புழுவும் மண்வெட்டியும்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நினைப்பதெல்லாம் நடப்பதற்கு நாமும் தெய்வமில்லை
நடக்கின்ற அத்தனைக்கும் படைத்தவரே காரணம்
நாசத்தனங்களுக்கு மட்டும் நாம் காரணம்

பரமனை அறியாமல் பாவத்தில் மூழ்கி
பண்புகள் கெட்டுப் பாம்பிலும் மோசமாய்
விஷத்தைக் கக்கி வினாசங்கள் செய்து
வையத்தை அழிக்கின்றோம் வீணராய் வாழ்ந்து

விடுதலை தேவை வீணான வாழ்க்கைக்கு
சீரானவழி காட்ட சிந்தனைக்கில்லை பலம்
இருதயம் கெட்டு சிதல் கொட்டுது பாவத்தால்
மருந்துக்கு வழி இந்த மண்ணில் எங்குமில்லை

மனிதநேயமே மருந்திதற்கு என்பார்
மனிதனும் தெய்வமாகலாம் என்பார்
மண்புழு அறியுமா மண்வெட்டியின் நோக்கம்
மனிதப்புழுவுக்குத் தெரியுமா தேவனின் சித்தம்

நித்திய தெய்வீகத்தைப் பெரிதாய் எண்ணாமல்
நமக்காய் இம்மண்ணில் மானுடத்தை ஏற்று
தயவாய்த் தன்னை சிலுவையில் தாழ்த்தி
மரித்தார் ஒரேதரம் தேவ மைந்தனாம் இயேசு

பாவங்களைந்தோட பாவியென்றுணை உணர்ந்து
பரமன் இயேசுவின் பாதத்தில் அறிக்கையிட்டு
நித்திய வாழ்வுக்காய் நிமலனை விசுவாசித்து
நித்தமும் வாழ்வாயவர் நேர்வழி பின்பற்றி

-சுபி

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை” என்ற வரிகளை ஒரு காலத்தில் தமிழகத்தின் ஆஸ்தான கவிஞராக இருந்த கண்ணதாசன் எழுதியிருந்தார். கடவுளை அறியாத மனிதனாக இருந்தபோதும் அவரெழுதிய இந்த வாசகம் உண்மையானதுதான். நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் நாமல்லவா தெய்வம் என்றாகிவிடும். என்ன நோக்கத்தில் கண்ணதாசன் இதை எழுதினாரோ எனக்குத் தெரியாது. கடவுளின் பொதுவான கிருபையின் காரணமாக அவரை முற்றிலும் அறியாத கண்ணதாசன் போன்ற மனிதர்கள்கூட ஞானமான சில விஷயங்களை சொல்லிவிடுகிறார்கள். அதற்காக அவர்கள் கடவுளை அறிந்திருக்கிறார்கள் என்றோ, அவரை நெருங்கி விட்டார்களென்றோ சொல்ல முடியாது. ஆவியில்லாத மனிதர்களில் சொட்டும் ஆவிக்குரிய சிந்தனையோ, நடவடிக்கையோ இருக்க வழியில்லை.

கண்ணதாசனின் இந்த வார்த்தைகள் என் மனதுக்கு வந்ததற்குக் காரணம் உலகத்தில் சமீபத்தில் நடந்திருக்கும் சில காரியங்கள்தான். முதலில் அக்கிரமம் நாளுக்கு நாள் உலகில் அநியாயத்துக்கு அதிகரித்து வருகிறது. கிறிஸ்தவர்களில் சிலர் இந்த உலகம் ஆண்டவருடைய வருகைக்கு முன் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு என்றைக்குமே இல்லாதவகையில் சமாதானத்தையும், பெரும் சுவிசேஷ ஆசீர்வாதத்தையும், எழுப்புதல்களையும், திருச்சபை எழுச்சியையும் அனுபவிக்கும் என்கிறார்கள். அவர்களுடைய இந்த கிறிஸ்துவின் வருகையை மையமாகக் கொண்ட கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்களைச் சுற்றிப் பார்க்கின்ற எவருமே இந்த உலகம் இன்னும் கெட்டுப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுவார்கள். அதற்கான அறிகுறிகள் தெளிவாக இருக்கின்றன. இந்த உலகம் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதாக வேதம் சொல்லுகிறது. இயேசு மீண்டும் வருகிறபோது இந்த உலகத்தை முற்றிலும் உருமாற்றம் செய்யப்போகிறார் என்கிறது வேதம். அந்த மீட்புக்காகவே இந்த உலகமும் பரிதவிப்போடு காத்திருப்பதாக ரோமர் 8லும் வாசிக்கிறோம்.

Continue reading

பெற்றோரின் கடமைகள் – ஜெ. சி. ரைல் –

பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து. அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். – நீதி 22:6

4. பிள்ளையின் ஆத்துமாவின் நலனைக் குறிக்கோளாகக் கொண்டே எப்போதும் பிள்ளை வளர்ப்பில் ஈடுபடுங்கள்.

உங்களுடைய கண்களுக்கு உங்கள் பிள்ளைகள் விலையேறப் பெற்றவர்கள்தான் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், நீங்கள் உண்மையாகவே அந்தப் பிள்ளைகள்மேல் அன்பு காட்டுவீர்களானால், அவர்களுடைய ஆத்துமாவின் நலனைக் குறித்து அடிக்கடி நினைத்துப் பாருங்கள். அவர்களுடைய நித்தியஜீவனைவிட நீங்கள் அக்கறை செலுத்த வேண்டிய பெரிய விஷயம் எதுவும் இல்லை. அவர்களிடம் இருக்கின்ற அந்த அழியாத ஆத்துமாவைவிட வேறு எந்த அங்கமும் உங்களுக்கு மேலானதாகத் தெரியக்கூடாது. இந்த உலகமும் அதன் எல்லா மகிமையும் ஒரு நாள் அழிந்து போகும். மலைகள் எல்லாம் உருகிவிடும். வானங்கள் புத்தகச்சுருளைப் போல சுருட்டப்பட்டுவிடும். சூரியன் வெளிச்சத்தைக் கொடுக்காமல் போகும் காலம் வரும். எல்லாமே ஒரு நாள் அழிந்து போகப்போகின்றன. ஆனால், நீங்கள் மிகவும் அன்புகாட்டுகிற உங்கள் பிள்ளைகளுடைய ஆத்துமா இவைகள் அனைத்தையும் கடந்து என்றென்றும் வாழப் போகின்றது. அதனால் அவர்களுடைய சந்தோஷமும், துக்கமும் உங்கள் கையிலேயே இருக்கிறது.

இந்த எண்ணமே உங்களுடைய மனதில் முக்கிய இடத்தைப் பிடித்து ஆக்கிரமித்திருக்க வேண்டும். இந்த எண்ணத்தைக் கொண்டவர்களாகத்தான் நீங்கள் பிள்ளைகளுக்கு எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டும். நீங்கள் அவர்களுக்காக செய்கிற காரியம் எதுவாக இருந்தாலும், என்ன திட்டம் வகுத்தாலும் “இந்தக் காரியம் என் பிள்ளையினுடைய ஆத்துமாவைப் பாதிக்குமா?” என்ற கேள்வியைக் கேட்க மறக்காதீர்கள்.

Continue reading