வாசகர்களே!

இந்த இதழ் திருமறைத்தீபத்தின் 75வது இதழ். அதை நினைவுகூருமுகமாக என் நினைவில் அசைவாடிய எண்ணங்களை எழுதியிருக்கிறேன். இத்தனை காலமாக பத்திரிகையைத் தொடர்ந்து அச்சில் வைத்திருந்து சத்தியங்களை விளக்கி எழுதத் துணை செய்த ஆண்டவருக்கே எல்லா மகிமையும் சேரவேண்டும். பத்திரிகை எத்தனையோவிதங்களில் பயனுள்ளதாக இருக்கிறது என்று எழுதித் தெரிவிக்கிறவர்களும், தொடர்ந்து அதிகரிக்கும் புதிய வாசகர்களும் இந்தப் பணி தொடர எங்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள்.

கொஞ்சம் வித்தியாசமான ஓர் ஆக்கம் இந்த இதழில் வந்திருக்கிறது. கிறிஸ்தவத்திற்கு எதிர்வினை தெரிவித்து எழுதப்பட்டுள்ள Breaking India என்ற ஒரு நூலுக்கான என்னுடைய எதிர்வினையை இதில் தந்திருக்கிறேன். இந்த நூல் தமிழில் ‘உடையும் இந்தியா’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களால் எழுதப்பட்டிருக்கும் நூலாதலால் கிறிஸ்தவத்தைத் தவறான கோணத்தில் பார்த்து விமர்சித்திருக்கிறார்கள். இருந்தபோதும் அதிலிருந்து கிறிஸ்தவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அநேக விஷயங்கள் இருக்கின்றன. நம்மைத் தவறாக கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் எண்ணும்படி நடந்துகொள்வதை நாம் தவிர்த்துக்கொள்ளலாம் அல்லவா? ஆகவே கிறிஸ்தவர்களை எச்சரிக்கும் வகையில் என்னுடைய எதிர்வினையைத் தந்திருக்கிறேன். இது இந்தியா மட்டுமல்லாமல் ஸ்ரீ லங்காவில் இருக்கும் வாசகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஜெ.சி. ரைலின் “பெற்றோரின் கடமைகள்” என்ற ஆக்கத்தின் இறுதிப் பகுதி இந்த இதழில் வந்திருக்கிறது. இது ஜூன் மாதம் நூலாக ‘ஆவிக்குரிய பிள்ளை வளர்ப்பு’ என்ற தலைப்பில் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. ஏற்கனவே அநேகர் ஆர்வத்தோடு இந்நூலை வாங்கி வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். குடும்பங்களுக்கு நிச்சயம் அது பயனுள்ளதாக இருக்கும்.

அடுத்த வருடம் பத்திரிகை இருபதாவது வருடத்தை ஆரம்பிக்கிறது. அதுவே ஒரு மைல் கல். இந்தளவுக்கு நம்மை வழிநடத்தி தன் இராஜ்யத்தை விஸ்தரிக்க, தகுதியேயில்லாத நம்மையும் ஒரு சிறு கருவியாக இறையாண்மையுள்ள கர்த்தர் பயன்படுத்தி வருவதற்காக அவருக்கு நாம் பெரு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

– ஆசிரியர்