வாசகர்களே!

திருமறைத்தீபம் 20வது வருடத்தை இந்த இதழோடு ஆரம்பிக்கிறது. இம்மட்டுமாக கர்த்தர் பத்திரிகை மூலம் சத்தியத்தை சத்தியமாக விளக்கி வாசகர்களுக்கு அளிக்க துணைபுரிந்திருக்கிறார். இந்தப் பணி தொடர தொடர்ந்து ஜெபியுங்கள். சத்தியம் பலரின் கண்களைத் திறக்கட்டும். வேத வசனங்களில் தெளிவும், நம்பிக்கையும் இல்லாவிட்டால் கிறிஸ்தவம் கிறிஸ்தவமாக இருக்க முடியாது என்பதை நம்மினத்துக் கிறிஸ்தவம் உணர வேண்டும் என்ற ஆதங்கத்தோடுதான் இந்தப் பத்திரிகை ஆரம்பமானது. அது வீண்போகவில்லை என்பதை நாம் நிதர்சனமாக உணர்கிறோம். இன்னும் அநேகர் சத்தியத்தெளிவடைந்து வேதநம்பிக்கைகளை மட்டும் சுமந்து கிறிஸ்துவைப் பின்பற்றி வாழ பத்திரிகையைக் கர்த்தர் பயன்படுத்தட்டும்.

மனித சித்தத்தைப் பற்றிய தொடரில் இன்னொரு பகுதியை (நீயும் நானுமா – 2) இந்த இதழில் தந்திருக்கிறோம். அது நிறைவடைந்தபின் நூலாக வெளிவரும். இறையனுபவத்தை ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதைத்தான் சுவிசேஷம் சொல்லுவதன் மூலம் எதிர்பார்க்கிறோம். அந்த அனுபவத்தை அடையவும் அதில் வளரவும் தெளிவான இறைபோதனைகள் அவசியம். இறைபோதனைகள் இல்லாமல் இறையனுபவத்தில் வளரவோ, உயரவோ முடியாது. அதை விளக்கும் ஆக்கமே ‘வண்டியும் சக்கரங்களும்’.

Continue reading

வண்டியும் சக்கரங்களும்

‘இறையியல், படித்தவர்களுக்கும் ஞானமுள்ளவர்களுக்கும் சொந்தமானது; பொழுதுபோவதற்கு ஒரு நல்ல சாதனம், ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையில் அக்கறையுள்ளவர்கள் இறையியலின் வாசற்படியைக்கூட நாடக்கூடாது. அது அவர்களுடைய ஆன்மீக வாழ்க்கைக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்’ என்ற விதமான எண்ணங்களையெல்லாம் இன்று பலரும் கொண்டிருக்கிறார்கள். லிபரல் கோட்பாட்டாளர் நிச்சயமாக இவ்வெண்ணங்களுக்கு மூலகாரணமாக இருந்துள்ளார்கள். லிபரலிஸம் சமயக்குழுக்களில் பரவத்தொடங்கி வேதத்தில் மக்களுக்கிருந்த நம்பிக்கையைத் தகர்க்கத் தொடங்கியதும் இறையியலிலேயே மக்களுக்கு சந்தேகம் ஏற்படத் தொடங்கி அதிகப்படிப்பு புத்திக்குதவாது என்ற எண்ணத்தில் பலரும் அதில் கவனம் செலுத்துவதில் அக்கறை காட்டவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தலைதூக்கிய சுவிசேஷ இயக்கத்தைப்போல் தோற்றமளித்த புதிய சுவிசேஷ இயக்கமும், நவீன கெரிஸ்மெட்டிக் இயக்கமும் இத்தகைய எண்ணங்களை இனிப்பூட்டி வளர்த்தன என்றால் மிகையாகாது. இவ்வியக்கங்களின் தாக்கத்தால் இன்று பிரசங்கம், போதனை என்ற பெயரில் இறையியலற்ற, உப்புச் சப்பில்லாத ஆவிக்குரிய வாழ்க்கையில் எந்த வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியாத, காதுக்கு மட்டும் குளிர்ச்சி தரும் வெறும் பேச்சுக்களை சபை சபையாக இன்று கேட்க முடிகின்றது. வண்டியென்றிருந்தால் அதில் சக்கரங்களிருக்கத்தான் செய்யும். சக்கரங்களில்லாத எதையும் நாம் வண்டியாகக் கருதமாட்டோம். அதுபோல் இறையனுபவத்துக்கு இறையியல் அவசியம். சக்கரங்களில்லாமல் எப்படி வண்டியிருக்க முடியாதோ அதேபோல் சத்தான இறையியலில்லாமல் ஆவிக்குரிய இறையனுபவம் இருக்க முடியாது. பிரிக்கக்கூடாததைப் பிரிக்காதீர்கள்.

Continue reading

திருச்சபை வரலாறு ஏன்?

அநேகர் இன்று திருச்சபை வரலாறே அறியாது இருக்கின்றார்கள். தேவ பிள்ளைகள் மட்டுமன்றி தேவ ஊழியர்கள்கூட திருச்சபை வரலாறு தெரியாது திருச்சபை ஊழியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேதம் மட்டுமே தெரிந்தால் போதும் என்று விவாதிப்பவர்கள் அவ்வேதம் தேவன் இவ்வுலகத்தில் செய்த காரியங்களின் வரலாற்றைத்தான் விளக்குகின்றது என்பதை உணராதிருக்கிறார்கள். நாம் வணங்கும் தேவன் வரலாற்றின் தேவனாக இருப்பதால், உலக வரலாற்றிலிருந்து அவரைப் பிரித்துவிட முடியாது.

திருச்சபை வரலாற்று அறிவு ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் நிச்சயம் அவசியம். அவ்வறிவைப் பெற்றுக் கொள்பவன் கர்த்தரை மேலும் தன் வாழ்க்கையில் மகிமைப்படுத்தக் கூடியவனாக இருக்கிறான்.

Continue reading

கிறிஸ்தவ வினா விடைப் போதனைகள்

(புதிய நூலான ‘கிறிஸ்தவ வினா விடைப் போதனைகள்’ வெளிவந்திருக்கின்றது. அதன் அவசியத்தையும் பயன்பாட்டையும் இந்த ஆக்கத்தில் வலியுறுத்தி விளக்கியிருக்கிறோம். இது நூலில் அறிமுகவுரையாக வந்திருக்கின்றது. – ஆசிரியர்.)

வினா விடைப் போதனை தமிழ் கிறிஸ்தவ உலகிற்கு பெரும்பாலும் புதியது. ஆரம்ப கால மிஷனரிகளான வில்லியம் கேரி, சீகன்பால்கு போன்றோர் கீழைத்தேய நாடுகளில் அதை அறிமுகப்படுத்தியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இருந்தபோதும் திருச்சபைகளில் அவை நிலைகொள்ளவில்லை. இன்றைக்கு வாக்குத்தத்த வசனங்களும், தியானச் செய்திகளும் மட்டுமே திருச்சபைகளை அலங்கரித்து சத்தான போதனைகள் ஆத்துமாக்களை அடைய முடியாதபடி மறைக்கப்பட்டு வருகின்றன. இது திருச்சபையின் ஆத்தும வளர்ச்சிக்கு அறிகுறியாகாது. பல வருடங்களுக்கு முன்பாக சிறுவர்களுக்கான சிறிய வினா விடைப் போதனையை வெளியிட்டிருந்தோம். அதற்கு நல்ல வரவேற்பிருந்தது. பல சபைகள் அதை ஞாயிறு பாடசாலைகளிலும், கிறிஸ்தவர்கள் குடும்ப ஆராதனையிலும் பயன்படுத்திப் பலனடைந்தார்கள். அது தொடர்ந்தும் அச்சில் இருந்து வருகின்றது.

Continue reading

நீயும் நானுமா! (பாகம் 2)

இதற்கு முன்பு வந்திருந்த ஓரிதழில் இதே தலைப்பில் மனிதனுடைய சித்தத்தின் தன்மையை (The Will of Man) ஆராயும் ஆக்கங்களின் ஒருபகுதியை வெளியிட்டிருந்தோம். அதன் இரண்டாம் பகுதியாக இந்த ஆக்கம் வெளிவருகிறது. இதுவரை, மூல பாவத்தைப் பற்றிய பெலேஜியனின் கோட்பாடுகளில் இருந்து ஜெக்கபஸ் ஆர்மீனியஸின் கோட்பாடுகள்வரை பார்த்திருக்கிறோம். இந்த இதழில் தொடர்ந்து 18ம் நூற்றாண்டுகளிலும் அதற்குப் பின்வரும் நூற்றாண்டுகளிலும் இது பற்றிக் காணப்பட்ட கோட்பாடுகளை ஆராய்வது அவசியமாகிறது.

ஜொனத்தன் எட்வர்ட்ஸும் (Jonathan Edwards) மனித சித்தமும்

jonathan_edwardsபதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முக்கிய பிரசங்கியும், இறையியல் வல்லுனரும், சிந்தனையாளருமாக இருந்தவர் ஜொனத்தன் எட்வர்ட்ஸ். அமெரிக்காவில் வாழ்ந்த எட்வர்ட்ஸுக்கு அக்காலத்தில் ஏற்பட்ட ஆத்மீக எழுப்புதலோடு தொடர்பிருந்தது. எட்வர்ட்ஸின் பல நூல்கள் பிரபலமானவை. அவருடைய ‘கோபத்தோடிருக்கும் கடவுளின் பார்வையில் பாவிகள்’ என்ற பிரசங்கம் மிக முக்கியமானதும் பிரபலமானதுமாகும். பக்திரீதியான உணர்வுகள் (1746), சித்தத்தின் சுயாதீனம் (1754) ஆகிய முக்கிய நூல்களையும் அவர் எழுதியுள்ளார். எட்வர்ட்ஸ் மூல பாவத்தைப் பற்றி ஓர் ஆக்கத்தில் விளக்கியுள்ளார். இந்த முக்கியமான ஆக்கம் பெருமளவுக்கு அநேகர் அறிந்திராத ஒன்று.

Continue reading

சில சமயங்களில் சில நூல்கள்

நல்ல நூல்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதில் நான் எப்போதுமே தயங்கியதில்லை. ஒரு முக்கியமான நூலை தமிழ் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் வாசிக்க வேண்டிய அவசியத்தை இங்கு நான் குறிப்பாக விளக்க விரும்புகிறேன். இதுவரை வாசிப்பில் நீங்கள் அக்கறை காட்டியிருந்திராவிட்டால் உங்கள் வழக்கத்தை மாற்றிக்கொண்டு கொஞ்சம் வாசிப்பில் அக்கறை காட்டுங்கள். வாசிப்பே எல்லாமாகி விடாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் வாசிப்பு இல்லாத வாழ்க்கையில் ஆக்கபூர்வமான சிந்தனைக்கு வழியில்லை என்பதும் எனக்குத் தெரியும். வாசிப்பு அவசியமில்லையென்றால் நம்மைப் படைத்தவர் நமக்கு வேதத்தைத் தந்திருக்க மாட்டார். வாசிப்பு அவசியமில்லையென்றால் பவுல் சிறையில் நூல்களுக்காக அலைந்திருந்திருக்க மாட்டார். வாசிப்பு அவசியம் மட்டுமல்ல வாசிக்க வேண்டியவற்றை வாசிப்பதும் அவசியம். அதற்காகத்தான் இந்த நூலின் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கே எழுதுகிறேன்.

தாம்பத்திய உறவில் நெருக்கம்என் நல்ல நண்பரான அலன் டன் என்ற அமெரிக்க போதகர் 2009ல்‘Gospel Intimacy in a Godly Marriage’ என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார். திருமண வாழ்க்கையைப் பற்றி ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான நூல்கள் இருந்தபோதும் இன்னொரு நூல் அவசியமா என்ற கேள்வி எழும். அந்தக் கேள்விக்கு இந்த நூலுக்கு மதிப்புரை தந்துள்ள மதிப்புக்குரிய ஜொயல் பீக்கி (Joel Beeke) என்ற போதகரும், நூலாசிரியரும் நல்ல பதிலளித்துள்ளார். அவருடைய பதில் இதுதான் – ‘இறையியல் போதனைகளின் அடிப்படையில் ஆழமாக மணவாழ்க்கையையும் அதில் இருக்க வேண்டிய நெருக்கத்தையும் விளக்குகின்ற அலன் டன்னின் நூல் நான் வாசித்திருக்கும் நூல்கள் அனைத்திலும் சிறந்ததென்றே கூறுவேன். உடன்படிக்கையின் அடிப்படையில் கிறிஸ்து தன்னுடைய சபையோடு கொண்டிருக்கும் ஆழ்ந்த இரகசியமான உறவை திருமணத்தின் மூலம் பவுல் விளக்குவதை, மணவாழ்க்கை பற்றி என் வாழ்நாளில் நான் வாசித்திருக்கும் ஒரு டஜன் நூல்களில் இந்த நூலே மிகவும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கின்றது . . . உங்களுடைய மணவாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்களானால் உடனடியாக அலன் டன்னின் நூலை வாங்கி வாசியுங்கள். அத்தோடு ஒரு டஜன் நூல்களைப் பணம் கொடுத்து வாங்கி மற்றவர்களுக்கும் கொடுங்கள்.’ சமீபத்தில் நான் நண்பர் அலன் டன்னை சந்தித்தபோது இதைவிடப் பெரிய மதிப்புரையை யாரும் ஒரு நூலுக்கு கொடுக்க முடியாது என்று அவரிடம் சொன்னேன். அதற்குக் காரணம் போதகரும், நூலாசிரியருமான ஜொயல் பீக்கி இந்த வார்த்தைகளை சாதாரணமாக எழுதவில்லை என்பதால்தான்.

Continue reading

75வது இதழ் வாசகர்கள் சொன்னவை!

Prabudossதிருமறைத்தீபம் பத்திரிக்கை 75 வது இதழாக வெளிவந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தனை ஆண்டுகள் தடையில்லாமல் வெளிவர உதவிசெய்து இப்பிரதிகள் எனக்கும் கிடைக்க உதவிய ஆண்டவருக்கு இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி ஏறெடுக்கிறேன்! இவ்வூழியம் என் வாழ்க்கையில் கொண்டு வந்த நன்மைகளை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது!

எத்தனை எத்தனை சத்தியங்கள், எவ்வளவு பெரிய வெளிப்பாடுகள்! கற்றுக்கொண்ட காரியங்கள் எத்தனையோ!! அவைகள் அத்தனையையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. பல ஆண்டுகளாய் வேதாகம கல்லூரியில் பயின்ற மாணவனை போன்ற ஓர் உணர்வு எனக்கு உண்டு என்றால் அது மிகையாகாது.

‘திருமறைத்தீபம்’ வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருந்த நாட்கள் அந்நாட்கள். பத்திரிக்கை கையில் கிடைத்த நிமிடத்திலிருந்து, அதை வாசித்து முடித்துவிட்ட பிறகே மற்ற வேலையைப் பார்க்கும் அளவிற்கு ஒவ்வொரு பிரதியும் உள்ளத்தில் அனல்மூட்டிக்கொண்டிருந்தது. பாடப் புத்தகத்தோடு சேர்த்து திருமறைத்தீபத்தையும் எடுத்துச் சென்று பள்ளி நாட்களை கழித்திருக்கிறேன். கல்லூரி நாட்களில் ரயில் பயணத்தில் படிப்பதற்கு ஒவ்வொரு பிரதிகளையும் கொண்டுசெல்வது என் வழக்கமாகவே இருந்திருக்கிறது. அது என் சக தோழர்களுக்கும் இந்த பழக்கத்தை உண்டாக்கியது. இப்படியாக இன்றுவரைக்கும் என் ஆத்மீகப் பசிக்கு உணவளிக்கும் வல்லமையுள்ளதாய் இருந்து கொண்டு தான் இருக்கின்றது இத்தீபம்!

 

Continue reading