‘இறையியல், படித்தவர்களுக்கும் ஞானமுள்ளவர்களுக்கும் சொந்தமானது; பொழுதுபோவதற்கு ஒரு நல்ல சாதனம், ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையில் அக்கறையுள்ளவர்கள் இறையியலின் வாசற்படியைக்கூட நாடக்கூடாது. அது அவர்களுடைய ஆன்மீக வாழ்க்கைக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்’ என்ற விதமான எண்ணங்களையெல்லாம் இன்று பலரும் கொண்டிருக்கிறார்கள். லிபரல் கோட்பாட்டாளர் நிச்சயமாக இவ்வெண்ணங்களுக்கு மூலகாரணமாக இருந்துள்ளார்கள். லிபரலிஸம் சமயக்குழுக்களில் பரவத்தொடங்கி வேதத்தில் மக்களுக்கிருந்த நம்பிக்கையைத் தகர்க்கத் தொடங்கியதும் இறையியலிலேயே மக்களுக்கு சந்தேகம் ஏற்படத் தொடங்கி அதிகப்படிப்பு புத்திக்குதவாது என்ற எண்ணத்தில் பலரும் அதில் கவனம் செலுத்துவதில் அக்கறை காட்டவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தலைதூக்கிய சுவிசேஷ இயக்கத்தைப்போல் தோற்றமளித்த புதிய சுவிசேஷ இயக்கமும், நவீன கெரிஸ்மெட்டிக் இயக்கமும் இத்தகைய எண்ணங்களை இனிப்பூட்டி வளர்த்தன என்றால் மிகையாகாது. இவ்வியக்கங்களின் தாக்கத்தால் இன்று பிரசங்கம், போதனை என்ற பெயரில் இறையியலற்ற, உப்புச் சப்பில்லாத ஆவிக்குரிய வாழ்க்கையில் எந்த வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியாத, காதுக்கு மட்டும் குளிர்ச்சி தரும் வெறும் பேச்சுக்களை சபை சபையாக இன்று கேட்க முடிகின்றது. வண்டியென்றிருந்தால் அதில் சக்கரங்களிருக்கத்தான் செய்யும். சக்கரங்களில்லாத எதையும் நாம் வண்டியாகக் கருதமாட்டோம். அதுபோல் இறையனுபவத்துக்கு இறையியல் அவசியம். சக்கரங்களில்லாமல் எப்படி வண்டியிருக்க முடியாதோ அதேபோல் சத்தான இறையியலில்லாமல் ஆவிக்குரிய இறையனுபவம் இருக்க முடியாது. பிரிக்கக்கூடாததைப் பிரிக்காதீர்கள்.