வாசகர்களே!

இந்த இதழின் எல்லா ஆக்கங்களையும் நானே எழுத கர்த்தர் துணை செய்தார். சில சமயங்களில் எப்படி இந்த இதழை முடிக்கப்போகிறோமோ என்ற ஏக்கம் எப்போதுமே எழும். இருந்தபோதும் குறிப்பிட்ட காலத்துக்குள் தரத்தில் எந்தவித குறைபாடும் இல்லாதபடி இதழ்களை நிறைவுசெய்ய கர்த்தர் துணை செய்திருக்கிறார்; தொடர்ந்தும் செய்கிறார். இந்த இதழ் நேரத்தோடு வெளிவர அநேகரின் ஒத்துழைப்பு இருந்திருக்கிறது. அவர்களெல்லோருக்கும் என் நன்றிகள்.

இறையியல் பயிற்சி பற்றி நம்மால் சிந்திக்காமல் இருக்க முடியாது. திருச்சபைக்கு போதக சமர்த்துள்ள போதகர்கள் தேவையெனில் அதற்குத் தகுதியுள்ளவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்தத் தகுதியை இன்றைய சூழ்நிலையில் எப்படிப் பெற்றுக்கொள்ளுவது? என்பது பற்றி இந்த இதழில் விளக்க முயன்றிருக்கிறேன். இது உங்களை சிந்திக்க வைக்கவேண்டும்.

 

Continue reading

சிந்திக்க வேண்டிய இறையியல் பயிற்சி

அநேக வருடங்களுக்கு முன் நான் வைத்திருந்த முதல் காரை எண்ணிப் பார்க்கிறேன். பழைய காராக இருந்தபோதும் என் தேவையை அப்போதைக்கு அது நிறைவேற்றியது. எல்லாப் பழங்கார்களுமே இருந்திருந்து பிரச்சனை தரும். ஒரு முறை என் கார் எஞ்சினில் பிரச்சனை ஏற்பட அதைக் கவனித்த நண்பனொருவன் தானே அதை சரி செய்ய முன்வந்தான். நானும் நம்பிக் காரை அவன் கையில் ஒப்படைத்தேன். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கார் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்ப்பதற்காக வெளியில் வந்தபோது நான் அதிர்ந்து போனேன். முழு எஞ்சினுமே அக்குவேறு ஆணிவேறாகக் கழட்டி நிலத்தில் பரப்பி வைக்கப்பட்டிருந்தது. என்னடா இது, என்று கேட்டால் சீக்கிரம் முடிந்துவிடும் என்று பதிலளித்தான் நண்பன். அதற்குப் பிறகு நடந்ததைப் பற்றி என்ன சொல்ல. எஞ்சினைப் பீஸ் பீஸாகக் கழட்டத் தெரிந்திருந்த நண்பனுக்கு அதை மறுபடியும் இணைக்கத் தெரியவில்லை. கடைசியில் காரை ஒரு வண்டியில் ஏற்றி சர்வீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தேன்.

இதை எதற்குச் சொல்லுகிறேன் என்றால் ஒரு காரியத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தால் மட்டுந்தான் அந்தக் காரியம் பற்றிய சகல விஷயங்களையும் நாம் புரிந்துகொள்ளுதலோடு அணுக முடியும்; பிரச்சனை ஏற்பட்டாலும் சரி செய்ய முடியும். அதைப் பற்றிய குறைந்தளவு ஞானம் போதாது. அது பிரச்சனை ஏற்படும்போது சரி செய்ய உதவாது. எந்தவொரு காரியத்தைப் பற்றியும் தேவையான அளவுக்கு ஞானம் இருப்பது அவசியம். பொது அறிவுகூட அதைத்தான் சொல்லும். தெரியாத விஷயத்தில் ஒருவர் தலையிட்டால் அவர் அதை பிரச்சனையுள்ளதாக்கி விடுவார். தெரியாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பதே நல்லது.

 

Continue reading

கிருபாதாரபலியா, கோபநிவாரணபலியா?

வார்த்தைகள் முக்கியமானவை. நம்முடைய எண்ணங்களை வெளியிட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். எண்ணங்களைத் தெளிவாக விளக்குவதற்கு தகுந்த வார்த்தைகள் அவசியம். வார்த்தைகள் சரியானதாக இல்லாவிட்டால் நாம் வெளிப்படுத்தும் எண்ணங்கள் தவறான கருத்தைக் கொடுத்துவிடும் ஆபத்து இருக்கிறது. தகுந்த வார்த்தைகளை, நாம் வெளிப்படுத்த விரும்பும் எண்ணங்களுக்கேற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் அவசியத்தை பொதுவாக எல்லோரும் அறிந்திருப்பார்கள். நடைமுறை வாழ்க்கையில் இந்தளவுக்கு மொழியைப் பொறுத்தவரையில் நாம் வார்த்தைகளில் கவனம் செலுத்துகிறபோது, நாமறிந்துகொள்ளும்படி தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தியிருக்கும் தன்னுடைய வேதத்தில் கர்த்தர் எந்தளவுக்கு முக்கியம் கொடுத்து வார்த்தைகளை வெளிப்படுத்தியிருப்பார்? தம்முடைய சித்தம் தெளிவாக, நாம் புரிந்துகொள்ளும்படி இருக்கவேண்டுமென்பதற்காக நிச்சயம் கவனத்தோடு தெரிந்தெடுத்து வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பார். அதுவும் வேதம் பரிசுத்த ஆவியினால் விசேஷமான முறையில் ஊதி அருளப்பட்டதாக இருக்கிறது. வேதத்தை எழுதி முடிக்க தேவ மனிதர்களை பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தியிருந்தபோதும், தவறு அறவேயில்லாமல் அவர்கள் வேதத்தை எழுதும்படிச் செய்தார். பரிசுத்த ஆவியானவர் பூரணபரிசுத்தராக இருப்பதால் அவருடைய எழுத்துக்களும் பூரணபரிசுத்தம் வாய்ந்ததாகவே இருக்கும். வேதத்தில் அது போதிக்கும் சத்தியங்கள் மட்டுமல்லாமல் அவற்றை வெளிப்படுத்தும் மொழியும், வார்த்தைகளும்கூட பூரணமானவையாகக் காணப்படுகின்றன. அதாவது. வேதம் எபிரெய, கிரேக்க மொழிகளில் எழுதித் தரப்பட்டு காணப்படும் மூலச் சுருள்களில் அந்தவகையில் கர்த்தரின் வேதம் பூரணமானதாகக் காணப்படுகின்றது. இந்த மூலச் சுருள்களில் இருந்தே வேதம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நம்மை வந்தடைந்திருக்கிறது.

Continue reading

அன்று நடந்ததுதான் என்ன? (அப்போஸ்தலருடைய நடபடிகள் 2)

[இந்த ஆக்கத்தை வாசிக்கும்போது ஓரிரு தடவைகள் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தை வாசித்தபின்போ அல்லது அதைத் திறந்துவைத்துக்கொண்டு இந்த ஆக்கத்தை ஒப்பிட்டுப் பார்த்து வாசிப்பது பிரயோஜனமாக இருக்கும். – ஆசிரியர்]

அப்போஸ்தலருடைய நடபடிகள் இரண்டாம் அதிகாரத்தை வாசித்துப் பார்க்கின்றபோது நமக்கு என்ன தோன்றுகிறது? இதுவரை இருந்திராத வகையில் அப்போஸ்தலனான பேதுரு பெருந்தைரியத்தோடு சகல அப்போஸ்தலர்களும் சூழ்ந்திருக்க முன்னால் வந்து அங்கிருந்த திரளான யூதக்கூட்டத்தைப் பார்த்து கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஆணித்தரமாக விளக்கினார். அந்த சுவிசேஷ செய்தியில் கிறிஸ்துவின் மீட்பின் செயலை பழைய ஏற்பாட்டின் அடிப்படையில் அருமையாக விளக்கியது மட்டுமல்ல, ஆவிக்குரிய தைரியத்தோடு பேதுரு பிரசங்கித்திருப்பது நாம் ஒரு தடவை வாசிப்பதை நிறுத்திக் கவனிக்க வேண்டிய பெருநிகழ்ச்சி. அத்தோடு, அந்தப் பிரசங்கத்தின் முடிவில், இருதயத்தில் குத்தப்பட்டவர்களாக அநேகர் நாம் என்ன செய்ய வேண்டும் என்று பெருங்குரலெடுத்துக் கேட்டதையும் கவனிக்கிறோம். அன்றைய தினத்தில் உடனடியாக மூவாயிரம் பேர் விசுவாசிகளாகி ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள் என்பதையும் கவனிக்கிறோம். இந்த இடத்தில் நாம் சில முக்கியமான உண்மைகளைக் கவனித்துப் பார்க்காமல் இருக்க முடியாது.

 

Continue reading

மரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு –

john-knox (1)இந்த வருடம் ஸ்கொட்லாந்தின் சீர்திருத்தவாதியான ஜோன் நொக்ஸின் (1514-1572) 500வது நினைவாண்டு. வரலாற்று முக்கியத்துவம் கொண்டவர்களை நினைத்துப் பார்ப்பது உலக வழக்கம். கிறிஸ்தவ திருச்சபை வரலாற்றில் கர்த்தர் பயன்படுத்தியுள்ள சிறப்பான மனிதர்களை நினைத்துப் பார்ப்பது நமது வரலாற்றையும் அதன் முக்கிய அம்சங்களையும் மறந்துவிடாமல் நினைவுபடுத்தி கர்த்தருக்கு நன்றிகூறவும், அவர்கள் தியாகத்தோடு உழைத்த சத்தியங்களுக்காக நாம் தொடர்ந்து பாடுபடவும் உதவும். அத்தோடு, எபிரெயர் 11:4 விளக்குவதுபோல் இந்தப் பெரிய மனிதர்கள் மரணத்தை சந்தித்தபோதும் தங்களுடைய வாழ்க்கைச் சாதனைகளின் மூலம் இன்றும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பெரியவர், அதிரடிப் பிரசங்கி, அஞ்சாநெஞ்சன், ‘ஸ்கொட்லாந்தின் சீர்திருத்தத் தந்தை’ என்றெல்லாம் பெயர்பெற்றிருக்கும் ஜோன் நொக்ஸைப் பற்றி திருமறைத்தீபத்தில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். கடந்த வருடம் வெளிவந்த திருச்சபை வரலாறு, பாகம் 2லும் அவரைப் பற்றிய விளக்கத்தைத் தந்திருக்கிறேன். திருச்சபை வரலாற்று நாயகர்களில் எனக்குப் பிடித்தவர்களில் முக்கியமானவர் ஜோன் நொக்ஸ். அவரை நினைத்துப் பார்க்கும்போது உடனடியாக மனதில் நிற்பது அவருடைய அஞ்சாநெஞ்சந்தான். பயமே அறியாதவர் அவர். ஸ்கொட்லாந்து தேச ராணி மேரி ஸ்டுவர்ட் முன் நின்று சபையில் அவர் பிரசங்கம் செய்கிற ஒரு படத்தைப் பார்த்திருக்கிறேன். அதில் பிரசங்க மேடையில் கண்களில் தீப்பொறி பறக்க நின்று ராணியை நோக்கிக் கையை நீட்டி ஜோன் நொக்ஸ் பிரசங்கிக்கும் காட்சி இப்போதும் மனதில் நிற்கிறது. அக்காலத்தில் அரசி மந்திரிகளோடு ஓய்வுநாளில் சபைக்குப் போவது வழக்கம். ராணி மேரி ரோமன் கத்தோலிக்க மத ஆதரவாளி. இதுதான் கிடைத்த சமயம் என்று நொக்ஸ் அவளுக்கு வைராக்கியத்தோடு கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பிரசங்கித்திருக்கிறார். ராணிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தாலும் சபையில் அவரை ஒன்றும் செய்ய முடியாததால் பேசாமல் இருந்துவிடுவாள். பின்னால் அவரைக் கைதுசெய்ய அவள் பெருமுயற்சி எடுக்காமலில்லை. ஜோன் நொக்ஸ் எப்படியும் அவளுடைய கையில் பிடிபடாமல் உயிர்தப்பி வாழ்ந்திருக்கிறார். இங்கிலாந்தின் படைகளைவிட ஜோன் நொக்ஸின் பிரசங்கத்திற்கும், ஜெபத்திற்கும் ராணி மேரி ஸ்டுவர்ட் பயப்பட்டாள் என்று அன்று பேசப்பட்டது.

 

Continue reading