வாசகர்களே!

கர்த்தரின் கிருபையால் இன்னுமொரு இதழை நேரத்தோடு முடித்து அனுப்ப முடிந்திருக்கிறது. இந்த இதழை சரிபார்த்து வெளியிட பலர் உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் என்னுடைய மனமார்ந்த நன்றி. ஆவியானவரின் வழிநடத்தல் இல்லாமல் எந்தப்பணியும் நிறைவேற முடியாது. அவருடைய வழிநடத்துதலை இந்த இதழைத் தயார் செய்யும்போது அனுபவித்திருக்கிறோம். கர்த்தருக்கே சகல மகிமையும் சேர வேண்டும்.

இவ்விதழில் தமிழ் வேத மொழிபெயர்ப்பு ஒன்றை ஆய்வு செய்திருக்கிறோம். திருவிவிலியம் என்ற பெயரோடு 1995ம் ஆண்டில் வெளிவந்த அந்த மொழிபெயர்ப்பை பல கிறிஸ்தவ நிறுவனங்கள் கத்தோலிக்க நிறுவனத்தோடு இணைந்து தமிழகத்தில் வெளியிட்டன. பொதுமொழிபெயர்ப்பு என்ற பெயரோடு அது வெளிவந்தது. கத்தோலிக்கர்களுக்காக அறுபத்தாறு வேதநூல்களோடு தள்ளுபடி ஆகமங்கள் என்று அழைக்கப்படும் நூல்களை இணைத்தும், கிறிஸ்தவர்களுக்குத் தனியாக தள்ளுபடி ஆகமங்களை இணைக்காமலும் இந்நிறுவனங்கள் இந்த மொழிபெயர்ப்பை வெளியிட்டன. கர்த்தரின் கிருபையால் இந்த மொழிபெயர்ப்பை எல்லோரும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தபோதும் இதைப் பயன்படுத்துகிறவர்கள் இல்லாமலில்லை. கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் இந்த மொழிபெயர்ப்பை ஆய்வு செய்து என்னுடைய கருத்துக்களை வெளியிட்டிருக்கிறேன். இந்த மொழிபெயர்ப்பை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும் ஒரு மொழிபெயர்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையும், நாம் எந்த மொழிபெயர்ப்பிலும் என்னென்ன அம்சங்களைக் கருத்தோடு கவனித்து ஆராயவேண்டும் என்பதையும் அறிந்துகொள்ள இந்த ஆக்கம் உதவும் என்று நம்புகிறேன்.

Continue reading

ஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)

Bibleகிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கிறிஸ்தவத்தை விமர்சனம் செய்து வருவது என்றுமே இருந்திருந்தாலும் சமீப காலத்தில் இணையத்தில் அது அதிகரித்திருக்கிறது. இதிலும் சில வகையறாக்கள் இருக்கின்றன. காழ்ப்புணர்ச்சியோடும், சந்தேகக் கண்களோடும் பார்த்து விமர்சனம் செய்கின்ற இந்துத்துவ ராஜீவ் மல்கோத்திரா போன்றோர் ஒருவகை. இன்னொரு வகையினர் கிறிஸ்தவத்தை மதித்து, அதேநேரம் அதைப் புரிந்துகொள்ளும் முயற்சியோடு அது பற்றிக் கருத்துத் தெரிவிப்பவர்கள். இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் எழுத்தாளர் ஜெயமோகன். அவருக்கு கிறிஸ்தவ நண்பர்களும் இருக்கிறார்கள். ஜெயமோகன் மார்க்ஸிய பார்வைகொண்ட இந்து. தமிழகத்தில் முக்கியமான எழுத்தாளர். தன்னுடைய வலைத்தளத்தில் அவரெழுதிய ‘விவிலியம், புதுமொழியாக்கம்’ ஆக்கத்தை சமீபத்தில் நான் வாசிக்க நேர்ந்தது. ஆச்சரியமாகத்தான் இருந்தது, கிறிஸ்தவர்களே இதுவரை சிந்தித்துப் பார்க்காத ஒரு விஷயத்தை கிறிஸ்தவரல்லாத ஒருவர் இந்தளவுக்கு கருத்தோடு சிந்தித்து அதுபற்றி எழுதியிருப்பதைப் பார்த்தபோது.

ஜெயமோகனின் ஆக்கம் 1995ல் வெளிவந்த பொது மொழிபெயர்ப்பான ‘திருவிவிலியம்’ என்ற தமிழ் மொழிபெயர்ப்பைப் பற்றிக் கருத்துத் தெரிவித்து எழுதப்பட்டது. இந்த மொழிபெயர்ப்பை தமிழக கத்தோலிக்க நடுநிலையமும், அனைத்துலக வேதாகம சங்கமும் மதுரையில் வெளியிட்டன. இந்திய வேதாகம சங்கப் பதிப்பான இதன் பிரதி ஒன்றை சீ. எஸ். ஐ. திருச்சபை போதக நண்பர் ஒருவர் 2002ல் என்னிடம் தந்து வாசித்து கருத்துத் தெரிவிக்கும்படிக் கேட்டிருந்தார். அன்று பல வேலைப்பளுவின் காரணமாக அதை நான் உடனடியாக செய்யமுடியவில்லை. ஜெயமோகனின் ஆக்கத்தை வாசித்தபிறகு அதை மறுபடியும் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அதன் விளைவுதான் இந்த ஆக்கம்.

Continue reading

தனி மனிதன் சமூகமாகிறான்

சமீபத்தில் ஒழுக்கத்தைப் பற்றி ஒரு முக்கிய தமிழ் எழுத்தாளர் தந்திருந்த விளக்கத்தை வாசிக்க நேர்ந்தது. ‘ஒழுக்கம் என்பது ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொன்றாக உள்ளன. அவை உருவாவதற்கான சமூகப்பின்னணியும் வாழ்க்கைச் சூழலும் பல்வேறுபட்டவை. அவை சமூகத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேரூன்றச் செய்யப்படுகின்றன. அந்த சமூகப் பின்னணியும் சூழலும் மாறிய பின்னரும் அவை அவ்வளவு எளிதாக மாறுவதில்லை. இதுவே ஒழுக்கஞ்சார்ந்த விஷயங்களில் உள்ள மிகப் பெரிய பிரச்சனை’ என்று அவர் விளக்கமளித்திருந்தார். இந்த விளக்கம் ஓரினச் சேர்க்கையாளர் ஒருவர் மனந்திறந்து கேட்டிருந்த வினாவுக்கு அவர் தந்திருந்த விளக்கத்தின் ஒருபகுதி. விளக்கம் தந்த எழுத்தாளர் ஒழுக்கமென்பது சமூகத்தால் உருவாக்கப்படுகிறதென்றும், அது காலத்துக்குக் காலம் மாறுகிறதென்றும், காலப்போக்குக்குத் தக்கதாக அது மாறாவிட்டால்தான் பிரச்சனை என்றும் ஆதங்கப்படுகிறார். இந்த எழுத்தாளரைப் பொறுத்தவரையில் ஒழுக்கமும், பண்பாடும் ஒன்றே. வீட்டுக்குள் போவதற்கு முன் செருப்பைக் கழட்டி வாசலில் வைத்துவிட்டுப் போவதற்கும் (பண்பாடு) ஓரினச்சேர்க்கையையும் (ஒழுக்கம்) அவர் ஒன்றாகத்தான் பார்க்கிறார். இதை வாசித்தபோது எந்தளவுக்கு தமிழ் சமுதாயத்தின் சிந்தனைப்போக்கில் ஒழுக்கத்தைக் குறித்த தீவிர மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை என்னால் ஆழமாக எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.

நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு புரட்சிகரமாக எழுதிப் பிரபலமாக ஆரம்பித்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். ஆண், பெண் உறவு, திருமணம் பற்றிய அவருடைய சுதந்திரமான, சமுதாயம் வாசித்துப் பழகாத எண்ணங்களை அவர் தன் சிறுகதைகளிலும், நாவல்களிலும் வெளியிட ஆரம்பித்தபோது சமுதாயம் அவரைப் பார்த்துச் சீறியது. முக்கிய பத்திரிகையொன்று அந்தச் சீற்றம் தாங்கமுடியாமல் தான் வெளியிட்ட அவருடைய கதைக்காக பொதுமன்னிப்புக் கேட்டது. அன்று சமுதாயம் பொதுவாக ஒழுக்கத்தைப் பற்றிய வலுவான எண்ணப்பாட்டைக் கொண்டிருந்தது மட்டுமல்ல அதைப் பாதுகாக்கவும், அதற்காகப் போராடவும் தவறவில்லை.

Continue reading

சிறைக்கு வெளியில் சிறைவாசம்

பவுல்: துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும் நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா (2 தீமோத்தேயு 4:13).

Prisonersவாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். வாசிப்பு மனிதனை முழுமையாக்குகின்றதோ இல்லையோ நிச்சயம் மனிதனுக்கு அறிவைக்கொடுக்கும்; அனுபவத்தை அளிக்கும். அது அவனை சிந்திக்க வைக்கும் ஒரு விஷயத்தை ஆராய வைக்கும்; அதுபற்றி சாதகமாகவோ பாதகமாகவோ கருத்துத் தெரிவிக்க வலியுறுத்தும். வாசிக்கின்ற மனிதன் பல விஷயங்களை வாழ்க்கையில் அறிந்துகொள்ளுகிறான். பல விஷயங்களைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டவனாக இருக்கிறான்.

வாசிக்காதவர்களால் சிந்திக்க வழியில்லை. விஷயங்களைத் தெரிந்துகொள்ளாமலிருந்தால் அதுபற்றி எப்படி சிந்திப்பது? எப்படி ஒரு கருத்தைக் கொண்டிருப்பது? அந்தக் கருத்தை எப்படி வெளிப்படுத்துவது? வாசிக்கும் வழக்கம் இல்லாவிட்டால் நம்மால் தெளிவான, முதிர்ச்சியான சம்பாஷனை செய்யமுடியாது. முட்டாள்களைப்போலத்தான் பேசிக்கொண்டிருக்க முடியும். வாசிக்காதவர்களுக்கு பல விஷயங்களில் அறிவு இருக்க வழியில்லை. அவர்கள் அறிவில்லாதவர்களாக இருப்பார்கள்; வளருவார்கள். அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கும் அவர்களால் எந்தப் பயனுமிருக்காது. வாசிக்காதவர்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றிக் காரணகாரியங்களோடு ஆராய்ந்து தெளிவான விளக்கங்கொடுக்க முடியாது. அவர்களுடைய பேச்சு அறிவு சார்ந்ததாக இல்லாமல் அசட்டுத்தனமானதாக இருந்துவிடும். இப்போது தெரிகிறதா எந்தளவுக்கு வாசிப்பு அவசியம் என்று? அதனால்தான் அப்போஸ்தலன் பவுலும் சிறையிலிருக்கும்போது வேதப்புத்தகத்தையும், ஏனைய அவசியமான நூல்களையும் கொண்டுவரும்படித் தன் நண்பர்களுக்கு எழுதியிருக்கிறார்.

Continue reading

சில சமயங்களில் சில நூல்கள் – 3

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மூன்று சிறு நூல்களை நாம் தமிழில் வெளியிட்டோம். இவை ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட பிரசங்கங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு. இந்த மூன்றைப் பற்றியும் நான் எழுதுவதற்குக் காரணம் இவை சுவிசேஷ பிரசங்கங்கள் என்பதால்தான். சுவிசேஷ பிரசங்கங்கள் விசேஷமானவை. எந்தளவுக்கு விசேஷமானவை என்பதை நம்மினத்தில் பெரும்பாலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஏனைய பிரசங்கங்களைவிட சுவிசேஷ பிரசங்கங்கள் கவனத்தோடு தயாரிக்கப்பட வேண்டியவை. அதற்குக் காரணம் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட கால அளவில் கேட்டுக்கொண்டிருப்பவர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களை சிந்திக்க வைத்து, அவர்களுடைய இதயத்தைத் தொட்டு இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் உணரும்படிச் செய்யவேண்டிய கடமை பிரசங்கிக்கிறவருக்கு இருக்கிறது. இத்தனையையும் அந்தக் குறுகிய கால அளவில் செய்யவேண்டுமானால் பிரசங்கத்தைத் தயாரிப்பதில் பெருங்கவனம் எடுக்க வேண்டியது அவசியம்.

பிரசங்கத்தைத் தெளிவாகத் தயாரிப்பதில் மட்டுமல்லாமல், கேட்டுக் கொண்டிருப்பவர்களின் எண்ணப்போக்கு, மனநிலை, அவர்களுடைய வாழ்க்கை நிலை, தேவைகள், படித்தவர்களா, படிக்காதவர்களா என்பது போன்ற அத்தனையையும் மனத்தில் வைத்துப் பிரசங்கத்தைத் தயாரிக்க வேண்டும். பின்பு தயாரித்த பிரசங்கத்தைக் கேட்பவர்கள் இலகுவாக புரிந்துகொள்ள வேண்டிய மொழியில், சிற்றோடை துள்ளித் தவன்று தடையின்றி ஒடுவதுபோல் பிரசங்கிக்க வேண்டிய கடமையும் இருக்கிறது. பிரசங்கத்தின் முடிவில், ‘இவர் சொல்லுவது உண்மைதான், இயேசு அவசியம் தேவைதான்’ என்றளவுக்கு கேட்பவர்களை சிந்திக்க வைக்கின்ற விதத்தில் பிரசங்கம் இருக்க வேண்டும். அவர்கள் இயேசுவிடம் வருவதும் வராததும் கர்த்தரின் கையில் தங்கியிருக்கிறது. அது நம்முடைய வேலையல்ல. இருந்தாலும் கேட்பவர்களின் இருதயத்தைத் துளைத்து பாவத்தைப் பற்றியும், அதிலிருந்து இயேசுவின் மூலமாக விடுதலை அடைய வேண்டிய அவசியத்தைப் பற்றியும் மனித அளவில் அவர்களை சிந்திக்க வைத்து ஒருமுடிவுக்கு வரும்படிச் செய்ய வைக்கும் வகையில் சுவிசேஷ பிரசங்கம் அமைந்திருக்க வேண்டும். அந்தப் பணி பிரசங்கியினுடையது. அதனால் தான் சுவிசேஷப் பிரசங்கத்தைத் தயாரிப்பதில் பிரசங்கி விசேஷ கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

Continue reading

ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது

மதம் மாற்றுகிறோமா!

Sheet-Wolfகிறிஸ்தவர்களைப் பற்றி கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் பொதுவாக வைக்கும் ஒரு குற்றச்சாட்டு ‘அவர்கள் மக்களை மதம் மாற்றுகிறார்கள்’ என்பது. என்னைப் பொறுத்தவரையில் இது ஓர் அநியாயக் குற்றச்சாட்டுத்தான். கிறிஸ்தவர்கள் என்ற பெயரை வைத்துக்கொண்டு மனிதர்களை மதம் மாற்றுகிறவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் கிறிஸ்துவோ அல்லது கிறிஸ்தவ வேதமோ மற்றவர்களை மதம் மாற்றும்படி எங்குமே எப்போதுமே சொன்னதில்லை. வேதத்தை வாசித்துப் பாருங்கள், யாரும் எவரையும் மதம் மாற்றும்படியான போதனைகளை அதில் பார்க்கவே முடியாது.

கிறிஸ்தவ சுவிசேஷத்தை சிலர் தவறான முறையில் போதித்து, பிரசங்கம் செய்து கிறிஸ்தவத்திற்கு இழுக்குத் தேடி வைத்துவிடுகிறார்கள். சில காலங்களுக்கு முன்பு இந்தியாவில், முக்கியமாக தென் மாநிலங்களில் இந்து மதத்தில் இருந்துகொண்டே இயேசுவை அறிந்துகொள்ளலாம் என்று சாது செல்லப்பாவும், திராவிட மதங்கள் ஆரம்பத்தில் இருந்தே இயேசுவைத்தான் கடவுளாக விவரித்தன, பிராமணர்கள்தான் அதை மாற்றி இந்து தெய்வங்களை அறிமுகப்படுத்தி தமிழினத்தைக் கெடுத்துவிட்டார்கள் என்று புலவர் தெய்வநாயகம் போன்றவர்களும் அநாவசியத்துக்கு அறிவுக்குப் பொருத்தமில்லாததும், உண்மையில்லாததுமான கட்டுக்கதைகளை உருவாக்கி கிறிஸ்தவத்திற்கு இழுக்குத் தேடித் தந்தார்கள். இவர்களுடைய கதைகள் எல்லாம் கேட்பதற்கு சுவையாகவும், கேட்பவர்களை சினிமாவைப்போல கவருவதற்கு உதவினாலும் உண்மையானவையல்ல. கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வேதம் இதையெல்லாம் போலிப் போதனைகள் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

Continue reading