வாசகர்களே!

திருமறைத்தீபம் பத்திரிகை ஊழியத்தில் பங்குகொண்டு துணை செய்பவர்களில் ஒருவர் ஸ்ரீ லங்காவில் பத்திரிகையை அச்சிட்டு உதவும் மில்டன். இந்த வருடம் அவர் உடல்நலமில்லாமல் அவதிப்பட்டிருக்கிறார். கர்த்தரின் கிருபையால் இப்போது நலமாக உள்ளார். அவருக்காக ஜெபியுங்கள். தொடர்ந்து இதழ் அங்கு அச்சிடப்பட்டு தடங்கலில்லாமல் விநியோகிக்கப்படவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.

இந்த இதழை நேரத்தோடு முடித்துவெளியிட கர்த்தர் உதவினார். அவருடைய பெரும் வழிநடத்துதலை ஒவ்வொரு இதழ் தயாரிப்பின்போதும் காண்கிறோம். இந்த இதழில் வாசிப்பைப்பற்றிய முழு ஆக்கமொன்று வந்திருக்கிறது. நம்மினத்தில் வாசிப்பு மிகவும் தாழ்ந்த நிலையிலிருப்பதை எத்தனைபேர் உணர்கிறார்கள் என்பது தெரியவில்லை. கிறிஸ்தவம் தரமற்று இருந்துவருவதற்கு இது ஒரு பெருங்காரணமென்பதை நான் நம்புகிறேன். வாசிப்பு என்கிறபோது சிந்தனைத் திறத்தைக் கொண்டிருந்து நல்லவற்றைப் பயனற்றவையிலிருந்து பிரித்தெடுத்து, காத்திரமான வாசிப்பில் ஈடுபட்டு ஆவிக்குரிய அறிவைப் பெற்று பக்திவிருத்தியைப் பெருக்கிக்கொள்ளத் துணைபுரியும் வாசிப்பையே குறிப்பிடுகிறேன். வாசகர்களாகிய உங்களை இந்த ஆக்கம் சிந்தித்து செயல்பட வைக்குமானால் அதுவே இதற்குக் கிடைத்த பயனாக இருக்கும்.

Continue reading

சிற்றெறும்பும் கட்டெறும்பும்

antகடவுள் தன் பணியில் தனக்கு இஷ்டமானவிதத்தில் தன்னுடைய சித்தப்படி அநேகரைப் பயன்படுத்திக்கொள்ளுகிறார். அது அவருடைய இறையாண்மையைப் பொறுத்தது. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் நாம் வாசிக்கும் அநேக தேவ ஊழியர்களை அந்தவிதத்தில்தான் பயன்படுத்தியிருக்கிறார். அவர் குயவன்; அவரால் அழைக்கப்பட்டு அவருக்குப் பணிசெய்கிறவர்கள் அவருடைய கையில் இருக்கும் மட்பாண்டங்கள். என்னை ஏன் தெரிவுசெய்தீர்கள்? அல்லது தெரிவுசெய்யவில்லை என்றெல்லாம் ஒருவரும் கடவுளைக் கேட்க முடியாது. எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த கடவுள் தம் சித்தப்படி, தம்முடைய மகிமைக்காக எவரையும் பயன்படுத்துகிறார்; அனைத்தையும் செய்து வருகிறார்.

கடவுளின் பணியில் மோசமானது, ‘நான்’ என்ற ஆணவம். இந்த ‘நான்’ என்ற ஆழமான வடுவை நீக்குவதே ஆவியின் மறுபிறப்பாகிய அனுபவம். இருந்தும் ஆவியில் பிறந்தவர்கள் மத்தியிலும் இந்த ‘நான்’ தலைதூக்கி விடுகிறது. மரணத்திற்குரிய சரீரத்தோடு வாழ்கின்ற நாம் அதைப்பற்றி ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. இருந்தாலும் ஆவியில் பிறந்திருப்பவர்கள் இதை அடையாளம் கண்டு அன்றாடம் அழித்து இருதயத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால், அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் இதைப்போலத் தொல்லை கொடுப்பது வேறொன்றுமிருக்கமுடியாது. இது ஒரு பெருங்காட்டை அழித்துவிடும் பெருநெருப்பு. நாட்டையே நாசமாக்கிவிடும் நச்சுப்பாம்பு. திருச்சபையை இடுகாடாக மாற்றிவிடும் கொடூரமான, சாத்தானுக்குப் பணிசெய்யும் ஊழியக்காரன் இந்த ‘நான்.’

Continue reading

சட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு

இது ஸ்பர்ஜன் நெடுங்காலத்துக்கு முன் தன்னுடைய இறையியல் மாணவர்களுக்கு சொன்ன வார்த்தைகள். எப்படியாவது, என்ன செய்தாவது புத்தகங்களை வாங்கி வாசிக்கத் தவறாதீர்கள் என்று அவர் தன் மாணவர்களை வற்புறுத்தத் தவறவில்லை. அவருடைய மனைவி சூசானா இதற்கென ஒரு நிதியை ஏற்படுத்தி புத்தகம் வாங்கும் வசதியில்லாதவர்களாக இருந்த போதகர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் புத்தகங்களை அனுப்பி உதவி செய்திருக்கிறார். புத்தகங்களின் அருமையை ஸ்பர்ஜன் தன் வீட்டில் கற்றிருந்தார். நல்ல காரியங்கள் எல்லாவற்றிற்கும் வீடுதான் ஆரம்பம் இல்லையா? இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் நிரம்பியிருப்பது புத்தகங்கள் அல்ல; டிவியின் அலறலும், நவீன தொலைநுட்ப செய்திப்பரிமாறல் கருவிகளுந்தான். ஸ்பர்ஜனின் குடும்பத்தார் வாசிப்புக்கு முதலிடம் தந்திருந்தார்கள். ஸ்பர்ஜனின் தாத்தாவின் புத்தக அறை ஸ்பர்ஜனுக்கு பிடித்தமான ஒன்று. ஐந்து வயதிலேயே அதை நாடிப்போய் புத்தகங்களைக் கையில் எடுத்து தொட்டுத் தடவிப் பார்க்கும் பழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது. அவருடைய சொந்த நூலகத்தில் 20,000க்கும் மேல் நூல்கள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவைகளை (12,000) விமர்சனம் செய்து அவரே ஒரு நூலை வெளியிட்டிருந்தார். ஐந்து வயதில் ஆரம்பித்த புத்தக வாஞ்சையும், வாசிப்பும் அவரை எந்தளவுக்கு வாழ்க்கையில் கர்த்தரின் கிருபையால் உயர வைத்தது என்பது உங்களுக்கே தெரியும்.

Continue reading

கர்த்தரின் புதிய உடன்படிக்கை மக்களும் காலக்கூறு கோட்பாடும்

– அலன் டன் –

[இந்த இதழிலும், இனி வரவிருக்கின்ற இதழ்களிலும் டாக்டர் அலன் டன் கர்த்தரின் புதிய உடன்படிக்கை மக்களைப் பற்றிய விளக்கங்களை (The New Covenant people of God) நான்கு ஆக்கங்களின் மூலம் கொடுக்கவிருக்கிறார். அதன் முதலாவது பகுதியான ‘புதிய உடன்படிக்கை கர்த்தரின் மக்களும் காலக்கூறு கோட்பாடும்’ என்ற பகுதியை இந்த இதழில் வாசிக்கலாம். Dispensationalism என்ற போதனையையே ‘காலக்கூறு கோட்பாடு’ என்று இந்த ஆக்கம் முழுவதும் பெயரிட்டிருக்கிறேன். வரலாற்றைப் பெரும்பாலும் ஏழு காலப்பகுதிகளாகக் கூறிட்டு (பிரித்து) தொடர்ச்சியாக அடுத்தடுத்து வரும் அந்தந்தக் காலப்பகுதியில் கர்த்தர் எவ்வாறு செயல்பட்டிருக்கிறார், செயல்படப்போகிறார் என்று விளக்குவதே காலக்கூறு கோட்பாடு. காலத்தைக் கூறுகளாகப் பிரித்துப் பார்ப்பது காலக்கூறு கோட்பாடு தன் போதனையை நிலைநிறுத்துவதற்கு அவசியமாகிறது. காலத்தைக் கூறுபோடுவதன் அடிப்படையிலேயே அது பழைய உடன்படிக்கையில் ஒருவித மக்கள் கூட்டமும் (இஸ்ரவேல்), புதிய உடன்படிக்கையில் இன்னொருவித மக்கள் கூட்டமாக (திருச்சபை) இருவகை மக்கள் கூட்டமிருப்பதான தன்னுடைய அனுமானத்தை நிரூபிக்க முயலுகிறது. காலக்கூறு கோட்பாட்டுக்கு எதிரான உடன்படிக்கை இறையியல் (Covenant Theology) காலங்களாக வரலாற்றைப் பிரித்துப் பார்க்காமல் கர்த்தர் ஏற்படுத்திய உடன்படிக்கைகளின் அடிப்படையில் அவருடைய மக்களின் வரலாற்றை விளக்குகிறது. உடன்படிக்கை இறையியல் கர்த்தருடைய மக்களை இருவகையாகப் பிரிப்பதை அடியோடு நிராகரித்து அவர்கள் என்றும் ஒரே மக்களாகத்தான் (one people of God) மீட்பின் வரலாற்றில் இருந்துவருகிறார்கள் என்று வலியுறுத்துகிறது.

Continue reading

இருபதாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்

Yogarasaஉன் சுடரால் மாயை அழிகவே!

பெருமறையில் இருக்கும் எல்லாக் காரியங்களையும் சிறு அறிவு படைத்த எம்மால் புரிந்திட முடியுமோ? இல்லையே. அதை புரிய வைக்கும் பணியை திருமறை செவ்வனே செய்கிறது. இன்னுமொரு முக்கிய விடயம் யாதெனில், நாம் வேதத்தை அனுதினம் வாசித்தாலும், வேதத்தைப்பற்றிய வேதத்திற்குப் புறம்பான அநேக தகவல்கள் நாம் வாசிக்கும் வேதத்தினூடாக கிடைக்கப் பெறுவதில்லை. உதாரணமாக தமிழ் வேத மொழிபெயர்ப்பு யாரால், எப்போது, எங்கு செய்யப்பட்டது என்ற விடயத்தைக் குறிப்பிடலாம். ஒரு கிறிஸ்தவன் இந்த தகவல்களை அறிந்து வைத்திருத்தல் மிக அத்தியாவசியமானதொன்றே. இதுபோல இன்னும் பலவுள. இப்படியான கிறிஸ்தவர்கள் அறிய வேன்டிய முக்கியமான தகவற் திரட்டுக்களை, போதகர் திரு பாலா அவர்கள் ஊடாக வெளிவரும் திருமறைத்தீபம் ஏந்தி வருகின்றது. திருமறைத்தீபத்தின் அட்டைப்படம் மனதைக் கவர்வதோடு, அதுவும் ஒருவித செய்தியைச் சுட்டும். அவ்வப்போது தலை காட்டும் கவிதைகள் இனியவை. தமிழ்க் கிறிஸ்தவர்கள் அநேகர் தெரிந்திராத தகவல்கள் மேல்நாட்டுக் கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். அப்படியான அருந்தகவல்களையும் போதகர் திரு பாலா அவர்கள் தேடி எடுத்து, நமக்கான தமிழ்ச்சுவையில் தந்துவிடுகின்றார்.

Continue reading