ஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை

Amy-Carmichaelசமீபத்தில் இயன் மரேயின் கைவண்ணத்தில் புதிதாக வெளிவந்த ஏமி கார்மைக்கலின் நூலை உடனடியாக என்னுடைய சபையின் புத்தக அறையில் இருந்து பெற்று வாசிக்க ஆரம்பித்தேன். நூலை வாசித்ததற்கு சில முக்கிய காரணங்கள் இருந்தன. இதற்கு முன் ஏமி கார்மைக்கல் பற்றி எலிசபெத் ஸ்கொக்லன்ட் என்ற பெண்மணி எழுதிய நூலை வாசித்திருக்கிறேன். அந்த நூல் ஏமியைப் பற்றிய சரியான புரிதலை எனக்குள் ஏற்படுத்தவில்லை. அவரைப்பற்றிய வேறு நூல்கள் வாசித்ததில்லை. இந்தப் புதிய நூலை வாசிக்கத்தூண்டிய காரணங்களை முதலில் சொல்லிவிடுகிறேன். செந்தாளி என்ற என்னுடைய நல்ல நண்பி அமெரிக்காவில் வாழ்கிறார். அவரை நான் அமெரிக்க பிரயாணங்களின்போது சந்தித்தவேளையெல்லாம், ‘பாஸ்டர் நீங்கள் கட்டாயம் டோனவூர் போக வேண்டும். அங்கு ஒரு செய்தியாவது கொடுக்கவேண்டும். நிச்சயம் எல்லோரும் அதை விரும்புவார்கள். அங்கிருப்பவர்களுக்கு நான் எழுதிச் சொல்லிவிடுகிறேன்’ என்று வற்புறுத்திக் கேட்டிருந்தார். கட்டாயம் போக முயற்சிக்கிறேன் என்று அவரிடம் நான் சொல்லியிருந்தேன். டோனவூர் பற்றி நான் கேள்விப்பட்டிருந்தாலும் அதிகம் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. செந்தாளியின் அன்புக்கட்டளை காரணமாக பல வருடங்களுக்கு முன் சுனாமி நிவாரணப் பணியின் நிமித்தம் கன்னியாகுமரி போகும் வழியில் டோனவூர் போகும் வாய்ப்புக் கிட்டியது. அது மிகப்பெரிய காம்ப்ளெக்ஸ். ஏமி கார்மைக்கல் தங்கியிருந்த அறையையும், அந்தக் காம்ப்ளெக்ஸையும் சுற்றிப் பார்த்தேன். மிகவும் அருமையாகக் கவனித்து உபசரித்தார்கள் அங்கிருந்த ‘சிஸ்டர்ஸ்.’ மூன்று நாள் தங்கியிருந்துவிட்டுப் போகவேண்டும் என்று அன்போடு வற்புறுத்தினார்கள். அதை நிறைவேற்ற முடியாதபடி என்னுடைய பிரயாணம் இருந்ததால் அவர்கள் உபசரிப்பை ஏற்று உணவருந்திவிட்டு செல்ல மட்டுமே முடிந்தது.

Continue reading