வாசகர்களே!

அன்பு வணக்கங்கள்! இந்த இதழில் சமீபத்தில் மறைந்த முக்கிய கிறிஸ்தவ பிரமுகரான பில்லி கிரேகமைப் பற்றிய ஆக்கம் வந்திருக்கிறது. இது ஏற்கனவே நம்முடைய வலைதளத்தில் வந்துள்ளது. வலைதளத்தில் வாசிக்கும் வசதியில்லாதவர்களுக்காக இதழிலும் வெளியிட முடிவு செய்தேன். என்னுடைய வாலிப காலங்களில் பில்லி கிரேகம் மிகவும் பிரபலமான மனிதர். அன்று அவர் தன்னுடைய ஊழியத்தின் உச்சத்தை எட்டியிருந்தார். இருந்தபோதும் சீர்திருத்த கிறிஸ்தவ நம்பிக்கைகளை வாலிப காலங்களிலேயே என்னில் வளர்த்துக் கொண்டிருந்ததால் பில்லி கிரேகம் மாயையில் நான் விழுந்துவிடவில்லை. கையை உயர்த்திக் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுகிற வியாபார சுவிசேஷ ஊழியங்கள் பெருமளவில் மலிந்திருந்த அந்தக் காலத்தில் கல்வினிசப்போதனைகளில் ஆர்வத்தைக் காட்டி நான் வளர்ந்துகொண்டிருந்த காலம் அது. ‘கிறிஸ்துவுக்கு வாலிபர்கள்’ (Youth for Christ) போன்ற கிறிஸ்தவ நிறுவனங்கள் பில்லி கிரேகமின் பாதையில் சுவிசேஷ ஊழியம் செய்துகொண்டிருந்த காலம் அது. இதற்கெல்லாம் மத்தியில் சீர்திருத்தக் கோட்பாடுகளை விரும்பி நாடி அவற்றில் ஆர்வம் காட்டி வளர்ந்துகொண்டிருந்தேன். இன்று பில்லி கிரேகம் நம்மத்தியில் இல்லை. இருந்தாலும் அவருடைய ஊழியத்தை நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியாது. அந்த மனிதரைத் தனிப்பட்ட முறையில் எந்தவிதத்திலும் குறைவுபடுத்திப் பேசாமல் அவருடைய ஊழியமுறைகளில் இருந்த பெருங்குறைபாடுகளை மட்டுமே இந்த ஆக்கம் விளக்குகிறது. வாசித்து சிந்தியுங்கள். இன்று நம்மத்தியில் நிகழந்துவரும் சுவிசேஷ ஊழியங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஆராய்ந்து பார்த்து உங்களுடைய ஆத்துமாவைக் காத்துக்கொள்ளுங்கள். கீழைத்தேய நாடுகளில் இன்று நிகழ்ந்து வரும் பெரும்பாலான சுவிசேஷ ஊழியங்கள் வியாபார ஊழியங்களே. தனி மனிதனுடைய அல்லது ஒரு நிறுவனத்தினுடைய சுய இச்சைகளைப் பூர்த்தி செய்துகொள்ளுகிற ஊழியங்களே பரவலாகக் காணப்படுகின்றன. கர்த்தரை உயர்த்தும் அதிரடி மெய்க்கிறிஸ்தவ பிரசங்கமே இன்று நம்மத்தியில் தேவை; அதற்கு அப்பாற்பட்ட எந்த முயற்சியும் உலக இச்சையின் அறிகுறி மட்டுமே.

இந்த இதழில் தொடர்ந்து ‘தேவபயம்’ மற்றும் ‘பக்தி வைராக்கியம்’ பற்றிய ஆக்கங்களும் வந்திருக்கின்றன.  எப்போதும்போல் இந்த இதழும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க கர்த்தர் உதவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும், ஜெபமும். – ஆர்