வாசகர்களே!  

வணக்கம் வாசகர்களே! தொடர்ந்தும் திருமறைத்தீபம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்து வருகிறது என்று நம்புகிறேன். கோவிட்&19 தொடர்ந்து உலகத்தை மாற்றி அமைத்துக்கொண்டிருக்கும் இந்த நாட்களில் கர்த்தரின் கிருபையால் இன்னுமொரு இதழைத் தயாரித்து உங்கள் முன் படைக்க முடிந்திருக்கிறது. கர்த்தர் உங்களைப் பாதுகாத்து வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன்.

இந்த இதழின் வரலாற்றுக் கல்வினிசத்திற்கும், கல்வினிச ஐம்போதனைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அருமையான முறையில் விளக்கியிருக்கும் ஜே. ஐ. பெக்கரின் ஆக்கத்தின் ஒரு பகுதியை என் வார்த்தைகளில் தந்திருக்கிறேன். இது சிந்தித்துப் பொறுமையோடு வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டிய ஆக்கம். கல்வினிசம் பற்றிய இந்தப் புரிதல் அநேகருக்கு இல்லாமல் இருக்கிறது. வாசித்துப் பயனடையுங்கள்.

இதையடுத்து போலிப்போதனைகளின் தன்மையையும், அதனால் ஏற்படும் ஆபத்துக்களையும் சுட்டிக்காட்டி, போலிப்போதனைகளுக்கு விலகி நிற்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் ஒரு ஆக்கம் வந்திருக்கிறது. போலிப்போதனையை மெய்ப்போதனையிலிருந்து பிரித்து இனங்கான முடியாத நிலையிலேயே இன்று பெரும்பாலானோர் நம்மினத்தில் இருந்து வருகிறார்கள். அது எத்தனை ஆபத்து தெரியுமா? ஒரு பிரசங்கமும், போதனையும் நூறுவிகிதம் அருமையானதாக இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால், பிரசங்கமும், போதனையும் போலிப்போதனையாக இருந்துவிடக்கூடாது. போலிப்போதனைகள் விஷத்தைப் போன்றவை. அவை சத்தியத்துக்கு முரணானதை நம்முன் வைப்பவை. நீங்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரோடு இருந்துவிடுவது மட்டும் உங்கள் பரலோகப் பயணத்திற்கு உதவாது; போலிப்போதனையை இனங்கண்டு தவிர்த்து இருதயத்தை சத்தியத்தால் மட்டுமே பாலூட்டி வளர்க்கிறவர்களாக இருக்கவேண்டும். அதுவே கர்த்தருக்கு மகிமை தரும்.

பாவத்தின் பாவம் என்ற ரால்ப் வென்னிங்கின் நூலின் ஒரு பகுதி இதில் வந்திருக்கிறது. பாவத்தின் கோரமுகத்தை கிழித்துக்காட்டும் இன்னுமொரு அருமையான பகுதி இது. பியூரிட்டன்களால் அல்லாமல் வேறு எவரால் இப்படி விளக்கமுடியும்? இதையும் வாசித்து இருதயத்தை ஆராய்ந்து பாவம் செய்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். – ஆர்