கோவிட்-19

ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்கிரதை! – கோவிட்-19

இது கோவிட்-19ன் காலம்! படுக்கப்போகும் நேரத்தில் இருந்து காலையில் கண்விழிக்கும்வரை அதுதானே நினைவில் இருக்கிறது. அடுத்து என்ன நடந்திருக்கிறது என்று நானும் பாக்ஸ் நியூசில் (Fox news) இருந்து எல்லா ஆங்கிலச் செய்திகளையும் ஒரு நாளில் இரண்டு தடவைகளாவது பார்த்துவிடுகிறேன். எப்படிப் பார்க்காமல் இருக்கமுடியும்? ஒவ்வொரு நாளும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தொகை அதிகரித்து வருவது மட்டுமல்லாமல் இறந்துகொண்டிருப்பவர்களின் தொகையும் அதிகரித்து வருகிறதே. அதுவுமில்லாமல் ஒவ்வொரு நாளும் தேசங்களின் அரசாங்கங்கள் புதிது புதிதாக நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கும்படியான, அதே நேரம் அவசியமான அநேக நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன; அதையெல்லாம் நாட்டு மக்களின் நன்மையைக் கருதியே செய்துவருகிறார்கள். வைரஸால் மேலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்றே அவர்கள் கருத்தோடு செயல்பட்டு வருகிறார்கள். [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]


கொரோனாவும் வீட்டுச்சிறைவாசமும்!

கொரோனா வைரஸ் வெகுவேகமாக உலகெங்கும் பரவி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் உயிர்ச்சேதம் அதிகம். இந்த நாடுகள் எப்போதோ முழு தேசத்தையும் ஆள்நடமாட்டமில்லாதவகையில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருக்கின்றன. ஒவ்வொன்றாக நாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து நாட்டு மக்களை ஆறு மாதங்களோ (ஆஸ்திரேலியா) சில வாரங்களுக்கோ (பிரிட்டன், இந்தியா, ஸ்ரீ லங்கா), அல்லது ஒரு மாதமோ (நியூசீலாந்து) வீடுகளிலேயே இருக்கும்படி அறிவித்து வருகிறார்கள். மலேசியா, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளில் மிலிட்டரி மக்கள் நடமாட்டத்தைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறார்கள். அமெரிக்காவின் சில முக்கிய மாநிலங்களிலும் இதேநிலைதான். கொரோனா வைரஸுக்கு எந்த மருந்தும் இல்லாததால் அது பரவுவதைத் தடுப்பதற்கே இந்த நடவடிக்கைகள் எல்லாம். வெறுமனே வீட்டில் இருங்கள் என்று சொன்னால் மக்கள் அதைச் செய்வதில் அக்கறை காட்டமாட்டார்கள் என்பதாலேயே போர்க்கால அதிரடி நடவடிக்கைகளை அரசுகள் எடுக்கவேண்டியிருக்கிறது. மேலை நாட்டானாக இருந்தாலும், கீழைத்தேசத்து மனிதனாக இருந்தாலும் மனிதன் மனிதன்தானே! இன்றைக்குச் செய்தியில் வாசித்தேன், நாளை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்பதால் என் நகரத்தில் துப்பாக்கி விற்கும் கடையொன்றில் பெரிய கியூ நின்றதாம். மக்களின் நலன் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மனிதன் ஏன் துப்பாக்கி வாங்குவதில் ஆவல் காட்டுகிறான்? கடைக்காரனே இதுபற்றி கவலை கொண்டு போலீஸுக்குப் போன் செய்திருக்கிறானாம். தன் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து வருகிறது என்கிறபோது மானிடனின் மூளை எந்தவிதத்திலெல்லாம் வேலை செய்கிறது! மனிதன் உணர்வில்லாதவனாய் இருக்கிறான் என்று வேதம் சும்மாவா சொல்லுகிறது. [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]

ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்கிரதை! – கோவிட்-19

இது கோவிட்-19ன் காலம்! படுக்கப்போகும் நேரத்தில் இருந்து காலையில் கண்விழிக்கும்வரை அதுதானே நினைவில் இருக்கிறது. அடுத்து என்ன நடந்திருக்கிறது என்று நானும் பாக்ஸ் நியூசில் (Fox news) இருந்து எல்லா ஆங்கிலச் செய்திகளையும் ஒரு நாளில் இரண்டு தடவைகளாவது பார்த்துவிடுகிறேன். எப்படிப் பார்க்காமல் இருக்கமுடியும்? ஒவ்வொரு நாளும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தொகை அதிகரித்து வருவது மட்டுமல்லாமல் இறந்துகொண்டிருப்பவர்களின் தொகையும் அதிகரித்து வருகிறதே. அதுவுமில்லாமல் ஒவ்வொரு நாளும் தேசங்களின் அரசாங்கங்கள் புதிது புதிதாக நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கும்படியான, அதே நேரம் அவசியமான அநேக நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன; அதையெல்லாம் நாட்டு மக்களின் நன்மையைக் கருதியே செய்துவருகிறார்கள். வைரஸால் மேலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்றே அவர்கள் கருத்தோடு செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த வார இறுதியில் நானும் என் மனைவியும் பதினான்கு நாட்களுக்கு எங்கள் வீட்டுக்குள்ளேயே சிறைவாசம் ஆரம்பிக்கப்போகிறோம். பயந்து விடாதீர்கள்! நாங்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்குப் போயிருந்த என் மனைவி வீடு திரும்பவிருக்கிறார்கள். அப்படி நாடு திரும்புகிறபோது இப்போதிருக்கும் அரச கட்டளையின்படி அவர்கள் வீட்டுக்குள்ளேயே பதினான்கு நாட்கள் இருக்கவேண்டும்; அவரோடு நானும் வெளியில் போக முடியாது. அதற்காக இரண்டு வாரத்திற்கான உணவுப்பொருட்களை இந்த வாரம் வாங்கிவைத்துவிட்டேன். இரண்டு வாரங்களுக்கு முன் சகஜ வாழ்க்கை நடத்தி வந்திருந்த எங்கள் வாழ்க்கையிலும் கோவிட்-19 மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமா? இதை எழுதிக்கொண்டிருக்கும் 16ம் தேதி காலை நான் இரண்டுவார வெளிதேசப் பிரயாணத்தை ஆரம்பித்து நான்கு நாடுகளுக்குப் போய்வர விமானத்தைப் பிடித்திருக்கவேண்டும். கோவிட்-19 அதில் மண்ணை வாரிப்போட்டுவிட்டது. விமானப்பிரயாணத்தையும், நான்கு நாடுகளிலும் நான் செய்தியளிக்க வேண்டிய கூட்டங்களையும், தங்குமிட ஏற்பாடுகளையும் ரத்து செய்துவிட்டு நேற்று, ஞாயிறு தினம் இந்த வைரஸைப் பற்றிய பிரசங்கத்தைச் செய்துவிட்டு இந்த ஆக்கத்தை எழுத ஆரம்பித்தேன். என் வாழ்நாளில் இதுவரை ஒரு வாரத்தில் இந்தளவுக்கு பெரும் மாற்றத்தை, அதுவும் இத்தனை வேகமாக எதுவும் ஏற்படுத்தியதாக நினைவில் இல்லை. ஏன், என் வாழ்நாளில் இந்தளவுக்கு முழு உலகத்திலும் அகோர பாதிப்பை ஏற்படுத்திய எந்த நிகழவும் நிகழ்ந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது நூறுவருடங்களுக்கு ஒருமுறை ஏற்படுகின்ற நிகழ்வு என்று மீடியாக்களில் சொல்லுகிறார்கள்.

கோவிட்-19 என்பது என்ன? இது ஒரு வைரஸ்; அதுவும் இதுவரை உலகம் சந்தித்திருக்கும் வைரஸுகளைவிட கொஞ்சம் வித்தியாசமானது. இது ஒரு புது வைரஸ்; இதற்கு முன் இது உலகில் இருந்ததில்லை. எங்கள் நாட்டில் பணிக்காலங்களில் புளூ (Flu) வருவது வழக்கம். அதில் இருந்து தப்புவதற்காக சம்மர் காலம் முடியுமுன் புளூ ஊசி குத்திக்கொள்ளுவோம். ஒவ்வொரு பனிக்காலத்திலும் வித்தியாசமான புதிய வைரஸ்கள் உருவாகும். ஆகவே, புளூ ஊசி அந்த வைரஸுகளில் இருந்து தப்ப உதவும். ஒவ்வொரு சீசனிலும் புளூ வரும்போது நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்படுவதில்லை. அதைப்பற்றி மிகப் பெரிதாக எவரும் அலட்டிக்கொள்ளுவதும் இல்லை. ஆனால், கோவிட்-19 என்றழைக்கப்படும் இந்தக் ‘கொரோனா வைரஸ்’ எல்லோரையும் பற்றிக்கொள்ளும். ஆண், பெண், குழந்தைகள் என்று வேறுபாடு காட்டாமல் இது அனைவரையும் பாதிக்கும். அதுவும், எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களும், ஏற்கனவே உடல்நிலை பாதிப்புற்று இருக்கும் வயோதிபர்களும் இதனால் பாதிக்கப்படுவது மட்டுமன்றி இறந்துபோகவும் வாய்ப்பு மிக அதிகம். அத்தோடு கோவிட்-19 வைரஸ் மிக வேகமாக ராக்கெட் வேகத்தில் பரவக்கூடியது. இந்த மூன்றே மாதங்களில் 185 நாடுகளில் இது 276,000 பேரைப் பாதித்து 11,500 பேரின் உயிரைக்குடித்திருக்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்குப் பக்கத்தில் நான்கு பேர் பதினைந்து நிமிடங்கள் நின்று பேசிக்கொண்டிருந்தாலே போதும்; அந்த நான்கு பேரையும் அது நிச்சயம் தொற்றும். அத்தோடு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர் இருமினாலோ, தும்மினாலோ அவருடைய வாயில் இருந்து தெளிக்கும் துளிகள் ஒரு மீட்டர் தூரத்திற்கு குறைவான தொலைவில் இருப்பவரில் பட்டு அவரையும் வைரஸ் தொற்றிக்கொள்ளும். அந்தளவுக்கு இது மிகவேகமாக, நிச்சயமாக தொற்றிக்கொள்ளும் தொற்றுநோய். அதனால்தான் மருத்துவ வல்லுனர்கள் எல்லோரையும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நாம் சந்தேகிக்கும் எவருக்கும் பக்கத்தில் இருக்காமல் இரண்டு மீட்டர் தள்ளி இருக்கும்படியாக தொலைக்காட்சிகளில் தொடர்ந்து அறிவிப்புக் கொடுத்து வருகிறார்கள். அத்தோடு கைகளைத் தொடர்ந்து அடிக்கடி சோப்பினால் கழுவி சுத்தமாக வைத்திருப்பது மட்டுமன்றி முகத்தையும் தொட்டுவிடக்கூடாது என்று அறிவித்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் ஹூபேய் மாநிலத்தில் வூகான் (Wuhan) என்னும் நகரத்தில் காட்டு மிருக மாமிசம் விற்கும் ஒரு மார்க்கட்டில் ஆரம்பமானது என்று அறிகிறோம். வவ்வாலோ அல்லது இன்னொரு மிருகத்திலோ இருந்த வைரஸ் கிருமி வேறொரு மிருகத்தில் தொற்றி உருமாற்றமடைந்து கொரோனா வைரஸாக மாற அதை மிருக மாமிசத்தை மார்கட்டில் இருந்து வாங்கிச் சென்று சாப்பிட்ட எவரிலோ அது தொற்றி வூகான் நகர மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. இதைக் கண்டுபிடித்து அரசை எச்சரிக்க முயன்ற ஒரு சீன டாக்டரை அரச அதிகாரிகள் எச்சரித்து வாயை அடைக்க முயன்றார்கள். பின்பு அந்த டாக்டரையும் கொரோனா வைரஸ் தாக்கி அவர் உயிரிழந்தார். கொரோனா வைரஸ் வூகானில் பரவ ஆரம்பித்த சில வாரங்களில் சீன அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து அது பரவுவதைத் தடுக்க முயலாமல் உலகத்தின் கண்களில் இருந்து அதை மறைக்க முயன்றார்கள். வைரஸ் வெகுவேகமாகப் பரவி ஆயிரக்கணக்கானவர்களைப் பாதித்து நூற்றுக்கணக்கானவர்கள் இறக்க ஆரம்பித்தபோதே சீன அரசின் கண்துடைப்பு முயற்சி வெற்றிபெறாமல் போய் வூகான் நிகழ்வுகள் உலக நாடுகளுக்குத் தெரிய ஆரம்பித்தன. மூன்றே மாதங்களுக்குள் கண்ணில் காணமுடியாத மைக்ரோ மினி அளவில் இருக்கும் இந்தச் சின்ன வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் காலையில் கண்விழிக்கும்போது முந்தைய நாளைவிட அதிரடி மாற்றங்கள் உலக நாடுகளில் ஏற்பட்டு வருகின்றன. நான் இந்த ஆக்கத்தை எழுத ஆரம்பித்து சில பக்கங்களை முடிப்பதற்கு முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் இறந்திருப்பது மட்டுமன்றி பல்லாயிரக்கணக்கானோரை இந்த வைரஸ் தொற்றியிருக்கிறது. இந்த ஆக்கத்தை நான் முடிக்குமுன் என்னவெல்லாம் நடந்துவிடும் என்று யாரால் சொல்ல முடியும்? இதுவரை பல நாடுகளில் முழு தேசமுமே செயலிழந்து நிற்கும் அளவுக்கு மக்கள் நடமாட்டம் நின்றுபோகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உலகத்தில் சூப்பர் பவராக இருந்து வருகின்ற அமெரிக்க தேசத்தில் பத்துபேருக்கு மேலுள்ள எந்தக் கூட்டமும் கூடுவதைத் தவிர்த்துக்கொள்ளும்படி அரசு கேட்டிருக்கிறது. அந்நாட்டில் அத்தனை சபைகளும் ஆராதனைக்கூட்டங்களைக் கூட்டுவதை நிறுத்தியிருக்கின்றன. மார்ச் 15ம் தேதியை தேசமுழுவதும் ஜெப நாளாக பிரசிடன்ட் டிரம்ப் பிரடனப்படுத்தியிருந்தார். உலக மக்களுடைய இருதயதில் பீதியை ஏற்படுத்தி, நாடுகளின் பொருளாதாரத்தை சரியவைத்து, உலக அரசுகளை மண்டியிட வைத்திருக்கிறது கோவிட்-19.

கொரோனா வைரஸ் உலக மக்கள் மத்தியில் பெரும் பீதியை உருவாக்கியிருக்கிறது. சூப்பர் மார்கெட்டில் மக்கள் நிறைந்து பல மாதங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைக்க முயல்கிறார்கள். அரசு அப்படிச் செய்யாதீர்கள் என்று சொல்லியும் பயம் அவர்களைத் தொடர்ந்து அதைச் செய்ய வைக்கிறது. இன்றைய செய்தியில், என் நாட்டில் சூப்பர் மார்கெட்டுகளில் காய்கரி விதைகளும், செடிகளும் ஏராளமாய் விற்பனையாகியிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். போகிற போக்கில் காய்கறிகள் இல்லாமல் போய்விடுமோ என்று மக்களுக்குப் பயம். பஸ்ஸில் ஒருவர் இறுமியதைக் கேட்ட ஒரு பஸ் டிரைவர் இறுமிய நபரை வழியில் இறக்கிவிட்டுவிட்டுப் போயிருக்கிறார். பயம் மனிதர்களை என்னென்னவோ செய்யவைக்கிறது. உண்மையில் கொரோனா வைரஸைவிட அதைப்பற்றிய பயம் மக்களை வெகுவேகமாகப் பரவி அலைக்கழிக்கிறது. இன்னும் எத்தனைக் காலத்துக்கு இந்த வைரஸ் உலகத்தில் தொடரப்போகின்றது, எத்தனைபேரின் உயிர்களைக் குடிக்கப்போகின்றது, எத்தனை ஆயிரம் மக்களைத் தொற்றிக்கொள்ளப்போகிறது என்பதையெல்லாம் தெரிந்துவைத்திருக்கிறவர் இந்த உலகத்தில் ஒருவருமேயில்லை. பெரும் மருத்துவ வல்லுனர்களும் புள்ளிவிபரங்களை வைத்து ஊகிக்கிறார்களே தவிர முடிவான பதில்களை அவர்களால் தரமுடியவில்லை; எப்படித் தரமுடியும், அவர்கள் கடவுளா என்ன?

இந்தக் கொரோனா வைரஸ் நமக்கு எதைச் சுட்டுகிறது? இதிலிருந்து நாம் எதைத் தெரிந்துகொள்ள வேண்டும்? இது நிச்சயமாக, தற்செயலாகவோ, காரணமில்லாமலோ நிகழ்ந்ததல்ல. இந்த உலகத்தில் இது நிகழப்போகிறது என்பதையும், ஏன் நிகழ்கிறது என்பதையும் அறிந்தவர் ஒருவர் மட்டுமே. அது நம்மையெல்லாம் படைத்திருக்கும் கர்த்தரே! கொரோனா வைரஸ் மூலம் நிச்சயம் இறையாண்மையுள்ள கர்த்தர் தம்முடைய மகிமைக்காக இந்த உலகில் எதையோ செய்துகொண்டிருக்கிறார் என்பது மட்டும் உறுதி. எது நிகழ்ந்தாலும் அது கர்த்தரின் அனுமதியில்லாமல் நம் வாழ்வில் நிகழ வழியில்லை. அப்படி நிகழும் எந்தக் காரியத்தையும் அவர் தம்முடைய அநாதி காலத்திட்டத்தை இந்த உலகில் நிறைவேற்றப் பயன்படுத்திக்கொள்ளுகிறார்.

1. கர்த்தர் பேசுகிறார் – கொரோனா வைரஸ் மூலம் கர்த்தர் பேசுகிறார் என்பதை நாம் உணர வேண்டும். கர்த்தர் தம் வார்த்தையின் மூலம் தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தி நம்மோடு தொடர்ந்து தம் வார்த்தை மூலம் பேசிக் கொண்டிருந்தாலும் உலகத்தை ஆளும் கர்த்தர் உலக நிகழ்வுகள் மூலம் நம்மோடு வல்லமையாகப் பேசுகிறார். 2004ம் ஆண்டு சுனாமி சில நாடுகளை சின்னாப்பின்னப்படுத்தியபோது அதன் மூலம் கர்த்தர் தெளிவாகப் பேசி, என்றும் இருக்கிறவராகிய என்னை நீ தொடர்ந்து உதாசீனப்படுத்தாதே என்று உலக மக்களுக்குச் சொல்லவில்லையா? அமெரிக்காவில், நியூயோர்க் நகரில் வானுயரத் தலைநிமிர்ந்து நின்ற இரட்டைக் கட்டடம் தெலபான் தீவிரவாதிகள் விமானங்களைப் பயன்படுத்தி தரைமட்டமாக்கியபோது அந்த நிகழ்வு அமெரிக்காவை மட்டுமல்லாமல் முழு உலகத்திலும் பீதியை ஏற்படுத்தி அசைத்தபோது கர்த்தர் அதன் மூலம் பேசாமலா இருந்தார்? பேசுகிறவராயிருக்கின்ற கர்த்தர் உலகத்தில் இத்தகைய நிகழ்வுகள் மூலம் மனிதனுக்கு நான் இருக்கிறவராயிருக்கிற தேவன் என்றும், என்னைத் தொடர்ந்து உதாசீனப்படுத்தாதே என்றும் சொல்லுகிறார் என்பதை எவரால் மறுக்கமுடியும்? கொரோனா வைரஸைப்பற்றி இருபத்தி நான்கு மணிநேரங்களும் செய்திகளை அள்ளித் தெறித்து வருகின்ற பன்னாட்டுத் தொலைக்காட்சி நிறுவனங்களும் இந்த மூன்று மாதங்களில் கடவுள் என்ற வார்த்தையை ஒருதடவைப் பயன்படுத்தி நான் கேட்டதில்லை. அந்தளவுக்கு கடவுளைப் பற்றிய உணர்வு அரவேயில்லாமல், அப்படியொருவர் இருக்கிறார் என்பதை அப்பட்டமாக நிராகரித்து, மனிதனின் ஆற்றலிலும், செயல்களிலும், திட்டங்களிலும், தன்மையிலும் முழு நம்பிக்கை வைத்து மனித சுகத்துக்காக மட்டும் வாழ்ந்து வரும் உலக சமுதாயம் தொடர்ந்து தன்வழியில் கரை மீறிய வெள்ளம்போல் போய்க்கொண்டிருக்கும்போது மானுடத்தை தம் மகிமைக்காகப் படைத்து இறையாண்மையுடன் செயல்பட்டு வரும் கர்த்தர் பேசாமலா இருந்துவிடப்போகிறார்?

2. கர்த்தர் எச்சரிக்கிறார் – இணைய தளத்தில் சில கிறிஸ்தவர்கள் இந்த உலக சம்பவத்தோடு ஆண்டவரை நேரடியாகத் தொடர்புபடுத்தி மக்களை பயமுறுத்தக்கூடாது என்ற நிலையை எடுத்து வருகிறார்கள். எத்தனை வேடிக்கை. இத்தகைய முயற்சி சமயசமரசபாணியில் போகிறவர்களுக்கு ஒத்துப்போகும். ஆனால், உண்மையை சோற்றில் புதைத்து மறைக்கமுடியாது. இது சுற்றியிருப்பவர்களை தாஜா செய்து ஆறுதல் ஏற்படுத்திக்கொண்டிருப்பதற்கு நேரமல்ல. இது ஒவ்வொருவரும் தங்களைச் சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டிய நேரம். சங்கீதம் 2ஐ இந்த நேரத்தில் நினைவுகொள்ள வேண்டும். உலக மக்கள் ஒட்டுமொத்தமாக கர்த்தரை நிராகரித்து அவருடைய திட்டங்களை அழித்துவிட வேண்டும் என்று கங்கணங்கட்டிக் கோட்டமடித்துக்கொண்டிருக்கும்போது உன்னதத்தில் இருக்கின்றவர் அவர்களைப் பார்த்து நகைக்கிறார் என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. அவருடைய நகைப்பிற்குப் பொருள் என்ன? முதலில் அவருடைய கண்கள் எல்லோர் மேலும் இருக்கின்றது என்பதை அது விளக்குகிறது. மனிதனின் செயல்களை அவர் அறியாமல் இல்லை. இரண்டாவது, மனிதனின் இருமாப்பு அதிகரித்து வருகிறபோது அதை அவர் அடக்காமல் இருக்கப்போவதில்லை என்பதை விளக்குகிறது. மனிதனின் இறுமாப்பு இன்று எல்லையின்றி அதிகரித்துப்போயிருக்கிறது என்பதை எவரால் மறுக்கமுடியும்? உலக நிகழ்வுகளை நான் எப்போதும் கவனித்து வருகிறேன். 2016க்கு முன்பு உலக நாடுகள் எல்லாம் இணைந்து ஐக்கியநாடுகள் சபை உட்பட சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், கார்பன் எமிசனைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று கையெழுத்திட்டு அதை விழாபோல் கொண்டாடினார்கள். தங்களுடைய முயற்சி இயற்கையைப் பாதுகாத்து மனிதன் நெடுங்காலம் வாழ வழிவகுக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். அந்த முயற்சி என்னவாயிற்று? அமெரிக்கா அதிலிருந்து அதிரடியாக விலகிவிட சரவெடி புஸ்ஸென்று வெடிக்காமல் அணைந்துவிட்டதுபோல் அந்த முயற்சி நின்றுவிட்டது. கர்த்தர் இருக்கிறார் என்பதை மறந்து இயற்கை வழிபாடு நடத்தி வரும் மானுடத்தின் முயற்சிகளில் கர்த்தர் மண்ணைப்போட்டுவிடவில்லையா? சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முழு முயற்சியுடன் இன்றே இறங்காவிட்டால் பத்துப் பன்னிரெண்டு வருடங்களில் உலகம் இல்லாமல் போய்விடும் என்று இயற்கை வழிபாடு நடத்திவருகிறவர்கள் ஆணித்தரமாக நம்புகிறார்கள்; நம்மை நம்ப வைக்கவும் பெரும்பாடுபடுகிறார்கள். மனிதனின் இறுமாப்பு எல்லையில்லாமல் போய்விட்டிருக்கிறது. சீனாவின் கொரோனா வைரஸ் அதிரடியாகப் பரவி வரும் இந்நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் நாட்டு (நியூசிலாந்து) சட்டமன்றத்தில் கல்நெஞ்சக்காரர்கள் கருக்கலைப்பு சட்டரீதியில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்ல என்று சட்டமியற்றியிருக்கிறார்கள். தாய் தனக்கு விருப்பமில்லையென்றால் பிறப்பதற்கு முன்பே குழந்தையை அழித்துவிடலாம் என்று இந்தப் புதுச்சட்டம் அனுமதியளிக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெருங்குரல் கொடுப்பவர்கள் குழந்தைக் கொலைக்கு அனுமதியளித்திருக்கிறார்கள்; கொலைக்கு புதுவிளக்கம் தந்திருக்கிறார்கள். சுயநலம் மனிதனை என்னவெல்லாம் செய்யவைக்கிறது! இந்த நேரத்தில் கர்த்தர் மானுடத்தைப் பார்த்து சஙகீதக்காரன் சொல்லுவதுபோல் சிரிக்காமலா இருந்துவிடப்போகிறார். நிச்சயம் கொரோனா வைரஸ் மூலம் கர்த்தர் மானுடத்தை எச்சரிக்கிறார்.

3. பாவத்தின் கோரம் – கொரோனா வைரஸ் உலகத்தை ஆட்டிப்படைத்து வரும் இந்நேரத்தில், கிறிஸ்தவர்கள் பாவத்தின் கோரத்தன்மையை நினைத்துப் பார்க்க வேண்டும். உலகில் நிகழும் சகலவித பெரும் பாதிப்புகளும் நம்மை ஆதியாகமத்தில் ஆரம்ப அதிகாரங்களுக்கு அழைத்துச் செல்லுகின்றன. கர்த்தர் மனிதனைப் படைத்து ஏதேன் தோட்டத்தில் அமர்த்தியபோது அங்கு எந்தவிட இயற்கைப் பாதிப்புக்கும், நோய்களுக்கும், வைரஸுகளுக்கும் இடமிருக்கவில்லை; ஏதேன் முழுப்பூரணமுள்ள இடமாக இருந்தது. அதைக் குலைத்து நாசமாக்கியது மனிதனே. அதை மறந்துவிடாதீர்கள். கர்த்தரின் வார்த்தைக்கு மனிதன் கீழ்ப்படியாமல் போனதாலேயே பாவம் சம்பவித்தது என்று வேதம் ஆதியாகமத்தில் விளக்குகிறது. அந்த மூலபாவம் கர்த்தர் படைத்த மனிதகுலத்தை மட்டுமல்லாது முழு உலகத்தையும் பாதித்தது. இன்று உலகம் விடுதலைக்காக பிரசவ வேதனையுடன் தவித்துக் கொண்டிருக்கிறது (ரோமர் 8:20-22). உலகம் பாவத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதனாலேயே சகலவித பேரழிவுகளும் உலகத்தில் நிகழ்ந்து வருகின்றன. இதற்கு முன் உலகத்தைப் பாதித்திருக்கும் ஸ்பானிய புளூ (Spanish Flu 1918) மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் உட்பட அழிவை ஏற்படுத்தும் எல்லா சம்பவங்களுக்கும் பாவமே நேரடிக்காரணியாக இருக்கின்றது. மறந்துவிடாதீர்கள்! அந்தப் பாவத்திற்கு நேரடிக்காரணமாக இருந்தவன் மனிதனே. மானுடம் உலகுக்கு அறிமுகப்படுத்தியதே மூலபாவம்.

பாவம் நம்மில் இருக்கும்வரை, அது இந்த உலகத்தில் இருக்கும்வரை நமக்கோ உலகத்திற்கோ மீட்சியில்லை. கொரோனா வைரஸ் நிலைத்திருக்கப் போவதில்லை. ஆனால், பாவம் தொடர்ந்திருக்கப் போகிறது. கொரோனா வைரஸால் நம் சரீரத்தை மட்டுமே தொடவும், அழிக்கவும் முடியும். ஆனால், பாவம் நம் சரீரத்தை அழிப்பது மட்டுமல்லாது ஆவியையும் அழிவை நோக்கிக் கொண்டு செல்லும். அந்தப் பாவத்தில் இருந்து விடுபட்டு மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கிறபோதே மனிதனுக்கு இந்த உலகத்தில் ஆத்மீக விடுதலை கிடைக்கிறது. பாவத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த உலகத்துக்கு விடுதலை இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போதே கிடைக்கப்போகிறது. அதுவரை கொரோனா வைரஸ் மட்டுமல்ல அதுபோன்ற அழிவைத்தரும் பாதிப்புகளை நாம் இந்த உலகத்தில் பார்க்காமல் இருக்கப்போவதில்லை. கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் இந்த நேரத்தில் பாவத்தை நினைத்துப் பார்க்கவேண்டும்; அதன் கோரத்தன்மையையும், அது நம்மில் செய்யக்கூடிய கொடூரத்தையும் ஆராயவேண்டும். பாவத்தைச் தொடர்ந்து செய்துவராமல் பக்திவிருத்தியில் முழு மூச்சாக நாம் ஈடுபடவேண்டுமானால் பாவத்தின் தன்மையை உணர்ந்து அதைத் தொடர்ந்து நம்மில் நாம் அழிக்கவேண்டும். பாவத்தின் தன்மையை நன்றாக அறிந்துவைத்திருக்கிறவர்களே அதை அழிப்பதில் தீவிரமாக இருப்பார்கள். இன்று பாவத்தைப் பற்றி பிரசங்கிக்கும் பிரசங்கிகள் மிகக் குறைவு. கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் அதைப் பற்றிய உணர்வே இல்லாமல் இருக்கிறார்கள். இன்றைய சுவிசேஷ செய்திகள் கூட பாவத்தின் தன்மையைத் தெளிவாக விளக்குவதில்லை. கொரோனா வைரஸ் நாம் பாவத்தைப் பாவமாகப் பார்த்து, கர்த்தர் வெறுக்கும் நோயாகிய பாவத்தை நாம் நம்மில் தொடர்ந்து அழித்து வரவேண்டிய கடமையை நினைவுறுத்துகிறது.

4. கர்த்தர் நம்மோடிருக்கிறார் – கொரோனா வைரஸ் மட்டுமல்ல, எந்தப் பெரிய கொடூரமான அழிவேற்படுத்தும் தீமையாக இருந்தாலும், அவை நம்மைத் தொடாது. உலகத்தானைப்போல கிறிஸ்தவர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சங்கீதம் 91ஐ நினைவுகூருங்கள். இந்தச் சங்கீதத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ளுவது அவசியம். இது முக்கியமாகப் போதிக்கும் சத்தியத்தைத்தான் நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமே தவிர இந்தச் சங்கீதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அத்தனை விஷயங்களையும் எழுத்துபூர்வமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உதாரணத்திற்கு 13ம் வசனத்தை நாம் எழுத்துபூர்வமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சிங்கத்தின் மீதும், விரியன்பாம்பு மீதும் நாம் நடக்க முயலக்கூடாது. அதையெல்லாம் நாம் செய்யமுடியும் என்பதல்ல இந்த சங்கீதத்தின் பொருள். எத்தகைய ஆபத்துக்கள் வந்தபோதும் கர்த்தர் தன் மக்களுக்குப் பக்கத்துணையாக இருந்து அவர்களைக் காப்பார் என்பதே இதன் பொருள்; இது போதிக்கும் முக்கிய உண்மை. அந்த உண்மையை விளக்குவதற்காக கையாளப்பட்டிருக்கும் உதாரணங்களே வேடனுடைய கண்ணி, கொள்ளை நோய், பறக்கும் அம்பு, வாதை, சிங்கம், விரியன் பாம்பு போன்றவை. சொல்ல வரும் உண்மையை விளக்குவதற்காக பாடல்களில் எவரும் இதுபோன்ற உதாரணங்களைக் கையாளுவது வழக்கம். சங்கீதக்காரன் அதையே செய்திருக்கிறான்.

கொரோனா வைரஸ் கிறிஸ்தவர்களைப் பாதிக்காது; அதால் நாம் உயிரிழக்கமாட்டோம் என்று எவரும் எண்ணிவிடக்கூடாது. நிச்சயம் கிறிஸ்தவர்களை இது பாதிக்கும்; கிறிஸ்தவர்கள்கூட உயிரிழக்க நேரிடலாம். இருந்தபோதும் கொரோனா வைரஸால் நம்முடைய ஆவியை அழிக்கமுடியாது; நாமடைந்திருக்கும் இரட்சிப்பை அழிக்க முடியாது; நாமடையப்போகும் பரலோக வாழ்க்கையை இல்லாமலாக்கிவிட முடியாது. (ரோமர் 8:28; 29-31). அது நம்முடைய சரீரத்தை அழிக்கலாம், இருந்தாலும் கர்த்தருக்கு நம்மீது இருக்கும் அன்பையும் அக்கறையையும் அதால் அழித்துவிட முடியாது. அந்தளவுக்கு கர்த்தர் நமக்குப் பாதுகாப்பளிக்கிறார். எது இந்த உலகில் நம் சரீரத்தை அழித்தாலும் நமக்கு ஆத்மீக விடுதலை தந்திருக்கும் கர்த்தரையும், அவர் நமக்குத் தந்திருக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் நாம் தொடர்ந்து பரலோகத்தில் அனுபவிக்கப்போகிறோம். கர்த்தர் நம்மோடிருக்கிறார். இந்த நேரத்தில் இந்த நம்பிக்கையை இருதயத்தில் கொண்டிருந்து நாம் கிறிஸ்தவ வாழ்க்கையை கர்த்தரின் மகிமைக்காக தேவபயத்துடன் வாழவேண்டும்.

————————————————————————————————————

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 33 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

வாசகர்களே!

வணக்கம் வாசகர்களே! இந்த இதழ் நாம் வெளியிட்டிருக்கும் நூறாவது இதழ்! இதில் வந்திருக்கும் ஆக்கங்கள் உங்களுக்குப் பயனுள்ளவையாக இருக்கும் என்று நம்புகிறேன். முதலாவது ஆக்கம் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனைப்பற்றியது. வாஷிங்டன் மிகச் சிறப்புவாய்ந்த வரலாற்றைத் தன்னில் கொண்டிருக்கும் நகரம். அங்கு போகும் அமெரிக்கர்கள் அதன் வரலாற்றுச் சிறப்பை நினைவுகூரவே அங்கு போவார்கள். ஒரு புனித இடத்தில் கால் பதித்தது போன்ற ஓர் உணர்வை வாஷிங்டன் ஏற்படுத்தும். அந்தளவுக்கு அரும்பெரும் வரலாற்றுப் பெருமைகளை நமக்கு அது நினைவுறுத்துவதாக இருக்கிறது. இரண்டு நாட்கள் அந்த நகரில் தங்கி அதன் வரலாற்று சிறப்புமிகுந்த பகுதிகளை நான் போய்ப்பார்த்தேன். அதன் வரலாற்றுப் பெருமையில் திளைத்து வியந்து நின்றேன். இன்னுமொரு முக்கிய விஷயம் அந்த வரலாற்றில் அமெரிக்காவின் கிறிஸ்தவ வரலாறும் இணைபிரியாமல் பதிந்து காணப்படுகிறது. கிறிஸ்தவர்களைத் தலைவர்களாகக் கொண்டு பிறந்தது தானே அமெரிக்கா. ஆக்கத்தை வாசித்து அந்நகரின் சிறப்பை உணர்ந்து நம்மாண்டவரைத் துதியுங்கள்.

Continue reading

வாஷிங்டனுக்குப் போகலாம் வாங்க!

சிறுவனாக இருந்தபோது எனக்கு வாசிப்புப் பழக்கம் அதிகம். சாவி என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட சா. விசுவநாதன் அந்தக் காலத்தில் அருமையான ஒரு புனைநாவல் எழுதியிருந்தார். வாஷிங்டனில் திருமணம் என்பது அதன் தலைப்பு. ஆனந்தவிகடனில் அது தொடராக வந்து, பின்பு நூல் வடிவில் நாவலாக வெளிவந்தது. தமிழகத்தில் இருந்த ஒரு பிராமணக் குடும்பத்தார் வாஷிங்டனில் வசித்த பணம்படைத்த ராக்கபெலர் அம்மையாரின் விருப்பத்தினால் ஒரு தமிழ் திருமணத்தை வாஷிங்டன் நகரில் நடத்தினார்கள். அந்தத் திருமணத்திற்குத் தமிழகத்து வாடை முழுமையாக இருக்கவேண்டும் என்பதால் நரிக்குறவர்களும் தமிழகத்தில் இருந்து பிரைவெட் விமானம் மூலம் வாஷிங்டன் கொண்டுபோகப்பட்டிருந்தார்கள். அதுவும்போதாதென்று அமெரிக்க நாய்களுக்குத் தமிழகத்து நாய்கள்போல் குறைக்க முடியவில்லை என்பதால் நாய்கள்கூட தமிழகத்தில் இருந்து வாஷிங்டன் கொண்டுபோகப்பட்டிருந்தன. பிராமணத் தமிழில் சாவி வெலுத்துக்கட்டியிருந்த ஓர் அருமையான நகைச்சுவை புனைநாவல் அது. நான் ரசித்து வாசித்திருந்த ஒரு நூல்.

Continue reading

ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து

கடந்த சில வருடங்களாக 1 பேதுரு நூலை சபையில் பிரசங்கித்து வருகிறேன். அருமையான நூல். முக்கியமாக முதல் நூற்றாண்டில் நீதியாக வாழ்ந்துகொண்டிருந்த கிறிஸ்தவர்கள் அதற்காக துன்பங்களை அனுபவித்தபோது அவர்களுக்கு ஆறுதலளித்து, தொடர்ந்தும் அவர்கள் தங்களுடைய கடமைகளைத் தவறாது செய்துவர ஊக்கமளித்து பேதுரு இந்நூலை எழுதியிருக்கிறார். இதற்கு மத்தியில் கடைசி அதிகாரமான 5ம் அதிகாரத்தில் மூப்பர்களின் கடமைகளைப் பற்றி விளக்கத் தவறவில்லை பேதுரு. சாதாரணமான சூழ்நிலையில் ஆத்துமாக்களை சபை மூப்பர்கள் கவனத்தோடு வழிநடத்தவேண்டியது அவர்களுடைய கடமை. அதுவும் பெருந்துன்ப காலங்களில் இன்னும் அதிகமாக உழைத்து அவர்களைக் கண்காணித்து வழிநடத்தவேண்டியது மூப்பர்களின் பெருங்கடமை.

Continue reading

குருடன் குருடனுக்கு வழிகாட்டுவதுபோல்

குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? மிகவும் கஷ்டம். இரண்டு பேருக்குமே கண் தெரியாததால் இரண்டு பேருக்கும் அதனால் ஆபத்து ஏற்படும். அதுமட்டுமல்லாமல் பாதை தெரியாத ஒருவன் இன்னொருவனுக்கு பாதை காட்ட முடியாது. இரண்டு பேருமே தட்டுத்தடுமாறி வீடுபோய்ச் சேரமுடியாமல் எங்கோ நின்று தடுமாறிக்கொண்டிருப்பார்கள். இதெல்லாம் நமக்குத் தெரிந்ததுதான். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இதே நிலைமைதான் இன்று நம்மினத்து ஊழியங்கள் மற்றும் சபைகளைப் பாதித்துக்கொண்டிருக்கின்றன. வெறும் சுயநல உணர்ச்சியோடு தங்களுடைய தேவைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காக ஆத்மீக ஆசை இருப்பதுபோல் பாவனை செய்து கூட்டங்களுக்குப் போய்க்கொண்டிருக்கும் கூட்டம் ஒருபுறமிருந்தபோதும், இன்னொருபுறம் உண்மையாகவே சத்திய வாஞ்சைகொண்டு சத்தியத்தைத் தேடிக்கொண்டிருக்கின்ற ஒரு சிறிய கூட்டமும் எங்கும் இருந்து வருகிறது. அத்தகைய சத்திய வாஞ்சையை எந்த இருதயத்திலும் விதைக்கிறவர் பரிசுத்த ஆவியானவர்தான். வேதம் அதிகம் தெரியாமலிருந்தாலும் உண்மையான, உறுதியான விசுவாசத்தைக் கொண்டிருந்து சத்தியத்திற்காக ஆவலோடு காத்திருக்கின்றது இந்தக் கூட்டம். இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களை நான் பல நாடுகளில் என்னுடைய பிரயாணங்களின்போது சந்தித்திருக்கிறேன். அவர்களோடு உறவாடி, சத்தியத்தைப் பகிர்ந்துகொண்டு அவர்களுடைய சந்தோஷத்தில் பங்கேற்றிருக்கிறேன். அப்படியான ஒரு சந்தர்ப்பம் இந்த டிசம்பர் மாதமும் கிடைத்தது.

Continue reading

சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே! – A.W. பின்க்

அதிகாரம் 3

பரிசுத்த வேதவார்த்தைகளின் மெய்யான பொருளை அறிய விரும்புகிற ஒருவனில் இருக்க வேண்டிய மிக முக்கியமானதும் அடிப்படையானதுமான சில தகுதிகளைக் குறித்து முந்தைய அதிகாரத்தில் விளக்கினேன். அத்தகுதிகள் பொதுவாக எல்லா விசுவாசிகளிடத்திலும் இருக்க வேண்டியவை. இந்த அதிகாரத்தில், கர்த்தருடைய வேதத்தைப் பிரசங்கிக்கவும், போதிக்கவும் கர்த்தரால் அழைக்கப்பட்டவர்களில் (பிரசங்கிகளில்) இருக்க வேண்டிய சில குறிப்பிட்ட தகுதிகளைக் குறிப்பிடப் போகிறேன். அவர்கள் தங்களுடைய முழு நேரத்தையும், ஆற்றலையும், ஆத்துமாக்களின் ஆவிக்குரிய மற்றும் நித்திய நன்மைக்கான பிரயோஜனத்துக்காகவும், அந்த ஆசீர்வதிக்கப்பட்ட, உன்னதமான, மற்றும் முக்கியமான வேலைகளைச் செய்யத் தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ளவும் அர்ப்பணித்தவர்கள். கர்த்தருடைய சத்தியத்தை எடுத்துரைப்பதும், தான் பிரசங்கிக்கிற சத்தியத்தின்படியாக, நடைமுறையில் மிகுந்த கவனத்துடன் வாழ்ந்துகாட்டி, தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்கிறவர்களுக்குத் தேவபக்திக்கேதுவான நடைமுறை உதாரணமாக வாழ்ந்து காட்டுவதுமே அவர்களுடைய முதன்மையான பணி. அவர்கள் சத்தியத்தைப் பிரசங்கிக்க வேண்டியிருப்பதனால், அவர்கள் பிரசங்கிப்பது வேத வார்த்தைகளாகிய களங்கமில்லாத பாலாக இருப்பதனால், இதில் எந்தத் தவறும் செய்துவிடக்கூடாது என்பதற்கான சகல முயற்சிகளையும் செய்கிறவர்களாக இருக்க வேண்டும். சத்தியத்திற்குப் பதிலாக தவறானதைப் போதிப்பது, கர்த்தரையும் அவருடைய வார்த்தையையும் அவமதிப்பது மட்டுமல்ல, அதைக் கேட்கிறவர்களைத் தவறாக வழிநடத்தி, அவர்களுடைய மனதையும் கெடுக்கும் செயலாகும்.

Continue reading

வாசகர்களே!

வணக்கம் வாசகர்களே! இந்த இதழின் சிறப்பு என்ன தெரியுமா? இந்த வருடத்தோடு திருமறைத்தீபம் இருபத்தைந்து வயதைப் பூர்த்தி செய்திருக்கிறது. இருபதைக் கடந்தது நேற்றுபோல் இருக்கிறது. இருபத்தைந்து வயதை ஒரு சபை வெளியிட்டு வரும் இதழ் கடந்திருப்பது என்பது சாதாரணமானதல்ல. அத்தனை வருடங்கள் சபைகள்கூட இந்தக்காலத்தில் நிலைத்திருப்பதில்லை; அதாவது சத்தியத்தில் நிலைத்திருப்பதில்லை. சத்தியத்தைவிட்டு விலகக்கூடாது என்பது இதழின் ஆரம்ப இலக்குகளில் ஒன்று. அதிலிருந்து விலகாமலிருக்க கர்த்தர் நிச்சயம் உதவியிருக்கிறார். பச்சோந்திப் பத்திரிகையாக திருமறைத்தீபம் இல்லாமலிருக்க கர்த்தரும் வாசகர்களும் நமக்கு ஊக்கமளித்து வருகிறார்கள்.

Continue reading

இளமையான 25 வயது!

எளிமையான முறையில் 1995ம் வருடம் எளிய முயற்சியாக திருமறைத்தீபம் உருவானது. நண்பர்கள் சிலரின் ஊக்குவிப்பினால் பெரும் பணச்செலவில்லாமல் ஆரம்பமான இதழ் பணி இன்றும் சுயநலநோக்கமெதுவுமின்றி வளர்ந்து, விரிந்து, பரந்து உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழ் கிறிஸ்தவர்கள் வாசித்துப் பயனடையும் ஆவிக்குரிய இதழாக இருந்துவருகிறது. இந்த இருபத்தி ஐந்து வருடங்களும் எத்தனை வேகமாக ஓடிவிட்டன. இதழ் பணியில் ஈடுபட்டு வருகின்ற எவருமே இத்தனை வருடங்களுக்கு இதழ் பணி செய்யப்போகிறோம் என்று நினைத்தும் பார்த்ததில்லை.

Continue reading

எங்கே போய்விட்டது வேதப்பிரசங்கம்

இன்று நம்மினத்தில் கிறிஸ்தவம் இருக்கும் நிலைபற்றி இவ்விதழில் பல தடவை எழுதியிருக்கிறேன். அது தாழ்ந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு எண்ணிலடங்காத அத்தாட்சிகள் இருக்கின்றன. கிறிஸ்துவைவைத்து வாழ்க்கை நடத்துகிறவர்களே பெரும்பாலான ஊழியக்காரர்கள். மித்தம் மீதமிருக்கிறவர்களுக்கு சரியான வழிநடத்தலும், போதனையும், அழைப்பும், பயிற்சியும் கிடைக்காததால் தங்களுக்குத் தெரிந்ததை, சரியெனப்பட்டதை தன்தன் வழியில்போய் செய்துவருகிறார்கள். அதனால், தலைநிமிர முடியாத நிலையில் கிறிஸ்தவ ஊழியங்கள் இருப்பதோடு, ஆத்துமாக்கள் சத்தியம் கிடைக்க வழியில்லாமல் தல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.

Continue reading

ஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)

ஜொசுவா ஹெரிஸ்

ஜூலை மாத முடிவில் Fox Newsல் இருந்து எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வந்தது, ‘ஜொசுவா ஹெரிஸும் அவருடைய மனைவியும் நட்போடு பிரிந்துவாழத் தீர்மானித்துவிட்டார்கள் என்பது. இதை ஜொசுவா ஹெரிஸே தன்னுடைய இன்ஸ்டகிரேமில் பதிவு செய்திருந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு அதிரடியாக இன்னொரு செய்தியை அவர் வெளியிட்டார். ‘இனி நான் கிறிஸ்தவன் அல்ல, கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகளை ஆராய்ந்து பார்த்தபோது அவற்றின் அடிப்படையில் என்னைக் கிறிஸ்தவனாகக் கணிக்க முடியவில்லை. அதனால் நான் கிறிஸ்தவ நம்பிக்கைகளைவிட்டு அடியோடு விலகிவிட்டேன்’ என்பதுதான் அந்த அறிக்கை. இது கிறிஸ்தவ சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, இப்போது நான் இந்த ஆக்கத்தை எழுதிக்கொண்டிருக்கும் வரையில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

Continue reading

ஆதியாகமத்துக்கு வந்திருக்கிறது ஆபத்து!

ஆங்கிலேயரான சார்ள்ஸ் டார்வின் தன்னுடைய பரிணாமத் தத்துவத்தை 1859ல் தன் நூலொன்றில் வெளியிட்டார். அது எந்தளவுக்கு உலக சமுதாயத்தைப் பாதிக்கப்போகிறது என்பது டார்வினுக்கே தெரிந்திருக்க வழியில்லை. இத்தனை காலத்துக்குப் பிறகும் டார்வினின் கோட்பாடு உலக சமுதாயத்தைத் தொடர்ந்து பாதித்து வருகிறது. சமுதாயத்தை அது தொடாத பகுதியில்லை என்றே கூறவேண்டும். கிறிஸ்தவர்கள்கூட டார்வினின் கோட்பாட்டின் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். அந்தளவுக்கு மனித சமுதாயத்தை டார்வினின் கோட்பாடுகள் பாதித்தன; பாதித்தும் வருகின்றன. டார்வினின் கோட்பாடு பிசாசினால் பயன்படுத்தப்பட்டு வரும் வல்லமையான கருவி என்பதை எந்தக் கிறிஸ்தவனும் மறுக்கமுடியாது. டார்வினின் கோட்பாட்டில் எந்த மாற்றத்தைச் செய்தும் கிறிஸ்தவர்கள் பயன்படுத்த வழியில்லை. அந்தளவுக்கு அது கிறிஸ்தவத்தின் பேரெதிரியாக இருக்கிறது. டார்வினின் கோட்பாடுகள் அதிரடியாகப் பரவ ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் அதை எதிரியாகப் பார்க்க அநேக கிறிஸ்தவர்கள் தவறினார்கள். பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அநேக இறையியல் அறிஞர்களையும், இறையியல் கல்லூரிகளையும் டார்வினின் கோட்பாடுகள் பாதித்தன.

Continue reading

வேதத்தை விளங்கிக்கொள்ள இன்றியமையாத அம்சங்கள் – A.W. பின்க்

 அதிகாரம் 2

இதற்கு முந்திய அதிகாரத்தில், வேதத்தை விளக்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்துப் பார்த்தோம். பரிசுத்த வேதத்திலுள்ள ஒவ்வொரு வாக்கியத்தின் அர்த்தத்தையும் ஆராய்ந்தறிய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதையும் கவனித்தோம். கடவுள் தன் வார்த்தையில் சொல்லியிருப்பவை மிக முக்கியத்துவமும், பெரும் மதிப்பும் கொண்டவை. இருந்தாலும், அதிலுள்ள போதனைகளை நாம் தெளிவாக அறியாமற்போனால், அதிலிருந்து நாம் எத்தகைய நன்மையை அடைய முடியும்? வேதத்திலுள்ள சில சொற்களுக்கு வேதத்திலேயே அதற்கான விளக்கத்தையும் கொடுத்திருப்பதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் இதை நமக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறார். புதிய ஏற்பாட்டின் முதல் அதிகாரத்திலேயே, இயேசு கிறிஸ்துவைக் குறித்து இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது, “அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.” (மத்தேயு 1:23). மேலும், யோவான் 1:41ல், “மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்” என்றிருக்கிறது. மாற்கு 15:22, “கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய்” என்கிறது. எபிரெயர் 7:2, “இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாம்” என்கிறது. வேதத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையின் பொருளையும், நாம் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதன் அவசியத்தை இந்த வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. கர்த்தருடைய வேதம், வார்த்தைகள் மூலம் நம்மை வந்தடைந்திருக்கிறது. அவ்வார்த்தைகளுக்கான பொருளை நாம் அறியாதிருந்தால், அவற்றின் அர்த்தத்தை நாம் அறிந்துகொள்ள முடியாது. ஆகவே வேதத்தில் நாம் வாசிப்பவைகளின் பொருளை ஆராய்ந்தறிவதே நம்முடைய முதன்மையான பொறுப்பு.

Continue reading

வாசகர்களே!

இன்னுமொரு இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அநேகர் தொடர்ந்து பத்திரிகையை வாசித்து வருகிறார்கள்; புதிய வாசகர்களும் இணைந்துகொள்ளுகிறார்கள். வாக்குத்தத்த வசன துண்டுப்பிரசுரங்களும், காணிக்கைக்காக அலையும் உப்புச்சப்பற்ற இதழ்களுமே மலிந்து காணப்படும் நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் இப்படியொரு ஆவிக்குரிய வேதவிளக்கமளிக்கும், வாசித்து சிந்திக்கவேண்டிய இதழுக்கு எத்தகைய வரவேற்பிருக்குமோ என்று இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் நினைத்தேன். நம்மத்தியிலும் வாசித்து சிந்திக்கிறவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள் என்பதைத்தான் கடந்துபோயிருக்கும் காலங்கள் துல்லியமாகக் காட்டுகின்றன. நிரப்பப்படாததொரு இடத்தைப் பத்திரிகை நிரப்பிக் கொண்டிருக்கிறதென்ற உளப்பூர்வமான புரிதலோடு தொடர்ந்து உழைக்கிறோம். கர்த்தரின் கிருபையால் பத்திரிகை எங்கெங்கெல்லாமோ போய் என்னென்னவெல்லாமோ செய்துகொண்டிருக்கிறது என்பதும் எனக்குப் புரிகிறது. சிலபேருடைய வாழ்க்கையில் ஆவியின் மூலம் அது செய்திருக்கும் ஆவிக்குரிய கிரியைகள் என்னை மலைத்துப்போகச் செய்திருக்கிறது. இதற்கெல்லாம் சர்வவல்லவரான அந்த பரலோக நாயகனே காரணம்.

Continue reading

கர்த்தரின் பிரசன்னத்தை உணருகிறீர்களா?

கர்த்தரின் பிரசன்னத்தை உணர்வது பற்றிய விஷயத்தில் அநேகருக்கு பிரச்சனை இருக்கிறதை நான் உணர்கிறேன். பெரும்பாலானவர்கள் இதை உணர்ச்சி வசப்படுவதோடு மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள். கிறிஸ்தவ விசுவாசம் நிச்சயம் மனித உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்டது. கிறிஸ்து தருகின்ற ஆத்மீக விடுதலை நம்மை முழுமையாகவே பாதிக்கிறது. விசுவாசத்தை அடைகிறவர்களுடைய உணர்வுகளும் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறவையாக மாறுகின்றன. ஆகவே, மனித உணர்ச்சிகளுக்கும் கர்த்தரின் பிரசன்னத்தை உணர்வதற்கும் தொடர்பில்லை என்று எண்ணிவிடக்கூடாது. இருந்தபோதும் உணர்ச்சிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, கர்த்தரின் பிரசன்னத்தை ஒருவர் உணர்கிறாரா, இல்லையா என்பதை தீர்மானித்துவிட முடியாது. உணர்ச்சிகளை மட்டும் வைத்து ஒருவருக்கு விசுவாசம் இருக்கிறதா, இல்லையா என்பதையும் தீர்மானித்துவிட முடியாது.

Continue reading