கடவுளும் புழுவும்

இன்றைய கிறிஸ்தவ உலகில் கடவுளைப் பற்றியும், கிறிஸ்துவில் இருக்க வேண்டிய விசுவாசத்தைப் பற்றியும் கிறிஸ்தவர்களும் திருச்சபைகளும் நம்புகிற காரியங்களையும், நடந்துகொள்ளுகிற விதத்தையும் பார்க்கிறபோது கடவுள் நம்மைப் பார்த்து நியா? நானா? என்று கேட்பதுபோல்தான் எனக்குத் தோன்றுகிறது. கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய சகல மகிமையையும் நாம் உண்மையிலேயே கொடுக்கிறோமா? கடவுளைப் பற்றிய எத்தகைய எண்ணங்களை நாம் கொண்டிருக்கிறோம்? என்றெல்லாம் என்னால் கேட்டுப் பார்க்காமல் இருக்க முடிவில்லை. இதையெல்லாம் நான் சொல்லுவதற்கு காரணம் இன்றைய கிறிஸ்தவ உலகில் திருச்சபை ஊழியம், போதனைகள், கிறிஸ்தவர்களின் குடும்ப வாழ்க்கை எல்லாமே மனிதனைப் பெரிதும் முக்கியப்படுத்தி, மையப்படுத்தி நடந்துவருவதுபோல் எனக்குத் தோன்றுகிறது. இது வெறும் ஊகமல்ல. நான் காணும் பகற்கனவுமல்ல. இப்படி நான் நினைப்பதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன.

முதலில் கிறிஸ்தவ நம்பிக்கைகளை எடுத்துக்கொள்ளுவோம். சுவிசேஷ ஊழியங்களும், திருச்சபை ஊழியம் மனிதனை முதன்மைப்படுத்தி நடந்துவருவது கண்கூடு. எங்கு பார்த்தாலும் ஊழியக்காரர்களுடைய போஸ்டர்களும், படங்களும் மட்டுமல்ல அவர்களுடைய வாயில் இருந்து புறப்படுகின்ற வாக்குத்தத்தங்களுக்கும், ஜெபங்களுக்கும், சொற்களுக்குந்தான் கிறிஸ்தவர்கள் இன்று காத்திருக்கிறார்கள். அவர்கள் மேல் கிறிஸ்தவர்கள் நம்பிக்கை வைத்திருப்பதனால்தான் அவர்களுடைய ஊழியங்களும் நன்றாக நடந்து வருகின்றன. கிறிஸ்தவர்கள் தங்கள் மேல் வைத்திருக்கின்ற இந்த நம்பிக்கைகளை அவர்களும் வியாபாரிகளைப் போல சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். இந்த நம்பிக்கையை அதிகரிப்பதற்காக என்னென்னவோ முயற்சிகளை எடுப்பதோடு அறவே வேதத்தோடு சம்பந்தமில்லாதவற்றையெல்லாம் சொல்லி கிறிஸ்தவர்களை நம்ப வைக்கிறார்கள். வேத அறிவில் வளர்ந்திராத நம்முடைய சமுதாய மக்கள் இந்த மனிதர்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைதான் கிறிஸ்துவில் தங்களை உயர்த்தும் என்று தவறாக நம்பி தொடர்ந்து ஏமாந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் நான் வாசித்த ஒரு செய்தியில் தமிழகத்தில் ஒரு பிரசங்கி இயேசு அந்நிய பாஷை பேசினார் என்றும், அவர் கல்வாரியில் தன் உயிரை விடுவதற்கு முன்னால் சொன்ன ‘ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி’ எனும் வார்த்தைகள் அந்நிய பாஷை என்றும் சொல்லியிருக்கிறாராம். இயேசு அன்று பாலஸ்தீனத்தில் எல்லோரும் பயன்படுத்திய அரெமெய மொழியில் பேசியிருந்ததால் எல்லோருக்கும் புரிந்த அந்த பாஷையில்தான் இந்த வார்த்தைகளை சொல்லியிருக்கிறார். இதை அறியாத அல்லது அறிந்திருந்தும் மக்களுக்கு இதெல்லாம் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை என்று எண்ணியதாலோ என்னவோ இயேசு அந்நிய பாஷை பேசினார் என்று சொல்லி அந்தப் பிரசங்கி மக்களை அந்நிய பாஷை பேச தூண்டியிருக்கிறார். கிறிஸ்தவ சமுதாயம் தொடர்ந்தும் சிந்திக்க மறுத்து மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கர்த்தரை அவர் மூலமாக மட்டுமே பார்க்கும் பெருந்தவறைச் செய்து கொண்டிருக்கிறது. மனிதனை முதன்மைப்படுத்தும் நம்மத்தியில் பெருகிக் காணப்படும் இத்தகைய ஊழியங்களாலும், மனிதனுடைய வார்த்தைகளையும், செயல்களையும் மட்டுமே மெய்க்கிறிஸ்தவமாக தங்களுடைய விசுவாசத்துக்கு அடித்தளமாக நம்பி வாழ்ந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவ மக்கள் மத்தியிலும் இறையாண்மையுள்ள கர்த்தர் மகிமையிழந்து காணப்படுவது உங்களுக்குத் தெரியவில்லையா?

இதை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் நான் கிறிஸ்தவ இறையியல் சம்பந்தமான சில ஆங்கில நூல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சுவிசேஷக் கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகளை விளக்குகின்ற நூல்கள் அவை. சுவிசேஷக் கிறிஸ்தவம் (Evangelical Christianity) இரட்சிப்பு கர்த்தருடையது என்று ஆணித்தரமாக நம்புகிறது. ஏனென்றால், அதைத்தான் வேதம் வெளிப்படுத்துகிறது. ஆரம்பம் முதல் கடைசிவரை மனிதனை இரட்சிக்கும் விஷயத்தில் கர்த்தர் மட்டுமே ஒரு திட்டத்தை ஏற்படுத்தி, தன் குமாரனைக் கொண்டு அதை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், பரிசுத்த ஆவியைக் கொண்டு பாவியின் இருதயத்தை மாற்றி இரட்சிப்பை வழங்குகிறார் என்கிறது வேதம். இதையெல்லாம் ‘அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக இருக்கும்படி’ கடவுள் செய்திருக்கிறார் என்று பவுல் அப்போஸ்தலன் விளக்குகிறார் (எபே 1:11). அதைத்தான் சுவிசேஷக் கிறிஸ்தவம் நம்புகிறது. அந்தக் கிறிஸ்தவத்தின் தாக்கத்தை நம்மினத்தில் இன்றைக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய சிறு சிறு திருச்சபைப் பிரசங்கங்களில் மட்டுந்தானே காண முடிகின்றது. நம் கிறிஸ்தவ சமுதாயம் முழுவதுமே, ‘உன்னால் முடியும் தம்பி, நீ கிறிஸ்துவுக்காக தீர்மானம் எடு’ என்று கூட்டங்களுக்கு வருகிறவர்கள் வீடு போகுமுன் அந்தத் தீர்மானத்தை எடுக்க வைக்கும் வேதத்தோடு தொடர்பில்லாத ஒரு கிறிஸ்தவத்தை, கேசியன், ஜேம்ஸ் ஆர்மீனியஸ், சார்ள்ஸ் பினி போன்றவர்கள் வரலாற்றில் உருவாக்கி விட்டுவிட்டுப்போன எச்சமாகிய, கிறிஸ்தவமாக தன்னை இனங்காட்டிக் கொள்ளுகிற ஒரு வழிமுறையைத்தானே பார்க்க முடிகின்றது. ‘உன்னை விசுவாசிக்க நான் தீர்மானம் எடுக்காவிட்டால் உன்னுடைய கிருபையால் எனக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை’ என்று கடவுளைப் பார்த்து கையை உயர்த்திப் பேசும் கிறிஸ்தவம்தானே நம் சமுதாயத்தில் நிரம்பி வழிகிறது. இரட்சிப்பில் மனிதனின் கிரியையை முதன்மைப்படுத்துகிற சுவிசேஷம் வேதம் சார்ந்த சுவிசேஷம் அல்ல என்ற உணர்வுகூட இல்லாத கிறிஸ்தவ சமுதாயத்தில் கடவுளின் மகிமையை நம்மால் எப்படிப் பார்க்க முடியும்?

பெலேஜியனிசம் ஆதாமின் பாவம் நம்மைப் பாதிக்கவில்லை என்றது. ஜேம்ஸ் ஆர்மீனியஸ் பெற்றெடுத்த குழந்தையான ஆர்மீனியனிசம் நம் துணையில்லாமல் கடவுள் நம்மை இரட்சிக்க முடியாது என்கிறது. சார்ள்ஸ் பினி நாம் தீர்மானம் எடுத்தால் மட்டுமே மறுபிறப்புக்கு வழியுண்டு என்கிறார். நாம் பரலோகம் போவதற்கான பொறுப்பு நம் கையில்தான் இருக்கிறது என்று இன்று சபை சபையாக, கூட்டம் கூட்டமாக மனிதனுக்கே எல்லா மகிமையையும் வாரி வழங்கும் சுவிசேஷம் சொல்லப்பட்டு வருகிறது. பெயருக்கு கடவுளின் பெயரைப் பயன்படுத்திக்கொள்கிறோமே தவிர உண்மையில் நமக்கு அவருடைய மகிமையைப் பற்றிய அறிவோ உணர்வோ இல்லை. இறையாண்மை (Sovereignty) என்ற வார்த்தைக்கு நமக்குப் பொருள் தெரியுமா? ‘எவன் மேல் இரக்கமாயிருக்க சித்தமாயிருப்பேனோ அவன் மேல் இரக்கமாயிருப்பேன், எவன் மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன் மேல் உருக்கமாயிருப்பேன்’ என்று கடவுள் சொல்லியிருக்கிறாரே (ரோமர் 9:15). அதற்குப் பொருள் தெரியுமா? ‘யாக்கோபை சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன்’ என்றும் அவர் சொல்கிறாரே. இதை வாசித்த உடனேயே இந்த வார்த்தைகளில் நீதியில்லை. கடவுள் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார். இதற்கு வேறு பொருள் இருக்கிறது என்று நினைக்க வைக்கும் இருதயம் நமக்கிருப்பதற்குக் காரணமென்ன? கடவுளின் வார்த்தை ஒன்றை சொல்லுகிறபோது அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதற்கு வேறு பொருளிருக்க வேண்டும் என்று நினைக்க வைக்கிற இருதயம் எப்படிப்பட்டதாக இருக்கும்? ‘நம் சபைகளிலெல்லாம் பெலேஜியனிசம் நிறைந்திருக்கிறது’ என்று ஒரு இறையியலறிஞர் சொல்லியிருக்கிறார். அதுதான் இதற்குக் காரணமோ என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது. கடவுளை அவரிருக்கும் இடத்தில் வைத்துப் பார்க்க நமக்கு மனதில்லை. அவரை சர்வ அதிகாரமும் கொண்ட, நினைத்தைச் செய்யக்கூடிய, இறையாண்மையுடையவராக ஏற்றுக்கொள்ள இருதயமில்லாத சுவிசேஷ கிறிஸ்தவம் உண்மையிலேயே கிறிஸ்தவமாக இருக்க முடியுமா?

நம்மைப் படைத்த கடவுளுக்கு நம்மை அழிக்க எத்தனை நேரம் எடுக்கும்? அதைச் செய்ய அவருக்கு அதிகாரம் இல்லையா? எல்லாம் தெரிந்த, காலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட, நீதியின் தேவனுக்கு படைக்கப்பட்ட சிருஷ்டிகளான நம்மைத் தன்னுடைய மகிமைக்காக எதையும் செய்துகொள்ள அதிகாரம் இல்லையா? எதைச் செய்யவும் நம்முடைய அனுமதி அவருக்குத் தேவையா? கடவுளைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள நம்மால் ஏன் முடியாமல் இருக்கிறது. இன்றைக்குப் பலருடைய ஜெபங்கள் பரிதாபமானதாக இருக்கின்றன. அந்த ஜெபங்களைக் கேட்கும்போது ஜெபிக்கிறவர்களுடைய கடவுள் எப்படிப்பட்டவராக தெரிகிறார் தெரியுமா? மிகவும் பரிதாபத்துக்குரியவராகத்தான் தெரிகிறார். மனிதனைப் படைத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்ற கடவுளாகத் தெரிகிறார். மனிதன் கூப்பிட்ட குரலுக்கெல்லாம் ஓடிவருகிற கடவுளாகத் தெரிகிறார். அவனுடைய பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கத் தடுமாடுகிற கடவுளாகத் தெரிகிறார். பாவிகளை இரட்சிக்கக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற கடவுளாகத் தெரிகிறார். தானியேலின் கடவுளாக, தாவீதின் கடவுளாக, பவுலின் கடவுளாக அவரைப் பொதுவாக இன்றைய ஜெபங்களில் பார்க்க முடியாமல் இருக்கிறது. ஜெபங்களில் அவருடைய இறையாண்மையைக் காணமுடியாமல் இருக்கிறது. பெலேஜியனிசமும், ஆர்மீனியனிசமும், பினியினிசமும் கடவுளைக் கடவுளாக கிறிஸ்தவ சமுதாயம் அறிந்துகொள்ள முடியாமல் அதன் கண்களை மறைக்கின்றன.

“எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்” (சங் 114:1). இந்த வேத வார்த்தைகளுக்கு உங்களுக்குப் பொருள் தெரிகின்றதா? அவருடைய நாமத்துக்கு மகிமை வர வேண்டுமானால் அவர் முன் நாம் புழுவைப்போல நெளிய வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் அதுதான் எனக்குத் தெரிந்த நல்ல உதாரணம். அவர் முன் படைக்கப்பட்டவர்களாகிய நாம் வெறும் புழுக்கள்தான். நாம் மெய்யான கிறிஸ்தவர்களாக இருந்தால் சாகும்வரை அந்த எண்ணத்தோடு வாழ வேண்டும். நம் செய்கைகளுக்காக நம்மை நாமே பாராட்டி முதுகைத் தட்டிக்கொள்ளுகிறபோது நாம் புழுப்போல நடந்துகொள்ளவில்லை. செழிப்பு உபதேசப் போதனை (Prosperity Gospel) பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்த உலகத்தில் கிறிஸ்தவன் பிச்சைக்காரனைப் போலத் தெரிவதும், வாழ்வதும் கர்த்தருக்கு அவமானம் என்று சொல்லும் போதனை அது. நாம் இராஜாக்களாம், செல்வந்தர்களாம், அம்பானிகளாம், மிட்டல்களாம் என்று சொல்லுகிறது செழிப்பு உபதேசம். சொகுசுக் கார்களில் பவனி வராமலும், அடுக்கு மாடிக் கட்டிடங்களில் வாழாமலும், தரையில் கால் படாமல் நடக்கத் தெரியாமலும் இருந்தால் கர்த்தருக்கு நம்மால் மகிமையில்லையாம் – செழிப்பு உபதேசம் சொல்லுகிறது. ‘நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை’ (லூக்கா 9:59) என்று வேதம் சொல்லுகிறதைப் பற்றி அது என்ன விளக்கம் கொடுக்கிறது என்பது தெரியவில்லை. இந்த உலகத்து மனிதனுக்கு இருக்கும் அற்ப ஆசைகளில் மூழ்கி நாம் வாழவேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது செழிப்பு உபதேசம். இருதயத்தில் இந்த உலகத்துக்கேற்ற இச்சைகளை சுமந்துகொண்டு கடவுளுக்கு முன் நாம் புழுப்போல எப்படி வாழமுடியும்?

இங்கிலாந்தில் வாழ்ந்த ஜோன் நியூட்டனைப் (John Newton, 1725-1807) பற்றிக் கெள்விப்பட்டிருக்கிறீர்களா? நல்ல ஆங்கிலக் கிறிஸ்தவப் பாடல்களை சபையில் பாடும்படி அவர் எழுதியிருக்கிறார். ‘Amazing Grace, how sweet the sound’ அவரெழுதிய பாடல். போதகராக இருந்த நியூட்டன் அநேக நூல்களையும் எழுதியிருக்கிறார். வீட்டில் சிறு வயதிலிருந்தே பெற்றோரிடம் கிறிஸ்தவ போதனைகளைப் பெற்று வளர்ந்திருந்தும் இயேசு மேல் அவர் அக்கறை காட்டவில்லை. கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு முன் அடிமை வியாபாரத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். இறுதியில் தானே அடிமையாகும் நிலையும் அவருக்கு ஏற்பட்டது. பாவத்தில் உழன்று வாழ்க்கையில் பாதாளம்வரைப் போயிருக்கிறேன் என்று சொல்லும்படி இழிவான வாழ்வை வாழ்ந்து, இறுதியில் தந்தையின் உதவியால் அடிமை வாழ்க்கையில் இருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பும்போது கப்பல் பிரயாணத்தில் மரணத்தைக் கிட்ட நின்று எட்டிப் பார்க்கும் நிலைமை ஏற்பட்டு, அந்த பயத்தில் கடவுளைப் பார்த்து ஜெபித்து மனந்திரும்பிய மனிதர் ஜோன் நியூட்டன். இரட்சிப்பை அடைந்த பிறகு அதற்காகத் தன் முதுகைத் தட்டிக்கொள்ளாமல் இறக்கும்வரையில் இரட்சிப்பு கர்த்தர் போட்ட பிச்சை, அவர் முன் நான் வெறும் புழு மட்டுமே என்று தாழ்மையையும், எளிமையையும் மட்டுமே உடுதுணிகளாக அணிந்து வாழ்ந்து மரித்தவர் நியூட்டன். ஜோன் நியூட்டன் வாழ்ந்த இந்த உலகத்தில்தான் நாமும் வாழ்கிறோம். கர்த்தருக்கே சகல மகிமையும் என்பதை அவருடைய வாயை விட வாழ்க்கை அதிகம் சொல்லிற்று. அந்தக் கிறிஸ்தவத்தை நம்மினத்தில் எப்போது பார்க்கப் போகிறோம்?

_____________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

One thought on “கடவுளும் புழுவும்

மறுமொழி தருக