சில சமயங்களில் சில நூல்கள் – 1

நல்ல நூல்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதில் நான் எப்போதுமே தயங்கியதில்லை. ஒரு முக்கியமான நூலை தமிழ் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் வாசிக்க வேண்டிய அவசியத்தை இங்கு நான் குறிப்பாக விளக்க விரும்புகிறேன். இதுவரை வாசிப்பில் நீங்கள் அக்கறை காட்டியிருந்திராவிட்டால் உங்கள் வழக்கத்தை மாற்றிக்கொண்டு கொஞ்சம் வாசிப்பில் அக்கறை காட்டுங்கள். வாசிப்பே எல்லாமாகி விடாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் வாசிப்பு இல்லாத வாழ்க்கையில் ஆக்கபூர்வமான சிந்தனைக்கு வழியில்லை என்பதும் எனக்குத் தெரியும். வாசிப்பு அவசியமில்லையென்றால் நம்மைப் படைத்தவர் நமக்கு வேதத்தைத் தந்திருக்க மாட்டார். வாசிப்பு அவசியமில்லையென்றால் பவுல் சிறையில் நூல்களுக்காக அலைந்திருந்திருக்க மாட்டார். வாசிப்பு அவசியம் மட்டுமல்ல வாசிக்க வேண்டியவற்றை வாசிப்பதும் அவசியம். அதற்காகத்தான் இந்த நூலின் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கே எழுதுகிறேன்.

தாம்பத்திய உறவில் நெருக்கம்என் நல்ல நண்பரான அலன் டன் என்ற அமெரிக்க போதகர் 2009ல் ‘Gospel Intimacy in a Godly Marriage’ என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார். திருமண வாழ்க்கையைப் பற்றி ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான நூல்கள் இருந்தபோதும் இன்னொரு நூல் அவசியமா என்ற கேள்வி எழும். அந்தக் கேள்விக்கு இந்த நூலுக்கு மதிப்புரை தந்துள்ள மதிப்புக்குரிய ஜொயல் பீக்கி (Joel Beeke) என்ற போதகரும், நூலாசிரியரும் நல்ல பதிலளித்துள்ளார். அவருடைய பதில் இதுதான் – ‘இறையியல் போதனைகளின் அடிப்படையில் ஆழமாக மணவாழ்க்கையையும் அதில் இருக்க வேண்டிய நெருக்கத்தையும் விளக்குகின்ற அலன் டன்னின் நூல் நான் வாசித்திருக்கும் நூல்கள் அனைத்திலும் சிறந்ததென்றே கூறுவேன். உடன்படிக்கையின் அடிப்படையில் கிறிஸ்து தன்னுடைய சபையோடு கொண்டிருக்கும் ஆழ்ந்த இரகசியமான உறவை திருமணத்தின் மூலம் பவுல் விளக்குவதை, மணவாழக்கை பற்றி என் வாழ்நாளில் நான் வாசித்திருக்கும் ஒரு டஜன் நூல்களில் இந்த நூலே மிகவும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கின்றது . . . உங்களுடைய மணவாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்களானால் உடனடியாக அலன் டன்னின் நூலை வாங்கி வாசியுங்கள். அத்தோடு ஒரு டஜன் நூல்களைப் பணம் கொடுத்து வாங்கி மற்றவர்களுக்கும் கொடுங்கள்.’ சமீபத்தில் நான் நண்பர் அலன் டன்னை சந்தித்தபோது இதைவிடப் பெரிய மதிப்புரையை யாரும் ஒரு நூலுக்கு கொடுக்க முடியாது என்று அவரிடம் சொன்னேன். அதற்குக் காரணம் போதகரும், நூலாசியருமான ஜொயல் பீக்கி இந்த வார்த்தைகளை சாதாரணமாக எழுதவில்லை என்பதால்தான்.

இறையியலறிஞர் பீக்கியின் வார்த்தைகள் மெய்யானவை. அந்தளவுக்கு கிறிஸ்துவுக்குள்ளான சுவிசேஷ அன்பின் அடிப்படையில் அலன் டன் மணவாழ்க்கை பற்றி இந்நூலில் விளக்கி எழுதியுள்ளார். அதனால்தான் இந்நூலைத் தமிழ் வாசகர்கள் வாசித்துப் பயனடையும்படியாக தமிழில் ‘தாம்பத்திய உறவில் நெருக்கம்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டோம். அதை வாங்கி வாசித்து அதிர்ந்து போய் மணவாழ்க்கையில் இவ்வளவு இருக்கின்றதா என்று கேட்டவர்கள் உண்டு.

தமிழில் மணவாழ்க்கை பற்றி விளக்கும் ஒரு சில நூல்கள் இருந்தபோதும் இந்தளவுக்கு வேதம் மணவாழ்க்கை பற்றி விளக்கும் சத்தியங்களை இறையியல்பூர்வமாக ஆழமாகவும், வசனபூர்வமாகத் தெளிவாக விளக்கியும், அதேநேரம் நடைமுறைக்குப் பயனளிக்கும் வகையிலும் எழுதப்பட்ட நூல்கள் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். அதனால்தான் இந்த நூல் தமிழில் மணவாழ்க்கை பற்றிய முக்கியமான கிறிஸ்தவ நூலாக இருக்கின்றது.

நம்முடைய இனத்தின் கலாச்சாரப் பாதிப்பால் கிறிஸ்தவர்கள் மத்தியில் திருமணமும், மணவாழ்க்கையும் இன்னும் விடுதலை பெறாமல் இருப்பதை உங்களில் அநேகர் உணர்வீர்கள். கிறிஸ்துவை விசுவாசித்த போதும் கிறிஸ்துவின் ஆளுமை மணவாழ்க்கையை ஆக்கிரமிக்காமல் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். வெறும் சடங்காக கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்றைக்கும் மணவாழ்க்கை இருந்து வருகிறது. அதில் அன்பில்லை, ஜெபம் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. அதெல்லாம் ஓரளவுக்கு இருக்கத்தான் செய்கிறது. கிறிஸ்தவர்கள் வேத போதனைகளின் அடிப்படையில் மணவாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதில்லை என்றுதான் சொல்ல வருகிறேன். கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதைத் தவிர மணவாழ்க்கையைப் பற்றி நம்மினத்தவர்களுக்கு என்ன தெரிந்திருக்கிறது? கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களைத் திருமணம் செய்துகொள்வதால் மட்டும் பவுலின் போதனைகளின் அடிப்படையில் சிறப்பான மணவாழ்க்கை அமைந்துவிடுமா? அப்படி இருந்துவிட்டால் அலன் டன்னின் நூலுக்கும், ஜொயல் பீக்கி அது பற்றி சொல்லியிருக்கும் வார்த்தைகளுக்கும் மதிப்பில்லாமலும் அவசியமில்லாமலும் போய்விடுமே.

அலன் டன்னின் இந்த நூலில் மணவாழ்க்கையைப் பற்றி அப்படி என்னதான் சிறப்பான விளக்கங்கள் இருக்கின்றன என்று கேட்பீர்கள். அதை நான் விளக்கத்தான் வேண்டும்.

அ. நூலாசிரியர் நேரடியாக மணவாழ்க்கை பற்றிய நடைமுறைப் பயன்பாட்டிற்குள் நுழைந்துவிடாமல் முதலில் மணவாழ்க்கை பற்றிய அடிப்படை வேத போதனைகளை ஆராய்கிறார்.

மணவாழ்க்கை என்றதுமே அதை எப்படி நடத்த வேண்டும் என்ற முறையில் எழுதப்பட்ட சில நூல்களையே நாம் தமிழில் காண்கிறோம். மணவாழ்க்கை நடைமுறை சம்பந்தப்பட்டதாக, சமுதாய உறவு பற்றியதாக இருந்தபோதும் அதைக் கடவுளோடு தொடர்புபடுத்தி விளக்கியெழுதப்பட்ட நூல்கள் தமிழில் இல்லை. தன்னுடைய நூல் எந்த அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை நூலாசிரியர் அலன் டன் விளக்குகிறார் – ‘நான் மணவாழ்க்கையை வேதம் பெருமளவுக்கு விளக்கும் கடவுள், படைப்பு, வீழ்ச்சி, மீட்பு ஆகிய பெரும் போதனைகளின் பின்னணியிலேயே காண்கிறேன். படைப்பு, மீட்பு ஆகியவற்றின் அடிப்படையில் மணவாழ்க்கையில் ஈடுபடப்போகிறவர்களைப் பற்றி நான் விளக்கிய பிறகுதான் அந்த மணவாழ்க்கையின் நெருக்கத்திற்கு எதிரான மிகப்பெரும் சவாலாகிய பாவத்தைப் பற்றி நான் விளக்கியிருக்கிறேன். நம்முடைய மணவாழ்க்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் பாவத்தை சுவிசேஷம் மட்டுமே எதிர்கொள்ள முடியும். அதனால்தான் நாம் மணவாழ்வில் ஒருவருக்கொருவர் சுவிசேஷ அன்பை எப்படிக் காட்ட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.’

முதல் நான்கு அத்தியாயங்களில் கடவுள், படைப்பு, வீழ்ச்சி, மீட்பு ஆகிய வேத போதனைகளுக்கும் மணவாழ்க்கைக்கும் இடையில் உள்ள பிரிக்க முடியாத தொடர்பை ஆசிரியர் விளக்குகிறார். இந்தப் பகுதி மிகவும் முக்கியமானது. மணவாழ்க்கை கடவுளின் சிந்தையில் உருவானது மட்டுமன்றி அதற்கு எந்தளவுக்கு கடவுள் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பதை இந்தப் பகுதி புரிய வைக்கிறது. வாசகர்கள் நிச்சயம் இத்தகைய விளக்கங்களைத் தமிழில் வாசித்திருக்க மாட்டீர்கள். அந்தளவுக்கு அலன் டன் வேத விளக்கங்களை ஆராய்ந்து தந்திருக்கிறார்.

நூலாசிரியர் அலன் டன் கிறிஸ்தவ மணவாழ்க்கையின் நெருக்கத்திற்கு எதிரான பெரும் எதிரியாக பாவத்தைக் காண்கிறார். அது முற்றிலும் உண்மை. பாவமே அனைத்திற்கும் எதிரி. அந்தப் பாவத்தோடுதான் நாம் சாகும்வரை போராட வேண்டிய கடமை இருக்கிறது. நம்மில் எல்லாப் பகுதிகளையும் பாதிக்கும் பாவம் மணவாழக்கையையும் பாதிக்கும். எல்லா விஷயங்களிலும் நமக்கு கிறிஸ்துவில் இருக்கும் சுவிசேஷ அன்பைக்கொண்டே பாவத்தை எதிர்க்கிறோம். அதேபோல் மணவாழ்க்கையிலும் சுவிசேஷ அன்பைக் கொண்டே பாவத்தை அழித்து நெருக்கத்தை அனுபவிக்க முடியுமென்று அலன் டன் விளக்குகிறார். வேத இறையியலின் அடிப்படையில் கிறிஸ்தவ மணவாழ்க்கையை ஆசிரியர் அணுகியிருக்கும் முறையே இந்நூலின் விசேஷ தன்மையாகும்.

ஆ. கடவுள், படைப்பு, வீழ்ச்சி, மீட்பு ஆகியவற்றின் அடிப்படையில் மணவாழ்க்கையை விளங்கிக்கொள்வதால் மட்டுமே நடைமுறையில் பக்திவிருத்தியை மணவாழ்க்கையில் அனுபவிக்க முடியும் என்று ஆசிரியர் நம்புகிறார்.

இதையும் அவரே பின்வருமாறு விளக்குகிறார், ‘கடவுள், படைப்பு, வீழ்ச்சி, மீட்பு ஆகிய வேத போதனைகளே நம்மைப் பற்றிய உண்மை நிலையை அறிந்துகொள்ள உதவுகின்றன. கடவுளே எல்லாவற்றிற்கும் அடிப்படை அர்த்தத்தை அளிக்கிறார். ஆதியில் தேவன் இருந்தார் . . . என்ற ஆதியாகமத்தின் இந்த வசனங்கள் நமக்கு கடவுளின் படைப்பை  அறிமுகப்படுத்துகின்றன. நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டோம். பின்பு நாம் பாவிகளானோம். பாவத்தால் நாம் மரணத்தை சம்பாதித்துக்கொண்டோம். இரட்சிப்பு கிருபையின் மூலமாக மட்டுமே, விசுவாசத்தின் மூலமாக மட்டுமே, கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே நமக்குக் கிடைக்கிறது.’

‘இந்த உண்மைகளின் அடிப்படையில் நம்மைப் பற்றி நாம் சிந்திக்க விரும்பாவிட்டால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறவர்களாகி விடுவோம். இந்த உண்மைகள் நமக்கு வேதபூர்வமான உலகக் கண்ணோட்டத்தை அளிக்கின்றன. இந்தக் கண்ணோட்டம் நாம் யார் என்பதையும், நாம் ஏன் இங்கிருக்கிறோம் என்பதையும், நமக்கு என்ன நடந்திருக்கிறது என்பதையும், நம்மை சரிப்படுத்திக் கொள்வது எப்படி என்பதையும் அறிந்துகொள்ள துணை செய்கின்றது.’

ஆசிரியரின் விளக்கம் உண்மையானதுதான். ஒருவருடைய வாழ்க்கைக் குறிக்கோள் பணம் சம்பாதிப்பது மட்டுமே என்றிருந்தால் அவர் தன் வாழ்க்கையில் அனைத்தையும் அதை முன்னிலைப்படுத்தியே செய்வார், மணவாழ்க்கை உட்பட. ஒருவர் தன் வாழ்க்கையில் கடவுளுக்கு முக்கியத்துவம் தந்தால் அவரும் அவருடைய குடும்பத்தவர்களும் இயேசுவை முன்னிலைப்படுத்தி இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்திற்குரியவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இயேசுவை ஆராதித்து, இயேசுவின் அன்பைப் பகிர்ந்துகொண்டு, சுயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இயேசுவுக்காகவே பக்திவிருத்தியோடு வாழ்வார்கள். இந்நூல் இயேசுவின் சுவிசேஷ அன்பை ஆதாரமாகக் கொண்ட மணவாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஆலோசனை தருகிறது.

இ. நூலின் ஏனைய பயன்பாடுகள்

நூலில் 5ல் இருந்து 8 வரையிலான அதிகாரங்களில் சுவிசேஷ அன்பின் எதிரியைப் படம் பிடித்துக் காட்டி, சுவிசேஷ அன்பு எதிர்நோக்கும் சவால்களை விளக்கி, சுவிசேஷ அன்பை மணவாழ்க்கையில் எவ்வாறு பரிமாறிக்கொள்ளுவது என்று ஆசிரியர் விளக்குகிறார். இந்தப் பகுதியில் மனந்திரும்புதலுக்கும், மன்னிக்கும் இயல்புக்கும் அதிக முக்கியத்துவத்தை ஆசிரியர் கொடுத்திருக்கிறார். சுவிசேஷ அன்பிற்கு எதிரியான பாவத்தை எதிர்நோக்கி வெற்றிக்கொள்ளும்போது ஒவ்வொரு முறையும் மணவாழ்க்கையில் மனந்திரும்புதலுக்கும், மன்னிப்புக்கும் அவசியம் ஏற்படுகிறது. இந்த இயல்புகளை நாம் கிறிஸ்துவில் இரட்சிப்பின் அனுபவத்தின் மூலம் பெற்றுக்கொள்ளுகிறோம். கிறிஸ்தவ மனவாழ்க்கையில் சுவிசேஷ அன்பை வெளிப்படுத்த இவை மிகவும் அவசியமானவை.

கடைசிப்பகுதியான 9லிருந்து 12 வரையிலான அதிகாரங்களில் ஆசிரியர் தாம்பத்திய உறவின் நெருக்கத்திற்கு எதிரான நான்கு சவால்களை இனங்காட்டி அவற்றை எதிர்கொண்டு வெற்றிகாணும் வழிகளை விளக்குகிறார். அதில் முதலாவது, கணவனின் தலைமை வகிக்கும் பொறுப்பு சந்திக்கும் சவால், இரண்டாவது, சுயநலமாகிய சவால், மூன்றாவது வார்த்தைப் பறிமாற்றம் சந்திக்கும் சவால், நான்காவது மரணமாகிய சவால். இதில் மணவாழ்வில் எந்தவிதத்தில் நாம் சுவிசேஷ அன்பை வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஆசிரியர் அழகாக விளக்கியிருக்கிறார். நாம் பொதுவாகவே மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் ஒரு விஷயம் இங்கே மணவாழ்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. இருதயத்தின் கோளாறுகள் பேச்சின் மூலமாகவே வெளிப்படுகின்றன என்பதை யாக்கோபு தன் நிருபத்தில் விளக்கியிருப்பது எத்தனை உண்மை. சிந்தித்து, கவனத்தோடு சுவிசேஷ அன்பைப் பேச்சில் காட்டாமல் எவருடைய மணவாழ்க்கையிலும் பக்திவிருத்தியான நெருக்கத்தைக் காணமுடியாது என்கிறார் ஆசிரியர். சுவிசேஷ அன்பின் அடிப்படையிலான வார்த்தைகளை மணவாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்துவது என்று அலன் டன் கூறும் ஆலோசனைகளை அவர் உண்மையிலேயே தன்னுடைய மணவாழ்க்கையில் பயன்படுத்தியிருந்தால் மட்டுமே இந்த முறையில் நூலை எழுதியிருக்க முடியும். ஆசிரியரும் அவருடைய மனைவியாரும் சுவிசேஷ அன்பிலான மணவாழ்க்கைக்கு அருமையான உதாரணமாக அவருடைய சபையில் இருக்கிறார்கள்.

இதற்கு மேலும் நான் தொடர்ந்து இந்நூல் பற்றி விளக்கினால் நீங்கள் நூலை வாசிக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விடும். இந்த நூலை வாசிக்க வேண்டும் என்ற உணர்வை உங்கள் இருதயத்தில் நான் ஏற்படுத்தியிருந்தால் அது எனக்கு சந்தோஷத்தை அளிக்கும். இந்நூல் இதுவரை தமிழகத்தில் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. திருமறைத்தீபம் பத்திரிகையில் காணப்படும் முகவரிகளோடோ அல்லது இந்தத் தளத்தில் காணப்படும் இந்திய முகவரியோடோ தொடர்புகொண்டு இந்த நூலை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். வாங்கி வாசியுங்கள். உங்கள் மணவாழ்க்கைக்கு இது துணை செய்யும். வாங்கி புதுமணத் தம்பதிகளுக்கு கொடுங்கள். போதகர்கள் புதுமணத் தம்பதிகளுக்கு திருமண ஆலோசனை வழங்க இதைப் பயன்படுத்தலாம். சபைகள் நிச்சயம் தங்களுடைய மக்களுக்கு இதை அறிமுகப்படுத்துவது அவசியம். இதை வாங்கி வாசித்துப் பயனடைந்தால் நிச்சயம் ஒரு வரி எழுதி உங்கள் கருத்தைத் தெரிவிக்க மறக்காதீர்கள். நன்றி.

___________________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

2 thoughts on “சில சமயங்களில் சில நூல்கள் – 1

மறுமொழி தருக