சிந்தித்துப் படிக்கவேண்டிய வேதம்

கர்த்தரின் வேதத்தைப் பற்றிய மிக விளக்கமான நீண்டதொரு ஆக்கத்தைக் கடந்த இதழில் தந்திருந்தேன். வேதத்தின் மெய்த்தன்மை, அதனுடைய குணாதிசயங்கள் பற்றிய உண்மைகளை அறியாமலேயே வேதத்தைப் பயன்படுத்தி வருகிறவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். கிறிஸ்தவ விசுவாசத்திற்கு ஆதாரமாக இருந்து, இரட்சிப்புக்கான சுவிசேஷத்தைத் தன்னுள் அடக்கிக் காணப்படும் வேதத்தைப் பற்றிய சத்தியங்களை அறிந்துகொள்ளாமல் அதனால் எப்படிப் பயன்பட முடியும்?

நாம் அன்றாடம் வாசித்து, சிந்தித்துப் பயன்படுத்த வேண்டிய நூல் கர்த்தரின் வேதம். அதை வெறுமனே வீட்டிலோ, கையிலோ வைத்திருந்தால் அதன் மூலம் பலனடைய முடியாது. வேதம் புனிதமானதுதான்; அது கர்த்தரின் சத்திய வார்த்தைகளைக் கொண்டிருக்கும் புனித நூல். இருந்தாலும் அதை வானத்தில் இருந்து நம் கையில் வந்து விழுந்திருக்கும் நூலாகக் கருதிவிடக்கூடாது. வேதத்தின் அத்தனைப் போதனைகளும் கர்த்தரின் வார்த்தைகளாகவும், அவருடைய சித்தமுமாக இருப்பதால்தான் அதைப் புனிதமானது என்கிறோம். அதற்காக வேதத்தை வீட்டின் உட்புறத்தில் ஓரிடத்தில் வைத்து ‘சாமி’யாகக் கருதி அதை வணங்கக்கூடாது. சில சபைகளைச் சேர்ந்த பெண்கள் வேதத்தைத் தூய்மையான வெள்ளை நிறத் துணியில் சுற்றி வீட்டில் வைத்திருப்பார்கள்; அதைத் துணியில் சுற்றிக் கையில் கொண்டு போவதையும் கண்டிருக்கிறேன். அநேகர் வேதத்தில் எந்த அழுக்கும் படாமல், அதன் பக்கங்கள் வாங்கிய காலத்தில் இருந்ததைப்போலப் புத்தம் புதிதாக வைத்திருப்பார்கள். அதன் பக்கங்களில் கோடுகளிடுவதையும், குறிப்புகளை எழுதுவதையும் அவர்கள் பாவமாகக் கருதுவார்கள். இதெல்லாம் வேதத்தைப் பற்றிய ஞானமில்லாமல் பலர் செய்துவரும் பயனில்லாத காரியங்கள். வேதம் பயன்படுத்தப்படுவதற்காகக் கர்த்தரால் கொடுக்கப்பட்டிருக்கிறது; அதுவும் அன்றாடம் வாசித்துப் பக்கங்களில் கைகள்பட்ட அடையாளங்கள் நிறைந்து, கண்ணீர்த்துளிகளால் குளிப்பாட்டப்பட்டிருக்க வேண்டும். அதுவே அந்த வேதநூலால் ஒருவர் பயனடைந்து வருகிறார் என்பதற்கான அடையாளம்.

வேதம் எழுத்தில் தரப்பட்டிருக்கும் முறை அதிசயமானது; அற்புதமானது. மனிதர்களைப் பயன்படுத்திக் கர்த்தர், பரிசுத்த ஆவியின் மூலம் அதை ‘ஊதியருளியிருக்கிறார்‘(God-breathed out). இந்த வார்த்தைப் பிரயோகம், கர்த்தர் தன்னுடைய வார்த்தைகள் உள்ளது உள்ளவாறு, தவறுகளெதுவுமில்லாமல் எழுத்தில் எழுதப்படுவதற்காகச் செய்திருக்கும் அற்புதச் செயலை விளக்குகிறது. இந்தவிதத்தில் உலகத்தில் மனிதர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒரே நூல் கிறிஸ்தவ வேதம் மட்டுமே. இதைத்தான் ஆங்கிலத்தில் ‘Inspiration’ என்ற பதத்தின் மூலம் விளக்குகிறார்கள். அத்தகைய முறையை, எத்தனைப் பெரிய ஆவிக்குரிய நூல்களை எழுத்தில் தந்திருக்கும் பரிசுத்தவான்களின் நூல்கள் அனுபவித்ததில்லை. வேதம் மட்டுமே இத்தகைய முறையில் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.

இனி வேதத்தைப் பற்றிய மூன்று முக்கிய உண்மைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

1. சத்தியவேதம் நாம் வாசித்துப் புரிந்துகொள்வதற்காக மனிதமொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது.

கர்த்தர் சாதாரண மனிதமொழிகளான எபிரேயத்தையும், கிரேக்கத்தையும் பயன்படுத்தித் தன்னுடைய சித்தத்தை எழுத்தில் வார்த்து வேதமாக நமக்குத் தந்திருக்கிறார். இந்த மொழிகள் இரண்டும் அவை எழுதப்பட்ட காலத்தில் மனிதர்கள் பயன்படுத்தி வந்திருந்த மொழிகள். இஸ்ரவேலர் பேசி, எழுதிப் பயன்படுத்திய மொழி எபிரேயம். அதனால் அவர்களோடு பேசித் தனது வெளிப்படுத்தலைத் தந்த தேவன் எபிரேயமொழியில் பழைய ஏற்பாட்டை எழுத்தில் கொடுத்தார். சீனாய் மலையில் மோசேயுடன் பேசிய தேவன் அவனுக்குத் தெரிந்திருந்த எபிரேய மொழியிலேயே பேசினார். இல்லாவிட்டால் மோசேக்கு அது எப்படி விளங்கியிருக்கும்? சிலர் ஆண்டவர் தேவபாஷையில் பேசி மோசே அதைப் புரிந்துகொள்ளும்படிச் செய்தார் என்று மிகத் தவறாக எண்ணிவருகிறார்கள். தேவபாஷையென்று ஒன்றில்லை என்பதை அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள். மொழி (பாஷை) என்பது மனிதனுக்குக் கொடுக்கப்பட்டது; அதைக் கர்த்தரே மனிதன் பேசிப் பயன்படுத்துபடியாகக் கொடுத்திருக்கிறார். உலகத்தைத் தவிர வேறு இடங்களில் மனிதர்கள் இல்லை; அதனால் மொழிக்கு அந்த இடங்களில் அவசியமில்லாமல் போயிருக்கிறது.

தேவதூதர் பாஷை என்றும் ஒன்றில்லை; அவர்களுக்கு மொழி அவசியமற்றது. ஆபிரகாமைச் சந்திக்க வந்த மூவரும் ஆபிரகாமுக்குத் தெரிந்திருந்த பாஷையில் பேசியிருக்கிறார்கள். மீகாவேல் தானியேலோடு பேசியபோது தானியேலுக்குத் தெரிந்திருந்த மொழியில் பேசியிருக்கிறார். ஆபிரகாமும், தானியேலும் அந்த மொழி தங்களுக்குப் புரிந்திருக்கவில்லை என்று வேதத்தில் நமக்கு அறிவிக்கவில்லை. யோசேப்போடும், மேரியோடும் பேசிய தேவதூதன் அவர்கள் அன்று பயன்படுத்திய அராமிக் (Aramaic) மொழியில் பேசியிருக்கிறார். மனிதர்களுடைய மொழியில் உரையாடும் வல்லமை தேவதூதர்களுக்கு இருந்தது.

1 கொரிந்தியர் 13:1ல் பவுல், “நான் மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசினாலும்” என்று சொன்னபோது, தனக்கு அன்புகாட்டத் தெரியாவிட்டால் எத்தனை மொழிகள் தெரிந்திருந்தாலும் அதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்றே சொல்லியிருக்கிறார். பவுல் இந்த இடத்தில் “உயர்வு நவிற்சி அணியைப்” (Hyperbole) பயன்படுத்தியிருக்கிறார். அதாவது, மிகைப்படுத்தி எழுதியிருக்கிறார்; இல்லாத ஒன்றை இருப்பதுபோல் விளக்கியிருக்கிறார். இது தெரியாமல் பெந்தகொஸ்தே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் தூதர் பாஷையென்று ஒன்றிருந்ததாகவும், பவுலுக்கு அது தெரிந்திருந்தது என்றும் தவறாக விளக்கி வருகிறார்கள். இதெல்லாம் வேதத்தை எப்படிப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற பக்குவமில்லாததால் ஏற்படும் தவறுகள்.

புதிய ஏற்பாட்டுக் காலத்தில் பொதுவாக மக்களுக்குத் தெரிந்திருந்த மொழி கிரேக்கம். கிரேக்க மொழியும், கிரேக்கக் கலாச்சாரமும் மகா அலெக்சாண்டரினால் அன்றைய ஐரோப்பா, மத்தியகிழக்கு நாடுகள்வரை பரவியிருந்தது. இஸ்ரவேலரும் கிரேக்க மொழியை அறிந்திருந்தனர். அதனால் கர்த்தர் புதிய ஏற்பாட்டை கிரேக்க மொழியில் தந்திருக்கிறார். ஆகவே, அந்தந்தக் காலத்தில் மக்களுக்குப் பரிச்சயமாக இருந்த மொழிகளில் ஆண்டவர் வேதத்தைத் தந்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுகிறோம். இந்த இரண்டு மொழிகளிலும் தரப்பட்டிருக்கும் கர்த்தரின் வெளிப்படுத்தல் பின்னால் ஏனைய மனித மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அனைத்து மக்களும் சத்தியத்தை அறிந்து கர்த்தரை வணங்குவதற்கு அவரவர் மொழிகளில் வேதம் மொழிபெயர்க்கப்பட வேண்டியது அவசியம். அதனால் மொழியாக்கம் செய்யும் கல்வித் தகுதியும், ஆற்றலும், பக்குவமும் உள்ளவர்கள் கூடி உழைத்து வேதமொழிபெயர்ப்புகளை பல்வேறு மொழிகளில் தந்திருக்கிறார்கள். இதுவே கர்த்தரின் சித்தம்.

வில்லியம் டின்டேல் காலத்தில் இங்கிலாந்தில் கத்தோலிக்க மதம் வேதத்தை இலத்தீன் மொழியில் மட்டும் வைத்திருந்து மக்கள் வாசிக்கமுடியாதபடி செய்திருந்தது. அன்று முனைவர் பட்டம் பெற்றிருந்த ஒரு மதகுரு, டின்டேலைப் பார்த்து, “கல்வியறிவில்லாதவர்கள் பயன்படுத்தும் சாதாரண மொழி ஆங்கிலம். இலத்தீன், கிரேக்கம் போன்ற மொழிகளில் மட்டுமே கடவுளின் சத்தியத்தை முழுமையாக விளக்க முடியும்” என்று சொன்னார். அதற்குப் பெரும் கல்விமானாகிய டின்டேல், “ஆங்கிலத்தில் தரமாக வேதத்தை மொழிபெயர்க்க முடியும்; அதைச் செய்தேயாக வேண்டும். சத்தியம் மக்களின் கண்களைத் திறக்கமுடியாதபடி மறைக்கப்பட்டிருக்கிறது. சாதாரண மக்களுடைய மொழியான ஆங்கிலத்தில் வேதம் மொழிபெயர்க்கப்பட்டால் மட்டுமே அவர்களால் அதில் காணப்படும் தெளிவானதும், புரிந்துகொள்ளக்கூடியதுமான கர்த்தருடைய வார்த்தையை வாசித்துப் பயன்பட முடியும்” என்று ஆணித்தரமாகப் பதிலளித்தார். அவர் தன் உயிரையும் பணயம் வைத்து வேதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். டின்டேலின் மொழியாக்கத்தைத் தழுவியே 1611 ஜேம்ஸ் அரசன் மொழியாக்கம் வெளிவந்தது. இன்று காலத்துக்கேற்றவகையில் வேறு சில தரமான மொழிபெயர்ப்புகளும் வழக்கத்தில் இருக்கின்றன.

வேதம் மனித மொழிகளில் மக்கள் வாசித்து விளங்கிக்கொள்ளும்படியாகத் தெளிவாகவும், துல்லியமாகவும் தரப்பட்டிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வேதம் ஒரு மாஜிக் நூலல்ல; அதில் சத்தியம் சாதாரண வாசகர்கள் கண்ணுக்குப் புலனாகாதபடி ஒளிந்து காணப்படவில்லை. மக்கள் அன்றாடம் பேசிப்பயன்படுத்தும் மொழியில் அவர்கள் தெளிவாக விளங்கிக்கொள்ளும்படியாக வேதம் பெரும்பாலான உலக மொழிகளில் கர்த்தரின் ஆசீர்வாதத்தால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

2. வேதத்தை எந்தவிதக் குழப்பமுமில்லாமல் விளங்கிக்கொள்ள முடியும்.

அதற்காகவே வேதம் சாதாரண மனித மொழிகளில் தரப்பட்டிருக்கிறது. வேதத்தை மனிதர்கள் ஆவிக்குரிய கண்களோடு வாசித்துப் புரிந்துகொண்டு ஆண்டவரை விசுவாசிக்கக்கூடிய விதமாகவே கர்த்தர் அதைத் தந்திருக்கிறார். அதன் காரணமாகத்தான் சீர்திருத்தவாதிகள் அதன் தன்மையை விளக்குவதற்கு perspicuity (crystal clear) என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு “தெளிவுள்ளது” என்று அர்த்தம். அதாவது வேதம் அது காணப்படும் சாதாரண மனித மொழியில் விளங்கிக்கொள்ளக்கூடிய அளவுக்குத் தெளிவானது. அதில் குழப்பத்திற்கோ, இடறலுக்கோ இடமில்லை. கல்லாதவர்களும்கூட வேதத்தின் அடிப்படைப் போதனைகளான கடவுளைப் பற்றியும், கிறிஸ்துவைப் பற்றியும், பாவத்தைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும், கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றியும் எந்தவிதச் சிரமமுமில்லாமல் வேதத்தை வாசித்துத் தெரிந்துகொள்ள முடியும். அதனால்தான் வேதத்தை வாசித்தே ஒருவன் கிறிஸ்துவை விசுவாசிக்க முடியுமென்பதை நாம் விசுவாசிக்கிறோம்.

எந்தவொரு சாதாரண மனிதனும் வேதத்தின் இரகசியங்களைத் திறந்துகாட்டக்கூடிய “சாவி” தன்னிடம் மட்டுமே இருக்கிறதென்று சொல்ல முடியாது; அவ்வாறு சொல்லுகிறவர்கள் பொய்யுரைக்கிறார்கள்; அவர்கள் மனிதர்களை ஏமாற்றுகிறவர்கள். எந்தவொரு சபைப் போதகனுங்கூட வேதசத்தியங்களை மக்கள் தெரிந்துகொள்ளக்கூடிய வல்லமையைத் தனக்கு மட்டுமே ஆண்டவர் கொடுத்திருக்கிறார் என்று கூறமுடியாது. வேதத்தில் சத்தியங்கள் பெருமளவில் காணப்பட்ட போதும் அவை நாம் கண்டுபிடிக்க முடியாதபடி, வித்தை தெரிந்த சிலர் மட்டுமே நமக்குக் காட்டக்கூடிய விதத்தில் ஒளிந்து காணப்படவில்லை. அதாவது, சாதாரண கிறிஸ்தவ விசுவாசி தன் சொந்த மொழியில் வாசித்துக் கண்டுபிடிக்கமுடியாதபடி எந்த இரகசியமும் வேதத்தில் ஒளிந்திருக்கவில்லை.

இந்த உலகத்தைச் சேர்ந்த பாவியான (ஜென்மசுபாவமுள்ள) மனிதனுக்கு ஆவிக்குரிய கண்கள் இல்லாததால் அவனால் வேதத்தை விளங்கிக்கொள்ள முடியாது.

1 கொரிந்தியர் 2:14
ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.

ஆவிக்குரிய கண்களுள்ள சகல விசுவாசிகளும் வேதத்தைத் தங்களுடைய சொந்த மொழியில் வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். சில வேளைகளில் தமிழ் போன்ற சில உலக மொழிகளில் வேதம் தரமானதாக, துல்லியமாக, நுட்பமாக மொழியாக்கம் செய்யப்படாமலிருக்கலாம். இருந்தபோதும் அதன் அடிப்படைப் போதனைகளைப் புரிந்துகொள்ளுவதற்கு அதில் தடையிருக்காது. பெரும்பாலும் உலக மொழிகளில் காணப்படும் தரமான மொழிபெயர்ப்புகள் அனைத்தும் இறையியல் தவறுகள் இல்லாமலேயே கவனத்தோடு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அதனால் கடவுளையும், சுவிசேஷத்தையும், கிறிஸ்துவையும் அறிந்துகொள்ளுவதற்கு எவரும் வேதத்தை முழுமையாக நம்பி வாசிக்கலாம்.

வேதத்தை விளங்கிக்கொள்ள கிறிஸ்தவர்களுக்கு ஆவியானவரின் ஞானமும், தெளிவும் தேவை.

எபேசியர் 1:17
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,

யோவான் 16:13-16
சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன். நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்.

விசுவாசிகள் ஜெபத்தோடு ஆவியானவரில் தங்கியிருந்து வேதத்தை வாசிக்கவேண்டும். தேவன் வேதத்தை விளங்கிக்கொள்ளக்கூடிய ஞானத்தையும், அதில் தெளிவையும் நமக்குத் தருகிறார். அதை எபேசியர்களுக்குக் கொடுக்கும்படி ஆண்டவரிடம் பவுல் ஜெபித்தார். எபேசியர் 1:20ல், எபேசியர்களுக்கு “பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்று” பவுல் ஜெபித்தார். இதை அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஆவியானவரிடம் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆசீர்வாதத்தை அடைந்திருக்கிறார்கள்.

பிரசங்கிக்கும், போதிக்கும் பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகமாக அப்பணியைச் செய்வதற்கான ஆவியின் ஈவும், ஆக்கபூர்வமான இறையியல் பாண்டித்தியமும், சத்தியத்தில் தேர்ச்சியடைவதில் கடின உழைப்பும், சத்தியத்தை நுணுக்கமாகவும், தெளிவாகவும் விளக்குகின்ற ஆற்றலும் தேவைப்படுகிறது. இவர்கள் எபிரேய, கிரேக்க மூல மொழிகளில் பரிச்சயம் அடைவதற்கு அவசியமான ஆங்கிலப்புலமையையும், தங்களுடைய சொந்த மொழியில் தேர்ந்த புலமையையும், வாசிக்கும் அனுபவத்தையும், எழுதும் திறமையையும் பெற்றிருக்க வேண்டும். மற்றவர்களுக்குப் போதிக்கிறவனுக்கு இவையில்லாமல் சத்தியத்தை உண்மையோடும், கருத்தோடும் நிதானித்துப் போதிக்க முடியாது.

3. கர்த்தரின் வேதம் சகல மனித மொழிகளுக்கும் பொதுவான பல்வேறு வகை இலக்கியங்கள் மூலம் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.

சத்திய வேதத்தை நமக்கு எழுத்தில் தந்திருக்கும் கர்த்தர், அதைப் பல்வேறு இலக்கியவகைகளின் மூலமாகத் தந்திருக்கிறார். வரலாறு, தீர்க்கதரிசனம், பாடல்கள், அடையாள மொழி, உரைநடை, உவமையணி, உருவக அணி, உயர்வு நவிற்சி அணி (மிகைப்படுத்தல்), நேரெதிர் பொருள் தரும் சொற்றொடர் (irony) போன்ற பொதுவாகவே சகல மொழிகளுக்குமுரிய வரலாற்று, இலக்கண, இலக்கிய நடைகளில் தந்திருக்கிறார். கர்த்தரின் வார்த்தையான வேதத்தில் சத்தியம் இவற்றின் மூலமாகவே நம்மை வந்தடைந்திருக்கிறது. வேதத்தை வாசிப்பவர்கள் இவற்றைக் கவனிக்காமல் விட்டாலோ, அலட்சியப்படுத்தினாலோ வேதத்தை விளங்கிக்கொள்ள முடியாது. இவற்றை உதாசீனம் செய்தால் சத்தியத்தைத் தவறாகப் புரிந்துகொள்ளுகிற ஆபத்து ஏற்படும். ஆகவே, வேதத்தின் அனைத்து வசனங்களையும் சாதாரணமாகவே ஒரு மொழிக்குரிய அதன் வழமையான வரலாற்று, இலக்கண, இலக்கிய விதிகளின் அடிப்படையில் தெளிவாக ஆராய்ந்து விளங்கிக்கொள்ள வேண்டும். இதில் கவனத்தோடு ஈடுபடுகிறபோதே, அதிலிருந்து வெளிவரும் ஆவிக்குரிய செய்தியைத் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். வாழைப்பழத்திற்குள் இருக்கும் பழத்தை, அதன் தோலை உரிக்காமல் சாப்பிட முடியாது. இதைச் செய்வதற்கு எவருமே தயங்கமாட்டார்கள். அதுபோலத்தான், வேதவசனங்களின் சத்தியத்தை அதன் வரலாற்று, இலக்கண, இலக்கியத் தோலை உரித்து அறிந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கிருக்கிறது.

வேதத்தில் ஆவிக்குரிய செய்தி இருப்பதால் அதைப்புரிந்துகொள்ள வரலாற்று, இலக்கண, இலக்கிய ஆய்வுகளெல்லாம் அவசியமில்லை என்ற மிகத் தவறான, குருட்டுத்தனமான எண்ணம் அநேகருக்கிருக்கின்றது. அது அறியாமையின் விளைவாகத் தோன்றியிருக்கும் எண்ணம். உலக மொழிகளில் சாதாரணமான எந்த நூலை வாசித்தாலும் இந்த முறையை நாம் பின்பற்றுகிறோம் என்பதை அவர்கள் உணருவதில்லை. இதற்கு நல்ல உதாரணம் ஜோன் பனியனின் மோட்சப் பயணம். இது ஒரு கிறிஸ்தவ நாவல். கிறிஸ்தவ விசுவாசத்தையும், அதன் மூலம் நாமடையும் கிறிஸ்தவ வாழ்க்கையையும், அதன் அனுபவங்களையும் பல்வேறு கற்பனைப் பாத்திரங்களைப் பயன்படுத்திப் பேசவைத்து, பல்வேறு உவமான, உருவக அணிவகைகளைப் பயன்படுத்தி அடையாளமொழி மூலம் நமக்கு விளக்கியிருக்கிறார் ஜோன் பனியன். அதனால் அவருடைய பாத்திரங்களின் பொருளையும், அணிவகைகளின் பொருளையும் இலக்கண, இலக்கிய ரீதியில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டிய கட்டுப்பாடு இருக்கின்றது. அவற்றைக் கவனத்தோடு செய்தே அந்த நாவல் விளக்கும் சத்தியத்தை நாம் புரிந்துகொள்கிறோம். இது சகலவிதத்திலும் வேதத்திற்கும் பொருந்துகிற உண்மை. ஏனெனில், வேதம் மனிதமொழியில் வரலாற்று, இலக்கிய, இலக்கணப் போர்வையைத் தன்மேல் அணிந்தே நம்மை வந்தடைந்திருக்கின்றது.

இதுவரை மேலே நான் சொன்னவற்றிற்கு வேதத்தில் இருந்து ஒரு சில உதாரணங்களைக் கவனிப்போம். 1 கொரிந்தியர் 14:15ல் பவுல் சொல்லுகிறார்,

இப்படியிருக்க செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன்.

இந்த வசனத்தை இதற்கு முன் வந்திருக்கும் வசனங்களின் அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும். பவுல் சொல்லுகிறார், சபை ஆராதனைக்கு வரும்போது அங்கு நான் செய்யும் செயல்கள் மற்றவர்களுக்கு பக்திவிருத்தி ஏற்படும் வகையில் அமைய வேண்டும் (14:12). அதாவது, நாம் ஜெபித்தாலோ, பேசினாலோ அவை மற்றவர்களுக்குப் புரியும் மொழியில் தெளிவாகக் காணப்பட வேண்டும். ஆகவே, அந்நிய பாஷை (அந்நியமொழி) பேசுகிறவன் தான் பேசியதற்கான அர்த்தத்தைச் சொல்ல முடியாதவனாக இருப்பானானால் அதை அவன் செய்யக்கூடாது; தன்னைக் கட்டுப்படுத்தி அதைப் பேசக்கூடாது. பக்கத்தில் இருப்பவர்களுக்கும் சபையாருக்கும் புரியாத எந்தப் பேச்சையும் பேசக்கூடாது என்கிறார் பவுல். இப்படிச் சொல்லிவிட்டு 15ம் வசனத்தில், உயர்வு நவிற்சி அணி நடையில் (hyperbole – மிகைப்படுத்திச் சொல்லுதல்), நான் எதைப் பேசினாலும் கருத்தோடு மற்றவர்களுக்குப் புரியும்படி மட்டுமே பேசுவேன் என்கிறார். அதுவே அந்த வசனத்துக்குரிய பொருள். அதைப் 16ம் வசனம் மேலும் தெளிவாக்குகிறது. 15ம் வசனத்தில் மொழி இலக்கணத்திற்குரிய உயர்வு நவிற்சி அணி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அலட்சியப்படுத்துகிறவர்கள் அந்த வசனத்தில் பவுல் சொல்லியிருப்பதை நடைமுறையில் செய்ய முயற்சி செய்வார்கள். அப்படிச் செய்வது மடமைத்தனம். ஆவியோடு பாடுவது, கருத்தோடு பாடுவது என்று எதுவுமே இல்லை. இந்த இடத்தில் தவிர வேறு எந்த இடத்திலும் பவுல் இவற்றைக் குறிப்பிடவில்லை. இவை மிகைப்படுத்திச் சொல்லப்பட்ட வார்த்தைகள். இவற்றைச் செய்ய முயற்சி செய்வது முழு முட்டாள்த்தனம்.

இன்னுமொரு உதாரணம் 1 கொரிந்தியர் 14:26.

நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.

இதற்கு முன் அந்நியபாஷைக்கு அர்த்தம் சொல்ல யாருமில்லாவிட்டால் அந்தியபாஷை பேசக்கூடாதென்றும், அதைவிட எல்லோருக்கும் புரியக்கூடிய மொழியில் இருப்பதால் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும் (14:5) என்று விளக்கியிருக்கும் பவுல், இந்த வசனத்தில் கொரிந்து சபையில் இருப்பவர்கள் ஆராதனை வேளையில் செய்துவரும் செயல்களை விபரிக்கிறார் (description). அவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருப்பவைகளைச் செய்கிறார்கள். அதனால் நீங்கள் செய்வது உங்களுக்கே நல்லதாகப்படுகிறதா? என்று கேட்கிறார் பவுல். அத்தோடு ஆராதனைக்கு வந்திருப்பவர்களுக்கு பக்திவிருத்தி ஏற்படும்படி அதற்கு அவசியமானவற்றை மட்டுமே செய்யவேண்டும் என்கிறார். அதனால் பவுல் இந்த வசனத்தில் நாம் இவற்றைச் செய்ய வேண்டும் (prescription) என்று சொல்லாமல், அன்று சபையில் பலர் செய்து வந்த செயல்களால் எவருக்கும் பக்திவிருத்தி ஏற்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். சபையில் செய்யப்படும் செயல்கள் ஒழுக்கத்தோடும், ஒழுங்கோடும் இருக்கவேண்டுமென்பதால் கொரிந்தியர்களின் தவறுகளை இதன் மூலம் பவுல் திருத்துகிறார் (14:40). ஆகவே, ஒரு வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இலக்கியவகையையும், மொழிநடையையும் ஆராய்ந்தறியாமல் அதற்கு விளக்கங்கொடுக்கக் கூடாது.

இந்த முறையில் மொழிக்குரிய இலக்கண, இலக்கியவகை தெரியாமல் இருந்தால் வேதத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு தவறான போதனைகளை உருவாக்குவதும், அவற்றை நம்பி வளருவதும், தவிர்க்கமுடியாத ஆபத்தாக அமைந்துவிடும். அத்தோடு, பவுல் விளக்கும் அந்நிய பாஷை, தீர்க்கதரிசனம் ஆகியவை முதல் நூற்றாண்டோடு முடிந்துபோன விஷயங்கள். அவை நிறைவுக்கு வந்து, அவற்றின் மூலம் தரப்பட்ட வெளிப்படுத்தல் இன்று எழுத்தில் வேதமாகத் தரப்பட்டிருக்கிறது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

அடியோடு படிப்பறிவில்லாதவர்களுக்கு இலக்கணமோ, இலக்கியவகைகளோ தெரியாதே? அவர்களெல்லாம் வேதத்தை எப்படித் தெளிவாகப் புரிந்துகொள்ளுவது? என்று யாராவது கேட்கலாம். ஏற்கனவே நான் விளக்கியிருப்பதுபோல் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் அடிப்படைச் சத்தியங்களைப் புரிந்துகொள்வதில் அவர்களுக்குப் பிரச்சனை இருக்காது. மேலதிக அறிவை அடைவதற்கு அவர்கள் கவனத்தோடு வேதத்தைப் படிப்பதைத் தவிர வேறுவழியில்லை. தமிழைச் சொந்த மொழியாகக்கொண்டிருந்தபோதும் அதை வாசிக்கும் அனுபவமில்லாமலும், இலக்கண, இலக்கிய ஞானமில்லாமலும் வளர்ந்து வரும் நம்மினத்தில் வேத சத்திய ஞானம் மங்கிக் காணப்படுவதில் எந்த ஆச்சரியமுமில்லை.

இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்கும், ஏனையோருக்குமாகத்தான் கர்த்தர் திருச்சபையை உருவாக்கி அதில் போதகர்களை அமர்த்தியிருக்கிறார். அதுவும் 1 தீமோத்தேயு, தீத்து ஆகிய நூல்களில் விளக்கப்பட்டிருக்கும் இலக்கணங்களைக் கொண்டவர்களாக மட்டுமே போதகர்கள் இருக்கவேண்டும். அத்தகைய போதகர்கள் ஆவிக்குரியவர்களாகவும், கல்வித்தரத்தையும், வேதத்தை விளக்கும் பாண்டித்தியத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். அவர்களுடைய பணியே வேதத்தை அருமையாக மக்கள் புரிந்துகொள்ளும்படி வாராவாரம் பிரசங்கிப்பதும், போதிப்பதும். அத்தகைய நல்ல போதனைகளை அளிக்கும் சபைகளில் இருக்கிறபோது சபையார் எல்லோருமே வேதத்தில் நல்லறிவு பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதம் கிடைக்கிறது. எனவே, தெளிவானதும், ஆவிக்குரியதுமான வேத போதனைகள் தரப்படும் திருச்சபைகளிலேயே ஆத்துமாக்கள் இருந்து வளர வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது.

2 thoughts on “சிந்தித்துப் படிக்கவேண்டிய வேதம்

மறுமொழி தருக