ஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது?

முதல் மனிதனாகிய ஆதாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டான் என்கிறது வேதம். அதாவது, ஆவியும், சரீரமும் கொண்டிருந்து கடவுளோடு நெருக்கமான தொடர்பு வைத்திருக்கவும், கடவுளைப் பிரதிபலிக்கும் வகையிலான தன்மையைக் கொண்டும் ஆதாம் படைக்கப்பட்டிருந்தான் (ஆதி. 1:26-27). அதுவே அவனில் இருந்த கடவுளின் சாயல். அவன் பாவத்தில் விழுந்தபோது அதற்கு என்ன நடந்தது என்பதே கேள்வி. இதுபற்றி எழுதியிருக்கும் ஜோன் கல்வின், ‘தான் படைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்து ஆதாம் வீழ்ந்தபோது கடவுளை நெருங்க முடியாதபடி பிரிக்கப்பட்டான். அவனில் இருந்த கடவுளின் சாயல் முற்றாக மறைக்கப்படாமலோ அல்லது முற்றாக அழிக்கப்படாமலோ போனாலும் அது முழுமையாக கறைபடிந்து போய் அவனுள் இருந்த அனைத்தும் பயப்பட வேண்டியளவுக்கு அங்கவீனமுற்றுப் போயின’ என்கிறார்.

பாவியாக இருக்கும் மனிதன் தொடர்ந்தும் கடவுளின் சாயலிலேயே இருக்கிறான் என்கிறது வேதம்.  கடவுளின் சாயலே மனிதனை ஏனைய படைப்புகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது. கடவுளின் சாயலில் அவன் தொடர்ந்திருப்பதனால்தான் அவன் பாவத்தினால் கடவுளை அறியாமல் இருந்தபோதும், ஏதோ ஒன்றை ஆராதிக்க முயற்சிக்கிறான். கடவுளின் சாயலில் இருக்கும் மனிதனை எவரும் நிந்தித்துப் பேசக்கூடாதென்று வேதம் விளக்குகிறது (யாக். 3:9). இவற்றில் இருந்து பாவம் கடவுளின் சாயலை மனிதனில் இருந்து அகற்றிவிடவில்லை என்பதை அறிந்துகொள்ளுகிறோம். இருந்தபோதும் அந்த சாயல் வீழ்ச்சிக்குப் பிறகு மனிதனில் எந்த வகையில் கறைபடிந்து காணப்படுகின்றது என்பதை அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சரியாக விளங்கிக்கொள்ளுவதற்கும், பிரசங்கிப்பதற்கும் இந்த அறிவு முக்கியம். ஜோன் கல்வின் சொல்லுவதுபோல் பாவத்தில் இருக்கும் மனிதனின் அத்தனைப் பாகங்களும் பயப்பட வேண்டிய அளவுக்கு சீரழிந்து காணப்படுகின்றன. அவனுடைய இருதயம் பாவத்தால் பாழடைந்து காணப்படுகின்றது. அவனுடைய சித்தமும் (Will) பாவத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றது.

‘கடவுளை மனிதன் விசுவாசிக்க வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டிருப்பதால், அவனால் கடவுளை விசுவாசிக்க முடியும்’ என்ற நம்பிக்கை சிலருக்கு இருக்கின்றது. அப்படி அவனால் கடவுளை விசுவாசிக்க முடியாதிருந்தால் தன்னை விசுவாசிக்கும்படி கடவுள் கட்டளையிடுவது நியாயமான செயலல்ல என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இந்த எண்ணம் முதலில் பெலேஜியஸ் (Pelagius) என்ற 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த மனிதனின் மனதில் ஏற்பட்டது. பெலேஜியஸின் இந்தவகையிலான சிந்தனைக்குக் காரணம் ஏதேன் வீழ்ச்சிக்குப் பிறகு மனிதனின் நிலையைப் பற்றி அவன் கொண்டிருந்த நம்பிக்கையே. வீழ்ச்சிக்குப் பிறகு மனிதனுடைய சித்தத்தைப் பாவம் எந்தவகையிலும் பாதிக்கவில்லை என்று பெலேஜியஸ் நம்பினான். அந்தக் காலத்தில் இருந்த இன்னொரு இறையியலறிஞரான ஆகஸ்தீன் பெலேஜியஸின் இந்தப் போதனையை மறுத்து பாவம் மனிதனின் சித்தத்தை முழுமையாகப் பாதித்து கடவுளை அவன் விசுவாசிக்க முடியாத நிலையில் வைத்திருப்பதாக விளக்கினார்.

கடவுளின் சாயலைத் தொடர்ந்து தன்னில் கொண்டிருக்கும் பாவியாகிய மனிதன் தற்போதைய நிலையில் பாவத்தால் பாதிக்கப்பட்ட சித்தத்தைக் கொண்டிருக்கிறான். அவனுடைய சித்தம் வீழ்ச்சிக்கு முன்பு ஆதாம் தன்னில் கொண்டிருந்த சித்தத்தைப் போலல்லாமல் பாவத்தால் கறைபடிந்த, கட்டுப்படுத்தப்பட்ட சித்தமாக இருக்கிறது. பாவ நிலையில் இருக்கும் மனிதன் பாவத்தை மட்டுமே சுதந்திரமாக செய்யக்கூடிய சித்தத்தைத் தன்னில் கொண்டிருக்கிறான். இந்த நிலையில் மனிதனின் சித்தம் சுதந்திரமாக இயங்கவில்லை என்று தவறாக எண்ணிவிடக்கூடாது. அது சுதந்திரமாக இயங்கியபோதும் பாவத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதால் பாவத்தை மட்டுமே சுதந்திரமாக செய்யக்கூடிய நிலையில் இருக்கிறது. அதனால் ஆவிக்குரிய நீதியான காரியங்களை செய்ய முடியாது. இந்த உண்மையைப் பெலேஜியஸினால் புரிந்துகொள்ள முடியவில்லை. மனிதன் தன்னை விசுவாசிக்க வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டிருந்தபோதும் மனிதனால் அவரை விசுவாசிக்க முடியாதபடி அவனுடைய பாவசித்தம் தடைசெய்கிறது என்பதை பெலேஜீயஸினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இன்னுமொரு உண்மையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடவுளின் சாயல் மனிதனில் கறைபடிந்து காணப்பட்டபோதும் மனிதன் தொடர்ந்து மனிதனாகத்தான் இருக்கிறான். அவன் தன்னுடைய மானுடத்தை இழந்து நிற்கவில்லை. மனிதனை கடவுள் ஆரம்பத்தில் பொறுப்புள்ளவனாகப் (Responsible) படைத்தார். தன்னுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு தனக்கு பதிலளிக்க (accountable) வேண்டியவனாகப் படைத்தார். ஆதாம் அந்தப்படியே கடவுளின் சித்தத்தைப் பூரணமாகச் செய்து அவருக்குக் கட்டுப்பட்டு இருந்தான். அவனுடைய பாவம் அவனை முழுமையாகப் பாதித்தபோது, கடவுளுக்குப் பொறுப்புள்ளவனாக அவன் இருக்க வேண்டிய நிலைமையை அது இல்லாமலாக்கிவிடவில்லை. பாவ நிலையில் அவன் தொடர்ந்தும் கடவுளுக்கு கட்டுப்பட வேண்டியவனாகவும், கடவுளுக்கு பதிலளிக்க வேண்டியவனாகவும் இருக்கிறான். பாவத்தால் பாதிக்கப்பட்டு அவன் இழந்தது கடவுளின் வார்தைக்குக் கீழ்ப்படியக்கூடிய ஆத்மீக வல்லமையையே (moral ability); கடவுளை விசுவாசிக்க வேண்டிய பொறுப்பை அல்ல (responsibility). கடவுளுக்கு அவன் கீழ்ப்படிய வேண்டிய கடமை தொடர்ந்து இருந்தபோதும் அந்தக் கடமையை நிறைவேற்றக்கூடிய வல்லமையை அவன் இழந்து நின்றான். இரட்சிப்புக்குரிய, ஆவிக்குரிய காரியங்களை செய்யும் வல்லமை அவனுக்கு இல்லாமலிருக்கிறது என்று 1689 விசுவாச அறிக்கை விளக்குகிறது (அதி. 9, சுயாதீன சித்தம்). இதைப் பெலேஜியஸ் புரிந்துகொள்ளவில்லை. பெலேஜியஸைப் போலவே அநேகர் இன்றும் இதில் விளக்கமில்லாமல் இருக்கிறார்கள்.

மனிதன் மனந்திரும்ப வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிடுகிறார் (அப்போஸ்தலர் 2:38). ஆனால், அந்தக் கட்டளையை நிறைவேற்றும் வல்லமை அவனுக்கு இல்லை (2 தீமோ. 2:25-26). கிறிஸ்துவை அவன் விசுவாசிக்க வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிடுகிறார் (அப்போஸ்தலர் 16:31). அதைச் செய்ய வேண்டிய பொறுப்பு மனிதனுக்கு இருந்தபோதும் அதைச் செய்வதற்கான வல்லமை அவனுக்கு இல்லாமலிருக்கிறது (யோவான் 6:37, 40, 44). இந்த ஆவிக்குரிய வல்லமையையே கடவுளின் சாயலில் இருக்கும் மனிதன் இழந்து நிற்கிறான். மனிதன் தன்னுடைய இந்த நிலைக்காக கடவுளைக் குறைகூற முடியாது. உதாரணத்திற்கு குடித்துவிட்டு கார் ஓட்டுகிற ஒருவனை எடுத்துக்கொள்ளுவோம். டிராபிக் போலீஸ் அவனைப் பிடித்து வீதி விதிகளை மீறியதற்காக அவன் மீது வழக்கு பதிவுச் செய்தால் போலீஸை அவன் குறைகூற முடியுமா? ‘நான் குடித்திருப்பது உனக்குத் தெரியவில்லையா? அந்த நிலையில் நான் செய்த காரியத்துக்கு நான் பொறுப்பில்லை. எனக்கு நீ என் மீது வழக்குப் போட முடியாது’ என்று அவன் குறைகூற முடியுமா? முடியவே முடியாது. ஏனெனில், குடியில் நிலை தடுமாறி நிற்பதற்கு அவன்தான் பொறுப்பு. அத்தோடு, குடித்திருக்கும் நிலையில் வீதி விதிகளை மீறியதற்கும் அவன்தான் பொறுப்பு. இந்த இரண்டு மீறுதல்களுக்கும் அவனே பொறுப்பு. இதே வகையில்தான், பாவத்தில் விழுந்ததற்கும் மனிதனே பொறுப்பு, பாவ நிலையில் அவன் செய்து வருகின்ற பாவங்களுக்கும் அவனே பொறுப்பு. கடவுள் சகல அதிகாரத்தோடு மனந்திரும்பு என்று மனிதனைப் பார்த்து சுவிசேஷத்தின் மூலம் அழைக்கிறபோது அதைக் கேட்டு, சிந்தித்து பொறுப்போடு நடந்து மனந்திரும்ப வேண்டிய கடமை மனிதனுக்கு இருக்கிறது. அவன் மனந்திரும்ப மறுப்பானானால், அதை அவன் சிந்தித்துப் பார்த்து தன்னுடைய பாவ நிலையில் சுயாதீனமாக நடந்து கர்த்தரின் கட்டளையை நிராகரிக்கிறான். அந்த செயலுக்கு அவனே முழுப் பொறுப்பு. தன்னுடைய செயலுக்கு அவன் கடவுளை குறைகூற முடியாது.

மறுமொழி தருக