கருத்துச் சுதந்திரமும் அச்சுறுத்தலும்

தமிழகத்திலும், இந்தியாவின் வேறு சில இடங்களிலும் சமீப காலத்தில் நிகழ்ந்திருக்கும் நிகழ்ச்சிகள் கருத்துச் சுதந்திரத்தைப்பற்றிப் பலரையும் சிந்திக்க வைத்திருக்கின்றன. பெருமாள்முருகன் என்ற தமிழ் எழுத்தாளர் நான்கு வருடங்களுக்கு முன் எழுதிய ஒரு நாவல் ஒரு குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்த பெண்களை அவமானத்துக்குள்ளாக்குகிறதென்று சிலர் கண்டனம் செய்து, இறுதியில் அந்த எழுத்தாளர் தான் இனி எழுதப்போவதில்லை என்று முடிவுகட்ட வைத்து, எழுத்துலகில் இருந்தே காணாமல் போகவைத்திருக்கிறார்கள். இப்போது சொந்த ஊரையும்விட்டு வேறு ஊருக்கு குடும்பத்தோடு வேலைமாற்றம் கேட்டுப்போகவிருக்கிறார். உலகத்திலேயே இத்தகைய முடிவெடுத்த எனக்குத் தெரிந்த ஒருவர் இவர் மட்டுமே. தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக இவர் இந்த முடிவை எடுத்திருந்தபோதும் அத்தகைய முடிவுக்கு வரும்படி அவர் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறார் என்றே பலரும் கருதுகிறார்கள்.

இதேபோல் வேறு சில எழுத்தாளர்களுக்கும் அவர்களுடைய எழுத்துக்கள் மேல் இருக்கும் கருத்துவேறுபாட்டால் கண்டனங்களும், பயமுறுத்தல்களும் உருவாகியிருக்கின்றன. சிலர் மறைந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு பத்திரிகை ஆசிரியைக்கு இந்நிலைமை ஏற்பட்டு அந்தப் பத்திரிகையும், அலுவலகமும் மூடப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்? என்று கேட்டுப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.

முதலில், மனிதனுக்கு இன்றைக்கு சகிப்புத்தன்மை இல்லாமல் போயிருக்கிறது. காந்தி தன் வாழ்க்கையில் அதைப் பெரிதும் கடைப்பிடித்திருக்கிறார். காந்தி பிறந்த மண்ணில் இன்று சகிப்புத் தன்மை அருகிக் காணப்படுகிறது. எடுத்ததற்கெல்லாம் போராட்டம் செய்வதும், கண்டனம் செய்வதும், மிரட்டுவதும், வன்முறையில் ஈடுபடுவதும் சர்வ சாதாரணமாகியிருக்கிறது. ஒரு நூலாக இருந்தாலும் சரி, சினிமாவாக (PK, MOG) இருந்தாலும் சரி சாதி, மத, அரசியல் அடிப்படையில் அவற்றை விமர்சனம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. அது எல்லோருக்கும் இருக்கும் உரிமை. எழுதுகிறவனுக்கு எழுத உரிமை இருப்பதுபோல வாசிக்கிறவர்களுக்கு அதை விமர்சனம் செய்ய உரிமை இருக்கிறது. ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்து வழங்குவதில் ஆட்சேபனை இருக்க முடியாது. இதில் எல்லை மீறிப்போகும்போதுதான் பிரச்சனை உருவாகிறது. ஒருவருடைய கருத்தோடு நமக்கு உடன்பாடில்லை என்பதற்காக அவரை அச்சுறுத்துவதும் (Intimidation), வன்முறையில் ஈடுபடுவதும் எல்லை மீறிய செயல்களே. சமுதாயம் சகிப்புத்தன்மையை இழந்து போயிருப்பதுதான் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு காரணம். இது உலக சமுதாயங்களிலும் இருந்து வருகிற ஒரு பிரச்சனை.

தீவிரவாதமும் (Extremism) இதற்கு ஒரு காரணம். ஒரு கருத்தை பலவந்தத்தினால் நிலைபெறச் செய்யவும், அதற்கு எதிர் விமர்சனம் தருபவர்களை மிரட்டி அவர்களுக்கு சரீர ஆபத்தை ஏற்படுத்துகின்றதுமான தீவிரவாதம் இன்றைக்கு தலைதூக்கியிருக்கிறது. ‘ஐசிஸ்’ இதற்கு நல்ல உதாரணம். உலக நாடுகள் இன்று இதை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. தீவிரவாதம் எங்கு தலைதூக்கினாலும் அங்கு கருத்துச் சுதந்திரத்துக்கு இடமிருக்க முடியாது. பாசிசத்தைப் (Fascism) போலத்தான் தீவிரவாதமும். இத்தகைய ஏதேச்சாதிகாரத்தை தலிபான் ஆப்கானிஸ்தானில் அறிமுகப்படுத்தியது. இன, மத, சாதி பற்றிய விஷயங்களில் கருத்துச் சுதந்திரம் இல்லாமலிருப்பதற்கு இதுவே காரணம். இனவெறியும், சாதி வெறியும், மத வெறியும் சமுதாயத்துக்குப் புதிதல்ல. இதையெல்லாம் காலங்காலமாக சமுதாயம் கண்டுவந்திருக்கிறது. இன்றைக்கு அது ஒருபடி மேலே போய் எழுத்தை ஆக்கிரமித்திருக்கிறது. எழுத்துச் சுதந்திரத்துக்கு எதிரியாக மாறியிருக்கிறது. சாதி, மத, இனப் பிரச்சனைகளுக்கு எதிராகப் பழங்கால எழுத்தாளர்களும், கவிஞர்களும் வெளிப்படையாகவே குரல் கொடுத்திருப்பது நமக்குத் தெரியாமலில்லை. சித்தர் பாடல்களையும், பாரதியாரையும், பாரதிதாசனையும், இராமலிங்க அடிகளாரையும் இவர்கள் விட்டுவைத்திருப்பது ஏன் என்று தெரியவில்லை? பெரியாரும், அண்ணாத்துரையும் சாதியையும், மதத்தையும் சும்மாவிட்டார்களா? இன்றும் அச்சில் இருக்கும் அவர்களுடைய எழுத்துக்களை இவர்கள் ஏன் தொடவில்லை?

Madhorubagan - 3Dஅரசியலும் இதற்கு முக்கிய காரணம். அரசியல்வாதிகள் சுயநல லாபத்திற்காக எதையும் அரசியலாக்கிவிடுவது நமக்குத் தெரிந்ததுதான். இந்த விஷயத்திலும் அது நிச்சயம் நிகழ்திருக்கிறது. இந்துத்துவ அரசியல் மறுபடியும் தலைதூக்கியிருக்கின்ற வேளையில் அதில் குளிர்காய முற்பட்டிருக்கும் சாதி அமைப்புக்களான சிறுபான்மைக் கூட்டத்தின் அரசியல் லாபத்திற்கு பெருமாள்முருகன் பலியாகியிருக்கிறார். எழுத்துலகம் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது; கருத்துச் சுதந்திரமும், தனிமனித சுதந்திரமும் கவிழ்க்கப்பட்டிருக்கிறது. இதெல்லாம் நிகழ்கிறபோது அங்கே மெய்யான ஜனநாயகத்திற்கு இடமில்லாமல் போகிறது.

இன்டர்நெட்டும் இன்னொரு காரணம். முன்பெல்லாம் எதையும் எழுத்தில் வடிக்க பத்திரிகை ஒத்துக்கொள்ள வேண்டும். பணமிருந்தால் மட்டுமே எழுதுவதை வெளியிட முடியும். இப்போது இன்டர்நெட் எவரும் எதையும் எழுத, வெளியிட, கூட்டம் சேர்க்க வழிவகுத்துவிட்டது. அதனால், கருத்து தெரிவிக்கிறோம் என்று கண்டபடி எழுதுவதும், நிந்தனை செய்வதும், மற்றவர்களை உசுப்பிவிடுவதும் அதிகரித்து விட்டது. இத்தோடு டுவிட்டரும், வட்ஸ்செப்பும் வேறு. இலக்கியமே அறியாதவர்களுக்கும், அதில் அக்கறை காட்டாதவர்களுக்கும், குறைந்ததொகையினரே வாசித்திருக்கின்றதுமான மாதொருபாகன் எப்படிப் பிரச்சனையானது? இன்டர்நெட் இதற்கு ஒரு காரணம்.

The Lost Gospel - 3Dசமீபத்தில் சென்னை விமான நிலையத்தின் புத்தகக் கடையில் ஒரு ஆங்கில நூல் கண்ணெதிரில் எங்கும் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன். ஹொல்கர் கேர்ஸ்டன் என்பவர் எழுதிய ஆங்கில நூலான அதற்குத் தலைப்பு, ‘இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்’ என்பது. அதை வாங்கி வாசிக்கலாமா? என்ற யோசனை வந்தது, கூடவே அப்படி அதில் என்னதான் புதிதாக இருக்கப் போகிறது? என்ற கேள்வியும் எழ, அதை வாசிக்க வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்தேன். அதை வாசித்து, அதற்கு எதிர்க்கருத்து தெரிவித்து ஒன்றும் பெரிதாக ஆகப்போவதில்லை. இயேசு இஸ்ரவேலில் வாழ்ந்து அங்கேயே மரித்து உயிர்த்தெழுந்தார் என்பது வேதமும், வரலாறும் தெரிவிக்கும் உண்மை. உண்மைக்குப் புறம்பாக எத்தனை ஆதாரங்களையும் எவரும் எடுத்து வைக்கலாம். அதனால் உண்மை மாறிவிடப்போவதில்லை. தோமா இந்தியாவுக்கு வந்தார் என்பதைப் போன்ற இன்னுமொரு முயற்சியாகத்தான் இதை நான் பார்க்கிறேன். இப்படியொருவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றி நூல் எழுதிவிட்டாரே என்று நாம் ஆத்திரப்படலாமா? உணர்ச்சிவசப்பட்டு அத்துமீறிய செயல்களில் ஈடுபடலாமா? இயேசு மகதலேனா மரியாளை திருமணம் செய்து, இரண்டு பிள்ளைகளோடு வாழ்ந்தார் என்றுகூட அப்பட்டமாக The Lost Gospel என்ற நூலில் எழுதியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுவது கிறிஸ்தவர்களுக்கு அழகல்ல. இந்தக் கருத்துக்களை மறுத்து அறிவுபூர்வமாக ஆதாரத்தோடு பதில் சொல்ல நமக்கு முழு உரிமையிருக்கிறது. சகிப்புத் தன்மையோடு அவற்றை நாம் அனுக வேண்டும். சகிப்புத்தன்மை என்பது ஒரு விஷயத்தோடு ஒத்துப்போவதோ அல்லது வாய்மூடி சும்மா இருந்துவிடுவதோ அல்ல; அதற்குப் பெயர் தேவநிந்தனை. நமக்குத் தவறாகப்படுவதை வேதபூர்வமாக மட்டும் எதிர்கொண்டு எதிராளிகளை அன்பால் சுவிசேஷத்தின் மூலம் வெல்ல முயற்சிப்பதே சகிப்புத்தன்மை. இங்கே அச்சுறுத்தலுக்கோ, வன்முறைக்கோ இடமிருக்கக்கூடாது.

ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்தை வழங்கும்போது தனி மனிதனின் மானத்துக்கு மதிப்புக்கொடுக்க வேண்டும். தேவ சாயலோடு இருக்கும் மனிதனை தனிப்பட்டவிதத்தில் நிந்திக்கக்கூடாது. தனி மனிதனின் சொந்த வாழ்க்கையை தெருவுக்கு கொண்டுவரும் இழிசெயல்களில் இறங்கக்கூடாது; அச்சுறுத்தலில் ஈடுபடக்கூடாது. அவனுடைய குடும்பத்தைத் தொடக்கூடாது. அப்படிச் செய்கிறவர்கள் தங்களுடைய தடுமாற்றத்தையும், பலவீனத்தையுமே வெளிப்படுத்துகிறார்கள். ஒரு கருத்துக்கு எதிர் விமர்சனமளிக்கும்போது நிலைதளும்பாமல் இருக்கும் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். இது இன்றைக்கு சமுதாயத்தில் அருகி வருவது நமக்குப் புரிகிறது. ‘இன்னா செய்யாமை’ என்ற திருவள்ளுவரின் அதிகாரத்துக்கு விளக்கங்கொடுத்துக்கொண்டே ஒருவரையொருவர் பப்ளிக்கிலும், மீடியாவிலும் வாயாரத்திட்டிவரும் மனிதர்களை நம் சமுதாயம் கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்கள் இத்தகைய காரியங்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. கிறிஸ்துவை அறியாதவர்கள் பாவத்தினால் செய்துவிடும் செயல்களை, பாவத்தில் இருந்து விடுதலை அடைந்தவர்கள் தொடர்ந்து செய்வது அவர்களுடைய பலவீனத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களுடைய கிறிஸ்தவ அனுபவத்தையே கேள்விக்குறியாக்கி விடும்.

Breaking India - 3Dஇந்தத் தளத்தில் நான் இதற்கு முன் ‘உடையும் இந்தியா’ என்ற நூலை விமர்சித்து எழுதியிருந்தேன். அந்த நூல் அதிர்ச்சியளிக்கும் நூலாக இருந்தபோதும், அதன் கருத்துக்களும், முடிவுகளும் எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத வெறும் மனக்கணிப்பாக இருந்தபோதும், உணர்ச்சிவசப்படாமல் நூலின் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்தளித்திருக்கிறேன். அதை மட்டுமே நம்மால் செய்ய முடியும்; செய்ய வேண்டும். அதற்கு மேல் போவது மனுஷத் தன்மையல்ல. பயமுறுத்தலிலும், பலவந்தத்திலும் ஈடுபடுவது கிறிஸ்தவர்கள் செய்கிற காரியமல்ல.

பெருமாள் முருகன் இல்லாததை சொல்லிவிடவில்லை. இன்றைக்கும்கூட நம்மினத்தில், ஏன் கிறிஸ்தவர்கள் மத்தியிலும்கூட (அதுதான் வெட்கப்பட வேண்டிய விஷயம்), திருமணமான பெண் ஒருவருடத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளாவிட்டால், ஏன் பெற்றுக்கொள்ளவில்லை? என்று கேட்டுக் குடைந்தெடுப்பது வழக்கமாக இருக்கிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணின் நிலை இன்றைக்கும் அடிப்படையில் மாறவில்லை. வாரிசு வேண்டும், முக்கியமாக ஆண் குழந்தை வேண்டும் என்று பெண்ணைப் பிய்த்தெடுப்பது இன்றும் தொடராமலா இருக்கிறது? இதெல்லாம் தவறு என்று சுட்டிக்காட்டி இலக்கியம் படைத்தால் அதில் என்ன தவறு? சமுதாயத்தின் குறையைச் சுட்டிக்காட்டி சிந்திக்கவைக்க முயலுகிறான் எழுத்தாளன். அவனுடைய கருத்துச் சுதந்திரத்தில் கைவப்பது ஒரு சமுதாயத்துக்கு நன்மை தராது; அதன் வளர்ச்சிக்கு உதவாது. பாரதியைப் பாராட்டவும், சகிக்கவும் தெரிந்தவர்களுக்கு பெருமாள் முருகன் வேம்பானது ஏன்?

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக