எதை, எப்படி வாசிப்பது?

Reading 2

‘புஸ்தகங்களையும், விசேஷமாக தோற்சுருள்களையும் நீ வருகிறபோது எடுத்துக்கொண்டு வா’ என்று பவுல் சிறையிலிருந்து தீமோத்தையுவுக்கு எழுதிய வார்த்தைகளை வைத்து ஓர் ஆக்கத்தை எழுதிய நண்பர் வென்டூரா இந்த வசனங்களுக்கு ஸ்பர்ஜன் தந்திருக்கும் விளக்கத்தை நினைவுறுத்துகிறார்.

‘அப்போஸ்தலனாக இருந்தபோதும் அவர் வாசிக்க வேண்டும் . . . தேவ ஆவியின் வழிநடத்தலைப் பெற்றிருந்தபோதும் பவுல் புத்தகங்களை நாடினார்! முப்பது வருடங்களுக்குக் குறையாமல் பிரசங்க ஊழியத்தைச் செய்திருந்தபோதும் அவருக்கு இன்னும் புத்தகங்கள் தேவையாக இருந்தது! நேரடியாக ஆண்டவரைக் கண்ணால் கண்டிருந்தபோதும் அவருக்குப் புத்தகங்கள் தேவையாக இருந்தது! மற்ற மனிதர்களைவிட அவருக்குப் பரந்த அனுபவம் இருந்தபோதும் புத்தகங்களை அவர் தேடினார்! சாதாரண மனிதர்களோடு பகிர்ந்துகொள்ளக்கூடாத மூன்றாம் உலகத்தைத் தரிசிக்கும் அனுபவம் அவருக்குக் கிடைத்திருந்தபோதும் புத்தகங்கள் அவருக்கு அவசியமானதாக இருந்தது! தீமோத்தேயுவுக்கும் ஒவ்வொரு பிரசங்கிக்கும் அவர் சொல்லுகிறார், ‘வாசிப்புக்கு உங்களை ஒப்புக்கொடுங்கள்.’ (2 தீமோ 4:13 வசனத்திலிருந்து ஸ்பர்ஜன் செய்த ஒரு பிரசங்கத்தின் பகுதி).

வாசிப்பு சமூதாயத்தின் சகல தரப்பினருக்கும் அவசியமானது. சமுதாயத்தை சிந்திக்க வைப்பது, உயர்த்துவது வாசிப்பு. கிறிஸ்தவர்கள் அனைவரும் வாசிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். வாசிப்புப் பயிற்சியோ அதற்கான ஆழமான போதனைகளோ இல்லாத கல்விமுறை அமைப்பின் கீழ் நம்மவர்கள் கற்று வளர்ந்து வந்திருப்பதால் வாசிப்பைப் பற்றிய அரிச்சுவடி விளக்கத்தில் இருந்து இந்த ஆலோசனைகளை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.

இந்த ஆலோசனைகள் கிறிஸ்தவ நூல்கள் வாசிப்பதைப்பற்றியது மட்டுமல்ல. ஆவிக்குரிய வளர்ச்சிக்கு கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ நூல் வாசிப்பில் அதிக அக்கறை காட்டவேண்டுமென்பதற்காக இந்த ஆக்கம் எழுதப்பட்டிருக்கிறது என்றாலும், கிறிஸ்தவ வாசகன் பரவலான வாசிப்புப் பயிற்சியைக் கொண்டிருப்பது அவசியம். அவனுடைய சிந்தனை கிறிஸ்தவ வேதத்தை அடிப்படையாகக் கொண்டு சகலத்தையும் ஆராயும் சிந்தனையாக இருக்க வேண்டும். கிறிஸ்தவ வாசகனுக்கு வேத அறிவு மட்டுமல்லாமல் பொது அறிவு, மொழி, இலக்கியம், அறிவியல், சமூகம் ஆகியவற்றிலும் பரிச்சயம் அவசியம். ஆகவே, ஆரோக்கியமான வாசிப்பைப்பற்றியதாக இந்த ஆலோசனைகள் அமையும்.

1. வாசிப்பு என்றால் என்னவென்பதை அறிவுபூர்வமாக உணர்ந்திருக்க வேண்டும்.

வாசிப்பு ஒரு கலை. நமக்கு மொழி தெரிகிறதென்பதற்காக வாசிப்பு சும்மா வந்துவிடாது. வயலினைக் கையில் வைத்திருக்கிற அனைவராலும் அதை வாசித்துவிட முடிகிறதா? அதேபோல ஒருவருக்கு மொழி தெரிந்திருக்கிறது, அவர் கையில் புத்தகம் இருக்கிறது என்பதற்காக அவர் வாசிக்கிறார் என்று அர்த்தமில்லை. வாசிப்பு, பழக்கத்தில் இருக்க வேண்டிய ஒரு முயற்சி. அதனால்தான் மேலைநாடுகளில் பெற்றோர்களும், கல்வி ஸ்தலங்களும் பிள்ளைகளுக்கு மிகச்சிறுவயதிலேயே வாசிப்பைக் கற்றுக்கொடுக்கிறார்கள்; அவர்களை வாசிக்கத்தூண்டி வாசிக்க வைக்கிறார்கள். வீட்டில் ஆரம்பித்து பள்ளியில் உரம்போட்டு வளர்க்கப்பட்டிருக்காத நிலையில் வாசிப்பு என்பது எவருக்கும் இயற்கையாகவும், சுலபமாகவும் வந்துவிடாது.

வாசிப்பதற்கு ஓரளவுக்கு மொழியறிவு அவசியம். பேசுவதற்கு உதவும் பேச்சுத் தமிழ் மட்டும் வாசிப்புக்குப் போதுமானது என்று எண்ணிவிடக்கூடாது. மலேசியாவிலும், தமிழகத்திலும் ஒரு பிரச்சனையைக் கவனித்திருக்கிறேன். சொந்த மொழியென்று ஒன்றிருந்தும் கல்வி கற்பது வேறொரு மொழியாக இருப்பதால் எந்த மொழியிலும் முறையான, முழுமையான பயிற்சி இல்லாமல் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். தமிழில் வாசிப்பதும் எழுதுவதும் அநேகருக்கு அங்கு பிரச்சனையாக இருக்கிறது. இதனால் அவர்கள் மத்தியில் வாசிப்பு பின்தங்கிக் காணப்படுகிறது. இந்த நிலைமையை தமிழகத்திலும் காணலாம். கல்லூரிக்குப் போகும்வரை தமிழில் படித்துவிட்டு, கல்லூரியில் மொழி தெரியாமலேயே ஆங்கிலத்தில் படிக்க ஆரம்பிக்கும் வித்தை இங்கு நிகழ்கிறது. இதெல்லாம் அறைகுறையான மொழியறிவைக் கொண்டிருக்க மட்டுமே உதவும்.

வாசிப்பதற்கு வார்த்தைகளில் பரிச்சயம் இருக்கவேண்டும். நூலில் காணப்படும் வார்த்தைகளுக்குப் பொருள் தெரியாவிட்டால், அந்த வார்த்தைகளில் பரிச்சயம் இல்லாவிட்டால் வாசிப்பு தடைப்படும். தமிழ்மொழி தாய்மொழியாக இருப்பவர்களும் மிகக்குறைந்தளவான வார்த்தைகளையே பேச்சிலும் எழுத்திலும் கையாளுகிறார்கள். பொதுவாகவே நாம் கவனிக்கக்கூடிய ஒரு விஷயம் தமிழில் இருக்கும் கிறிஸ்தவ நூல்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ‘வேதக் கிறிஸ்தவ மொழி நடை.’ தமிழ் வேதத்தை ஒத்த நடை அது. அதற்குக் காரணம் தமிழ் இலக்கிய வாசிப்பின்மையும், வார்த்தைப் பஞ்சமும்தான். சமீபத்தில் மறைந்த எழுத்து வேந்தனாகிய ஜெயகாந்தன் பள்ளிக்குப் போகாவிட்டாலும் ஐந்து வயதில் தமிழில் சரியாக எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டார். இலக்கியவாதியான ஜீவா அவரைத் தமிழைப் பிழையில்லாமல் எழுதவும், தமிழிலக்கியங்களை வாசிக்கவும் வைத்தார். ஜெயகாந்தனின் ஆரம்ப வாசிப்பு நூல்களாக பழந்தமிழ் இலக்கியங்களும், பாரதியாரின் கவிதைகளும் இருந்திருக்கின்றன. வில்லியம் கேரி வாலிப வயதில் கிரேக்கத்தையும், இலத்தீன் மொழியையும் கற்றுக்கொள்ள அது சம்பந்தமான இரு சிறு நூல்களைத் தேடிப்பெற்று வார்த்தைகளுக்கு கஷ்டப்பட்டுப் பொருளறிந்து மனனம் செய்து வந்திருக்கிறார்.

வாசிப்பு நுனிப்புல் மேய்வதாக இருக்கக்கூடாது. அதைத்தான் அநேகர் வாசிப்பாக இன்று கருதி வருகிறார்கள். நுனிப்புல் மேயும் வாசிப்பில் ஈடுபடுகிறவர்கள் வெகுவேகமாக ஒரு நூலை மேற்போக்காக மேய்ந்துவிட்டுப் போயிருக்கிறார்களே தவிர உண்மையில் ஆழமான, ஆரோக்கியமான வாசிப்பில் ஈடுபடவில்லை. வாசித்ததைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள் என்று கேட்டால் போதும் அவர்களுடைய வாசிப்பின் அருமை தெரிந்துவிடும்.

உண்மையான வாசிப்பு ஆழமானதும், காத்திரமானதும், தீர்க்கமானதுமாகும். அத்தகைய வாசிப்பு அக்கறையுள்ள வாசிப்பாக இருக்கும். ஒரு தடவை மட்டும் நூலை வாசிப்பதோடு அது நின்றுவிடாது. வாசித்த நூலின் பொருள், நோக்கம், ஆழம், இலக்கு எல்லாவற்றையும் தீர்க்கமாக அறிந்துகொள்ளாதவரையில் எதையும் மெய்யான வாசிப்பாகக் கருத முடியாது. மெய்யான வாசிப்பு நூலின் பல்வகைப் பரிமாணங்களையும் புரிந்துகொள்ளப் பார்க்கும். அத்தகைய வாசிப்பு வாசகனை உயர்த்தும்; சிந்தனையாளனாக்கும். அது ஒரு நூலோடு நின்றுவிடாமல் மேலும் நூல்களை நாடிப் போகும்படித் தூண்டும்; நூல்களுக்காக ஏங்கும், அவற்றைத் தேடும் – பசியோடிருப்பவன் உணவைத் தேடி அலைவதைப்போல.

2. வாசிப்புக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும்.

இதை எழுதுகிறபோதே இன்னுமொரு பிரச்சனை, அதுவும் நம்மினத்தில் இருக்கும் பிரச்சனை நினைவுக்கு வராமலில்லை. அது நேரத்துக்கு மதிப்பளிக்காத நமது பண்பாட்டுக் குறை. நம்மினத்தில் அது கலாச்சாரமாகவே வளர்ந்துவிட்டிருக்கிறது. அது நிச்சயம் உங்களிடத்திலும் இருக்காமலிருக்காது. நம்முடைய ஆண்டவருடைய இறையாண்மையையே அசட்டை செய்கிற பண்பாடு நம்முடையது. நேரத்தை நமக்குத் வசதிப்பட்டவிதத்தில் மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். அதை ‘மீதப்படுத்த’ வேண்டும் என்ற எண்ணமே நமக்கு துப்புரவாகக் கிடையாது. முதலில் இந்த விஷயத்தில் உங்களுடைய பண்பாட்டுச் சீரழிவை சரிப்படுத்தியாக வேண்டும்.

வாசித்துப் பழகியவர்களுக்கு இது பெரிய காரியமல்ல. அவர்கள் இதற்காக நேரத்தை ஒதுக்குவதோடு கிடைக்கும் நேரத்தையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளுவார்கள், பஸ்ஸிலும், டிரெயினிலும், ஆபிஸ் ஓய்வு நேரத்திலும், படுக்கைக்கு போகுமுன்னும் என்று எல்லா சமயங்களையும் பயன்படுத்திக்கொள்ளுவார்கள். வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களுக்கு இது பெரிய விஷயந்தான். ஆகவே, ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை இதற்காக ஒதுக்கியாக வேண்டும். சோம்பேரித்தனத்திற்கு முடிவுகட்டவேண்டும். குறைந்தளவு ஒரு மணி நேரத்தையாவது இதற்காக ஒதுக்க வேண்டும். வாசித்தே பழக்கமில்லாதபடியால் அதை ஆரம்பிக்கும்போது அவர்களால் நிதானிப்போடு மனதைக் கட்டுக்குள்வைத்து வாசிப்பில் கவனம் செலுத்துவதென்பது இலகுவாக இருக்காது. இதற்காக ஒதுக்குகின்ற நேரமும் வேறு எதனாலும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

3. நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்க வேண்டும்

நல்ல கிறிஸ்தவ நூல்கள் என்கிறபோது, வேதபூர்வமாக எழுதப்பட்ட, வேதத்தைத் தெளிவாக, பிழையற்று விளக்குகிற, வேத சத்தியங்களைப் பலகோணங்களில் எந்தவித வேதமுரண்டாடுமின்றி விளக்குகிற நூல்களைத்தான் குறிப்பிடுகிறேன். நம்மினத்தில் அத்தகைய நூல்கள் அதிகமில்லை என்பது நமக்குத் தெரியாமலில்லை. ஆனால், இருப்பவற்றைத் தேடித்தேடி வாசிக்க வேண்டும்.

நூல்களைத் தெரிவு செய்கிறபோது மூன்று முக்கிய அம்சங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும். முதலில், அதை வெளியிட்டிருப்பவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். வெளியீட்டாளர் அல்லது பதிப்பகத்தார் தங்களுடைய கோட்பாடுகளையே எழுத்தில் பரப்புவார்கள். வாட்ச் டவர் நிறுவனம் (யெகோவாவின் சாட்சிகள்) கிறிஸ்தவம் என்ற போர்வையில் தன்னுடைய வேதபூர்வமற்ற போதனைகளை வெளியிட்டு வருகின்றது. அவர்களுடைய நூல்கள் வெளிப்பார்வைக்கு கிறிஸ்தவ நூல்கள் போன்று தெரியும். யார் வெளியிட்டிருப்பது என்று தேடிப்பார்த்தால் அது வாட்ச் டவர் வெளியீடாக இருக்கும். அவற்றைத் தவிர்க்கத் தெரிந்திருக்க வேண்டும். பாலை விஷமாக்க ஒரு துளி விஷம் போதுமானதுபோல், நம் இருதயத்தைக் கெடுக்க ஒரு நூல் போதுமானது.

இரண்டாவதாக, நூலை எழுதியவரைப்பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அவருடைய பின்புலத்தை அறிந்துகொள்ளுவது நல்லது. கிறிஸ்தவரா, அப்படியானால் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்? என்ன செய்கிறார், எத்தகைய போதனைகளைப் பின்பற்றுகிறார்? என்பவற்றைத் தெரிந்துகொள்ள முயல வேண்டும். ஆங்கில நூல்களில் நூலாசிரியரைப்பற்றிய குறிப்புகள் தரப்பட்டிருக்கும். தமிழில் ஒன்றும் இருக்காது. எந்த எழுத்தாளரும் தங்களுடைய நம்பிக்கைகளையே நூல்களில் வெளியிடுவார்கள். அவர்களைப்பற்றித் தெரிந்துகொள்வது அவர்கள் என்ன எழுதியிருப்பார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை நம்பாத ஒருவர் அதற்கு எதிரான விளக்கத்தைத்தான் தன் நூலில் தந்திருப்பார். காலக்கூறு போதனையைக் (Dispensationalism) கொண்டிருக்கும் ஒருவர் அதன் அடிப்படையிலேயே, இரட்சிப்பைப் பற்றியும், சபையைப்பற்றியும் விளக்குவார் (டார்பி, ஸ்கோபீல்ட் போன்றோர்). இதையெல்லாம் அறிந்திருந்து வாசிக்க வாசகனுக்கு ஓரளவுக்கு இறையியல் ஞானம் இருப்பது அவசியம். இதற்கு நம்பத்தகுந்த எவரிடமும் நூல்கள் பற்றிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, நூலைப்பற்றி நூலுக்குள்ளும், நூலுக்கு வெளியிலும் வந்திருக்கும் விமர்சனங்களை (reviews) ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆவிக்குரிய கிறிஸ்தவ நூல்களைப்பற்றிய இத்தகைய விமர்சனங்கள் தமிழில் காண்பதரிது. வாசிப்பு தரமான நிலையில் இல்லாததால் அத்தகைய விமர்சனக் குறிப்புகளும் அரிதாகக் காணப்படுகின்றன. ஆங்கிலத்தில் அத்தகைய நூல் விமர்சனங்கள் அதிகமாக இருக்கின்றன. நூல் விமர்சனம் என்கிறபோது திருமறைத்தீபம் இணைய தளத்தில் ‘படித்ததில் பிடித்தவை’ பகுதியில் வந்துகொண்டிருக்கும் விமர்சனங்களைப் போன்றதைத்தான் குறிப்பிடுகிறேன். இத்தகைய விமர்சனங்கள் வாசிக்குமுன் நூலைப்பற்றித் தெரிந்துகொள்ள உதவுகின்றன.

ஆவிக்குரியவனாக இருந்து உலகந்தெரியாதவனாக இருக்கக்கூடாது. அப்படி அநேகர் இருந்து வருகிறார்கள். உலகத்தைப்பற்றிய வேதஞானமில்லாததால் ஏற்படும் குறைபாடு இது. உலகத்தை சாத்தானுடையதாக மட்டும் பார்க்கும் அறிவீலித்தனமிது. பக்திவிருத்தியுள்ளவர்களாக இருப்பதற்கு உலகத்தோடு சிநேகம் கொள்ளக்கூடாது; உலகத்தை நேசிக்கக்கூடாது. உலக சிநேகம் தேவனுக்கு எதிரி என்றெல்லாம் யோவான் எழுதியிருப்பது உண்மைதான். ஆனால், யோவானின் வார்த்தைகளின் பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும். உலகத்தின் மாம்சத் தன்மையின்படி நாம் நடந்துகொள்ளக்கூடாது. அதன் சிந்தனைப் போக்கும், நடவடிக்கைகளும், இச்சையும் நம்மில் இருக்கக்கூடாது என்றுதான் யோவான் அறிவுறுத்துகிறாரே தவிர உலகத்தை அடியோடு துறந்து துறவிபோல் இருக்கும்படி அல்ல. ஆவிக்குரிய வாழ்க்கையை இந்த உலகத்தில் வாழவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அத்தோடு ஆவிக்குரிய கண்ணோட்டத்தோடு அனைத்தையும் அணுக வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஆவிக்குரியவர்கள் ஆவிக்குரியதாக இல்லாத நூல்களை வாசிக்கக்கூடாது என்று பலர் கருதுகிறார்கள். அப்படியானால் ஒருவன் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, பல்கலைக்கழகத்திற்கோ போகாமல் இருந்துவிட வேண்டும். அங்கெல்லாம் ஆவிக்குரியவற்றையா சொல்லித்தருகிறார்கள்? ஆவிக்குரியவன் நல்ல விசுவாசத்தைக் கொண்டிருந்து வேத அறிவில் தேர்ந்து ஆவிக்குரிய கண்ணோட்டத்தோடு உலகத்தைப் பார்க்கத் தெரிந்தவனாக இருக்கவேண்டும். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சமூகத்தில் அறிவிப்பதற்கு ஆவிக்குரியவன் சமூகத்தை அறிந்தவனாக இருக்க வேண்டும். தாமரை இலைமேல் தண்ணீராக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நம்மினத்தில் வருகின்ற செய்தித்தாள்களில் பெரும்பாலானவை தரம் குறைந்தவை. அரசியலும், சினிமாவும், கசமுசா செய்திகளுந்தான் அவற்றின் போக்கு. செய்தித் தாள்களில் தரமானவை இருந்தால் அவற்றை வாசிப்பது நல்லது. உலக நடப்புகளையும், உலகத்துக் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ளவும், ஆவிக்குரிய பார்வையோடு அவற்றை அணுகி விசுவாசத்தின் அடிப்படையிலான சொந்தக்கருத்தை உருவாக்கிக்கொள்ளவும் அது உதவும். நல்ல வார, மாத இதழ்கள் இருப்பின் வாசிக்கலாம். காலச்சுவடு, கணையாழி போன்றவற்றைக் குறிப்பிடுகிறேன். என்னைப்பொறுத்தளவில் இலக்கியத் தரமுள்ள, கிறிஸ்தவர்கள் வாசிக்கக்கூடிய வார, மாத இதழ்கள் மிகக்குறைவு. சிற்றிதழ்கள் பல வெளிவருவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆராய்ந்து பார்த்து பயனுள்ளவையாக இருப்பின் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை தமிழ் வாசிப்பில் பரிச்சயத்தை ஏற்படுத்தும்.

நம்முடைய வாசிப்பு வளரவும் உயரவும், தமிழில் பரிச்சயம் ஏற்படவும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களின் எழுத்துக்களைப் படிப்பதில் தவறு இல்லை; அவசியமும்கூட. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் வந்தவைபோன்ற இலக்கியத்தரமுள்ள நூல்கள் இன்று அரிது. பழம் எழுத்தாளர்களான கல்கி, நா. பார்த்தசாரதி, மு. வரதராசன், அகிலன் போன்றோரின் நூல்களை வாசியுங்கள். இவர்களுடைய எழுத்து நடை இலகுவானது. தமிழ் வாசிப்பில் தேர்ச்சி பெறவும், வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளவும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இலக்கியப் பரிச்சயமில்லாததால் அநேகர் குறைந்தளவான தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதை நான் அனுபவத்தில் அறிந்திருக்கிறேன்.

4. வாசிப்பைக் கருத்தோடு விடாப்பிடியாகத் தொடரவேண்டும்

வளர்ந்துவிட்ட பிறகு வாசிப்புப் பயிற்சியில் ஈடுபடுவது சிறுவயதில் வாசிக்கக் கற்றுக்கொள்ளுவதைப் போலிருக்காது. சிறுவயதில் விஷயங்கள் மனதில் உடனே பதிந்துவிடும். வளர்ந்தபின் அதில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாசிப்புப் பழக்கமே இல்லாதிருந்தவர்களுக்கு கண்களை ஒருசில பக்கங்களில் நிலைநிறுத்தி, வாசிக்கும் விஷயத்தை உள்வாங்கிச் சிந்திப்பது கடினமாக இருக்கும். நீண்டநேரம் அவர்களால் சில பக்கங்கள்வரை பொறுமையாக வாசிக்க முடியாது. அதை அவர்கள் வழமையாகச் செய்திராததால் ஏற்படும் தடங்கல் இது. அத்தோடு இணைய, முகநூல், டுவிட்டர் கலாச்சாரமும் இதைப் பிரச்சனைக்குரியதாக்கி விடுகின்றன. புதிதாக வாசிக்க ஆரம்பிக்கும் எவரும் இதனால் தளர்ந்துபோகத் தேவையில்லை. இப்படி நிகழும் என்பதைப் புரிந்துகொண்டு தொடர்ந்து விடாப்பிடியாக உங்களுடைய நேரத்தையும் நினைவுகளையும் கட்டுப்படுத்தி வாசிப்பில் ஈடுபட வேண்டும். தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என்று சொல்லுவார்கள். அதுபோல முயற்சி செய்து வாசிப்பைப் பழக்கத்தில் கொண்டுவர வேண்டும்.

5. ஒருதடவைக்கு மேல் நூல்களை வாசிக்க வேண்டும்

இங்கே நாம் வாசிப்புப் பயிற்சியைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் அதற்கு அவசியமான விஷயங்களை அலட்சியப்படுத்த முடியாது. ஒரு தடவைக்கு மேலாக நூல்களை வாசிப்பதனால் அதை இன்னும் கூர்ந்து கவனிக்க, ஆராய உதவும். முதல் வாசிப்பில் எப்போதுமே நாம் அந்தக் கவனத்தைச் செலுத்துவதில்லை. அனுபவித்து வாசிக்கும் வாசிப்பு முதல் வாசிப்பு. அந்த வாசிப்பின்போது நாம் நூல் சொல்லுகிற விஷயத்தை முழுவதுமாக அறிந்துகொள்ளும் எண்ணத்தோடு மட்டுமே வாசிப்போம். வேறு விஷயங்களில் நாம் கவனத்தைச் செலுத்துவதில்லை. நூல் அருவி போல் ஓடி எங்கு போய் முடிகிறது என்பதை அறிந்துகொள்வதில் மட்டுமே நம் கவனம் இருக்கும். நூலின் பன்முகத்தன்மையையும், அதன் பல்வேறு பரிமாணங்களையும் அறிந்து உணர அதை இரண்டாவது தடவையாக வாசிக்க வேண்டும்.

வாசிப்பது எப்படி? என்ற நூலை எழுதியுள்ள மோர்டிமர் அட்லர், பன்முகத் தன்மையுள்ள வாசிப்புப் பயிற்சிபற்றி விளக்கியிருக்கிறார். அதன்படி முதல்தடவை வாசிப்பை ஆரம்ப அல்லது அடிப்படை வாசிப்பென்றும், இரண்டாவது தடவை வாசிப்பை ஆராயும் வாசிப்பென்றும் எழுதியிருக்கிறார். ஆராயும் வாசிப்பின்போதே நூலையும், நூலாசிரியரையும், நூலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களையும், பலகோணங்களில் அறிந்து கொள்கிறோம் என்பதை விளக்குகிறார். நான்கு தளங்களில் வாசிப்பு இருக்க வேண்டுமென்று விளக்கும் அட்லர் பலவகை நூல்களையும் வாசிக்கும்போது பின்பற்ற வேண்டிய பொதுவான விதிமுறைகளையும் விளக்குகிறார். ஆழமான நூல் வாசிப்பில் ஈடுபட அட்லரின் நூல் நிச்சயம் உதவும். உண்மையில் வாசிப்பு ஆழமானதாகத்தான் இருக்க வேண்டும். அட்லரின் நூல் பிரயோஜனமானது.

6. வாசிப்பவற்றைக் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்

வாசிப்பில் ஆரோக்கியமான வாசிப்பு என்று ஒன்று இருப்பதாக நான் நம்புகிறேன். அது நுனிப்புல் மேயும் வாசிப்பைவிடச் சிறப்பானது. அத்தகைய வாசிப்பில் ஈடுபடுகிறவர்கள் குறிப்பெடுப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்கள் நூலின் பக்கங்களிலேயே கோடிட்டும், அடையாளமிட்டும், அதற்குப் பக்கத்தில் குறிப்புகளை எழுதியும் வைப்பார்கள். இது மறுபடியும் அந்தக் குறிப்புகளைக் கவனித்துப் படிக்க உதவும். இத்தகைய கோடிடுதலும், குறிப்பெடுத்தலும் நூலைக் கவனத்தோடு வாசிக்கச் செய்யும். வாசித்தவற்றை மனதில் இருத்திக் கொள்ளவும், சிந்திக்கவும் உதவும். வாசித்து முடித்த நூல்கள்பற்றிய விபரங்களை ஒரு நோட்புக்கில் குறிப்பெடுத்து வைத்திருப்பதும் பிரயோஜனமாய் இருக்கும். புனைவுகளை வாசிப்பதற்கு அது தேவைப்படாது. அறிவைத் தரும் நூல்களை வாசிக்க அது அவசியம். வாசித்தபிறகு வாசித்தவற்றை மறந்துவிடுவதற்காக எவரும் நூல்வாசிப்பில் ஈடுபடுவதில்லை. அனுபவமுள்ள வாசகர்கள் வாசித்த நூல்களைப்பற்றி குறிப்பெழுதி வைக்கத் தவறமாட்டார்கள்.

7. வாசிப்பவற்றை மனதில் அசைபோட்டு சிந்தித்துப் பார்க்க வேண்டும்

வாசிப்பது சிந்தனைக்கு அவசியம். வாசித்தவற்றைப் புல்லை அசைபோடும் மாட்டைப்போல மனதில் அசைபோட்டுச் சிந்திக்க வேண்டும். வாசிப்பதோடு வாசித்தவை நம்மில் ஜீரணிக்க வேண்டும். ‘நான் சிந்தித்துச் சிந்தித்து நரைத்தவன். நரைத்தபின் சிந்திக்கத் தொடங்கியவன் இல்லை’ என்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் வாசகங்கள் நினைவுக்கு வருகிறது. வாசிப்பு சிந்திக்க வைக்கும்; சிந்தனை நம்மை மேலும் வாசிக்கச் செய்யும். வாசித்த நூலின் போதனைகளை, அணுகு முறையை, கருத்துக்களை மனதில் அசைபோட்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும். வாசிப்பது, வாசித்த அனைத்தையும் நம்பிவிடுவதற்காக அல்ல; அதிலுள்ளவற்றையெல்லாம் வேதமாக எடுத்துக்கொள்ளுவதற்காக அல்ல. எந்த நூலையும் புறவயமான பார்வையோடு அணுகி வாசிக்க வேண்டும். உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்காது தள்ளி நின்று வாசிக்க வேண்டும். வாசிக்கும்போதும், வாசித்த பிறகும் வாசித்தவற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும். புறவயமான வாசிப்பு இதற்கு உதவும்.

8. வாசிப்பவற்றை உரையாடல் மூலம் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்

இன்றைக்கு உரையாடல்கள் அபூர்வமாகி வருகின்றன. ஒரு காலத்தில் நம் பேரக்குழந்தைகளுக்கு, ‘உங்களுக்குத் தெரியுமா? நாங்கள் அந்தக் காலத்தில் ஒருவரோடொருவர் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம்’ என்று சொல்ல, அதைக்கேட்டு அவர்கள் வாயைப்பிளந்து ‘அப்படியா’ என்று கேட்கிற காலம் வரும்போலிருக்கிறது. அந்தளவுக்கு உரையாடலைவிட வட்ஸ்செப்பும், டெக்ஸ்டும், முகநூலும், இன்ஸ்டகிராமுமாக காலம் முற்றிப்போயிருக்கிறது.

வாசிக்கும் பயிற்சியுள்ளவர்களோடு நல்ல நட்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அத்தகைய சிறுகூட்டம் உங்களைச் சுற்றி இருந்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர். என் சபையில் இளம் வாலிபனொருவனுக்கு வாசிப்புப் பழக்கம் உண்டு. அடிக்கடி சில நூல்களை அவனுக்கு அறிமுகப்படுத்தி வருகிறேன். வாசித்து முடிந்ததும் அதுபற்றி சுருக்கமான விவாதத்தில் ஈடுபடுவோம். அவனுடைய எதிர்காலம் நன்றாக இருக்கப்போவது எனக்குத் தெரிகிறது. இதை எழுதிக்கொண்டிருக்கிறபோதே இரண்டு நூல்களை அவனுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இன்னொருவர் வாசிப்பில் அதிக ஈடுபாடு காட்டுகிறவர். சபை ஆராதனை முடிந்தபிறகு சமீபத்தில் வாசித்த நூல்கள்பற்றிப் பேசுவோம். வாசிப்பும், வாசித்தவைபற்றிப் பேசுவதும் எத்தனை அருமையானது தெரியுமா? அது கர்த்தரைப்பற்றிய விஷயங்களாக இருப்பதுதான் அதை மேலானதாக்குகிறது.

9. ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களை வாசிப்பதைப் பழக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.

வாசிப்பு அனுபவம் வளர வளர ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களை ஒரே சமயத்தில் வாசிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இதற்காகக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிவைத்தால் இரண்டு அல்லது மூன்று நூல்களை வெவ்வேறு சமயங்களில் அவற்றின் சில பக்கங்களையாவது ஒரு நாளில் வாசிப்பதைப் பழக்கத்தில் வைத்திருக்கலாம். இதன் மூலம் ஒரே விஷயத்தை வாசித்து சிந்திக்காமல் பல விஷயங்களைப்பற்றி வாசிக்கவும் அதுபற்றி சிந்திக்கவும் முடியும். கிறிஸ்தவ நூல்களிலேயே பல்வகை நூல்கள் இருக்கின்றன. வேத வியாக்கியான நூலொன்றையும், கிறிஸ்தவ வாழ்க்கைபற்றிய விளக்கும் நூலொன்றையும், கிறிஸ்தவ வரலாற்றை விளக்கும் நூலொன்றுமாக வெவ்வேறு நேரத்தில் வாசிக்கலாம். இந்தவகையில் வாசிப்பில் ஈடுபடும்போது அதிக நூல்களை நாம் வாசித்து முடிக்கவும், அதுபற்றி சிந்தித்துக் கருத்துக்களை மனதில் வளர்த்துக்கொள்ளவும் முடியும்.

10. ஆவிக்குரிய அனுபவசாலியான வாசிப்புப் பழக்கமுள்ள ஒருவரை மேற்பார்வையாளராகவோ, துணையாகவோ வைத்துக்கொள்ளுங்கள்.

நல்ல வாசிப்பனுபவம் இல்லாதிருக்கிறவர்கள் இன்னொருவரோடு சேர்ந்து வாசிப்பது பலன்தரும். அப்படியொருவரையோ, சிலரையோ தேடிப்பிடியுங்கள். இது ஒருவருக்கொருவர் வாசித்தவற்றைப் பகிர்ந்துகொள்ளவும், உங்களுடைய வாசிப்பின் இலக்கை அடையவும் உதவும். முடிந்தால் அனுபவமுள்ள ஒருவரின் மேற்பார்வையின் கீழ் வாசிப்புப் பயிற்சியில் ஈடுபடலாம். ‘குருவில்லான் வித்தை . . . விழல்’ என்கிறது தமிழிலக்கிய வெண்பா ஒன்று. அதாவது குருவில்லாமல் வித்தை கற்க முடியாது என்பது இதற்குப் பொருள். குருவே இல்லாவிட்டாலும் ஏகலைவனைப் போலாவது ஒரு குருவை நினைவில்கொண்டு வித்தையைக் கற்றுக்கொள்ள வேண்டும். வாசிக்க ஆர்வமுள்ளவர்கள் மாதமொருமுறை கூடி வாசிப்பில் ஈடுபடலாம். வாசித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம். இது வாசிப்புப் பயிற்சியில் வளரவும், உயரவும் உதவி செய்யும்.

முடிவாக . . .

இதை எழுதிக்கொண்டிருக்கும்போது சாலமோனின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன, ‘அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு’ (பிரசங்கி 12:12). இங்கே சாலமோன் சொல்லுவதை நாம் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. அந்தக் காலத்தில் சாலமோன் அளவுக்கு வாசித்தவர்களும், எழுதியவர்களும் இருந்திருக்க முடியாது. சாலமோனே வேதத்தில் சில நூல்களை எழுதியிருக்கிறான். அந்தளவுக்கு அவன் பெரிய ஞானி. அப்படியானால் நூல்கள் வாசிப்பதையும், அதிக நூல்கள் இருப்பதையும் சாலமோன் அலட்சியமாகப் பேசியிருக்க முடியாது. சாலமோன் இங்கே சொல்லுவதெல்லாம், வாசிக்கவேண்டும் என்பதற்காகப் பொருளற்றவிதத்தில் வாசிக்கக்கூடாது என்பதுதான். எழுதிக் குவிக்கவேண்டுமென்பதற்காகப் பொருளற்றவிதத்தில் நூல்கள் வெளியிடக்கூடாது என்பதுதான். அத்தகையவற்றிற்கு முடிவே இருக்காது. வாசிப்பதையும், எழுதுவதையும் என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம் என்பது முக்கியம். வெறும் புத்தகப்பூச்சியாக இருந்துவிட்டால் அதில் நன்மையில்லை. அத்தகைய உபயோகமில்லாத வாசிப்பால்தான் உடலுக்கு இளைப்பு. இதை வாசித்தபிறகு வாசிக்க வேண்டும் என்ற வாஞ்சையும், அக்கறையும் உங்கள் இருதயத்தில் எழுந்திருக்கிறதா? இருந்தால் நல்லதுதான்.

[வலைப்பூவில் பதிவதற்காக இந்த ஆக்கம் சுருக்கப்பட்டிருக்கிறது. இதன் விரிவான மூலம் ஜூன்-ஆகஸ்டு 2015 திருமறைத்தீப இதழில் வரவிருக்கிறது. – ஆசிரியர்]

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

2 thoughts on “எதை, எப்படி வாசிப்பது?

மறுமொழி தருக