எல்லாம் நன்மைக்கே! யாருக்கு?

love-godவேதத்தில் நமக்கு எத்தனையோ வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நம்மில் அன்புகூர்ந்து வழிநடத்தும் கர்த்தர் நம்மை பெலப்படுத்தவும், ஆவிக்குரிய வல்லமையோடு நாம் வாழவும் இத்தகைய வாக்குத்தத்தங்களை நாம் நினைவுகூரும்படியாகத் தந்திருக்கிறார். இவை வெறும் வாக்குறுதிகள் அல்ல; உண்மையானவை, நடைமுறை வாழ்க்கைக்கு அவசியமானவை. இவை நமக்கு ஆவிக்குரிய தைரியத்தை மட்டும் தராமல் அநேக ஆழமான வேத சத்தியங்களையும் வெளிப்படுத்துகின்றன. அத்தகைய வாக்குத்தத்தங்களில் ஒன்றுதான் ரோமர் 8:28ல் நாம் வாசிக்கும் பொருள் பொதிந்த வார்த்தைகள்.

‘அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூர்கிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்’

மொழிபெயர்ப்பு

ஆதியில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கிறபோது கிரேக்க மொழியில் எங்கெங்கு வார்த்தைகளுக்கு அழுத்தங்கொடுத்து எழுதப்பட்டிருக்கிறதோ அந்த அழுத்தம் தமிழில் வராமல் போய்விடுகின்ற நிலை ஏற்படுகின்றது. ஒரு மொழிக்கு ஏற்றவிதத்தில் மொழிபெயர்ப்பு இருக்க வேண்டிய அவசியமிருப்பதால் இந்நிலை உருவாகிறது. இதை ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் கவனிக்கலாம். மூல மொழியில் காணப்படுகின்ற அத்தகைய அழுத்தங்கள் அவசியமானவை; காரணத்துடனேயே பரிசுத்த ஆவியானவர் அந்த முறையில் வார்த்தைகளைத் தந்திருக்கிறார். அதனால் வேத வசனங்களை நாம் ஆராய்ந்து படிக்கவேண்டியிருக்கிறது. ஆவியானவர் தந்திருக்கும் முறையில் அழுத்தங்களின் அர்த்தத்தை உணர்ந்து சத்தியத்தை அறிந்துகொள்ள அத்தகைய கவனத்தோடுகூடிய படிப்பு உதவும்.

இந்த வசனத்தை கிரேக்கத்தில் இருப்பதுபோல கூடுமானவரையில் எழுத்துபூர்வமாக மொழிபெயர்ப்போமானால் அது பின்வருமாறு அமையும்.

‘அத்தோடு, நமக்குத் தெரியும், சகலமும் நன்மைக்கு ஏதுவாக அவரில் அன்புகூருகிறவர்களுக்கு, அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு நிகழ்கின்றது’ என்று வரும். இதில் ‘சகலமும்’ என்ற வார்த்தைக்குப் பிறகு ‘நிகழ்கின்றது’ என்ற வார்த்தை வந்து, அதாவது ‘சகலமும் நிகழ்கின்றது’ என்று இருந்திருக்க வேண்டும். அப்படி மொழிபெயர்த்திருந்தால் தமிழில் வாசிக்கும்போது அது தமிழாக இருந்திருக்காது. தமிழில் வினைச்சொல் வசனத்தின் இறுதியில்தான் வரும்.

வசனத்திற்கான விளக்கம்

(1) ‘அன்றியும்’

தமிழில் சரியான முறையில் கிரேக்கத்தில் இருந்தது போலவே ‘அன்றியும்’ என்ற வார்த்தையோடு இந்த வசனம் ஆரம்பிக்கிறது. இந்த சிறு வார்த்தை மிகவும் அவசியமானது. ஆங்கிலத்தில் Conjunctions என்று அழைக்கப்படுகின்ற ‘ஆனால்’, ‘அன்றியும்’, ‘அத்தோடு’, ‘மேலும்’, ‘ஆகையால்’ போன்ற வார்த்தைகள் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை அடுத்து சொல்லப்படுகின்ற விஷயத்தோடு இணைக்கின்ற வார்த்தைகளாக இருக்கின்றன. இவற்றைத் ‘தொடரிணைப்பு வார்த்தைகள்’ அல்லது ‘இணைப்பு வார்த்தைகள்’ என்று தமிழில் கூறலாம். இத்தகைய தொடரிணைப்பு வார்த்தைகள் பல காரணங்களுக்காகப் பயன்படுகின்றன. இந்த வசனத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்ற விஷயத்தோடு இனி வரப்போகின்ற விஷயம் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றது என்ற அடிப்படை உண்மையை இது விளக்குகின்றது. அத்தோடு இறையியல் சத்தியங்களின் அடிப்படையில், இதுவரை சொல்லப்பட்ட விஷயத்துக்கு மேலும் அழுத்தம் கொடுத்து நம்மைப் பெலப்படுத்த மேலுமொரு உண்மையைப் பவுல் சொல்லுகிறார் என்பதையும் இந்த ‘அன்றியும்’ என்ற சிறு வார்த்தை விளக்குகிறது.

ரோமர் 8ம் அதிகாரத்தில் கிறிஸ்தவனில் ஆவியானவரின் செயல்பாட்டை விளக்குகின்ற பவுல் 26, 27ம் வசனங்களில், பரிசுத்த ஆவியானவர் எந்தவிதத்தில் கிறிஸ்தவனுக்கு ஜெபத்தில் உதவுகிறார் என்பதை விளக்குகிறார். பலவீனத்தோடு இருக்கின்ற கிறிஸ்தவனுக்கு, ஜெபத்தில் அவன் தன்னுடைய எண்ணங்களைக் கோர்வையோடு வார்த்தைகளில் கொண்டுவர முடியாத தவிப்போடு இருக்கிறபோது, அவனுடைய இருதயத் தவிப்பையும் எண்ணங்களையும் உணர்ந்திருக்கும் ஆவியானவர் தானும் அவனுடைய தவிப்பில் பங்குகொண்டு வார்த்தைகளில் அவனால் கொண்டுவரமுடியாத அந்தத் தவிப்பைக் கர்த்தரின் பிரசன்னத்தில் சமர்ப்பித்து அவனுக்காக வேண்டுதல் செய்கிறார். கிறிஸ்தவன் அடைந்திருக்கும் எத்தனை பெரிய ஆசீர்வாதம் இது! ஆவியானவரின் இந்தப் பேருதவியைப் பற்றிய விளக்கத்தைத் தந்து அதை நிறைவுக்குக் கொண்டுவரும் பவுல் கிறிஸ்தவனை மேலும் பெலப்படுத்தி ஊக்குவிக்குமுகமாக இதுவரை விளக்கியவற்றோடு தொடர்புடைய இன்னுமொரு சத்தியத்தை விளக்கும் வகையில்தான் கர்த்தரின் வாக்குத்தத்தத்தை 28ம் வசனத்தின் கொடுக்கிறார். ஆகவே, 28ம் வசனம் 27ம் வசனத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. இந்த ‘அன்றியும்’ என்ற பதம் அந்த இணைப்பை விளக்குவதாக 28ம் வசனத்தின் ஆரம்பத்தில் வருகிறது.

(2) ‘நமக்குத் தெரியும்’

இந்த வசனத்தில் அடுத்து வருகின்ற வார்த்தைகள் ‘நமக்குத் தெரியும்’ என்பதாகும். ‘தெரியும்’ (know) என்ற பதம் இந்த அதிகாரத்தில் பல தடவைகள் வந்திருக்கிறது. ஒரு விஷயத்தை வெளிப்புற சாதனங்களைக் கொண்டு ஆராய்ந்து தெரிந்துகொள்ளுகிற அறிவை இந்த வார்த்தை குறிக்கவில்லை. விசுவாசத்தின் காரணமாக விசுவாசி வேதத்தில் இருந்து அறிந்துகொண்ட சத்தியத்தை இருதயத்தின் ஆழத்தில் நம்புகின்ற தன்மையை இந்தத் ‘தெரியும்’ என்ற வார்த்தை விளக்குகின்றது. ‘நமக்கு’ என்ற பதம் விசுவாசிகளை, அதாவது பரிசுத்தவான்களைக் குறிக்கும் வார்த்தை. இது விசுவாசிகளுக்கு எழுதப்பட்ட நிருபம். ஏற்கனவே விசுவாசத்தின் காரணமாக அவர்கள் வேதத்தில் இருந்து தெளிவாக அறிந்து உணர்ந்து நம்புகிற ஓர் உண்மையைப் பவுல் விளக்கப்போவதால்தான் ‘நமக்குத் தெரியும்’ என்றுச் சொல்லுகிறார். இதில் பவுல் விசுவாசியான தன்னையும் இணைத்துப் பேசுவதைக் காண்கிறோம்.

அப்படிப் பவுலுக்கும் நமக்கும் தெரிந்திருப்பது எது? அதைத்தான் இந்த வசனம் அடுத்து விளக்குகிறது.

(3) ‘சகலமும் நிகழ்கின்றது (நடக்கின்றது)’

பழைய மொழிபெயர்ப்பில் ‘சகலமும் நடக்கின்றது’ என்றிருக்கின்றது. ஏற்கனவே நான் விளக்கியபடி கிரேக்க மொழியில் இவை அடுத்தடுத்து வருகின்றன. ஆனால், தமிழில் வினைச்சொல் வசனத்தின் இறுதியில் வரவேண்டியிருப்பதால் ‘நடக்கின்றது’ என்ற வார்த்தை இறுதியில் வருகின்றது. இவை இணைந்து காணப்படுகின்ற வார்த்தைகளானபடியால் அந்த முறையிலேயே அவற்றை நாம் ஆராய வேண்டும்.

இந்த வார்த்தையில் முதலில் வருகின்ற ‘சகலமும்’ என்ற வார்த்தையைக் கவனிப்போம். இது சரியான மொழிபெயர்ப்பு; ஆனால் வடமொழியில் இருந்து தமிழுக்கு வந்த வார்த்தை. இதை ‘அனைத்தும்’ அல்லது ‘எல்லாம்’ என்றும் தமிழில் மொழிபெயர்க்கலாம். ஆங்கில வார்த்தையான ‘All’ என்பதன் தமிழாக்கம் இது. கிரேக்க மொழிபெயர்ப்பில் ஒரே வார்த்தையான இதை (pass) ஆங்கில மொழிபெயர்ப்பில் ‘All things’ என்று இரு வார்த்தைகளை இணைத்து விளக்கியிருக்கிறார்கள்.

‘சகலமும்’ என்பது எதைக் குறிக்கின்றது? பவுல் இதன் மூலம் எதை விளக்குகிறார் என்பதை முதலில் அறிய வேண்டும். சகலமும் என்பது, ‘எதையும் விட்டுவிடாமல் எல்லாவற்றையும் உள்ளடக்கியது’ என்ற கருத்தில் இங்கு தரப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையின் அர்த்தத்தைவிட இந்த வார்த்தையைப் பயன்படுத்தி பவுல் விளக்குகின்ற இறையியல் சத்தியத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். எதையெல்லாம் இந்த ‘சகலமும்’ உள்ளடக்குகின்றதென்று பார்ப்போம். இது அசைகின்றதும், அசையாததும், உயிருள்ளதும், உயிரற்றதுமான படைக்கப்பட்டிருக்கின்ற அனைத்தையும், சகல காலங்களையும், நன்மையானவற்றையும், தீமையானவற்றையும், நல்லவர்களையும், தீயவர்களையும், சந்தர்ப்பசூழ்நிலைகள் அனைத்தையும், நல்ல தூதர்களையும், தீய தூதர்களையும், வானத்து நட்சத்திரங்களையும். சந்திர சூரியன்களையும் உள்ளடக்குகின்றது. அத்தோடு இந்த ‘சகலத்தில்’ அடங்காததொன்றும் இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்ல வேண்டும்.

அடுத்து ‘நடக்கின்றது’ அல்லது ‘நிகழ்கின்றது’ என்ற வார்த்தையைக் கவனிக்க வேண்டும். உண்மையில் புதிய ஏற்பாடு எழுதப்பட்டிருக்கும் கிரேக்கமொழியில் இந்த வார்த்தை தமிழ் மொழிபெயர்ப்பில் காணப்படுவதைவிட ஆழமான பொருள்கொண்ட வார்த்தை.

ஆங்கில வேதத்தில் இந்த வார்த்தை ‘work together’ என்று சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.  கிரேக்க மொழியில் இது ‘sunergei’ என்றிருக்கிறது. sun, ergow ஆகிய இரு வார்த்தைகளை இணைத்து இந்த வார்த்தை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியே விளக்க முடியும். தமிழில் ‘நடக்கின்றது’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தபோதும் அது கிரேக்க வார்த்தையில் காணப்படும் முழு அர்த்தத்தையும் விளக்குவதாக இல்லை. இதன் அர்த்தத்தை விளக்குவதானால், ‘ஒன்றோடொன்றிணைந்து பொருந்திவருவதாக நிகழ்கின்றது’ என்று கூறலாம். பவுல், சகலமும் வெறுமனே நடக்காமல் அனைத்தும், அதாவது எதிர்புறமானவைகள் உட்பட எல்லாமே ஒன்றோடொன்றிணைந்து பொருந்திவரும் வகையில் ஒருமித்து ஒரே இலக்கை நோக்கி இயங்குகின்றன என்று விளக்குகிறார். இந்த வார்த்தைக்குள் மிக ஆழமான இறையியல் போதனை உள்ளடங்கியிருக்கிறது. உதாரணத்திற்கு நண்பர்கள் இருவர் தங்களுடைய வண்டிகளில் ஏறி எதிர்புறமான திசைகளில் பிரயாணம் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு மணி நேரப் பிரயாணத்திற்குப்பின் அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் போய் முடிகிறார்கள். இருவருக்கும் அப்படி நிகழும் என்பது தெரியாதிருந்திருக்கின்றது. ஏனெனில், அந்தப் பாதை இறுதியில் ஒரே இடத்தில் போய் முடிகின்ற பாதை. நண்பர்கள் இருவரும் பிரயாணத்தை ஆரம்பித்தபோது எதிர்த்திசைகளில் போகப் போகிறோம் என்ற முடிவோடுதான் ஆரம்பித்துப் பயணித்தபோதும் அவர்களுக்கே தெரியாமல் ஒரே இடத்தில் போய் சந்திக்க நேர்ந்தது. இந்த உதாரணத்தைப் போலத்தான் கர்த்தரைப் பொறுத்தவரையில் அவருடைய நோக்கங்கள் நிறைவேறும்படியாக ‘சகலமும் நிகழ்வதாக’ பவுல் விளக்குகிறார்.

‘சகலமும் ஒன்றுக்கொன்றிணைந்து பொருந்திப்போய் நிகழ்கிறது’ என்பது தற்செயலாய் நிகழ்கின்ற காரியமல்ல. ஆண்டவரை அறியாதவர்கள் எல்லாம் தானாகவே எதேச்சையாக நிகழ்கிறதாக நினைத்து வாழ்கிறார்கள். அத்தோடு பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டை நம்புகிறர்கள் ஒவ்வொன்றும் தானாகவே பரிமாணவளர்ச்சியடைந்து இன்னொரு செயலுக்குக் காரணமாக இருக்கின்றதென்று நம்புகிறார்கள். இத்தகைய உலகரீதியான நம்பிக்கை கொண்டிருப்பவர்களுடைய அகராதியில் சர்வவல்லவரான கர்த்தருக்கு இடமில்லை. எல்லாமே கடவுளால் படைக்கப்பட்டு அவரால் பராமரிக்கப்பட்டு வருவதாக வேதம் சொல்லுகிறது. அவரில்லாமல் ஒன்றுமே இயங்கமுடியாது. எல்லாமே அவரால் இயக்கப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் அவரே முதற் காரணியாக இருக்கிறார்; பாவத்தைத் தவிர. அதனால் தற்செயலாகவும், எதேச்சையாகவும் எதுவும் நிகழ வழியில்லை.

கர்த்தரின் பராமரிப்பாகிய சத்தியத்தை (The Providence of God) 1689 விசுவாச அறிக்கை அருமையாக விளக்குகிறது. ‘அனைத்திற்கும் காரணகர்த்தாவாகிய கடவுளுடைய முன்னறிவின் மூலமும், ஆணையின் மூலமும் எல்லாக் காரியங்களும் மாறாத்தன்மையுடனும் தவறா நிலையிலும் நேரிட்டபோதும் எதுவுமே எவருக்கும் தற்செயலாகவோ அல்லது அவரது பராமரிப்புக்கு அப்பாற்பட்டோ நிகழ்வதில்லை. அதேவேளை, கடவுள் இடைக்காரணங்களின் தன்மையின்படி தமது பராமரிப்பின் மூலம் தேவைக்கேற்பவும், சுதந்திரமாகவும், எதிர்பாரா வேளைகளிலும் சம்பவங்கள் நிகழ உத்தரவிடுகிறார். இத்தகைய வழிமுறைகளைப் பயன்படுத்தி அவற்றின் மூலமாக கடவுள் தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்.’ (வி. அ, அதி 3:2). இந்த வார்த்தைகளில் ஆராய்ந்து சிந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டிய அருமையான சத்தியங்கள் உள்ளடங்கியிருக்கின்றன.

தொடர்ந்தும் கர்த்தரின் பராமரிப்பை விளக்கும் விசுவாச அறிக்கை, ‘சாதாரணமாக தனது பராமரிப்பில் கடவுள் பல சாதனங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார். அவற்றின் துணையில்லாமல் அவரால் தன்னுரிமையோடு இயங்க முடியும். அவரால் . . . அச்சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் அல்லது அவற்றிற்கு எதிர்மறையாக செயல்படவும் முடியும்.’ (வி. அ, அதி 3:3). இதிலிருந்து புற உதவிகளின் தேவையில்லாமல் எல்லாவற்றையும் இயக்கித் தன்னுடைய தூய்மையான நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளுகிற இறையாண்மையுள்ளவராக நம் தேவன் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுகிறோம்.

உலகத்தில் கர்த்தர் சம்பந்தப்படாத காரியங்கள் எதுவும் இருக்க வழியில்லை. நேரடியாக அவர் பாவத்திற்குக் காரணகர்த்தாவாக இல்லாவிட்டாலும் மனிதர்களின் பாவச் செயல்களைத் தன்னுடைய திட்டங்கள் நிறைவேற அவர் பயன்படுத்திக்கொள்ளுகிறார். இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு தன்னுடைய சுயபாவத்தினால் அதைச் செய்தபோதும் அச்செயலும்கூட கர்த்தரின் ஆணைக்குள் (The Decree of God) அடங்கியிருக்கிறது (லூக்கா 22:22); அவரது இறுதி நோக்கம் இயேசுவின் மூலம் நிறைவேற அதையும் கர்த்தர் ஆணையிட்டிருக்கிறார். கர்த்தரின் பராமரிப்பு பற்றிய சத்தியங்கள் நம்முடைய எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டிருந்தபோதும் நாம் நம்பக்கூடிய தேவ இரகசியங்களாக வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. நீதி 16:33 சொல்லுகிறது, ‘சீட்டு மடியிலே போடப்படும்; காரிய சித்தியோ கர்த்தரால் வரும்.’

(4) ‘நன்மைக்கு ஏதுவாக’

ரோமர் 8:28ல் அடுத்ததாக சகலமும் எந்த இலக்கை நோக்கி நிகழ்கின்றது என்பதைப் பவுல் விளக்குகிறார். அனைத்தும் ‘நன்மைக்கு ஏதுவாக’ நிகழ்வதாக அவர் விளக்குவதைக் காண்கிறோம். அதாவது அனைத்து நிகழ்ச்சிகளுமே நன்மையில் போய் முடிகின்றன என்பது இதற்குப் பொருள். யாருடைய நன்மைக்காக என்பதை இனி விளக்கமாகப் பார்க்கப் போகிறோம். இருந்தபோதும் நிச்சயமாக அவை கிறிஸ்தவர்களின் (விசுவாசிகளின்) நன்மைக்காகவே போய் முடிகின்றன என்பது வேதம் போதிக்கும் உண்மை. இனி கர்த்தரின் பராமரிப்பு எந்தவிதத்தில் நன்மையில் போய் முடிகின்றது என்பதற்கான சில உதாரணங்களைப் பார்ப்போம்.

கர்த்தரின் பராமரிப்பாகிய பெரும் வேத சத்தியத்தை வேதத்தில் பல உதாரணங்களைக் காட்டி விளக்கலாம். பழைய ஏற்பாட்டில் ஆதி 37ல் யோசேப்புவை எடுத்துக்கொள்ளுவோம். அவனுடைய சகோதரர்கள் ஆரம்பத்தில் யோசேப்புவைக் கொலை செய்யத் தீர்மானித்து பின்பு மனம்மாறி 20 வெள்ளிக்காசுகளுக்கு அவனை இஸ்மவேலரிடம் விற்றார்கள். இஸ்மவேலர் யோசேப்புவை எகிப்துக்கு கொண்டுபோனார்கள். எகிப்தில் கர்த்தரின் கிருபையால் பின்பு யோசேப்பு பெரும் பதவியில் அரசனால் நியமிக்கப்பட்டான். அது மட்டுமல்ல பின்பு பஞ்சத்தால் அவனுடைய குடும்பம் அவதிப்பட்டு, ஆபத்தை எதிர்நோக்கியபோது அதே யோசேப்பு மூலமே அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. யோசேப்புவின் சகோதரர்கள் தீய எண்ணத்தோடு செய்த காரியம் கர்த்தரின் மகா பராமரிப்பின் காரணமாக நன்மையில் போய் முடிந்திருக்கிறதில்லையா? இதைத்தான் யோசேப்பு ஆதி 50:20ல், ‘நீங்கள் எனக்குத் தீங்கு செய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு அதை நன்மையாக முடிக்கப்பண்ணினார்’ என்று தன்னுடைய சகோதரர்களைப் பார்த்துத் சொன்னான்.

இன்னுமொரு உதாரணத்தை நெகேமியா 4ம் அதிகாரத்தில் காணலாம். எருசலேமின் மதில்களைக் கட்ட நெகேமியா தீர்மானித்து அதைக் கட்டும்படியாக அரச அனுமதியோடு எருசலேமுக்குப்போய் அந்தப் பணியை ஆரம்பித்தபோது சன்பல்லாத்தும், தோபியாவும், அரபியரும், அம்மோனியரும், அன்தோத்தியரும் எரிச்சலும், பொறாமையும் கொண்டு நெகேமியாவின் பணியைத் தடுக்கவும், எருசலேமின் மேல் யுத்தம் செய்யவும் முற்பட்டார்கள் (நெகே 4:1-8). ஆனால், ‘தேவன் அவர்களுடைய ஆலோசனையை அபத்தமாக்கினார்’ என்று நெகேமியா 4:15ல் சொல்லியிருப்பதை வாசிக்கிறோம். நெகேமியாவின் எதிரிகள் எரிச்சலாலும், பொறாமையாலும் தீங்கு செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டபோது அதைக் கர்த்தர் அபத்தமாக்கி நன்மையில் போய் முடியும்படிச் செய்தார்.

ஆதி சபை ஆரம்பித்து வளர்ந்துகொண்டிருந்தபோது எருசலேமில் இருந்த சபைக்கு மிகுந்த துன்பம் உண்டானது. அப்போஸ்தலர்கள் மட்டுமே எருசலேமில் இருக்க சகல கிறிஸ்தவர்களும் யூதேயா, சமாரியா பிரதேசங்களுக்கு சிதறிப்போனார்கள். இது சபைக்கு ஏற்பட்ட பெரும் துன்பம். சபையின் எதிரிகள் இந்த உலகத்தில் வெற்றியடைவதாக பலரும் அப்போது எண்ணியிருந்திருப்பார்கள். ஆனால் நடந்தது என்ன? யூதேயா, சமாரியா பிரதேசங்களுக்குப் போன கிறிஸ்தவர்கள் மூலமாக சுவிசேஷச் செய்தி எங்கும் பரவி அநேகர் கர்த்தரை விசுவாசித்ததோடு மேலும் சபைகள் எங்கும் நிறுவப்பட்டன. கர்த்தரின் எதிரிகள் சபையைத் தொலைக்கும் நோக்கில் செயற்பட்டபோதும் கர்த்தர் அதை நன்மைக்காகப் பயன்படுத்தினார் என்பதை வரலாறு காட்டுகிறது.

இன்னுமொரு உதாரணத்தை மட்டும் பார்ப்போம். சங்கீதம் 2:1-3வரையுள்ள வசனங்களில், ‘ஜாதிகள் கொந்தளித்து ஜனங்கள் விருதாக்காரியத்தை சிந்திப்பார்களென்றும், கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனை பண்ணி, அவர்கள் கட்டுக்களை அறுத்து அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்’ என்று உலகத்தவர்களுடைய சிந்தனைகளையும் செயல்களையும் பற்றி விளக்கிவிட்டு சங்கீதக்காரன் 4ம் வசனத்தில் கர்த்தர் இதையெல்லாம் பார்த்து என்ன செய்கிறார் என்று விளக்குகிறான். ‘பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார், ஆண்டவர் அவர்களை இகழுவார்’ என்று சொல்லுகிறான். அதற்கென்ன அர்த்தம்? உலகத்தவர்கள் என்ன நினைத்து எதைத் திட்டமிட்டாலும் சர்வவல்லவரான கர்த்தர் தன்னுடைய பராமரிப்பின் மூலம் அவர்களுடைய தீங்கான எண்ணங்களையும், திட்டங்களையும் பயன்படுத்தித் தன்னுடைய நோக்கங்களை எப்போதும் நிறைவேற்றிக்கொள்ளப் போகிறார் என்பதுதான். அதைத்தான் இறையாண்மையுள்ளவரின் ‘நகைப்பு’ விளக்குகிறது.

(5) ‘அவரில் அன்புகூருகிறவர்களுக்கு, அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கு’

சகலமும் நன்மைக்கு ஏதுவாக நிகழ்கின்றது என்று விளக்கும் பவுல், அது யாருடைய நன்மைக்காக நிகழ்கின்றது என்பதையும் தெளிவாக விளக்குகிறார். அவர்கள் முதலில், ‘அவரில் அன்புகூருகிறவர்கள்’ என்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்ன? வேதபோதனையின்படி இயேசு கிறிஸ்துவைத் தங்களுடைய தேவனாக, ஆண்டவராக விசுவாசித்து வாழ்கிறவர்களே இந்த வகையில் வேதத்தில் அடையாளம் காணப்படுகிறார்கள். எபே. 1:2; எபே. 2:4; எபே 3:17-19; எபே. 5:2; யாக். 1:12; 1 யோவான் 4:10 ஆகிய வசனங்களை ஆராய்ந்து பாருங்கள். இந்த வசனங்கள் அனைத்திலும் இயேசு அன்பு செலுத்துகிற, அவரால் அன்புசெலுத்தப்படுகிறவர்கள் அவருடைய மக்களாகவும், பிள்ளைகளாகவும், விசுவாசிகளாகவும் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.

எல்லா மனிதர்களுக்கும் சகலமும் நன்மையில் போய் முடிவதில்லை. அத்தகைய போதனையை வேதத்தில் காணமுடியாது. இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரிடம் இருந்து பாவமன்னிப்பு அடையாமல் தங்களுடைய பாவத்தில் தொடர்ந்து வாழுகிறவர்கள் கர்த்தரிடம் இருந்து நன்மையை எதிர்பார்க்க முடியாது. கர்த்தரின் பொதுவான கிருபையின் கீழ் அவர்கள் இந்த உலகத்தில் எல்லோரும் (நல்லவர்களும், தீயவர்களும்) அனுபவிக்கின்ற பொதுவான நன்மைகளை அடைந்தபோதும், நித்திய வாழ்வை இயேசுவில் அடையாதவரை அவர்களுக்கு இயேசுவின் அன்பைப்பற்றித் தெரியாது. இயேசு கிறிஸ்துவில் அன்பு காட்டும் இருதயம் அவர்களில் இருக்கப்போவதில்லை. தங்களுடைய பாவத்தில் தொடர்ந்து வாழ்கிற அவர்கள் தங்களுடைய பாவத்திற்கான பலனை மட்டுமே இறுதியில் அடையமுடியும். அவர்களுக்கு நித்திய மரணம் மட்டுமே உண்டு. அதிலிருந்து விடுபட்டு இயேசுவில் அன்புகாட்ட அவர்கள் இயேசுவை இரட்சகராகவும், ஆண்டவராகவும் தங்களுடைய பாவமன்னிப்புக்காகவும், நித்திய வாழ்வுக்காகவும் முதலில் விசுவாசிக்க வேண்டும்.

ரோமர் 8:28ல் தரப்பட்டிருக்கும் வாக்குத்தத்தம் இயேசுவில் அன்பு பாராட்டும் விசுவாசிகளுக்கு மட்டும் உரித்தானது. இதை மேலும் உறுதிப்படுத்தும்படியாக பவுல் விசுவாசிகளை இன்னொருவிதத்திலும் இந்த வசனத்தில் அடையாளம் காட்டுகிறார். அதாவது, அவர்கள் ‘அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்கள்’ என்று விளக்குகிறார். எபே 1:4; ரோமர் 8:29-30 ஆகிய வசனங்கள் இதையே போதிக்கின்றன. இயேசுவில் அன்பு பாராட்டுகிறவர்கள் அவரால் அநாதியில், உலகத்தோற்றத்திற்கு முன்பாகத் தெரிவு செய்யப்பட்டு அழைக்கப்பட்டவர்கள். அதுவும் அவருக்கு முன்பாக அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும், குற்றமில்லாதவர்களுமாக இருக்கும்படி அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். அப்படித் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறவர்களே இந்த உலகத்தில் கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிப்பை அடைகிறார்கள்; அவருடைய அன்பை ருசிபார்த்து அன்புள்ளவர்களாக வாழ்கிறார்கள். கர்த்தர் அவர்கள் நிமித்தம் சகலமும் அவர்களுடைய நன்மைக்கு ஏதுவாக நிகழும்படிச் செய்கிறார்.

முடிவாக . . .

(1) இந்த வசனத்தில் இருந்து நாம் எதைப் படிக்கிறோம்? இயேசுவில் அன்புகாட்டும் விசுவாசிகள் எத்தனைப் பிரச்சனைகள், தொல்லைகள், இடறல்கள், அவமதிப்புகள், புறக்கணிப்புகள், ஏச்சுப் பேச்சுக்கள், அவமானங்கள், எட்டப்பச்சதிகள் மற்றும் சரீரப்பாடுகளை இயேசு கிறிஸ்துவும், பவுலும் மேலும் அநேக பரிசுத்தவான்களும் அனுபவித்திருப்பதைப்போல இந்த உலகத்தில் அனுபவித்தபோதிலும் சகலத்தையும் ஆண்டவர் அவர்களுடைய  நன்மைக்காகப் போய் முடியும்படிக் கிரியை செய்கிறார் என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுகிறோம். எந்தத் தொல்லையும் இயேசுவின் அன்பில் இருந்து நம்மைப் பிரித்துவிடமுடியாது. (ரோமர் 8:31-39). ‘உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நமக்கு நேரிட்டாலும்’ கிறிஸ்துவின் அன்பில் இருந்து நம்மை எவரும் பிரிக்க முடியாது. ‘இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல’ என்று பவுல் சொல்லுகிறார் (ரோமர் 8:18). அனைத்தும் நம்முடைய நன்மைக்காகவே நிகழும்; அதுவே கர்த்தரின் ஆணையும், அவருடைய மகா பராமரிப்பும் நமக்குக் காட்டித் தரும் உண்மை.

(2) இதை எழுதும்போது ஒரு விஷயத்தை என்னால் சிந்தித்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இதுவரை பார்த்தவற்றிலிருந்து இந்த உலகத்தில் நன்மையையும், ஆசீர்வாதத்தையும் மட்டும் அனுபவிப்பதற்காக கர்த்தர் நம்மை அழைக்கவில்லை. அவருடைய ஆசீர்வாதங்களில் நாமனுபவிக்கும் ‘கஷ்டங்களும்’ உள்ளடங்கியிருக்கின்றன. அந்தக் கஷ்டங்களால் நாம் அழிந்துபோவதில்லை; அதுவே ஆசீர்வாதம். கஷ்டங்களால் நாம் துன்பப்பட்டாலும் அது வெறும் நிழல் மட்டுமே; அதுவே நமக்கு ஆசீர்வாதம்.

கஷ்டமே இல்லாமல் இருப்பதை மட்டுமே ஆசீர்வாதமாகக் கருதுகிறது இன்று பரவசக் குழுக்களின் மத்தியில் பரவலாகக் காணப்படும் ‘செழிப்பு உபதேஷம்’. இது ஒருதலைபட்டசமான, தவறான போதனை; சத்தியத்தை சத்தியமாக இது விளக்கவில்லை. கஷ்டங்களுக்கு மத்தியில் கிறிஸ்துவின் அன்பில் இருந்து நம்மை ஒருவரும் பிரிக்க முடியாது, கஷ்டங்கள் நம்மை அழித்துவிட முடியாது, கஷ்டங்களும் பனிபோல ஒரு நாள் விலகிவிடும் என்ற நம்பிக்கையோடு பரலோக இன்பத்தை எதிர்நோக்கி வாழ்வதே மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கை.

ரோமர் 8:22ல் இந்த உலகம் விடுதலைக்காக தவிப்பதைப் பற்றி விளக்கும் பவுல், நாமும்கூட நமக்குள் தவிக்கிறோம் என்று 8:23ல் சொல்லுகிறார். அந்தத் தவிப்பிற்கு நமது ‘பலவீனங்கள்’ காரணமாக இருப்பதாக அந்த வசனத்தில் காட்டுகிறார். அந்தப் பலவீனங்களுக்குக் காரணம் நமக்குள் இருக்கும் பாவமே (ரோமர் 7:20). அந்தப் பாவம் அடியோடு இல்லாமல் போகப்போவது பரலோகத்தில் மட்டுமே. அதற்கு முன் நாம் நம்முடைய ‘பலவீனங்களாலும்’, புறத்தில் காணப்படும் பாவச் செயல்களாலும் வெற்றிகரமான, ஆசீர்வாதமான ஒரு போராட்ட வாழ்க்கையையே இந்த உலகத்தில் வாழப்போகிறோம். அந்தப் போராட்ட வாழ்க்கையின் மத்தியிலேயே நாம் கிறிஸ்துக்குள்ளான நித்திய ஆனந்தத்தையும், சமாதானத்தையும் அனுபவிக்கப்போகிறோம். இது இந்தப் பாவ உலகம் அறிந்திருக்கிற ஆனந்தத்தையும், சமாதானத்தையும்விட வித்தியாசமானது. கிறிஸ்துவுக்குள்ளான ஆனந்தத்தையும், சமாதானத்தையும் அவரில் விடுதலை பெறாமல் இந்தப் பாவ உலகத்தால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது.

மறுமொழி தருக