சிற்றெறும்பும் கட்டெறும்பும்

ant

கடவுள் தன் பணியில் தனக்கு இஷ்டமானவிதத்தில் தன்னுடைய சித்தப்படி அநேகரைப் பயன்படுத்திக்கொள்ளுகிறார். அது அவருடைய இறையாண்மையைப் பொறுத்தது. பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் நாம் வாசிக்கும் அநேக தேவ ஊழியர்களை அந்தவிதத்தில்தான் பயன்படுத்தியிருக்கிறார். அவர் குயவன்; அவரால் அழைக்கப்பட்டு அவருக்குப் பணிசெய்கிறவர்கள் அவருடைய கையில் இருக்கும் மட்பாண்டங்கள். என்னை ஏன் தெரிவுசெய்தீர்கள்? அல்லது தெரிவுசெய்யவில்லை என்றெல்லாம் ஒருவரும் கடவுளைக் கேட்க முடியாது. எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த கடவுள் தம் சித்தப்படி, தம்முடைய மகிமைக்காக எவரையும் பயன்படுத்துகிறார்; அனைத்தையும் செய்து வருகிறார்.

கடவுளின் பணியில் மோசமானது, ‘நான்’ என்ற ஆணவம். இந்த ‘நான்’ என்ற ஆழமான வடுவை நீக்குவதே ஆவியின் மறுபிறப்பாகிய அனுபவம். இருந்தும் ஆவியில் பிறந்தவர்கள் மத்தியிலும் இந்த ‘நான்’ தலைதூக்கி விடுகிறது. மரணத்திற்குரிய சரீரத்தோடு வாழ்கின்ற நாம் அதைப்பற்றி ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. இருந்தாலும் ஆவியில் பிறந்திருப்பவர்கள் இதை அடையாளம் கண்டு அன்றாடம் அழித்து இருதயத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிட்டால், அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் இதைப்போலத் தொல்லை கொடுப்பது வேறொன்றுமிருக்கமுடியாது. இது ஒரு பெருங்காட்டை அழித்துவிடும் பெருநெருப்பு. நாட்டையே நாசமாக்கிவிடும் நச்சுப்பாம்பு. திருச்சபையை இடுகாடாக மாற்றிவிடும் கொடூரமான, சாத்தானுக்குப் பணிசெய்யும் ஊழியக்காரன் இந்த ‘நான்.’

இது அழித்திருக்கும் தனி நபர்கள் அநேகர்; சபைகள் இத்தியாதி. பரலோகம் அடையும்வரை இதை இல்லாமலாக்க முடியாது; அடக்கி ஆள மட்டுமே முடியும். இதை அடக்குவதிலும், ஆண்டு வெல்லுவதிலுந்தான் ஆவியில் பிறந்த ஒருவனின் உண்மைத்தன்மையைப் பார்க்கிறோம். இந்த  ‘நான்’ இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாஸில் இயங்கியது. புறஜாதிக் கிறிஸ்தவர்களோடு பேதுருவை உணவருந்த முடியாமல் வைத்தது. எயோதியாள், சிந்திகேயாள் இருவரிலும் தலையுயர்த்தி சபையின் ஐக்கியத்தை அசைத்துப் பார்த்தது. கொரிந்து சபை அங்கத்தவர்கள் பலருடைய இருதயங்களில் புரளி செய்து அந்தச் சபையையே பலிக்கடாவாக்கப் பார்த்தது. வெளிப்படுத்தல் விசேஷத்தில் நாம் வாசிக்கும் ஏழு சபைகளில் பிரச்சனையுள்ள சபைகளாக இயேசுவின் கண்களுக்குத் தெரிந்த சபைகளில் இந்த ‘நான்’ புகுந்து விளையாடியிருக்கிறது. மோசேயில் குடிபுகுந்த இது கானான் தேசத்தை மோசே கண்களால் மட்டுமே காணச் செய்தது. நேபூக்காத்நேச்சாரைப் புல்லைத்தின்ன வைத்தது. தன்னுடைய வேலையாட்கள் உணர்த்தும்வரை குஷ்டரோகியான நாகமான் மனந்திரும்பப் பெருந்தடையாயிருந்தது. ‘நான்’ஆல் அழிந்தவர்கள் அநேகம்; அதால் அழிந்து வருகின்றவர்கள் ஏராளம், ஏராளம்.

இத்தனைக்கும் மத்தியில் தங்களில் அதை அடித்துத், துவைத்து, அடக்கிப், பிழிந்து, அழித்தும் வாழ்கிற பவுலையும், தீமோத்தேயுவையும் போன்றவர்களே கர்த்தரின் பணியில் சிறந்த பணியாளர்களாக இருந்திருக்கிறார்கள். லூத்தர், கல்வின், பனியன், ஓவன், விட்பீல்ட், எட்வர்ட்ஸ், ஸ்ப்ர்ஜன் என்று அத்தகையோரின் பெயர்களை வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். இறையாண்மையுள்ள கடவுள் எல்லோரையுமே பவுல், கல்வின், ஓவன் போன்றவர்களைப் போல முன்னணிப் பணியாளர்களாக, பிரசங்கிகளாகப் பயன்படுத்துவதில்லை. எல்லோரும் அப்போஸ்தலர்களா? என்று பவுல் 1 கொரி 12:29ல் கேட்பதற்குக் காரணம், இல்லை என்பது அந்தக் கேள்விக்குப் பதிலாக இருந்ததால்தான். இயேசுவோடிருந்தவர்களில்கூட பேதுருவே முன்னிலைப் பிரசங்கியாக இருந்திருக்கிறார். அவருடைய சகோதரனாகிய யாக்கோபு அப்போஸ்தலனாக இல்லாதிருந்தபோதும் எருசலேம் சபை மூப்பர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். ஏனைய அப்போஸ்தலர்கள் பேதுருவைப்போல முன்னிலை ஊழியக்காரர்களாக இருக்கவில்லை. அவரவருடைய இடத்தை ஏற்றுக்கொண்டு அவர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். பவுலை அப்போஸ்தலர்களுக்கு அறிமுகப்படுத்தி, பின்பு சபையால் பவுலோடு சுவிசேஷப் பணிக்கு பிரித்தெடுத்து அனுப்பப்பட்ட பர்னபா, பவுல் முன்னிலை சுவிசேஷப் பிரசங்கியாகவும், ஊழியராகவும் உயர்ந்தபோது அப்போஸ்தலர் நடபடிகளில் அதற்குப் பிறகு பெயர்குறிப்பிடப்படாதளவுக்கு காணாமல் போயிருக்கிறார். இவர்களெல்லோருமே ஒரேவிதமாக கர்த்தரால் முன்னிலைப் பணிகளில் பயன்படுத்தப்படவில்லை. அதுமட்டுமன்றி அவர்களில் ‘நான்’ ஆகிய நச்சுப்பாம்பு தலையுயர்த்தி ஒருவரையொருவர் நாசப்படுத்தி திருச்சபையை அழிக்கவும் முயலவில்லை. எல்லோருமே தங்கள் நிலை உணர்ந்து, பணி உணர்ந்து கர்த்தருக்காக உழைத்திருக்கிறார்கள்.

திருச்சபை வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ஒரு தடவை மோட்சப் பயணம் நூலை எழுதிய ஜோன் பனியன் இலண்டனில் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். அதை அறிந்த பெரும் இறையியலறிஞரான ஜோன் ஓவன் அவருடைய பிரசங்கத்தைக் கேட்பதற்காக அதிகாலையிலேயே போயிருந்தார். அந்தக் காலத்தில் ஜோன் ஓவன் பிரசித்திபெற்ற இறையியல் அறிஞராக, கல்விமானாக, பிரசங்கியாக, நாட்டை ஆண்ட ஒலிவர் குரோம்வெலுக்குக் கீழ் அவருடைய நம்பிக்கைக்கும், மதிப்புக்கும் பாத்திரமானவராகப் பணிசெய்து கொண்டிருந்தார். குரோம்வெல் அவரைப் பாராளுமன்ற துவக்கநாளில் பிரசங்கம் செய்ய வைத்திருந்தார். அந்தளவுக்கு ஓவன் பிரசித்தி பெற்றவராக இருந்தார். ஓவனைப் போலக் கல்வியோ, பதவிகளோ தகுதிகளோ பனியனுக்கிருக்கவில்லை. பனியனின் பிரசங்கத்தை ஜோன் ஓவன் கேட்கப்போயிருந்ததைக் கேள்விப்பட்ட ஒலிவர் குரோம்வெல், அவரைப் பார்த்து, ‘வெறும் பாத்திரம் திருத்தும் வேலை செய்யும் இந்த மனிதனுடைய பிரசங்கத்தையெல்லாம் கேட்கப்போவது உங்களுடைய தகுதிக்கு சரியானதென்று நினைக்கிறீர்களா?’ என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த ஓவன், ‘இந்த மனிதனின் பிரசங்க ஆற்றல் மட்டும் எனக்குக் கிடைக்குமானால் என்னுடைய கல்வித்தகைமைகள் அனைத்தையும் அவருக்குத் தாரைவார்த்துக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று சொன்னாராம். ஜோன் ஓவனில் ‘நான்’இன் நடமாட்டமே இருக்கவில்லை பார்த்தீர்களா?

திருச்சபைப்பணி பிரசங்கிகளோடும், முன்னிலை ஊழியர்களின் பணிகளோடும் மட்டும் நின்றுவிடுவதில்லை. அதன் எத்தனையோ பணிகளை அங்கத்தவர்களான விசுவாசிகள் செய்யவேண்டிய கடமை இருக்கிறது. உதவிக்காரர்களுடைய பணி திருச்சபையில் முக்கியமானது. நல்ல திறமையான உதவிக்காரர்கள் போதகர்களுக்கும் சபைக்கும் ஆசீர்வாதமானவர்கள். அதேபோல் வேறு எத்தனையோ பணிகளை சபையார் செய்துவர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சபையார் எல்லோருமே ‘நான்’ஐத் தங்களில் அழித்து கடவுளின் மகிமையை மட்டுமே முன்னிருத்தி தங்களுடைய பணிகளைத் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து செய்து வரவேண்டும். பரிசுத்தத்தில் வளர்ந்து வருகிறவர்களால் மட்டுமே ‘நான்’ எனும் நாகத்தை அழித்து வாழ்க்கையில் உயர முடியும்.

‘நான்’ஐத் தங்களில் அடக்கி விசுவாசப் பணியில் ஈடுபட்டுவந்திருக்கிறவர்களைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; சிலரை நேரில் கண்டிருக்கிறேன். பேனர் ஆவ் டுருத் என்ற சீர்திருத்த நூல்களை வெளியிடும் பதிப்பகத்தில் அது வெளியிடும் நூல்கள் அனைத்தையும் ஆரம்ப காலத்தில் இருந்து அச்சுக்குப் போகுமுன் பிழைகளைத் திருத்தியும், ‘எடிட்’ செய்தும் பணிசெய்து வந்தவர் எஸ். எம். ஹவுட்டன் என்பவர். கல்லூரி ஆசிரியராகப் பணிபுரிந்திருந்த இவர் மறையும் காலம்வரையும் பேனர் ஆவ் டுருத்தில் நூல்களை எடிட் செய்து வந்திருக்கிறார். இவர் கண்ணில்படாமல் அந்தப் பதிப்பகத்தின் ஒரு நூலும் அச்சாகவில்லை. அவர் இறக்கும்வரை இந்தப் பணியை அவர் செய்து வந்திருப்பது பெரிதளவில் எவருக்கும் தெரியாமலிருந்தது. ஒரு நூலிலாவது இவருடைய பெயரை எவரும் கண்டதில்லை; அவரே கைப்பட எழுதிய நூலில் தவிர. தன்னுடைய பெயர் அவற்றில் வரவேண்டுமென்று அவர் ஒருபோதும் எதிர்பார்த்தது கிடையாது. அத்தனை முக்கியமான, அவசியமான பணியைச் செய்த அந்த மனிதர் கர்த்தருக்காகப் பணி செய்வதில் மட்டுமே கருத்தாக இருந்தாரே தவிர தன் பெயர் எங்கும் தெரியவேண்டுமென்பதில் அல்ல. தன்னில் ‘நான்’ எனும் கருநாகம் தலைதூக்காமல் அவர் பார்த்துக்கொண்டிருந்தது அவருடைய விசுவாசத்தின் பரிசுத்த தன்மையையும், அனுபவ முதிர்ச்சியையும் காட்டுகிறது. அது பேனர் ஆவ் டுருத்தின் பணி தடங்களில்லாமல் நடைபோடவும் உதவியது.

பேனர் ஆவ் டுருத் ஆரம்பமாகக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் ஸ்ட்னி நோர்ட்டன். பேனர் ஆவ் டுருத் என்ற பெயரையும் அவரே தேர்ந்தெடுத்தார். இன்றைக்கு அவருடைய பெயரை ஒருவரும் அறிந்திருக்க வழியில்லை. அவர் பெயர் பெருமளவில் பேனர் ஆவ் டுருத் இதழ்களில் வந்ததுமில்லை; அவர் மறைந்தபோது தவிர. போதகரும் என் நண்பருமான மறைந்துவிட்ட டேவிட் பவுன்டன் இந்தப் பதிவை ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். வளர்ந்திருக்கும் பல ஊழியங்களின் பின்புலத்தை ஆராய்ந்து பார்த்தால் ஹவுட்டனைப் போலவும், நோர்ட்டனைப்போலவும் பலர் அவை உருவாகவோ, வளரவோ பெருங்காரணமாக இருந்திருப்பார்கள். பாராட்டுதல்களும், பெயரும் அவர்களுக்குப் பெரிதாக இருந்திருக்காது. கடவுளுக்குப் பணி செய்வது மட்டுமே அவர்களுடைய நோக்கமாக இருந்திருக்கும்.

பேனர் ஆவ் டுருத் பதிப்பகத்தில் ஆர்வம் காட்டி உதவிய இன்னொருவர் பெயர் மெக்கலம் என்பது. விமானத்துறையில் விமானம் தொடர்பான இவருடைய கண்டுபிடிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்குப் பெரும் ரோயல்டி கிடைத்தது. முழுவதையும் பேனர் ஆவ் டுருத் நிறுவனப்பணிகளுக்கு அர்ப்பணித்திருந்தார் இந்த மனிதர். அதற்காக அவர் ஒன்றையும் வாழ்வில் எதிர்பார்க்கவில்லை. இன்னொரு உதாரணத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். இலண்டனில் இன்று காணப்படும் இவென்ஜலிக்கள் நூலகம் ஆரம்பத்தில் வில்லியம்ஸ் என்பவருக்கு சொந்தமாக இருந்தது. இங்கிலாந்தில் ஒரு சிற்றூரில் அவருடைய வீட்டிலேயே அந்த நூலகம் இருந்தது. அதில் அரிதான நூற்றுக்கணக்கான சீர்திருத்தவாதிகளினதும், பியூரிட்டன் பெரியவர்களினதும் நூல்கள் இருந்தன. யாருக்கும் தெரியாமல் அந்த வீட்டிலிருந்த நூலகத்தைக் கண்டுபிடித்தவர் வில்லியம்ஸின் நண்பராக இருந்த டாக்டர் மார்டின் லாயிட் ஜோன்ஸ். நூலகம் அந்த வீட்டில் யாருக்கும் பயன்படாமல் இருப்பதைவிட இலண்டனில் பொது இடத்தில் இருந்தால் பலரும் போய் வாசித்துப் பயன்பட வசதியாக இருக்குமே என்று ஆலோசனை தந்து வில்லியம்ஸை ஊக்குவித்தார் லாயிட் ஜோன்ஸ். உடனடியாக நூலகம் இலண்டன் போய்ச் சேர்ந்தது. இந்த நூலகமே பேனர் ஆவ் டுருத் பதிப்பகம் நூற்றுக்கணக்கான சீர்திருத்த, பியூரிட்டன் நூல்களை மக்கள் வாசிக்கும்படியாக வெளியிடப் பேருதவி புரிந்தது. எந்தெந்த நூல்களை வெளியிட வேண்டும் என்று ஆய்வு மேற்கொண்ட பேனர் ஆவ் டுருத் எடிட்டர்களில் ஒருவரான ஜோன் ஜே. மரே இந்த நூலகத்து நூல்களை ஆய்வு செய்தே அவற்றைத் தீர்மானித்தார். இதை நான் விளக்கக் காரணம் இதற்கெல்லாம் மூலகாரணமாக இருந்த இவெஞ்சலிக்கள் நூலக சொந்தக்காரரான வில்லியம்ஸ் எந்தப் பிரதியுபகாரத்தையும் எதிர்பாராமல் தன் நூலகத்தைக் கிறிஸ்தவப் பணிக்காக ஒப்புக்கொடுத்ததை நினைவுறுத்தத்தான். பெயரையோ, புகழையோ, பிரதிபலனையோ இந்த நல்ல மனிதர் எதிர்பார்க்காமல் கர்த்தரின் பணியை மட்டுமே கருத்தில் கொண்டு வாழ்ந்திருந்தார்.

‘நான்’ ஆகிய நாகத்திற்கு தன்னில் இடங்கொடுக்காமல் வாழ்ந்து மறைந்த இன்னொருவர் எனக்கு அதிகம் பரிச்சயமான மதிப்புக்குரிய ஜோன் வெயிட். வயதில் மூத்தவர்கள்கூட அவரை மரியாதையோடு Mr. Waite என்றே விளிப்பார்கள். நான் இறையியல் கற்ற சவுத் வேல்ஸ் இறையியல் கல்லூரியின் தலைவராக பலகாலம் அவர் இருந்தார். பழைய ஏற்பாட்டு இறையியலில் அவர் அதிக பாண்டித்தியம் பெற்றவர்; அந்தக்காலத்தில் அவருக்கு நிகரில்லை எனலாம். டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸோடு அதிக தொடர்பு வைத்திருந்தவர். எசேக்கியல் நூலுக்கு அவர் எழுதிய வியாக்கியானத்தை வெளியிட விரும்பிய ஒரு பதிப்பகம் அதில் மாற்றங்கள் செய்ய விரும்பியபோது அதற்கு அனுமதிகொடுக்க மறுத்த ஜோன் வெயிட் அவர்கள் கடைசிவரை அதை வெளியிடவில்லை. கல்லூரி காலத்தில் பழைய ஏற்பாட்டு நூல்களையும், வெளிப்படுத்தல் விசேஷத்தையும் அவரிடம் கற்றுக்கொண்டபோதும், சாப்பாட்டு வேளையின்போதும், ஜெபக்கூட்டம் நடத்துகிற வேளையிலும், பிரசங்கம் செய்கிறபோதும், ஏன் அவர் வீட்டுக்குப் போனபோதும் சிலவருடங்கள் அவரைப் பக்கத்தில் இருந்து படிக்கமுடிந்தது. அவர் குரலை உயர்த்திப் பேசி நான் கண்டதில்லை. தாழ்மையின் மொத்த உருவாக அவர் இருந்தார்.

எத்தனையோ தகுதிகளும், ஆற்றலும், திறமையும் இருந்தபோதும் அவற்றையெல்லாம் பயன்படுத்திப் பெயர்தேடிக்கொள்ளாமல் கல்லூரி இருந்த காலம்வரை ‘நான்’ தன்னில் தலைதூக்காமல் அவர் பணிபுரிந்திருக்கிறார். எந்த முரண்பாடுகளுக்கும் இடங்கொடுத்து சத்தியத்தை மாற்றி அமைக்காமல் அதை சத்தியமாகப் போதித்து கல்லூரியை நடத்தியவர். பியூரிட்டன் காலத்துப் பெரியவர்களின் நம்பிக்கைகளிலும், பரிசுத்தத்திலும், போதக ஊழிய முறைகளிலும் அக்கறைகாட்டி மாணவர்களை வழிநடத்துவதை இலக்காகக் கொண்டு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து உழைத்தவர். ‘அக்கறையோடும் கவனத்தோடும் படியுங்கள், கர்த்தருக்காகப் படியுங்கள். அதிக புள்ளிகளுக்காகப் படிக்காதீர்கள். புள்ளிகளும், பாராட்டுதல்களும் தேடிவந்தால் கர்த்தர் அனுப்பியதாக மட்டும் எண்ணிக்கொள்ளுங்கள்’ என்று எங்களுக்கு அறிவுரை சொன்னவர். கல்லூரி மூடப்பட்ட காலத்தில் செபீல்டில் போதகப்பணியை ஏற்றுக்கொண்ட வெயிட் அவர்கள் குறுகிய காலத்திலேயே பிரசங்கத்தின் மூலம் சபையை நிரப்பினார். இன்று அவர் இல்லை. மனத்தாழ்மையின் மொத்த உருவாக இன்றும் அவர் என் கண் முன் நிற்கிறார்.  ஒரே வாரத்தில் பலதடவைகள் தங்களுடைய சொந்த முகத்தையே மாறிமாறி முகநூலில் போட்டு ரசித்து சுய ஆராதனை செய்து வரும் இந்தத் முகநூல் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இது புரியுமா?

நம்முடைய இலக்கியப் பணியில் இந்தவகையில் ‘நான்’ ஆகிய நச்சுப்பாம்பு தொல்லைகொடுக்காமல் பார்த்துக்கொள்ளும் பணியாளர்கள் பலர் இருந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட இருவரின் ஊக்குவிப்பாலேயே திருமறைத்தீபம் இதழ் ஆரம்பமானது. இந்த ‘நான்’ என்னிலும் தலைதூக்கிவிடாமல் நானும் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் பணிதொடர, பலரும் பயனடைய நாங்கள் ‘நான்’ ஆகிய நாசதாரியை நசுக்கிவைத்திருக்க வேண்டியிருக்கிறது. நல்ல பணிகளை ‘நான்’ நாசமாக்கிவிடும். அதற்கு இடங்கொடுப்பவனை முதலில் அழித்து அவனால் மற்றவர்களுக்கு எந்தப் பயனுமில்லாமல் ஆக்கிவிடும். கர்த்தரின் பணியில் முன்னிலைப் பணியாளனாக இருந்தாலும் கடைநிலைப் பணியாளனாக இருந்தாலும் ‘நான்’ தலைதூக்கிவிடாமல் செய்யும் பணியும், அதால் பயன்படப்போகும் ஆத்துமாக்களின் நன்மையும் மட்டுமே முக்கியம் என்ற எண்ணப்போக்கோடு செயல்பட வேண்டும்.

சிற்றெரும்புகளைக் கவனித்திருக்கிறீர்களா? எந்தப் பணியையும் செய்ய அவை கூட்டமாகச் செயல்படும். செய்யும் பணியையும், அதன் நிறைவேற்றுதலையுமே இலட்சியமாகக் கொண்டு அவை உழைக்கும். வரிசையாக ஒழுங்கோடும், ஒற்றுமையோடும் அவை பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு கொண்டுபோவதைக் கூர்ந்து பார்த்திருக்கிறேன். அங்கு சண்டையிருக்காது, முகச்சுளிப்பிருக்காது, ‘நான்’ எனும் அகந்தையோடு செயல்படும் ஓர் எறும்புகூட இருக்காது. யார் பெரியவர், சிறியவர் என்ற எண்ணம் எதுவுமில்லாமல் செய்யும் பணியை மட்டுமே கருத்தோடு செய்யும் சிற்றெறும்புகள் நமக்குப் பாடமாக இருக்கின்றன. எந்தச் சிறுமைத்தனத்தையும் அவற்றின் மத்தியில் நாம் பார்ப்பதில்லை. ஆத்துமா இல்லாத அந்த சாதாரண ஜீவன்கள் ஆத்துமாவோடும், அறிவோடும் பிறந்திருக்கும் நமக்கு இலக்கணமாக இருக்கின்றன. ‘நான்’ஐ உங்களில் நசுக்கிவைத்து வாழுங்கள்; நிச்சயம் யாரையும் கடிக்கும் கட்டெறும்பாகிவிட மாட்டீர்கள்.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக