சமீபத்தில் மலேசியாவில் . . . !

மலேசியா நாட்டிற்கு நான் பல தடவைகள போயிருக்கிறேன். நல்ல நண்பர்கள் பலர் அங்கிருக்கிறார்கள். நம் இதழ்களை வாசிக்கும் வாசகர்கள் பலரிருக்கிறார்கள். செழிப்போடு வளர்ந்து வரும் மலேசியா மலாயர்கள், சீனர்கள், தமிழர்கள் என மூன்று இன மக்களைக் கொண்ட நாடு. மலேசியா என்றதுமே அவர்களுடைய உணவே எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. ருசியான உணவு மட்டுமல்லாது பலவிதமான உணவுவகைகளை மலேசியாவில் பார்த்ததுபோல் நான் வேறெங்கும் பார்த்ததில்லை. விருந்தோம்புதலில் சிறந்தவர்கள் இந்நாட்டு மக்கள். இரவு பத்து மணிக்கு மேலேயும் தெருவில் உணவுச் சாலைகள் திறந்து காணப்படுவது மட்டுமல்லாமல், தெரு வரையும் கூட வந்துவிடுகின்றன. அவர்கள் நாட்டில் கிடைக்கும் ரோட்டிச் சானாவும், தேத்தாரிக்கும் எனக்கு மிகவும் பிடித்தமானவைகள். நாட்டின் செழிப்பையும், உணவின் சிறப்பையும் மட்டுமா நான் எழுதிக் கொண்டிருக்க முடியும்? அவற்றைவிடவும் முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன.

சமீபத்தில் நமது இதழ்களை அங்கே பலருக்கும் அனுப்பி வைத்துக் கொண்டிருந்த மோகன் என்ற நல்ல விசுவாசி ஐம்பதாவது வயதிலேயே மாரடைப்பினால் கர்த்தரின் சந்நிதானத்தை அடைந்தார். அவர் சபையாரை ஊக்குவித்து, சபை வாலிபர்கள் வாழ்க்கையில் அக்கறைகாட்டி அவர்களுடைய இதயத்தில் அழிய முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். இப்போது அவர் நம்மத்தியில் இல்லை. நம்மிதழ்களைக் கருத்தோடு பலருக்கும் அனுப்பி வைப்பதில் அவர் ஆர்வத்தோடு ஈடுபட்டு வந்திருந்தார் என்பது எனக்கு சமீபத்தில்தான் தெரிய வந்தது. அந்தளவுக்கு தாழ்மையும், கிறிஸ்துவில் வைராக்கியமும் கொண்டு வாழ்ந்திருக்கிறார் மோகன். ஓய்வு நாளுக்கு மதிப்புக்கொடுத்து அந்நாளில் வேறு வேலைகளை செய்யாமல் சபை ஐக்கியத்தை பெரிதும் மதித்து வாழ்ந்திருக்கிறார் இந்த நல்ல மனிதன். தன்னுடைய வாழ்க்கையின் மூலமும், நாவினாலும் கிறிஸ்து மகிமையடையும்படியாக வாழ்ந்திருக்கிறார் மோகன். அவருடைய இழப்பு வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு பெரிய இழப்பு.

மலேசியாவுக்கு தமிழர்கள் இந்தியாவிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பே போயிருக்கிறார்கள். சோழர்கள் அந்நாட்டை மட்டுமன்றி பக்கத்தில் இருக்கும் நாடுகளையும் ஆண்டிருப்பதாக வரலாறிருக்கிறது. ராஜ ராஜ சோழனுடைய பெயரில் கொலாலம்பூரில் ஒரு தெருவே இருக்கிறது. மலாயர்களின் மொழியில் பல வடமொழிச் சொற்களுக்கு, தமிழ்ச் சொற்களும் பெருகிக் காணப்படுகின்றன. பிரிட்டன் ஆசிய நாடுகளை ஆண்டகாலத்தில் மலேசியாவும், சிங்கப்பூரும் அவர்களுக்கு கீழிருந்தன. அக்காலத்தில் இந்தியத் தமிழர்கள் அதிகமாக அங்கே குடியேற்றப்பட்டார்கள். ஒரு காலத்தில் தமிழர்கள் மலேசியாவில் செல்வாக்குடன் வாழ்ந்திருந்த போதும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் அவர்களுடைய தொகையும் செல்வாக்கும் இறங்குமுகமாகவே இருந்து வந்திருக்கின்றன. இன்று அந்நாட்டு ஜனத்தொகையில் இந்தியர்கள் ஏழு சதவீதம் மட்டுமே.

எனக்கு மிகவும் வருத்தத்தைத் தருகின்ற காரியம் அந்நாட்டில் தமிழ் மொழி கொஞ்சம் கொஞ்சமாக அழிவடைந்து வருவதுதான். தமிழர்கள் பொருளாதார, அரசியல் செல்வாக்கில்லாத நிலையில் வாழ்ந்து வருவதால் தமிழில் கல்வி கற்று தமிழில் சரளமாக எழுதவும், வாசிக்கவும் முடியாத நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். வீட்டில் தமிழில் பேசுகின்ற அவர்கள் எழுதப் படிக்க மலாய் மொழியையே பயன்படுத்தி வருகிறார்கள். அதே நேரம் மலாய் மொழியிலும் அவர்களுக்கு பாண்டித்தியம் இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் தமிழ் மொழி மலேசியாவில் ஒரு காலத்தில் பேசப்பட்ட மொழியாக இருந்தது என்று சொல்லக்கூடிய நிலையே ஏற்படும். இந்நிலை தமிழ் சபைகளையும் பாதிக்கிறது. தமிழில் பேசி, தமிழில் பிரசங்கத்தைக் கேட்டாலும், பலரால் தமிழ் வேதத்தை வாசிக்க முடியவில்லை. அம்மொழியில் எழுத முடியவில்லை. கிறிஸ்துவின் சுவிசேஷம் தடையில்லாமல் தொடரத் தமிழ்க் கல்வி மலேசியத் தமிழர்களிடம் வளரவும், தொடரவும் வேண்டியது அவசியம். அது நடக்குமா?

_____________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக