சிந்தனை செய் மனமே, சிந்தனை செய்!

நம்மினத்தில் சிந்தனைக்கு அநேகர் இடங்கொடுப்பதில்லை. அதாவது, ஆழ்ந்த அறிவுபூர்வமான சிந்தனைக்கு இடம்கொடுப்பதில்லை என்றே சொல்லவந்தேன். நம்மவர்கள் மனத்தில் ஆழ்ந்த அறிவுபூர்வமான சிந்தனையைவிட உணர்ச்சிகளுக்கே அதிக இடம் கொடுக்கிறார்கள். தமிழ் சமுதாயம் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியது. சிந்திக்க அவசியமில்லாமல் உணர்வுகளை மட்டும் சந்தோஷப்படுத்தும் ஒருவகைக் கிறிஸ்தவமே நம்மினத்தை இன்று ஆளுகிறது. 16ம் நூற்றாண்டுக்கு முன் ரோமன் கத்தோலிக்க மதம் வேதத்தை வாசித்து மனிதன் சிந்திக்க வழியில்லாமல் செய்திருந்தது. சிந்தனை இருக்கவேண்டிய இடத்தை சிலை வணக்கமும், சடங்குகளும் பிடித்துக்கொண்டன. 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் எழுந்தபோதே சிலைவணக்க சிறைவாசத்தில் இருந்து மக்கள் விடுதலை அடைய முடிந்தது. இன்று மறுபடியும் சிந்தனை இருக்கவேண்டிய இடத்தை வெறும் உணர்ச்சிகள் பிடித்துக்கொண்டிருக்கின்றன. இது 21ம் நூற்றாண்டு சிலைவணக்கமாக மாறியிருக்கிறது. அறிவுபூர்வமானதும், ஆக்கபூர்வமானதுமான சிந்தனைக்கு இடம்கொடாததாலேயே கிறிஸ்தவ சபைகளும், பிரசங்கங்களும், கிறிஸ்தவ தலைமையும் இன்று தாழ்ந்த நிலையில் காணப்படுகின்றன. உண்மையில் அத்தகைய நிலையில் இருக்கிறோம் என்பதையே உணராததாக நம்மினத்துக் கிறிஸ்தவம் இருந்து வருகிறது. அது நமக்குக் கிடைத்திருக்கும் சாபம் என்றே சொல்வேன்.

மனத்தைப் பயன்படுத்தி சிந்திக்க வேண்டியதன் அவசியத்தைப்பற்றி 1972ல் ஒரு நூலை இவெஞ்சலிக்கள் ஆங்கிலிக்கன் பிரிவைச் சேர்ந்த, மறைந்த ஜோன் ஸ்டொட் வெளியிட்டார். அந்நூலின் 1974ம் ஆண்டுப் பதிப்பு என்னிடம் இருக்கிறது. அதை நான் வாசித்துப் பலதடவைகள் பிரசங்கங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். அது இன்றும் அச்சில் இருக்கிறது. ஜோன் ஸ்டொட்டோடு சில விஷயங்களில் எனக்கு முரண்பாடுண்டு; அவை இறையியல் சம்பந்தமானவை. இருந்தபோதும் சித்திப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் இந்த நூலை நான் அவசியம் சிபாரிசு செய்கிறேன். உண்மையில் இன்று அவசியமாக எல்லோரும் வாசிக்கவேண்டிய சிறப்பான நூல் என்றே கூறுவேன். கிறிஸ்தவர்கள் அதுவும் நம்மினத்தவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல்.

ஜோன் ஸ்டொட் இதை எழுதிய காலத்தில், இங்கிலாந்தில் கிறிஸ்தவர்கள் மத்தியில் பரவலாக உருவாகியிருக்கும் அறிவுபூர்வமான சிந்தனைக்கெதிரான (Anti-Intellectualism) நிலைப்பாட்டை உணர்ந்து, அந்த ஆபத்திற்கெதிரான எச்சரிக்கையாக இந்நூலை எழுதினார். அறிவைவிட உணர்ச்சியே மேலானது என்ற நிலைப்பாட்டை எடுத்து உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கூட்டத்தார் அன்று வளர ஆரம்பித்திருந்தார்கள். ஸ்டொட் அந்த ஆபத்தை அடையாளங்கண்டுகொண்டார். அதைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்கள் அறிவுபூர்வமாக சிந்திக்கிறவர்களாக இருக்கவேண்டும் என்பதை ஸ்டொட் வலியுறுத்தி வேத ஆதாரங்களோடு இந்நூலை எழுதியிருக்கிறார். அறிவற்ற வைராக்கியத்தை மட்டும் கொண்டவர்களாக இளைஞர்கள் இருந்து வருவதை ஸ்டொட் உணர்ந்தார். அதனால் ஏற்படும் ஆபத்தை அவர் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். சிந்திக்காமலேயே உணர்ச்சிவசப்பட்டு எந்தக் கூக்குரலுக்காகவும் தன்னை ஒப்புக்கொடுத்துவிடுகிறதாக இளைஞர்கள் இருப்பது அவருக்கு வருத்தத்தை அளிக்கிறது. பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரியின் தலைவராக இருந்த டாக்டர் ஜோன் மெக்கேயின் வார்த்தைகளை ஸ்டொட் நினைவுகூருகிறார்,

‘சிந்தித்துப் பார்க்காமல் எதற்கும் நம்மை அர்ப்பணிப்பது மதவெறி; அர்ப்பணிப்பில்லாத சிந்தனையைக் கொண்டிருப்பது சகலவித நடவடிக்கைகளையும் முடக்கிவிடும்.’

இன்டர்வாசிடி வருடாந்தர கூட்டத்தில் ஜோன் ஸ்டொட் கொடுத்த விரிவுரையே இந்நூல். இது நான்கு அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது. இதன் இரண்டாவது அதிகாரத்தில் நம் மனத்தை நாம் ஏன் பயன்படுத்தவேண்டும் என்பதை ஸ்டொட் விளக்கியிருக்கிறார். இந்த அதிகாரம் நூலுக்கு அவசியமான அத்திவாரத்தை இட்டிருக்கிறது. இந்த அதிகாரத்தில் ஸ்டொட்டின் வேதவிளக்கங்கள் தகர்க்க முடியாததாக இருக்கின்றன. மனத்தைப் பயன்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வேதத்தில் இருந்து ஆதாரங்களை அள்ளிவைக்கிறார் ஸ்டொட். எனக்குப் பிடித்த அதிகாரம் இது.

சிந்திக்கும் ஆற்றலுள்ள மனத்தோடு மனிதனைக் கர்த்தர் படைத்திருக்கிறார் என்று கூறும் ஸ்டொட், ஆதியாகமத்தில் (2, 3) மனிதன் படைக்கப்பட்ட விதத்தை இங்கு ஆதாரமாகக் காட்டுகிறார். ஏனைய உயிரினங்களைவிட மனிதன் தேவசாயலோடு சிந்திக்கக்கூடிய இயல்புள்ளவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். மனிதனுக்கு மட்டுமே புரிந்துகொள்ளும் தன்மை இருக்கின்றது. படைப்பின் தேவன், புத்தியுள்ளவனாக மனிதன் உழைத்து நிலத்தைப் பண்படுத்தி தன் நன்மைக்காகப் பயன்படுத்தி தன்னோடு உறவாடும்படிக் கர்த்தர் அவனைப் படைத்திருக்கிறார். மனிதனின் சிந்திக்கக்கூடிய தன்மை அவனை ஏனைய படைப்புயிர்களில் இருந்து வேறுபடுத்துகின்றது. அதேநேரம், புத்தியற்றவனாக மிருகத்தைப் போல மனிதன் நடந்துகொள்ளும்போது வேதம் அவனை நிந்திக்கிறது (சங் 32:9; 73:22). மனிதனுக்குரிய இயல்புகளைக் கொண்டிராதபோதும், எறும்புகள் மனிதன் வெட்கப்படும்படியான உழைப்புதிறனைக் கொண்டிருக்கின்றன. இருந்தபோதும் பொதுவாக மிருகங்கள் சிந்திக்காமல் உடனடியாக எதையும் செய்யும் இயல்பைக் கொண்டிருக்கின்றன; மனிதன் சிந்தித்து தீர்மானங்களை எடுக்கும் இயல்பைக் கொண்டிருக்கிறான்.

பாவத்தினால் ஆதியில் ஏற்பட்ட வீழ்ச்சி மனிதனின் அனைத்துப் பாகங்களையும் முழுமையாகப் பாதித்திருக்கிறது. அவனில் பாவம் பாதிக்காத எந்தப் பகுதியும் இல்லை; மனம், சித்தம் உட்பட. மனம் பாவத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதனால் அதைச் சாக்காக வைத்து உணர்ச்சிகளை நாடிப்போவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல; உணர்ச்சிகளும் பாவத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பாவம் மனிதனைப் பாதித்திருந்தபோதும் கர்த்தர் அவனைத் தொடர்ந்து சிந்தித்து ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்கும்படிக் கட்டளையிடுகிறார் (ஏசாயா 1:18). பொதுவான காரியங்களில் நீ பயன்படுத்தும் புத்தியை ஒழுக்கத்தைப் பற்றியும், ஆவிக்குரியதுமான காரியங்களிலும் ஏன் பயன்படுத்தக்கூடாது என்று கர்த்தர் கேட்கிறார் (மத்தேயு 16:1-4; லூக்கா 12:54-57). மனிதன் பகுத்தறிந்து தீர்மானங்களை எடுத்து அதன்படி நடக்கும் இயல்புள்ளவன். தன்னுடைய நடத்தைக்கான தகுந்த காரணங்களை அவன் கொண்டிருக்காமல் இருந்தால் அத்தகைய காரணங்களை அவன் நாடி அறிந்து தனக்குள்ளேயே சமாதானம் தேடிக்கொள்ள வேண்டிய இயல்போடு மனிதன் வாழ்கிறான்.

ஸ்டொட்டின் இந்த வேத ஆதாரங்களை மறுதலிக்க முடியாது. மனிதன் சிந்தித்து எதையும் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கவேண்டும் என்றும் அப்படிச் செய்து வாழாமல் இருப்பது அவனை மிருகங்களுக்கு ஒப்பானவனாகக் காட்டிவிடும் என்ற வேதபோதனை சாட்டையடிபோல் தாக்குகிறது. நம்மினம் சிந்திப்பதாக எண்ணிக்கொண்டு சிந்தனையற்று வாழ்வது எத்தனை ஆபத்தானதும், சிரிப்பை உண்டாக்குவதுமாயிருக்கிறது. முக்கியமாக ஆவிக்குரிய விஷயத்தில் நம்மினம் சிந்திப்பதேயில்லை என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆவிக்குரிய விஷயத்தில் உணர்ச்சிகளுக்கு அடியோடு வாழ்க்கையை அர்ப்பணித்து புத்தியில்லாது, சிந்தித்து ஆராய மறுத்து அன்றாடம் காய்ச்சிகளுக்கெல்லாம் அடிமையாகி, அவர்களை ஆவிக்குரிய தகப்பன்மார்களாக அங்கீகரித்துப் பணக்காரர்களாக்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது நம்மினத்துக் கிறிஸ்தவம்.

ஜோன் ஸ்டொட் படைப்பில் ஆரம்பித்து பொதுவாக மனிதன் ஏன் சிந்திக்க வேண்டியவனாக இருக்கிறான் என்பதை வலியுறுத்திக்காட்டிவிட்டு, கிறிஸ்தவர்கள் கர்த்தரின் எண்ணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை வற்புறுத்துகிறார். அதை வலியுறுத்த அவர் நான்கு கிறிஸ்தவ போதனைகளை உதாரணங்காட்டுகிறார். முதலாவதாக, கர்த்தருடைய வெளிப்படுத்தல் பகுத்தறிந்து விளக்கும் வெளிப்படுத்தலாக இருக்கிறதென்கிறார் ஸ்டொட். அதாவது, கர்த்தர் படைப்பு தன்னைப் பற்றி வெளிப்படுத்துவதை மனிதன் அறிந்துகொள்ள வேண்டும் என்கிறார். இயற்கை கர்த்தரைப் பற்றி நமக்கு விளக்குவதாக இருக்கின்றது. அத்தோடு கர்த்தர் மனிதனோடு பேசுகிறவராக இருக்கிறார்; அவர் பேசித் தன்னைப்பற்றி வெளிப்படுத்தல் மூலம் மனிதனுக்கு விளக்கியிருக்கிறார். இதெல்லாம் மனிதன் சிந்தித்து பகுத்தறிந்து தன்னை அறிந்துகொள்ள வேண்டும் என்பது கர்த்தரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்பதை விளக்குகின்றன.

இரண்டாவதாக, கிறிஸ்தவம் வெளிப்படுத்தப்பட்ட வாழ்க்கை நியதியாக இருக்கிறது என்கிறார் ஸ்டொட். கர்த்தர் பேச்சின் மூலமும், வார்த்தையின் மூலமும் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வார்த்தைகளை நாம் சிந்தித்து ஆராய்ந்து பார்க்கவேண்டும். கர்த்தருடைய பகுத்தறியும்படியான வெளிப்படுத்தல் பகுத்தறியக்கூடிய மனிதனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் ஸ்டொட். கர்த்தர் தன் வார்த்தையை நாம் மனத்தைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும்படித் தந்திருக்கிறார். அந்த வெளிப்படுத்தலை நாம் பெற்று, வாசித்து, புரிந்துகொண்டு அதற்குக் கீழ்ப்படிவதே நம் கடமையாக இருக்கிறது.

மூன்றாவதாக, மீட்பை ஸ்டொட் உதாரணங்காட்டுகிறார். மீட்பைக் கிறிஸ்துவின் மூலம் கர்த்தர் நிறைவேற்றி சுவிசேஷத்தின் மூலம் அதை அறிவித்தார். கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியின் மறுபிறப்பை அடைந்து புதிய மனத்தை இப்போது கொண்டிருக்கிறார்கள். அந்த மனம் தொடர்ந்து புதுரூபமாகவேண்டும் என்று பவுல் ரோமர் 12:1-2ல் விளக்கியிருக்கிறார். சிந்தித்து ஆராய்ந்து தீர்மானங்களை எடுப்பதன் மூலம் இதைக் கிறிஸ்தவர்கள் செய்யவேண்டியவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்துவின் மீட்பு நமக்குக் காட்சியாகக் கொடுக்கப்படவில்லை; புத்தியுள்ள வார்த்தைகளால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கண்கள் பார்க்கும்படியாக அது கொடுக்கப்படவில்லை; காதுகளினால் கேட்கவும், மனத்தைப்பயன்படுத்தி சிந்தித்துப் புரிந்துகொள்ளும் விதத்திலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கிறிஸ்தவர்கள் தங்களுடைய மனத்தைப் பயன்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் நான்காவது கிறிஸ்தவ போதனையாக கர்த்தரின் நியாயத்தீர்ப்பு காணப்படுகிறது என்கிறார் ஸ்டொட். நம்முடைய அறிவின் அடிப்படையிலும், அந்த அறிவைப்பயன்படுத்தி நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதன் அடிப்படையிலுமே நியாயத்தீர்ப்பு நிகழப்போகிறது என்கிறது வேதம். யோவான் 12:48ல் இயேசு சொல்கிறார்,

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

அறிவுபூர்வமான சிந்தனைக்கெதிரான இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தின் போக்கு நியாயத்தீர்ப்புக்கு அவர்களை வழிநடத்துகிறது. கர்த்தரின் வார்த்தையைக் காதுகொடுத்துக் கேட்டும், அதை வாசித்து சிந்தித்து சரியான போதனையை மட்டும் பின்பற்றி நடக்கவும் மறுத்து வாழும் கிறிஸ்தவ சமுதாயம் பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலைப்போலவே கர்த்தரின் தண்டனையை சந்திக்கப்போகிறது.

இதற்குப் பிறகு ஸ்டொட் எந்தெந்தவிதத்தில் நம் மனத்தை நாம் பயன்படுத்த வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார் என்று விளக்க ஆரம்பிக்கிறார். இதை நூலின் 3ம் அதிகாரத்தில் விளக்குகிறார். ஆராதனையில் ஆரம்பித்து விசுவாசம், பரிசுத்தவாழ்க்கை, கிறிஸ்தவ சித்தத்தை அறிந்துகொள்ளுதல், சுவிசேஷத்தை அறிவித்தல், கிறிஸ்தவ ஊழியத்தில் கர்த்தர் தந்திருக்கும் ஈவுகளைப் பயன்படுத்துதல் என்று, இவை ஒவ்வொன்றிலும் நமது மனத்தைப் பயன்படுத்தவேண்டிய விதத்தை ஸ்டொட் விளக்குகிறார். இதென்னடா, இவற்றிற்கும் நம் மனத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கக்கூடியளவுக்கு இன்றைக்கு அறிவுபூர்வமான சிந்தனைப் பட்டினி நம்மினத்தில் இருந்துவருகிறது. கர்த்தர் மனத்தைப் பயன்படுத்தி செய்யப்படாத ஆராதனையையும், மனத்திற்குத் தொடர்பில்லாத விசுவாசத்தையும், மனம் சம்பந்தமற்ற சுவிசேஷ அறிவிப்பையும், மனத்திற்கு இடங்கொடாத கிறிஸ்தவ ஊழியத்தையும் வெறுத்து ஒதுக்குகிறார் என்பது நம்மவர்களுக்குத் தெரியவில்லை. ஸ்டொட்டின் நூலை வாங்கி வாசியுங்கள். மனத்தோடு தொடர்பில்லாத கிறிஸ்தவம் கிறிஸ்துவோடு தொடர்பில்லாத வெறும் மதவெறி என்று அறிந்துகொள்ளுவீர்கள். ஜோன் ஸ்டொட் தன் நூலின் கடைசி அதிகாரத்தில், அறிவைப்பயன்படுத்தி கிறிஸ்தவ வாழ்வை வாழ்வதன் அவசியத்தை விளக்குகிறார். கிறிஸ்தவர்கள் அவசியம் வாசிக்க வேண்டியது இந்நூல்; உணர்ச்சிக்கு மட்டும் தூபம்போட்டு கிறிஸ்துவின் பெயரில் நடந்து வரும் பாகால் ஊழியங்கள் மலிந்திருக்கும் இந்நாட்களில் இத்தகைய நூல்கள் நம்மைக் காப்பாற்றும்.

ஜோன் ஸ்டொட் மனத்தைப் பயன்படுத்தி சிந்திப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இருக்கும் முதல் பிரசங்கி அல்ல. இதையே சீர்திருத்த கிறிஸ்தவம் 16ம் நூற்றாண்டில் வலியுறுத்தியது. 17ம் நூற்றாண்டு பியூரிட்டன் பெரியோரும் இதன் அவசியத்தைப்பற்றி தங்கள் ஊழியக்காலம் முழுதும் பிரசங்கித்தும், எழுதியும் வந்திருக்கிறார்கள். 20ம் நூற்றாண்டில் முதலில் பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரியிலும், பின்னால் வெஸ்ட்மின்ஸ்டர் இறையியல் கல்லூரியிலும் போதித்த கிரேஷம் மேச்சன் இதை வலியுறுத்தி எழுதியிருக்கிறார். மேச்சன் எழுதிய முக்கியமான நூல் ‘கிறிஸ்தவ அறிவின் முக்கியத்துவம்’ (The Important of Christian Scholarship). மேச்சனும் அறிவுபூர்வமான சிந்தனைக்கெதிரான நிலை உருவாகி வருவதைக் கவனித்திருக்கிறார். 1932ல் வெளியிடப்பட்ட இந்நூல் இன்றைய சுழ்நிலையைப் படம்பிடித்துக்காட்டுவது போல் இருக்கிறது. மேச்சனின் நூல் அவசியம் வாசிக்கவேண்டிய நூல். சிம்பிள் விசுவாசமே இன்று தேவை என்றும், தேவையில்லாமல் அதிகம் போதித்து மூளையைக் குழப்பக்கூடாது என்றும் நினைப்பவர்களை மேச்சன் சாடுகிறார். ‘சிம்பிள் விசுவாசம் விசுவாசமே அல்ல; அது கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசமல்ல’ என்கிறார் மேச்சன். ‘விசுவாசம் எப்பொழுதுமே அறிவை அடிப்படையானதாகத் தன்னில் கொண்டிருக்கும்’ என்கிறார் அவர். சிந்தித்து ஆராய்வதன் அவசியத்தை மேச்சன் தன் நூலில் வலியுறுத்தியிருக்கிறார்.

அதேபோல் சீர்திருத்த இறையியலறிஞரான பெஞ்சமின் வோர்பீல்டும், மார்டின் லொயிட் ஜோன்சும் தங்கள் ஊழியப்பணிகளில் சிந்திப்பதன் அவசியத்தையும், அறிவைப்பெற்றுக்கொள்ள கிறிஸ்தவர்களும், போதகர்களும் உழைக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கிறார்கள். வோர்பீல்ட், “வாசிக்காத போதகன் அந்த ஊழியத்தில் இருக்கக்கூடாது” என்று எழுதியிருக்கிறார். “ஊழியத்துக்கு வருமுன்பே அதிகம் வாசிக்கிறவனாக ஊழிய அழைப்புள்ளவர்கள் இருக்கவேண்டும்” என்று வோர்பீல்ட் எழுதியிருக்கிறார்.

சிந்திக்காக கிறிஸ்தவ சமுதாயத்தைப்போல ஆபத்தானது இருக்கமுடியாது. சிலைவணக்கப் பண்பாட்டில்தான் அத்தகைய நிலையைக் காணலாம். அது கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் முரணானது. கிறிஸ்தவன் அடிப்படையில் சிந்தனாவாதி; கிறிஸ்து அவனை சிந்திக்கும் மனிதனாக மறுபிறப்பின் மூலம் மாற்றியிருக்கிறார். வெறுமனே சபைக்குப் போய்வருவதும், ஜெபிப்பதும், அன்றாட அப்பம், அனுதின மன்னா அல்லது வட்செப் குறுந்தியானச் செய்தி போன்றவற்றில் மட்டும், சிந்திக்காமல் சுகம் காணும் கிறிஸ்தவம், கிறிஸ்துவோடு தொடர்புடைய கிறிஸ்தவமல்ல. அது போலியானது. சிந்திக்க ஆரம்பியுங்கள் வாசகர்களே! அறிவுபூர்வமாகவும், ஆக்கபூர்வமாகவும் கிறிஸ்துவைப்போலவும், பவுலைப்போலவும் சிந்திக்க ஆரம்பியுங்கள். கத்தியைப் பட்டைதீட்டி வைப்பது போலவும், துப்பாக்கியைப் போர்வீரன் சுத்தப்படுத்தி வைப்பதுபோலவும் நம்முடைய மனத்தை சிந்தனையால் புடம்போட்டு வைக்கவேண்டியது கிறிஸ்தவ கடமை. வேதம், சிந்தித்து, ஆராய்ந்து, ஆழமாகப்படித்து இருதயபூர்வமாக அனுபவித்து கர்த்தரை வழிபடுவதற்காகவே தரப்பட்டிருக்கிறது. வேதசிந்தனைகளால் மனத்தை நிரப்பிக்கொள்ளுங்கள். கூட இருப்பவர்களையும் சிந்திக்கத் தூண்டுங்கள். சிந்திப்பது உங்களைக் கிறிஸ்துவில் உயர்த்தும்; கிறிஸ்துவுக்கு மகிமை சேர்க்கும்.