மரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு

john-knox (1)இந்த வருடம் ஸ்கொட்லாந்தின் சீர்திருத்தவாதியான ஜோன் நொக்ஸின் (1514-1572) 500வது நினைவாண்டு. வரலாற்று முக்கியத்துவம் கொண்டவர்களை நினைத்துப் பார்ப்பது உலக வழக்கம். கிறிஸ்தவ திருச்சபை வரலாற்றில் கர்த்தர் பயன்படுத்தியுள்ள சிறப்பான மனிதர்களை நினைத்துப் பார்ப்பது நமது வரலாற்றையும் அதன் முக்கிய அம்சங்களையும் மறந்துவிடாமல் நினைவுபடுத்தி கர்த்தருக்கு நன்றிகூறவும், அவர்கள் தியாகத்தோடு உழைத்த சத்தியங்களுக்காக நாம் தொடர்ந்து பாடுபடவும் உதவும். அத்தோடு, எபிரெயர் 11:4 விளக்குவதுபோல் இந்தப் பெரிய மனிதர்கள் மரணத்தை சந்தித்தபோதும் தங்களுடைய வாழ்க்கைச் சாதனைகளின் மூலம் இன்றும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

பெரியவர், அதிரடிப் பிரசங்கி, அஞ்சாநெஞ்சன், ‘ஸ்கொட்லாந்தின் சீர்திருத்தத் தந்தை’ என்றெல்லாம் பெயர்பெற்றிருக்கும் ஜோன் நொக்ஸைப் பற்றி திருமறைத்தீபத்தில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். கடந்த வருடம் வெளிவந்த திருச்சபை வரலாறு, பாகம் 2லும் அவரைப் பற்றிய விளக்கத்தைத் தந்திருக்கிறேன். திருச்சபை வரலாற்று நாயகர்களில் எனக்குப் பிடித்தவர்களில் முக்கியமானவர் ஜோன் நொக்ஸ். அவரை நினைத்துப் பார்க்கும்போது உடனடியாக மனதில் நிற்பது அவருடைய அஞ்சாநெஞ்சந்தான். பயமே அறியாதவர் அவர். ஸ்கொட்லாந்து தேச ராணி மேரி ஸ்டுவர்ட் முன் நின்று சபையில் அவர் பிரசங்கம் செய்கிற ஒரு படத்தைப் பார்த்திருக்கிறேன். அதில் பிரசங்க மேடையில் கண்களில் தீப்பொறி பறக்க நின்று ராணியை நோக்கிக் கையை நீட்டி ஜோன் நொக்ஸ் பிரசங்கிக்கும் காட்சி இப்போதும் மனதில் நிற்கிறது. அக்காலத்தில் அரசி மந்திரிகளோடு ஓய்வுநாளில் சபைக்குப் போவது வழக்கம். ராணி மேரி ரோமன் கத்தோலிக்க மத ஆதரவாளி. இதுதான் கிடைத்த சமயம் என்று நொக்ஸ் அவளுக்கு வைராக்கியத்தோடு கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பிரசங்கித்திருக்கிறார். ராணிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தாலும் சபையில் அவரை ஒன்றும் செய்ய முடியாததால் பேசாமல் இருந்துவிடுவாள். பின்னால் அவரைக் கைதுசெய்ய அவள் பெருமுயற்சி எடுக்காமலில்லை. ஜோன் நொக்ஸ் எப்படியும் அவளுடைய கையில் பிடிபடாமல் உயிர்தப்பி வாழ்ந்திருக்கிறார். இங்கிலாந்தின் படைகளைவிட ஜோன் நொக்ஸின் பிரசங்கத்திற்கும், ஜெபத்திற்கும் ராணி மேரி ஸ்டுவர்ட் பயப்பட்டாள் என்று அன்று பேசப்பட்டது.

வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற ஒரு காலப்பகுதியில் ஜோன் நொக்ஸ் ஸ்கொட்லாந்தில் கர்த்தரால் எழுப்பப்பட்டவர். அந்நாட்டில் திருச்சபை சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவர். ஆரம்பத்தில் அவர் இங்கிலாந்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது ‘இரத்தக் கறைபடிந்த மேரி’ என்று அழைக்கப்பட்ட இங்கிலாந்து அரசி தன்னைச் சிறைபிடிக்க அலைகிறாள் என்பதை உணர்ந்து ஐரோப்பாவிற்குத் தப்பிப் போனார். முதலில் ஜெர்மனிக்கும் பின்பு ஜெனிவாவுக்கும் போனார். ஜெனிவாவில்தான் அவருக்கு சீர்திருத்தவாதியான ஜோன் கல்வினோடு பரிச்சயம் ஏற்பட்டது; கல்வினின் சீடராகவும் மாறினார். ஏனைய சீர்திருத்தவாதிகளின் தொடர்பையும் பெற்றுக் கொண்டார். ஸ்கொட்லாந்தில் திருச்சபை சீர்திருத்தம் வேண்டும் என்று வாழ்நாள் முழுதும் தீவிரமாக உழைத்தவர் ஜோன் நொக்ஸ். இன்று ஸ்கொட்லாந்து மக்கள் அவரை நினைவுகூர்கிறார்களோ இல்லையோ அந்நாட்டில் மெய்க்கிறிஸ்தவம் தலைநிமிர்ந்து நிற்க பெரும்பணியாற்றியவர் ஜோன் நொக்ஸ் என்பதை ஸ்கொட்லாந்தின் வரலாற்றில் இருந்து அழிக்க முடியாது.

ஸ்கொட்லாந்து ரோமன் கத்தோலிக்க மதத்தின் பிடியில் ஆவிக்குரிய இருட்டில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்த காலத்தில் ஜோன் நொக்ஸ் கர்த்தரால் எழுப்பப்பட்டார். வேதம் அன்று மறக்கடிக்கப்பட்டிருந்தது. வேதப்பிரசங்கத்திற்கு அன்று எலிசா தீர்க்கதரிசியின் காலத்தில் இருந்தது போல பெரும்பஞ்சம் இருந்தது. நாடும் பெரும் வறுமையை அனுபவித்து வந்த காலம் அது. இத்தகைய சூழ்நிலையில் 1514ம் ஆண்டில் ஜொன் நொக்ஸ் பிறந்தார். வறுமையில் வாடிய சாதாரண குடும்பத்தில் அவர் பிறந்திருந்த போதும் கல்விக்கு பெற்றோர் முக்கியத்துவம் கொடுத்து அவரை உற்சாகப்படுத்தியதால் ஸ்கொட்லாந்தில் பிரசித்தி பெற்ற செயின்ட் அண்ட்ரூஸ் பல்கலைக்கழகம் போகும்வரை அவருடைய படிப்பு அவரை உயர்த்தியது. 1536ல் பல்கலைக்கழக முதுகலைப் பட்டத்தைப் பெற்று கொஞ்சக்காலம் அங்கேயே துணைப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

1543ம் ஆண்டு நொக்ஸ் கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசித்தார். தொமஸ் கிலேன் (Thomas Guillanne) என்பரைக் கர்த்தர் நொக்ஸின் ஆத்மீக வாழ்க்கையில் இந்தவிதத்தில் பயன்படுத்தியிருந்தார். அவருடைய பிரசங்கங்கள் நொக்ஸுக்கு கிறிஸ்துவை அறிமுகப்படுத்தின. விசுவாசம் அடைந்தபிறகு இரண்டு வருடங்களுக்கு வேதத்தை முழுமையாகவும், ஆழமாகவும் அறிந்துகொள்ளுவதற்காக அதைக் கருத்தோடு படித்தார் நொக்ஸ். அதன் பிறகு தென் ஸ்கொட்லாந்தில் அக்காலத்தில் கிறிஸ்துவைப் பிரசங்கித்துக் கொண்டிருந்த ஜோர்ஜ் விஷ்சார்ட்டின் அறிமுகம் நொக்ஸுக்குக் கிடைத்தது. விஷ்சார்ட் அதிரடியான சீர்த்திருத்த பிரசங்கியாக இருந்தார். அவரோடு நொக்ஸ் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அவருடைய சீடரானார்.

Geo Wishartஜோர்ஜ் விஷ்சார்டின் பிரசங்கம் ஆணித்தரமானதாகவும் அன்றைய மதசூழ்நிலையின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்டுவதாகவும் இருந்ததால் அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது. நொக்ஸ் தன்னுடைய நண்பரைப் பாதுகாப்பதில் வாளையும் பயன்படுத்தத் தயாராகி அவருடைய மெய்காப்பாளராகப் பணியாற்றினார். தன்னுடைய உயிருக்கு ஆபத்து நெருங்கிவிட்டதென்பதை உணர்ந்த விஷ்சார்ட் ஜோன் நொக்ஸை இன்னோர் இடத்துக்குப் போகும்படிக் கட்டாயப்படுத்தி அனுப்பிவைத்தார். இறுதியில் 1546, மார்ச் 1ல் விஷ்சார்ட் அண்ட்ரூஸ் கோட்டையில் கத்தோலிக்கர்களால் உயிரோடு எரிக்கப்பட்டார். அன்றிலிருந்து ஸ்கொட்லாந்தில் திருச்சபை சீர்திருத்தத்தைத் தொடரும் பணி ஜோன் நொக்ஸின் கைக்கு மாறியது. அதுமட்டுமல்லாது விஷ்சார்ட்டை எரித்த தீ ஜோன் நொக்ஸின் பிரசங்கப் பணியால் சீர்திருத்தத் தீயாக மாறி ஸ்கொட்லாந்து முழுவதும், ஏன், இங்கிலாந்தையும் நோக்கிப் பரவியது.

220px-Holy_Trinity_Church,_St_Andrewsசெயின்ட் அண்ட்ரூசில் துணைப்பேராசிரியராக பணிபுரிந்தபோது நொக்ஸைச் சுற்றி ஓர் இளைஞர் கூட்டம் இருந்தது. அவர்களுக்கு வேதத்தைக் கற்றுக் கொடுத்தார் நொக்ஸ். நொக்ஸின் போதிக்கும் திறமை பலருடைய காதுகளையும் எட்ட இன்னும் பலர் அவரிடம் வேதம் கற்றுக்கொள்ள வந்திணைந்தனர். அண்ட்ரூஸில் கூடிய சபை நொக்ஸைப் பிரசங்கம் செய்யும்படியாக அழைத்தது. அந்தளவுக்கு வேதத்தைப் போதிக்கும் நொக்ஸின் திறமை எல்லோரையும் கவர்ந்திருந்தது. பிரசங்க அழைப்பு கிடைத்தபோதும் நொக்ஸ் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கி ஜெபித்தார். கர்த்தர் அனுமதிக்காத, அழைக்காத பணியை ஏற்றுக்கொள்ள அவர் விரும்பவில்லை. கர்த்தர் அதைத்தான் செய்ய அனுமதிக்கிறார் என்பதை உறுதியாக உணர்ந்தபிறகே அண்ட்ரூஸில் பிரசங்கிக்கும் அழைப்பையும், பணியையும் நொக்ஸ் ஏற்றுக்கொண்டார். தன்னுடைய இறுதிக்காலம்வரை இங்கு நொக்ஸ் கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தை அதிரடியாகப் பிரசங்கித்து ஸ்கொட்லாந்து திருச்சபை சீர்திருத்தத்தை அடைய முன்னோடியாக இருந்தார்.

நொக்ஸ் கிறிஸ்தவப் பணியாற்றிய காலம் கிறிஸ்தவ சீர்திருத்தவாதிகளுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உயிராபத்து இருந்த காலம். ரோமன் கத்தோலிக்க சபை அவர்களை வெறுத்து அழிப்பதில் ஆக்ரோஷமாக ஈடுபட்டிருந்த காலம். மதமும், அரசும் இணைந்து இந்தக்காரியத்தில் ஈடுபட்டிருந்த காலம். உள்ளத்தில் உறுதியும், உரனும் இருந்து உயிரைத் துச்சமாக எண்ணுகிறவர்களால் மட்டுமே அந்தக்காலத்தில் கிறிஸ்துவைப் பிரசங்கித்திருக்க முடியும். அநேகர் தங்களுடைய குடும்பத்தைக்கூட கிறிஸ்துவுக்கு பணியாற்றியதால் அக்காலத்தில் இழக்க நேர்ந்தது. கிறிஸ்தவர்களும், சீர்திருத்தவாதிகளும் உயிரோடு கொளுத்தப்படுவது மிகச் சாதாரணமாக நடந்துவந்த காரியம். இத்தகைய சூழ்நிலையில்தான் ஜோன் நொக்ஸ் சீர்திருத்தப் பிரசங்கியாக கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தைரியத்தோடு பிரசங்கித்து வந்தார். தன் இறுதிக்காலம்வரை இந்தப் பணியில் அவர் சளைக்கவில்லை. மிகுந்த மனத்தாழ்மையையும், அஞ்சாநெஞ்சையும், அளப்பரிய ஆவிக்குரிய பிரசங்கத் திறமையையும் தன்னில் கொண்டிருந்த ஜோன் நொக்ஸ் இறக்கும்போது தன்னுடைய கல்லைறையில் ‘சாதாரண விசுவாசி இங்கு புதைக்கப்பட்டிருக்கிறான்’ என்று மட்டுமே எழுதிவைக்கும்படிக் கேட்டிருந்தார்.

ஸ்கொட்லாந்து மக்கள் இன்று நொக்ஸை மறந்துவிட்டார்கள். மேலைநாடுகளில்கூட இன்றைய சந்ததி அவரைப் பெரிதும் நினைத்துப் பார்ப்பதில்லை. எந்தளவுக்கு இன்றைய கிறிஸ்தவம் தனக்கு ஆணிவேராக இருந்து உழைத்து உயிர் துறந்தவர்களை மறந்துவிட்டிருக்கிறது என்பதற்கு இது நல்ல உதாரணம். நம்மின மக்களுக்கு சீர்திருத்த வரலாறு அந்தளவுக்கு தெரியாது. ஜோன் நொக்ஸ் விசுவாசித்த சத்தியங்களின் அடிப்படையில் திருச்சபைகள் அமைக்கப்பட்டு உயர்ந்தோங்கி இருந்த வரலாறு நம்மினத்தில் இல்லை. நொக்ஸைப் போன்ற ஆவிக்குரிய ஆசீர்வாதம் பெற்ற பிரசங்கிகளை நம்மினம் கண்டதுமில்லை. சமீபத்தில், குறுகிய காலப்பகுதியில்தான் சீர்திருத்த கிறிஸ்தவ போதனைகளே நம்மினத்து மக்களின் சிந்தையை எட்டியிருக்கின்றன. சீர்திருத்த கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் நம்மினம் ஆரம்பகட்டத்தில்தான் இன்றும் நின்றுகொண்டிருக்கிறது. அது நமக்குத் தெரியாததல்ல. நம்மினத்துக் கிறிஸ்தவம் இருக்கும் நிலையில் ஜோன் நொக்ஸையும், அவருடைய கிறிஸ்தவ வாழ்க்கையையும், பிரசங்க ஊழியத்தையும், திருச்சபை சீர்திருத்தத்திற்காக அவர் உழைத்த உழைப்பையும் நினைத்துப் பார்ப்பதும், நாமிருக்கும் நிலையைக் குறித்து சிந்திப்பதும் நிராகரிக்க முடியாதளவுக்கு அவசியமாகிறது. கிறிஸ்தவ திருச்சபை வரலாறு, பாகம் 2ல் ஸ்கொட்லாந்தில் நிகழ்ந்த சீர்திருத்தத்தை விளக்கி ஜோன் நொக்ஸைப் பற்றி விபரமாக எழுதியிருக்கிறேன். அதை வாங்கி வாசித்துப் பயனடையுங்கள்.

ஜோன் நொக்ஸை நாம் நினைவுகூர வேண்டியதற்கு பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன:

1. உறுதியான வேத சிந்தனை தேவை – நம்மினத்தில் உறுதியான வேத சிந்தனை தேவையாக இருக்கிறது. நொக்ஸ் காலம் உயிராபத்திருந்த காலம். வேதம் வாசித்தாலே அன்று உயிராபத்து; கிறிஸ்துவை விசுவாசித்தாலே மரணம் நிச்சயம். நம்காலத்தில் நம்மைக் கேட்பார் யாருமில்லை. வேதத்திற்கு மதிப்புக்கொடுக்கிறோமா, இல்லையா? என்று கவலைப்படுகிறவர்கள் ஒருவருமில்லை. மற்றவர்களுடைய மனத்தைப் புண்படுத்தாத வகையில் நமக்குப் பிடித்த எதையும், ஒழுக்கக்கேடானவற்றையும் செய்துகொள்ளலாம் என்று எண்ணி வாழும் பின்நவீனத்துவ சமுதாயத்தில் நாம் நிலைகொண்டிருக்கிறோம். அந்த எண்ணப்போக்கே வலுத்துவருகிறது. நம்மைப் பிடித்திருக்கும் ஆபத்து உயிராபத்து அல்ல; நம்முடைய சிந்தனைப் போக்கையும், இருதயத்தையும் குடிகொள்ள முனையும் தத்துவ ஆபத்து. ‘சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற’ சமுதாயத் தத்துவப்போக்கு நமக்குப் பேரெதிரியாக இருக்கிறது.

வேதம் நம்மொழியில் இருந்தும் அதை நாம் கருத்தோடு இன்று வாசிப்பதில்லை. வேதம் போதிக்கும் சத்தியங்களைத் தெரிந்துகொள்ளுகிற ஆதங்கமோ, ஆர்வமோ, துடிப்போ, வைராக்கியமோ அறவேயில்லை. வேதத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்ற ஞானத்தைக்கூட நம்மினப் போதகர்கள் பெரும்பாலானோரில் காணமுடியாதிருக்கிறது. அந்தளவுக்கு வேதத்தைப் பற்றி நமக்கிருக்க வேண்டிய சிந்தனைகள் நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் இல்லை. இதை வேதப் பஞ்சகாலமாக மட்டுந்தான் வர்ணிக்க முடியும். ஜோர்ஜ் விஷ்சார்ட்டோ, ஜோன் நொக்ஸோ வேதத்தை உயிராக மதித்தார்கள். அது மட்டுமே கிறிஸ்துவை விசுவாசிக்க நமக்கிருக்கும் ஒரே ஆதாரமாகக் கருதினார்கள். ஆத்மீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தரும் கருவியாக நம்பினார்கள். அந்த நம்பிக்கையோடு அதை இரவும் பகலுமாகப் படித்து அதில் பேரறிவை அடைந்தார்கள். இது இன்றைக்கு நம்மினத்தில் இல்லை. வேதம் படிக்க முடியாததற்கு நூறு சாக்குப்போக்குகளை, தெருவில் புழுதி போவதற்கு தண்ணீர் தெளிப்பதுபோல் அள்ளியள்ளித் தெளிக்க முடிகிற நமக்கு, நேரம் ஒதுக்கி அதை ஆழமாக உணர்வுபூர்வமாகப் படிப்பதற்கு இருதயம் ஒத்துழைப்பதில்லை. இந்த சமுதாய அலங்கோலங்களை எதிர்த்து மெய்க்கிறிஸ்தவர்களாக நாம் வாழமுடியாமலிருப்பதற்கு நம்முடைய ஆவிக்குரிய நிலையே பெருங்காரணம். இதை உணர்ந்து நாம் ஜெபத்தோடு நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து கர்த்தர் முன் நம்மை சரிப்படுத்திக்கொண்டு வேதத்தைப் படிக்க ஆரம்பிக்க வேண்டும்; உறுதியான வேத சிந்தனையை வளர்த்துக்கொள்ள நொக்ஸைப் போல உழைக்க வேண்டும்.

2. நொக்ஸைப் போன்ற பிரசங்கிகள் தேவை – சீர்திருத்தவாத காலம் வேதத்தை அருமையாகப் பிரசங்கிக்கும் ஆவிக்குரிய பிரசங்கிகளைக் கொண்டிருந்த காலம். ஜோன் நொக்லின் பிரசங்கம் மனித இருதயத்தை அசைத்த பிரசங்கம். மானுட செயல்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஆவிக்குரிய பிரசங்கத்தை அவர் அளித்தார். அத்தகைய பிரசங்கிகளை இன்று காணமுடியாதிருக்கின்றது. நொக்ஸைப் போன்றே லூத்தரும், கல்வினும், விஷ்சார்ட்டும், சுவிங்ளியும், மலாங்தனும் இன்னும் பிரான்ஸில் இருந்த சீர்திருத்தவாதிகளும், ஏனைய நாடுகளில் இருந்தவர்களும் ஆவிக்குரிய பிரசங்கிகளாக இருந்தனர். இவர்களுக்கெல்லாம் வேதம் தெரிந்திருந்தது மட்டுமல்லாமல், அவர்களுடைய வேத நம்பிக்கை ஆழமானதாக இருந்தது. கர்த்தருடைய வார்த்தையாக அதை அவர்கள் பயன்படுத்தினார்கள். அவர்களில் ஆவியானவர் நடமாடி பிரசங்க ஊழியத்தில் அவர்களை அதியற்புதமாகப் பயன்படுத்தினார். தாழ்மையையும், மெய்யான அன்பையும் கொண்டிருந்த அவர்கள் பிரசங்க ஊழியத்தை மிக உயர்ந்ததாகவும், பரிசுத்தமானதாகவும் கருதி தேவபயத்தோடு அதை அணுகினார்கள். மனித தைரியத்தோடு அவர்கள் பிரசங்க மேடைக்கு சென்றதில்லை. வேதம் சொல்லுகிறது என்று தவறான விளக்கங்கொடுப்பதையும், வேதத்திற்கு மாறானதைச் சொல்லுவதையும்விட உயிரை இழப்பதை அவர்கள் பெரிதாகக் கருதினார்கள். அத்தகைய வேத நம்பிக்கைகள் கொண்ட பிரசங்கிகள் நம்மினத்தில் இருக்கிறார்களா? அவர்களுக்கு மெய்யான ஆத்தும பாரமிருந்தது. முழுதும் கர்த்தரில் தங்கியிருந்து வேதத்தைப் படித்துத் தயாரித்து சுயநலநோக்கமின்றி ஆத்தும ஆதாயத்துக்காகவே அவர்கள் பிரசங்க ஊழியத்தை அணுகியதால் ஆவியானவர் அவர்களுக்கு ஆவிக்குரிய தைரியத்தைத் தாராளமாக வழங்கினார். அவர்களுடைய பிரசங்கங்கள் பவுல் சொன்னதுபோல், ‘வசனத்தோடு மாத்திரமல்ல, வல்லமையோடும் பரிசுத்த ஆவியோடும் முழு நிச்சயத்தோடும் வந்தது.’ (1 தெச 1:5).

இத்தகைய பிரசங்கிகளை நம்மினம் கண்டதில்லை; அநேகர் கேட்டதுமில்லை. எங்கு பிரசங்கம் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறதோ அங்கேயே கர்த்தரின் ஆவிக்குரிய செயல்களை நாம் பரவலாகப் பார்க்க முடியும். பிரசங்கம் உயர் நிலையில் இருந்தும் ஆத்தும ஆதாயம் நிகழவில்லை என்று வேதமோ, வரலாறோ நமக்குக் காட்டவில்லை. 16ம் நூற்றாண்டிலும் சரி, பதினேழாம் நூற்றாண்டிலும் சரி பிரசங்கம் உன்னத நிலையை அடைந்தது; கிறிஸ்தவமும் உன்னத நிலையில் இருந்தது. இதிலிருந்து நமக்கு எது தெரியவேண்டும்? பிரசங்க ஊழியத்தை சுயத்துக்காக பயன்படுத்தும் நம்மினத்து ஊழியங்கள் இல்லாமல் போகவேண்டும். பணத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு நடந்துவரும் ஊழியங்கள் காணாமல் போய் வயிறு காய்ந்தாலும், மூன்று வேளைக்கு உணவு அருகினாலும் ஏன் உயிருக்கே ஆபத்து வந்தாலும் சத்திய வாஞ்சையோடு ஆவியில் தங்கியிருந்து ஆத்துமபாரத்தோடு பிரசங்கிப்பேன் என்று துடிக்கின்ற பிரசங்கிகள் நம்மினத்தில் எழவேண்டும். அப்படி எழுந்தார்களானால் கர்த்தர் நம்மத்தியில் இருக்கிறார் என்று நாம் நம்பலாம். அத்தகைய வேதப்பிரசங்கம் செய்யும் பிரசங்கிகளை நொக்ஸை எழுப்பியதுபோல் கர்த்தர் நம்மினத்தில் எழுப்ப நாம் ஜெபிக்க வேண்டும். நம்முடைய பிரசங்க ஊழியமும் அந்தமுறையில் அமைந்திருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

3. திருச்சபை சீர்திருத்தம் தேவை – ஸ்கொட்லாந்தில் ஜோன் நொக்ஸின் பெரும் பங்களிப்பு திருச்சபை சீர்திருத்தமாக இருந்தது. ரோமன் கத்தோலிக்க மதத்தின் இரும்புப்பிடியில் சிக்கி நாட்டு மக்கள் ஆத்மீக விடுதலைக்கு வழியின்றி இருந்த காலத்தில் வேதத்தைப் பயன்படுத்தி சத்தியபோதனைகள் அளித்து வேத அடிப்படையிலான திருச்சபையை நிறுவப் பாடுபட்டார் நொக்ஸ். அதில் கர்த்தரின் ஆசீர்வாதத்தையும் கண்டார். வெறுமனே சுவிசேஷத்தை மட்டும் அறிவிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் கர்த்தரின் வார்த்தையின்படி சபை நிறுவுவதே அவருடைய இலட்சியமாக இருந்தது. வேத அமைப்பையும், வேத போதனைகளையும், வேதத்தின்படியிலான திருநியமங்களையும் கொண்டமைந்த திருச்சபை மட்டுமே ஆத்துமாக்களுக்கு தொடர்ச்சியான ஆத்தும விருத்தியைக் கொடுக்க முடியுமென்பதை நன்குணர்ந்திருந்த நொக்ஸ், லூத்தரையும், கல்வினையும்போல அதே பணியை ஸ்கொட்லாந்திலும் செய்யப் பாடுபட்டார். இன்று நம்மினத்திற்குத் தேவையாக இருப்பதும் இதுதான்.

கிறிஸ்தவ ஊழியங்கள், சபைகளென்ற பெயர்களில் என்னென்னவோ நடந்துவந்தபோதும், வேத அடிப்படையில் திருச்சபை அமைப்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் நம்மினத்தில் வெகுசிலரே. சுயநலம் பாராமல் ஆத்துமப் பாதுகாப்புக்காக அத்தகைய சபைகள் அமைய நொக்ஸ் போன்றோர் நம்மினத்தில் தேவை. பணத்துக்காகவும், சுயவிளம்பரத்துக்காகவும், வாழ்க்கைப்படியில் ஏறி வளமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுவதற்காகவும் சபைகள் இருக்கும் நம்மினத்தில் ஜோன் நொக்ஸ் போன்றோர் தோன்றாமல் இருப்பதற்குக் காரணம் நம்மைப் பிடித்திருக்கும் ஆத்மீக வறட்சியே. கர்த்தர் எழுப்பினாலொழிய நொக்ஸ்கள் நம்மினத்தில் தோன்ற முடியாது; பரவலாக மெய்த்திருச்சபைகள் அமைவதும் கடினமே.

ஜோன் நொக்ஸ் திருச்சபை சீர்திருத்தத்தின் ஒருபகுதியாக ஆராதனை சீர்திருத்தத்தையும் கொண்டுவந்தார். அதுபற்றி நொக்ஸ் அதிகம் எழுதியிருக்கிறார். கர்த்தரை ஆராதிப்பதற்கே திருச்சபை தேவை. திருச்சபை ஆராதனை வேத அடிப்படையில் இருக்கவேண்டுமென்று நொக்ஸ் ஆணித்தரமாக நம்பினார்; அதில் கர்த்தருடைய வார்த்தையே இறுதி முடிவாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ரோமன் கத்தோலிக்க மதம் ஆராதனையை வெறும் சடங்காக, குருமார்களின் ஆடம்பர வேதவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியது. வேதத்திற்கும், ஆவிக்கும் அதில் இடமிருக்கவில்லை. நொக்ஸ் வாழ்ந்த ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்று நம்மினத்தில் ஆராதனை மனித உணர்ச்சிகளையும், விருப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டே காணப்படுகிறது. வேதத்திற்கும், கர்த்தருக்கும் அதில் இடமில்லை. கர்த்தருடைய பிரசன்னத்தைக் காணமுடியாத வகையிலேயே பெரும்பாலான இடங்களில் ஆராதனையைப் பார்க்கிறோம். மனிதனின் கைவண்ணத்திற்கும், ஆற்றலுக்குமே அதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஜோன் நொக்ஸ் போன்றோர் நம்மினத்தில் உருவாகி வேத திருச்சபை சீர்திருத்தத்தையும், ஆராதனைச் சீர்திருத்தத்தையும் கொண்டுவர எத்தனைக் காலம் நாம் பொறுத்திருக்க வேண்டுமோ?

_____________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக