சட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு

bookshelf_header

இது ஸ்பர்ஜன் நெடுங்காலத்துக்கு முன் தன்னுடைய இறையியல் மாணவர்களுக்கு சொன்ன வார்த்தைகள். எப்படியாவது, என்ன செய்தாவது புத்தகங்களை வாங்கி வாசிக்கத் தவறாதீர்கள் என்று அவர் தன் மாணவர்களை வற்புறுத்தத் தவறவில்லை. அவருடைய மனைவி சூசானா இதற்கென ஒரு நிதியை ஏற்படுத்தி புத்தகம் வாங்கும் வசதியில்லாதவர்களாக இருந்த போதகர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கு புத்தகங்களை அனுப்பி உதவி செய்திருக்கிறார். புத்தகங்களின் அருமையை ஸ்பர்ஜன் தன் வீட்டில் கற்றிருந்தார். நல்ல காரியங்கள் எல்லாவற்றிற்கும் வீடுதான் ஆரம்பம் இல்லையா? இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் நிரம்பியிருப்பது புத்தகங்கள் அல்ல; டிவியின் அலறலும், நவீன தொலைநுட்ப செய்திப்பறிமாறல் கருவிகளுந்தான். ஸ்பர்ஜனின் குடும்பத்தார் வாசிப்புக்கு முதலிடம் தந்திருந்தார்கள். ஸ்பர்ஜனின் தாத்தாவின் புத்தக அறை ஸ்பர்ஜனுக்கு பிடித்தமான ஒன்று. ‘ஐந்து வயதிலேயே அதை நாடிப்போய் புத்தகங்களைக் கையில் எடுத்து தொட்டுத் தடவிப் பார்க்கும் பழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது. அவருடைய சொந்த நூலகத்தில் 20,000க்கும் மேல் நூல்கள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவைகளை (12,000) விமர்சனம் செய்து அவரே ஒரு நூலை வெளியிட்டிருந்தார். ஐந்து வயதில் ஆரம்பித்த புத்தக வாஞ்சையும், வாசிப்பும் அவரை எந்தளவுக்கு வாழ்க்கையில் கர்த்தரின் கிருபையால் உயர வைத்தது என்பது உங்களுக்கே தெரியும்.

தான் வாசித்து பயனடைந்திருந்த நூல்களின் அருமைகளை விளக்கி தன் மாணவர்களை வாசிக்கும்படி அறிவுறுத்தி வாசிக்கவும் செய்தார் ஸ்பர்ஜன். போதகர்களுக்கான தன்னுடைய இறையியல் கல்லூரியில் கற்று வீடு திரும்பியபின் அடுத்த பன்னிரெண்டு மாதங்களுக்குள் மெத்தியூ ஹென்றியின் ஆறு வால்யூம்கள் உள்ள வேதவியாக்கியான நூல்களை முழுமையாக வாசித்து முடிக்கும்படி தன் மாணவர்களை அவர் கேட்டுக்கொண்டார். புத்தகப் படிப்பை அலட்சியப்படுத்தியவரல்ல ஸ்பர்ஜன். வேதத்தில் தெளிவான ஆழமான அறிவில்லாமல் கர்த்தரோடு மேலான ஐக்கியத்தையும் உறவையும் வைத்திருக்க முடியாது என்பதை அவர் நம்பியதாலேயே வேதத்தைக் கற்றுக்கொள்ள நல்ல நூல்களின் அவசியத்தை வற்புறுத்தினார். அத்தோடு வேதத்தை விளக்கிப் போதிப்பதற்கு அவர்களுக்கு வேதத்தில் அறிவும், தெளிவும் தேவையாயிருந்தது. புத்தகங்கள் இல்லாமல் இவற்றை எப்படிப் பெற்றுக்கொள்ள முடியும்? ஆண்டவர் என்ன, வேதத்தின் மூலமல்லாமல் நேரடியாகப் பேசியா நமக்கு வேத அறிவைக் கொடுக்கிறார்? அல்லது நம் தலைக்குள்தான் ஒரு கம்பியூட்டர் சிப்பைப் பொறுத்தியிருக்கிறாரா, நேரத்துக்கு நேரம் அறிவை நமக்கு வாரி வழங்குவதற்கு? வேதத்தைப் புரிந்துகொள்ளாமல் ஒருவராலும் கர்த்தரைப் புரிந்துகொள்ள முடியாது; நல்ல நூல்களைப் பயன்படுத்திக்கொள்ளாமல் ஒருவராலும் வேதத்தைப் புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் ஸ்பர்ஜன் சொன்னார், “வாசிக்க ஆரம்பியுங்கள். வாசிக்காதவனை ஒருவரும் அறிந்துகொள்ள முடியாது. பிறரிடம் கற்றுக்கொண்டவைகளைப் பகிர்ந்துகொள்ளாதவனைப்பற்றி எவரும் பேசமாட்டார்கள். மற்றவர்களின் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளாதவன் மூளை இல்லாதவன் என்பதைத்தான் நிரூபிக்கிறான். நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும் என்று பவுல் அறைகூவலிடுகிறார் – ‘புத்தகங்களைக் கொண்டுவா.’ அதில் நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள்” என்று ஸ்பர்ஜன் எழுதியிருக்கிறார்.

Spurgeon-at-deskஸ்பர்ஜன் வாரத்திற்கு ஆறு நூல்களை வாசித்திருக்கிறார். கணக்கிட்டுப் பார்த்தால் அவர் வருடத்துக்கு 300 நூல்களுக்கு மேல் வாசித்திருக்க வேண்டும். அவருடைய வாசிப்பு பன்முகத்தன்மையுள்ளதாக இருந்தது. பலதரப்பட்ட நூல்களையும் அவர் வாசித்திருக்கிறார். ‘என் மாணாக்கர்களுக்கான விரிவுரைகள்’ என்ற போதக, பிரசங்க ஊழியத்திலுள்ளவர்களுக்கு அவரெழுதிய நூல்களில் அவருடைய வாசிப்பின் பன்முகத்தன்மையைக் காணலாம். தன்னுடைய பிரசங்கங்களுக்கு அவர் பயன்படுத்தியிருக்கும் உதாரணங்கள் வேதத்தில் இருந்து மட்டும் வரவில்லை. அவர் வாசித்த நூல்கள் பலவற்றில் இருந்தும் வந்திருக்கின்றன. தன்னுடைய வாசிப்பை வேதத்தோடு மட்டும் நிறுத்திக்கொள்லாமல், வேத வியாக்கியான நூல்கள், வரலாற்று நூல்கள், விஞ்ஞாண நூல்கள், அறிவியல் நூல்கள், புனைவுகள் என்று பரந்த தளத்தைக்கொண்டதாக அவருடைய வாசிப்புப் பயிற்சி இருந்தது. பழந்தமிழ் இலக்கியமான நாலடியாரில் ஒரு வரி வருகிறது, ‘தெளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்பாலுண் குருகின் தெரிந்து.’ நீரை நீக்கிப் பாலைப்பருகும் அன்னப் பறவையைப் போல அறிவுடையவர்கள் நூலின் தன்மைகளை அறிந்து நல்ல நூல்களையே கற்பார்களாம் என்பது இந்த வரிகளுக்குப் பொருள். இந்த வரிகளுக்கொப்பவே ஸ்பர்ஜனின் வாசிப்பு இருந்தது.

அமெரிக்காவில் கிறிஸ்தவரும், செனட்டருமாக இருந்த டேனியல் வெப்ஸ்டர் தன் தேசத்தின் நிலைகுறித்துப் பேசியபோது, ‘கிறிஸ்தவ நூல்கள் மக்களைப் போயடையும்படி அதிகமாக விநியோகிக்கப்படாவிட்டால் நம்தேசத்துக்கு என்ன நடக்கப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. சத்தியம் பரவலாக பரப்பப்படாவிட்டால் போலிப் போதனைகள் அதன் இடத்தைப் பிடித்துவிடும். கர்த்தருடைய வார்த்தையையும், அவரைப்பற்றிய அறிவையும் மக்கள் அடையாமல் போனால் பிசாசும், அவனுடைய செய்கைகளுமே அதிகரித்துவிடும். சுவிசேஷ நூல்கள் ஒவ்வொரு குக்கிராமத்தையும் அடையாமல் போனால், அசத்தியமானதும், கீழ்த்தரமானதுமான நூல்கள் அங்குபோய்ச் சேர்ந்துவிடும். நாடுபூராவும், பட்டிதொட்டியெல்லாம் சுவிசேஷக் கிறிஸ்தவம் தன் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டால், கலவரமும் தவறான ஆட்சிமுறையும், தாழ்வும் துன்பங்களும், அநீதியும் இருட்டும் குறையாமலும், இறுதிவரை முடிவில்லாமலும் ஆளத்தொடங்கிவிடும்’ என்று கூறியிருக்கிறார். இதெல்லாம் வெறும் வார்த்தைகளா என்ன?

சில பிரசங்கிகளுக்கு புத்தகமென்றாலே அலர்ஜி. வாசிக்க விருப்பமில்லை என்று வெளிப்படையாக சொல்லுவதைவிட்டுவிட்டு, ‘ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது’ என்றும், அதிகப்படிப்பு ஆவியற்ற அறிவுஜீவியாக்கிவிடும் என்றும் எகத்தாளம் பண்ணுவார்கள். இவர்களுக்கு புத்தக அலர்ஜி இருப்பதற்கு படிப்பறிவு இல்லாதது ஒருகாரணமாக இருக்கலாம். அல்லது தொடர்ச்சியான வாசிப்பை பழக்கத்தில் கொள்ளாமல் இருந்திருப்பது காரணமாக இருக்கலாம். தெளிவான இறையியல் ஞானமோ, அதில் ஆர்வமோ இல்லாதது ஒருகாரணமாக இருக்கலாம். ஏன், சோம்பலும் இதற்கு ஒரு பெருங்காரணம். எதுகாரணமாக இருந்தபோதும் பிரசங்கியொருவன் புத்தகங்களின் அவசியத்தை அலட்சியப்படுத்துகிறானெனில் அவனுக்கு கிறிஸ்தவத்தைப்பற்றிய சரியான, தெளிவான ஞானமில்லை என்றுதான் அர்த்தம். புத்தகங்களின் துணையில்லாமல் வேதத்தில் பாண்டித்தியம் பெற்ற பிரசங்கிகளைக் கண்டுபிடிப்பதும், குதிரைக்கொம்பு தேடுவதும் ஒன்றுதான். ‘என் வாழ்நாளில் நான் புத்தகங்கள் வாசிக்காத பிரசங்கிகளைக் கண்டது மிகக்குறைவு’ என்று ஜோன் வெஸ்லி சொல்லியிருக்கிறார்.

அறிவு இருக்கின்ற இடத்தில் ஆவியானவர் இருக்க வழியில்லை என்று நினைப்பது அடிமுட்டாள்தனம். இந்த எண்ணம் அநேக கிறிஸ்தவர்களின் இருதயத்தில் பதிந்திருக்கிறது. ஆவியானவர் அறிவைக் கொடுக்கின்றவர், அறிவை நோக்கி வழிநடத்துகின்றவர் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆவியானவர் வருகின்றபோது ‘நான் போதித்தவற்றை உங்களுடைய நினைவுக்குக் கொண்டுவருவார்’ என்று இயேசு சொல்லியிருக்கிறார். ஆவியானவரே சத்தியவேதத்தின் உண்மைகளை நமக்குப் புரியவைக்கிற சத்திய விளக்கவுரையாளராக இயங்குகிறார். அவரில்லாமல், அவரால் வழிநடத்தப்படாமல் சத்தியம் நமக்குப் புரியாது. சத்தியத்தில் தெளிவேற்படுத்துகிறவர் அறிவை அலட்சியப்படுத்துவாரா? கிறிஸ்தவ அறிவில் நாம் வளர வேண்டும் என்பதே அவருடைய குறிக்கோளாக இருக்கிறது. அவரே நமக்குள்ளிருந்து நம்முடைய பரவலான வாசிப்பிலும் நமக்குத் துணைசெய்கிறவராக இருக்கிறார். சத்திய வேதம் நமக்கு நூலாகத் தரப்பட்டிருக்கிறது. அதன் விளக்கவுரையாளராக இருக்கும் ஆவியானவருக்கு புத்தகங்கள் எப்படிப் பிடிக்காமல் போகும்? நூல்களை நாம் வாசிப்பது கர்த்தருடைய அறிவில் வளரத்தான். அந்த  அறிவு வேதத்தோடு மட்டும் நின்றுவிடுகிறது என்று நினைப்பது ஒருவருடைய அறிவின்மையைக் காட்டுகிறது.

வேதம் கர்த்தருடைய சிறப்பான வெளிப்பாடாக (special revelation) இருக்கிறது. கிறிஸ்துவை விசுவாசிக்க சிறப்பான வெளிப்பாடு அவசியம். அதேநேரம் கர்த்தர் பொதுவான வெளிப்பாட்டின் மூலம் (general revelation) மனிதர்களோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். பொதுவான வெளிப்பாட்டால் விசுவாசத்தைத் தரமுடியாது. ஆனால், கர்த்தர் இருப்பதையும், அவரைப்பற்றியும் அது நமக்கு சாட்சியாக இருக்கிறது. இயற்கையை கிறிஸ்தவன் கவனிக்காமலும், படிக்காமலும் இருந்தால் கர்த்தரின் மேன்மையைக் கண்களால் பார்த்து உணர்ந்து அவரைப் போற்ற வழியேது? வரலாற்றை அவன் கற்றுக்கொள்ளாவிட்டால் கர்த்தரின் மீட்பின் வரலாற்றையும், அவருடைய மகத்துவ செயல்களையும் அவன் அறிந்து களிகூர வழியேது? கர்த்தரின் மனிதர்களான சீர்திருத்தவாதிகளினதும், பியூரிட்டன் பெரியவர்களினதும் ஆக்கங்களில் ஆர்வம் கொண்டு வாசிக்காவிட்டால் அவர்களைப் பயன்படுத்தி கர்த்தர் நமக்குப் போதிக்கும் பெரும் சத்தியங்களைக் கற்றுக்கொள்ள வழியேது? ஆவியானவர் இவற்றின் மூலமாக நம்மில் வேதஞானம் பெருகும்படிச் செய்கிறார் என்பதை உணராமல் வாழ்கிறவர்களின் இழப்பு மிகப்பெரியது?

திருமறைத்தீபம் இதழொன்றை வாசித்துவிட்டு இந்தளவுக்கு ஆழமாக வேதத்தைப் படிக்கவேண்டுமா? சாதாரணமாக கிறிஸ்தவ விசுவாசத்தையும், மனந்திரும்புதலையும் மட்டும் ஆத்துமாக்கள் தெரிந்துகொண்டால் போதுமே என்று ஓர் ஊழியக்காரர் சொன்னாராம். பரிதாபம்! அவருக்காகவும், அவர் ஊழியம் செய்துவரும் மக்களுக்காகவும் நான் அனுதாபப்படுகிறேன். வேறொருவர், ‘தபாலில் வருகின்ற எத்தனையோ புஸ்தகங்களை வாசிக்கவேண்டியிருக்கிறது’ என்று அலுத்துக்கொண்டாராம். நாம் கேட்டு எழுதாமல் தபாலில் நம்மை வந்தடைகின்றவற்றையெல்லாம் வாசிக்க வேண்டுமா என்ன? வெறும் தியானச் செய்திகளைத் தாங்கிவரும் சாம் ஜெபத்துரை போன்றோரின் உப்புச்சப்பில்லாத எண்ணங்களையும், சுயவிளம்பரத்தோடு ஊழியத்துக்கு பணம்கேட்டு பெங்க் அக்கவுண்ட் விபரங்களோடு வரும் சிறுபத்திரிகைகளையும், வாக்குத்தத்த வசனங்களை அவை எங்கு, எதற்கு, யாருக்கு கொடுக்கப்பட்டவை என்ற எந்த அறிவும் இல்லாமல் சகலருக்கும் பஞ்சாமிர்தம்போல் அள்ளி வழங்கும் சூர்ப்பணகைப் பத்திரிகைகளையும் வாசித்து என்ன ஆகப்போகிறது? அது எந்த வேதஞானத்தை உங்களுக்குக் கொடுக்கப்போகிறது? ‘பணமே கொடுக்காமல் எதுவும் கிடைக்குமானால் சவுகரியமாக இருக்கும்’ என்றாராம் இன்னொருவர். இந்தப் பேச்செல்லாம் வாசித்து அறிவை அதிகரித்துக்கொள்ள விரும்புகிறவர்கள் பேசுகிற பேச்சல்ல; இது வெறும் அலட்சிய மனப்பான்மை மட்டுமே.

கிறிஸ்துவைப் பிரசங்கித்ததற்காகத் தன் வாழ்நாளில் பன்னிரெண்டு வருடங்களை சிறையில் கழித்திருந்தார் ஜோன் பனியன். அவருடைய சிறந்த எழுத்துக்களெல்லாம் சிறைவாசத்தின்போதே உருவாயின. இதை மனதில் வைத்துக்கொண்டு என் நண்பரொருவர் ஒருமுறை என்னைப் பார்த்து, “பாஸ்டர் நீங்கள் சிறையில் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன்” என்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. “என்ன இப்படிச் சொல்லிவிட்டீங்க” என்றேன். என் முகமாற்றத்தைக் கவனித்து ஒருகணம் திகைத்துப்போன அவர், “பாஸ்டர், நான் சொன்னதை தப்பாக எடுத்துக்கொள்ளாதீங்க, ஜோன் பனியனைப் போல நீங்களும் நல்ல இலக்கியங்களை எங்களுக்கு எழுதிக் கொடுத்துதவலாமே என்ற ஆர்வக்கோளாரால் அப்படிச் சொல்லிவிட்டேன்” என்றார். நானும் என்னைச் சுற்றியிருந்தவர்களும் அதைக்கேட்டுக் குபீரெனச் சிரித்தோம்.

ஜோன் பனியன் இருபது வயதில் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு பள்ளிப்படிப்பெல்லாம் கிடையாது. இருந்தாலும் வாசிக்கவும் எழுதவும் தானாகவே கற்றுக்கொண்டார். அவருடைய மனைவி புத்தகங்கள் வாசிப்பவர். நல்ல கிறிஸ்தவ குடும்பத்தில் இருந்து வந்திருந்த அவரிடம் இரண்டு கிறிஸ்தவ நூல்கள் இருந்தன. பனியன் அவற்றை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். அக்காலத்தில் பனியனுக்கு தன்னுடைய கிறிஸ்தவ அனுபவத்தைக் குறித்து சமாதானம் இருக்கவில்லை. கடும் முயற்சி செய்து ஒழுக்கத்தோடு இருக்க அவரால் முடிந்தபோதும் இரட்சிப்பைக் குறித்த சந்தேகம் உள்ளத்தை வாட்டியது. மார்டின் லூத்தர் கலாத்தியர் நிருபத்துக்கு எழுதிய வியாக்கியான நூலை அவர் வாசித்தபோதுதான் விசுவாசத்தின் மூலமாக மட்டும் நீதிமானாக முடியும் என்பதை ஆவியின் மூலமாக அனுபவரீதியாக உணர்ந்தார். அன்று அவருக்கு சமாதானம் கிட்டியது. இப்படி எத்தனை பேர் நல்ல கிறிஸ்தவ நூல்களை வாசித்ததன் மூலமாக கிறிஸ்துவை விசுவாசித்தும், கிறிஸ்தவ அனுபவத்தில் வளர்ந்தும் இருக்கிறார்கள் தெரியுமா?

john_bunyan_engraved_hollபனியன் சிறைக்குப் போனதற்குக் காரணம் கிறிஸ்துவைப் பிரசங்கித்ததுதான். பலரைச் சிறையில் இருந்து விடுதலை செய்த இரண்டாம் சார்ள்ஸ், பனியனை மட்டும் விடுவிக்கவில்லை. சிறைவாசத்தின்போதே பனியன் தன்னுடைய அறுபது நூல்களில் பெரும்பாலானவற்றை எழுதினார். எழுதுவதற்கு சிறையில் அவருக்கு அனுமதி இருந்தது. அக்காலத்தில் சிறைவாசம் கொடியது. அதிக வெளிச்சத்துக்கும், சுகாதாரத்துக்கும் அங்கு இடமிருக்கவில்லை. அரை கிலோ ரொட்டி மட்டுமே அவருடைய ஒரு நாள் உணவு. கொடிய நோய்கள் சிறையில் அநேகரின் உயிரை மாய்த்திருக்கின்றன. இந்தக் கோரமான சிறைவாசத்தின்போதே அவர் ‘மோட்ச பிரயாணத்தையும்’, ‘பாவிகளில் பெரிய பாவிக்குக் கிடைத்த அளப்பரிய கிருபை’ என்ற பிரபலமான நூல்களை எழுதினார்.

எழுத்துக்கூட்டி வாசிக்கவும், எழுதவும் தெரிந்திருந்த ஜோன் பனியன் வாசிப்பதைப் பயிற்சியாகக் கொண்டிருந்து சிந்திக்காதவராக இருந்திருந்தால் இத்தகைய எழுத்துப்பணியாற்றி இருக்க முடியாது. அவருடைய வாசிப்பும், எழுத்தும் கிறிஸ்துவை மேன்மேலும் அறிந்துகொள்ளுவதையும், அவரைப் பிரசங்கிப்பதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தன. வேதத்துக்கு அடுத்தபடியாக பனியன் சிறையில் பல தடவைகள் வாசித்த நூல், பொக்ஸ் எழுதிய ‘இரத்தப்பலியாய் மரித்தவர்களின் சரிதம்.’ மோட்ச பயணத்தைக்கூட நூலாக வெளியிடும் நோக்கத்தோடு அவர் எழுதவில்லை; தன்னுடைய சந்தோஷத்துக்காகவும், நன்மைக்காகவுமே எழுதினேன் என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார்.

ஒருமுறை பென்சில்வேனியாவில் இருக்கும் பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரிக்குப் போன அனுபவத்தை திருமறைத்தீபம் இதழில் எழுதியிருக்கிறேன். பேராற்றல் வாய்ந்த இறையியல் வல்லுனர்களும், பிரசங்கிகளுமான ஆர்ச்சிபால்ட் அலெக்சாண்டர், சார்ள்ஸ் ஹொட்ஜ், ஆர்ச்சிபால்ட் அலெக்சாண்டர் ஹொட்ஜ், பென்ஜமின் வார்பீல்ட், கிரேஷம் மேய்ச்சன் போன்றோர் வாழ்ந்தும், போதித்தும், எழுதியும், உலாவியும் வந்திருந்த அந்தப் புனித தளத்தில் கால்பதித்து நடந்துபோனது என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அங்கிருந்த பியூரிட்டன் பெரியவர்கள் பயன்படுத்திய நூலகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பெரிதாக இருக்கும் என்ற எண்ணத்தில் ஆர்வத்தோடு போனபோது அந்த நூலகம் என்னைத் திகைக்க வைத்தது. எண்ணி இருபத்தைந்து முப்பது நூல்கள்தான், அதுவும் உருவத்தில் மிகச்சிறியவை அங்கிருந்ததைக் கவனித்தேன். பியூரிட்டன் பெரியவர்கள் பயன்படுத்தும்படி இருந்த நூல்கள் அத்தனையே. ஆனால் அதுவல்ல நான் சொல்ல வருவது. குறைந்தளவான அந்த நூல்களைப் பயன்படுத்தி வைராக்கியத்தோடு கற்றும், வாசித்தும் வளர்ந்த அந்த ஜாம்பவான்கள் எத்தனை ஆசீர்வாதமான ஆவிக்குரிய கிறிஸ்தவ இலக்கியங்களையும், தேர்ந்த வழித்தோன்றல்களையும் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள் தெரியுமா? குறைந்தளவாக இருந்த அந்த சிறப்பான நூல்களே 17ம் நூற்றாண்டின் மாபெரும் எழுப்புதலுக்கு வழிகோலின. ஜோன் ஓவன், ஜோன் பிளேவல், ரிச்சரிட் சிப்ஸ் போன்றோரையும் இன்னும் அநேகரையும் எழுத வைத்தன. ‘நூல்களைக் கொண்டு வா’ (2 தீமாத்தேயு 4:13) என்று சிறையிலிருந்த பவுல் தீமோத்தேயுவுக்கு ஏன் சொன்னார் என்று இப்போது புரிகிறதா?

கிறிஸ்தவ இலக்கியங்கள் அருகிக் காணப்பட்டு, வாசிப்பு பெருமளவிற்கு இல்லாமலிருக்கும் இன்றைய கிறிஸ்தவ சூழலை ஆவிக்குரிய எழுப்புதலின் காலமாக எண்ணுவதைப்போன்ற மடமைத்தனம் வேறொன்றில்லை. நாம் வாழுகின்ற இன்றைய தமிழ் கிறிஸ்தவ சூழல் ஆவிக்குரிய எழுப்புதல் பற்றிய அரிச்சுவடியும் அறியாத அறியாமையின் காலப்பகுதி. பால் தினகரனையும், மோகன் சி. லாசரஸையும், பால் தங்கையாவையுந்தான் எழுப்புதல் பிரசங்கிகளாகத் தமிழ் கிறிஸ்தவம் எண்ணிப் பின்பற்றுமானால் நாம் ஆவிக்குரிய முழுப்பஞ்ச காலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை ஆணித்தரமாக அடித்துச் சொல்ல முடியும். வேதப்பிரசங்கத்துக்கு அறவே இடங்கொடுக்காமல், அல்லேலூயா சொல்லியும், பாட்டுக்கச்சேரி நடத்தியும், வாக்குத்தத்த வசனங்களை மட்டும் வாரியிரைத்து, உணர்ச்சிகளுக்குத் தூபம்போடும் ஒருவகை கிறிஸ்தவ மாயையை மக்களை மயக்கி உருவாக்கிவிட்டிருக்கும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கம் தொடரும்வரை எழுப்புதல் நம்மை எட்டிப் பார்க்கக்கூட வழியில்லை. நாம் வாசிக்கின்ற தமிழ் வேதத்தில் ஆயிரக்கணக்கான வடமொழிசார்ந்த, புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலும், வேதத்தைப் ஆழமாக ஆராய்ந்து படித்துப் பயன்படுத்தாமலும் இருக்கும் சமூகம் கர்த்தரின் சித்தத்தைத் தெளிவுற அறிந்திருக்க வழியேது? பிரசங்கம் வெறும் சாட்சியாகவும், கதையாகவும், உப்புச்சப்பில்லாத வெறும் அசட்டுப் பேச்சாகவும் தொடர்ந்திருக்கும்போது கிறிஸ்தவம் தலைநிமிர்ந்து நிற்க வழியேது? இப்போது புரிகிறதா, ஏன் வாசிக்கும் பழக்கம் தமிழ் கிறிஸ்தவ சமூகத்தில் இல்லை என்று?

வாசிப்புக்கு பெற்றோர் வீட்டில் அத்திவாரத்தைப் போடாமல் அதை வேலைவெட்டி இல்லாதவனின் பொழுதுபோக்காக அலட்சியப்படுத்தி வருகிறார்கள். ஒரு நூலைக்கூட அவர்கள் ஒழுங்காக வாழ்க்கையில் வாசித்திருக்க மாட்டார்கள். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பரீட்சைக்காக நூல்களையும், கேள்விக்கான பதில்களையும் மனனம் செய்வதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். சிந்திப்பதற்கு படிப்பில் இடம் இல்லை. பெரும்பாலான மாணவர்கள் வாழ்க்கையில் கட்டுரை எழுதிப்பழகியதில்லை. அதற்கெல்லாம் கல்வி ஸ்தலங்களில் இடமில்லை. போதகர்களும், திருச்சபைகளும் வாசிப்பை அறவே ஊக்கப்படுத்துவதில்லை. இந்தச் சமூகசூழலில் வளரும் நிர்ப்பந்தத்தில் இருக்கும் இளம் வாலிபர்களுக்கு வாசிக்கத் தெரியவில்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கின்றது. பதினைந்து பக்கங்கள் மட்டுமே கொண்ட ஒரு சிறு நூலைக்கூட வாசித்து கருத்துச்சொல்ல முடியாமல் தவிக்கும் நம்மவர்களைப் பார்த்து நான் மனம்நொந்து போயிருக்கிறேன். அதையும்விட மனக்கஷ்டத்தைக் கொடுப்பது தமிழில் எழுத்துப் பிழையின்றி இலக்கணச் சுத்தமாக ஒரு பத்திகூட எழுதத் தெரியாமல் அநேகர் இருப்பது. எனக்கு வரும் வாசகர்கள் பலரின் கடிதங்களே இதற்குச் சாட்சி.

நம்மினத்தில் விஷயங்களைப் பெற்றுக்கொள்ளப் பயன்படும் ஊடகங்களாக இன்றைக்கு டி.வியும், இணையமுமே இருக்கின்றன. அவற்றிலும் எழுத்தைவிடக் காட்சிக்கும், படங்களுக்குமே பெரும்பாலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சமூகத்தில் வாசிப்பிற்கு இடறலேற்படுத்தி வைத்திருப்பது இந்தவிதமாகக் கண்ணுக்கும், காதுக்கும் மட்டும் வேலைகொடுக்கும் அனுதின நடவடிக்கைகளே. சினிமாவும், டி.வியும், இணையமும் இதற்கு வழிகோலியிருக்கின்றன. மேலைநாட்டாரும் இந்தப் பிரச்சனையை உணராமல் இல்லை. வாசிப்பது எப்படி? என்ற தன்னுடைய நூலில் மோர்டிமர் ஜே. அட்லர் சிந்திக்கவேண்டிய உண்மையொன்றை சுட்டிக்காட்டியிருக்கிறார். ‘வாசிப்பு பிரச்சனையாக உருவெடுத்திருப்பதற்கு ஒரு காரணம் ஊடகங்கள் சிந்தனைக்கு இடமில்லாதபடி செய்திருப்பதுதான். வாசகன் சிந்திப்பதற்கு வழியே இல்லாமல் மிகத்திறமையாக அறிவுஜீவிகளைப் பயன்படுத்தி ஒரு விஷயத்தைப் பற்றிய சகல ஆய்வுகளையும், கணக்கீடுகளையும் செய்து தீர்க்கமான முடிவுகளோடு ஊடகங்கள் வாசகனுக்கு முன் வைக்கின்றன. ஒரு விஷயத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளுவதற்கான எந்த உழைப்பும் இல்லாமல் சுலபமாக முடிவெடுப்பதற்கு வாசகனுக்கு அது வசதியானதாக இருந்துவிடுகிறது. உண்மையில் வாசகன் அந்த விஷயத்தைப் பற்றி முடிவே எடுக்கவில்லை. யூஎஸ்பி ஸ்டிக்கில் பதிவுசெய்யப்பட்ட ஓர் ஆய்வினை கம்பியூட்டரில் போட்டுப் பார்ப்பதைப்போல அதை அவன் மனதில் பதிவுசெய்திருக்கிறான். பட்டனைத் தட்டி ஒரு கோப்பைத் மறுபடியும் திருப்பிப்பார்ப்பதுபோல் அந்த விஷயங்களை தேவைக்கேற்ப பார்த்துப் பயன்படுத்திக்கொள்கிறான். சிந்திப்பதற்கே எந்த அவசியமுமில்லாமல் தன் தேவையை நிறைவேற்றிக்கொள்கிறான்’ என்று எழுதியிருக்கிறார் மோர்டிமர் அட்லர்.  வாசகன் சிந்தனையை ஓரங்கட்டி வைக்கவே ஊடகங்கள் உதவுகின்றன.

இதனால் என்றுமில்லாத வகையில் இன்று வாசிப்பு அருகிக் காணப்படுகிறது. தமிழில் பிரபல எழுத்தாளர்களே தலையிலடித்துக்கொள்ளும் அளவுக்கு வாசிப்பு தாழ்ந்த நிலையை அடைந்திருக்கிறது. தமிழில் மூன்று பிரபல எழுத்தாளர்கள் ஆயிரம் புத்தகங்களை விற்பதே அத்தனைப் பாடாக இருக்கிறது என்று ஆசுவாசப்பட்டு அங்கலாய்க்கிறார்கள். ஓர் எழுத்தாளர் எழுதிய சினிமா விமர்சனத்துக்கு அறுநூறு பாராட்டுக் கடிதங்கள் வந்ததாம். அதே சமயத்தில் வெளிவந்த மூன்று நூல்களைப்பற்றி ஒருவரும் ஒரு வார்த்தை எழுதவில்லையாம். ‘காதுக்கும் கண்ணுக்கும் மட்டுந்தான் வேலையா, மூளைக்கு இல்லையா’ என்று அவர் மனக்கஷ்டத்தோடு புலம்பியிருக்கிறார். இந்தளவுக்கு வாசிப்பதும், எழுதுவதும் நம்மத்தியில் தாழ்ந்த நிலையில், குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும்போது அதை ஊக்குவித்து வளர்ப்பதெப்படி? அடுத்து வரவிருக்கும் ஆக்கத்தில் பார்க்கலாம்.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

3 thoughts on “சட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு

  1. உங்களைப் போலவே அங்கலாய்க்கிறவர்களில் நானும் ஒருவன்….படிக்காமல் , அதுவும் ஆழமாக படிக்காமல் நுனிப்புல் மேய்கிறவர்களால் கிறிஸ்தவம் சரியான திசைக்கு , நடத்தப்படவில்லை, சீரழிக்கப்படுகிறது…. நன்றி

    Like

    • என்னுடையது வெறும் அங்காலாய்ப்பு அல்ல; ஆழமான ஆதங்கம்! நீங்கள் வாசித்த ஆக்கம் அதே தலைப்பில் நூல்வடிவில் மேலும் விபரங்களோடு வந்திருக்கிறது. நன்றி.

      Like

மறுமொழி தருக