முதல் கோணல், முற்றும் கோணல்

Bible and Scienceசமீபத்தில் ஓர் ஆங்கிலக் கட்டுரையில் நான் ஆதியாகமத்தைப் பற்றிய ஒரு விஷயத்தை வாசிக்க நேர்ந்தது. அதை எழுதியவர் ‘ஆதாமும். ஏவாளும் இல்லை என்றால் நாம் பிரசங்கிப்பதற்கு சுவிசேஷம் இருக்க வழியில்லை’ என்று Christianity Today என்ற பத்திரிகையில் வந்த ஒரு தலைப்பைச் சுட்டிக்காட்டி எழுதியிருந்தார். வரலாற்று ஆதாமையும் (Historical Adam), கர்த்தர் அவனோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையையும், அவனே மானுடத்தின் பிரதிநிதி (Federal headship) என்பதையும் இன்று நேற்றில்லாமல் அடிப்படை நம்பிக்கைகளாகக் கொண்டமைந்ததே வேதபூர்வமான கிறிஸ்தவம். இவற்றை நிராகரிப்பதோ அல்லது இவற்றிற்கு மாறான வேறு விளக்கங்களைத் தருவதோ அடிப்படைக் கிறிஸ்தவ நம்பிக்கைகளை அடியோடு சிதைத்துவிடும். ஆதியாகமத்திற்கு புது விளக்கம் கொடுக்கும் வழக்கம் காலங்காலமாக இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு காலப்பகுதியிலும் புதுவிளக்கங்களைக் கொடுக்கிறவர்கள் எப்படியோ உருவாகிவிடுகிறார்கள்; கிறிஸ்தவர்களைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்.

ஆதியாகமம் வேதத்தின் முதல் நூலாக மட்டும் இருக்கவில்லை; அனைத்திற்கும் ஆதாரமான ஆரம்ப நூலாகவும் இருக்கின்றது. ஆதியாகமத்தின் முதல் பதினோரு அதிகாரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றின் அடிப்படையிலேயே வேதத்தின் ஏனைய போதனைகள் அமைந்திருக்கின்றன. நான் பழைய ஏற்பாட்டு இறையியலைக் கற்றுக்கொண்ட இறையில் கல்லூரியில் அதைப் போதித்த, நான் மிகவும் மதிக்கும் பேராசிரியர் ஜோன் வெயிட் (Professor John Waite) ஒரு முறை சொன்னார், ‘ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களை இல்லாமலாக்கினால் வேதம் இருக்க வழியில்லை’ என்று. இது சத்தியமான வார்த்தைகள். பிசாசு ஆதியாகமத்தைத் தாக்கும் முயற்சியை இன்றுவரைக் கைவிடவில்லை. ஆண்டவராகிய இயேசுவுக்கே வேதத்திற்கு புதுவிளக்கம் கொடுக்க முயன்றவனாயிற்றே அவன்.

ஆதியாகமத்தின் முதல் பதினோரு அத்தியாயங்களில் காணப்படும் அடிபடைப் போதனைகளை ஒரு முறை பார்ப்போம்.

  1. கர்த்தரைப் பற்றியும், திரியேக தேவனைப் பற்றியதுமான அடிப்படைப் போதனை (ஆதி 1).
  2. ஆறு நாட்களில் கர்த்தரால் உலகம் படைக்கப்பட்டவிதம் (ஆதி 1-2).
  3. தேவதூதர்கள் (ஆதி 1).
  4. ஆதாம், ஏவாள் படைக்கப்பட்ட விதம் (ஆதி 1-2).
  5. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் விதிக்கப்பட்ட நியாயப்பிரமாணம் (ஆதி 3:2-3).
  6. ஆதாம், ஏவாளுக்கு விதிக்கப்பட்ட சமுதாயக் கடமைகள். (ஆதாமின் தலைமைத்துவமும், ஏவாளின் பங்கும்) (ஆதி 1-3).
  7. ஆணும், பெண்ணும் மட்டும் திருமணத்தில் இணைதல் (ஆதி 1-2).
  8. குடும்ப வாழ்க்கை (ஆதி 2-3).
  9. தொழில் (ஆதி 1-2).
  10. சபத்து நாள் (கிறிஸ்தவ ஓய்வு நாள்) (ஆதி 2).
  11. பிசாசு பற்றிய போதனை (ஆதி 2-3).
  12. பாவத்தின் தோற்றம், அதனால் ஏற்பட்ட சீரழிவு, பாவத்திற்குத் தண்டனை (ஆதி 2-3).
  13. கிறிஸ்தவ சுவிசேஷமும், இரட்சிப்பும் (ஆதி 3:15).
  14. கர்த்தரின் கோபமும், நியாயத்தீர்ப்பும் (ஆதி 9-11).

இத்தனைப் போதனைகளுக்குமான அத்திவாரத்தை நாம் ஆதியாகம் 1-11 வரையுள்ள அதிகாரங்களில் காண்கிறோம். இப்போதனைகளுக்கான புதிய ஏற்பாட்டின் விளக்கங்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் புதிய ஏற்பாட்டை எழுதியவர்கள் அவர்களுடைய போதனைகளை நிலைநிறுத்துவதற்கு ஆதியாகமத்தின் இந்த அதிகாரங்களைப் பல இடங்களில் சுட்டிக்காட்டுவதை மறுக்க முடியாது. உண்மையில் புதிய ஏற்பாட்டில் குறைந்தது இருபத்திஐந்து இடங்களில் ஆதியாகமத்தில் முதல் பதினொரு அதிகாரங்களின் பகுதிகளையே இயேசு கிறிஸ்துவும், ஏனைய புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் பயன்படுத்தியுள்ளனர். அதுவும் இந்த ஆதியாகமப் பகுதிகளை எழுத்துபூர்வமாக, வரலாற்று நிகழ்வுகளாகக் கணித்தே விளக்கியுள்ளனர். அந்தளவுக்கு ஆதியாகமத்தின் இந்த அதிகாரங்கள் முக்கியமானவை. இந்த அதிகாரங்களை சிதைத்தால் மட்டுமே வேதநூல்களில் ஏனைய பகுதிகளில் காணப்படும் போதனைகளுக்கு புதுவிளக்கம் கொடுக்க முடியும். இப்போது தெரிகிறதா, பலர் ஏன் இந்த அதிகாரங்களைச் சிதைக்கக் கங்கணம் கட்டிச் செயல்பட்டிருக்கிறார்கள், தொடர்ந்தும் செயல்பட்டுவருகிறார்கள் என்று.

ஆதியாகமம் கற்பனைக் கதையா?

லிபரல் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவர்கள் இந்த அதிகாரங்களைக் கற்பனைக் கதைகள் (Myth) என்று சொல்லுகிறார்கள். லிபரல் போதனையாளர்கள் வேத அதிகாரத்தில் நம்பிக்கையற்றவர்கள். வேதத்தைக் கர்த்தருடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்ளாதவர்கள். இவர்களைப் பொறுத்தவரையில் ஆதியாகமம் மெய்யான வரலாற்று நூலல்ல. லிபரல் இறையியல் அறிஞர்களுக்கு உதாரணமாக கார்ல் பார்த், எமில் புரூனர், புல்ட்மான் போன்றோரைக் குறிப்பிடலாம். வில்லியம் பார்க்கிளே, ஜேம்ஸ் டெனி போன்றோரும் இதே போக்கிலேயே இறையியல் விளக்கங்கள் கொடுத்திருக்கின்றனர்.

இன்று சுவிசேஷ இயக்கத்தில் பலரும், நியோ-கல்வினிசம் என்று அழைக்கப்படும் புது இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆதியாகமத்தைக் கர்த்தருடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டாலும், அதன் முதல் மூன்று அதிகாரங்களை, முக்கியமாக முதலாவதைக் கவிதையாகவும் (Poetical), உருவகமாகவும் (Allegorical or Figurative) பார்க்க முனைந்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே ஆதியாகமத்தைப் பற்றிய ஒரேவிதமான கொள்கையைக் கொண்டிருக்கிறார்கள் என்று கூற முடியாது. இவர்களில் பலர் ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களின் பல பகுதிகளை எழுத்துபூர்வமாகவும், சிலவற்றை உருவகமாகவும், அடையாள மொழியாகவும் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்தால் மட்டுமே இவர்களால் நாம் மேலே பார்த்த அடிப்படை உண்மைகளை நிராகரிக்கவோ அவற்றிற்கு புதுவிளக்கம் கொடுக்கவோ முடியும். ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களைக் கவிதையாகவோ, உருவகமாகவோ அல்லது அடையாளமொழியாகவோ பார்க்கிறவர்களில் முக்கியமானவர்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இவர்களில் Bruce Waltke, (who was professor of Old Testament at Westminster Theological Seminary), Fuller Seminary theologian Paul K. Jewet, Charles E. Hummel, John H. Stek, Howard Van Till, John Frame (who was a professor of theology at Westminster Seminary in Escondido, California) ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். ஆதியாகமத்தை வரலாற்று நூலாகக் கணிக்காமல் உருவகமாகவோ, இறையியல் போதனையை மட்டும் தரும் உருவகப் போதனையாகவோ மட்டும் கணிப்பது அநேக சுவிசேஷ இயக்க இறையியல் அறிஞர்களிடமும், இவெஞ்சலிக்கள் இறையியல் கல்லூரிகளிலும், கிறிஸ்தவ கல்லூரிகளிலும், ஏன், பல சீர்திருத்த இறையியல் அறிஞர்களிடமும் இன்று பொதுவாக இருந்து வருகிறது. அதுவும் போஸ்ட்-மொடர்ன் காலப்பகுதியில் நாம் வாழ்வதால், உண்மை என்று எதுவும் இல்லை என்று வாதிடும் போஸ்ட்-மொடர்ன் சிந்தனை கிறிஸ்தவர்களைப் பாதித்து போஸ்ட்-மொடர்ன் சிந்தனையின் அடிப்படையில் ஆதியாகமப் பகுதிகளுக்கு விளக்கங்கொடுப்பது அதிகரித்து வருகிறது. இதை மேலைநாட்டுக் கிறிஸ்தவத்தில் அன்றாடம் காண்கிறோம். கீழைத்தேய நாடுகளுக்கு இந்தப்போக்கு நிச்சயம் ஏற்றுமதி செய்யப்படும். இது மிகவும் வருந்த வேண்டிய விஷயம்.

ஆதியாகமத்தில் ஆரம்ப அதிகாரங்கள் கவிதையோ அல்லது உருவகமோ அல்ல, முழு வரலாற்று நூல் என்றும், உலகத்தோற்றத்தை விளக்கும் எழுத்துபூர்வமான நூல் என்றும் ஆதியில் இருந்து கிறிஸ்தவர்கள் நம்பி வந்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகளுக்கு எப்படி ஆபத்து வந்தது? முதலில், விஞ்ஞான வளர்ச்சியும், விஞ்ஞானத்தின் அடிப்படையில் சிந்தித்து ஆய்வு செய்யும் முறையும் வளர ஆரம்பித்தது இந்த ஆபத்திற்கு வழிகோளியது. விஞ்ஞான வளர்ச்சிக்குக் காரணம் நம்மைப் படைத்த கர்த்தரே. அவரின்றி மனிதனில் அறிவு மேம்பட வாய்ப்பில்லை. அந்த அறிவை மனிதன் படைத்தவருக்கு எதிராகப் பயன்படுத்தும்போதுதான் ஆபத்து ஏற்படுகிறது. ஆதியில் மனிதன் பேருயரத்தில் ஒரு கோபுரத்தை உருவாக்கியதில் தவறில்லை (ஆதி 9). கர்த்தரை எட்டும் நோக்கத்தில், விண்ணைத்தொட அகங்காரத்தோடு அதைக் கட்டியதுதான் தவறு. விஞ்ஞானத்தை எதற்காக, எப்படி, எதில் பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் கவனத்தோடு இருக்க வேண்டும்.

வேதமும் விஞ்ஞானமும்

விஞ்ஞான வளர்ச்சியும், ஆய்வு மனப்பான்மையும் ஏற்பட்ட காலத்தில் இறையியலறிஞர்கள் இறையியல் கல்லூரிகளில் விஞ்ஞான அடிப்படையில் வேதத்தை ஆராயவும், அதற்கு விளக்கங்கொடுக்கவும் முற்பட்டார்கள் (Higher Criticism). விஞ்ஞானத்தின் அடிப்படையிலான வேத ஆய்வு முறை ஆதியாகமத்தின் வரலாற்று நிகழ்வுகளுக்கு உலகரீதியிலான விளக்கங்கொடுக்க வழிகோளியது. அநேகருடைய விஞ்ஞானக் கண்ணோட்டமே அவர்கள் ஏதேன் வாழ்க்கையையும், நோவா காலத்து ஜலப்பிரவாக உலக அழிவையும், பாபேல் கோபுரத்தையும் வரலாற்று நிகழ்வுகளாக ஏற்றுக்கொள்ள அனுமதிப்பதில்லை. அத்தோடு கர்த்தர் ஆறுநாட்களில் உலகத்தையும் அதில் உள்ளவற்றையும் உருவாக்கியிருக்க முடியாது என்ற எண்ணமும் இவர்கள் மத்தியில் உருவானது. ஆதியாகமத்தில் ‘நாள்’ என்ற வார்த்தையை இருபத்திநான்கு மணித்தியாளங்கள் கொண்ட நாளாகப் பார்க்காமல் அதைவிட அதிகமான காலமாக விளக்கங்கொடுக்கும் வழக்கம் தலைதூக்கியது. டார்வினின் பரிமாணவளர்ச்சிக் கோட்பாட்டை (Evolution theory) நியாயப்படுத்தும் வகையில் ஆதியாகமத்திற்கான விளக்கங்கள் கொடுக்கும் வழக்கம் தலைதூக்கியது. ஆதியாகமத்தை இவர்கள் பொதுவாகக் கற்பனையாகவும், உருவகமாகவும், அடையாளமொழியாகவும் கருதி விளக்கினார்கள். இதை லிபரல் இறையியலறிஞர்களிடம் பார்க்கலாம். இந்தியாவில் முக்கியமாக யூனியன் பிப்பிளிக்கள் செமினரி, அரசரடி இறையியல் கல்லூரிகள் போன்றவற்றில் இந்தப் போக்கே பின்பற்றப்பட்டு வருகின்றது. இதை ஸ்ரீ லங்காவில் பிலிமத்தலாவை இறையியல் கல்லூரியிலும், லங்கா வேதாகமக் கல்லூரியிலும் காணலாம். பொதுவாகவே இந்தவகையில் போதனை தராத இறையியல் கல்லூரிகள் இருப்பது இன்று அரிதாக இருக்கின்றது.

கடவுளை அடிப்படையாகக் கொண்ட பரிணாமவளர்ச்சிக் கோட்பாடு

சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்த பலர் வேதத்தைக் கர்த்தருடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டபோதும் அதிலுள்ள அனைத்து சம்பவங்களையும், போதனைகளையும் எழுத்துபூர்வமாக எடுத்துகொள்ளக்கூடாது என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டனர். இவர்கள் டார்வினின் லிபரல் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை முற்றாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதற்கு ஒத்துப்போகும் விதத்தில் வேதத்திற்கு விளக்கங்கொடுக்க ஆரம்பித்தார்கள். பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் வழியில் உருவான, கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படும் ஒரு போதனைக்குப் பெயர்தான் Theistic evolution. நியோ-கல்வினிசத்தைப் பின்பற்றும் டிம் கெலர் இதைத்தான் நம்புகிறார். இவரைப் பொறுத்தவரையில் ஆதியாகமத்தின் முதல் அதிகாரம் ஒரு கவிதை The Reason for God). இந்தப் போதனை, கர்த்தர் ஓரிரு அடிப்படை அற்புத செய்கைகளின் மூலம் உலகத்தையும், அதிலுள்ள அனைத்தையும் தோற்றுவித்தபோதும், தோற்றுவிக்கப்பட்ட அனைத்தும் அதற்குப் பிறகு பரிணாம வளர்ச்சிமுறையிலே உருவாயின என்று விளக்குகிறது. இந்தப் போதனை விஞ்ஞானத்தை உயர்வானதாகக் கணித்து அதற்கேற்ற முறையில் வேதத்திற்கு விளக்கங்கொடுக்கிறது. இந்த விளக்கத்தின்படி படைப்பில் கர்த்தரின் அற்புதச் செய்கைகளும், இயல்பான படிப்படியான பரிணாமவளர்ச்சியும் இணைந்து காணப்படுகின்றன. இது வேதம் போதிக்கும் உண்மையல்ல.

இடைவெளிக் கோட்பாடு

இன்னுமொரு கோட்பாடு ஆங்கிலத்தில் Gap theory என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போதனை ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் குறிப்பிடப்படும் நாளை இருபத்தி நான்கு மணித்தியாளங்கொண்ட நாளாக ஏற்றுக்கொண்டபோதும், ஒரு நாளுக்கும் அடுத்த நாளுக்கும் இடைப்பட்ட காலத்தை அதைவிட நீண்ட காலப்பகுதியாக விளக்கங்கொடுக்கிறது. இதை Gap creationism என்றும் அழைப்பார்கள். இது வேறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது (ruin-restoration creationism, restoration creationism). இதிலும் வித்தியாசமான விளக்கங்கள் காணப்படுகின்றன. இந்தப் போதனை உலகம் மிகமிகப் பழமையானதாகவும், அது தோன்றுவதற்கு ஆறாயிரம் ஆண்டுகளைவிடப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளோ, அதைவிட நீண்ட காலங்களோ எடுத்திருக்க வேண்டும் என்று நிருபிக்கப் பார்க்கின்றது. இந்தப் போக்கை ‘நியோ’ அல்லது ‘நியூ-கல்வினிச’ இயக்கத்தைச் சேர்ந்தவர்களிடமும் காண்கிறோம் (ஜோன் பைப்பர், டிம் கெலர்). இந்தப் போக்கிற்குக் காரணம் சந்தேகத்திற்கு இடமில்லாதவகையில் உலகம் மிகப்பழமையானது என்று விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது என்று இவர்கள் நம்புவதால்தான். ஆகவே, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு இடங்கொடுக்கும் விதத்தில் இவர்கள் ஆதியாகமத்திற்கு விளக்கங்கொடுக்கிறார்கள்.

வேதத்தில் நமக்கிருக்க வேண்டிய நம்பிக்கை

‘படைப்பை விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி விளக்க முடியாது’ என்று ஜோன் மெக்காத்தர் எழுதியிருக்கிறார். கர்த்தர் படைத்த அனைத்தையும் வைத்தே விஞ்ஞானிகளால் எந்த ஆய்வையும் செய்ய முடிகிறது. அதனால் படைப்புக்கு பின்னால் வந்த விஞ்ஞானம் படைப்பைப் பற்றி விளக்கங்கொடுக்க வழியில்லை. கர்த்தரின் அற்புத படைப்புச் செயலுக்கு எதிராக விளக்கங்கொடுக்கும் ‘இயற்கைவாதிகளைப்’ (Naturalisits) பார்த்து நாம் பின்வாங்க வேண்டிய அவசியமில்லை. கர்த்தரின் வேதத்தில் நம்பிக்கை வைத்து வேதம் போதிப்பதை விசுவாசித்து தைரியத்தோடு விசுவாசிக்க வேண்டும், விளக்கவேண்டும். இவெஞ்சலிக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வெயின் குரூடம் (Wayne Grudem) என்ற இறையியலறிஞர், ‘உலகத்திற்கு எத்தனை வயது என்ற விஷயத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை’ என்று அவருடைய இறையியல் விளக்க நூலில் எழுதியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் இது வேதத்தின் ஏனைய போதனைகளைவிட முக்கியமானதல்ல. ஆனால், வெயின் குரூடத்தின் கூற்று மிகத்தவறானது. பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டுக்கு இடங்கொடுத்து உலகத்தின் வயதைக் கூட்டிக்காட்ட முயலும் கூட்டம் வேத நம்பிக்கைகளை சிதரடிக்கப் பார்க்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. இன்றைய சுவிசேஷ இயக்கத்தைச் சார்ந்த பெரும்பாலான இறையியல் கல்லூரிகளும், அறிஞர்களும் உலகம் இளமையானது (young earth) என்ற நம்பிக்கையை என்றோ இழந்துவிட்டிருக்கிறார்கள்.

கர்த்தர் ஆறு நாட்களில் உலகத்தை உருவாக்கினார் என்பதையும், ஒரு நாள் இருபத்தி நான்கு மணித்தியாளங்களைக் கொண்ட நாள் என்பதையும், முதலாம் நாளுக்கும் இரண்டாம் நாளுக்கும் இடையில் எந்த இடைவெளியும் இருக்கவில்லை என்பதையும், ஏனைய போதனைகளை வழங்கும் ஆதியாகமம் பதினொரு அதிகாரங்களையும் எழுத்துப்பூர்வமாக, உண்மை வரலாற்று நிகழ்வுகளாக ஏற்று, நம்பி விசுவாசிக்க வேண்டியது இன்று கிறிஸ்தவனின் தவிர்க்கமுடியாத கடமையாக இருக்கின்றது. இதற்கு கிறிஸ்தவனுக்குத் தேவை விசுவாசம் மட்டுமே. விஞ்ஞானத்தில் நம்பிக்கை வைத்து வேதத்தை அதற்கேற்றபடி மாற்றுவது பாலில் விஷத்தைக் கலப்பதற்கு சமமானதாகும்.

பரிணாம வளர்ச்சிக்கோட்பாட்டின் அடிப்படையிலான அனைத்து ஆதியாகம விளக்க முறைகளிலும், ஆதியாகமம் மெய்யான வரலாறு என்பதை மறுக்கும் போதனைகளிலும் உள்ள ஆபத்து என்ன தெரியுமா?

1. வேதம் கர்த்தரால் ஊதி அருளப்பட்டதென்பதை இக்கொள்கைகள் மறுக்கின்றன.

பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்களுக்கான எந்த விளக்கமும் கர்த்தரின் வேதம் அருளப்பட்ட முறையை சந்தேகக்கண்ணோடு பார்த்து அதை விசுவாசிக்க மறுக்கின்றன. வேதம் கர்த்தரால் ஊதி அருளப்பட்டதாக (God breathed – theopneustos – 2 TIm 3:16) நாம் வேதத்தில் வாசிக்கிறோம். இதற்கு அர்த்தம் பரிசுத்த ஆவியானவர் சாதாரண  மனிதர்களைப் பயன்படுத்தி, அவர்களை வழிநடத்தி வேதத்தை எழுத வைத்தார் என்பதே. இதை ஆங்கிலத்தில், Inspiration என்று அழைப்பார்கள். இது வேதம் அருளப்பட்ட தன்மையைக் குறித்த முக்கிய உண்மை. உலக மனிதர்களின் எழுத்துக்களில் காணப்படாத ஒரு தெய்வீக வழிநடத்துதல் இது. அதனால்தான் வேதம் மனித எழுத்துகளைவிட மாறுபட்டதாக இருக்கின்றது. இந்தத் தெய்வீக ஆவியின் வழிநடத்துதல் வேதத்தின் போதனைகள் மட்டும் சம்பந்தப்பட்டதாக இல்லாமல் வேதத்தின் வார்த்தைகளோடும் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றது. அதாவது, பரிசுத்த ஆவியானவர் வேதத்தை ஊதி அருளியபோது அதை எழுதியவர்கள் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துமாறும் பார்த்துக்கொண்டார். வேதம் எழுதப்பட்ட மூல மொழிகளில் (எபிரெயம்-கிரேக்கம்) ஒவ்வொரு வார்த்தையும், சகல பகுதிகளும் கர்த்தரால் தெரிந்து கொடுக்கப்பட்டவை (Verbal plenary inspirtation). அதனால்தான் வேதத்தில் காணப்படும் வார்த்தைகளையும், எந்தப் பகுதிகளையும் நாம் ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது. பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான எந்த விளக்கமும் வேதத்தைப் பற்றிய இந்த அடிப்படை சத்தியத்தை மாசுபடுத்துகின்றன; மறுக்கின்றன. அவை அனைத்துமே வேத வார்த்தைகளுக்கு கர்த்தர் தந்துள்ள அர்த்தத்தைவிட மறுபொருள் கொடுப்பதோடு, வரலாற்று நிகழ்வுகளைக் கற்பனையாகவும், கவிதை மொழியாகவும், உருவகமாகவும் பார்க்கின்றன. கிறிஸ்தவர்கள் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான எந்த விளக்கத்தையும் Theistic evolution and Gap theory) நாம் அடியோடு நிராகரிக்க வேண்டும்.

2. வேதத்தின் அதிகாரத்தை நிராகரிக்கின்றன.

பரிணாமவளர்ச்சிக் கோட்பாடும், அதை அடிப்படையாகக் கொண்ட ஏனைய போதனகளும் (Theistic evolution and Gap theory) வேதத்தின் அதிகாரத்தை மாசுபடுத்துகின்றன. வேதவார்த்தைகளுக்கும், போதனைகளுக்கும் கர்த்தர் நினைத்திராத விளக்கங்களைக் கொடுக்கின்றபோது அத்தகைய செயல்கள் வேதத்தை மாசுபடுத்தி அதன் அதிகாரத்தைக் குறைவுபடுத்துகின்றன. வேதம் கர்த்தருடைய தவறுகளற்ற, சத்தியமான வார்த்தை என்பதை பரிணாமவளர்ச்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான சகல விளக்கங்களும் நிராகரிக்கின்றன. கர்த்தர் ஆறுநாட்களில் உலகத்தை உருவாக்கினார் என்பதையும், இருபத்தி நான்கு மணித்தியாளங்களைக் கொண்ட நாட்களாக ஒவ்வொரு நாட்களும் இருந்தன என்பதையும் ஏற்றுக்கொள்ள இருதயம் மறுக்கின்றபோது அந்த இருதயத்தில் கர்த்தரின் வேதத்தைப் பற்றிய சந்தேகம் எழுந்துவிட்டதென்றே அர்த்தம்.

3. கர்த்தரின் இறையாண்மையைக் குறைவுபடுத்துகின்றன.

பரிணாம வளர்ச்சிக் கோட்பாடும், அதோடு தொடர்புடைய Theistic evolution,  Gap theory  போன்றவையும் கர்த்தரின் இறையாண்மையைக் குறைவுபடுத்துகின்றன. இறையாண்மையுள்ள கர்த்தரால் முடியாதது என்று ஏதாவது இருக்க முடியுமா? எதுவுமில்லாததிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்கிய தேவனால் செய்ய முடியாதது என்ன? நம்மைப் படைத்த கர்த்தரால் செய்ய முடியாதது என்று என்ன இருக்கின்றது. நோவாவின் காலத்தில் உலகத்தை அழித்து எட்டுப் பேரை மட்டும் காப்பாற்றி, சோதோம், கொமோராவை அக்கினியினால் அழித்து, யோனைவை மீன் விழுங்க வைத்து இன்னும் எத்தனையெத்தனையோ அற்புதங்களைச் செய்த கர்த்தருக்கு உலகத்தை ஆறுநாட்களில் உருவாக்குவது என்பது பெரிதா? இதை விசுவாசிக்கத் தெரியாத கிறிஸ்தவ விசுவாசம் எத்தகைய விசுவாசமாக இருக்க முடியும்?

4. கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சிதைக்கின்றன.

ஆதியாகமத்தின் படைப்பு சம்பந்தமான மெய் வரலாற்றுப் போதனைகளும், அதன் முதல் பதினோரு அதிகாரங்களில் காணப்படும் சத்தியங்களும் கிறிஸ்தவ சுவிசேஷத்தோடு தொடர்புள்ளவை என்பதைப் பலர் நினைத்துப் பார்ப்பது கிடையாது. ஆதியாகமத்தில் 3:15ல் தான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை முதன் முறையாக வாசிக்கிறோம். ஆதியாகமத்தின் முதல் பதினொரு அதிகாரங்களின் வரலாற்றுத் தன்மையை சிதைத்தால் கர்த்தரின் அற்புதங்களும், அவ்வதிகாரங்களின் போதனைகளும் சிதைக்கப்பட்டுவிடுகின்றன. மனிதனின் தோற்றம், ஏதேனில் அவனுடைய வாழ்க்கை, அவனுடைய பாவம் பற்றிய போதனைகளும் பாதிப்புக்குள்ளாகின்றன. அவை பாதிப்புக்குள்ளாகும்போது கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அடிப்படைத் தன்மையும் பாதிப்புக்குள்ளாகின்றது. கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பு, கிறிஸ்துவின் அற்புதச் செய்கைகள், கிறிஸ்துவின் மரணம் மற்றும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலும் இல்லை என்றாகி விடுகின்றது (1 கொரி 15:17-19). ஆதியாகமத்தின் ஆரம்பப் பகுதிகளுக்கும் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கும் இடையில் இருக்கும் இணைப்பைத் தவிர்க்க வழியில்லை. அதனால்தான் ‘ஆதாமும், ஏவாளும் இல்லை என்றால் நாம் பிரசங்கிப்பதற்கு சுவிசேஷம் இருக்க வழியில்லை’ என்று Christianity Today என்ற பத்திரிகையில் வந்த ஒரு தலைப்பைச் சுட்டிக்காட்டி ஒருவர் எழுதியிருந்தார்.

எந்த ரூபத்திலும், எந்த நோக்கத்தோடும் ஆதியாகமத்தின் ஆரம்பப் பகுதிகளுக்கு புது விளக்கத்தைக் கொடுக்கிறவர்களின் மாயையில் கிறிஸ்தவர்கள் விழுந்துவிடக்கூடாது. அத்தகைய புது விளக்கங்களை நம்ப ஆரம்பிப்பது கர்த்தரிலும், அவருடைய வார்த்தையிலும் நம்பிக்கையை இழப்பதில் மட்டுமே கொண்டுபோய் விடும். ஆதியாகமம் கர்த்தருடைய வார்த்தை என்ற அடிப்படை நம்பிக்கையோடே அதை அணுக வேண்டும். நாம் பல விஷயங்களில் அத்தகைய அடிப்படை நம்பிக்கைகளை வாழ்க்கையில் கொண்டிருக்கிறோம். வேதத்தைப் பற்றிய இந்த அடிப்படை நம்பிக்கையைக் கொண்டிருக்கிறவனே கிறிஸ்தவன் (2 தீமோ 3:16-17). ஆதியாகமத்தையும், அதன் ஆரம்ப அதிகாரங்களில் காணப்படும் அத்தனை நிகழ்வுகளையும், போதனைகளையும் உள்ளது உள்ளபடியே விசுவாசிக்க மறுக்கும் இருதயம் கர்த்தரை விசுவாசிக்கும் இருதயமாக இருக்க வழியில்லை. கிறிஸ்துவோடு இல்லாதவன் கிறிஸ்துவுக்கு எதிரானவன் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த உலகத்தில் கிறிஸ்துவுக்கு சாட்சி கொடுக்காதவனை அவர் மறுஉலகத்தில் நிராகரிப்பார் என்பதை நினைவுகூருங்கள். அடுத்தமுறை ஆதியாகமத்தை வாசிக்கிறபோது அது ஆண்டவருடைய, ஆவியால் அருளப்பட்ட வார்த்தை என்ற தேவபயத்தோடு வாசியுங்கள். முதல் கோணல், முற்றும் கோணல் என்பது எத்தனை உண்மையான வார்த்தைகள் என்பது இப்போது புரிகிறதா?

Helpful resources:

  1. Coming to Grips with Genesis: Biblical Authority and the Age of the Earth edited by Terry Mortenson, Thane Hutcherson Ury, Master Books.
  2. In the Beginning, E. J. Young, The Banner of Truth Trust.
  3. Genesis 3, E.J. Young, The Banner of Truth Trust.

_____________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

One thought on “முதல் கோணல், முற்றும் கோணல்

  1. //லங்கா வேதாகமக் கல்லூரியிலும் காணலாம். பொதுவாகவே இந்தவகையில் போதனை தராத இறையியல் கல்லூரிகள் இருப்பது இன்று அரிதாக இருக்கின்றது.//

    சகோதரரே இது மிகவும் தவறான கருத்து. இவர்கள் வெளியிட்ட ஆதியாகமம் என்ற நூலில் (Dr. M.S. வசந்தகுமார் )எ இக்கொள்கைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது. எனது தளத்தில் சிலவற்றை எடுத்துப் பதித்துள்ளேன் .

    Like

மறுமொழி தருக