ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்கிரதை! – கோவிட்-19

இது கோவிட்-19ன் காலம்! படுக்கப்போகும் நேரத்தில் இருந்து காலையில் கண்விழிக்கும்வரை அதுதானே நினைவில் இருக்கிறது. அடுத்து என்ன நடந்திருக்கிறது என்று நானும் பாக்ஸ் நியூசில் (Fox news) இருந்து எல்லா ஆங்கிலச் செய்திகளையும் ஒரு நாளில் இரண்டு தடவைகளாவது பார்த்துவிடுகிறேன். எப்படிப் பார்க்காமல் இருக்கமுடியும்? ஒவ்வொரு நாளும் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தொகை அதிகரித்து வருவது மட்டுமல்லாமல் இறந்துகொண்டிருப்பவர்களின் தொகையும் அதிகரித்து வருகிறதே. அதுவுமில்லாமல் ஒவ்வொரு நாளும் தேசங்களின் அரசாங்கங்கள் புதிது புதிதாக நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கும்படியான, அதே நேரம் அவசியமான அநேக நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன; அதையெல்லாம் நாட்டு மக்களின் நன்மையைக் கருதியே செய்துவருகிறார்கள். வைரஸால் மேலும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்றே அவர்கள் கருத்தோடு செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த வார இறுதியில் நானும் என் மனைவியும் பதினான்கு நாட்களுக்கு எங்கள் வீட்டுக்குள்ளேயே சிறைவாசம் ஆரம்பிக்கப்போகிறோம். பயந்து விடாதீர்கள்! நாங்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்குப் போயிருந்த என் மனைவி வீடு திரும்பவிருக்கிறார்கள். அப்படி நாடு திரும்புகிறபோது இப்போதிருக்கும் அரச கட்டளையின்படி அவர்கள் வீட்டுக்குள்ளேயே பதினான்கு நாட்கள் இருக்கவேண்டும்; அவரோடு நானும் வெளியில் போக முடியாது. அதற்காக இரண்டு வாரத்திற்கான உணவுப்பொருட்களை இந்த வாரம் வாங்கிவைத்துவிட்டேன். இரண்டு வாரங்களுக்கு முன் சகஜ வாழ்க்கை நடத்தி வந்திருந்த எங்கள் வாழ்க்கையிலும் கோவிட்-19 மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமா? இதை எழுதிக்கொண்டிருக்கும் 16ம் தேதி காலை நான் இரண்டுவார வெளிதேசப் பிரயாணத்தை ஆரம்பித்து நான்கு நாடுகளுக்குப் போய்வர விமானத்தைப் பிடித்திருக்கவேண்டும். கோவிட்-19 அதில் மண்ணை வாரிப்போட்டுவிட்டது. விமானப்பிரயாணத்தையும், நான்கு நாடுகளிலும் நான் செய்தியளிக்க வேண்டிய கூட்டங்களையும், தங்குமிட ஏற்பாடுகளையும் ரத்து செய்துவிட்டு நேற்று, ஞாயிறு தினம் இந்த வைரஸைப் பற்றிய பிரசங்கத்தைச் செய்துவிட்டு இந்த ஆக்கத்தை எழுத ஆரம்பித்தேன். என் வாழ்நாளில் இதுவரை ஒரு வாரத்தில் இந்தளவுக்கு பெரும் மாற்றத்தை, அதுவும் இத்தனை வேகமாக எதுவும் ஏற்படுத்தியதாக நினைவில் இல்லை. ஏன், என் வாழ்நாளில் இந்தளவுக்கு முழு உலகத்திலும் அகோர பாதிப்பை ஏற்படுத்திய எந்த நிகழவும் நிகழ்ந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது நூறுவருடங்களுக்கு ஒருமுறை ஏற்படுகின்ற நிகழ்வு என்று மீடியாக்களில் சொல்லுகிறார்கள்.

கோவிட்-19 என்பது என்ன? இது ஒரு வைரஸ்; அதுவும் இதுவரை உலகம் சந்தித்திருக்கும் வைரஸுகளைவிட கொஞ்சம் வித்தியாசமானது. இது ஒரு புது வைரஸ்; இதற்கு முன் இது உலகில் இருந்ததில்லை. எங்கள் நாட்டில் பணிக்காலங்களில் புளூ (Flu) வருவது வழக்கம். அதில் இருந்து தப்புவதற்காக சம்மர் காலம் முடியுமுன் புளூ ஊசி குத்திக்கொள்ளுவோம். ஒவ்வொரு பனிக்காலத்திலும் வித்தியாசமான புதிய வைரஸ்கள் உருவாகும். ஆகவே, புளூ ஊசி அந்த வைரஸுகளில் இருந்து தப்ப உதவும். ஒவ்வொரு சீசனிலும் புளூ வரும்போது நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்படுவதில்லை. அதைப்பற்றி மிகப் பெரிதாக எவரும் அலட்டிக்கொள்ளுவதும் இல்லை. ஆனால், கோவிட்-19 என்றழைக்கப்படும் இந்தக் ‘கொரோனா வைரஸ்’ எல்லோரையும் பற்றிக்கொள்ளும். ஆண், பெண், குழந்தைகள் என்று வேறுபாடு காட்டாமல் இது அனைவரையும் பாதிக்கும். அதுவும், எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களும், ஏற்கனவே உடல்நிலை பாதிப்புற்று இருக்கும் வயோதிபர்களும் இதனால் பாதிக்கப்படுவது மட்டுமன்றி இறந்துபோகவும் வாய்ப்பு மிக அதிகம். அத்தோடு கோவிட்-19 வைரஸ் மிக வேகமாக ராக்கெட் வேகத்தில் பரவக்கூடியது. இந்த மூன்றே மாதங்களில் 185 நாடுகளில் இது 276,000 பேரைப் பாதித்து 11,500 பேரின் உயிரைக்குடித்திருக்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்குப் பக்கத்தில் நான்கு பேர் பதினைந்து நிமிடங்கள் நின்று பேசிக்கொண்டிருந்தாலே போதும்; அந்த நான்கு பேரையும் அது நிச்சயம் தொற்றும். அத்தோடு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர் இருமினாலோ, தும்மினாலோ அவருடைய வாயில் இருந்து தெளிக்கும் துளிகள் ஒரு மீட்டர் தூரத்திற்கு குறைவான தொலைவில் இருப்பவரில் பட்டு அவரையும் வைரஸ் தொற்றிக்கொள்ளும். அந்தளவுக்கு இது மிகவேகமாக, நிச்சயமாக தொற்றிக்கொள்ளும் தொற்றுநோய். அதனால்தான் மருத்துவ வல்லுனர்கள் எல்லோரையும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நாம் சந்தேகிக்கும் எவருக்கும் பக்கத்தில் இருக்காமல் இரண்டு மீட்டர் தள்ளி இருக்கும்படியாக தொலைக்காட்சிகளில் தொடர்ந்து அறிவிப்புக் கொடுத்து வருகிறார்கள். அத்தோடு கைகளைத் தொடர்ந்து அடிக்கடி சோப்பினால் கழுவி சுத்தமாக வைத்திருப்பது மட்டுமன்றி முகத்தையும் தொட்டுவிடக்கூடாது என்று அறிவித்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் ஹூபேய் மாநிலத்தில் வூகான் (Wuhan) என்னும் நகரத்தில் காட்டு மிருக மாமிசம் விற்கும் ஒரு மார்க்கட்டில் ஆரம்பமானது என்று அறிகிறோம். வவ்வாலோ அல்லது இன்னொரு மிருகத்திலோ இருந்த வைரஸ் கிருமி வேறொரு மிருகத்தில் தொற்றி உருமாற்றமடைந்து கொரோனா வைரஸாக மாற அதை மிருக மாமிசத்தை மார்கட்டில் இருந்து வாங்கிச் சென்று சாப்பிட்ட எவரிலோ அது தொற்றி வூகான் நகர மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. இதைக் கண்டுபிடித்து அரசை எச்சரிக்க முயன்ற ஒரு சீன டாக்டரை அரச அதிகாரிகள் எச்சரித்து வாயை அடைக்க முயன்றார்கள். பின்பு அந்த டாக்டரையும் கொரோனா வைரஸ் தாக்கி அவர் உயிரிழந்தார். கொரோனா வைரஸ் வூகானில் பரவ ஆரம்பித்த சில வாரங்களில் சீன அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து அது பரவுவதைத் தடுக்க முயலாமல் உலகத்தின் கண்களில் இருந்து அதை மறைக்க முயன்றார்கள். வைரஸ் வெகுவேகமாகப் பரவி ஆயிரக்கணக்கானவர்களைப் பாதித்து நூற்றுக்கணக்கானவர்கள் இறக்க ஆரம்பித்தபோதே சீன அரசின் கண்துடைப்பு முயற்சி வெற்றிபெறாமல் போய் வூகான் நிகழ்வுகள் உலக நாடுகளுக்குத் தெரிய ஆரம்பித்தன. மூன்றே மாதங்களுக்குள் கண்ணில் காணமுடியாத மைக்ரோ மினி அளவில் இருக்கும் இந்தச் சின்ன வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் காலையில் கண்விழிக்கும்போது முந்தைய நாளைவிட அதிரடி மாற்றங்கள் உலக நாடுகளில் ஏற்பட்டு வருகின்றன. நான் இந்த ஆக்கத்தை எழுத ஆரம்பித்து சில பக்கங்களை முடிப்பதற்கு முன்பாக ஆயிரக்கணக்கான மக்கள் இறந்திருப்பது மட்டுமன்றி பல்லாயிரக்கணக்கானோரை இந்த வைரஸ் தொற்றியிருக்கிறது. இந்த ஆக்கத்தை நான் முடிக்குமுன் என்னவெல்லாம் நடந்துவிடும் என்று யாரால் சொல்ல முடியும்? இதுவரை பல நாடுகளில் முழு தேசமுமே செயலிழந்து நிற்கும் அளவுக்கு மக்கள் நடமாட்டம் நின்றுபோகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உலகத்தில் சூப்பர் பவராக இருந்து வருகின்ற அமெரிக்க தேசத்தில் பத்துபேருக்கு மேலுள்ள எந்தக் கூட்டமும் கூடுவதைத் தவிர்த்துக்கொள்ளும்படி அரசு கேட்டிருக்கிறது. அந்நாட்டில் அத்தனை சபைகளும் ஆராதனைக்கூட்டங்களைக் கூட்டுவதை நிறுத்தியிருக்கின்றன. மார்ச் 15ம் தேதியை தேசமுழுவதும் ஜெப நாளாக பிரசிடன்ட் டிரம்ப் பிரடனப்படுத்தியிருந்தார். உலக மக்களுடைய இருதயதில் பீதியை ஏற்படுத்தி, நாடுகளின் பொருளாதாரத்தை சரியவைத்து, உலக அரசுகளை மண்டியிட வைத்திருக்கிறது கோவிட்-19.

கொரோனா வைரஸ் உலக மக்கள் மத்தியில் பெரும் பீதியை உருவாக்கியிருக்கிறது. சூப்பர் மார்கெட்டில் மக்கள் நிறைந்து பல மாதங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைக்க முயல்கிறார்கள். அரசு அப்படிச் செய்யாதீர்கள் என்று சொல்லியும் பயம் அவர்களைத் தொடர்ந்து அதைச் செய்ய வைக்கிறது. இன்றைய செய்தியில், என் நாட்டில் சூப்பர் மார்கெட்டுகளில் காய்கரி விதைகளும், செடிகளும் ஏராளமாய் விற்பனையாகியிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். போகிற போக்கில் காய்கறிகள் இல்லாமல் போய்விடுமோ என்று மக்களுக்குப் பயம். பஸ்ஸில் ஒருவர் இறுமியதைக் கேட்ட ஒரு பஸ் டிரைவர் இறுமிய நபரை வழியில் இறக்கிவிட்டுவிட்டுப் போயிருக்கிறார். பயம் மனிதர்களை என்னென்னவோ செய்யவைக்கிறது. உண்மையில் கொரோனா வைரஸைவிட அதைப்பற்றிய பயம் மக்களை வெகுவேகமாகப் பரவி அலைக்கழிக்கிறது. இன்னும் எத்தனைக் காலத்துக்கு இந்த வைரஸ் உலகத்தில் தொடரப்போகின்றது, எத்தனைபேரின் உயிர்களைக் குடிக்கப்போகின்றது, எத்தனை ஆயிரம் மக்களைத் தொற்றிக்கொள்ளப்போகிறது என்பதையெல்லாம் தெரிந்துவைத்திருக்கிறவர் இந்த உலகத்தில் ஒருவருமேயில்லை. பெரும் மருத்துவ வல்லுனர்களும் புள்ளிவிபரங்களை வைத்து ஊகிக்கிறார்களே தவிர முடிவான பதில்களை அவர்களால் தரமுடியவில்லை; எப்படித் தரமுடியும், அவர்கள் கடவுளா என்ன?

இந்தக் கொரோனா வைரஸ் நமக்கு எதைச் சுட்டுகிறது? இதிலிருந்து நாம் எதைத் தெரிந்துகொள்ள வேண்டும்? இது நிச்சயமாக, தற்செயலாகவோ, காரணமில்லாமலோ நிகழ்ந்ததல்ல. இந்த உலகத்தில் இது நிகழப்போகிறது என்பதையும், ஏன் நிகழ்கிறது என்பதையும் அறிந்தவர் ஒருவர் மட்டுமே. அது நம்மையெல்லாம் படைத்திருக்கும் கர்த்தரே! கொரோனா வைரஸ் மூலம் நிச்சயம் இறையாண்மையுள்ள கர்த்தர் தம்முடைய மகிமைக்காக இந்த உலகில் எதையோ செய்துகொண்டிருக்கிறார் என்பது மட்டும் உறுதி. எது நிகழ்ந்தாலும் அது கர்த்தரின் அனுமதியில்லாமல் நம் வாழ்வில் நிகழ வழியில்லை. அப்படி நிகழும் எந்தக் காரியத்தையும் அவர் தம்முடைய அநாதி காலத்திட்டத்தை இந்த உலகில் நிறைவேற்றப் பயன்படுத்திக்கொள்ளுகிறார்.

1. கர்த்தர் பேசுகிறார் – கொரோனா வைரஸ் மூலம் கர்த்தர் பேசுகிறார் என்பதை நாம் உணர வேண்டும். கர்த்தர் தம் வார்த்தையின் மூலம் தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தி நம்மோடு தொடர்ந்து தம் வார்த்தை மூலம் பேசிக் கொண்டிருந்தாலும் உலகத்தை ஆளும் கர்த்தர் உலக நிகழ்வுகள் மூலம் நம்மோடு வல்லமையாகப் பேசுகிறார். 2004ம் ஆண்டு சுனாமி சில நாடுகளை சின்னாப்பின்னப்படுத்தியபோது அதன் மூலம் கர்த்தர் தெளிவாகப் பேசி, என்றும் இருக்கிறவராகிய என்னை நீ தொடர்ந்து உதாசீனப்படுத்தாதே என்று உலக மக்களுக்குச் சொல்லவில்லையா? அமெரிக்காவில், நியூயோர்க் நகரில் வானுயரத் தலைநிமிர்ந்து நின்ற இரட்டைக் கட்டடம் தெலபான் தீவிரவாதிகள் விமானங்களைப் பயன்படுத்தி தரைமட்டமாக்கியபோது அந்த நிகழ்வு அமெரிக்காவை மட்டுமல்லாமல் முழு உலகத்திலும் பீதியை ஏற்படுத்தி அசைத்தபோது கர்த்தர் அதன் மூலம் பேசாமலா இருந்தார்? பேசுகிறவராயிருக்கின்ற கர்த்தர் உலகத்தில் இத்தகைய நிகழ்வுகள் மூலம் மனிதனுக்கு நான் இருக்கிறவராயிருக்கிற தேவன் என்றும், என்னைத் தொடர்ந்து உதாசீனப்படுத்தாதே என்றும் சொல்லுகிறார் என்பதை எவரால் மறுக்கமுடியும்? கொரோனா வைரஸைப்பற்றி இருபத்தி நான்கு மணிநேரங்களும் செய்திகளை அள்ளித் தெறித்து வருகின்ற பன்னாட்டுத் தொலைக்காட்சி நிறுவனங்களும் இந்த மூன்று மாதங்களில் கடவுள் என்ற வார்த்தையை ஒருதடவைப் பயன்படுத்தி நான் கேட்டதில்லை. அந்தளவுக்கு கடவுளைப் பற்றிய உணர்வு அரவேயில்லாமல், அப்படியொருவர் இருக்கிறார் என்பதை அப்பட்டமாக நிராகரித்து, மனிதனின் ஆற்றலிலும், செயல்களிலும், திட்டங்களிலும், தன்மையிலும் முழு நம்பிக்கை வைத்து மனித சுகத்துக்காக மட்டும் வாழ்ந்து வரும் உலக சமுதாயம் தொடர்ந்து தன்வழியில் கரை மீறிய வெள்ளம்போல் போய்க்கொண்டிருக்கும்போது மானுடத்தை தம் மகிமைக்காகப் படைத்து இறையாண்மையுடன் செயல்பட்டு வரும் கர்த்தர் பேசாமலா இருந்துவிடப்போகிறார்?

2. கர்த்தர் எச்சரிக்கிறார் – இணைய தளத்தில் சில கிறிஸ்தவர்கள் இந்த உலக சம்பவத்தோடு ஆண்டவரை நேரடியாகத் தொடர்புபடுத்தி மக்களை பயமுறுத்தக்கூடாது என்ற நிலையை எடுத்து வருகிறார்கள். எத்தனை வேடிக்கை. இத்தகைய முயற்சி சமயசமரசபாணியில் போகிறவர்களுக்கு ஒத்துப்போகும். ஆனால், உண்மையை சோற்றில் புதைத்து மறைக்கமுடியாது. இது சுற்றியிருப்பவர்களை தாஜா செய்து ஆறுதல் ஏற்படுத்திக்கொண்டிருப்பதற்கு நேரமல்ல. இது ஒவ்வொருவரும் தங்களைச் சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டிய நேரம். சங்கீதம் 2ஐ இந்த நேரத்தில் நினைவுகொள்ள வேண்டும். உலக மக்கள் ஒட்டுமொத்தமாக கர்த்தரை நிராகரித்து அவருடைய திட்டங்களை அழித்துவிட வேண்டும் என்று கங்கணங்கட்டிக் கோட்டமடித்துக்கொண்டிருக்கும்போது உன்னதத்தில் இருக்கின்றவர் அவர்களைப் பார்த்து நகைக்கிறார் என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. அவருடைய நகைப்பிற்குப் பொருள் என்ன? முதலில் அவருடைய கண்கள் எல்லோர் மேலும் இருக்கின்றது என்பதை அது விளக்குகிறது. மனிதனின் செயல்களை அவர் அறியாமல் இல்லை. இரண்டாவது, மனிதனின் இறுமாப்பு அதிகரித்து வருகிறபோது அதை அவர் அடக்காமல் இருக்கப்போவதில்லை என்பதை விளக்குகிறது. மனிதனின் இறுமாப்பு இன்று எல்லையின்றி அதிகரித்துப்போயிருக்கிறது என்பதை எவரால் மறுக்கமுடியும்? உலக நிகழ்வுகளை நான் எப்போதும் கவனித்து வருகிறேன். 2016க்கு முன்பு உலக நாடுகள் எல்லாம் இணைந்து ஐக்கியநாடுகள் சபை உட்பட சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், கார்பன் எமிசனைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று கையெழுத்திட்டு அதை விழாபோல் கொண்டாடினார்கள். தங்களுடைய முயற்சி இயற்கையைப் பாதுகாத்து மனிதன் நெடுங்காலம் வாழ வழிவகுக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். அந்த முயற்சி என்னவாயிற்று? அமெரிக்கா அதிலிருந்து அதிரடியாக விலகிவிட சரவெடி புஸ்ஸென்று வெடிக்காமல் அணைந்துவிட்டதுபோல் அந்த முயற்சி நின்றுவிட்டது. கர்த்தர் இருக்கிறார் என்பதை மறந்து இயற்கை வழிபாடு நடத்தி வரும் மானுடத்தின் முயற்சிகளில் கர்த்தர் மண்ணைப்போட்டுவிடவில்லையா? சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முழு முயற்சியுடன் இன்றே இறங்காவிட்டால் பத்துப் பன்னிரெண்டு வருடங்களில் உலகம் இல்லாமல் போய்விடும் என்று இயற்கை வழிபாடு நடத்திவருகிறவர்கள் ஆணித்தரமாக நம்புகிறார்கள்; நம்மை நம்ப வைக்கவும் பெரும்பாடுபடுகிறார்கள். மனிதனின் இறுமாப்பு எல்லையில்லாமல் போய்விட்டிருக்கிறது. சீனாவின் கொரோனா வைரஸ் அதிரடியாகப் பரவி வரும் இந்நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன் எங்கள் நாட்டு (நியூசிலாந்து) சட்டமன்றத்தில் கல்நெஞ்சக்காரர்கள் கருக்கலைப்பு சட்டரீதியில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்ல என்று சட்டமியற்றியிருக்கிறார்கள். தாய் தனக்கு விருப்பமில்லையென்றால் பிறப்பதற்கு முன்பே குழந்தையை அழித்துவிடலாம் என்று இந்தப் புதுச்சட்டம் அனுமதியளிக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பெருங்குரல் கொடுப்பவர்கள் குழந்தைக் கொலைக்கு அனுமதியளித்திருக்கிறார்கள்; கொலைக்கு புதுவிளக்கம் தந்திருக்கிறார்கள். சுயநலம் மனிதனை என்னவெல்லாம் செய்யவைக்கிறது! இந்த நேரத்தில் கர்த்தர் மானுடத்தைப் பார்த்து சஙகீதக்காரன் சொல்லுவதுபோல் சிரிக்காமலா இருந்துவிடப்போகிறார். நிச்சயம் கொரோனா வைரஸ் மூலம் கர்த்தர் மானுடத்தை எச்சரிக்கிறார்.

3. பாவத்தின் கோரம் – கொரோனா வைரஸ் உலகத்தை ஆட்டிப்படைத்து வரும் இந்நேரத்தில், கிறிஸ்தவர்கள் பாவத்தின் கோரத்தன்மையை நினைத்துப் பார்க்க வேண்டும். உலகில் நிகழும் சகலவித பெரும் பாதிப்புகளும் நம்மை ஆதியாகமத்தில் ஆரம்ப அதிகாரங்களுக்கு அழைத்துச் செல்லுகின்றன. கர்த்தர் மனிதனைப் படைத்து ஏதேன் தோட்டத்தில் அமர்த்தியபோது அங்கு எந்தவிட இயற்கைப் பாதிப்புக்கும், நோய்களுக்கும், வைரஸுகளுக்கும் இடமிருக்கவில்லை; ஏதேன் முழுப்பூரணமுள்ள இடமாக இருந்தது. அதைக் குலைத்து நாசமாக்கியது மனிதனே. அதை மறந்துவிடாதீர்கள். கர்த்தரின் வார்த்தைக்கு மனிதன் கீழ்ப்படியாமல் போனதாலேயே பாவம் சம்பவித்தது என்று வேதம் ஆதியாகமத்தில் விளக்குகிறது. அந்த மூலபாவம் கர்த்தர் படைத்த மனிதகுலத்தை மட்டுமல்லாது முழு உலகத்தையும் பாதித்தது. இன்று உலகம் விடுதலைக்காக பிரசவ வேதனையுடன் தவித்துக் கொண்டிருக்கிறது (ரோமர் 8:20-22). உலகம் பாவத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதனாலேயே சகலவித பேரழிவுகளும் உலகத்தில் நிகழ்ந்து வருகின்றன. இதற்கு முன் உலகத்தைப் பாதித்திருக்கும் ஸ்பானிய புளூ (Spanish Flu 1918) மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் உட்பட அழிவை ஏற்படுத்தும் எல்லா சம்பவங்களுக்கும் பாவமே நேரடிக்காரணியாக இருக்கின்றது. மறந்துவிடாதீர்கள்! அந்தப் பாவத்திற்கு நேரடிக்காரணமாக இருந்தவன் மனிதனே. மானுடம் உலகுக்கு அறிமுகப்படுத்தியதே மூலபாவம்.

பாவம் நம்மில் இருக்கும்வரை, அது இந்த உலகத்தில் இருக்கும்வரை நமக்கோ உலகத்திற்கோ மீட்சியில்லை. கொரோனா வைரஸ் நிலைத்திருக்கப் போவதில்லை. ஆனால், பாவம் தொடர்ந்திருக்கப் போகிறது. கொரோனா வைரஸால் நம் சரீரத்தை மட்டுமே தொடவும், அழிக்கவும் முடியும். ஆனால், பாவம் நம் சரீரத்தை அழிப்பது மட்டுமல்லாது ஆவியையும் அழிவை நோக்கிக் கொண்டு செல்லும். அந்தப் பாவத்தில் இருந்து விடுபட்டு மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கிறபோதே மனிதனுக்கு இந்த உலகத்தில் ஆத்மீக விடுதலை கிடைக்கிறது. பாவத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த உலகத்துக்கு விடுதலை இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போதே கிடைக்கப்போகிறது. அதுவரை கொரோனா வைரஸ் மட்டுமல்ல அதுபோன்ற அழிவைத்தரும் பாதிப்புகளை நாம் இந்த உலகத்தில் பார்க்காமல் இருக்கப்போவதில்லை. கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் இந்த நேரத்தில் பாவத்தை நினைத்துப் பார்க்கவேண்டும்; அதன் கோரத்தன்மையையும், அது நம்மில் செய்யக்கூடிய கொடூரத்தையும் ஆராயவேண்டும். பாவத்தைச் தொடர்ந்து செய்துவராமல் பக்திவிருத்தியில் முழு மூச்சாக நாம் ஈடுபடவேண்டுமானால் பாவத்தின் தன்மையை உணர்ந்து அதைத் தொடர்ந்து நம்மில் நாம் அழிக்கவேண்டும். பாவத்தின் தன்மையை நன்றாக அறிந்துவைத்திருக்கிறவர்களே அதை அழிப்பதில் தீவிரமாக இருப்பார்கள். இன்று பாவத்தைப் பற்றி பிரசங்கிக்கும் பிரசங்கிகள் மிகக் குறைவு. கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் அதைப் பற்றிய உணர்வே இல்லாமல் இருக்கிறார்கள். இன்றைய சுவிசேஷ செய்திகள் கூட பாவத்தின் தன்மையைத் தெளிவாக விளக்குவதில்லை. கொரோனா வைரஸ் நாம் பாவத்தைப் பாவமாகப் பார்த்து, கர்த்தர் வெறுக்கும் நோயாகிய பாவத்தை நாம் நம்மில் தொடர்ந்து அழித்து வரவேண்டிய கடமையை நினைவுறுத்துகிறது.

4. கர்த்தர் நம்மோடிருக்கிறார் – கொரோனா வைரஸ் மட்டுமல்ல, எந்தப் பெரிய கொடூரமான அழிவேற்படுத்தும் தீமையாக இருந்தாலும், அவை நம்மைத் தொடாது. உலகத்தானைப்போல கிறிஸ்தவர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சங்கீதம் 91ஐ நினைவுகூருங்கள். இந்தச் சங்கீதத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ளுவது அவசியம். இது முக்கியமாகப் போதிக்கும் சத்தியத்தைத்தான் நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமே தவிர இந்தச் சங்கீதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அத்தனை விஷயங்களையும் எழுத்துபூர்வமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உதாரணத்திற்கு 13ம் வசனத்தை நாம் எழுத்துபூர்வமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சிங்கத்தின் மீதும், விரியன்பாம்பு மீதும் நாம் நடக்க முயலக்கூடாது. அதையெல்லாம் நாம் செய்யமுடியும் என்பதல்ல இந்த சங்கீதத்தின் பொருள். எத்தகைய ஆபத்துக்கள் வந்தபோதும் கர்த்தர் தன் மக்களுக்குப் பக்கத்துணையாக இருந்து அவர்களைக் காப்பார் என்பதே இதன் பொருள்; இது போதிக்கும் முக்கிய உண்மை. அந்த உண்மையை விளக்குவதற்காக கையாளப்பட்டிருக்கும் உதாரணங்களே வேடனுடைய கண்ணி, கொள்ளை நோய், பறக்கும் அம்பு, வாதை, சிங்கம், விரியன் பாம்பு போன்றவை. சொல்ல வரும் உண்மையை விளக்குவதற்காக பாடல்களில் எவரும் இதுபோன்ற உதாரணங்களைக் கையாளுவது வழக்கம். சங்கீதக்காரன் அதையே செய்திருக்கிறான்.

கொரோனா வைரஸ் கிறிஸ்தவர்களைப் பாதிக்காது; அதால் நாம் உயிரிழக்கமாட்டோம் என்று எவரும் எண்ணிவிடக்கூடாது. நிச்சயம் கிறிஸ்தவர்களை இது பாதிக்கும்; கிறிஸ்தவர்கள்கூட உயிரிழக்க நேரிடலாம். இருந்தபோதும் கொரோனா வைரஸால் நம்முடைய ஆவியை அழிக்கமுடியாது; நாமடைந்திருக்கும் இரட்சிப்பை அழிக்க முடியாது; நாமடையப்போகும் பரலோக வாழ்க்கையை இல்லாமலாக்கிவிட முடியாது. (ரோமர் 8:28; 29-31). அது நம்முடைய சரீரத்தை அழிக்கலாம், இருந்தாலும் கர்த்தருக்கு நம்மீது இருக்கும் அன்பையும் அக்கறையையும் அதால் அழித்துவிட முடியாது. அந்தளவுக்கு கர்த்தர் நமக்குப் பாதுகாப்பளிக்கிறார். எது இந்த உலகில் நம் சரீரத்தை அழித்தாலும் நமக்கு ஆத்மீக விடுதலை தந்திருக்கும் கர்த்தரையும், அவர் நமக்குத் தந்திருக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் நாம் தொடர்ந்து பரலோகத்தில் அனுபவிக்கப்போகிறோம். கர்த்தர் நம்மோடிருக்கிறார். இந்த நேரத்தில் இந்த நம்பிக்கையை இருதயத்தில் கொண்டிருந்து நாம் கிறிஸ்தவ வாழ்க்கையை கர்த்தரின் மகிமைக்காக தேவபயத்துடன் வாழவேண்டும்.

————————————————————————————————————

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 33 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக