வேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி

ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னார், ‘எழுத்து என் ஜீவன்; ஜீவனமல்ல’ என்று. நான் முழுநேரப் படைப்பாளியல்ல; பணத்திற்காகவும் இலக்கியப்பணியில் ஈடுபடவில்லை. எழுதுகிறவனுக்கும் வயிறு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். ஒரு படைப்பாளி வயிற்றுக்காக இலக்கியம் படைக்கமாட்டான். என் படைப்புகள் பெரும்பாலும் கிறிஸ்தவ வேதத்தை அடிப்படையாகக் கொண்டவை. அதற்குக் காரணம் நான் கிறிஸ்தவ விசுவாசத்தைக் கொண்டிருக்கிறேன். கிறிஸ்தவம் எனக்கு மதமல்ல; என் அடிப்படை நம்பிக்கை, ஜீவன். அதுவே என் பார்வையாக இருக்கிறது. அதற்காக லௌகீக விஷயங்களில் நான் அக்கறை காட்டாமலில்லை. லௌகீகம், ஆவிக்குரியவை என்று பிரித்துப் பார்ப்பது தவறு என்று நம்புகிறவன் நான். ஆண்டவர் நம்மை உலகத்தைத் துறந்து வாழச்சொல்லவில்லை; உலகத்தில் இருந்து வாழச் சொல்லியிருக்கிறார். நம்மினத்துக் கிறிஸ்தவர்களுக்கு அது புரியாமலிருக்கிறது. பெரும்பாலானோர் முக்கியமாக ஊழியத்தில் இருக்கிறவர்கள் வேறு தொழில்களைக் குறைத்து மதிப்பிட்டு அதை ஊழியத்தில் இல்லாதவர்கள் மட்டுமே செய்யவேண்டும் என்று தாங்களே ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கிறார்கள். வேதம் நீதியான எல்லாத் தொழில்களையும் புனிதமானதாகக் கருதுகிறது.

அநேகர் இந்த உலகத்தைப் பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் இரு பகுதியினரைக் காண்கிறேன். ஒரு பகுதி ஆவிக்குரியவை, இந்த உலகத்துக்குரியவை என்று பிரித்துப் பட்டியலிட்டு ஆவிக்குரிய வாழ்க்கையை உலகத்தைத் தவிர்த்து வாழப்பார்க்கிறது. இன்னொரு பகுதி, எது ஆவிக்குரியது என்பதில் நல்லறிவின்றி உலகத்தவர்களாக, ஆவிக்குரிய பெயரடையாளத்தோடு மட்டும் இருந்துவருகிறது. இரண்டு பகுதியினருமே தவறுசெய்கிறார்கள். முதலாவது, சத்தியமறியாததால் ஏற்படும் தவறு. இரண்டாவது, சத்தியம் வாழ்வில் இல்லாததால் ஏற்படும் தவறு. லௌகீகத்தை நான் வேதக்கண் கொண்டே பார்க்கிறேன். என் லௌகீகக் கண்ணோட்டம் விசுவாசத்தின் அடிப்படையில் அமைந்தது; வேதம் எனக்கு மூக்குக் கண்ணாடி. இது உங்களுக்குப் புரிந்தால் சரி.

கிறிஸ்துவை நேசிக்கிறவன் உலகத்தை வெறுக்கமாட்டான்; வெறுக்கவும் முடியாது. அவன் ஒரு துறவி அல்ல. உலகம் தானே தோன்றவில்லை; அதைப் படைத்தவர் கடவுள். அதைப் பாதுகாத்துப் பராமரித்து வருகிறவரும் அவரே. மனிதனின் பயனுக்காக அவர் உலகத்தைப் படைத்தார்; அவன் அனுபவிப்பதற்காக அதை அவனிடம் கொடுத்தார். அதை எப்படி ஒரு கிறிஸ்தவன் வெறுக்கவோ, உதாசீனப்படுத்தவோ முடியும்? படைப்பின் தேவன் உலகத்தில் தன் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். உலகம் பாவத்தால் கறைபடிந்திருப்பது உண்மைதான்; அதன் மக்கள் பாவத்துக்குப் பலியாகி கடவுளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு மத்தியில் கடவுள் தன் திட்டங்களை உலகத்தில் நிறைவேற்றி தன் வருகையின் நாளில் அதை சீர்திருத்த சகல நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறார். இந்தப் பாவ உலகத்தில் கிறிஸ்துவை நேசித்து, கிறிஸ்தவ வேதக்கண்ணோட்டத்தைக் கொண்டு அனைத்தையும் மதிப்பிட்டுத் தரம்பிரித்து, கடவுளுடைய வார்த்தை வழிநடத்துகிறபடி உலகத்தில் இருக்கும் அனைத்தையும் அனுபவிக்க வேண்டியதே கிறிஸ்தவனின் கடமை. பாவத்தையும், பாவத்தோடு சம்பந்தப்பட்ட அனைத்தையும் மட்டுமே கிறிஸ்தவன் வெறுக்கவேண்டும்; உலகத்தை வெறுக்கக்கூடாது.

இந்த அணுகுமுறையைத்தான் நான் இலக்கியம் படைப்பதிலும் பயன்படுத்துகிறேன். லௌகீக விஷயங்களைப்பற்றி நான் எழுதுகிறபோது அது வேதக்கண்ணோட்டத்தில் அமைந்திருக்கிறது. உதாரணத்திற்கு படைப்பாளி ஜெயமோகன் ஒரு மார்க்ஸிஸ்ட்; பாரம்பரிய மார்க்ஸிஸ்ட் அல்ல. அதில் தன் வசதிக்கேற்ற மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறார். அவர் கிறிஸ்தவருமல்ல. அவருடைய உலகக் கண்ணோட்டமும் கிறிஸ்தவ படைப்பாளியான என் உலகக் கண்ணோட்டமும் எதிர்மறையானவை. இலக்கியவாதியாக அவரை நான் மதித்தாலும், இலக்கியம் சம்பந்தப்பட்ட பல விஷயங்களில் எங்களால் ஒத்துப்போகமுடிந்தாலும், ஒத்துப்போக முடியாத விஷயங்கள் அநேகம் இருக்கின்றன. அதற்குக் காரணம் என் உலகக் கண்ணோட்டமே. பழைய ஏற்பாட்டில் சீரியனான நாகமானுடையதும், எலிசா தீர்க்கதரிசியினுடையதும் உலகக்கண்ணோட்டம் ஆரம்பத்தில் எதிர்மறையாகத்தான் இருந்தன (2 இராஜாக்கள் 5). நாகமான் இஸ்ரவேலின் தேவனை விசுவாசித்த பிறகே அவர்கள் இருவருடைய உலகக்கண்ணோட்டமும் ஒரே திசையில் செல்ல ஆரம்பித்தன. இது உங்களுக்குப் புரிகிறதா?

உலகத்தில் ஒளியாகவும் உப்பாகவும் இரு

அப்படியானால், மாறுபட்ட உலகக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிற இந்த சமுதாயத்து மனிதர்களையும், சமுதாயம் பற்றிய விஷயங்களையும் ஒரு கிறிஸ்தவன் எப்படி அணுகவேண்டும்; அவற்றோடு எந்தவிதத்தில் உறவுகொள்ள வேண்டும்? இயேசு சொன்னார், ‘இந்த உலகத்தில் ஒளியாக இரு’ என்று. அத்தோடு இந்த ‘உலகத்தில் உப்பாக இரு’ என்றும் சொன்னார். இந்த உலகத்தில் நாம் தாமரை இலையில் தண்ணீர்படாமல் இருப்பதுபோல வாழவேண்டும் என்று இயேசு சொல்லவில்லை; அப்படி இருப்பதற்கு நாம் துறவறத்தில் ஈடுபடவேண்டும். கிறிஸ்தவன் துறவியாகக்கூடாது.

இந்த உலகத்தில் ஈடுபாட்டோடு நாம் வாழுகிறபோது, கிறிஸ்துவைப் பிரதிபலிக்கும்படியான சிந்தனையோடு வாழ்ந்து உலகம் நம்மைக் கவனிக்கும்படி ஒளிவீசவேண்டும் என்கிறார் இயேசு. கிறிஸ்துவுக்கு ஒப்பான நம்முடைய குணாதிசயங்களாலும், வாழ்க்கை முறையாலும், முழுப்பானைச்சோற்றையும் உப்பு மாற்றியமைப்பதுபோல் நாமும் சமுதாயத்தில் செல்வாக்குச் செலுத்தவேண்டும் என்கிறார் இயேசு. உலகத்தையொத்து அதன் சிந்தனைகளையும், செயல்களையும் பின்பற்றி வாழ்கிறவன் யூதாசைப்போன்ற இயேசுவுக்குத் துரோகி. தன் கிறிஸ்தவ வேதசிந்தனையாலும், வாழ்க்கையாலும் உலகம் தன்னைத் திரும்பிப் பார்க்கும்படிச் செய்கிறவன் கிறிஸ்தவ விசுவாசி.

தாராளவாதக் கருத்தியல் போக்குகள்

ஒரு படைப்பாளியாக, இலக்கியவாதியாக கிறிஸ்துவின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும்படியாகத்தான் என்னால் இலக்கியம் படைக்கமுடியும். அதற்கு மாறாக எதையும் செய்யும்போது நான் இந்த சமூகத்தில் ஒருவனாகிவிடுகிறேன். சமூகத்தோடு சம்பந்தமுடைய விஷயங்களையெல்லாம் கிறிஸ்தவ கண்ணோட்டம் இல்லாமல் கணித்து அவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுகிறவர்களோடு எனக்கு ஒப்புதல் இல்லை. உதாரணத்திற்கு, கருக்கலைப்பை (Abortion) வேதம் கொலை என்கிறது. கருவில் பிறந்து சில மாதங்களானாலும் உயிரோடு இருக்கிறது சிசு. அதைக் கலைப்பது உயிரை அழிப்பதாகும். கடவுளை நம்பாத தாராளவாத கருத்தியல் நோக்குடையவர்கள் சமுதாயத்தில் பெண்களுக்கு உரிமைகொண்டாடி பிள்ளை பிறக்கும் விஷயத்தில் அவர்களுக்கு முழு அதிகாரம் இருக்கவேண்டும் என்றும், அவர்கள் சந்தோஷத்தைக் கெடுக்கும் எதையும் அவர்கள்மேல் திணிக்கக்கூடாது என்றும் கூறி கருக்கலைப்பை ஆதரித்து வாதாடுகிறார்கள். சில நாடுகளில் அதை அனுமதித்து சட்டங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள்.

நியூசிலாந்தில் 20 வாரங்களுக்கு மேற்படாத பிரசவத்தில் இருக்கும் எந்தப் பெண்ணும் டாக்டரிடம் போகாமலேயே கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் என்று சட்டமிருக்கிறது. உலகத்தில் மோசமான கருக்கலைப்புச் சட்டத்தைக் கொண்டிருக்கும் சில நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. சமுதாயம் இதை ஆதரிக்கிறதென்பதற்காக கிறிஸ்தவன் இதோடு ஒத்துப்போக முடியாது. கிறிஸ்தவ ஒழுக்கநியதிக் கோட்பாடுகள் (Moral law) இதைக் கொலையாகக் கணிக்கின்றன. வயிற்றில் இருக்கும் சிசுவைக் கொலைசெய்யும் கொலைகார சமுதாயம் பாவத்திற்கான தண்டனையை அதிகரித்துக்கொள்ளுகிறது. சுயநலத்தால், தன் வசதிக்காக கருக்கலைப்பில் ஈடுபடுகின்ற எவரும், கிறிஸ்தவனாக இருந்தாலும் கொலைகாரனே.

அதிகம் வயதானவர்களும், கடும் நோயால் துன்பப்பட்டுக்கொண்டிருப்பவர்களும் தொடர்ந்து துன்பப்படாமல் இறப்பதற்கு ‘கருணை கொலையை’ (Mercy killing) சட்டமாக்க முயல்கிறார்கள் அநேக நாடுகளில். நான் வாழும் நாட்டில் பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டு பொதுவாக்கெடுப்பின் மூலமும் அது உறுதிசெய்யப்பட்டுவிட்டது. ஓரினப் பாலியல் உறவுக்கும், ஓரினத்திருமணத்திற்கும், திருநங்கைகளுக்கும் இதேவகையில்தான் விளக்கங்கொடுத்து தாராளவாதக் கருத்தியல் தொடர்ந்து உரிமைப்போராட்டம் நடத்துகிறது. கிறிஸ்தவ வேதம் இதையெல்லாம் கடவுளுக்கு எதிரான அழிவு மார்க்கமாகக் கணிக்கிறது.

பெண்ணியம்

மேலைத்தேய நாடுகளில் உருவானது ‘பெண்ணியக் கோட்பாடு.’ அதன் 2ம், 3ம் அலைகள் அமெரிக்காவில் வீசியது. இந்தியாவில் பெண்ணியம் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆரம்பித்து சுதந்திரப்போராட்ட காலத்தில் மேலும் சூடுபிடித்தது. இன்றும் பெண்களுக்கு உரிமைகோரிப் பெண்ணிய இயக்கங்களும், பெண்ணியவாதிகளும் அதிகளவில் செயல்பட்டு வருகிறார்கள். கீழைத்தேய நாடுகளில் ஆரம்பத்தில் பெண்களின் உரிமைகளுக்கான குரல்கள் எழுந்தனவே தவிர அது மேலைத்தேய ‘பெண்ணியமாக’ இருக்கவில்லை; தாராளவாத கருத்தியல் அடிப்படையில் ஆரம்பத்தில் உருவாகவில்லை. கீழைத்தேய நாடுகளில் பெண்களின் உரிமைப்போராட்டம் ஆரம்பத்தில் இருந்தே நியாயமான பெண்ணுரிமைகளுக்காக, சமூக ஒழுக்கக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே அமைந்திருந்தது.

பாரதி பெண்விடுதலைக்காகப் பேசியும், எழுதியும் வந்திருக்கிறார். அதிலெல்லாம் நீதியும், நியாயமும் இருந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பம்வரை தமிழகத்தில் அனைத்துப் பெண்களுக்கும் கல்வி வழங்கப்படவில்லை. 19ம் நூற்றாண்டில் தென் தமிழகத்துக்கு வந்த கிறிஸ்தவ மிஷனரிகளே திருநெல்வேலிப் பகுதியில் புறக்கணிக்கப்பட்ட சாதிப்பெண்களுக்கு கல்வித்தளங்களை ஆரம்பித்திருக்கிறார்கள். அதுபற்றி இந்துக்கள் அதுவரை நினைத்தும் பார்க்கவில்லை. கிறிஸ்தவ மிஷனரிகள் பெண்களின் அடிப்படை உரிமைகளுக்காக சமுதாயத்தில் குரல்கொடுத்திருக்கிறார்கள்.

இந்தப் பெண்ணுரிமைக்குரல்கள் ஒருபோதும் குடும்ப உறவில் கைவைக்கவில்லை. ஆண், பெண் வேறுபாட்டை அகற்றும் குரல்களுக்கு அதில் இடமிருக்கவில்லை. நம்மினப்பண்பாடு குடும்ப உறவில் பெண்ணுக்கு இருக்கும் வேறுபட்ட இடத்தை ஒத்துக்கொண்டிருக்கிறது. பெண்ணியக் கோஷங்கள் நம்மினத்தில் திருமணத்திற்கெதிராகப் போராடவில்லை; அதில் சீர்திருத்தத்தையே நாடியது. மேலைநாடுகளில் ஆரம்பித்த பெண்ணியம் அந்நாட்டு அடிப்படை சமூகக் கருத்தியல்களுக்கு எதிரானதாக ஆரம்பித்தது. இன்று பெண்ணியத்துக்கு பொதுவானதொரு விளக்கத்தைக் கொடுக்க முடியாதபடி அது தேசங்களுக்கு தேசம் வேறுபட்ட கோணங்களில் இயங்கி வருகிறது.

பெண்களுக்கான நியாயமான அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுத்த ஆரம்பப் பெண்ணியத்திலிருந்து ‘நவீன பெண்ணியம்’ மாறுபடுகிறது. நவீன பெண்ணியம், அரசியல், சமூகம், வர்க்கம் மற்றும் பாலியல் பூச்சுப் பூசப்பட்டு தாராளவாதக் கருத்தியல் போக்குக்கு முற்றிலும் அடிமையானதாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில் சில வருடங்களுக்கு முன்னெழுந்த ‘நானுந்தான்’ (Me Too) இயக்கம் இந்தத் தாராளவாத ‘நவீனப் பெண்ணியத்தின்’ ஒரு அங்கமே. நவீன பெண்ணியம் கருக்கலைப்புக்காகவும், திருநங்கைகளுக்காகவும், பெண்கள் மத்தியில் ஓரினச்சேர்க்கை மற்றும் ஓரினத்திருமணத்திற்காகவும் போராடி வருகிறது. இன்றைய மேலைத்தேய ‘கலாச்சாரச் புரட்சிக்’ (Cultural Revolution) கருத்தியலுக்கு ஏற்ப பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் இருக்கும் படைப்பின் வேறுபாட்டை அகற்றும் முயற்சியின் ஒரு அங்கமாக அது மாறியிருக்கிறது. உண்மையில் பெண்களின் நியாயமான சுதந்திரத்துக்கும், உரிமைகளுக்கும் எந்த சமூகத்திலும் பாதுகாப்பாக இருக்கவேண்டிய கிறிஸ்தவ சபையும், கிறிஸ்தவர்களும் நவீன பெண்ணியத்தோடு ஒருக்காலும் ஒத்துப்போக முடியாது. நவீன பெண்ணியம் பிசாசின் செயல்களின் வெளிப்பாடு.

பெண்ணியம் பற்றியோ அல்லது நவீன பெண்ணியம் பற்றியோ அதிகம் தெரிந்துவைத்திராமல் கிறிஸ்தவ சபைகளும், கிறிஸ்தவர்களும் தாராளவாத பெண்ணியத்தின் அரசியல், சமூகப் பூச்சை நம்மினத்துக் கிறிஸ்தவத்திற்குள் நுழைத்திருக்கிறார்கள். கர்த்தருக்கு பெண்ணியம் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை என்று தீர்மானித்து அல்லது அவருடைய வார்த்தைகள் இன்றைய சமூகத்துக்குப் பொருந்தாது என்று தீர்மானித்து, பெண்களைப் பிரசங்கிகளாகவும், போதகர்களாகவும், உதவிக்காரர்களாகவும் சபைகளில் நியமித்து, அவர்களை ஆராதனைக்கூட்டங்களை நடத்தவைப்பது இன்று சர்வசாதாரணமாக நடந்து வரும் கர்த்தருக்கெதிரான அந்நிய ஆராதனை. கர்த்தர் பெண்கள் இந்தக் காரியங்களை சபையில் செய்யக்கூடாது என்று தடைவிதித்திருப்பதற்குக் காரணம் பெண் உரிமைகளை அவர் விரும்பாதது அல்ல; அவர் பெண்களுக்கென்று உயர்வான பொறுப்பை அளித்திருப்பதால்தான். திருநங்கைகளுக்காக சபையை அமைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருப்பதும் எந்தளவுக்கு தீவிரத் தாராளவாத கருத்தியல் நம்மினத்தில் பதிய ஆரம்பித்திருக்கிறது என்பதற்கு உதாரணம்.

பெண்களுக்கு கர்த்தர் கொடுத்திருக்கும் அதி உயர்வான இடத்தை ஆதியாகமம் முதலிரண்டு அதிகாரங்கள் விளக்குகின்றன. ஆணையும், பெண்ணையும் வேறுபட்டவிதத்தில் படைத்த கடவுள், வேறுபட்ட பொறுப்புக்களை ஆண்டவர் ஆணுக்கும் பெண்ணுக்கும் நியமித்திருக்கிறார். அந்தப் பொறுப்புக்கள் ஆணைப் பெண்ணில் இருந்து பிரித்துக் காட்டுகின்றன. அந்தப் பிரிவு படைப்பின் நியதி. பெண்ணுக்கேயுரிய வேறுபாடான பொறுப்புகள் பெண்ணைத் தாழ்த்தவில்லை; மாறாக அவளை உயர்த்துகின்றன; அவையே அவளுக்கு மகிமை. பெண்ணுக்கு இவை பாதுகாப்பு வளையமிடுகின்றன. இதை மீறுகிறபோது பெண் தன்னையே அழித்துக்கொள்ளுகிறாள். படைப்பின் நியதியில் கைவைப்பதும், மாற்றப்பார்ப்பதும் கர்த்தருடைய அதிகாரத்தை எதிர்க்கும் ஆபத்தான செயல். அதைத்தான் இன்றைய உலக சமூகம் செய்துவருகிறது. தனக்குக் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு வளையத்தை மீறியதால்தான் ஏவாள் தனக்குத் தண்டனையை உண்டாக்கிக்கொண்டாள். அந்தத் தண்டனையின் ஒரு பிரதிபலிப்பே இன்றைய ‘நவீன பெண்ணியம்’ என்பதை உணர்கிறீர்களா?

மொழியும் இனமும்

எனக்கும் நாட்டுப்பற்றும், இனப்பற்றும் இருக்கின்றது; இருக்கவேண்டிய அளவுக்கு. ஆனால் இனவெறி எனக்கில்லை. இந்த உலகத்தில் ஒரு சாண் அளவு நிலத்துக்காக நான் பிறக்கவில்லை. அதற்காக நான் போராடப் போவதில்லை. அதற்கான போராட்டங்களோடும் ஒத்துப்போகமாட்டேன். என் நிரந்தர வீடு கர்த்தரிருக்கும் இடம். எனக்கு மொழிப்பற்றும் அதிகமாகவே இருக்கிறது; புறமொழிகளை நேசிக்கமுடியாத அளவுக்கல்ல. என் மொழிப்பற்று அதற்கான போராட்டத்தில் என்னை ஈடுபட வைக்காது. என் மொழிப்பற்றை வெளிப்படுத்த நான், ‘நான் தமிழர்’ கட்சியில் இணைய வேண்டிய அவசியமில்லை. என் மொழிப்பற்றுக்கு ‘அரசியல்’ தெரியாது. எல்லா மொழிகளையும் படைத்தவர் கடவுள். எல்லா மொழிகளையும், எல்லா இனங்களையும் நான் நேசிக்கிறேன். இந்த உலகத்தில் இருக்குமளவும் மொழியைப் படைத்தவருக்காகப் பயன்படுத்துவேன். வேதம் அனுமதிக்கின்ற அளவுக்கே இதிலெல்லாம் எனக்குப் பற்றிருக்க முடியும். இதையெல்லாம் மாயையாகக் கருதி நான் இன, மொழித் துறவறத்தை நாடவேண்டியதில்லை. நான் பிறந்திருக்கும் இனமும், மொழியும் என் நன்மைக்காகத் தரப்பட்டவை. அவற்றை ஆனந்தத்தோடு கர்த்தரின் வேதத்தை மீறாதபடி நான் அனுபவிக்கவேண்டும்; அவற்றால் அவரை மகிமைப்படுத்தவேண்டும். இந்த எல்லையை மீறுகிறபோது நான் விசுவாசத்தின் விதிகளை மீறுகிறவனாகவும், இந்த சமுதாயத்தில் ஒருவனுமாகிவிடுகிறேன்.

தீவிரத் தாராளவாதம் (Ultra liberalism)

இன்று அமெரிக்காவில் எழுந்திருக்கும் கருப்பினத்தவர்களுக்கான உரிமைப்போராட்டம், கிரிட்டிக்கள் ரேஸ் தியரி, பண்பாட்டு அழிப்பு, வரலாற்று நினைவுச்சின்னங்களை அகற்றும் தீவிரவாதம், அன்டீபாவின் மார்கிஸீய அராஜகம், அரசியல் சாசனத்திற்கும், அரச நிறுவனங்களுக்கும், காவல்துறைக்கும் எதிரான வன்முறைப் போராட்டம் போன்றவை தொடர்பாகவும் வேதக்கண்ணோட்டத்தில் மட்டுமே என் கருத்துக்கள் இருக்கமுடியும். வேதத்தையும் பத்துக்கட்டளைகளையும் நம்பி விசுவாசிப்பவர்கள் இத் தீவிரத் தாராளவாதக் கருத்தியல் போக்குகளோடு ஒருபோதும் ஒத்துப்போக முடியாது. இவை கடவுளுக்கு எதிரான சமுதாய மனிதனின் தீவிரவாதச் செயல்கள். கடவுளுக்கும், அவருடைய வேதத்திற்கும் எதிரான எவையும் அவருடைய எதிரியிடமிருந்து மட்டுமே உருவாக முடியும்.

சமுதாயமோ, சமுதாயத்தின் ஒரு பகுதியோ ஒரு விஷயத்தை நியாயப்படுத்துகிறது என்பதற்காக கிறிஸ்தவனாக அதோடு என்னால் ஒத்துப்போகமுடியாது. சமுதாயத்தின் பார்வை குறுகியது. மேலைநாடுகளில் ‘வெறுப்புப் பேச்சு’ (Hate speech) என்ற பெயரில் சமுதாயத்தின் சிறுபான்மையினர் பிறரின் கருத்துக்களை அமைதிப்படுத்த முயல்கிறார்கள். சிலநாடுகளில் வெறுப்புப்பேச்சு என்ற பெயரில் அத்தகைய கருத்துக்களை சட்டபூர்வமாகத் தடைசெய்ய முனைகிறார்கள். சிறுபான்மையினரின் கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களை பொதுமேடைகளிலும், மீடியாக்களிலும் பகிர்ந்துகொள்ளுவதை சமுதாயம் தீவிரத்தோடு எதிர்க்க ஆரம்பித்திருக்கிறது. இதை இன்று பணமும், செல்வாக்கும்கொண்ட கூகுள், முகநூல், டுவிட்டர், இன்ஸ்டகிரேம் நிறுவனங்கள் அனைத்துமே செய்ய ஆரம்பித்துவிட்டன. இவையெல்லாம் 21ம் நூற்றாண்டின் தலைவலிகள்; பேச்சுச் சுதந்திரத்தை ஒருசாராருக்கு மட்டுமே வழங்க எத்தனிக்கும் தாராளவாத கருத்தியல் அடக்குமுறைகள். சூழ்நிலைக்கேற்றவிதத்தில் மாறிக்கொண்டிருக்கும் சமுதாய, இனமாற்றங்கள் நிலையானவையல்ல. சமுதாயம் ஒழுக்கநியதிக்கோட்பாடுகளுக்கு எதிராகக் கருத்துக்கொள்ளும்போது அதற்கெதிராகக் குரல்கொடுப்பதே என் தார்மீக சுதந்திரம்; உரிமை. இந்தப் பார்வையையே சமுதாயம், அரசியல், மதம், யுத்தம், அழகியல்களான கலை, இலக்கியம், இசை போன்ற அனைத்திலும் நான் கொண்டிருக்கிறேன். என் கண்ணோட்டத்தை, கிறிஸ்தவனாக முடிந்தவரை இயேசுவின் கண்ணோட்டமாக வைத்திருப்பதில் நான் கவனத்தோடு இருக்கமுயல்கிறேன்.

பின்நவீனத்துவம் (Post-Modernism) 

பின் நவீனத்துவம் பிறந்தது 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில். அடிப்படையானவை என்ற பெயரில் இருந்துவந்த அனைத்துக் கட்டமைப்புகளையும் உடைத்து (Deconstruct), அதற்கு வெளியே போய் புதியவைகளை உருவாக்கும் முயற்சி பின்நவீனத்துவம். சமுதாய ஒழுக்கத்தில் இருந்து அழகியல் கலைகள், பொருளாதாரம், கல்வி, அரசியல், கட்டடக் கலை என்று பின்நவீனத்தும் தொடாத இடமில்லை. உங்கள் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புகிறீர்களா? அவர்கள் படிப்பது என்ன என்பது தெரியாத, அதைத் தெரிந்துகொள்ள விரும்பாத பெற்றோர்களாக இருந்துவிடாதீர்கள். பின்நவீனத்துவ செடி உங்கள் வீட்டிலேயே கூட வளரலாம்.

சாரு நிவேதிதா ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளர். தன்னை Transgressive எழுத்தாளர் என்று அழைத்துக்கொள்ளுகிறார். இது பின்நவீனத்துவ வார்த்தை. இதற்கு அர்த்தம், சமுதாய ஒழுக்கக் கட்டமைப்பை உடைத்து அதற்கு வெளியே போய் எழுதுவது. சாருவின் எழுத்துகள் பொதுவாக ஒழுக்கமாகக் கருதப்பட்டு வந்திருக்கும் பாலியல் கட்டமைப்புகளை உடைத்து எழுதும் படைப்புகள். கிறிஸ்தவன் இதோடு அடிப்படையில் முரண்படுகிறான். உண்மையில், பின்நவீனத்துவம் கிறிஸ்தவத்திற்கு எதிர்மறையானது. கிறிஸ்தவம் சமுதாய மனிதனுக்கான கடவுளின் அடிப்படை ஒழுக்கக் கட்டமைப்பை வலியுறுத்துகிறது. அதற்கு வெளியில் போவதற்குப் பெயர் ‘பாவம்.’ பின்நவீனத்துவ சிந்தனைப் பாவத்திற்கு கிறிஸ்தவத்தில் இடமிருக்க முடியாது.

கிறிஸ்தவன் உலகத்தைப் புறக்கணித்து வாழக்கூடாது; உலகத்தில் உப்பாயிருக்கவேண்டும். அதற்கு உலகத்து நிகழ்வுகளை அறிந்திருப்பது அவசியமாகிறது. அதை அறிந்துவைத்திராமலிருப்பது பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது என்று இருப்பது போலாகிவிடும். உலகத்தோடு நாம் ஒட்டிப்போகக்கூடாதுதான்; உலகத்தைப் பிரதிபலிக்கக்கூடாது. பின் நவீனத்துவத்தின் சிந்தனைப்போக்குத் தெரியாத கிறிஸ்தவன் அதற்கு விலகியிருந்து வாழ்வதெப்படி? உலகத்தின் தீய சிந்தனைகளைப் புறக்கணித்து வாழவேண்டுமே தவிர உலகம் தெரியாமல் வாழக்கூடாது. தூய வேதம் உலகத்து சிந்தனைகளை சரியானவையா, தீயவையா என்பதைப் படம்பிடித்துக் காட்டும் கண்ணாடி.

சூழல்வாதம் அல்லது சுற்றுச்சூழலியம் (Environmentalism)

20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உயிர்பெற்றது சூழல்வாதம். இதைச் சுற்றுச்சூழலியம் என்றும் அழைக்கலாம். இன்று தாராளவாத கருத்தியல் போக்குக்கொண்ட நாடுகள் அனைத்தும் இதையே கடவுளாக எண்ணி வழிபடுகின்றனர். இயற்கை அவர்களுக்கு தெய்வமாகிவிட்டது. வெறெதற்கும் தராத முக்கியத்துவத்தை இதற்குக் கொடுக்கின்றனர். சூழல்வாதக் கட்சி (Green Party) என் நாட்டில் இந்தப் போக்கையே பின்பற்றுகிறது. இதை ஐரோப்பாவிலும் ஏனைய உலக நாடுகளிலும் காணலாம். சூழலைக் காப்பாற்றும் நடவடிக்கைகளைத் துரிதமாக இப்போதே செய்யாவிட்டால் இன்னும் இருபது வருடங்களுக்குள் உலகம் அழிந்துவிடும் என்றளவுக்கு இவர்கள் பேச்சு அமைந்திருக்கிறது. இந்த உலகத்தை நிரந்தரமாகப் பாதுகாப்பதை சூழல்வாதம் குறிக்கோளாகக் கொண்டியங்குகிறது. இந்த இயக்கத்திற்கு எதிராகப் பேசினால் ஆபத்து என்றளவுக்கு உயிர்த்துடிப்போடு இயங்கிவருகிறது.

சூழல்வாதம் எந்தளவுக்கு இளைஞர்களையும் பாதித்திருக்கிறது என்பதற்கு சுவீடனைச் சேர்ந்த, 17 வயதான கிரீட்டா தர்ன்பேர்க் (Greta Thunberg) ஒரு உதாரணம். இளம் வயதினரின் மனதில் தங்கள் கருத்தியலை விதைத்து தங்கள் நோக்கத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளுவதில் சூழல்வாதிகள் மும்முறமாக இருக்கிறார்கள். பல வருடங்களுக்கு முன் வந்த ஜேம்ஸ் கெமரனின் அவதார் (Avatar) படம் எந்தளவுக்கு சூழல்வாதம் அழகியல் கலைகள், மீடியாக்கள் மூலமாக முன்னிறுத்தப்படுகிறது என்பதற்கு நல்ல உதாரணம். சூழல்வாதத்தைத் தீவிரமாக வலியுறுத்தும் சூழல்வாதக் கட்சி தீவிர பின்நவீனத்துவ சமூக முற்போக்குவாதத்தைப் (Social Progressives) பின்பற்றி சமூக மாற்றங்களையும் (radical social engineering) வலியுறுத்தி வருகிறது. LGBTQ வினருக்கு வக்காலத்து வாங்குவது மட்டுமல்ல, அதை சமூக ஒழுக்கமாக்குவதில் இந்தக் கட்சி தீவிரம் காட்டுகிறது.

நம்மினத்தினர் மத்தியில் இது பரவாமலில்லை. நதிகளை அநியாயத்துக்கு அணைகளைக்கட்டி வற்றிப்போகச் செய்வதும், காடுகளை அழிப்பதும், சுற்றுச்சூழலைக் குப்பைகளைக் கொட்டி அசிங்கப்படுத்தி தொற்றுநோய்கள் உருவாக இடங்கொடுப்பதும் கீழைத்தேய நாடுகளில் அளவுக்குமீறி நடக்கும் செயல்கள். இன்று இதையெல்லாம் எதிர்த்துக் குரல்கொடுப்பதற்கு சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் பலர் கிளம்பியிருக்கிறார்கள். அதில் எந்தத் தவறும் இல்லை; ஒருவிதத்தில் பாராட்ட வேண்டும். இத்தகைய நல்ல நடவடிக்கைகளுக்குப் பின் தாராளவாத கருத்தியல் நோக்குக்கொண்ட சூழல்வாத அரசியல் நுழைந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி நுழைவதற்கான வாய்ப்புக்களே அதிகம் இருக்கின்றது. சூழல் பாதுகாப்பு (Conservationist) வேறு, சூழல்வாதம் (Environmentalist) வேறு; இரண்டும் ஒன்றல்ல.

சுற்றுச்சூழலை நாம் கவனத்தோடு பயன்படுத்தவேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. உலகத்தைப் படைத்தவர் அதை மனிதன் தன் நன்மைக்காக புத்தியோடு பயன்படுத்த வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார் (ஆதி 1:26-28; சங் 8:6&8; யாத் 23:10-11). சூழலை அசிங்கப்படுத்துவதும், அலட்சியப்படுத்துவதும் கிறிஸ்தவன் செய்கிற காரியமல்ல. கிறிஸ்தவன் சூழலைப் புறக்கணித்து நடந்துகொள்ளக்கூடாது. சூழல் நம் பயன்பாட்டிற்காகத் தரப்பட்டிருக்கிறது; அதை நாம் வணங்கக் கூடாது. சூழலும் ஆதாம், ஏவாளின் பாவத்தால் (மூலபாவம்) பாதிக்கப்பட்டு விடுதலையை நாடி நிற்கிறது (ரோமர் 8:19-22). படைப்பு ஏதேனில் இருந்ததுபோல் இன்று பூரணமானதாக இல்லை. பாவத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சுற்றுச்சூழலையும் கிறிஸ்தவன் விசுவாசத்தோடும், புத்தியோடும் கர்த்தரின் மகிமைக்காகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

சூழலை அலட்சியப்படுத்தி, அநாவசிய செயல்களால் அசிங்கப்படுத்தவோ, அழிக்கவோ முயலக்கூடாது. உதாரணத்திற்கு, பணம் பண்ணுவதற்காக கண்மூடித்தனமாகக் காடுகளை அழிப்பது. அது நிலத்தைப் பாதிக்கும்; மழையைப் பாதிக்கும்; நீரூற்றுக்களைப் பாதிக்கும்; ஜீவராசிகளைப் பாதிக்கும்; உணவுச் சுழற்சி வட்டத்தைப் பாதிக்கும். காடுகளை வரைமுறையன்றி அழிப்பதாலேயே இந்தோனெசியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வருடா வருடம் புகைமூட்டமேற்பட்டு பலருக்கு உடல்நலக்கேடுகளை ஏற்படுத்துகிறது. மழைக்காலங்களில் நதிகள் பெருக்கெடுத்தோடி நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கும் இதுவே காரணம். கண்மூடித்தனமாக அணைகளைக் கட்டுவதும் நதிகளை அழிப்பதில் முடியும். தமிழ்நாட்டில் காவிரியைப் பாருங்கள் தெரியும். கரூரில் இருந்து திருச்சிக்கு காரில் போகும் வழியில் தண்ணீரே இல்லாமல் பரந்து விரிந்திருக்கும் காவிரியில் அடிமண் இல்லாமல் போகும்வரை மண்ணெடுக்கும் லாரிகள் சாரி சாரியாக நிற்பதைப் பார்த்து மனம் பதைத்திருக்கிறேன். இதேபோல்தான் பொருளாதாரத்துக்கு அவசியமான நிலக்கரி தோண்டுவதிலும், கடலுக்கும் நிலத்துக்கும் கீழிருந்து எண்ணை எடுப்பதிலும் கவனத்தோடு செயல்படுவது அவசியம்.

தாராளவாத கருத்தியல் சூழல்வாதம் கடவுளற்ற சமூகத்தின் உருவாக்கம். மேலைத்தேய நாடுகளில் மட்டுமல்லாமல் கீழைத்தேய நாடுகளிலும் இது தலைதூக்கி நிற்கிறது. சூழலை நல்லவழியில் பயன்படுத்துவது ஒன்று; சூழலைக் கடவுளாக நினைத்து பாதுகாக்க முயல்வது இன்னொன்று. இரண்டாவதைக் கிறிஸ்தவம் நிராகரிக்கிறது. சூழல் நமக்கானது; சூழலுக்காக நாமில்லை. நதிகள் மேல் அளவுக்கு மீறி அணைகளைக் கட்டக்கூடாதென்பதை ஏற்றுக்கொள்கிறேன் (மேதா பாட்கரின் நர்மாதா நதிபோராட்டம்); நதிகள் மேல் அணைகளே கட்டக்கூடாது என்பது அதிகப்பிரசங்கித்தனம். காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்; காடுகளை எந்தக்காரணம் கொண்டும், பராமரிப்புக்காகக்கூட அழிக்கவே கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மிருகங்களை வதைத்துக் கொடுமைப்படுத்தக் கூடாது (மேனகா காந்தி, புளூகுரொஸ்) என்பதை ஆமோதிக்கிறேன்; மிருகங்களை உணவாகக்கொள்ளக்கூடாது, தாவரவகைகளையே உண்ணவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சூழலை அளவுக்கு மீறி அடிப்படையானதாகக் கணித்து நம் வாழ்வையே சூழலின் நன்மைக்காக மாற்றியமைத்துக் கொள்ளுவது கடவுளில்லாத மனித சிந்தனையின் உருவாக்கம். என் நாட்டு சூழல்வாதக் கட்சி, சூழலைப் பாதுகாக்க எல்லோரும் இனி சைக்கிளில் மட்டுமே பிரயாணம் செய்ய வேண்டும் என்கிறது. இது நடைமுறைக்கே சாத்தியமில்லாத தீவிர சூழல்வாதத்தின் போக்கு.

மனித உரிமைகள் (Human Rights)   

இன்று மனித உரிமைகளைப் பற்றிப் பேசுகிறவர்கள் அது ஆரம்பத்தில் எங்கிருந்து வந்ததென்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. கிறிஸ்தவ சிந்தனையாளர்களே இதற்கு முதன் முதலாக வடிவம் கொடுத்தவர்கள். தனி மனிதனின் உரிமை பற்றி கிறிஸ்தவ வேதம் ஏராளமான விளக்கங்களைத் தருகிறது. தனிமனித உரிமைக்கு ஆதியாகமத்தின் முதலிரண்டு அதிகாரங்களை விடவா எவராது குரல்கொடுத்துவிட முடியும்? பத்துக்கட்டளைகளை சுருக்கமாக விளக்கிய இயேசு கிறிஸ்து, கடவுளை நேசிப்பதும், சக மனிதர்களை நேசிப்பதுமே அதன் சாராம்சம் என்று விளக்கினார். ‘சக மனிதர்’ என்று எந்தவொரு குறிப்பிட்ட இனத்தையும் தனித்துக் குறிப்பிடவில்லை. அது யாராகவும், எந்த இன, மத, நாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம் என்பதே இயேசுவின் விளக்கம். இன்று மனித உரிமைகள் பேசுவோர் ‘சக மனிதர்’ என்பதற்கு அரசியல், வர்க்க, நிறப் பூச்சைப் பூசி உலகத்தைத் திசை திருப்பியிருக்கிறார்கள்.

கிறிஸ்தவரான வில்லியம் வில்பர்போஸ் மனித உரிமைக்காகப் போராடி அடிமை வியாபாரத்திற்கு இங்கிலாந்தில் முற்றுப்புள்ளி வைத்தார். கிறிஸ்தவத்தோடு பிண்ணிப் பிணைந்தது மனித உரிமைகள். அது தெரியாமல், அதை இன்று சமூக முற்போக்குவாதிகள் (Social Progressives) கடத்தியிருக்கின்றனர். தங்களுக்குச் சொந்தமானதாக அதை மாற்றி, அதற்கு அரசியல், வர்க்கம், நிறம் மற்றும் பாலினப் பூச்சுப் பூசியிருக்கிறார்கள். அரசுகளுக்கும், அதிகாரங்களுக்கும் முரண்பாடானதாக அதற்கு மாறுபாடான விளக்கமளித்து வருகின்றனர். மனித உரிமைகள் என்றவுடனேயே மார்டின் லூத்தர் கிங்கே பெரும்பாலானோருக்கு மனதில் தோன்றுவார். அந்தளவுக்கு மனித உரிமைகள் சமூக முற்போக்குவாதிகளால் அரசியல், வர்க்க, நிறப்பூச்சு பூசப்பட்டு உலா வருகிறது. தற்கால மனித உரிமைக் கோஷங்கள் தாராளவாத கருத்தியல்வாதிகளைப் பின்புலமாகக் கொண்டு இயங்கிவருகின்றன என்பதைக் கிறிஸ்தவர்கள் உணர்தல் அவசியம். மனித உரிமைகள் அவசியம்; அது கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகளில் ஒன்று. அதற்கும் தாராளவாத கருத்தியல் பூச்சுக்கு அடியில் ஒழிந்திருந்து, ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமாக செயல்படும் தற்கால மனித உரிமைவாதிகளுக்கும் அடிப்படையில் வேறுபாடுண்டு. கிறிஸ்தவனாக நான் மனித உரிமைகளை மதிக்கிறேன்; அதற்காக எப்போதும் குரல்கொடுப்பேன். தாராளவாத கருத்தியலுக்குக் கீழியங்கும் மனிதநலவாத (Humanist) மனித உரிமைக் கோஷங்களுக்கு நான் எதிரானவன்; அவை பாரபட்சமானவை.

முடிவாக . . .

கிறிஸ்தவர்கள் வேதசத்தியங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அனைத்து உலக விஷயங்களையும் நுணுக்கமாக ஆராயவேண்டும். ஒரு விஷயத்திற்காக சமூகம் சத்தமாகக் குரல் கொடுக்கிறது என்பதற்காக சமூகக் குரல்கள் எல்லாமே சரியானதாகிவிடாது. இந்த சமுதாயத்தின் அரசியல், சமூக, வர்க்கப், பாலினக் கோட்பாடுகள் கிறிஸ்தவன் பின்பற்றக்கூடிய வழிமுறைகள் அல்ல. யோசேப்பும், தானியேலும் தங்கள் காலத்தில் இதையெல்லாம் எதிர்கொண்டு விசுவாசமுள்ள கிறிஸ்தவர்களாக சத்தியத்தின் பக்கத்தில் மட்டுமே நின்றிருக்கிறார்கள். கிறிஸ்தவம் என்பது வெறும் ஆராதனையையும், ஜெபத்தை மட்டும் கொண்டதல்ல; அது படைத்தவரின் உலகத்தைப் படைத்தவரின் மகிமைக்காக மட்டும் பயன்படுத்த வேண்டிய கடமையையும் உள்ளடக்கியது. சத்தியத்துக்குப் புறம்பான உலகத்து சிந்தனைகளை அனைத்துக் காரியங்களிலும் தவிர்த்து பச்சோந்தித்தனத்திற்கு வாழ்க்கையில் இடங்கொடுக்காமல் வாழ வேண்டியது நம் கடமை. நீங்கள் எப்படிப்பட்ட கிறிஸ்தவராக இருந்து வருகிறீர்கள்? அடுத்த தடவை சமூகத்தின் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது உடனடியாக வேதமாகிய மூக்குக் கண்ணாடியை மாட்டிக்கொள்ளத் தவறாதீர்கள்.

மறுமொழி தருக