உங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்?

Earthஉலகம் ஒரு முடிவுக்கு வரப்போகிறது என்பதில் மனித வர்க்கத்திற்கு எப்போதுமே ஒருவித நம்பிக்கை இருந்து வந்திருக்கிறது. அது எப்போது முடிவுக்கு வரும் என்பதில் உலக மதங்கள் எல்லாமே ஒரு கருத்தை வைத்திருக்கின்றன. டிசம்பர் 21, 2012ல் உலகம் முடிவுக்கு வரும் என்று ‘மேயன்களின்’ காலண்டர் சொல்லுகிறதென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அந்த நாளில் அழிவில் இருந்து தப்புவதற்காக பெரிய பெரிய ஏற்பாடுகள் எல்லாம் செய்து வைத்தவர்கள் உலக நாடுகளில் இருந்திருக்கிறார்கள். ஆனால், அந்த நாளில் எதுவும் நடக்கவில்லை, உலகம் அப்படியேதான் இருக்கிறது.

2012ம் ஆண்டில், ‘இயேசு வரப்போகிறார் என்றும், அப்போது இந்த உலகம் ஒரு முடிவுக்கு வரப்போகிறது என்றும் இயேசு கிறிஸ்துவின் வருகையின் நாள் இதுதான்’ என்று அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் அமெரிக்காவில் ரேடியோ மினிஸ்ட்ரி செய்து வருகின்ற ஹெரல்ட் கேம்பிங்க் என்பவர். ஆனால், அந்த நாளில் ஒன்றும் நடக்காமல் போய்விட்டது. ஹெரல்ட் கேம்பிங்கை சில நாட்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லை. சிறிது காலத்துக்குப் பிறகு தலைகாட்டிய கேம்பிங்க் இயேசு கிறிஸ்துவின் வருகையின் நாளைக் குறிப்பதில் தான் தவறுவிட்டுவிட்டதாகவும், சரியான நாளை விரைவில் அறிவிக்கப் போகிறேன் என்றும், இத்தனைக்குப் பிறகும் உலக முடிவின் நாளைக் குறிப்பதைக் கைவிடுவதாயில்லை. இந்தவிதத்தில், இயேசு கிறிஸ்து இந்த நாளில் வரப்போகிறார், அந்த நாளில் வரப்போகிறார் என்று ஒரு நாளைக் கணக்கிட்டு அறிவிக்கும் செயலை ஹெரல்ட் கேம்பிங்க் மட்டும் முதலில் செய்யவில்லை. வேறு பலரும் பல நூற்றாண்டுகளாகவே செய்திருக்கிறார்கள். அதிலெதுவுமே இதுவரை நடந்ததில்லை.

இயேசுவின் வருகையின் நாளைக் குறிப்பதில் ஏன் மனிதர்கள் இந்தளவுக்கு நாட்டம் காட்டுகிறார்கள்? அத்தகைய செயல்களை ஏன் பல கிறிஸ்தவர்கள் நம்பி ஏமாந்து போகிறார்கள்? என்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதற் காரணம், இயேசு தான் மறுபடியும் வரப்போவதாக ஆணித்தரமாக வேதத்தில் அறிவித்திருப்பதுதான். சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தபின் தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கு காட்சியளித்த அவர், அவர்களைப் பார்த்து, ‘இப்போது நான் உயரெடுத்துக்கொள்ளப்போவதை நீங்கள் பார்ப்பதுபோலவே மறுபடியும் நான் வருவதையும் நீங்கள் உங்கள் கண்களால் பார்ப்பீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார். வெளிப்படுத்தல் நூலில் கடைசியாக அவர், ‘மெய்யாகவே நான் சீக்கிரமாக வருகிறேன்’ என்று அறிவித்திருப்பதைப் பார்க்கிறோம். இப்படி இயேசு சொல்லியிருப்பது எல்லோருக்கும் அவருடைய வருகையில் பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாவதாக, தன்னுடைய வருகைக்கு முன் நடக்கவிருக்கும் அடையாளங்களைப் பற்றிய விளக்கங்களை வேதத்தின் பல பகுதிகளில் இயேசு தந்திருக்கிறார். அத்தகைய விளக்கங்களை அப்போஸ்தலர்களும் தந்திருக்கிறார்கள். இந்த விளக்கங்கள் பலரையும் இயேசுவின் வருகையின் நேரத்தைக் குறிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இயேசுவின் மறு வருகையைப் பற்றிய விளக்கங்களில் எல்லையில்லா ஆர்வம் காட்டுகிறவர்கள் தங்களுக்கேற்றவிதத்தில் அவற்றை விளங்கிக்கொண்டு அவருடைய வருகையின் நாளையும், நேரத்தையும் குறிக்குமளவுக்கு போய்விடுகிறார்கள். அதனால்தான் கிறிஸ்தவ திருச்சபை இந்த உலகத்தில் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்தவிதத்தில் இயேசுவின் இரண்டாம் வருகையையின் நாளைக் குறிக்கும் செயல் இருந்து வந்திருக்கிறது.

இப்படி நாள் குறிப்பதும், அதை நம்பி எதிர்பார்த்திருப்பதும் பல ஆபத்துக்களை ஏற்படுத்திவிடுகின்றது என்பதைத்தான் அநேகர் புரிந்துகொள்ளாமல் போய்விடுகிறார்கள். இரண்டு முக்கியமான ஆபத்துக்களை மட்டும் விளக்குகிறேன்.

  1. இதுவரை நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து இன்றுவரை குறிக்கப்பட்ட நாட்களில் ஒன்றுகூட நிறைவேறாமல் போய்விட்டது. இது நாளைக் குறித்தவர்களுக்கு பேரவமானத்தையும், கிறிஸ்தவ வேதத்திலும், கிறிஸ்தவத்திலும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் தளர வைத்துவிட்டிருக்கிறது.
  2. இயேசுவின் வருகையின் நாளை எதிர்நோக்கி இவ்வாறு குறிக்கப்படுகின்ற நாட்களில் நம்பிக்கை வைக்கின்ற கிறிஸ்தவர்கள் அந்த நாட்களில் ஒன்றும் நடக்காமல் போகிறபோது அவர்களுடைய விசுவாசமும், வேத நம்பிக்கையும் ஆட்டம்காண ஆரம்பித்துவிடுகின்றது. கிறிஸ்துவிலும், கிறிஸ்தவ வேதத்திலும் நம்பிக்கை தளறுமானால் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை சமாதானத்தோடும், உறுதியோடும் இருக்க வாய்ப்பில்லை.

கிறிஸ்துவின் வருகையின் நாளையும் நேரத்தையும் குறிப்பது அவசியமா? அப்படிக் குறிப்பதற்கு வேதம் அனுமதிக்கின்றதா? இந்த நாளில், நிமிடத்தில் நான் வரப்போகிறேன் என்று இயேசு கிறிஸ்து எங்காவது குறிப்பிட்டு வெளிப்படுத்தியிருக்கிறா? என்பது போன்ற கேள்விகளை நாம் கேட்பது அவசியம். இந்தக் கேள்விகளுக்கான பதிலை வேதம் நிச்சயம் தருகின்றது. கிறிஸ்து தன்னுடைய வருகையைப் பற்றி விளக்கியிருக்கும் முக்கிய வேதபகுதிகள் மத்தேயு 24 ஆம், 25 ஆம் அதிகாரங்கள். இந்தப் பகுதிகளில் கிறிஸ்து விளக்கியிருப்பவற்றின் அடிப்படையில் கிறிஸ்துவின் வருகையைப் பற்றி பவுல் 1, 2 தெசலோனிக்கேயர் நிருபங்களிலும், பேதுரு தன்னுடைய நிருபத்திலும் விளக்கியிருக்கிறார்கள். இந்தப் போதனைகளை சுருக்கமாக நாம் கவனிப்போம்.

முதலில் மத்தேயுவில் தன்னுடைய இரண்டாம் வருகை சம்பந்தமாக அடிக்கடி சொல்லியிருக்கும் வாசகங்களைக் கவனியுங்கள்:

‘அந்த நாளையும், நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.’ (மத்தேயு 24:36).

‘உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள் . . . நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்.’ (மத்தேயு 24:42, 44).

‘மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.’ (மத்தேயு 25:13).

‘திருடன் இன்ன நேரத்தில் வருவானென்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள். அந்தப்படியே, நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.’ (லூக்கா 12:39, 40)

‘. . . மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும் வேளையை அறியாதிருப்பாய்.’ (வெளி. 3:3).

‘இதோ திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.’  (வெளி. 16:15).

இதுவரை நாம் பார்த்திருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் அவருடைய இரண்டாவது வருகையைக் குறிப்பவை. இதே வார்த்தைகளைப் பவுல் அப்போஸ்தலனின் நிருபங்களிலும் நாம் வாசிக்கிறோம்.

‘இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள் . . . அழிவு சடுதியாய் அவர்கள் மேல் வரும்.’ (1 தெசலோ. 4:2, 3).

அப்போஸ்தலனான பேதுருவும் இதே வார்த்தைகளை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறித்துப் பயன்படுத்தியிருக்கிறார்.

‘கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள் கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.’ (2 பேதுரு 3:10).

இதுவரை நாம் பார்த்து வந்திருக்கின்ற இந்த வேதப்பகுதிளெல்லாம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியவை என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. இந்த வார்த்தைகள் கொடுக்கும் விளக்கங்களை இனிப் பார்ப்போம்.

1. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் (உலக முடிவின்) நாளையோ அல்லது நேரத்தையோ இந்த உலகத்தில் பிறந்த, இனி பிறக்கப்போகும் எவரும் அறிந்திருப்பதற்கு வழியில்லை.

மேலே நாம் பார்த்து வந்திருக்கின்ற வேத வார்த்தைகளெல்லாம் தெளிவான ஓர் உண்மையை மறுதலிக்க முடியாதபடி விளக்குகின்றன. இயேசுவின் வருகையை அறிந்திருந்த எந்த மனிதனும் இந்த உலகத்தில் பிறந்ததில்லை, இப்போது வாழவும் இல்லை, இனிப் பிறக்கப்போவதுமில்லை. எந்த மனிதனுக்குமே தெரியாத நாளிலும், நேரத்திலும் நான் வருவேன் என்று அப்பட்டமாக இயேசு சொல்லியிருக்கும்போது அதைத் தெரிந்து வைத்திருப்பதுபோல் பொய் சொல்லி நாடகமாடுவது பெரும் பாதகமான செயல். இப்படிப் பொய் சொல்லி எவராவது நாள் குறிக்கும்போது அதை நம்புவதும் பெரும் ஆபத்தான செயல்.

சிலர் இயேசு தன்னுடைய வருகையின் நாளை இரகசியமாக வேதத்தில் மறைத்துத் தந்திருப்பதாகவும் அதைக் கண்டுபிடிப்பது நம் வேலை என்று சொல்லி அந்த இரகசியத்தைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதைத்தான் ஹெரல் கேம்பிங்க் சொன்னார். இந்தவகையில் தன்னுடைய இரண்டாம் வருகையைப் பற்றிய ஒரு இரகசிய Code ஐத் தான் வேதத்தில் மறைவாகத் தந்திருப்பதாக இயேசு ஒருபோதும் சொன்னதில்லை; அப்படி எதுவும் வேதத்தில் ஒளித்து வைக்கப்படவில்லை. இது அப்பட்டமான பொய்.

வேறு சிலர், இயேசுவே அதை எனக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சொல்லி சமாளிக்கப் பார்க்கிறார்கள். அதுவும் பொய்தான். ஏனென்றால், இயேசு ஏற்கனவே தன்னுடைய வேதத்தில் வெளிப்படுத்தியிராத உண்மையை, அதுவும் அதை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டேன் என்று பல இடங்களில் தெரிவித்திருக்கும் உண்மையை தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு இன்றைக்கு ஒருவருக்கு தெரியப்படுத்துவதென்று சொல்லுவது அவருடைய வேதத்தை அவரே நிராகரித்துவிடும் செயலாகும். ஆனால், ஆண்டவராகிய இயேசு அப்படிச் செய்யமாட்டார். இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் சத்தியமானவை. அவை என்றைக்கும் மாறாமல் நிரந்தரமாய் நிலைத்திருப்பவை. இயேசு தான் ஏற்கனவே சொன்னபடி ஒருவரும் அறிந்திராத, எவரும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த உலகத்தை நியாயந்தீர்க்க வருவார் என்பதுதான் உண்மை.

இவ்வாறாக இயேசு எவரும் அறியாத நாளிலும், நேரத்திலும் நான் வருவேன் என்று சொல்லியிருப்பதால் அந்த வார்த்தைகளை மட்டும் விசுவாசித்து நாம் அதுபற்றி எவர் நாள் குறித்தாலும் அதை நம்பாமல் வாழ்வது அவசியம். இயேசு தன் வேதத்தில் சொல்லியிருக்கும் சத்தியங்களைவிட்டுவிட்டு மனிதனுடைய வார்த்தைகளை நாம் நம்பி வீண்போய்விடக்கூடாது.

2. இயேசு கிறிஸ்துவின் வருகை சடுதியாக எவரும் அறியாத நேரத்தில் நிகழும்.

வேதம் அடிக்கடி ‘திருடனைப்போல’ என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தி அதைப்போல மனுஷகுமாரனுடைய (இயேசுவின்) வருகை இருக்கும் என்று சொல்லுவது இயேசு திருடனைப்போல எவரும் முன்னறிந்திராத நேரத்தில் வருவார் என்பதை உணர்த்துவதற்காகவே. திருடன் ஒருநாளும் தான் வருவதை நமக்குத் தெரிவித்துவிட்டு வருவதில்லை. ‘திருடன்’ உதாரணம் இயேசுவின் வருகை எப்படி இருக்கும் என்பதை விளக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எப்போதும் கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணம் எந்த முக்கிய உண்மையை விளக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து அதை மட்டுமே விளங்கிக்கொள்ள வேண்டும். அநாவசியத்துக்கு எந்த உதாரணத்திற்கும் நாம் நினைத்தவிதத்தில் பொருள்கொடுக்கக் கூடாது.

‘திருடன்’ உதாரணம் இயேசுவின் வருகையைப் பற்றி விளக்குவதென்ன? இயேசு திருடனைப்போல சொல்லிக்கொள்ளாமல் வருவார்.  அவருடைய வருகை எவருக்கும் தெரிந்திருக்காது. அவர் திடீரென்று நாம் எதிர்பார்க்காத நேரத்தில் வருவார். இதில் ‘எதிர்பார்க்காத நேரத்தில்’ அவர் வருவார் என்பதே மிகவும் முக்கியமான அம்சம். எதிர்பாராத நேரத்தில் அவர் வரப்போவதால் அவருடைய வருகை எவருக்கும் தெரிந்திருக்க வழியில்லை. நாளையும், நேரத்தையும் குறிப்பதற்கும் வழியில்லை.

அடுத்து, இயேசுவின் வருகை திருடனின் வருகையைப் போல ‘சடுதியாக’ இருக்கும். இதை வேதம் பல இடங்களில் விளக்குகிறது. ‘எதிர்பாராத‘ என்ற வார்த்தை ‘நாம் நினைத்துப் பார்த்திராத’ நாளும், நேரமும் என்பதைக் குறிக்கின்றது. ‘சடுதியாக’ என்ற வார்த்தை கண் விழிகள் மூடித்திறக்கும் வேகத்தில் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை அதைப்போல இருக்கும். இந்த முறையில்தான் உலகத்தில் இருக்கும் எந்தத் திருடனும் வருவான் என்பதால்தான் ‘திருடனின்’ உதாரணத்தை வேதம் பயன்படுத்துகிறது. நாம் இதற்கு மேல் எந்த அர்த்தத்தையும் திருடன் உதாரணத்திற்குக் கொடுக்கக்கூடாது. அப்படிச் செய்வது சொல்லப்பட்டிருக்கும் உண்மையை சிதைத்துவிடும்.

3. இயேசு கிறிஸ்து வரும் நாளோ, நேரமோ நமக்குத் தெரிந்திராதபடியால் நாம் உடனடியாக மனந்திரும்பி அவரை விசுவாசித்து வைராக்கியத்தோடு வாழ்வது அவசியம்.

நான் வரப்போகும் நாளையும், நேரத்தையும் அறிந்திருப்பவர்கள் ஒருவரும் இல்லை என்றும், திருடனைப் போல நான் எவரும் எதிர்பாராத நேரத்தில் சடுதியாக வருவேன் என்றும் இயேசு கிறிஸ்து வேதத்தில் சொல்லியிருப்பதற்குக் காரணமென்ன? அதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன.

(1) தன்னுடைய மக்களைத் தன்னோடு அழைத்துச் செல்லவும், உலகத்தை அது மனந்திரும்பாததற்காக நியாயந்தீர்ப்பதற்கும் இயேசு வரப்போகிறார். இயேசு கிறிஸ்துவின் வருகையின்போது நிகழப்போகும் நியாயத்தீர்ப்பு கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே ஆனந்தமான நாளாக இருக்கப்போகிறது. இயேசுவை விசுவாசிக்காதவர்களுக்கு அது பயங்கரமானதாக மட்டுமே இருக்கும். இயேசுவின் வருகையின் நாள் கற்பனையானதல்ல. அவருடைய வருகை நிச்சயமாக நிகழப்போகிறது. மனந்திரும்பாமல் தொடர்ந்தும் பாவவாழ்க்கை வாழ்ந்து வருகிறவர்களுக்கு அந்நாள் அழிவின் நாளாகவே இருக்கும். இன்னும் அவர் வரவில்லையே, அதுவரை சந்தோஷமாக இருந்துவிட்டுப் போவோம், பின்னால் மனந்திரும்பிக் கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு அவர்கள் நினைப்பில் மண்ணை அள்ளிக் கொட்டப்போகிறது இயேசுவின் இரண்டாம் வருகை. அவருடைய வருகையின்போது எவரும் மனந்திரும்புவதற்கு வாய்ப்பிருக்காது. அவர் வருவதற்கு முன் மனந்திரும்பினால் மட்டுமே நித்தியஜீவன். அதனால்தான் அவருடைய வருகையின் செய்தி உங்களை இப்போதே மனந்திரும்பி இயேசுவை விசுவாசிக்குமாறு அழைக்கிறது. அவர் வரும் நேரம் ஒருவருக்குமே தெரியாததால் காலத்தை வீணாக்காமல் இன்றே, இப்போதே மனந்திரும்புவதே அழிவிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி.

(2) கிறிஸ்தவர்கள் தொடர்ந்து பரிசுத்தமாக வாழ்ந்து பரலோக வாழ்க்கைக்காகத் தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டுமென்பதற்காகவும் இயேசு தன்னுடைய வருகையை அடிக்கடி நினைவுபடுத்துகிறார்.

கிறிஸ்தவர்கள் பரிசுத்தமாக வாழ்ந்து வளருவதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதை அவர்கள் இரட்சிப்பின் நிச்சயத்தோடும், தாழ்மையோடும் வாழவேண்டும். இறுதிவரை (விசுவாசத்தில்) நிலைத்திருப்பவனே மெய்யான கிறிஸ்தவன் என்று வேதம் சொல்லுகிறது. கிறிஸ்தவன் என்று மார்தட்டித் தன்னை ஆணவத்தோடு அழைத்துக்கொள்ளாமல் கிறிஸ்தவனாக உண்மையோடும் பரிசுத்தத்தோடும் இயேசுவின் வருகையை நினைவுகூர்ந்து அன்றாடம் வாழ்ந்து இயேசு கிறிஸ்துவின் வருகையின்போது அவரால் ‘நல்ல சேவகன்’ என்று அழைக்கப்படுவதற்கு ஒவ்வொரு கிறிஸ்தவனும் தயாராக இருக்க வேண்டும் என்கிறது வேதம். பரிசுத்தமாக வாழ்வதை அசட்டை செய்யாமலும், இரட்சிப்பின் நிச்சயத்தில் தளர்ச்சியுறாமலும் கடைசிவரை விசுவாசத்தில் வைராக்கித்தோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இயேசு தன்னுடைய சடுதியான வருகையை அடிக்கடி நினைவுபடுத்தி ‘விழித்திருங்கள்’ என்று அடிக்கடி சொல்லியிருக்கிறார். அவர் வருகிறபோது எந்தக் கிறிஸ்தவனும் அக்கறையில்லாதவனாக, பரிசுத்தம் குறைந்தவனாக, தன்னுடைய கடமைகளை நிறைவேற்றாதவனாக, உலக காரியங்களில் அக்கறை காட்டுகிறவனாக இருந்துவிடக்கூடாது என்பதால்தான் இயேசுவின் வருகையை மனதில் வைத்து எதிர்பார்ப்போடு விசுவாசமாக வாழ வேதம் கிறிஸ்தவர்களை அழைக்கிறது.

(3) சுவிசேஷத்தைக் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ சபைகளும் வைராக்கியத்தோடு தொடர்ந்து சொல்ல வேண்டுமென்பதற்காகவும் இயேசு அதை நினைவுபடுத்துகிறார்.

நியாயத்தீர்ப்பு நாளைப்பற்றி 2 கொரிந்தியர் 5:10ல் விளக்கும் பவுல், அந்த நாளில் அநியாயக்காரர்கள் நியாயத்தீர்ப்பைச் சந்தித்து கடவுளுடைய பயங்கரத்தை அனுபவிக்க வேண்டியிருப்பதால் ஊக்கத்தோடும், பாரத்தோடும், ஆதங்கத்தோடும் எல்லா மனுஷருக்கும் தான் சுவிசேஷத்தைத் சொல்லுவதாக விளக்குகிறார். இயேசுவும் மத்தேயு 24:14ல், ‘ராஜ்யத்தினுடைய இந்த சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும் அப்போது முடிவு வரும்’ என்று சொல்லியிருக்கிறார். இதன் மூலம் உலக முடிவுக்கான ஓர் அடையாளத்தைக் குறிப்பிடும் இயேசு, சுவிசேஷம் உலகம் முழுவதும் அறிவிக்கப்படப்போவதாகவும், அது அறிவிக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்திச் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள். உலக முடிவுக்கு முன் சுவிசேஷம் எங்கும் அறிவிக்கப்பட வேண்டும்.

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை ஒரே வருகையாகத்தான் இருக்கப்போகிறது. சிலர் நினைப்பதுபோல் அவர் பலதடவைகள் வந்துபோகப் போவதில்லை. அப்படி அவர் மறுபடியும் வருகிறபோது விசுவாசிகள் பரலோகம் போவார்கள். இயேசுவை விசுவாசிக்காதவர்கள் நியாயத்தீர்ப்பைச் சந்தித்து நரகத்தை அடைவார்கள். அது நிகழ்வதற்கு முன் இந்த உலக மக்கள் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவைத் தங்களுடைய ஆண்டவராக விசுவாசிக்க வேண்டும். இயேசு வந்த பிறகு ஒருவரும் மனந்திரும்புவதற்கு வழியில்லை. அவர் வருவதற்கு முன் மனந்திரும்ப வேண்டிய கட்டாயத்தை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். அதனால்தான் சுவிசேஷத்தை பாரத்தோடும், ஊக்கத்தோடும் நாட்களை வீணாக்காமல் சொல்ல வேண்டிய கடமை கிறிஸ்தவர்களுக்கு இன்று இருக்கிறது. அநியாயமாக எவரும் அழிந்துபோவதைக் கடவுள் விரும்பாமல் அவர்கள் பாவத்திலிருந்து மனந்திரும்ப ஒரு வாய்ப்பை சுவிசேஷத்தின் மூலம் தந்திருக்கிறார். அதை வைராக்கியத்தோடு அவருடைய வருகைவரையும் தளராமல் கிறிஸ்தவர்கள் சொல்ல வேண்டும். நான் சீக்கிரமாக வரப்போவதாக இயேசு சொல்லியிருப்பதை நினைவுகூருங்கள்.

_____________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

3 thoughts on “உங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்?

    • praise to Jesus Christ i’m very happy to visit web site at right time right word i heard from this thank u so much to & Ur ministry i’ll pray for u to do mighty thinks like this Amen

      by R.Emmanuel . (meetkum messiah ministry , Chennai )
      (founder)

      Like

மறுமொழி தருக