பாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா?

இரட்சிப்போடு தொடர்புள்ள சத்தியங்களைத் தொகுத்துத் தருகின்ற ‘கிருபையின் போதனைகள்’ மனிதனுடைய பாவத்தின் தன்மையை விளக்குகின்றபோது பாவம் அவனை முழுமையாக, அவனில் ஓரிடம் விடாமல் பாதித்து கர்த்தர் முன் பாவியாக நிறுத்தியிருக்கிறது என்கிறது. இதனை ஆங்கிலத்தில் Total Depravity or Total Inability என்று விளக்குவார்கள். Total Depravity என்றால் முழுமையாகக் கறைபடிந்தவன் என்று பொருள். Total Inability என்றால் முழுமையாக செயலிழந்தவன் என்று பொருள். இவை இரண்டும் பாவம் மனிதனை எந்தளவுக்கு பாதித்திருக்கின்றது என்பதை விளக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற பதங்கள். எந்த ஓர் உண்மையையும் விளக்குவதற்கு நாம் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். அது அவசியம். ஆனால், அந்த வார்த்தைகளும், பதங்களும் என்ன காரியத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றனவோ அதை மீறி அவற்றைப் புரிந்துகொள்ளுவது தான் தவறு. இந்தப் பதங்கள் எதை விளக்க முயல்கின்றன என்பதைக் கவனத்தில் வைத்து அவற்றை விளங்கிக் கொள்ள வேண்டும்.

‘மனிதன் முழுமையாகக் கறைபடிந்தவன்’ என்பது சுத்தமான உண்மை. அதற்கு அர்த்தம் அவன் நன்மைகளே செய்ய முடியாத மகா கேடு கெட்டவன் என்பதல்ல. இந்த வார்த்தைகளுக்கு அதுவல்ல அர்த்தம். இந்த உண்மையைத் தவறாகப் புரிந்துகொள்ளுகிறவர்கள் அப்படித் தவறாக எண்ணிவிடுகிறார்கள். பாவம் மனிதனை முழுமையாகப் பாதித்து ஆவிக்குரிய நன்மைகள் எதையுமே அவன் செய்ய முடியாத நிலையில் வைத்திருக்கின்றது என்பதை மட்டுமே இந்த உண்மை விளக்க முனைகிறது. அதேபோலத்தான், ‘மனிதன் முழுமையாக செயலிழந்தவன்’ என்ற வரிகளும் ஆவிக்குரிய செயல்கள் எதையும் செய்ய முடியாத நிலையில் மனிதன் இருக்கிறான் என்பதை விளக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

பாவ நிலையில் மனிதன் பாவத்தை செய்ய முடியாத வல்லமையைக் கொண்டிருக்கவில்லை (not able not to sin) என்று ஆகஸ்தீன் சொல்லியிருக்கிறார். அவனால் பாவத்தை மட்டுமே செய்ய முடியும். அதை அவன் முழுச் சுதந்திரத்தோடு செய்கிறவனாக இருக்கிறான். அதைச் செய்யக் கூடாதென்று அவனுடைய இருதயம் அவனோடு போராடுவதில்லை. அவனுடைய இருதயமும் பாவ இருதயமாக மாறியிருப்பதால் அது பாவத்தை மட்டுமே தன்னுடைய பாவ இயல்புக்கு ஏற்றபடி நாடுகிறது.

பாவத்தை மட்டுமே செய்யும் இயல்புள்ள மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுகெட்டவனா? என்ற சிலரின் கேள்விக்கு நாம் பதிலளிப்பது அவசியம். அதற்கு பதில் உண்மையில் அப்படியில்லை என்பதுதான். முதலில் பாவ நிலையில் இருக்கும் மனிதனால் எதை செய்ய முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவனால் இரட்சிப்புக்குரிய, ஆவிக்குரிய நன்மைகள் எதையும் செய்ய முடியாது. அதில் ஒரு துரும்பளவுக்குக் கூட அவனால் எதுவும் செய்ய முடியாது. இது வேதம் போதிக்கும் தெளிவான உண்மை. ஆவிக்குரிய எந்தக் காரியத்தை அவன் செய்ய முனைந்தாலும் அவை பாவத்தால் கறைபடிந்து கடவுளிடம் நெருங்க முடியாத நிலையில் அவன் இருக்கிறான்.

பாவநிலையில் இருக்கும் மனிதன் தொடர்ந்தும் கடவுளின் சாயலில் இருப்பதால் அவனுக்குள் இந்த உலகத்துக்கேற்ற நன்மைகளை செய்ய முடிகின்றது. ஒழுக்கத்துக்கேற்ற சில காரியங்களைக் கர்த்தர் அவனைக் கொண்டு செய்ய வைக்கிறார். அவனால் மற்றவர்கள் மீது கருணை காட்ட முடிகின்றது. பெற்றொர்களில்லாத பிள்ளைகளை வளர்க்க விடுதிகளைக் கட்ட முடிகின்றது. கருணையோடு வைத்தியசாலைகளைக் கட்டி வியாதியுள்ளவர்களைப் பராமரிக்க முடிகின்றது. பல விதங்களில் பணத்தைக் கொடுத்து எத்தனையோ டிரஸ்டுகள் மூலம் கான்சர் போன்ற வியாதிகளுக்கு மருந்து கண்டுபிடிக்க உதவ முடிகின்றது. கடவுளின் சாயலில் இருக்கும் பாவ மனிதன் இதையெல்லாம் செய்யும்படி கர்த்தர் செய்கிறார். இதையெல்லாம் நாம் மறுக்க முடியாது. ஆனால், இத்தனை நல்ல காரியங்களையும் பயன்படுத்தி அவனால் ஆவிக்குரிய எந்த நன்மையையும் அனுபவிக்க முடியாது. ‘இத்தனை நல்ல காரியங்களைச் செய்கிறேனே, நிச்சயம் என்னை நீர் பரலோகத்துக்கு உரியவனாக்க வேண்டும்’ என்று பாவ மனிதன் கர்த்தரைப் பார்த்து சொல்ல வழியில்லை. பாவ மனிதன் எந்த நன்மையைச் செய்தாலும் தனக்குத் தானே ஆத்மீக விடுதலையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் ஆவிக்குரிய நன்மைகள் அற்றவனாக இருக்கிறான். ஏசாயா 64:6 சொல்லுகிறது, ‘நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம், எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக் கொண்டு போகிறது.’ பாவ மனிதன் செய்கின்ற அத்தனை நன்மைகளும் கர்த்தருக்கு முன்பு அழுக்கான கந்தைகளாகத் தெரிகின்றன. அவனால் செய்யக்கூடிய இந்தச் சில நன்மைகளையும் அவன் கடவுளின் சாயலில் இருப்பதனாலேயே செய்ய முடிகின்றது. கடவுளின் உதவியால் அவன் செய்கின்ற நன்மைகளை அவர் முன் காட்டி அவனால் ஆத்மீக விடுதலையைப் பெற்றுக்கொள்ள முடியாது. இயல்பில் அவன் ஆத்மீக நன்மைகள் எதுவுமற்றவனாக இருக்கிறான். அத்தோடு கடவுள் தன்னுடைய பொதுவான கிருபையின் அடிப்படையில் அவன் கொடூரமான பாவங்களைச் செய்துவிடுவதில் இருந்து அவனைத் தடுக்கிறார். இதற்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். பாவ மனிதனை அவனுடைய நிலையில் துப்புரவாக விட்டுவிட்டால் இந்த உலகத்தை நொடியில் அவன் அழித்துவிடுவான். அந்தளவுக்கு பாவம் கொடிதானது.

பாவ நிலையில் உள்ள மனிதன் ஏனைய மனிதர்கள் மீது கருணை காட்டவும், அவர்களுக்கு நன்மைகள் செய்ய முடிந்த நிலையில் இருந்தபோதும் அதேபோல் அவனால் ஆத்மீகக் காரியங்களைச் செய்யவோ, ஆத்மீக விடுதலையை அடையவோ முடியாது. இரட்சிப்புக்குரிய கர்த்தரின் கிருபையில்லாமல் அவனால் கர்த்தரிடம் வருவதற்கு சித்தங்கொள்ள முடியாது. அவனுடைய பாவ சித்தம் கடவுளுடைய துணையில்லாமல் அவரை நேசிக்கும் நிலைக்கு வராது.

One thought on “பாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா?

மறுமொழி தருக