சுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள்

church membership-hc3dஜொனத்தன் லீமென் எழுதிய ‘சபை அங்கத்துவம்’ நூலும், இதுபற்றி விரிவாக எழுதப்பட்ட அவருடைய இன்னொரு நூலும் என்னை அதிகம் சிந்திக்கவைத்தன; இந்த ஆக்கத்தை எழுதுவதற்கு ஒரு காரணமாக அமைந்தன. முப்பத்திஐந்து வருடங்களாக நான் திருச்சபையில் போதகப்பணியில் இருந்துவருகிறேன். என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை ஆரம்பித்த காலத்திலேயே நின்று நிலைத்துப்போன அசைக்கமுடியாத நம்பிக்கை திருச்சபை பற்றியது. அதற்கு நான் ஆண்டவருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அந்த நம்பிக்கை அன்றே என்னில் ஆணிவேராகப் பதிந்திருக்காவிட்டால் இன்று என்ன செய்துகொண்டிருந்திருப்பேன் என்பதை என்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. இந்த முப்பத்திஐந்து வருடகால கிறிஸ்தவ பணியில் என்னோடு நெருங்கியிருந்து உறவாடிய நண்பர்களும், அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் பழக்கமானவர்களும் அநேகர். இவர்களில் திருச்சபை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் கிறிஸ்தவ சாகரத்தில் என்னென்னவெல்லாமோ செய்து நீச்சலடித்துக்கொண்டிருக்கிறவர்கள் தொகை ஏராளம்.

முப்பத்தி நான்கு வருடங்களுக்கு முன் கடைசியாக சந்தித்திருந்த ஒரு நண்பன் இத்தனைக் காலத்துக்குப் பிறகு என்னை சமீபத்தில் தொடர்புகொண்டான். அவனுக்கு அன்றே ஐ.கியூ அநாவசியத்துக்கு அதிகம். இருவரும் ஓரிடத்தில் சேர்ந்து இறையியல் கற்றுக்கொண்டிருந்த காலம் அது; இளமைக்காலமும் கூட. ஜோன் மெக்காத்தரின் ‘கெரிஸ்மெட்டிக்ஸ்’ நூல் வெளிவந்திருந்த வருடம். அதை வாசித்துவிட்டு துள்ளிக்குதித்துக்கொண்டிருந்தோம். அது ஏற்படுத்திய தாக்கத்தால், கெரிஸ்மெட்டிக் அற்புத வரங்கள் இன்று இல்லை என்பதை ஆணித்தரமாக நிரூபிப்பதற்காக TDNT வால்யூம்களைப் புரட்டிப்புரட்டி telos என்ற வார்த்தை வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் அலசி ஆராய்ந்து வந்திருந்த காலம். எத்தனையோ இறையியல் கருத்துக்களில் எங்களிருவருக்கும் ஒத்த கருத்திருந்ததால் நெருங்கியே இருந்தோம். சூழ்நிலைமாறி ஒருவரையொருவர் பிரிந்து இன்று வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறோம். அவன் தானிருந்த சபையைவிட்டுப் போய் என்னென்னவெல்லாமோ செய்து இன்றைக்கு கூடில்லாக்குருவியாக தனக்கென ஒரு நிறுவனத்தை அமைத்து கிறிஸ்தவ பணிபுரிந்து வருகிறான். இன்றும் விசுவாசியாக இருந்தபோதும் திருச்சபை பற்றிய அவனுடைய எண்ணங்கள் என்னைப் பொறுத்தவரையில் வேதபூர்வமானதாக இல்லை. அவனுக்கு அது ஒன்றும் பெரிதல்ல. ‘இன்னும் தொடர்ந்து கிறிஸ்தவனாகத்தான் இருக்கிறேன், கிறிஸ்துவுக்காக உழைத்துக்கொண்டுதான் இருக்கிறேன், சபைத்தொடர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது’ என்பதுதான் அவனுடைய சிந்தனையாக இருக்கிறது. இது ஒன்றும் அவன் மட்டும் எடுத்திருக்கும் நிலைப்பாடல்ல. கிறிஸ்தவ சமுதாயத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்த எண்ணங்களோடேயே வாழ்ந்து வருகிறார்கள். கிறிஸ்துவை விசுவாசித்து ஏதோவொருவிதத்தில் எதைச்செய்தாவது கிறிஸ்தவ ஊழியம் செய்தால்போதும் சபையென்றெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளக்கூடாது என்பதுதான் இவர்களுடைய எண்ணமாக இருக்கிறது. இவர்கள் சபையை வெறுக்கவில்லை; சபையை அடியோடு ஒதுக்கவில்லை. ஆனால், திருச்சபை பற்றிய போதனைகளை முறையாக அறிந்திராது தங்களுடைய சிந்தனை வழிநடத்துகிறபடியெல்லாம் நடந்துவருகிறார்கள்; அதில் சந்தோஷப்பட்டுக்கொள்கிறார்கள். இந்த வார்த்தைகளை எழுதுகிறபோது எனக்கு நியாயாதிபதிகள் நூலில் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது. ‘அந்நாட்களில் இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்’ (நியா. 21:25).

சமீபத்தில் நான் சந்தித்த ஒருவர் ஒரு கோப்பை என் கையில் தந்து நேரமிருக்கும்போது வாசித்துப் பாருங்கள் என்றார். அதை நான் வாசித்துப் பார்த்தேன். அவர் ஒரு கிறிஸ்தவர். தன் கைப்பணத்தையும் அங்குமிங்கும் இருந்து பெற்றுக்கொள்கிற பணத்தையும் கொண்டு பல இடங்களில் இருக்கும் போதகர்களுக்கு (அவர்கள் எதை விசுவாசிக்கிறார்கள் என்பதில் அக்கறை காட்டாமல்) பண உதவிசெய்து, அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்குப் போய்பேசியும் ஜெபித்தும் வருகிறார். இப்படித் தனக்கென எவருக்கும் எதற்கும் கணக்குக்கொடுக்கத் தேவையில்லாத ஒரு சொந்த ஊழியத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார். அடுத்ததடவை அவரை சந்தித்தபோது இதை எனக்கு ஏன் கொடுத்தீர்கள் என்பது தெரியவில்லை, இருந்தாலும் நீங்கள் எந்த சபையைச் சேர்ந்தவர், போதகரா? என்று கேட்டுவைத்தேன். நான் ஒருசபையிலும் இல்லை, போதகனும் இல்லை என்று அவர் பதில் தந்தார். அப்படியானால் நீங்கள் செய்கிற காரியங்களைச் செய்வதற்கு வேதத்தில் அனுமதியோ ஆதரவோ இல்லையே என்று கேட்டுவைத்தேன். அவர் அதற்கு, தான் நல்ல சமாரியனைப்போல இருந்து ஊழியம் செய்கிறேன் என்றார். நல்ல சமாரியன் கதைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்துப் பார்த்தபோது எனக்குத் தலைசுற்றல் வந்துவிடும்போலிருந்தது. இதுதான் இன்றைய நிலைமை.

membership-3dதிருச்சபை பற்றிய விஷயத்தில் அநேகர் வேதஞானத்தோடு நடந்துகொள்ளாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

(1) சபை பற்றிய இறையியல் அறிவின்மை – ஒரு முக்கிய காரணம் திருச்சபை பற்றிய வேத இறையியல் விளக்கங்களை சரிவரப்புரிந்துகொள்ளாமல் இருப்பது. இறையியலில் சபையைப்பற்றி விளக்குகிறபோது அதை இரண்டுவிதமாக பொதுவாக விளக்குவார்கள். அதாவது கண்களுக்குப் புலப்படாத சபை (Invisible), உள்ளூர் சபை (Local) என்று பிரித்து விளக்குவார்கள். இப்படி விளக்குவது பல்வேறு காரணங்களுக்காக அவசியமாகிறது. இந்தப்பதங்கள் எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை சரிவரப் புரிந்துகொள்ளாவிட்டால் தவறிழைக்க நேரிடும். முதலில், இந்தப் பதங்கள் இரண்டு சபைகள் இருப்பதாக நமக்குக் காட்டவில்லை; சபை ஒன்றே. இயேசு தன்னுடைய ஒரே சபையைத் தான் இந்த உலகத்தில் ஏற்படுத்தி தொடர்ந்து போஷித்து வருகிறார். இரண்டாவதாக, கண்களுக்குப் புலப்படாத சபை என்பது கண்ணால் காணமுடியாத சபை என்று முடிவுசெய்யக்கூடாது. சபை ஒருபோதும் கண்ணால் காணமுடியாமல் இருக்கமுடியாது. 115 தடவைகள் புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சபை என்ற வார்த்தை கண்ணால் காணமுடியாதது என்ற அர்த்தத்தில் ஒரு தடவையாவது பயன்படுத்தப்படவில்லை. இது மிகவும் தவறான கருத்து. ஆங்கிலத்தில் சபையைக் குறித்து விளக்குவதற்காக invisible என்ற வார்த்தையை இறையியலறிஞர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், அவர்கள் அதைக் கண்ணால் காணமுடியாத ஒரு சபை இருக்கிறது என்ற அர்த்தத்தில் ஒருபோதும் பயன்படுத்தவில்லை. ஆண்டவருடைய சபையாகிய விசுவாசிகளின் ஆவிக்குரிய பிறப்பைப் பொறுத்தவரையில் அது கண்ணால் பார்க்கமுடியாத ஆவியின் செயல் என்ற அர்த்தத்தில் விசுவாசிகளின் ஆவிக்குரிய தன்மையை விளக்க மட்டுமே அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். விஷயம் தெரியாதோர் தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். சீர்திருத்த இறையியல் வல்லுனரும் பேராசிரியருமான ஜோன் மரே சபையைக் குறித்து invisible என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை விரும்பவில்லை. சபை என்ற பதம் வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற அர்த்தத்தின் அடிப்படையில் மட்டுமே உலகளாவிய சபை என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கும் விளக்கம் கொடுக்க வேண்டும். சபை எப்போதும் கண்ணால் காணக்கூடியதாக, விசுவாசிகளைக் கொண்டு கூடிவருகின்ற அமைப்பாக மட்டுமே வேதத்தில் விளக்கப்பட்டிருப்பதால் உலகளாவிய சபை உலகமெங்கும் காணப்படும் உள்ளூர்சபைகளின் தொகையாக மட்டுமே இருக்க முடியும்; அது வேறுவிதத்தில் இருப்பதற்கு சபை என்ற வார்த்தைப் பிரயோகத்தின் மெய்யான அர்த்தம் இடம்கொடுக்கவில்லை.

(2) சபையில்லாமல் வாழ எத்தனிக்கும் துணிவு – சபையில்லாமல் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவர்கள் சபையைச் சேர்ந்தவர்கள் இல்லையா? என்று சிலர் துடிப்போடு கேட்பார்கள். இந்தக் கேள்வி எழும்பும் என்பது எனக்குத் தெரியாதல்ல. இப்படிப்பட்டவர்களை சிந்திக்க வைக்கத்தானே இதை எழுதியிருக்கிறேன். இவர்களுடைய எண்ணத்தில் சபை என்பது, இவர்களுடைய கற்பனையில் உலவிவரும் கண்ணால் காணமுடியாத சபை. உண்மையில் அப்படியொன்றில்லை; இருந்து அதில் அங்கத்தவர்களாக இருப்பதாக எண்ணி இவர்கள் வாழ்கிறார்கள். உள்ளூர் சபையில்லாமல் வாழமுடியும் என்று இவர்களுக்கு யார் சொல்லித்தந்தது? சபையில்லாமல் கிறிஸ்தவ வாழ்க்கையைக் கடைசிவரை நடத்திவிடலாம், பரலோகம் போய்விடலாம் என்று வேதம் எந்த இடத்தில் விளக்குகிறது? காட்டுங்கள் பார்க்கலாம். இவர்கள் தாங்களே உள்ளூர்சபை தேவையில்லை என்று தனிப்பட்ட சுயநல காரணங்களுக்காக முடிவுகட்டிவிட்டு, தங்களைக் கிறிஸ்தவர்களாக அழைத்துக்கொண்டு சபையில்லாமல் வாழ்ந்து இந்தக் கேள்வியை ஆணவத்தோடு கேட்கிறார்கள். வேதம் மட்டுமே நமக்கு அதிகாரம்; வேதம் இதுபற்றி விளக்குகிற உண்மைகளே இந்த விஷயத்தில் இறுதி முடிவாக இருக்க முடியும். எனக்குத் தெரிந்து வேதத்தில் வெளிப்படையாக உள்ளூர் சபையில் அங்கத்துவம் இல்லாமல் வாழ்ந்த விசுவாசி இயேசுவுக்குப் பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்டிருந்து கடைசி நேரத்தில் மனந்திரும்பி இயேசுவோடு பரலோகம் போனவன் மட்டுமே. அப்போஸ்தலருடைய நடபடிகள் 8ம் அதிகாரத்தில் வரும் எத்தியோப்பிய மந்திரி விசுவாசத்தை அடைந்து பிலிப்புவிடம் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டான். சபைபற்றிய வேறு விபரங்களை அந்தப் பகுதி தரவில்லை என்பதற்காக அவன் சபையில்லாமல் வாழ்ந்தான் என்ற தவறான முடிவுக்கு வரமுடியாது. அந்தப் பகுதி அவனுடைய விசுவாசம் எத்தகையது என்பதைச் சொல்லுவதோடு மட்டுமே நின்றுவிடுகிறது; அது விளக்கியிருப்பதற்கு மேல் அதில் வேறு எதையும் பார்ப்பதும், திணிப்பதும் வேதம் அறியாதவர்கள் செய்கிற செயல். சபையைப் பற்றி விளக்குகின்ற அத்தனைப் பகுதிகளையும் வைத்தே சபை பற்றிய உண்மைகளைத் தீர்மானிக்கவேண்டும். சரி சபையில்லாமல் வாழ்கிறவர்கள் கிறிஸ்தவர்களா? அந்தக் கேள்விக்கு அவர்கள் தங்களுடைய இருதயத்தை ஆராய்ந்து பார்த்து பதில் தேடவேண்டும். கிறிஸ்துவை நேசிக்கிறேன் என்று சொல்லுகிறீர்களே, அந்தக் கிறிஸ்து நேசித்து துன்பப்பட்டு உயிரையே கொடுத்திருக்கும் அந்தச் சபையில்லாமல் வாழத்துடிக்கிற உங்களுடைய விசுவாசம் கிறிஸ்தவ விசுவாசமா? என்பதுதான் என்னுடைய கேள்வி. அது உண்மையான விசுவாசமாக இருந்தால் நிச்சயம் கிறிஸ்துவைப்போல அவருடைய சபைக்கு உயிரைப் பணயம் வைக்கத் துடிக்கிற விசுவாசமாக அது இருக்கும்; சுயநல நோக்கங்களுக்காக சபையில்லாமல் வாழ்ந்து வருகிற விசுவாசமாக அது இருக்காது.

(3) பிரச்சனைகளைக் காரணம் காட்டி சபை வாழ்க்கை இல்லாமல் இருப்பது – சிலர், வேலை, குடும்பப்பிரச்சினை, பண்பாடு, வீட்டில் எதிர்ப்பு, தூரம், ஞாயிறுதினத்தில் வேலை, அறியாமை என்று பல்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி சபையில்லாமல் வாழ்கிறவர்களாக இருக்கிறார்கள். அந்தளவுக்கு இவர்களுக்கு சபை வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கையில் அவசியமற்றதாகப் போய்விட்டிருக்கிறது. கிறிஸ்தவ சீடத்துவம் பற்றிய எந்த சிந்தனையும் இவர்களுக்கில்லாமலிருக்கிறது. கிறிஸ்துவை விசுவாசித்தால் மட்டும் போதாது; அந்தக் கிறிஸ்து நேசிக்கும் சபைக்கு விசுவாசமாக இருந்து அவருடைய சீடனாக சபை வாழ்க்கையை நடத்தவேண்டும் என்று கிறிஸ்துவே வேதத்தில் விளக்குகிறாரே. வேறுசிலர் கிறிஸ்தவ தலைவர்களின் ஒழுக்கக்கேடான வாழ்க்கையைக் காரணங்காட்டி சபையில் நம்பிக்கையில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். தவறான ஊழியர்களின் வாழ்க்கை முறைக்குக் காரணம் கிறிஸ்துவின் சபையல்ல; வேஷதாரி ஊழியங்களும், மனிதனின் பாவமுமே. இதற்காக கிறிஸ்துவின் சபையை நிராகரிப்பதால் எந்தப் பயனுமில்லை. கிறிஸ்துவின் சபையில் வாழ்ந்து மட்டுமே அநுபவிக்கக்கூடிய சபை அங்கத்துவம், திருமுழுக்கு, திருவிருந்து, வேதப்பிரசங்கம், போதகக் கண்காணிப்பு, சீடத்துவம், ஐக்கியம் அனைத்தும் இல்லாமல் கிறிஸ்தவனாக வாழ முயற்சி செய்வது கிறிஸ்துவை நிந்திக்கின்ற ஆணவச்செயல். சிலுவையை சுமந்து அவரைப் பின்பற்றுவதற்குத் துணைபோகாத ‘விசுவாசம்’ மெய்விசுவாசமாக இருக்கமுடியாது. சபை வாழ்க்கை இல்லாமல் கிறிஸ்தவனாக வாழ்ந்து நல்ல குடும்பவாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பது முட்டாள்தனமான செயல்.

(4) ‘சபை’ என்ற பெயரில் இயங்கிவரும் அமைப்புக்கள் ஏற்படுத்தியிருக்கும் ஆத்மீகக்குழப்பம் – சபை வாழ்க்கையை இந்தளவுக்கு உதாசீனப்படுத்தி அநேகர் வாழமுயல்வதற்கு ‘சபை’ என்ற பெயரில் இருந்துவரும் அமைப்புகளும் காரணமாக அமைந்திருக்கின்றன. அதாவது சபை என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு சபைக்குரிய எந்த அமைப்பையும், இலக்கணத்தையும் தன்னில் கொண்டிராமல் இருந்து வரும் அமைப்புகளையே இங்கே குறிப்பிடுகிறேன். இவற்றில் பெரும்பாலானவைகளுக்கு வேதம் போதிக்கும் சபையைப் பற்றிய உண்மைகள் தெரியாது. அப்படியே ஓரளவுக்குத் தெரிந்திருப்பவைகளும் அவற்றை நடத்திவருகிறவர்களின் சுயநல நோக்கங்களினால் சபையாக அமைய முடியாமல் இயங்கி வருகின்றன. சரியான பக்திவிருத்தியுள்ள தலைமையையும், கட்டுக்கோப்புள்ள சபை அமைப்பையும், அங்கத்துவத்தையும், சபை ஒழுங்கையும், விசுவாச அறிக்கையையும், ஆத்தும விருத்தியையும் நோக்கமாகத் தன்னில் கொண்டிராமல் ‘சபை’ என்ற பெயரில் காளான்கள்போல் தனிநபர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் கொண்டு தனித்தியங்கும் இத்தகைய குழுக்கள் பட்டிதொட்டியெல்லாம் இருந்துவருகின்றன. இதற்குள் எவரும் போகலாம்; எதுவும் செய்துகொள்ளலாம். கேட்டவர்களுக்கெல்லாம் இங்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படும். ஞானஸ்நானம் மட்டுமே அங்கத்தவத்துக்கு அடையாளமாக இங்கு கருதப்படுகிறது. எந்தவித அங்கத்துவ விசாரணையையோ, சபை பற்றியும், அங்கத்துவம் பற்றியும் எந்தவிதப் போதனைகளையும் இவை வழங்குவதில்லை. இவற்றில் சபைக்கூட்டங்களைப் பார்க்கமுடியாது. வேதபூர்வமாக ஆராய்ந்து ஆத்துமாக்களால் நியமிக்கப்பட்ட மூப்பர்களையும், உதவிக்காரர்களையும் காணமுடியாது. இவற்றை ஆரம்பித்து வைத்த தனிநபர்களும் அவர்களுடைய குடும்பங்களுமே அதிகாரிகளாக எப்போதும் இவற்றை நிர்வகித்து வருவார்கள். முக்கியமான ஓரிருவர் அல்லது அமைக்கப்பட்டிருக்கும் கமிட்டிகள் எடுக்கப்படும் எல்லா முடிவுகளுக்கும் காரணமானவர்களாக இருப்பார்கள். அத்தோடு திருவிருந்தைக் கலியாணவிருந்துபோல் வருகிறவர், போகிறவருக்கெல்லாம் கேள்விமுறையில்லாமல் கொடுக்கின்ற ஒரு வழக்கத்தையும் இவைகள் கொண்டிருக்கும். உண்மையில் கலியாணவீட்டில்கூட கண்டவர்களையும் தெரிந்து சாப்பிட அனுமதிக்கமாட்டார்கள்; இந்த அமைப்புகள் அதைவிட மோசமான நிலையில் இன்றிருக்கின்றன. ‘சபை’ என்ற பெயரில் காணப்படும் இத்தகைய குழுக்கள் வேதம் போதிக்கும் திருச்சபையை ஆத்துமாக்கள் அறிந்துகொள்ளாதபடி செய்து அவர்களையும் சபைக்குப் பொறுப்புள்ளவர்களாக நடக்க வழியில்லாதபடி செய்திருக்கின்றன. இருந்தும் இந்த அமைப்புகள் தங்களை சபையாகக் கருதி அந்தப்பெயரிலேயே தங்களை இனங்காட்டி ஆத்துமாக்களை உண்மையறியாத, அறிந்துகொள்ள வழியில்லாத ஆத்மீகக் குழப்பத்தில் வைத்திருக்கிறார்கள்.

(5) கூடில்லாக் குருவிகளான கிறிஸ்தவ நிறுவனங்கள் – என் வாழ்க்கையின் அரைவாசிப் பகுதி கிறிஸ்தவ அனுபவத்தை அடைந்து அதில் தொடர்வதாக இருக்கிறது. கிறிஸ்தவனாக வந்த காலத்தில் இருந்தே திருச்சபைக்கு பேராபத்தாக நம்மினத்தில் கிறிஸ்தவ நிறுவனங்கள் இருந்துவருவதை நான் அவதானித்து வந்திருக்கிறேன். நிறுவனங்கள் தங்களுடைய சுயலாபத்துக்காக ஆத்துமாக்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு சபைவாழ்க்கையை இல்லாமலாக்கி விடுகின்றன. பாரம்பரிய சபைகளுக்கு மட்டும் ஒத்தூதி, வேத அடிப்படையில் ஊழியப்பணிபுரியும் சபைகளை உதாசீனம் செய்துவிடுகின்றன. இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே இளமையில் இந்த நிறுவனங்களின் வலையில் விழுந்து இன்றுவரை உறுதியான சபைவாழ்க்கையையும், சீடத்துவத்தையும் அடையாமல் வாழ்ந்துவருகிறவர்கள் என் மனக்கண்ணில் வந்துபோகிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கட்டுக்கோப்போடு இருந்து வேதத்தை மட்டும் நம்பிப் பிரசங்கம் செய்து வளர்ந்து வருகின்ற சபைகள் போன்ற மாதிரி சபைகள் நம்மினத்தில் இந்த நிறுவனங்களை சமாளிக்கும் விதத்தில் என்றுமே இருந்ததில்லை. ஒன்றில் ‘லிபரல்’ பாரம்பரிய சபைகள், இல்லாவிட்டால் உணர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து சத்தியத்தைப் புறக்கணிக்கும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் சபைகள்தான் இருந்தன. இவற்றிற்கு இடையில் தரம்வாய்ந்த நல்ல சபைகள் உருவாகி ஆத்துமாக்களின் கவனத்தை ஈர்த்து அவர்கள் நாடிவரும்படியாக அமையவில்லை. அங்குமிங்குமாக சிறு சபைகள் எழுந்தபோதும் அவை சபை அமைப்பையும், உறுதியான சபை அங்கத்துவத்தையும், விசுவாச அறிக்கைகளையும் கொண்டமையவில்லை. அவற்றின் தலைவர்கள் பக்திவிருத்தியோடு உறுதியான தலைமைத்துவத்தைத் தரத்தவறிவிட்டார்கள். சபை என்ற பெயரில் இயங்கும் அமைப்புகளினதும், தலைமைத்துவத்தின் எதேச்சாதிகாரப் போக்கும் அநேக வாலிபர்களைத் தூரத்தில் நிற்கவைத்துவிடுகிறது. கிறிஸ்தவ நிறுவனங்கள் தொடர்ந்து நம்மினத்துக் கிறிஸ்தவ சூழலை ஆக்கிரமித்து சபைக்கு எதிரியாகவே இயங்கிவருகின்றன.

மேல்வரும் காரணங்கள் திருச்சபை பற்றிய நல்லறிவை ஆத்துமாக்கள் பெற்றுக்கொள்ளவும், திருச்சபைகள் நல்லவிதத்தில் அமையவும் பெருந்தடையாக இருந்துவிடுகின்றன. வேதம் போதிக்கும் சத்தியங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விசுவாசிகளைக் கூட்டி சபை அமைப்பையும், அங்கத்துவ முறையையும், போதகக் கண்காணிப்பையும், ஒழுங்கு நடவடிக்கையையும், ஓய்வுநாள் அனுசரிப்பையும், நம்பக்கூடிய நல்ல தலைமையையும் கொண்டு இயங்க ஆரம்பித்திருக்கும் சில திருச்சபைகளை கடந்த பத்துப் பதினைந்து வருடங்களில் நம்மினம் கண்டுவந்திருக்கின்றது. மாபெரும் கிறிஸ்தவ சாகரத்தில் இவை நீச்சலடிக்கும் சிறு மீன்கள் மட்டுமே. இருந்தாலும் திருச்சபை பற்றிய நம்பிக்கையைக்கொண்டு வைராக்கியத்தோடு இயங்கி வரும் இவையே வருங்காலத்துக்கு வழிகாட்டிகளாக இருக்கமுடியும். இவை சந்திக்கவேண்டிய போராட்டங்களும், முகங்கொடுக்க வேண்டிய இடர்பாடுகளும் நம்மினத்தில் அநேகம். இருந்தாலும், ‘என் சபையைக் கட்டுவேன்’ என்ற கிறிஸ்துவின் உறுதிமொழி மீது நம்பிக்கை வைத்து இருதயத்தைப் பாதுகாத்து இவை தொடர்ந்து திருச்சபைப் பணியை முன்னெடுக்குமானால் எதிர்காலம் நன்றாகத்தான் இருக்கும்.

மேலை நாடுகளில் எந்தவகை அமைப்புகளுக்கும் எதிரான மனப்பான்மை (Anti-institutionalism) சமுதாயத்தில் தலையெடுத்து இன்று கிறிஸ்தவர்கள் மத்தியிலும் வளர்ந்து வருகிறது. அதிகார அமைப்புகளை எதிர்ப்பதும், தனக்காக மட்டும் வாழும் பின்நவீனத்துவ சிந்தனையும் சமுதாயத்தில் குடிகொண்டிருக்கிறது. இவை கிறிஸ்தவர்களையும் பெருமளவுக்குப் பாதித்திருக்கிறது. இந்த மனப்பான்மையால் ‘அமைப்பில்லாத திருச்சபை’யை நாடுகின்ற கிறிஸ்தவ கூட்டம் அங்கே வளருவதைக் காண்கிறோம். மேலைத்தேய சமுதாயம் திருச்சபை வாழ்க்கையை வரலாற்றில் அறிந்து அனுபவித்துவிட்டு இன்று அதைத்தூக்கியெறிந்துகொண்டிருக்கிறது. நம்மினத்திலோ விஷயமே வேறு. திருச்சபை பற்றிய போதனையையே அறியாமலும், அனுபவத்தில் ருசிபார்க்காமலும் அரைகுறைக் கிறிஸ்தவ அறிவைக்கொண்டிருந்து சுயநலத்துக்காக ‘சபை’ என்ற பெயரில் ஆத்மீகப் பணிசெய்யப் புறப்பட்டிருப்பவர்களைத்தான் இங்கு காண்கிறோம். அறியாமையும், சுயநலமும், சுயலாபமுமே நம்மினத்தில் திருச்சபை அமைவதற்குப் பெருந்தடையாக இன்றும் இருந்துவருகின்றன. இந்த நிலைமை மாறவும், திருச்சபை நம்மினத்தில் வேதபூர்வமாக அமைவதற்கும் என்ன வழி? அதை இனி வரவிருக்கும் ஆக்கத்தில் பார்ப்போம்.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 30 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக