இறவா கிறிஸ்தவ இலக்கியம் – தமிழில் ‘மோட்சப் பயணம்’

17ம் நூற்றாண்டு பியூரிட்டன் பெரியவர்களின் பொற்காலத்தைப் பற்றித் திருமறைத்தீபத்தில் ஏற்கனவே எழுதியிருந்தேன். பியூரிட்டன் பெரியவர்களில் ஒருவரும், இங்கிலாந்தைச் சேர்ந்த பாப்திஸ்து போதகருமான ஜோன் பனியன் எக்காலமும் நிலைத்து நிற்கக்கூடிய அநேக ஆவிக்குரிய பியூரிட்டன் இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். பெரும்பாலானவை அவருடைய சிறைவாச காலத்தில் எழுதப்பட்டவை. பனியனைப்பற்றி நான் வெளியிட்டிருந்த இன்னொரு நூலில் (ஜோன் பனியன், சீர்திருத்த வெளியீடுகள், சென்னை) அந்த வரலாற்றை வாசிக்கலாம். அவருடைய நூல்களில் முக்கியமானது மோட்சப் பயணம் (Pilgrim’s Progress). அதுவே ஆங்கில நூலுக்கான, எல்லோருக்கும் பரிச்சயமான தமிழ் தலைப்பு. இதுவரை அந்நூல் ‘மோட்சப் பிரயாணம்’ ‘மோட்சப் பயணம்’ என்ற தலைப்புகளில் தமிழகத்தில் இரண்டு பதிப்பகத்தாரால் தமிழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இம்மொழியாக்கங்கள் பற்றிய விளக்கங்களையும், பனியனின் நூலின் இலக்கிய, இறையியல் மற்றும் நடைமுறைப் பயன்பாடுகளையும் இந்தத் தொடராக்கத்தில் தரப்போகிறேன்.

தன்னுடைய ஆங்கிலப் படைப்புக்கு பனியன் தந்த தலைப்பு ‘The Pilgrim’s Progress from This World, to that Which is to Come’. பனியனின் படைப்புக்களின் சிகரம் என்று இதை அழைக்கலாம். தன் காலத்துக்குப் பிறகு அதைக் கடவுள் எந்தவிதமாகவெல்லாம் பயன்படுத்தப் போகிறார் என்பது பனியனுக்குத் தெரிந்திருந்திருக்காது. பனியனின் எண்ணமெல்லாம் தன் காலத்து மக்களுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை இறையியல் குறைவைக்காமல் புனைவிலக்கியத்தின் மூலமாக விளக்க வேண்டுமென்பதுதான். நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்பு மோட்சப் பயணம் எத்தனைப் பெரிய இமாலயமாக உருவெடுத்து இன்று நம் கண்முன் நிற்கிறது!

உலகத்தில் அதிகமாக ஆங்கிலத்தில் விற்பனையாகின்ற நூல் பரிசுத்த வேதாகமம். அதற்கு அடுத்தபடியாக அதிகமாக விற்பனையாகி வரும் ஒரே நூல் பனியனின் மோட்சப் பயணம். மோட்சப் பயணம் உலகத்து மொழிகளில் 200க்கு மேலானவைகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு கிறிஸ்தவர்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. அது ஒரு காலத்திலும் அச்சிலில்லாமல் இருந்ததில்லை. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முதல் புனைவு நூல் என்றும் இது கருதப்படுகிறது. வேதத்தைத் தவிர இந்தவிதத்தில் வேறொரு நூல் இத்தனை மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்டுவரவில்லை. இதுபற்றிய புள்ளிவிபரங்கள் அதிசயிக்கவைக்கின்றன. இந்திய மொழிகள் பலவற்றிலும் மோட்சப் பயணம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று அதைத் தமிழில் மொழியாக்கம் செய்த சாமுவேல் பவுல் ஐயர் 1882 ல் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜோன் பனியன் மோட்சப் பயணத்தை 1678ல் எழுதினார். அவரது நீண்ட முதல் சிறைவாச காலத்திலா அல்லது இரண்டாவது ஆறுமாதகால சிறைவாசத்தின்போதா அதை எழுதினார் என்பதில் வரலாற்றாசிரியர்களிடம் கருத்துவேறுபாடுகள் இருந்து வருகின்றன. ஆங்கில மூலம் இரண்டு பாகங்களைக் கொண்டதாக எந்த அதிகாரப் பிரிவுகளும் இல்லாமல் தொடரும் புனைவாக இருக்கின்றது. அதன் இரண்டாவது பாகம் 1684ல் வெளியிடப்பட்டது. பனியனின் வாழ்நாளில் மோட்சப் பயணம் 1678ல் இருந்து 1688ல், பனியன் இறக்கும்வரை பதின்மூன்று பதிப்புகளாக வெளிவந்து 100,000 பிரதிகள் அச்சாகியிருந்தன. இரண்டு விற்பனையாளர்கள் 1690ல், 10,000 பிரதிகளுக்கு முன்பதிவு செய்திருந்தனர் (Pilgrim’s Progress, Barry E. Horner, 2003). வெகுவிரைவில் அது 17ம் நூற்றாண்டின் பிரபல்யமான உரைநடை புனைவு நூலாகப் பெயர்பெற்றது.

இறவா இலக்கியமான மோட்சப் பயணம் தமிழில் 18ம் நூற்றாண்டில் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பது தமிழ் கிறிஸ்தவத்திற்கு கிடைத்திருக்கும் ஆசீர்வாதம். தமிழினத்துக் கிறிஸ்தவத்தில் வாசிப்புப் பஞ்சம் நிலவி வருகின்றபோதும், மோட்சப் பயணத்தைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்துவைத்திருக்கிறவர்கள் இருக்கிறார்கள். அதை வாசித்திருக்கின்ற அநேகரை நான் சந்தித்திருக்கின்றேன். வேறு எந்தப் புத்தகத்தைப் பற்றித் தெரிந்திராமல் இருந்தாலும் இதைப்பற்றி அறிந்தோ அல்லது வாசித்தோ இருக்கிறவர்கள் நம்மத்தியில் நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் இருக்கிறார்கள். மோட்சப் பயணம் கிறிஸ்தவ புனைவிலக்கியமாக இருந்தபோதும், அது தமிழிலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கும்படி அதன் மகுடத்தில் இருக்கும் இரத்தினக்கற்களில் ஒன்று. தமிழில் பெருமளவுக்குத் தரமான கிறிஸ்தவ இலக்கியங்கள் இன்று காணப்படாதபோதும், இருப்பவற்றில் தலையாயது மோட்சப் பயணம் என்பது என் கருத்து. உண்மையில் இதை அறிந்துணர்ந்து ஆனந்திப்பவர்கள் வெகுசிலரே.

தமிழினப் போதகர்களில் இதை வாசித்து அனுபவித்திருப்பவர்களின் தொகையை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் மோட்சப் பயணத்தை வாசித்தனுபவித்திராத ஒருவர் சீர்திருத்த சபைகளில் போதகராக இருப்பது விதிவிலக்கு. 18ம் நூற்றாண்டில் இருந்து மோட்சப் பயணம் தமிழில் இருந்துவருகிறபோதும், அதில் ஆர்வமும், அக்கறையும் காட்டிப் பெருமிதமடையும் பிரசங்கமேடைகளோ, பிரசங்கிகளோ, பதிப்பாளர்களோ, ஆத்துமாக்களோ நம்மினத்தில் இருள் கம்மிய வானில் இருந்திருந்து தலையைக் காட்டி மின்னும் நட்சத்திரத்தைப்போலத்தான் இருக்கிறார்கள். தங்கமுட்டைக்கு மேல் அமர்ந்திருந்து அது இருப்பதே தெரியாமல் வாழ்கிறது நம்மினத்துக் கிறிஸ்தவம். மோட்சப் பயணம் பற்றிய இந்த வரலாற்று, இலக்கியத் திறனாய்வு உங்கள் கண்களைத் திறக்கட்டும்.

தமிழில் ‘மோட்சப் பயணம்’

நேரடியாகத் தமிழில் உரைநடையாக மொழியாக்கம் செய்யப்பட்டு இன்று அச்சில் இருந்திருந்து தலையைக் காட்டுவது இரண்டு மொழியாக்கங்கள் மட்டுமே. இவையும் தொடர்ச்சியாக அச்சில் இருப்பதில்லை. இன்னொன்று, மோட்சப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு ஹென்றி அல்பிரட் கிருஷ்ணபிள்ளை என்பவரால் வரையப்பட்ட இரட்சணிய யாத்திரிகம் என்ற காப்பியம். அது தமிழுக்கு கம்பராமாயணத்தைப்போலப் பெருமை சேர்க்கும், அதற்கினையான காப்பியம். (இந்த நூல்பற்றி இன்னுமொரு ஆக்கத்தில் விளக்கவிருக்கிறேன்.) மோட்சப் பயணத்தின் தமிழாக்க வரலாற்றையும், அம்மொழியாக்கத்தைச் செய்தவர்கள் பற்றியும், மொழியாக்கத்தின் தன்மைகளையும் இனி விளக்கப்போகிறேன். அதற்கான ஆய்வு எனக்குச் சில இடரல்களையும், அதேநேரம் பல இனிய அனுபவங்களையும் தரப்போகிறது என்பது ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை.

பதினாறு வருடங்களுக்கு முன்பு, தமிழில் அச்சில் இருக்கும் மோட்சப் பயண மொழியாக்கத்தை தற்கால வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வாசிப்பனுபவத்தைத் தூண்டிவிட வேண்டும் என்ற ஆவலில் கிறிஸ்தவ புத்தகக்கடைகளில் தேடியபோது ஓரிடத்திலும் நூல் கிடைக்கவில்லை. இறுதியில், சென்னை, சுவிசேஷ ஊழிய நூல்நிலையத்தை (ELS, Chennai) சகோதரர் ஜேம்ஸ் மூலமாகத் தொடர்புகொண்டேன். அவர்களிடமும் நூல் இருக்கவில்லை. அவர்களை ஒருவிதமாக சம்மதிக்கவைத்து, ஒரு பதிப்பை வெளியிட்டால் அதில் நான் 400 பிரதிகள் வாங்கிவிடுகிறேன் என்று வாக்குறுதியளித்து, அதன்படி அச்சிட்டபிறகு 400 பிரதிகளை வாங்கி அநேகரை வாசிக்கும்படி ஊக்குவித்த கதை இப்போது நினைவுக்கு வருகிறது. இது நடந்தது 2005ல். அதற்குப் பிறகு 2018ல் இன்னொரு பதிப்பை அவர்கள் வெளியிட்டிருப்பதாக அறிந்தேன். உண்மையில் அப்போது எனக்கு இவர்கள் வெளியிட்ட மொழியாக்கத்திற்கு முன்னதாக முதல் முதல் வெளிவந்திருந்த (1882) மொழியாக்கத்தைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. இரண்டு மொழியாக்கங்களுக்கும் இடையில் இருக்கும் சிறப்பு அம்சங்களைப் பற்றியும், குறைபாடுகளைப் பற்றியும் நான் அறிந்திருக்கவில்லை. அதை இந்தத் தொடராக்கத்தில் விளக்கத் தீர்மானித்திருக்கிறேன்.

தீர்க்கதரிசன அடையாள நூலல்ல

கடந்த வருடம் சிரிப்பை உண்டாக்கும் ஒரு விஷயம் நிகழ்ந்தது. இணையதளத்தில் சில விபரங்களை நான் தேடிக்கொண்டிருந்தபோது மோட்சப் பயணத்துக்கு விளக்கமளிக்கும் ஒரு தளத்தைக் கண்டேன். அது யோபு அன்பழகன் என்பவருடையது. ஜோன் பனியனின் நூலை, அது மறைபொருள் நூல், தீர்க்கதரிசன நூல் என்றும், தனக்குப் பரிசுத்த ஆவியானவர் அந்நூலின் கருத்தைத் தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தினார் என்றும் அவர் அதில் விளக்கியிருந்தார். அதுவும் தான் எழுதும்போது, இயேசு தன் கையைப்பிடித்து நூல் முடியும்வரையும் அழைத்துப்போன காட்சியும் தனக்குத் தரிசனமாகத் தரப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். அத்தோடு, அதை விளக்கவுரை எதுவும் இல்லாமல் புரிந்துகொள்ள முடியாது என்றும் கூறியிருக்கிறார். அவருக்கு அது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கிறிஸ்தவ சுவிசேஷ புனைவு இலக்கியமென்பதும், அடையாளமொழி என்பது எந்த மொழிக்கும் உரிய அணிவகைகளில் ஒன்று, கிறிஸ்தவ வேதத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதும் தெரிந்திராமல் இருந்திருப்பது ஆச்சரியமே. வேத தீர்க்கதரிசன நூல்களில் ஒன்றைப் போன்றதாகக் கணித்து மோட்சப் பயணத்துக்கு அவர் விளக்கமளித்திருக்கிறார். இதுபற்றி அவருக்கு நான் இமெயில் கடிதம் எழுதி என் கருத்தைத் தெரிவித்தேன். அதுபற்றி என்னோடு விவாதம் செய்யவிரும்பவில்லை என்று சொல்லி அதைத் தவிர்த்துவிட்டார். இப்படி பனியனின் நூலை தெய்வீக மறைபொருள் நூலாகத் தவறாகக் கருதி வருகிறவர்கள் நம்மினத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கிறார்கள் என்பதும் வருந்தத்தக்கது.

மோட்சப் பயணம் கிறிஸ்தவ வெளிப்படுத்தலல்ல.

மோட்சப் பயணம் பரலோகத்தில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட வெளிப்பாடல்ல. வேத வெளிப்படுத்தல் நேரடியாகப் பரிசுத்த ஆவியினால் மனிதர்கள் எழுதும்படிக் கொடுக்கப்பட்டது (2 தீமோத்தேயு 3:16). இந்த வசனத்தில் பவுல் கூறுவதுபோல் மோட்சப் பயணம் ‘ஆவியினால்’ அருளப்படவில்லை (not an inspired book). கிறிஸ்தவ வேதம் மட்டுமே ஆவியினால் அருளப்பட்டது. பனியன், பவுலைப்போல ஆவியினால் வழிநடத்தப்பட்டு அவரிடம் இருந்து இந்தப் புனைவைப் பெற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, இது வேதநூலல்ல. வேதத்தில் காணப்படும் நூல்களைப்போல இதைக் கருதக்கூடாது. வேதத்தில் தவறுகளுக்கும், குறைபாடுகளுக்கும் இடமில்லை. வேதம் பூரணமானது; பனியனின் நூல் பூரணமானதல்ல. அதை பனியனே நூலுக்கான முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். நூலில் அடையாளமொழியை பனியன் பயன்படுத்தியிருந்தபோதும் மோட்சப் பயணம் தீர்க்கதரிசனம் அல்ல. பனியனின் நூலை வேதத்தீர்க்கதரிசனத்தைப் போலக் கருதவோ, பயன்படுத்தவோகூடாது. மோட்சப் பயணம் தீர்க்கதரிசன நூல் என்ற புரளியை எவர் கட்டிவிட்டதோ தெரியாது. நம்மினத்துப் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் குழுவினர் மத்தியில் அந்த எண்ணம் இருந்து வருவதாக அறிகிறேன். யோபு அன்பழகன் என்பவர் இதைத் தீர்க்கதரிசன நூல் என்று குறிப்பிட்டிருப்பதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். உலக வரலாறோ, கிறிஸ்தவ வரலாறோ தெரியாதவர்களின் கட்டுக்கதையே இது தீர்க்கதரிசன நூல் என்பது.

மோட்சப் பயணம் கிறிஸ்தவ புனைவிலக்கிய நூல்.

கிறிஸ்தவ வேத சத்தியங்களைத் தொகுத்து அவற்றைப் புனைவிலக்கியமாக, உரைநடையில் பனியன் நமக்குத் தந்திருக்கிறார். இது ஒரு இறையியல் புனைவிலக்கியம் (Theological Novel). இந்தவகையிலான கிறிஸ்தவ புனைவிலக்கியங்கள் ஆங்கிலத்தில் காணப்படுகின்றன. மோட்சப் பயணம் இந்தவகையில் முதலாவது. சீர்திருத்த போதகரான ரிச்சட் பெல்ச்சர் என்பவர் வேதத்தின் இறையியல் போதனைகளை புனைவிலக்கியமாக 20 நூல்களில் புனைந்திருக்கிறார். இதில் முதலாவதாக வந்த ‘கிருபையின் பயணம்’ (A Journey in Grace) என்ற நூலில், வேத இறையியல் சிந்தனையில்லாதிருந்த ஒரு இளம் போதகன், கிருபையின் போதனைகளைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உத்வேகத்தோடு வேதத்தை ஆராய்ந்து எப்படித் தெரியவேண்டியவற்றையெல்லாம் தெரிந்துகொண்டான் என்பதைப் புனைவிலக்கியமாக உரைநடையில் பெல்ச்சர் வரைந்திருக்கிறார். பெல்ச்சரின் கதாபாத்திரங்களை அவரே உருவாக்கினார். பெல்ச்சரின் நூல்கள் ‘ஆவியினால் அருளப்படவில்லை.’ அவை அவருடைய சொந்தப் படைப்புக்கள். பெல்ச்சர் செய்ததையே ஜோன் பனியனும் தன் நூலில் செய்திருக்கிறார்.

மோட்சப் பயணம் நூலுக்கு, எல்லா மொழிகளிலுமே காணப்படும் அடையாளமொழி (Allegory) எனும் இலக்கிய வகையை (Jenre) பனியன் தெரிந்துகொண்டிருக்கிறார். அடையாள மொழி, அடையாளங்களைப் பயன்படுத்திக் கதை சொல்லும் ஒரு இலக்கியப் பாங்கு. அதாவது, தான் சொல்ல வருகின்ற கதையைத் தேர்ந்தெடுத்த பலவித அடையாளங்களைப் பயன்படுத்தி அதன் மூலம் கதையை எழுதுகிறவர் விளக்குவார். பனியன் தன் நூலில் அடையாளங்கள் மட்டுமல்லாமல், உருவகங்களையும், கவிதைகளையும், மேலும் பல்வேறு இலக்கிய அணிவகைகளையும் பயன்படுத்தியிருக்கிறார். ஒரு புனைவிலக்கியத்தில் இந்தளவுக்கு அணிவகைகளைப் பயன்படுத்தியவர்கள் எவரும் இல்லை எனலாம். இதன் மூலம், ஒரு மனிதன் சுவிசேஷத்தைக் கேட்டுப் பாவத்திலிருந்து தெய்வீக மறுபிறப்பின் மூலம் விடுதலை அடைந்து பரலோக வாசலை அடையும்வரையிலான, அவனுடைய இந்த உலகத்து ஆவிக்குரிய பயணத்தின் அனுபவங்களை வரிசைக் கிரமமாகத் தொகுத்து பனியன் நூலில் விளக்கியிருக்கிறார். நூலில் சுவிசேஷம் நிரம்பிவழிகிறது; அதேநேரம் விடாமுயற்சியோடு காணப்பட வேண்டிய கிறிஸ்தவ வாழ்க்கைபற்றிய போதனையும் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. நூலில் காணப்படும் அத்தனை சம்பவங்களையும் பனியன் சொப்பனத்தில் (கனவு) கண்டதாகக் கூறியிருக்கிறார். உண்மையில் அத்தகைய கனவை பனியன் ஒருபோதும் காணவில்லை. கனவில் கதை வந்ததாக பனியன் சொல்லுவது அவர் தன் நூலுக்குத் தெரிந்துகொண்டிருக்கும் ஒரு இலக்கியவகை; அது புனைவின் ஓர் அங்கமாக இருக்கிறது. இந்தவிதத்தில் ஆங்கிலத்திலும், தமிழிலக்கியத்திலும் எத்தனையோ நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இது ஒன்றும் புதிதல்ல.

வேத அடையாள மொழி நூல்களைப் (உதாரணம்: தீர்க்கதரிசன நூல்கள், வெளிப்படுத்தின விசேஷம் போன்றவை) புரிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவரின் துணை நமக்குத் தேவையாக இருப்பதுபோல், பனியனின் நூலைப் புரிந்துகொள்ள நேரடியாக ஆவியானவர் நமக்கு அவசியமில்லை. பனியனின் நூல் ‘ஆவியினால் அருளப்படவில்லை’ (It is not an inspired book); நூல் முழுவதையும் பனியனே சுயமாக எவருடைய உந்துதலோ, வழிநடத்தலோ இன்றி தன் சுயமுயற்சியில், தன்னுடைய அறிவையும், ஆற்றலையும், கற்பனா வளத்தையும் பயன்படுத்திச் சிந்தித்து எழுதியிருக்கிறார். அவர் கிறிஸ்தவராக இருந்தபடியால் நிச்சயம் ஆவியானவர் எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவாக உதவுவதுபோல் அவருக்கும் உதவியிருக்கிறார். மோட்சப் பயணத்தை வாசித்துப் புரிந்துகொள்ளுவதற்கு, வேதத்தைப் புரிந்துகொள்ள நாம் ஆவியில் தங்கியிருந்து ஜெபிப்பதுபோல் நாம் ஆவியானவரிடம் ஜெபிக்க வேண்டிய அவசியமுமில்லை.

வேத இறையியல் புதினம் (Theological Novel)

பனியனின் புனைவிலக்கியம் சாதாரண மனித எழுத்தாக இருந்தபோதும், அதற்குப் பரிசுத்த வேதமே முழு ஆதாரம். நூல் விளக்கும் புனைவையும், அதன் கதாபாத்திரங்களையும் பனியன் வேதத்தில் இருந்தே பெற்றுக்கொண்டிருக்கிறார். இது வேதம் சார்ந்த மனிதப் புனைவு நூல். இந்தக் கிறிஸ்தவப் புனைவிலக்கியத்தில் பனியன் வேதசத்தியங்களின் அடிப்படையில் அநேக கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார். இந்த நூலின் கதாபாத்திரங்களை வேதத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மனிதர்கள் மூலம் அடையாளம் கண்டுகொள்ளலாம். உதாரணத்துக்கு, கிறிஸ்தியான்; வேதம் விளக்குகின்ற மறுபிறப்படைந்த ஒரு மனிதன். கிறிஸ்தீனாள்; மறுபிறப்படைந்த பெண், கிறிஸ்தியானின் மனைவி. சுவிசேஷகன்; நற்செய்தியை அறிவிப்பவன். திடநம்பிக்கை; உறுதியான விசுவாசமுள்ள புதிய கிறிஸ்தவன். மாயாபுரி; உலக சுகங்களையும், இன்பங்களையும் கொண்டிருக்கும் இடம். மோட்சப் பயணத்தின் கதாபாத்திரங்களையும், இடங்களையும் வாசகர்கள் பிரச்சனையில்லாமல் வேதத்தில் இருந்தே அடையாளம் கண்டுகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், தன் புனைவை விளங்கிக்கொள்ளுவதற்கு அவசியமாக பனியன் நூல் முழுவதும் வேத வசனங்களைத் தேவையான இடங்களிலெல்லாம் கொடுத்து, தான் எதை விளக்குகிறேன் என்பதையும் நாம் அறிந்துகொள்ளும்படித் தெளிவாக விளக்கியிருக்கிறார். பனியனின் நூலில் எந்தப் புதிருக்கும் இடமில்லை. மோட்சப் பயணம் ஒரு புனைவிலக்கியமாக இருந்தாலும், அது வேத சத்தியங்களையும் இறையியல் போதனைகளையும் எந்தத் தவறுமில்லாமல் புனைவாக உருவகித்து எழுதப்பட்டிருக்கிறது. பனியனின் நூலைப் பற்றி விளக்கும்போது பெரும் பாப்திஸ்து பிரசங்கியான ஸ்பர்ஜன் சொல்லுகிறார், ‘பனியனின் நூல் முழுவதும் வேதத்தில் தோய்த்து எழுதப்பட்டிருக்கிறது. அவருடைய சரீரத்தில் எந்த இடத்தில் ஒரு ஊசியால் குத்தினாலும், வேதம் இரத்தமாக வெளிவரும்.’ வேதமறிந்தவர்களுக்கு பனியனின் நூலைப் படித்துப் புரிந்துகொள்ளத் தடையே இருக்காது.

வேதத்தின் வெளிப்படுத்தல் விசேஷத்தை விளங்கிக்கொள்ள ஆவியானவருடைய துணை தேவைப்படுவதுபோல் பனியனின் புனைவிலக்கியத்தை விளங்கிக்கொள்ளத் தனிப்பட்ட முறையில் பரிசுத்த ஆவியானவர் ஒருவருக்குத் தேவையில்லை. கிறிஸ்தவ கண்ணோட்டத்தோடு, வேதத்தோடு அதை ஒப்பிட்டுப் படித்தாலே போதும். வேத வசனங்களைப் புனைவில் வாரியிறைத்திருக்கிறார் பனியன். புனைவின் விளக்கத்தையும் நூலில் பனியன் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். தான் பயன்படுத்தியிருக்கும் அத்தனைப் பாத்திரங்களுக்குமான விளக்கத்தையும், இறையியல் விளக்கங்களையும் பனியன் அடிக்குறிப்பில் தந்திருக்கிறார். அவர், அடையாளமொழி நடையில் அதை உருவகித்து எழுதியிருந்தபோதும் அதை விளங்கிக்கொள்ளத் தேவையான அனைத்தும் நூலுக்குள்ளேயே பொதிந்து காணப்படுகின்றன. சாதாரண கிறிஸ்தவ வாசகனுக்கு அதைப் புரிந்துகொள்ளுவதில் எந்த இடறலும் இருக்காது. நான்கு நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் உலக முழுதும் மோட்சப் பயணத்தை வாசித்து இலகுவாக விளங்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

பெரி ஹோனர் (Barry E. Horner) எனும் அமெரிக்க போதகர் மோட்சப் பயணத்தின் விசேஷ அம்சங்களையும், இலக்கியம், கவிதைகள், இறையியல் சிறப்பம்சங்கள், போதக நுணுக்கங்கள், அதில் கிறிஸ்து வெளிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், அதன் சுவிசேஷத்தின் தன்மை போன்றவற்றை விளக்கி ஒரு நல்ல நூலை வெளியிட்டிருக்கிறார். நூலைப் புரிந்துகொள்ள ஹோனரின் கையைப்பிடித்து இயேசு அழைத்துச் செல்லவில்லை. ஹோனருக்கு விசேஷ தரிசனங்கள் தேவையாயிருக்கவில்லை. நம்மினத்துக் கிறிஸ்தவர்களின் DNAயில் அமானுஷ்ய அனுபவங்களைத் தேடி அலையும் தன்மை அதிகமாகவே கலந்திருப்பதால் அவர்கள் எதையும் நேரடியாகப் பரலோகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளவே அலைகிறார்கள். நான் ஏற்கனவே குறிப்பிட்ட யோபு அன்பழகனில் நிலையும் அதுவே.

1882ல் வந்த தமிழ் மொழியாக்கத்தில் சாமுவேல் பவுல் ஐயர் பனியனின் எச்சரிக்கையைப் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்,

“வாசிக்கிறவனே, இப்பொழுது என் சொப்பனத்தை உனக்குச் சொல்லிப்போட்டேன். அதன் தாற்பரியத்தை எனக்காவது, உனக்காவது, உன் பிறனுக்காவது விவரிக்கக் கூடுமா என்று பார். ஆனால், தப்பாய் மாத்திரம் தாற்பரியம் (அர்த்தம்) பண்ணாதே. தப்புத் தாற்பரியம் உனக்கு நன்மையை உண்டாக்குகிறதற்குப் பதில் தீமையையே உண்டாக்கும். மேலும் என் சொப்பனத்தின் வெளித்தோற்றங்களில் உன் மனதை வெகுதூரம் செலுத்திவிடவேண்டாம். என் உவமானங்களும், ஒப்பனைகளும் உன்னைச் சிரிக்கப்பண்ணவும், உன் மனதைக் குழப்பிப்போடவும் வேண்டாம்; இந்தக் குணத்தைப் பையன்களுக்கும், பைத்தியக்காரருக்கும் விட்டுவிட்டு, நான் எழுதும் சங்கதிகளின் சாரத்தை மாத்திரம் பிடித்துக்கொள். திரையை நீக்கிவிட்டு திரைச்சீலைக்குள் பார். என் ஒப்பனைகளை உருட்டிப் புரட்டிப் பரிசோதனை செய்; அப்போது உத்தம இருதயத்தை ஏவும்படியான ஆதாரங்களைக் கண்டடைவாய். அதில் ஏதாவது மாசுகளைக் கண்டடைந்தால் அவைகளைத் தூர எறிந்துவிட அஞ்சவேண்டாம்; ஆனால் அதிலுள்ள பொன் பொடிகளைக் கூட எறிந்துபோடாதே. என் பொன் கல்லோடு கலந்திருந்தால்தான் என்ன? கொட்டையைத் தொட்டு பழத்தை எறிந்துவிடுவார் இல்லையே. ஆனால் எல்லாவற்றையும் நீ எறிந்துவிடுவது உண்டானால், நான் மறுபடியும் ஒரு தரம் சொப்பனங் காணவேண்டியதே அல்லாமல் வேறு வழி இன்னதென்று எனக்கே தெரியவில்லை என்பதே.”

பனியனின் வார்த்தைகளிலிருந்து, அவருடைய புதினத்தை எவரும் புரிந்துகொள்ள முடியும் என்றும், ஆனால், அதற்குத் தப்பாய் அர்த்தம் கொடுக்கக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கை செய்திருப்பதைக் கவனியுங்கள். அத்தோடு இந்தப் புனைவு ஆவியால் அருளப்பட்டதாக, தீர்க்கதரிசனமாக இருந்திருந்தால் பனியன், என் எழுத்துக்களில் ‘ஏதாவது மாசுகளைக் (குறைகளைக்) கண்டடைந்தால் அவைகளைத் தூர எறிந்திட அஞ்சவேண்டாம்’ என்று நிச்சயம் எழுதியிருந்திருக்க மாட்டார். பனியனின் வார்த்தைகளில் இருந்தே இந்த நூல் அவருடைய சொந்தக் கற்பனையில் உருவான இறையியல் புதினம் என்பதை அறிந்துகொள்ளலாம்.