சிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை

S1இதுவரை செய்திராத ஒன்றை இப்போது செய்யலாமன்றிருக்கிறேன். என்னுடைய பயணங்களின்போது நிகழ்ந்த சம்பவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளப் போகிறேன். அதனால் இதைப் பயணக்கட்டுரை என்று எண்ணிவிடாதீர்கள். அந்தக் காலத்தில் எழுத்தாளர் சாவி போன்றோர் பயணக்கட்டுரைகளை எழுதிப் புகழ் பெற்றார்கள். இன்றும் அப்படி எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். இதில் ஆன்மீகப் பயணக்கட்டுரைகளும் அடங்கும். ஊரைவிட்டு ஊர் போவதும், நாடுவிட்டு நாடு போவதும் எல்லோராலும் இயலக்கூடிய காரியமாக இருந்த நாட்களல்ல அவை. வசதியுள்ளவர்களால் மட்டுமே அதைச் செய்ய முடிந்தது. அதனால் சில எழுத்தாளர்கள் பயணங்கள் செய்து தாங்கள் பார்த்தவற்றையும், அனுபவித்தவற்றையும் வாசகர்களோடு பகிர்ந்து அவர்களை மகிழ வைத்தார்கள். அத்தகைய பயணக் கட்டுரைகள் அன்று வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன. இன்று பயணம் செய்வது என்பது ஒரு சிலரின் ஏகபோக உரிமையாகவோ, வசதியாகவோ இல்லை; எவரும் எங்கும் போய்வரக்கூடிய விதத்தில் வாழ்க்கை வசதிகளும், போக்குவரத்து வசதிகளும், சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டிருக்கின்றன. தமிழன் இல்லாத தேசமில்லை என்றளவுக்கு தமிழர்கள் தூர தேசங்களுக்குப் போய் வருகிறார்கள். அப்படியானால் நான் எதைப் புதிதாக எழுதிவிடப்போகிறேன் என்று நிச்சயம் கேட்பீர்கள். நான் எழுதப்போவது நான் பயணம் செய்த நாடுகளைப்பற்றியல்ல; பார்த்த இடங்களைப் பற்றியல்ல, நான் பார்த்த மனிதர்களைப்பற்றி, அவர்களிடம் நான் பேசி அறிந்துகொண்ட விஷயங்கள் பற்றி. இப்படிச் சொல்லுகிறபோது இதில் எங்கே வேதத்திற்கும். சத்தியத்திற்கும் இடமிருக்கப்போகிறது என்ற நினைப்பும் உங்களுக்குத் தோன்றும். வாசித்துவிட்டு அதற்குப் பிறகு பகிர்ந்துகொள்ளுங்கள் உங்கள் கருத்தை.

S3-1என்னுடைய ஊழியப்பணிகள் கடந்த முப்பது வருடங்களுக்குள் என்னை உலகில் பல நாடுகளுக்கு அழைத்துப் போயிருக்கின்றன. அப்படிப் போயிருக்கும் தேசங்களில் அடிக்கடிப் போய்வந்த ஒரு நாடு சிங்கப்பூர். கணக்கற்ற தடவைகள் அங்கு போய் வந்திருக்கிறேன். ஏனைய ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்குப் போக அங்கு போய்தான் நான் விமானத்தைப் பிடிக்க வேண்டும். அதற்குக் காரணம் சிங்கப்பூர் விமானத்தில் நான் பயணம் செய்வதுதான்.

சிங்கப்பூர் உலகின் சிறிய நாடுகளில் ஒன்று. 5 கோடி மட்டுமே மக்கள் தொகை. நியூசிலாந்தைவிடக் கொஞ்சம் அதிகமான மக்கள் தொகை. ஆனால் நிலப்பரப்பைப் பொறுத்தவரையில் நியூசிலாந்தைவிட மிகச் சிறிய நாடு. சீன, மலாய் மக்களைத் தவிர இந்தியர்களும் அங்கு வாழ்கிறார்கள். இந்தியர்களில் தமிழர் தொகை அதிகம். அங்கு சீன, மலாய், தமிழ், ஆங்கில மொழிகள் நான்கும் அதிகாரபூர்வமான மொழிகளாக இருக்கின்றன. இன வேறுபாடும், மொழிப்பிரச்சனையும் கிடையாது. அதற்கு அரசு இடங்கொடுப்பதில்லை. எல்லோருக்கும் சம அங்கீகாரம். வேலை காரணமாக மலேசியா, இந்தியா, மியன்மார், பங்களாதேஷ், நேபாளம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து அநேகர் வேலை அனுமதிப் பத்திரம் பெற்று சிங்கப்பூரில் வேலை செய்கிறார்கள்.

S4-1உணவுக்கும், தண்ணீருக்கும் சிங்கப்பூர் வேறு நாடுகளிலேயே தங்கியிருக்கிறது. சிங்கப்பூரில் உணவுக்காக எதுவும் பயிரிடப்படுவதில்லை. தண்ணீரும் அங்கு கிடையாது. மலேசியாவிலும், இந்தோனேசியாவிலும் இருந்து தண்ணீர் வருகிறது. பணத்தைக் கொடுத்து வாங்கும் அந்தத் தண்ணீரை சிங்கப்பூர் சுத்திகரித்து பயன்படுத்திக்கொள்கிறது. அதேபோல்தான் பணங்கொடுத்து உணவுப் பொருட்களையும் இறக்குமதி செய்கிறார்கள். இந்த இக்கட்டான நிலைமை சிங்கப்பூரைக் கடினமாக உழைக்க வைத்திருக்கிறது. அப்படி உழைக்காவிட்டால் அவர்களுக்கு தண்ணீரும் உணவும் கிடைக்க வழியில்லை. கடினமாக உழைப்பது மட்டுமல்ல, அரசியலையும் இதற்கேற்ற முறையில் சிங்கப்பூர் அமைத்துக்கொண்டிருக்கிறது. மலேசியாவையும், இந்தோனேசியாவையும் அவர்கள் பகைத்துக்கொள்ள வழியில்லை. தண்ணீருக்காக அந்நாடுகளோடு நட்போடிருப்பது அவசியம். வெறும் சாதாரண உழைப்பு அவர்களுக்குப் போதாது; மிகக் கடினமாக உழைக்க வேண்டும். ஐந்து கோடி மக்களுக்கு உணவை இறக்குமதி செய்ய அவர்களுக்கு பணம் தேவை. அதற்காக நாட்டில் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். உலகில் விமானத்துறையிலும், கப்பல் போக்குவரத்திலும் சிங்கப்பூர் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இவை இரண்டும் நாட்டுக்குத் தேவையான பணத்தைக் கொண்டுவருகின்றன. அத்தோடு தொழில் துறை, வர்த்தகத்திலும் அது வளர்ந்து நிற்கிறது. நட்போடு வர்த்தகம் செய்யக்கூடிய, அதிக வாய்ப்புகள் கொண்ட நாடுகளில் முதலிடத்தை வகிக்கிறது சிங்கப்பூர் (விக்கிபீடியா). சிங்கப்பூர் விமானத்துறைக்கும், விமான நிலையத்திற்கும் இணையாக நான் வேறு எந்த நாட்டையும் பார்த்ததில்லை. அந்தளவுக்குப் பயணிகளின் வசதிகளுக்கும் தேவைகளுக்கும் முதலிடத்தைக் கொடுத்து இவை இரண்டும் இயங்கி வருகின்றன. சிங்கப்பூர் விமான நிலையம் எவரையும் குழப்பத்துக்கு ஆளாக்காதபடி வடிவமைக்கப்பட்டு பயணிகளுக்குத் தேவையான சகல வசதிகளோடும் இயங்கி வருகின்றது. அது ஒரு குட்டி நகரம். அங்கு பணி செய்பவர்களின் நட்பான இனிய பேச்சும் நடத்தையும் எவரையும் கவரும். பயணிகளை அவர்கள் கருத்தோடு கவனித்துக் கொள்ளுகிறார்கள். அதுமட்டுமல்ல எல்லாக் காரியங்களையும் விமானநிலையத்தார் துரித நேரத்தில் முடித்துவிடுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இந்தத்துறை சிங்கப்பூரின் வருமானத்திற்கு மிக மிக அவசியமாக இருப்பதால்தான்.

S6சிங்கப்பூர் டாக்சி ஓட்டுனர்கள் யாரையும் ஏமாற்றுவதில்லை. மீட்டர்படி பணம் கட்ட வேண்டும். நேரத்துக்கு வந்து நேரத்துக்கு அழைத்துப் போவார்கள், பயமில்லாமல் டாக்சியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அநேக தடவைகள் டாக்சி ஓட்டுகிறவர்களோடு பேச்சுக்கொடுத்து விபரங்கள் அறிந்துகொண்டிருக்கிறேன். இந்த முறை ஒரு இளம் டாக்சி ஓட்டுனரோடு பேச்சுக் கொடுத்தேன். சிங்கப்பூர் இந்நாட்களில் எப்படி இருக்கிறது? என்று கேட்டேன். அதற்கு அவர், ‘வேலைப் பிரஷர் அதிகம்’ என்றார். உண்மைதான். அவர்கள் அந்தளவுக்கு அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறது. கடின உழைப்பு அவர்களுக்கு வசதியான வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறது. சோம்பேரிகளுக்கு சிங்கப்பூர் ஒத்துவராது. எல்லாவற்றிற்கும் மற்ற நாடுகளில் தங்கியிருக்க வேண்டியிருப்பதால் சிங்கப்பூர் மக்கள் மற்ற தேசத்தவரைவிட எல்லா விஷயங்களிலும் முன்னுக்கு நிற்கும் வகையில் திட்டங்களைப் போட்டு இயங்கி வருகிறார்கள். அதற்கெல்லாம் நிலையான குழப்பமற்ற அரசும், அரசியலும் தேவை இல்லையா? சிங்கப்பூரில் ஒரு கட்சி ஆட்சிதான் நடக்கிறது. இருந்தாலும், உழைப்புக்கும், நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கும் முதலிடத்தைக் கொடுத்து அரச நடவடிக்கைகள் செயல்படுகின்றன. அமைச்சர்களும், அரச உயர்பதவிகளில் இருப்பவர்களும் திறமை அடிப்படையிலேயே தெரிவுசெய்யப்படுகின்றனர். மற்றவர்களைவிடப் புதுமையான முறையில், அவர்கள் சம்பந்தப்பட்ட துறையின் வளர்ச்சிக்கு ஏனையோரால் செய்ய முடியாதபடி எதை அவர்களால் கொடுக்க முடியும் என்பதை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் தெரிவுசெய்யப்படுகிறார்கள்; அதற்கேற்றபடியே ஊதியமும் இருக்கும். தங்களுடைய நாட்டு மக்களால் செய்யமுடியாத வேலைகளுக்கும், ஒரு சிங்கப்பூரியனைவிட அதிக திறமைசாலியாக இருப்பவர்களையும் மட்டுமே வேறு நாடுகளில் இருந்து அந்தப் பணிகளைச் செய்ய எவரையும் சிங்கப்பூர் அனுமதிக்கும். திறமையின் அடிப்படையிலேயே தெரிவுகள் நடக்கும். கட்டட நிர்மாணத்துக்கு குறைந்தளவு சம்பளத்தில் வேலை செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து வந்து அநேகர் இங்கு பணிபுரிகிறார்கள். அவர்கள் பெறும் ஊதியம் அவர்களுடைய நாட்டுக் கரன்சியைப் பொறுத்தளவில் அதிகமானதுதான். இந்தவித நோக்கங்களோடு திட்டமிட்டு இயங்குவதால் மட்டுமே சிங்கப்பூரால் பொருளாதார வளர்ச்சியில் முன்னின்று மற்ற நாடுகளோடு போட்டியிட்டுத் தன்னுடைய வருமானத்தை உயர்த்தித் தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது. உற்பத்திக்கும், வளர்ச்சிக்கும் தேவையான எந்த அடிப்படை மூலப் பொருட்களையும் தன்னில் கொண்டிராத சிங்கப்பூர் முன்யோசனை, புத்திரீதியான திட்டமிடல், கடின உழைப்பு ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டே தன் ஜீவனத்துக்காக இயங்கி வருகிறது.

S2காலை உணவுக்காக நான் கோமள விலாஸுக்குப் போய் உணவுக்காகக் காத்திருந்தபோது இரண்டு இந்தியர்கள் என் பக்கத்தில் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் இந்தியாவில் இருந்து வந்து முப்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து சிங்கப்பூரியனாகிவிட்டவர். மற்றவர் மூன்று நாட்களுக்கு முன் வேலை காரணமாக வந்திருந்த இந்திய வாலிபன். இருவரோடும் பேச்சுக்கொடுத்தேன். சாப்பிட்டு முடிந்தபின் இந்திய வாலிபன் நான் இருந்த ஹோட்டலிலேயே இருப்பதாக அறிந்துகொண்டதால் அவரோடு பேசிக்கொண்டே ஹோட்டலை நோக்கி நடந்தேன். அவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு குழந்தை இருந்தது. ஆந்திராவைச் சேர்ந்த இருபத்தொன்பது வயதான மல்லிகார்ஜுன் பெங்களூரில் விப்ரோ கம்பேனியில் வேலை செய்கிறார். சிங்கப்பூர் கம்பேனியொன்றில் மூன்று வார வேலைக்காக வந்திருந்தார். அவரால் பிஸ்னஸ் விசாவில் மட்டுமே இந்த வேலைக்காக வர முடிந்திருந்ததால் தங்கும் செலவு, உணவு மற்றும் இதர செலவுகளுக்கும் மட்டுமே கம்பேனி பணம் கொடுத்தது. செய்யும் வேலைக்காக அவருக்கு ஊதியம் இல்லை. இதில் எந்தவிதமான ஏமாற்று வேலையும் இல்லை. மல்லிகார்ஜுனுக்கு இதன் மூலம் தன் நாட்டைவிட்டு வெளியில் போக வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அத்தோடு வேலையில் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடிந்திருக்கிறது. இதேவேலையை சிங்கப்பூரில் எவராவது இதே ஊதியத்துக்கு செய்ய வழி இருந்திருந்தால் அந்தக் கம்பேனி மல்லிகார்ஜுனை வரவழைத்திருந்திருக்காது. அவரும் விருப்பத்தோடு விஷயம் தெரிந்தே வந்திருக்கிறார்.

S5சிங்கப்பூர் இந்தளவுக்கு வளர்ந்திருப்பதற்கு என்ன காரணம் என்று மல்லிகார்ஜுன் என்னைப் பார்த்துக் கேட்டார். நான் அதற்கு, ‘கடின உழைப்புத்தான் காரணம் என்றேன்.’ இந்தியாவில் அரசியல் மக்களை வளரவிடாமல் வைத்திருக்கிறது. வசதியுள்ளவர்கள் மட்டும் எப்படியோ பிழைத்துவிடுகிறார்கள். சாதாரண மக்களால் உயர வழியில்லை. மதமும், மதம் சார்ந்த பண்பாடும், அதன் அடிப்படையில் இயங்கும், அரசும் அரசியலும் கோடிக்கணக்கான மக்களை எப்போதும் தாழ்ந்த நிலையில் வைத்திருக்கின்றன. சிங்கப்பூரில் எல்லாம் அதற்கு எதிர்மாறாக இருந்து வருவதால் அது வளர்ச்சியடைந்திருப்பதோடு மக்களும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்’ என்றேன். அந்தக் கொள்கைகள் தனக்கும் பிடித்திருப்பதாக மல்லிகார்ஜுன் சொன்னார். அவர் ஒரு இந்து, அத்தோடு வெஜிடேரியன் வேறு. இதையெல்லாம் நான் அவரோடு விவாதித்தேன். ‘மதம் இந்தியாவை முடமாக்கி வைத்திருக்கிறது’ என்றேன். மல்லிகார்ஜுன் அதற்கு மறுப்புச் சொல்லவில்லை. ‘கடவுள் நமக்காகப் படைத்திருக்கின்ற மிருகங்களையும், பறவைகளையும் மனிதனுக்கு சமமாகப் பார்த்து அவற்றை நாம் பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கிறோம். புரோட்டின் உடல் வளர்ச்சிக்கு அவசியம், அரிசியை அடிப்படையாகக் கொண்ட நம் அன்றாடச் சாப்பாடு நமக்கு இரத்தக் கொதிப்பையும், சர்க்கரை வியாதியையும் மட்டுமே தந்திருக்கிறது’ என்றேன். ‘எல்லாவற்றிலும் அஜஸ்ட் பண்ணிப் போய் வாழ்வதே தனக்கும் பிடிக்கும்’ என்றார் மல்லிகார்ஜுன். ‘நம்முடைய அடிப்படை சிந்தனைகளில் பெரிய மாற்றங்கள் தேவை. பண்பாட்டில் மாற்றங்கள் தேவை. புத்திக்கு ஒத்துவராத எண்ணங்கள் நம்மை வாழவிடாது’ என்றேன். மல்லிகார்ஜுன் கொஞ்ச நேரத்திலேயே அதிகம் பழகிய நண்பரைப்போல பழக ஆரம்பித்துவிட்டார்; வெளிப்படையாகப் பேசவும் செய்தார். வீட்டில் தனக்குக் கோபம் வராதென்றும் அதுவே மனைவியோடு ஒத்து வாழ உதவுகிறதென்றும், ஒருவன் அனுசரித்துப் போகாவிட்டால் இரண்டு பேர் எப்படிச் சேர்ந்து வாழமுடியும்? என்று கேட்டார். ‘அது சரிதான்’ என்றேன். தனக்கு எல்லா இடத்திலும் எல்லா விஷயத்திலும் எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு சமாதானமாக இருக்க முடிகிறது என்றார். என்னோடு பல விஷயங்களில் ஒத்த கருத்து இருப்பதாகக் கூறிய மல்லிகார்ஜுன், தன்னுடைய அனுபவங்களைத் தான் எப்போதும் எழுத்தில் எழுதி வைப்பதாகவும் அதில் மூன்று கொள்கைகளைப் பின்பற்றுவதாகவும் கூறினார். தான் எழுதுவது எப்போதும் எவருக்கும் மனக்கஷ்டத்தை உண்டாக்கக் கூடாது என்றும், வாசிப்பவருக்கு பொசிட்டிவ்வாக எதையும் சொல்ல வேண்டும் என்றும், வாசிப்பவருக்குத் தான் எழுதுவது பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார். ‘நல்ல கொள்கைதான்’ என்று கூறி, நானும் ஒரு எழுத்தாளன் என்று என் எழுத்துப் பணியைப் பற்றி அவரிடம் சொன்னேன். ‘ஐயா, ஒரு பெரிய மனிதரை சந்திக்கும் இந்த வாய்ப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார் மல்லிகார்ஜுன். ‘அப்படியெல்லாம் நான் ஒரு பெரிய மனிதனில்லை. அந்த எண்ணங்களெல்லாம் ஒவ்வொருவரின் மனநிலையைப் பொறுத்ததே’ என்று பதிலளித்தேன். தொடர்ந்து தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்று என்னிடம் தன்னுடைய தொலைபேசி எண்ணைத் தந்தார் மல்லிகார்ஜுன். தன் மனைவி தனக்குச் செய்து தந்திருந்த சுவீட்டைக் கட்டாயம் நான் சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்தி சாப்பிட வைத்தார். இன்னும் பேசிக்கொண்டிருக்கலாமே என்றார். இரவு வெகு நேரமாகிவிட்டதால் குட்நைட் சொல்லிவிட்டு என் அறைக்குத் திரும்பினேன். அடுத்த நாள் நான் பயணமாவதால் அவரை மீண்டும் பார்க்க முடியாது என்பதை உணர்ந்தேன்.

இதுவரை நான் எழுதியிருப்பதில் உங்களால் கடவுளின் பொதுவான கிருபையைப் பார்க்க முடிகிறதா? சிங்கப்பூர் சிங்கப்பூராக இருந்து வருவதில் கடவுளின் பொதுவான கிருபையைப் பார்க்கிறோம். மனிதனைக் கடவுள் இயலாதவனாக, ஒன்றுக்கும் உதவாதவனாகப் படைக்கவில்லை. ஆதாமையும், ஏவாளையும் ஞானமுள்ளவர்களாக, உழைக்கக்கூடியவர்களாக, உலகத்தைப் பண்படுத்தி, பயன்படுத்தி அனுபவிக்கக் கூடியவர்களாகத்தான் படைத்தார். பாவம் மனிதனை முழுமையாகப் பாதித்து கடவுளை அறியாதவனாக, அவரோடு உறவில்லாதவனாக, ஆத்தும விடுதலை அடையாதவனாக வைத்திருந்தபோதும், மனிதன் சிந்தித்து செயல்பட்டுத் தன் உலகத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளுகிற வல்லமையைத் தொடர்ந்தும் கொண்டிருக்கிறான். ஆசிய நாடுகளிலேயே சிங்கப்பூர் வித்தியாசமானது; விபரம் தெரிந்த நாடாக இருக்கிறது. அதற்குக் காரணம் கடவுள் மானுடத்தில் கொடுத்திருக்கின்ற திறமைகளையும், வல்லமைகளையும் அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுவதால்தான். பாவத்தால் மனிதன் பாதிக்கப்பட்டு சுயநலவாதியாக இருந்தபோதும் அத்தகைய சுயநலம் நாட்டை இல்லாமலாக்கிவிடும் என்று உணர்ந்த சிங்கப்பூரின் முதல் பிரதமராக இருந்த லீ குவான் யூ (Lee Quan Yew) பொதுநலத்தை முன்வைத்து திட்டங்களைத் தீட்டி தன் மக்களைக் கடுமையாக உழைக்க வைத்து நாட்டை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கிறார். கடவுளின் பொதுவான கிருபையே மனிதனை உயர்த்தியிருக்கிறது. இது நிச்சயம் லீ குவான் யூவுக்குத் தெரியாது. சிங்கப்பூர் மனிதர்களுக்கும் தெரியாது. ஆனால் கர்த்தரின் வார்த்தை இதை நமக்கு உணர்த்துகிறது. இதிலிருந்து பொதுவான கிருபையை, அது இரட்சிப்பை நமக்குத் தர முடியாவிட்டாலும் உதாசீனப்படுத்தக்கூடாது என்பதை உணர வேண்டும்.

மல்லிகார்ஜுனிலும் இதை நான் பார்க்கிறேன். கடவுளின் பொதுவான கிருபையாலேயே அந்த மனிதனால் தன்னை வாழ்க்கையில் ஓரளவுக்கு உயர்த்திக்கொள்ள முடிந்திருக்கிறது. சில நல்ல நோக்கங்களோடு வாழ்க்கையை நடத்த முடிகிறது. வாழ்க்கையில் போதுமென்ற மனத்தோடு தகுதிக்கு மீறித் தேடிப்போகாமல் வாழத் தெரிந்திருக்கிறது. எல்லோரோடும் அனுசரித்துப் போய், எல்லா விஷயங்களையும் தாங்கிக் கொண்டு வாழ உதவியிருக்கிறது. இதை சமூகமா நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கின்றது? நம்மைப் படைத்த கர்த்தர் இந்தத் தகுதிகளை நமக்குக் கொடுத்திருக்கிறார். பாவம் எல்லாவற்றையும் பாதித்து நம்மைக் கடவுளிடம் இருந்து ஓரங்கட்டி வைத்திருந்தபோதும் மனிதர்கள் எல்லோரும் மிருகங்களாகிவிடவில்லை. கடவுளின் பொதுவான கிருபையால் முற்றாக சீரழிந்துவிடாமல் மனிதன் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறான்; நல்ல நிலையில் உலகத்தில் இருக்கப் பழகிக்கொண்டிருக்கிறான். சிங்கப்பூர் மக்களும், மல்லிகார்ஜுனும் இதற்கு உதாரணமாக இருக்கிறார்கள்.

உலகத்திலும் மனிதனிலும் நாம் பொதுவான கிருபையின் பலன்களைக் காண நேர்ந்தபோதும் அதன் பலவீனத்தையும் உணர வேண்டும். பொதுவான கிருபை மனிதன் முற்றும் சீரழிந்துவிடாமல் இருக்க உதவினாலும், அதனால் மனிதனின் பாவத்துக்கு மன்னிப்புக் கொடுக்க முடியாது; அதைப் போக்க முடியாது. நித்திய ஜீவனை மனிதனுக்கு அளிக்க முடியாது. பொதுவான கிருபை இருப்பதாலேயே மனிதனால் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிந்துகொள்ள வழி இருக்கிறது. பொதுவான கிருபை மனிதனுக்கு ஆத்மீக வழியைக்காட்ட உதவுமேயல்லாது ஆத்மீக விடுதலையைக் கொடுக்க அதனால் முடியாது. பொதுவான கிருபையின் நன்மைகளுக்காக நாம் கடவுளைப் போற்றினாலும், சிறப்பான அவருடைய கிருபையையே (Special grace or Saving grace) எப்போதும் நாட வேண்டும். சிங்கப்பூர் மக்களுக்கு பொதுவான கிருபை மட்டும் போதாது; அதன் பலன்களை அனுபவித்து வரும் அவர்களுக்கு கடவுளின் இரட்சிக்கும் கிருபை தேவை; கிறிஸ்து தேவை. மல்லிகார்ஜுனுக்கும் அது தேவை. இரட்சிக்கும் கிருபையை அளிக்கும் கிறிஸ்து மட்டுமே இந்த உலக நன்மைகளுக்கெல்லாம் மேலான ஆத்மீக நன்மையை அளிக்கக்கூடியவராக இருக்கிறார். பொதுவான கிருபையின் பலன்களால் இன்றைக்கு சிங்கப்பூர் உலகத்தில் வசதியான, பாதுகாப்பான நாடாக இருந்தபோதும் அது பரலோகமாகிவிடவில்லை; அப்படி ஆகவும் முடியாது. எத்தனை உலக சுகத்தை அனுபவித்தாலும் ஆத்மீக சுகமில்லாமல் மனிதன் பரலோகம் போக முடியாது. இந்த உலகத்தோடு முடிவடைவதல்ல மனித வாழ்க்கை; அது பரலோகத்திலோ, நரகத்திலோ தொடர்கிற வாழ்க்கை. சிங்கப்பூர் மக்களும், மல்லிகார்ஜுனும் கிறிஸ்து இல்லாமல் பரலோகத்தை அடைய முடியாது. சிங்கப்பூரில் இன்று நிச்சயம் கிறிஸ்துவின் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது; சபைகள் இருந்து வருகின்றன. தமிழர்கள் மத்தியிலும் கிறிஸ்து பிரசங்கிக்கப்பட்டு வருகிறார். அந்த ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு போதகரின் குடும்பத்தையும் இந்தப் பிரயாணத்தில் நான் சந்தித்து அவர்களோடு உணவருந்தினேன். மல்லிகார்ஜுனோடு அடுத்து பேசும்போதோ, சந்திக்கும்போதோ கிறிஸ்துவின் இரட்சிக்கும் கிருபையை என்னால் சொல்லாமல் இருக்க முடியுமா? கொஞ்ச நேரத்து அந்த நட்பு கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் ஆத்மீக நட்பாக ஒரு நாள் மாறுமா?

‘அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.’ (அப்போஸ்தலர் 17:30).

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக