ஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)

ஜொசுவா ஹெரிஸ்

ஜூலை மாத முடிவில் Fox Newsல் இருந்து எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வந்தது, ‘ஜொசுவா ஹெரிஸும் அவருடைய மனைவியும் நட்போடு பிரிந்துவாழத் தீர்மானித்துவிட்டார்கள் என்பது. இதை ஜொசுவா ஹெரிஸே தன்னுடைய இன்ஸ்டகிரேமில் பதிவு செய்திருந்தார். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு அதிரடியாக இன்னொரு செய்தியை அவர் வெளியிட்டார். ‘இனி நான் கிறிஸ்தவன் அல்ல, கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகளை ஆராய்ந்து பார்த்தபோது அவற்றின் அடிப்படையில் என்னைக் கிறிஸ்தவனாகக் கணிக்க முடியவில்லை. அதனால் நான் கிறிஸ்தவ நம்பிக்கைகளைவிட்டு அடியோடு விலகிவிட்டேன்’ என்பதுதான் அந்த அறிக்கை. இது கிறிஸ்தவ சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, இப்போது நான் இந்த ஆக்கத்தை எழுதிக்கொண்டிருக்கும் வரையில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

யார் இந்த ஜொசுவா ஹெரிஸ்?

கிறிஸ்தவ பெற்றோர்களால் வீட்டுக்கல்வி முறைக்குக் கீழ் வளர்ந்து கிறிஸ்தவ போதனைகளை வீட்டிலும் திருச்சபையிலும் பெற்று, கிறிஸ்தவ ஞானஸ்நானத்தையும் பெற்று வாலிபனாக இருபது வயதில் சுற்றியிருப்பவர்கள் கவனிக்கும்படியான சில ஆற்றல்களையும் தன்னில் கொண்டிருந்து வளர்ந்து வந்துகொண்டிருந்தார் ஜொசுவா ஹெரிஸ். அவருடைய தந்தை அமெரிக்க வீட்டுக்கல்விமுறை இயக்கத்தின் மூன்று முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். திருச்சபைகள் நடத்தும் வாலிபர்கள் மகாநாடுகளிலும், ஏனைய கிறிஸ்தவ கூட்டங்களிலும் ஜொசுவா ஹெரிஸ் பங்குபற்றியது மட்டுமல்லாமல் இசைக்கருவிகள் வாசிக்கவும், பேசவும் ஆரம்பித்தார். அனைவருடைய கண்களும் அவர்மேல் பதிய ஆரம்பித்தன. இளம் வாலிபரான ஜொசுவா ஹெரிஸின் வளர்ச்சியையும் ஆற்றல்களையும் கவனிக்கத் தவறவில்லை சீ. ஜே. மகேனி என்ற கெத்தர்ஸ்பேர்க், மேரிலன்ட் மாநிலத்தைச் சேர்ந்த கவனன்ட் லைப் மெகா திருச்சபையின் பிரதான போதகர். ஜொசுவா ஹெரிஸை அவர் தன்கீழ் இணைத்து கிறிஸ்தவ ஊழியத்தில் வளர்க்க ஆரம்பித்தார். அவருடைய வீட்டிலேயே ஜொசுவா ஹெரிஸ் தன்னுடைய எதிர்கால மனைவியாகப்போகிற சேனன் ஹென்ரிக்சனைச் சந்தித்தார். இருவரும் ஒருவரையொருவர் விரும்பி 1998ல் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். ஜொசுவாவின் மனைவியும் வீட்டுக்கல்வி முறையின் கீழ் வளர்ந்து ஞானஸ்நானம் பெற்றவர். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். காலங்கள் வேகமாக ஓட ஜொசுவா ஹெரிஸ் பிரசங்கங்கள் செய்தது மட்டுமல்லாமல் திருச்சபையில் வெகுவேகமாக முன்னிலைக்கு வர ஆரம்பித்தார். ஜொசுவாவுக்கு முப்பது வயதாக இருக்கும்போது சீ. ஜே. மகேனி அவரைத் தன் திருச்சபையின் முதன்மைப் போதகராக 2004ல் நியமித்தார்.

1997ல் ஜொசுவா ஹெரிஸ் I Kissed Dating Good Bye என்ற நூலை எழுதி வெளியிட்டார். இது வாலிபர்கள் திருமணத்திற்கு முன் உடலுறவில் ஈடுபடாமல் பரிசுத்தமாகத் தங்களை வைத்திருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆண், பெண் நட்புறவை எப்படி ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற ஆலோசனைகளைத் தந்தது. அதிசயிக்கத்தக்கவிதத்தில் இந்நூல் 1.2 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி ஜொசுவா ஹெரிஸை பிரபலமான நூலாசிரியராக்கியது. இதற்குப் பிறகு Boy meets Girl (2000) என்ற நூலையும், Not Even a Hint: Guarding Your Heart Against Lust (2003), Sex Is Not the Problem (Lust Is) (2005), Stop Dating the Church!: Fall in Love with the Family of God (2004) ஆகிய வேறு சில நூல்களையும் ஜொசுவா ஹெரிஸ் எழுதி வெளியிட்டார். Dug Down Deep (2010) என்ற இன்னுமொரு நூலில் ஜொசுவா ஹெரிஸ் சத்தியத்திலும், மெய்யான வேத இறையியலிலும் தனக்கிருக்கும் ஆர்வத்தை விளக்கியிருந்தார். Attitude, Next எனும் பெயர்களில் வாலிபர்களுக்கான மகாநாடுகளையும் ஜொசுவா ஹெரிஸ் நடத்திவந்தார். வாலிபர்கள் மத்தியில் மட்டுமல்லாது, திருச்சபைகள் மத்தியிலும் ஹெரிஸ் பிரபலமாகி கிறிஸ்தவ மகாநாடுகளில் விரும்பிப் பேச அழைக்கப்படும் பேச்சாளர்களில் ஒருவராக முன்னிலையில் இருந்தார்.

அதிரடியான மாற்றங்கள்

இதுவரை அவருடைய வாழ்க்கையில் எல்லாமே நல்லபடியாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், திடீரென்று சில மாற்றங்கள் அவரில் ஏற்பட ஆரம்பித்தன. 2015ம் ஆண்டில் ஹெரிஸ் மேகா திருச்சபையான கவனன்ட் லைப்பில் தன்னுடைய பிரதான போதகர் பதவியில் இருந்து இராஜினாமா செய்தார். அதற்கு அவர் கூறிய காரணம் தான் பெரிதாக இறையியல் பயிற்சிகள் எதுவும் பெறாமல் இத்தனைப் பெரிய போதகர் பதவிக்கு வந்திருக்கக்கூடாது, அதனால் வென்கூவரில் இருக்கும் ரீஜன்ட் இறையியல் கல்லூரியில் இறையியல் பயிற்சிபெறப்போகிறேன் என்பதுதான். உடனடியாக ஹெரிஸ் தன்னுடைய குடும்பத்தோடு வென்கூவரில் குடியேறினார். இதுபற்றி ஒருசில கிறிஸ்தவ தலைவர்களைத்தவிர வேறு எவரும் ஜொசுவாவிடம் பேசிப்பார்க்கவில்லை. வென்கூவரில் ஹெரிஸ் இறையியல் பயிற்சிக்கு தன்னை ஒப்புக்கொடுத்ததோடு அல்லாமல் ஒரு செய்திப்பறிமாறல் கம்பெனியையும் ஆரம்பித்தார்.

2016ல் ஜொசுவா ஹெரிஸ் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப்போட்டார். அதாவது, தான் எழுதிவெளியிட்டு மில்லியன் காப்பிகளுக்குமேல் விற்ற I Kiss Dating Good Bye என்ற நூலில் தான் எழுதியிருக்கும் கருத்துக்கள் சரியானவையல்ல என்றும், அந்த விஷயங்கள் பற்றிய தன்னுடைய எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்றும் அவர் பகிரங்கமாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அந்தப் புத்தகத்தை வாசித்து அதனால் காயப்பட்டதாகக் கூறியிருப்பவர்களிடம் அந்த நூலை எழுதியதற்காக அவர் மன்னிப்பும் கேட்டார். 2018ல் அந்த நூலை அவர் முற்றாக நிராகரித்து அதன் வெளியீட்டைத் தடைசெய்தார். அவருடைய பதிப்பாளர்களும், இருப்பில் இருக்கும் ஸ்டொக் விற்பனையானபின் அந்த நூலையும் அதற்குப்பிறகு ஜொசுவா எழுதிய மேலும் இரு நூல்களையும் தொடர்ந்து வெளியிடப்போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டனர். இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் ஜொசுவா ஹெரிஸ் தன்னுடைய கருத்துக்களாலும் எழுத்துக்களாலும் பாதிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களிடம் (LBGTQ) பொது மன்னிப்புக்கேட்டார்.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக ஜூலை 2019ல் ஜொசுவா ஹெரிஸ், தானும் தன்னுடைய மனைவி சேனனும் நட்புறவோடு பிரிந்துவாழத் தீர்மானித்திருப்பதாகவும், தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மாற்றங்களைப் புரிந்துகொண்டு எவரும் அதில் தலையிடாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். சேனனும் அத்தகைய அறிவிப்பைக் கொடுத்தார். இது அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் பேரிடியாக ஜொசுவா ஹெரிஸ் இன்னுமொரு அறிவிப்பையும் வெளியிட்டார். அதாவது, தான் அடியோடு கிறிஸ்தவத்தைவிட்டு விலகிப்போய்விட்டேன் என்பதுதான் அந்த அறிவிப்பு. கிறிஸ்தவனைப்பற்றி வேதம் விளக்கும் உண்மைகளை சிந்தித்துப் பார்க்கிறபோது அத்தகைய குணாதிசயங்களோ அல்லது வாழ்க்கையோ தன்னில் காணப்படவில்லை என்று ஜொசுவா ஹெரிஸ் பகிரங்கமாக இன்ஸ்டகிரேமில் அறிவித்தார். இது அமெரிக்காவின் பெரும் நியூஸ் ஏஜன்சியான Fox Newsல் இருந்து எல்லா முக்கிய செய்தித்தாள்களிலும் மீடியாக்களிலும் உலகமெங்கும் அறிவிக்கப்பட்டது. கிறிஸ்தவ உலகையே திரும்பிப்பார்க்க வைத்த செய்தியாக இது இருந்தது. முக்கிய கிறிஸ்தவ தலைவர்கள் அனைவரும் இதுபற்றிய தங்களுடைய கருத்துக்களை வெளியிட ஆரம்பித்தனர். அல் மோகலர், கார்ள் ட்ரூமன் போன்ற சீர்திருத்த கிறிஸ்தவர்களும் இதுபற்றி தங்களுடைய எண்ணங்களை வெளியிட்டனர். ஜொசுவா ஹெரிஸை நன்கறிந்து அவருடைய இளம் வயதில் இருந்து அவரோடு தொடர்பு வைத்திருந்த ஒரு சிலரும் பகிரங்கமாக யூடியூபிலும், மீடியாக்கள் மூலமும் ஜொசுவாவை மனந்திரும்பும்படியும், அவருக்காகத் தாங்கள் தொடர்ந்து ஜெபிக்கப்போவதாகவும் நாத்தழுதழுக்க அறிவித்தார்கள். ஜொசுவா ஹெரிஸ் ஆரம்பத்தில் தொடர்பு வைத்திருந்து பின்னால் விலகிக்கொண்ட கொஸ்பல் கொலிஷன் (Gospel Colition) என்ற கிறிஸ்தவ நிறுவனத்தில் சில முக்கிய தலைவர்களும் இதுபற்றிய ஒரு ஆக்கத்தில் ஜொசுவா ஹெரிஸை எவரும் இந்த விஷயத்திற்காக உடனடியாக நியாயந்தீர்த்து கண்டனம் செய்துவிடாமல், நடந்ததைப் புரிந்துகொண்டு பொறுத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். இதெல்லாம் எந்தளவுக்கு ஜொசுவா ஹெரிஸின் வாழ்க்கை மாற்றங்கள் மேற்கத்திய நாடுகளில் இருக்கும் கிறிஸ்தவர்களையும், திருச்சபைகளையும் பாதித்திருக்கிறது என்பதை விளக்குகின்றன. ஒன்றைக் குறிப்பிட மறந்துவிட்டேன். இந்த ஆகஸ்டு மாத இறுதியில் அமெரிக்காவில் ஒரு நகரத்தில் நடந்த ஓரினச்சேர்க்கையாளர்களின் Pride பாதயாத்திரையில் ஜொசுவா ஹெரிஸ் ஆனந்தத்தோடு கலந்துகொண்டிருக்கிறார்.

கிறிஸ்தவனாக தன்னை அறிவித்து வாழ்ந்து வரும் எந்தவொரு மனிதனில் இத்தகைய நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அதற்காக கிறிஸ்தவர்கள் வருத்தப்படாமல் இருக்கமுடியாது. நிச்சயம் அதிர்ச்சியை அளிக்கும் செய்தி இது; பலரை, முக்கியமாக ஜொசுவாவோடு நெருக்கமானவர்களை இது உலுக்கியிருக்கக்கூடும். ஜொசுவா ஹெரிஸின் ஊழியத்தின் மூலம் பயனடைந்த ஆயிரக்கணக்கான வாலிபர்களை இந்நேரம் நினைத்துப் பார்க்காமல் இருக்கமுடியாது. அவர்கள் நிச்சயம் அதிர்ந்தே போயிருந்திருப்பார்கள். அவர்களுக்காகவெல்லாம் எவரும் மனமிரங்கி வருத்தப்படாமல் இருக்கமுடியாது.

படிக்க வேண்டிய பாடங்கள்

(1) கிறிஸ்தவர்களில் எவருமே கிறிஸ்துவில் இருக்கும் தன்னுடைய ஸ்தானத்தை அலட்சியப்படுத்தக்கூடாது. அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மறுபிறப்பு என்பதும் இரட்சிப்பும் அதி உன்னதமான இயற்கையை மீறிய ஆவிக்குரிய நிகழ்வுகள். அதை அடைந்திருப்பவர்கள் அன்றாடம் அதற்காக கர்த்தருக்கு நன்றிகூறி தங்களுடைய இரட்சிப்பை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்; உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். ஏனோதானோவென்று வாழ்வதற்காகக் கொடுக்கப்பட்டதல்ல கிறிஸ்தவ அனுபவம். அதை அன்றாடம் ருசித்து வாழ்கிறவனாக ஒவ்வொரு கிறிஸ்தவனும் இருக்கவேண்டும். அலட்சியமாக வாழ்கிறவர்கள் ஆபத்தை விலைகொடுத்து வாங்குகிறவர்களாக இருப்பார்கள். வேதம், அப்படி அலட்சியமாக வாழாமல் கிறிஸ்தவ அனுபவத்திலும் கிருபையிலும் நாம் அன்றாடம் வளரவேண்டும் என்று விளக்குகிறது. ஏனோக்கு கர்த்தரோடு அன்றாடம் சந்தோஷத்தோடு உறவாடி அவரிருக்குமிடத்திற்கே போய்ச்சேர்ந்தான். ஆண்டவரோடிருக்கும் உறவை உதாசீனப்படுத்துகிறவர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையை பலவீனத்தோடு மட்டுமே வாழ்வார்கள். அது தொடருமானால் அவர்களுடைய கிறிஸ்தவ அனுபவத்தை சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஜொசுவா ஹெரிஸின் வாழ்க்கை நம்மைக் கிறிஸ்துவோடிருக்கும் உறவை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறது.

(2) மெய்க்கிறிஸ்தவனால் கிறிஸ்தவ அனுபவத்தை ஒருபோதும் உதறித்தள்ளிவிட முடியாது; அதைத்தூக்கி எறிந்துவிட்டு மறுபடியும் உலகத்தானாக மாறிவிட முடியாது. ஜொசுவா ஹெரிஸ் அப்படி அறிவித்திருப்பதே அவருடைய கிறிஸ்தவ அனுபவத்தை சந்தேகிக்க வைக்கிறது. இதற்கு ஹெரிஸ் பயன்படுத்தியிருக்கும் வார்த்தை Deconstruction. இது ஒரு பின்நவீனத்துவ வார்த்தை. இதற்குப் பொருள் ஏற்கனவே இருக்கும் ஒன்றை முற்றாக அடியோடு மாற்றி அமைப்பது அல்லது இல்லாமலாக்குவது என்பதாகும். வேத இறையியல் தெரிந்த ஒரு மனிதனால் எப்படி இதைச் சொல்ல முடிகிறது? கிறிஸ்தவ அனுபவத்தை இழந்துபோக முடியும் என்று நம்புவது ஆர்மீனியனிசப் போதனை. புதிய கல்வினிச இயக்கத்தைச் சார்ந்த ஜொசுவா ஹெரிஸ் அந்த நம்பிக்கையைக் கொண்டிருந்திருப்பதெப்படி? வாங்கிக்கொள்ளுவதற்கும், வேண்டாம் என்று நினைத்தநேரத்தில் வீசியெறிந்துவிடுவதற்கும் கிறிஸ்தவ அனுபவம் நாம் கடையில் வாங்கும் வடையா என்ன? ஜொசுவா ஹெரிஸின் வார்த்தைகளும் நடவடிக்கைகளும் அவர் ஆரம்பத்தில் இருந்து மறுபிறப்பை அடைந்து இரட்சிப்பு பெற்றிருந்தாரா? என்ற கேள்வியையே நம்மைக் கேட்கத் தூண்டுகிறது. எந்த அனுபவத்தையும் வேதத்தை வைத்தே ஆராய்ந்து தீர்மானிக்கவேண்டும் என்கிறது கர்த்தரின் வேதம்.

‘சீப்பான கிருபை’ (Cheap grace), ‘சுலபமான கிறிஸ்தவ நம்பிக்கை’ (Easy believism) என்ற வார்த்தைப்பிரயோகங்கள் இன்று அமெரிக்கா மட்டுமின்றி உலகளாவியவிதத்தில் கிறிஸ்துவுக்கு ஆள்சேர்த்துக்கொண்டிருக்கும் தவறான சுவிசேஷ முறைகளை இனங்காட்டப் பயன்படுத்தப்படுகின்றன. அப்படிச் செய்கிறவர்கள் எத்தனை சிம்பிளாக சுவிசேஷத்தை சொல்லமுடியுமோ அத்தனை சிம்பிளாகச் சொல்லி, எத்தனை விரைவாக ஒருவரை தேவ இராஜ்யத்திற்குள் கொண்டுவர முடியுமோ அத்தனைவிரைவில் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். இப்படிச் செய்வது எங்குபோய் முடியும் தெரியுமா? அவசரப்பட்டு வடை செய்யமுற்பட்டால் வேகாத வடையே கையில் கிடைக்கும். அதுபோலத்தான் அவசரப்பட்டு ஒருவரை கிறிஸ்தவனாக்க முயல்வதும். இந்தப் போலித்தனமான, வேதம் சாராத சுவிசேஷ அழைப்பு முறையும், சுவிசேஷ ஊழியமும் மறுபிறப்படையாத அநேகரைத் திருச்சபைக்குள் கொண்டுவந்திருக்கிறது. அத்தகையவர்கள் கிறிஸ்தவத்தை அடியோடு நிராகரித்து உலக வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக்கொடுப்பதில் ஆச்சரியமில்லை. ஜொசுவா ஹெரிஸ் விஷயத்திலும் அதைத்தான் எண்ணவைக்கிறது. இதில் ஆச்சரியமென்னவென்றால், கிறிஸ்தவனாக வாழ்ந்திருப்பது மட்டுமன்றி, மெகா திருச்சபையொன்றின் தலைமைப்போதகராகவும், பிரபல செய்தியாளராகவும், பிரபல நூலாசிரியராகவும், வாலிபர்களைக் கவர்ந்திழுக்கும் கிறிஸ்தவ தலைவராகவும் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெயரெடுத்து, கிறிஸ்தவ ஊழியத்தில் எந்தளவுக்கு உயரத்திற்குப் போகமுடியுமோ அந்தளவுக்கு 40 வயதில் உயரத்திற்குப் போய் அதற்குப் பிறகு கிறிஸ்தவத்தை உதறித்தள்ளியிருக்கும் ஜொசுவா ஹெரிஸைப்பற்றி என்ன சொல்லுவது?

சத்தியவேதம், மெய்யாக மறுப்பிறப்படையாதவர்கள் விசுவாசிகளைப்போல வாழ்க்கையில் நடந்துகொண்டும், ஆவிக்குரிய கிரியைகளாகத் தோன்றுகின்ற பல அருமையான காரியங்களைச் செய்தும் கொஞ்சக்காலத்துக்கு வாழ்ந்துவிட முடியும் என்பதைப் பல உதாரணங்கள் மூலம் விளக்குகிறது. முதலில், யூதாசை எடுத்துக்கொள்ளுங்கள். ஆண்டவரின் சீடர்களில் ஒருவனாக இருந்து சுவிசேஷத்தை நேசிப்பதாகக் காட்டிக்கொண்டு, ஆண்டவரிடமே பணத்தைக்காக்கும் பொறுப்புள்ள பதவியை ஏற்று, சுவிசேஷப் பிரசங்கியாக எழுபதுபேர்களில் ஒருவனாக ஆண்டவரால் அனுப்பப்பட்டு, அற்புதங்களையும்கூடச் செய்து வாழ்ந்திருந்தபோதும் அவன் மெய்யான மனந்திரும்புதலையும், மறுபிறப்பையும் அடைந்திருக்கவில்லை என்பதை வேதம் விளக்குகிறது. இதேபோல்தான் பவுலோடு இணைந்து, வாழ்ந்து, ஜெபித்து, வேதம்வாசித்து, மிஷனரி ஊழியத்தில் ஈடுபட்டிருந்த தேமா ஒருநாள் உலக இச்சைக்கு அடிமையாகி விசுவாசத்தைத் தூக்கியெறிந்துவிட்டுப் போய்விடவில்லையா? பரிசுத்த ஆவியின் வரங்களுக்காக ஆசைப்பட்டு பேதுருவிடமே பணத்தைக் கொடுத்து ஆவியின் வரத்தைப் பெற்றுக்கொள்ள முயன்ற மெஜீசியனான சீமோன் -ஏற்கனவே ஞானஸ்நானம் பெற்ற சீடனாக இருந்திருக்கிறானே. இன்னும் எத்தனையோ உதாரணங்களை நாம் அடுக்கடுக்காகச் சொல்லிக்கொண்டே போகலாம். இதெல்லாம் எதைக்காட்டுகின்றது? மெய்யாகவே மறுபிறப்பையும் மனந்திரும்புதலையும் அடைந்திராமல் ஒருவன் கிறிஸ்தவனாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு கிருபையின் செயல்களாக வெளிப்பார்வைக்குத் தோன்றுகின்ற அற்புதமான கிரியைகளைக்கூட வாழ்க்கையில் செய்து வாழ்ந்துவிட முடியும் என்பதைத்தான். அப்படி வெளிப்பார்வைக்கு மட்டும் கிறிஸ்தவர்களாக வாழ்கிறவர்கள் ஆத்துமாக்களுக்கு முன் விசுவாசிகளைப்போலத் தெரிந்தாலும் எல்லாம் அறிந்த ஆண்டவரின் பிள்ளைகளாக ஒருபோதும் ஆவிக்குரிய வாழ்க்கையை ஆரம்பித்திருக்கவில்லை. அத்தகைய ஆபத்து நேர்ந்துவிடாமல் அதைத் தவிர்த்துக்கொள்ளத்தான் வேதம் நாம் எப்போதும் சுயபரிசோதனையில் ஈடுபட்டு நம்முடைய உள் மனச்சாட்சி நம்மைக் குற்றப்படுத்தாமலும், ஆத்துமாக்களுக்கு முன் நாம் குற்றப்படுத்தப்படாமலும் வாழவேண்டும் என்று எச்சரிக்கிறது.

வெளிப்பார்வைக்கு மட்டும் கிறிஸ்தவர்களாக பலரால் இருந்துவிட முடியும் என்பதை வேதம் பல உதாரணங்கள் மட்டுமன்றி போதனைகளையும் தந்து விளக்குகின்றது. உதாரணத்திற்கு இயேசு மத்தேயு 13ல் தந்திருக்கும் விதைக்கிறவனின் உவமையைக் கவனியுங்கள். சத்திய வார்த்தையாகிய விதை நல்ல நிலத்தில் மட்டுமல்லாமல் மூன்றுவிதமான வேறு நிலங்களிலும் விதைக்கப்பட்டு கொஞ்சக்காலத்துக்கு இருந்துவிடமுடியும் என்பதை விளக்குகின்றது. இந்த மூன்று நிலங்களிலும் அந்த சத்திய வார்த்தை பதியக் காரணமாக இருக்கிறவர் பரிசுத்த ஆவியானவர். இந்தப் பகுதி போதிக்கும் உண்மையென்னவென்றால், பரிசுத்த ஆவியானவர் பொதுவான கிருபையின்படி நித்தியத்தில் ஆண்டவரால் முன்குறித்துத் தெரிந்துகொள்ளப்படாத மனிதர்களிலும் சத்தியவார்த்தைகள் கொஞ்சக்காலத்துக்கு பதிந்து இருந்துவிடும்படிச் செய்கிறார் என்பதுதான். இருந்தபோதும் அந்த சத்தியவார்த்தைகள் இவர்களில் நிரந்தரமான மறுபிறப்பையும், மனந்திரும்புதலையும் உண்டாக்குவதில்லை. இவர்களே கொஞ்சக்காலத்துக்கு இந்த உலகில் சத்தியத்தில் ஆர்வம் காட்டி குறுகிய காலம் மட்டும் வெளிப்பார்வைக்கு கிறிஸ்தவர்களாக அல்லது கிறிஸ்தவ அனுதாபிகளாக இருந்துவிடுகிறார்கள்.

இன்னுமொரு உதாரணமாக எபிரெயர் 6:4-8 இருக்கிறது. எபிரெயர் 6 பகுதியைப் பலர் தவறாக விளங்கிக்கொள்ளுகிறார்கள்.

4. ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், 5. தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 6. மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். 7. எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். 8. முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.

அந்த நிருபத்தை எழுதியவர், அந்தப் பகுதியில் காணப்படும் நான்கு அம்சங்களை ஒருவன் தன் வாழ்க்கையில் அனுபவித்தபோதும் அவற்றை அவன் தூக்கியெறிந்துவிடுவானெனில் அவன் மனந்திரும்புவதற்காக மறுபடியும் ஆண்டவர் செய்வதற்கு ஒன்றுமேயில்லை என்கிறார். அந்தப் பகுதி போதிக்கும் நான்கு அம்சங்களையும் ஒருவன் கிறிஸ்தவனாக இல்லாமேலேயே பரிசுத்த ஆவியின் பொதுவான கிரியைகளின் கீழ் வந்து அனுபவிக்க முடியும். அவிசுவாசிகளை அந்தளவுக்கு இருதயத்தில் குற்ற உணர்வு ஏற்படும்படியும், வசனத்தை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளும்படியும், வரப்போகிற நியாயத்தீர்ப்பை எண்ணிப் பயப்படும்படியும், பரலோக வாழ்க்கை மேலானது என்பதை அறிந்துகொள்ளும்படியும் சுவிசேஷப் பிரசங்கத்தின் மூலம் பரிசுத்த ஆவியானவர் உணரவைக்கிறார். ஆனால், பொதுவான கிருபை மூலம் ஒருவன் அடையும் இந்த சுவிசேஷ நன்மைகள் சிலகாலம் மட்டுமே அவனில் நிலைக்கும். அந்தவகையில் குறுகிய காலத்துக்கு மட்டும் சுவிசேஷத்தால் பயனடைந்தவர்கள் கிறிஸ்தவர்களாகும்படி மறுபிறப்பை ஆவியானவர் மூலம் அடைவதில்லை. இத்தகையவர்கள் தாங்கள் பொதுவான கிருபையின் மூலம் அனுபவித்த காரியங்களை தூக்கியெறிந்துவிட்டு சுவிசேஷத்தை விசுவாசிக்காமல் போனால் அவர்களுக்கு கிறிஸ்து மேலும் செய்யக்கூடியது ஒன்றுமேயில்லை என்றுதான் எபிரெயருக்கு எழுதியவர் அந்தப் பகுதியில் விளக்கியிருக்கிறார்.

எபிரெயருக்கு எழுதியவர் இந்த உண்மையை கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கையாக சொல்லியிருக்கிறார். கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் இருந்து விழுந்துபோய்விடலாம் என்பதற்காக அவர் எழுதவில்லை; அவர்கள் தங்களுடைய விசுவாசத்தை சாதாரணமாகக் கணித்து நிதானத்தோடு நடந்துகொள்ளத் தவறிவிடாமலிருப்பதற்காக எழுதியிருக்கிறார். மறுபிறப்பினால் கிடைக்கும் விசுவாசம் உறுதியானதாக இருந்தபோதும் அது பாலூட்டி வளர்க்கப்பட வேண்டியது. கிருபையிலும் ஞானத்திலும் நாம் தொடர்ந்து வளரவேண்டும் என்று வேதம் போதிக்கிறது. கர்த்தருடைய கட்டளைகளுக்கு அன்றாடம் அடிபணிந்து நடந்து பரிசுத்தத்தில் உயரவேண்டும் என்கிறது வேதம். விசுவாசம் மெய்யானதாக இருந்தால் இதில்தான் அது முழுக்கவனத்தையும் செலுத்தும். ஆனால் அப்படிக் கவனம் செலுத்துவதில் இருந்து நம்மைத் திசைதிருப்புவதற்காக பிசாசு நம்மை சோதிக்க முயல்வான். சுற்றி இருக்கும் பாவ உலகம் நம்மை உலக இச்சைக்குள்ளாக போகத் தூண்டும். நம்மில் தொடர்ந்திருக்கும் பாவத்தோடு (ரோமர் 7) நாம் போராடி அதன் கொட்டத்தை நாம் அன்றாடம் அடக்கவேண்டிய கடமை இருக்கிறது. இதிலெல்லாம் நாம் அக்கறைகாட்டாமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் எபிரெயருக்கு எழுதியவர் நம்மை எச்சரிக்கிறார். தொடர்ந்து பரிசுத்தத்தில் வளர்ந்து இரட்சிப்பின் நிச்சயத்துவத்தை ருசித்து வாழும்போதுதான் நாம் கர்த்தருக்கு அருகாமையில் இருக்கிறோம். அதில் நாம் கவனம் செலுத்தவேண்டுமென்பதற்காகத்தான் வேதம் இந்தவிதமான பல எச்சரிக்கைகளைப் புதிய ஏற்பாடு முழுதும் தருகிறது.

யார் மறுதலித்துப் போகிறவர்கள்? சுவிசேஷத்தில் நாட்டம் காட்டுவதுபோல் வெளிப்பார்வைக்கு நடந்துகொண்டு உள்ளே ஆவியின் கிரியைக்குள் வராதவர்களே விழுந்துபோவார்கள். அத்தகைய விழுந்துபோகுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சமீபிக்கும்போது பெருமளவில் நிகழும் என்று பவுல் சொல்லவில்லையா?

“ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.” (1 தீமோத்தேயு 4:1)

“சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.” (எபிரெயர் 3:12)

“அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்.” (1 யோவான் 2:19)

(3) ஜொசுவா ஹெரிஸ் விஷயத்தில் சிலர் நாம் மேலே விபரித்திருக்கும் விதத்தில் அதை விளக்கியிருந்தபோதும், வேறு சிலர் அந்தளவுக்குப் போகவிரும்பாமல் பொறுமைகாத்து வருகிறார்கள். பலர் இதைப்பற்றி எதுவுமே சொல்லவிரும்பவில்லை. இது எவர் வாழ்க்கையில் நிகழ்ந்திருந்தாலும் அது வருத்தமளிக்கும் விஷயமே. இருந்தாலும் இதன் மூலம் கிறிஸ்தவர்கள் வேதத்தை ஆராய்ந்து பார்த்து தங்களைக் காத்துக்கொள்ளுவதோடு சுற்றியிருப்பவர்களையும் எச்சரிக்கை செய்யாமல் இருக்கக்கூடாது. ஜொசுவா ஹெரிஸ் விஷயம் முக்கியமானதொரு அம்சத்தைப் பற்றிச் சிந்திக்க அழைக்கிறது. அதுதான் கடந்த பத்துவருடங்களுக்குள் கிறிஸ்தவத்தில் முளைத்திருக்கும் புதுப்போக்கான நியூ கல்வினிசம். இதுபற்றி எதுவும் அறிந்திராதவர்களுக்கு சுருக்கமாக இதை விளக்கிவிடுகிறேன். அதாவது, பெந்தகொஸ்தே மற்றும் கெரிஸ்மெட்டிக், இமேர்ஜன்ட் இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும் தாங்கள் ஏற்கனவே விசுவாசித்துவரும் விஷயங்களில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் அவற்றோடு சீர்திருத்தவாத கிருபையின் போதனைகளையும் இணைத்துக்கொண்டு (இரட்சிப்பு பற்றிய கல்வினிசப் போதனைகள்) தங்களை நியூ கல்வினிஸ்டுகள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். கிறிஸ்தவத்தில் உருவாகியிருக்கும் இந்தப் புதுப் போதனை சீர்திருத்த போதனைகளை அப்படியே முழுவதுமாக ஏற்றுக்கொள்ளாமல் அவற்றில் தங்களுக்குப் பிடித்தமானவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு 21ம் நூற்றாண்டுக் கலாச்சாரத்துக்குத் தகுந்தவிதத்தில் கல்வினிசத்திற்கு புது உருவம் கொடுத்து வருகிறது. ஜொசுவா ஹெரிஸின் கார்டியனாக இருந்து வந்திருந்த சீ. ஜே. மகேனி ஒரு கெரிஸ்மெட்டிக் போதகர்; அவர் இன்று ஒரு நியூ கல்வினிஸ்ட். இந்த நியூ கல்வினிசத்தின் காட் பாதராக இருப்பவர் ஜோன் பைப்பர். மெட் சான்டிலரும் இதைச் சேர்ந்தவர்தான். இவர்களோடு இருந்து, பலராலும் சகித்துக்கொள்ள முடியாத தன்னுடைய போக்கினால் பெரும் முரண்பாடுகளை உண்டாக்கி இவர்களால் விலக்கப்பட்டவர்தான் மார்க் டிரிஸ்கள். இந்த நியூ கல்வினிஸ்டுகள் இயக்கம் பெற்றெடுத்திருக்கும் சினிமா ஸ்டார் போலப் பிரபலமான அழகுப்பிள்ளைகளில் ஒருவரே ஜொசுவா ஹெரிஸ். சில வருடங்களுக்கு முன் நியூ கல்வினிசம் பலரது கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்தபோது அதுபற்றி விளக்கியொரு நூலை வெளியிட்ட ஜெரமி வோக்கர், ‘நியூ கல்வினிஸ்டுகள் இப்போதுதான் ஆரம்பமாகி வளர்ந்து வருவதால் இன்னும் பல வருடங்களாகும்வரை அதுபற்றித் தெளிவாகவும் தீர்க்கமாகவும் எந்தக் கருத்தையும் சொல்லுவது கடினம்’ என்று எழுதினார். ‘அதற்குக் காரணம் இதில் இருக்கும் எல்லோருமே ஒரே கொள்கையைக் கடைப்பிடிக்கிறவர்களாக இல்லாததுதான்’ என்றும் எழுதியிருந்தார். இன்று நியூ கல்வினிஸ்டான சீ. ஜே. மகேனி தொடர்ந்தும் கென்டாக்கி மாநிலத்தில் ஒரு திருச்சபைத் தலைமைப் போதகராக இருந்துவந்தாலும், அவர் ஆரம்பித்த சவரின் கிரேஸ் மினிஸ்டிரீஸ் நடத்திய கல்லூரியைச் சேர்ந்தவர்கள் மைனரான பிள்ளைகளிடம் பாலியல் குற்றங்களைச் செய்திருந்த காரணத்தால் கோர்ட்டுவரை விஷயம் போய் சவரின் கிரேஸ் மினிஸ்டிரீஸில் இருந்து அவர் விலக நேர்ந்தது. கொஸ்பல் கொலிசனிலும் இருந்து அவர் விலகினார். ஜொசுவா ஹெரிஸ் கவனன்ட் லைப் மெகா சபையில் இருந்து 2015ல் விலகியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.

நியூ கல்வினிசத்தைப் பின்பற்றும் எல்லோருமே இவ்விதமாக விழுந்துபோகாவிட்டாலும் அதன் தலைமையில் இருக்கும் சிலர் (ஜேம்ஸ் மெக்டோனல், மார்க் டிரிஸ்கள், டூலியன் டிவிஜியன்) வெவ்வேறு காரணங்களுக்காக இப்படிப் பாதைவிட்டு விலகி விழுந்திருப்பது அந்த இயக்கத்தை சந்தேகக் கண்ணோடு பார்க்க வைக்கிறது. ஜொசுவா ஹெரிஸ் தான் கிறிஸ்தவன் அல்ல என்று உணர்ந்து அறிவித்து அப்படி இருந்ததற்காக வருத்தம் தெரிவிக்கும்வரையிலும், அவருடைய வாழ்க்கையில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வந்திருப்பதையும் (அவருடைய மனைவியிலும்கூட) அவரிருந்த சபையும், அவரோடுறவாடி அவரை அறிந்திருந்து இணைந்து பணிபுரிந்தவர்களும் எப்படிக் கவனிக்காமல் இருந்தார்கள் என்றெல்லாம் கேட்கும்படிச் செய்கிறது. நியூ கல்வினிசவாதிகளின் போதனையும், போக்கும், நடவடிக்கைகளும் எந்தவிதத்தில் ஜொசுவா ஹெரிஸில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு காரணமாக இருந்திருக்கின்றன என்றெல்லாம் கேட்காமல் இருக்கமுடியவில்லை.

(4) ஜொசுவா ஹெரிஸின் வாழ்க்கையில் நிகழ்ந்திருப்பது நமக்கு இன்னொரு முக்கிய விஷயத்தையும் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. அது திருச்சபை அமைப்புக்கு பற்றியது. மேலை நாடுகளில் 19ம் நூற்றாண்டுக்குப் பிறகு திருச்சபை அமைப்பு மதிப்புக்கொடுக்கும் வழக்கம் அருகிப்போக ஆரம்பித்தது. இன்றும் சீர்திருத்த பாப்திஸ்து, பிரெஸ்பிடீரியன் சபைகள் சபை அமைப்புக்கும், சபை ஒழுங்குநடவடிக்கைகளுக்கும் மதிப்புக்கொடுத்து நடந்து வருகிறபோதிலும் பொதுவாக சுவிசேஷ இயக்க திருச்சபைகளில் திருச்சபைபற்றிய போதனையும், வேதபூர்வமான ஒழுங்கு நடவடிக்கைகளும் அலட்சியப்படுத்தப்பட்டே வருகின்றன. கிறிஸ்தவ நிறுவனங்கள் பெருகிப்போய் சுவிசேஷ இயக்கம் திருச்சபைக்கு மதிப்புக்கொடுத்து நடக்காத நிலையையே அங்கு காண்கிறோம்.

சீர்திருத்தவாத திருச்சபைகள் ஒரு வாலிபன் கிறிஸ்தவ ஊழியத்தில் நாட்டம் காட்டுகிறான் என்றால், அவனுக்கு எத்தனை ஆற்றல்கள் இருந்தபோதும் உடனடியாக ஊழியத்திற்குள் நுழைத்துவிட மாட்டார்கள். அவனுடைய விசுவாசத்தையும் வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்த்து அவை வேதபூர்வமானவையாக இருக்குமானால் அனுபவமுள்ள போதகர்களுக்குக் கீழ் சில பணிகளைச் செய்யவைப்பார்கள். அத்தோடு அவனை உடனடியாக பிரசங்கிக்க வைக்காமல் வேதஇறையியலைக் கற்றுக்கொடுப்பார்கள். தவறின்றி வேதத்தை அவன் அறிந்துகொள்ளவும் அதில் தேர்ச்சியடைவதற்குமான வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பார்கள். இதற்கு முன் அவன் பிரசங்கம் செய்வதும், நூல்கள் எழுதுவதும் பெரிய ஆபத்து. தகுந்த வேதஅறிவைப் பெறாமல் தவறானதைப் பிரசங்கிப்பதும், எழுதுவதும் பேராபத்து. அந்த வாலிபன் வேதக்கல்வியை நல்ல முறையில் பெற்று இன்னும் ஒருபடி மேலே போவதற்கான அறிகுறிகளைக் கொண்டிருந்தானெனில் திருச்சபைப் போதகர்கள் அவனை மேலும் ஆராய்ந்து பார்த்து அதற்குப் பின்பே தங்களுக்கு முன் பிரசங்கம் செய்ய வைப்பார்கள். அந்த ஆய்வில் அவன் தேர்ச்சிபெற்ற பிறகே சபைக்கு முன் பிரசங்கம் செய்ய அனுமதி கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் அவன் போதக ஊழியத்துக்கு வருமுன் போதகர்களால் மட்டுமன்றி சபையாலும் ஆராயப்பட்டு ஒருபோதகரின் கீழ் ஆரம்பத்தில் நல்லனுபவம் அடையும்படியாக பணிபுரிய வைக்கப்படுவான். இதெல்லாம் ஜொசுவா ஹெரிஸுக்கு நடந்திருக்கவில்லை. வாலிபத்துடிப்பையும், உணர்ச்சிவேகத்தையும் மட்டுமே முதலீடாக வைத்து பிரசங்க ஊழியத்துக்குள் நுழைக்கப்பட்டிருந்தார் ஜொசுவா ஹெரிஸ். அவரை ஆராய்ந்து பார்த்து சரியாக வழிநடத்தியிருந்திருந்தால் இன்றைக்கு கிறிஸ்துவுக்கும், அவரது சபைக்கும் உலகத்துக்கு முன் ஏற்பட்டிருக்கும் இழுக்கைத் தவிர்த்திருந்திருக்கலாம். திருச்சபைக்கும், திருச்சபை அமைப்புக்கும், ஒழுங்குமுறைக்கும் மதிப்புக்கொடுத்து நடக்காதவர்களால் கிறிஸ்துவுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை. இதற்கு ஜொசுவா ஹெரிஸ் நல்ல உதாரணம்.

(5) பரிசுத்த ஆவியால் மறுபிறப்படைந்த ஒருவன் தன்னை Deconstruct பண்ணிக்கொள்ள முடியாது அல்லது தன்னுடைய ஆவிக்குரிய நிலையில் இருந்து விழுந்துபோக முடியாது என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். காரணம் என்ன தெரியுமா? மறுபிறப்படைந்திருக்கும் கிறிஸ்தவனைக் கர்த்தர் தன் கரத்தில் வைத்துத் தன் பராமரிப்பினால் பாதுகாக்கின்றார். உன்னதத்தில் அவன் முன்குறிக்கப்பட்டிருந்து, தெரிந்துகொள்ளப்பட்டிருந்து, திட்ப உறுதியாக அழைக்கப்பட்டு, நீதிமானாக அறிவிக்கப்பட்டு, கர்த்தரோடு ஒப்புரவாக்கப்பட்டு, பரிசுத்தப்படுத்தப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்டிருக்கிறான் (ரோமர் 8:29-30). அத்தோடு பவுல் எபேசியர் 1:13ல் அவன் பரிசுத்தஆவியினால் முத்திரை போடப்பட்டிருக்கிறான் என்று விளக்கியிருக்கிறார். வேதம் சொல்லுகிறது, மெய்யாக மறுபிறப்படைந்திருப்பவர்கள் விசுவாசத்தினால் கிறிஸ்துவோடு பிரிக்கமுடியாதபடி இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று (ரோமர் 6). மேலும், கிறிஸ்து அவர்களில் நிரந்தமாக இருந்து விசுவாசத்திற்குரிய அத்தனையையும் அவர்கள் தங்களில் செய்யக்கூடியவகையில் கிருபையில் வளரத்தேவையான ஆவிக்குரிய அனைத்தையும் பரிசுத்தஆவியினால் அவர்களில் செய்து நித்திய இரட்சிப்பை அவர்கள் அடையும்படி அவர்களைத் தொடர்ந்து பாதுகாக்கிறார். பிதாவினால் என் கரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒருவரையாவது நான் இழக்கமாட்டேன் என்று இயேசு சொல்லியிருக்கிறார் (யோவான்). எனவே மெய்யான கிறிஸ்தவன் ஒருபோதும் தன் இரட்சிப்பை இழந்துபோக மாட்டான்; அப்படி அதை அவன் இழப்பதென்பது முற்றிலும் இயலாத காரியம். கர்த்தரின் கரத்தில் இருந்து பிசாசால் அவனைப் பிரிக்கவே முடியாது.

கர்த்தர் மெய் கிறிஸ்தவனைத் தன் பராமரிப்பால் பாதுகாத்தபோதும், அவன் தன் ஆவிக்குரிய வாழ்க்கையில் சோதனைகளைச் சந்தித்து, அடிக்கடி பாவங்களைச் செய்துவிடவும், ஏன் மோசமான பாவத்தில் விழுந்துவிடக்கூடியவனாகவும் இருக்கிறான். அவனுள் தொடர்ந்திருக்கும் பாவத்தோடு அவன் இறுதிவரை போராடுகிறபோது அவன் இந்த உலகத்தில் முழுப்பூரணத்துவத்தோடு இருக்க முடியாது. அப்படி அவன் சில தடவைகள் தன் ஆவிக்குரிய வாழ்க்கையில் இடர்களைச் சந்தித்து பாவத்தைச் செய்து, சிலகாலம் இரட்சிப்பின் நிச்சயத்தை உணராமல், சபையைக்கூடவிட்டு தற்காலிகமாக விலகிப்போய் வாழ்ந்தாலும் அவனைத் திட்ப உறுதியாக அழைத்திருக்கும் கர்த்தர் அவனைத் தன்கரத்தில் வைத்துத் தொடர்ந்து பாதுகாப்பதால் அவன் மனந்திரும்பி நிச்சயம் மீண்டும் கிறிஸ்துவின் சந்தோஷத்தைத் தன் வாழ்க்கையில் அனுபவித்து ஆண்டவரோடிருக்கும் உறவைப்புதுப்பித்துக்கொள்வான். மெய் கிறிஸ்தவன் இந்த உலகத்தில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் விடாமுயற்சியுடன் வாழ்வான். இதைத்தான் ‘பரிசுத்தவான்களின் விடாமுயற்சி’ எனும் 1689 விசுவாச அறிக்கையின் அதிகாரம் விளக்குகிறது. மெய் கிறிஸ்தவனுக்காக கிறிஸ்து பரலோகத்தில் இருந்து பரிந்துரைத்துத் தொடர்ந்து ஜெபிக்கிறார். அவன் நிச்சயமாக பரலோகத்தை அடையும்வகையில் கர்த்தர் அவனைப் பாதுகாக்க, அவனும் கர்த்தரின் வழியில் இறுதிவரை நிலைத்திருந்து அவரின் பாதத்தை அடைவான்.

ஜொசுவா ஹெரிஸின் வாழ்க்கை அனுபவம் இதைப்பற்றியெல்லாம் நம்மைச் சிந்திக்க வைத்திருக்கிறது. ஜொசுவா ஹெரிஸின் வாழ்க்கை நமக்கு எச்சரிக்கையாக இருந்து அடைந்திருக்கும் இரட்சிப்பை அலட்சியம் செய்யாமல், தொடர்ச்சியாக இருக்கவேண்டிய மனந்திரும்புதலை நாம் கொண்டிருந்து தாழ்மையோடு கர்த்தரின் வழிகளைப் பின்பற்றி விசுவாசத்தோடு வாழ நம்மை அழைக்கின்றது.

————————————————————————————————————

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 33 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக