கொரோனாவும் வீட்டுச்சிறைவாசமும்! – கோவிட்-19

கொரோனா வைரஸ் வெகுவேகமாக உலகெங்கும் பரவி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் உயிர்ச்சேதம் அதிகம். இந்த நாடுகள் எப்போதோ முழு தேசத்தையும் ஆள்நடமாட்டமில்லாதவகையில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருக்கின்றன. ஒவ்வொன்றாக நாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து நாட்டு மக்களை ஆறு மாதங்களோ (ஆஸ்திரேலியா) சில வாரங்களுக்கோ (பிரிட்டன், இந்தியா, ஸ்ரீ லங்கா), அல்லது ஒரு மாதமோ (நியூசீலாந்து) வீடுகளிலேயே இருக்கும்படி அறிவித்து வருகிறார்கள். மலேசியா, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளில் மிலிட்டரி மக்கள் நடமாட்டத்தைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறார்கள். அமெரிக்காவின் சில முக்கிய மாநிலங்களிலும் இதேநிலைதான். கொரோனா வைரஸுக்கு எந்த மருந்தும் இல்லாததால் அது பரவுவதைத் தடுப்பதற்கே இந்த நடவடிக்கைகள் எல்லாம். வெறுமனே வீட்டில் இருங்கள் என்று சொன்னால் மக்கள் அதைச் செய்வதில் அக்கறை காட்டமாட்டார்கள் என்பதாலேயே போர்க்கால அதிரடி நடவடிக்கைகளை அரசுகள் எடுக்கவேண்டியிருக்கிறது. மேலை நாட்டானாக இருந்தாலும், கீழைத்தேசத்து மனிதனாக இருந்தாலும் மனிதன் மனிதன்தானே! இன்றைக்குச் செய்தியில் வாசித்தேன், நாளை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்பதால் என் நகரத்தில் துப்பாக்கி விற்கும் கடையொன்றில் பெரிய கியூ நின்றதாம். மக்களின் நலன் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மனிதன் ஏன் துப்பாக்கி வாங்குவதில் ஆவல் காட்டுகிறான்? கடைக்காரனே இதுபற்றி கவலை கொண்டு போலீஸுக்குப் போன் செய்திருக்கிறானாம். தன் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து வருகிறது என்கிறபோது மானிடனின் மூளை எந்தவிதத்திலெல்லாம் வேலை செய்கிறது! மனிதன் உணர்வில்லாதவனாய் இருக்கிறான் என்று வேதம் சும்மாவா சொல்லுகிறது.

இது அசாதாரண காலம்! சிங்கப்பூர், என்று தன்னுடைய விமானங்களை 95% தரையிறக்கம் செய்திருக்கிறது? நாட்டுக்குள் எந்த வெளிநாட்டவரும் வரக்கூடாது என்றும் தடைபோட்டிருந்திருக்கிறது? அந்த நாட்டின் வரலாற்றில் இப்படி நடந்திருப்பது இதுவே முதல் தடவை! வியாபாரத்துக்கு மற்ற நாடுகளில் தங்கியிருக்கும் சிங்கப்பூர் தன் நாட்டு மக்களைக் காப்பாற்ற இன்று என்றுமில்லாதவகையில் இத்தகைய அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதேகதிதான் உலகின் பலநாடுகளுக்கும். எங்கள் நாட்டில் 85% விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு நாடுகளின் எமிரெட்ஸ் விமான சேவை தன்னுடைய 295 விமானங்களையும் தரையிறக்கம் செய்திருக்கிறது. இதேநிலைதான் ஆஸ்திரேலியாவின் குவான்ட்டஸ், ஜெட் ஏயார் விமானங்களுக்கும். சாதாரணமாக சிறிய நாடுகள் மீண்டும் எழுந்து நிற்க வழியில்லாத நடவடிக்கைகள் இவைகள். முழு உலகமும் மறுபடியும் மிகப் பெரும் பொருளாதார மந்தநிலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். அசாதாரணமான ஒரு காலகட்டத்தில் நாம் இருந்துவருகிறோம்.

இன்றில் இருந்து எங்கள் நாட்டில் ஒரு மாதத்துக்கு ஒருவரும் வீட்டைவிட்டு வெளியில் போகமுடியாது. அவசர சேவையில் ஈடுபடுகிறவர்கள் மட்டுமே வெளியில் போக முடியும். போலீஸும், மிலிட்டரியும்கூட மக்கள் நடமாட்டத்தைத் தடுக்க வீதிகளில் நடமாடப் போகிறார்கள். மிக அவசியமான பொருட்களை வாங்கவோ அல்லது டாக்டரைப் பார்க்கவோ மட்டுமே வெளியில் போக அனுமதியுண்டு. அரசு இதைத் தீவிரமாக அமல்படுத்தப்போகிறது. நம்மையெல்லாம் ஆளும் கர்த்தர் மட்டுமே இந்த இக்கட்டான ஆபத்துக் காலத்தில் நமக்கும் தேசங்களுக்கும் விடுதலை தரமுடியும். அவரை நோக்கிக் கூப்பிடுவதைத் தவிர இந்த வேலையில் வேறு முக்கிய வேலை நமக்கென்னவிருக்கிறது?

நம்மினத்து மக்கள் வாழும் நாடுகளிலெல்லாமே மக்கள் வீட்டைவிட்டு வெளியில் போகமுடியாத நிலை வந்திருக்கிறது. நமக்கெல்லாம் எப்போதுமில்லாதவகையில் இன்றைக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது. நேரத்தை மீதப்படுத்திக்கொள்ளும்படி பவுல் தன் நிருபத்தில் ஆலோசனை தந்திருக்கிறார். இந்த சமயத்தில் நாம் என்ன செய்யவேண்டும்; நேரத்தை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; எப்படி நடந்துகொள்ள வேண்டும்? அதுபற்றி, கிறிஸ்தவனின் பார்வையில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதை விளக்க விரும்புகிறேன். உங்களுக்கு சொல்லப்போவதையே நானும் செய்யப்போகிறேன். கர்த்தர் நமக்கு உதவட்டும்.

(1) கவலைப்படுவதை முதலில் நிறுத்திக்கொள்ளுங்கள் – கொரோனா வைரஸ் பற்றிய கவலை எங்கள் நாட்டில் சிலரை துப்பாக்கியும், துப்பாக்கிக் குண்டுகளும் வாங்குமளவுக்கு கொண்டுபோயிருக்கிறது. இந்த வைரஸ் பிரச்சனை பலருக்கு தங்கள் வேலை பற்றியும், பணப்பற்றாக்குறை பற்றியும் பெருங்கவலையை ஏற்படுத்தும். அவர்களுக்கு உயிர்ப்பயமேற்படும். இதெல்லாம் மன உளைச்சளை மட்டுமல்லாமல் பலருக்கு மனச் சோர்வையும், மனநிலை பாதிப்பையும் ஏற்படுத்தலாம். சிலர் தற்கொலையைக்கூட நாடலாம். இதைவிட அநேக தொலைக்காட்சி செய்திகள், இல்லாததையும் பொல்லாததையும் செய்திகள், விவாதங்கள் என்ற பெயரில் வெளியிட்டு (Sensationalism, misinformation and fake news) இருக்கும் பயத்தை அதிகப்படுத்துகின்றன. உண்மையில் இந்த நேரத்துக்கு அவசியமான அரச அறிவிப்புகளை அறிந்துகொள்ளுவதற்காக அதற்குரிய செய்திகளைப் பார்ப்பதோடு நிறுத்திக்கொண்டு கொரோனா வைரஸ் பற்றி 24 மணிநேரம் டி.வியில் வாய்க்குவந்தபடி அலசிக்கொண்டிருப்பவர்கள் பேச்சையெல்லாம் கேட்காமல் இருப்பது நம்முடைய மனதைத் தெளிவாக வைத்திருப்பதற்கு உதவும். அத்தோடு வட்செப், டெக்ஸ் மெசேஜுகளில் அதிகாரபூர்வமற்றதாக வரும் தகவல்களை வாசிப்பதையும் நிறுத்திக்கொள்ளுவதும் நல்லது. இதெல்லாம் அநாவசியத்துக்கு நம்மைப் பயமுறுத்தி கவலையையும், மனஉளைச்சலையும், பயத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

கவலைகளும், மன உளைவுகளும் விசுவாசமில்லாதவர்களுக்கு ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. அது கிறிஸ்தவர்களுக்கும் ஏற்படும். பாவ சரீரத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நம்மைக் கவலைகள் பாதிக்கத்தான் செய்யும்; கவலைப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகத்தான் செய்யும். அதனால்தான் வேதம் நாம் கவலைப்படக்கூடாது என்று சொல்லுகிறது. அதாவது, கவலைப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகின்றபோது கவலைகளும், மனத்தளர்ச்சியும் ஏற்படும் என்பதை உணர்ந்து அவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறது வேதம். கிறிஸ்தவர்கள் விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும் வாழுவதற்கான இரட்சிப்பை அடைந்திருக்கிறார்கள். எப்படி நாம் சகல பாவங்களையும் நம்மில் இருந்து அகற்றப் போராட வேண்டுமோ அதேபோல் நம் விசுவாசத்திற்கும், நம்பிக்கைக்கும் ஆபத்தானதாக இருந்துவிடும் கவலைகளையும், மனஉளைவுகளையும் தீவிரத்தோடு தவிர்க்க வேண்டும். எங்கு அநாவசியக்கவலைகளும், பயமும் இருக்கிறதோ அங்கு விசுவாசம் விலகி நிற்கிறது. எதெல்லாம் நம்மைக் கவலைப்பட வைக்கிறதோ அதையெல்லாம் நாம்தான் கவனத்தோடு தள்ளிவைக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அவற்றைத் தவிர்த்துக்கொள்ளக்கூடிய வல்லமையை நமக்குள் வாசம் செய்யும் ஆவியானவர் நமக்குத் தந்திருக்கிறார். ஆதலால் அவற்றைத் தவிர்த்துக்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்கவேண்டும். அதனால்தான் மத்தேயு 6ல் இயேசு சொல்லுகிறார்,

25. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? 26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? 27. கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?

34. ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.

இந்த வசனங்களில் இயேசு கவலைப்படுவதால் எந்தப் பிரயோஜனமுமில்லை என்பதைத் தெளிவாகவே விளக்கியிருக்கிறார். கிறிஸ்தவன் கவலைப்படும்போது கிறிஸ்துவை நம்புவதைத் தவிர்த்து தனக்கு முன்னிருக்கும் பிரச்சனையைப் பார்த்து பயப்பட ஆரம்பிக்கிறான். அதைத்தான் செய்யவேண்டாம் என்கிறார் இயேசு. தன்னை விசுவாசிக்கின்ற ஒருவன் கவலைப்படுவதற்கு எந்தக் காரணமுமில்லை என்று விளக்குகிறார் இயேசு. அத்தோடு கவலைப்படுகிறவர்களைப் பார்த்து அவர் ‘அற்ப விசுவாசிகள்’ என்கிறார் (6:30).

இயேசு மட்டுமல்லாமல் பேதுரு தன் முதலாவது நிருபத்தில் 5ம் அதிகாரத்தில்,

7. அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

இங்கே பேதுரு விளக்குவதைத் தமிழ் வேதத்தில் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. அதாவது, ‘அவர் (கிறிஸ்தவர்களாகிய) உங்கள் மேல் அதிக அக்கறையுள்ளவராயிருப்பதால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்’ என்கிறார் பேதுரு. இது சமீபத்தில் நான் பிரசங்கம் செய்த வசனம். இதில் தமிழ் வேதத்தில் ‘வைத்துவிடுங்கள்’ என்பது ஒரு கழுதையின் மேல் பொதி மூட்டையைத் தூக்கிப் போட்டுவிடுகின்ற இலக்கணபூர்வமான அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. அந்தப்படி நம் கவலைகள் எல்லாவற்றையும் நாம் அவர்மேல் தூக்கிப் போட்டுவிடவேண்டும் என்கிறார் பேதுரு.

நமக்கெல்லாம் நன்கு தெரிந்த ஒரு வேதப்பகுதி பிலிப்பியர் 4:6. அதிலே பவுல் சொல்லுவதைக் கவனியுங்கள்,

6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள்.

இதில் பவுல், நாம் எதற்கும் கவலைப்படக்கூடாது என்று சொல்லுகிறார். அதாவது நாம் கவலைப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லாதது மட்டுமல்ல, நாம் கவலைப்படக்கூடாது என்பதைப் பவுல் கட்டளையாக இங்கே கொடுத்திருக்கிறார். இது கட்டளைக்குரிய இலக்கணத்தின்படியே மூலமொழியான கிரேக்கத்தில் அமைந்திருக்கிறது. நாம் ‘ஒன்றுக்கும்’, எதற்கும் கவலைப்படாமல், ‘எல்லாவற்றையும்’, அனைத்தையும் கர்த்தரிடம் ஜெபத்தில் தெரியப்படுத்தவேண்டும் என்கிறார் பவுல். எதற்காவது நாம் கவலைப்படுகிறபோது அந்த விஷயத்தில் நாம் கர்த்தரை நம்பாமல் இருந்துவிடுகிறோம். பேதுரு சொல்லுவதுபோல் அந்த விஷயத்தை அவர்மேல் ‘தூக்கிப்போடாமல்’ போய்விடுகிறோம். அத்தோடு இந்த வசனத்தில் தமிழ் வேதத்தில் ‘ஸ்தோத்திரத்தோடே’ என்றிருப்பது நல்ல தமிழில் ‘நன்றியறிதலோடு’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். வடமொழி வார்த்தையான ஸ்தோத்திரம் என்பதை நாம் பொதுவாக praise என்று எடுத்துக்கொள்ளுகிறோம். இங்கு ஆண்டவருக்கு நாம் எந்தவிஷயத்தைப் பொறுத்தவரையிலும் நன்றிதெரிவிக்க வேண்டும் என்கிறார் பவுல். கொரோனா வைரஸ் ஆபத்தானதுதான்; அது பலரின் உயிரைக்குடித்துவிடக்கூடியதுதான். இருந்தபோதும் இந்த ஆபத்தான காலத்திலும் நாம் கர்த்தருக்கு நன்றிதெரிவிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆபத்தான இந்த சூழ்நிலையிலும் அவரே இறையாண்மையுள்ள கர்த்தராக இருக்கிறார். கொரோனா வைரஸ் அவருடைய பூரணக்கட்டுப்பாட்டில் இருக்கிறது. அது அவரை மீறி எவரையும் எதுவும் செய்துவிட முடியாது. கர்த்தரின் இறையாண்மையை மனதில் கொண்டு எல்லாக் கவலைகளையும், பயத்தையும் அவர்மேல் ‘தூக்கிப்போட்டுவிட்டு’ அவரிடம் நாம் ஜெபத்தில் நன்றியறிதலோடு எல்லா விண்ணப்பங்களையும் தெரிவிக்க வேண்டும். இயேசு சொன்னார் (யோவான் 14:1),

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

ஜெபியுங்கள், கர்த்தர் மட்டும் தரக்கூடிய சமாதானத்தை அவரிடம் கேளுங்கள். பவுல் சொல்லுகிறார் (பிலிப்பியர் 4:7),

அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

(2) வேலை அட்டவணை (Work sehedule) ஒன்றைத் தயாரியுங்கள் – வீட்டுக்குள் இருக்கவேண்டியிருக்கும் இந்தக் காலங்கள் இலகுவானதல்ல. என் நாட்டில் இருந்து பணி செய்வது மட்டுமல்லாமல் இரண்டு மாதங்களுக்கொருமுறை வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து பணிபுரிந்த நான் இப்போது வீட்டுக்கு வெளியில் (அவசியம் இருந்தாலொழிய) போகமுடியாத நிலையில் இருக்கிறேன். விமானப்பயணத்தை நினைத்தும் பார்க்க முடியாது! வீட்டுக்குள் இருந்து பழக்கப்படாமல் இருக்கிற எல்லோருக்குமே இது ஒரு சவால்தான். அதை நினைக்கும்போதே மனத்தளர்ச்சி உண்டாகலாம். அத்தோடு அநேகர் வீட்டில் இருந்து வேலை செய்யவேண்டிய நிலையில் இருப்பார்கள். பலருக்கு சிறு குழந்தைகள் இருக்கலாம்; அவர்களும் வெளியில் போகமுடியாது. வீடுகள் சிறிதாக இருந்து குடும்பம் பெரிதாக இருப்பவர்களுக்கும் இந்தக் காலங்கள் இலகுவானதாக இருக்காது. இதெல்லாம் பெரிய சவால்களாகத்தான் இருக்கப்போகின்றன. இத்தனைக்கும் மத்தியில் எப்படி நாட்களைக் கடத்தப்போகிறோம் என்ற நினைவு எழாமல் இருக்காது.

இக்காலங்களை நாம் எதிர்மறைக் காலங்களாக எண்ணாமல் நேர்மறைக் காலங்களாக ஏன் பார்க்கக்கூடாது? கிறிஸ்தவர்களுக்கு பிரச்சனைகள் எப்போதுமே தடைகள் அல்ல என்று வேதம் சொல்லுகிறதே; அவை நமக்கு முன்னேறுவதற்கான படிக்கட்டுகள் மட்டுமே. ஆகவே, வீட்டுக்குள் இருக்கவேண்டிய இந்தக் காலங்களில் ஒவ்வொரு நாளும் செய்யவேண்டிய பணிகளைப் பற்றி ஒரு அட்டவணையைத் தயாரித்துக்கொள்ளுங்கள். நான் என் கம்பியூட்டர் ஹோம் ஸ்கிரீனில் குறிப்புகளை (Sticky Notes) எழுதிவைத்துக்கொள்ளுவது வழக்கம். இன்றைய நாளில், ஒரு வாரத்தில், மாதத்தில், நான் செய்துமுடிக்க வேண்டிய முக்கிய பணிகளையெல்லாம் அதில் குறித்துவைத்து விடுவேன். ஒவ்வொரு நாளும் அந்தக் குறிப்புகளின் அடிப்படையில் எனக்கு முன்னால் இருக்கும் முக்கிய பணிகளை அந்நாளில் முடிந்தளவுக்கு முடித்துவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இப்படியொரு திட்டத்தை வகுத்துக்கொள்ளாமல் எவரும் நேரத்தை மீதப்படுத்தி வேலைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது. அட்டவணையொன்று இல்லாவிட்டால் எத்தனையோ வேலைகள் இன்றைக்கு இருக்கின்றனவே என்ற மனப்பாரத்தோடு எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என்ற திட்டமொன்றும் இல்லாமல் ஒன்றையும் சரிவர முடிக்காமல் நாள் முழுவதும் பாரத்தோடு இருந்துவிடுவோம்; நாள் முடிவில் ஒன்றையும் சரியாக முடிக்கவில்லை என்ற கவலை வேறு தொற்றிக்கொள்ளும். இதற்கெல்லாம் இடம் வைக்காமல் ஒரு திட்டத்தோடு நாளை ஆரம்பிக்க வேண்டும்; திட்டமிட்டவற்றை செய்துமுடித்துவிடப் பார்க்கவேண்டும்.

இப்போதுதான் அதிக நேரம் நமக்கிருக்கிறதே. உடனே ஒரு அட்டவணையைத் தயாரித்துக்கொள்ளுங்கள். வீட்டில் இருந்து வேலை செய்வதானால் உங்கள் வேலைக்கு இவ்வளவு நேரம், குடும்பத்திற்கு இவ்வளவு நேரம், பிள்ளைகளோடு செலவிட இவ்வளவு நேரம், குடும்ப ஆராதனைக்கு இத்தனை நேரம், உங்களுடைய தனிப்பட்ட தியானம், வாசிப்பு மற்றும் வேதப்படிப்புக்கு இவ்வளவு நேரம், உடற்பயிற்சிக்கு இவ்வளவு நேரம் என்று ஒரு திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். எங்கள் நாட்டில் ஒரு நாளில் ஒரு தடவை வெளியில் போய் உடற்பயிற்சி செய்ய அனுமதித்திருக்கிறார்கள். அப்படிப்போகும்போது மற்ற நபர்களிடம் இருந்து இரண்டு மீட்டர் தள்ளியே இருக்கவேண்டும். வீட்டிற்குள்ளேயே பெரும்பாலும் இருக்கப்போவதால் உடற்பயிற்சி நம் உடல் நலத்துக்கு மிகவும் அவசியமாகிறது.

ஞாயிற்றுக் கிழமையை எப்படி நல்ல முறையில் பயன்படுத்துவது என்பதையும் முன்னோக்கியே திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள். அது வீட்டுவேலை செய்வதற்கோ அல்லது சோம்பலோடு உறங்குவதற்கோ தரப்பட்டிருக்கும் நாளல்ல; ஆவிக்குரியவிதத்தில் அனுசரிக்கவேண்டிய நாளது. ஓய்வுநாளைக் கவனத்தோடு அனுசரித்து குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் உதாரணமாக இருங்கள். அத்தோடு பல வாரங்களுக்கு வீட்டில் இருக்கப்போவதால் இன்னும் அநேக காரியங்களை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. முடிந்தால் வீட்டில் திருத்தியமைக்க வேண்டிய நிலையில் இருக்கும் அம்சங்களைத் திருத்தியமைக்கலாம். இதில் நியூசிலாந்து மக்கள் கைதேர்ந்தவர்கள். நான் வசிக்கும் ஏரியாவில் வீட்டைத் திருத்தியமைக்கத் தேவைப்படும் பொருட்களை விற்கும் கடை இந்தவாரம் அல்லோலகல்லோலப்பட்டு அந்தப் பகுதியில் டிராபிக் ஸ்தம்பிக்கும் நிலைக்குப் போயிருந்தது. ஒரு மாதம் வீட்டைவிட்டு வெளியில் போகமுடியாத நிலை இந்நாட்டு மக்களுக்கு பெரும் ‘லக்ஸரி’ அதாவது லாட்டரி டிக்கெட்டில் வென்றதுபோலத்தான். ஏனென்றால், இந்தக் காலத்தைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் வீட்டில் திருத்தவேண்டிய பகுதிகளையெல்லாம் திருத்தியமைத்துக் கொள்ளுவார்கள். பலர் ‘லொக்டவுன்’ வருவதற்கு முன்னாலேயே அத்தகைய வேலைகளைச் செய்வதற்கான பொருட்களை வாங்கிக் குவித்திருந்ததைக் கவனித்தேன். இங்கு மக்கள் இந்த விஷயங்களுக்கு வேலையாட்களைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பெரும் செலவாகும் என்பது மட்டுமல்லாமல், அத்தகைய செலவுகளுக்கு அவசியமில்லாமல் தாங்களே அத்தகைய வேலைகளைச் செய்துகொள்ளுவதற்கான திறமைகளையும், வசதிகளையும் கொண்டிருக்கிறார்கள். என் நண்பரான ஒரு போதகர்கூட இதில் கைதேர்ந்தவர். என் வீட்டில் சில திருத்தவேலைகளை அவரே செய்துதந்திருக்கிறார். இத்தகைய திறமை கொண்டிருப்பவர்கள் இந்த நாட்களைப் பயன்படுத்தி எவ்வளவு பணத்தை மீதம் செய்துகொள்ளுகிறார்கள் தெரியுமா? அன்றாடம் வேலைக்குப் போகும் நிலையிருந்திருந்தால் அவர்களுக்கு இதைச் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்காது; விடுமுறைக்காலத்தில் மட்டுமே அவற்றைச் செய்திருக்க முடியும். உயிர்பயத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கோவிட்-19 இவர்களுக்கு இந்தப் பொன்னான வாய்ப்பை அளித்திருக்கிறது.

மேலே நாம் கவனித்திருக்கும் காரியங்களைச் செய்ய வசதியில்லாதவர்கள் வீட்டைத் துப்புரவு செய்யலாம்; வீட்டுக்கு வெளியில் தோட்டமிருக்குமானால் அதில் எதையும் பயிரிடலாம்; பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கலாம்; கணவன்மார் மனைவிக்கு உதவி செய்யலாம்; போனில் தொடர்புகொண்டு சக விசுவாசிகளுக்கு ஆறுதல் சொல்லலாம்; நேரமில்லை என்று இதுவரை தள்ளிவைத்து வந்திருக்கும் முக்கிய காரியங்கள் இருந்தால் அவற்றையும் முடித்துவிடலாம். இப்படிக் கண்முன் மலைபோல் குவிந்து நிற்கும் எத்தனையோ வேலைகளைத் திட்டமிட்டு ஒரு அட்டவணையைத் தயாரித்து செய்ய ஆரம்பிக்காமல் எப்படி நிறைவாக அவற்றை நிறைவேற்ற முடியும்?

(3) வாசிப்பதற்கு ஒரு திட்டத்தை வகுத்து வாசிப்பில் ஈடுபடுங்கள் – வாசிப்பின் அவசியத்தைப் பற்றி நான் எவ்வளவோ எழுதியிருக்கிறேன். வாசிப்பவர்களும், அதைப்பயிற்சியாகக் கொண்டிருப்பவர்களும் நம்மினத்தில் மிகக்குறைவு. இந்தக் காலங்களை நாம் வாசிப்பில் உயர ஆண்டவரே ஏற்படுத்தித் தந்திருக்கும் காலங்களாக நாம் ஏன் நினைத்துப் பார்க்கக்கூடாது? நேரமில்லை என்று சொல்ல வழியில்லாதபடி வீட்டுச் சிறைவாசத்தைக் கர்த்தர் தந்திருக்கிறாரே. அதை ஏன் பயன்படுத்திக்கொண்டு வாசிப்புப் பயிற்சியில் முன்னேறக்கூடாது. இரண்டு நாட்களுக்கு முன் ஸ்ரீ லங்காவில் இருந்து ஒரு சகோதரன் இதைத்தான் எனக்கு வடசெப்பில் எழுதியிருந்தார். இந்தக் காலங்களைப் பயன்படுத்தி எதையெல்லாம் திட்டமிட்டு வாசிக்கப்போவதாக அவர் எனக்கு விளக்கியிருந்தார். நிச்சயம் அது அவருக்கு அநேக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும். என் சபை அங்கத்தவர் ஒருவரோடு கொஞ்ச நேரத்துக்கு முன் புத்தகங்களைப்பற்றிப் போனில் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு மாதத்துக்குப் பிறகு நீங்கள் ஒரு இறையியலறிஞராக மாறிவிடப்போகிறீர்கள் என்று சிரிப்போடு சொன்னேன். அவர் வாசிப்பில் அதிகம் அக்கறை காட்டுகிறவர்; அவர் ஏற்கனவே ஒரு வாசிப்புத் திட்டத்தைப் போட்டு வைத்திருக்கிறார். இந்தக் காலத்தில் உங்களுக்கு தமிழில் வாசிக்க அதிக வசதிகள் உண்டு. திருமறைத்தீபத்தை நீங்கள் இண்டர்நெட்டில் வாசிக்கலாம்; பிரதிகள் கையில் இருந்தால் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நாம் வெளியிட்டிருக்கும் நூல்களை, இதுவரை வாசிக்காமல் இருந்தால் அவற்றை வாசிக்க ஆரம்பிக்கலாம். சில புத்தகங்கள் மீண்டும், மீண்டும் வாசிக்க வேண்டியவை. அதற்கென்று நேரத்தை ஒதுக்கிவைத்து அதை முறையாகச் செய்யப்பாருங்கள். வேதத்தையும் அதிகளவு வாசிக்க இந்தக் காலங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அட்டவணை போட்டு முறையாக தொடர்ச்சியாக வாசிப்பது நம்மத்தியில் பெரும்பாலானோரிடம் இல்லை. அந்தக் குறைபாட்டைப் போக்கிக்கொள்ள இப்போதே ஒரு திட்டத்தைப் போட்டு வாசிப்பை ஆரம்பியுங்கள். இதேப்போல இன்னுமொரு வாய்ப்பு நமக்குக் கிடைக்காமல் போகலாம்.

இந்தக் காலங்களில் ஊழியப்பணிபுரியும் பிரசங்கிகளும், போதகர்களுங்கூட வீட்டில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. நம்மினத்தில் அநேக போதகர்கள் வாசிப்பதேயில்லை; அவர்களுக்கு வேதசத்தியங்களில் நல்லறிவும் தேர்ச்சியும் இல்லை. இந்தக் காலங்களை அவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய புதிய செய்திகளை அருமையாகத் தயாரிக்கவும், வேத சத்தியங்களில் மேலும் தெளிவை ஏற்படுத்திக்கொள்ளவும், அந்தச் சத்தியங்களைப் போதிக்கப் பாடங்களைத் தயாரித்துக்கொள்ளவும் இந்தக் காலங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாமே. ஒன்று மட்டும் உண்மை; எவரும் நேரமில்லை என்று சாக்குப்போக்குச் சொல்லமுடியாத ஒரு நிலைமையை கோவிட்-19 உருவாக்கியிருக்கிறது. சில அதிகப் பிரசங்கிகள், உடலுக்கும், உயிருக்கும் ஆபத்தேற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் வாசிப்பைப் பற்றி எழுதி இந்த மனிதர் போரடிக்கிறாரே என்று சொல்லுவது என் காதில் விழுகிறது. உடலும், உயிரும் எப்போதுமே இந்த மண்ணில் தொடர்ந்திருந்துவிடப் போவதில்லை. ஒரு நாள் எல்லோருமே உயிரை இழக்கத்தான் போகிறோம். இருக்கிற நாட்களை மீதப்படுத்தி கர்த்தரின் வார்த்தையையும், சத்தியத்தையும் பற்றிய விளக்கங்களை வாசிப்பின் மூலம் பெற்றுக்கொண்டால் இரட்சிப்பின் நிச்சயத்திலும், சந்தோஷத்திலும் இருக்கிற காலங்களில் வளர்ந்து, உயர்ந்து பரலோகத்தைப்பற்றிய ஆனந்தத்தில் திளைக்கலாமே!

(4) சுவிசேஷ சாட்சிகளாக நாமிருக்க வேண்டும் – இந்தக் காலங்களில் கூட்டங்கள் நடத்துவது என்பது முடியாத காரியம். மற்றவர்களை நேரடியாக சந்தித்துப் பேசும்போதே கோவிட்-19 தொற்றிக்கொள்ளுவதால் கூட்டங்கூடுவதை, ஆவிக்குரிய கூட்டங்கள் கூடுவதையும் அரசாங்கங்கள் தடைசெய்திருக்கின்றன. அத்தகைய சபைக்கூட்டமொன்றில் இருந்தே சிங்கப்பூரில் கோவிட்-19 ஆரம்பித்தது. இப்போதுகூட ஸ்ரீ லங்காவின் வடபகுதிக்கு சுவிட்சர்லாந்தில் இருந்து வந்து கூட்டம் நடத்திய ஒரு பிரசங்கி அவர் வீடு திரும்பியவுடன் கோவிட்-19 அவருக்கும் வந்திருக்கிறது. ஏற்கனவே ஈரல் பலவீனம் அவருக்கு இருந்திருப்பதால் சீரியஸான நிலையில் அவர் இருக்கிறாராம். அத்தோடு அவர் பேசிய கூட்டத்திற்குப் போனவர்களை இப்போது இலங்கைப் போலீஸும், ஹாஸ்பிடல் அதிகாரிகளும் தேடிப்பிடித்து சோதனை நடத்திவருகிறார்களாம். சுவிசேஷ, பிரசங்க மற்றும் போதனைக் கூட்டங்களை இந்தக்காலங்களில் நடத்த முடியாது.

அப்படியானால் சுவிசேஷத்தை எப்படிச் சொல்லுவது? இதற்கு இன்டர்நெட்டைப் பயன்படுத்தி சபைமக்களுக்குப் பிரசங்கம் செய்யலாம். அதன் மூலம் மற்றவர்களுக்கு சுவிசேஷ செய்தியளிக்கலாம். இருந்தாலும் இதைவிட சுவிசேஷ சாட்சியுள்ளவர்களாக இந்தக்காலங்களில் இருப்பதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். உலகத்துக்கு ஒளியாகவும், உப்பாகவும் இருக்கும்படி இயேசு சொன்னார். பவுல் பிலிப்பியர் 2:14ல், ‘உலகத்திலே சுடர்களைப்போல பிரகாசிக்கின்ற நீங்கள்’ என்று விளக்கி கிறிஸ்தவர்கள் எப்படி இந்த உலகத்தில் வாழவேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைவுறுத்துகிறார். இந்தக் காலங்களில் சுவிசேஷத்தை நாம் வாயால் மட்டுமல்லாமல் முக்கியமாக வாழ்க்கை நடத்தையின் மூலம் அறிவிக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். இன்று அநேகர் பயத்தில் இருக்கிறார்கள்; குழம்பிப்போய் இருக்கிறார்கள். இன்று காலை நான் ஒருவரோடு போனில் பேசியபோது அவருடைய சம்பளம் 20% குறைக்கப்பட்டிருக்கிறது என்றும், 1000 பேர் வேலை செய்யும் அவருடைய தொழிலகம் பலரை வேலை நீக்கம் செய்ய நேரிடும் என்றும் சொன்னார். வீட்டில் இருந்து எல்லோரையும் வேலைசெய்ய வைக்கக்கூடிய தொழிலைக் கொண்டதல்ல அவருடைய தொழிலகம். இதையும்விட மோசமான நிலைக்கு அநேகர் தள்ளப்பட்டிருப்பார்கள். அன்றாடம் வேலை செய்து சம்பளம் பெற்றுக்கொண்டிருந்திருப்பவர்களுக்கு இந்தக் காலங்கள் கொடுமையானதாக இருக்கும். இது சுற்றியிருப்பவர்கள் மீது நாம் கருணைகாட்ட வேண்டிய நேரம்; அவர்களோடு அன்போடு நடந்துகொள்ள வேண்டிய நேரம்; கனிவாகப் பேச வேண்டிய நேரம்.  வாழ்க்கைப் பிரச்சனைகளோடும், உயிர்பயத்தோடும் இருப்பவர்களுக்கு நாம் ஆறுதல் சொல்ல வேண்டிய நேரமிது. நம்முடைய வாழ்க்கையும், வாய்ப்பேச்சும் இந்தக்காலங்களில் சுற்றியிருப்பவர்களுக்கு ஒளியூட்டுவதாக இருக்கவேண்டும். சுவிசேஷத்தைப் பற்றியும், சத்தியத்தைப் பற்றியும் இந்த நேரத்தில் நாம் எவரோடும் தர்க்கங்களில் ஈடுபடக்கூடாது; வாக்குவாதம் செய்யக்கூடாது. அன்போடு ஆண்டவரின் செய்தியை நேரத்திற்கு தகுந்தமுறையில் பயன்படுத்தவேண்டும்.

————————————————————————————————————

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 33 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக