கேட்டுப்பார்க்க வேண்டிய கேள்வி

2015

திருமறைத்தீப வலைத்தளக் குழுவினரின் சார்பாக இவ்வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். புதிய ஆண்டு ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை உங்களுக்கு அள்ளித்தர ஆண்டவர் கிருபை பாராட்டுவாராக. கடந்து போகும் வருடத்தில் அதற்கு முன்னைய வருடத்தைவிட அநேகமானோர் இவ்வளைத்தளத்தைப் பயன்படுத்திக்கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வரப்போகும் ஆண்டில் ஆவிக்குரிய நல்லாக்கங்களையும், மேலும் புதிய அம்சங்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்த எண்ணங்கொண்டிருக்கிறோம். தொடர்ந்து இந்தத் தளத்தைப் பயன்படுத்திக்கொள்வதோடு மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தி வையுங்கள்.

வரப்போகும் புதிய வருடத்துக்காக உங்களை வாழ்த்துகிறபோது எந்த வேதவசனத்தைக் குறிப்பாக அடையாளங்காட்டி வாழ்த்தலாம் என்று நினைத்துப் பார்த்தபோது 1 தீமோ 1:15 நினைவுக்கு வந்தது. இந்த வசனத்தைத்தான் வரப்போகிற ஓய்வு நாளில் நான் பிரசங்கிப்பதற்குப் பயன்படுத்தப் போகிறேன். “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமுமானது. . .” என்பதே அந்த வேத வார்த்தைகள். ஆங்கிலத்தில் வசனத்தின் ஆரம்பத்தில் வருகின்ற பகுதிகள் தமிழ் மொழிபெயர்ப்பில் இறுதியில் வரும். அந்தவகையில்தான் இந்த வசனமும் காணப்படுகிறது. ஆனால் பவுல் தான் சொல்ல வந்த அதிமுக்கியமான உண்மையைச் சொல்லுவதற்கு முன்பாக ஆங்கில வேதத்தில் காணப்படுகிறபடி தமிழில் இறுதியாக வந்திருக்கும் விஷயங்களையே முதலில் சொல்லி ஆரம்பிக்கிறார். அதாவது உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமான ஒரு விஷயத்தை அவர் சொல்ல வருவதாகச் சொல்லி ஆரம்பிக்கிறார். தான் சொல்லவிருக்கின்ற விஷயம் எத்தனைப் பெரியது, எத்தனை அருமையானது, எத்தனை உண்மையானது, எந்தளவுக்கு உதாசீனப்படுத்திவிட முடியாதபடி நம்பத்தகுந்ததும், ஏற்றுக்கொள்ளக்கூடியதும், ஏற்றுக்கொள்ள வேண்டியதுமானது என்பதை ஆணித்தரமாக, அழுத்தமாக விளக்கிய பின்பே சொல்ல வந்த உண்மையை விளக்க ஆரம்பிக்கிறார். இந்தவிதத்தில் பவுல் மூன்றுமுறைதான் இந்த வார்த்தைப் பிரயோகங்களைத் தன்னுடைய நிருபங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அதுவும் அந்த மூன்றும் போதக நிருபங்கள் என்று அழைக்கப்படுகின்ற மூன்று நிருபங்களான 1 தீமோ, 2 தீமோ, தீத்து ஆகியவற்றிலேயே காணப்படுகின்றன. மிகவும் குறைந்தளவுக்கு அதுவும் கட்டாயத்தின் அடிப்படையில், வற்புறுத்திச் சொல்ல வேண்டிய விஷயங்களுக்காக மட்டுமே பவுல் இதைப் பயன்படுத்தியிருப்பதால் அவர் இங்கே சொல்ல வருகின்ற விஷயம் எத்தனைப் பெரியது அவசியமானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அத்தனை முக்கியமான அந்த அருமையானதும், பெரியதுமான விஷயம் என்ன? “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” என்பதுதான். இந்த வசனத்தை வருகிற புதிய வருடத்தில் நாம் அதிகம் சிந்தித்துப் பார்த்து கர்த்தருக்காக வாழவேண்டுமென்பதுதான் என்னுடைய ஆவலும், எதிர்பார்ப்பும். இதைவிட மேலானதொன்று இருக்க முடியுமா? பாவிகளை இரட்சிக்க இயேசு வந்திருக்காவிட்டால் இப்படி இந்த வசனத்தைப் பற்றி நான் எழுதியிருக்க முடியுமா என்ன? இயேசு தந்திருக்கும் இரட்சிப்பு அல்லவா இந்த வசனத்தை என்னை விளக்க வைத்திருக்கிறது. அத்தகைய இரட்சிப்பை நம்மைச் சேர்ந்தவர்களும், நம்மைச் சுற்றியிருப்பவர்களும் அடைய வேண்டும் என்ற இலட்சியப் பார்வையைவிட வேறு என்ன நமக்குத் தேவை? இந்த வசனம் இயேசுவை அறிமுகப்படுத்தி, அவர் எப்படிப்பட்டவர் என்பதை விளக்கி, அவர் எதற்காக இந்த உலகத்திற்கு வந்தார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பாவிகளை இரட்சிப்பதற்காக அவர் இந்த உலகத்திற்கு வந்தார் என்பது சத்தியமான வார்த்தைகள். பாவிகளாக ஆத்துமாக்கள் தங்களை இனங்கண்டு அதிலிருந்து விடுபடுவதற்கு இரட்சகரான இயேசுவை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புதிய வருடத்தில் தியாகத்தோடு சொல்லி வாழவேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் இலட்சியமாகக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆவல்.

எபோலா வைரஸும், ஆஸ்திரேலியாவரை கால்பதித்துவிட்ட ‘ஐசிஸ்’ இஸ்லாமியத் தீவிரவாத பயங்கரமும், வடகொரிய கிம் ஜொங்கின் அடாவடித்தனமும், அடிக்கடி விழுந்தும், காணாமலும் போய்விடும் விமானங்களும், கோரமான இயற்கைப் பாதிப்புகளும், நாடு நாடாக ஒழுக்கத்திற்கு ஓங்காரத்தோடு சமாதிகட்டி வரும் பின் நவீனத்துவ சமுதாயப்போக்கும் கடந்த வருடத்தில் உலக மக்களுக்கு பெரும் பயத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. இதற்கான நல்லவைகளே நடக்கவில்லை என்பதல்ல நான் சொல்ல வருவது. நல்லவைகளைவிட நம்மை பயமுறுத்தும் செயல்கள் அநேகம் நிகழ்ந்திருக்கின்றன; நடந்தும் வருகின்றன. இயேசுவின் வருகையின் நாள் சமீபித்துக்கொண்டு வருகிறபோது “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” என்ற இந்த வார்த்தைகள் சம்மட்டிபோல் என் காதில் ஒளிக்கின்றன. இன்னும் இன்னும் அதிகமாக, உலக மக்களுக்கு பாவத்தில் இருந்து விடுதலையளிக்கக்கூடிய இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற ஓர் உறுதி என்னுள்ளத்தில் எழுகின்றது. இயேசு இல்லாமலும், இரட்சிப்பை அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளாமலும் ஒருவராகிலும் பரலோகம் போய்விட முடியாது என்கிற நம்பிக்கை கொண்டிருக்கிற நாம் அந்தச் செய்தியை வைராக்கியத்தோடு அழிவை நாடி ஓடிக்கொண்டிருக்கிற ஆத்துமாக்களுக்கு எப்படிச்சொல்லாமல் இருக்க முடியும்? அத்தகைய வைராக்கியம் உங்களுக்கும் உருவாகி இந்தப் புதிய வருடத்தில் உங்கள் வாழ்க்கையை அந்தப் பணிக்காக அர்ப்பணித்து வாழுங்கள்.

“பாவிகளை இரட்சிப்பதற்காக இயேசு இந்த உலகத்திற்கு வந்தார்” என்ற இந்த சுவிசேஷச் செய்தி அருமையானதும், அதிமுக்கியமானதுமாக இருந்தபோதும் இதைத் தவிர வேறு எல்லாமே கிறிஸ்தவத்தில் அவசியமற்றது என்ற ஒரு தவறான கருத்து சிலருக்கு எங்கிருந்தோ பிறந்திருக்கிறது. சுவிசேஷத்தைத் தவிர வேறு எதற்கும் முக்கியம் கொடுக்கத் தேவையில்லை என்று கருதி தாங்கள் மட்டுமே சுவிசேஷ வாஞ்சையுள்ளவர்களைப்போல அவர்கள் தங்களை இனங்காட்டிக்கொள்ள முயலுகிறார்கள். அது அடிப்படையிலேயே கோமாளித்தனமான எண்ணம். உதாரணத்திற்கு வேதம் முக்கியமானதா? சுவிசேஷம் முக்கியமானதா என்று கேட்க முடியுமா? அப்படிக் கேட்பதே முழுத்தவறு. ஏனெனில் இரண்டுமே மிகமிக அவசியம்; ஒன்றில்லாமல் மற்றதிருக்க வழியில்லை. வேதத்தில் இருந்து புறப்படுவதே சுவிசேஷம். அதேபோல் திருச்சபை அமைப்பதும், அது வேதபூர்வமாக இருப்பதும், பரிசுத்தமாக பத்துக்கட்டளைகளுக்குட்பட்டு வாழ்வதும், ஓய்வுநாளைப் பரிசுத்தமாகக் கைக்கொள்ளுவதும், குடும்பத்தை வேதபூர்வமாக அமைத்துக்கொள்ளுவதும், கர்த்தரின் கட்டளைகள் அனைத்தையும் தவறாது தாழ்மையோடு கடைப்பிடிப்பதும் சுவிசேஷம் சொல்லுவதைப் போலவே முக்கியமானவை. இவற்றில் ஒன்றையும் நாம் தவறவிட்டுவிடக்கூடாது. இவை எல்லாவற்றிலும் நாம் சிறக்க வேண்டும்.

பிள்ளைகள் வயதானபின் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது உண்மைதான். திருமணத்திற்குப் பிறகு குடும்பம்தான் முக்கியம், பெற்றோர் அவசியமில்லை என்றா வேதம் சொல்லுகிறது? கிறிஸ்தவ வாழ்க்கையில் எல்லாமே முக்கியமானது; ஒவ்வொன்றும் அததற்குரிய சிறப்பான பங்கைக் கொண்டிருக்கிறது. அதேபோல் எதையும் உதாசீனப்படுத்தியும், உதறித்தள்ளிவிடாமலும் சுவிசேஷத்தை வாஞ்சையோடு தொடர்ந்து சொல்லவேண்டும். சுவிசேஷத்தின் மூலம் நம்மைக் கரைசேர்க்கிற ஆண்டவர் அந்தச் சுவிசேஷ வாழ்க்கையை வேதபூர்வமாக அமைத்துக்கொண்டு அதன் மூலமே அவரை நாம் மகிமைப்படுத்தவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். ஆகவே, சுவிசேஷ வாஞ்சையை வளர்த்துக்கொள்ளுங்கள்; அதேநேரம் வேதத்தையும், சபையையும், பரிசுத்த வாழ்க்கையையும் ஓரங்கட்டி விடாதீர்கள். அது கர்த்தரையே தூக்கியெறிவதற்கு சமமானது. சபையில்லாமல், பரிசுத்தமில்லாமல் சுவிசேஷம் சொல்லப்போவது ஒரு நல்ல பொருளை சிபாரிசு செய்யப்போகிறவன் அதைப்பற்றி அணுவளவு அக்கறையும் இல்லாமல் அதைச் செய்வதற்கு ஒப்பானதாகும்.

இறுதியாக, “பாவிகளை இரட்சிப்பதற்காக இயேசு உலகத்தில் வந்தார்” என்ற வேதவார்த்தைகள் அருமையானதும், அதிமுக்கியமானதும் மட்டுமல்ல, அவை ஜீவனளிப்பவை. அதுதான் அந்த வார்த்தைகளின் சிறப்புத்தன்மை. இந்த வார்த்தைகளில் ஜீவன் இருக்கின்றது. இவை வெறும் வார்த்தைகளல்ல; கேட்டு இரசிப்பதற்கோ, ஆராய்ந்து பாராட்டுவதற்கோ மட்டும் கொடுக்கப்பட்டவையல்ல. இவற்றை சிந்தித்துப் பார்ப்பதால் மட்டும் பயனில்லை. அதற்கெல்லாம் மேலாக இவை இதயத்தைத் தாக்கி அதை உருமாற்றி அமைக்கக்கூடிய சக்திவாய்ந்த வார்த்தைகள். வேறு எந்த இந்த உலகத்து வார்த்தைகளுக்கும் இல்லாத வல்லமையைக் கொண்டவை இவை. இந்த வார்த்தைகளைப் பவுல் பரிசுத்தஆவியால் வழிநடத்தப்பட்டு எழுதியிருக்கிறார். ஆவியின் ஜீவன் இந்த வார்த்தைகளில் பொதிந்திருக்கின்றன. இதை வாசிக்கின்ற நீங்கள் கிறிஸ்தவ விசுவாசியாக இருந்தால் இந்த உண்மை உங்களுக்கே தெரிந்திருக்கும். இந்த வார்த்தைகளே உங்களுக்கு அழிவற்ற ஜீவனைக் கொடுத்திருக்கின்றன.

இந்தப் பகுதியில் ‘இரட்சிப்பு’ என்ற பதம் வெறும் விடுதலையைப் பற்றி விளக்கும் பதமல்ல. ஆத்தும விடுதலையைக் குறிக்கும் ஜீவனுள்ள பதம் அது. சாகும் நிலையில் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறவனைக் காப்பாற்றுகிறபோது அவனுக்கு நாம் உயிர்ப்பிச்சை அளிக்கிறோம் இல்லையா? அதுபோல் நித்திய நரகத்தில் உணர்வோடும், உயிரோடும் சாகவிருக்கிறவர்களுக்கு ஆத்மீக உயிர்ப்பிச்சை அளிக்கும் வார்த்தைகள் இவை. அத்தகைய உயிர்ப்பிச்சையைக் கொடுக்கும் சக்தி இந்த வார்த்தைகளுக்கு இருக்கிறது. இயேசு கொடுக்கும் இரட்சிப்பு ஒருவரைப் பாவத்தின் ஆளுகையில் இருந்து அடியோடு விடுவிக்கிறது. அத்தோடு நித்திய மரணத்தில் இருந்து அவரைக் கரைசேர்க்கிறது. நித்தியத்திற்கும் இயேசுவோடு இருந்து வாழும்படிச் செய்கிறது. அதை நிறைவேற்றுவதற்காகத்தான் இயேசு இந்த உலகத்திற்கு வந்தார், வேறு எதற்குமல்ல.

இந்த வசனத்தில் இயேசு ‘இரட்சிப்பதற்காக’ வந்தார் என்றிருப்பதைக் கவனிக்க வேண்டும். அந்தப் பதம் அவர் நிறைவேற்ற வந்த பெரும்பணியைக் குறிக்கிறது. அது ஒரு வினைச்சொல். பாவிகளுக்கு இரட்சிப்பை அளிப்பதற்கு அவர் இரட்சகராக வந்தார். இரட்சிப்பை நிறைவேற்றினார். அது எப்படி நிகழ்ந்தது என்பதை இந்த வசனங்கள் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அவை உள்ளடக்கமாக அந்த வார்த்தையில் அடங்கியிருப்பதை மறுக்க முடியாது. பாவிகளுடைய பாவங்களைப் போக்குவதற்கு அவர் தேவ கோபத்தைத் தன்மேல் தாங்கி இரத்தப்பலியாகத் தன்னையே கல்வாரி சிலுவையில் பலிகொடுத்ததைத்தான் ‘இரட்சிப்பதற்காக’ என்ற வார்த்தை குறிக்கிறது. அத்தகைய கோப நிவாரணப் பலியின் மூலம் மட்டுமே பாவிகளுக்கு விடுதலை கிடைக்க முடியும். அதைச் செய்த தேவ குமாரனாக இயேசு இருக்கிறார்.

அந்த சிலுவைப் பணியை நிறைவேற்றுவதற்காக இயேசு ‘உலகத்தில்’ வந்தார் என்றிருப்பதைக் கவனியுங்கள். இதிலும் ஒரு விசேஷம் இருக்கிறது தெரியுமா? இயேசு யார்? திரித்துவத்தின் இரண்டாம் ஆள்தத்துவம். அவர் கடவுள். பூரண தெய்வீகத்தைக் கொண்டிருக்கும் தேவகுமாரன். அந்த தேவகுமாரன் இந்த உலகத்தில் வந்து சிலுவைப் பணியை நிறைவேற்றுவதென்பது சாதாரண காரியமல்ல. அதைத்தான் பிலிப்பியர் 2ம் அதிகாரம் 6-8 வரையுள்ள வசனங்கள் விளக்குகின்றன. இந்தப் பணியை நிறைவேற்றுவதற்காக தேவகுமாரனாகிய இயேசு முழுதெய்வீகத்தோடு மனிதரூபத்தையும் சுமக்க வேண்டியிருந்தது. பாவமேயில்லாதவர் நமக்காகப் பாவியாக வேண்டியிருந்தது. நம் பாவத்தைப் போக்கி நம்மை நீதிமான்களாக்க அவர் நீதியை நமக்காக சம்பாதிக்க வேண்டியிருந்தது. தேவனும் மனிதனுமாக இருந்து கிறிஸ்து நமக்காக மரித்து உயிர்த்தெழுந்தார். இதைத்தான் அவர் ‘இரட்சிப்பதற்காக’ வந்தார் என்ற வார்த்தை வெளிப்படுத்துகிறது. பாவிகளுடைய பாவங்களைப் போக்க கிறிஸ்து இயேசு செய்திருக்கும் பணி சாதாரணமானதா? திருச்சபைக் கீர்த்தனைகளையும், சங்கீதங்களையும் எழுதியிருக்கும் பெரிவர்கள் அவற்றை எத்தனைத் துடிப்போடு வார்த்தைகளில் பதித்திருக்கிறார்கள். ஜோன் நியூட்டனின் ‘அமேசிங் கிரேஸ்’ என்ற பிரபலமான ஆங்கிலப் பாடல் எத்தனை அருமையானது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? கிறிஸ்து இயேசு கொடுக்கும் ஈவாகிய இரட்சிப்பை அடைவதற்கு தாங்கள் பாவத்தில் இருப்பதை ஒவ்வொரு ஜிவனும் உணரவேண்டும் என்பதல்லவா? பாவிகளாகத் தங்களை இனங்கண்டுகொள்ள மறுக்கிறவர்கள் இயேசுவை ஒருபோதும் நாடமாட்டார்கள். பவுல் அடித்துச் சொல்லுகிறார், ‘பாவிகளை இரட்சிப்பதற்காக கிறிஸ்து இயேசு . . . வந்தார்’ என்று. பாவத்தை உணராதவர்களுக்கும், அதற்கு விலகியோடாதவர்களுக்கும் இந்த வார்த்தைகள் ஜீவனை அளிக்காது. பாவத்தை ஜீலேபியாக சுவைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த வார்த்தைகள் தேனாகத் தோன்றாது. பாவத்தைப்பற்றி அரிச்சுவடியும் அறியாதவர்களுக்கு இந்த வார்த்தைகள் வெறும் ஜீவனற்ற எழுத்துக்கள் மட்டுமே. தன்னை நீதிமானாக எண்ணிக்கொண்டிருக்கிறவர்களுக்கு இயேசு தேவையில்லை. அவர்கள் பரிசேயரைப்போன்ற சுயநீதிக்காரர்கள். கிறிஸ்துவிடம் அவர்கள் வரமாட்டார்கள்.

பாவிகளுக்கு மட்டுமே பவுலின் இந்த வார்த்தைகளுக்கான பொருள் புரியும்; அவர்களை மட்டுமே இந்த வார்த்தைகள் ஈர்க்கும். அவர்களுக்கு மட்டுமே நித்திய விடுதலையையும் கொடுக்கும். யோவான் 8ம் அதிகாரத்தில் (8:1-11) பாவியாகிய ஒரு பெண்ணைக் கல்லெடுத்துக் கொல்ல வந்த யூதர்களை வெட்கப்பட்டுத் திரும்பிப்போக வைத்தார் இயேசு. அவர்கள் எல்லாம் போய் அந்தப் பெண் மட்டுமே அங்கு நின்றிருந்தாள். அவர் அந்தப் பெண்ணைப் பார்த்து, ‘நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே’ என்றார். ஏன் தெரியுமா? அவருக்குத் தெரிந்திருந்தது அந்தப் பெண் தன்னைப் பாவியாக அடையாளங்கண்டுகொள்ள ஆரம்பித்திருக்கிறாள் என்று. பாவியாகிய அவளுக்குத் தெரிந்திருந்தது இயேசு யார் என்பது. பாவியாகிய அவளுக்குப் புரிந்தது இயேசுவின் வார்த்தைகள். பாவியான அவளால் மட்டுமே இயேசுவை அன்று ‘ஆண்டவரே’ என்று அழைக்க முடிந்தது. தங்களைப் பாவிகளாக இனங்கண்டுகொள்ள மறுத்தவர்களே அவரைவிட்டு அன்று ஓடிப்போனார்கள். இயேசுவின் இரட்சிப்பு ‘பாவிகளுக்கு’ மட்டுமே. நீங்கள் ‘பாவத்தில்’ இருந்து இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா? புதிய வருடத்தை எதிர்நோக்கும் நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டிய கேள்விதான் இது.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

One thought on “கேட்டுப்பார்க்க வேண்டிய கேள்வி

மறுமொழி தருக