மனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா?

பாவியாகிய மனிதன் ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளும் வல்லமையற்றவனாக இருக்கிறான் (Total Inability) என்ற போதனையை சரிவரப் புரிந்துகொள்ள முடியாத சிலர் பாவிகளுக்கு சுவிசேஷம் சொல்லுவதில் பயனில்லை என்ற தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். மனிதன் மோசமான பாவியாக, இயலாதவனாக இருக்கிறான், அதனால் அவனுக்கு சுவிசேஷம் சொல்லுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று இவர்கள் நினைத்து விடுகிறார்கள். இந்த மாதிரியான தவறான எண்ணம் கிறிஸ்துவின் சீடர்களுக்கும் வந்துவிடுகிற நிலை இருந்தது. மாற்கு 10:24-27 வரையுள்ள வசனங்களைக் கவனியுங்கள். ‘சீடர்கள் அவருடைய வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டர்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது! ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாதுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாமே கூடும் என்றார்.’

யாருமே இரட்சிக்கப்படுவது ஆகாத காரியம் என்ற வழியில் சீடர்களுடைய சிந்தனை போவதைக் கவனித்த இயேசு அவர்களைத் திருத்துவதை மேலே நாம் பார்த்த வசனங்களில் கவனிக்கிறோம். எவருடைய இரட்சிப்புக்கும் நாம் மனிதனின் வல்லமையில் தங்கியிருந்தால் எவரும் இரட்சிப்படைவதற்கு வழியே இல்லை. ஆனால், கர்த்தரால் எதையும் செய்ய முடியும் என்று இயேசு அவர்களுக்கு விளக்குகிறார்.

மனிதன் இரட்சிப்பு தன்னில் எந்த நம்பிக்கையையும் வைக்கக்கூடாது. 1689 விசுவாச அறிக்கை 9ம் அதிகாரம் (சுயாதீனமான சித்தம்) மூன்றாம் பத்தியில், ‘மனிதன் பாவத்தில் வீழ்ந்ததால் இரட்சிப்புக்குரிய எந்தவித ஆவிக்குரிய நன்மைகளையும் செய்யக்கூடிய தனது சித்தத்தின் வல்லமையைப் பூரணமாக இழந்தான்’ என்று விளக்குகிறது. அத்தோடு. ‘இயல்பாகவே மனிதன் ஆவிக்குரிய நன்மைகளை முற்றிலும் எதிர்ப்பவனாகவும், பாவத்தில் மரித்தவனாகவும் உள்ளான்’ என்று அது தொடர்ந்து விளக்குகிறது. தனக்குத் தானே ஆத்மீக விடுதலையைத் தேடிக்கொள்ள முடியாது என்பதையும், கர்த்தர் ஒருவரால் மட்டுமே மனிதனுக்கு இரட்சிப்பை அளிக்க முடியும் என்பதையும் மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்னை நானே இரட்சித்துக்கொள்ள முடியாது என்ற எண்ணம் உதயமாகிறபோதே ஒரு மனிதனுக்கு இரட்சிப்பை அடைவதற்கான வழி திறக்கப்படுகிறது. பாவியாகிய மனிதன் சுவிசேஷத்தைக் கேட்கிறபோது, அவன் மனந்திரும்பி தன்னை விசுவாசிக்க வேண்டும் என்ற கர்த்தரின் சித்தத்தையும் அவருடைய வாக்குறுதிகளையும் காதால் கேட்கிறான். அதைக் கேட்டு அந்தப் பாவியாகிய மனிதன் சுவிசேஷ அழைப்புக்கு உடன்பட வேண்டும் என்று சித்தங்கொள்ளுவானானால் அவனால் அதைச் செய்ய முடியும். அவனுடைய இருதயத்தில் ஏற்படுகின்ற இரட்சிப்புக்குரிய அந்த விருப்பத்தை அவனில் ஆவியானவர் விதைப்பதாலேயே அவனால் சுவிசேஷ அழைப்புக்கு உட்பட சித்தங்கொள்ள முடிகிறது. இறையாண்மையுள்ள கர்த்தரே சுவிசேஷத்தை அந்த மனிதனில் திட்ப உறுதியாக செயல்பட வைக்கிறார். பரிசுத்த ஆவியானவர் அவனுடைய கண்களைத் திறந்து, செவி மடல்கள் சுவிசேஷத்தைக் கேட்க வைத்து, செத்துப் போயிருந்த இருதயத்தை இரட்சிப்புக்குரியதாக உயிர்ப்பிக்க வைத்து, பாவத்தினால் பாதிக்கப்பட்டிருந்த அவனுடைய சித்தத்திற்கு விடுதலை கொடுத்து கிறிஸ்துவை விசுவாசிக்க சித்தங்கொள்ள வைக்கிறார். பாவியாகிய மனிதன் இரட்சிப்படைய வேண்டுமென்று விரும்புவானானால், சுவிசேஷத்தின் மூலம் அவனை திட்ப உறுதியாக அழைக்கும் கர்த்தரை விசுவாசிக்க அவனால் சித்தங்கொள்ள முடியும். அவ்வாறு அவன் சித்தங்கொள்ளும்போது இறையாண்மையுள்ள கர்த்தரின் தெரிந்துகொள்ளுதலுக்கும், திட்ப உறுதியான அழைப்புக்குமே (Effectual Call) அவன் உடன்படுகிறான். இதன் மூலம் கர்த்தரே சகல மகிமையையும் அடைகிறார். இதில் மனிதன் தன்னைப் பாராட்டிக் கொள்ளுவதற்கு ஒன்றுமேயில்லை. மனிதனால் தன்னை இரட்சித்துக் கொள்ள முடியாது. மனிதன் மனந்திரும்பி தன்னை விசுவாசிக்கும்படிச் செய்து கர்த்தரே அவனை இரட்சிக்கிறார். இதெல்லாம் சுவிசேஷ அழைப்பைக் கொடுக்காமல் நடக்க முடியாது (ரோமர் 10). சுவிசேஷ அழைப்பின் மூலமே கர்த்தர் பாவிகளைத் தன்னிடத்தில் வரும்படியாக அழைக்கிறார். எனவே, சுவிசேஷத்தை தீவிரத்தோடு சகல மனிதர்களுக்கும் சொல்லுவதில் நாம் எந்தக் குறைபாடும் கொண்டிருக்கக் கூடாது.

மறுமொழி தருக