வாசிப்பு – உரையாடல் – பிரசங்கிகள்

வாசிப்பனுபவம்

‘வாசிக்கிறவன் இறப்பதற்கு முன் ஆயிரம் வாழ்க்கை வாழ்கிறான்’ என்கிறார் அமெரிக்க நாவலாசிரியர் ஜோர்ஜ் ஆர். ஆர். மார்டின். ‘எனக்குப் போதுமான அளவுக்கு ஒரு பெரிய கோப்பைத் தேனீரையாவது, ஒரு பெரிய புத்தகத்தையாவது உங்களால் எனக்குத் தர முடியாது’ என்றார் வாசிப்பதிலும், எழுதுவதிலும் திளைத்துப்போயிருந்த சி. எஸ். லூயிஸ். ‘என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கும்போது நான் புத்தகங்களை வாங்குவேன்; மீதமிருந்தால் உணவும் உடுதுணியும் வாங்குவேன்’ என்றார் இராஸ்மஸ். ‘சராசரி மனிதனாக இருக்க விரும்பாத எவருக்கும் அவசியமானது வாசிப்பு’ என்றார் பெரும் தொழில் முனைவோரும், ஊக்கமூட்டுப் பேச்சாளருமான ஜிம் ரோன்.

வாசிப்பின் அவசியத்தை எத்தனை வார்த்தைளாலும் சொல்லி முடித்துவிட முடியாது. வாசிப்பு ஒரு கலை; ஒரு அனுபவம். அறிவைப் பெருக்குவது மட்டுமல்லாமல் அது ரசனையை வளர்க்கும். வாசிப்பில்லாத வாழ்க்கை உப்புச்சப்பற்றது, குஜராத்தின் பருப்பு சாம்பாரைப்போல. வாசிப்பு வாழ்க்கையில் சுவையூட்டுகிறது.  நாமெல்லாம் பெரிதும் மதிக்கின்ற ஸ்பர்ஜன் ஒரு வாரத்தில் ஆறு நூல்களை வாசித்திருக்கிறார். தன் வாழ்நாள் முடிவதற்குள் ஏழாயிரம் நூல்களை வாசித்து முடித்திருக்கிறார். ‘வாசிக்காதவனை எவரும் வாசிக்கமுடியாது’ என்றார் ஸ்பர்ஜன்.  ‘மற்றவர்களுடைய மூளையில் இருந்து வெளிப்படும் எண்ணங்களைப் பயன்படுத்திக்கொள்ளாதவன் தனக்குச் சொந்தமான மூளை இல்லை என்பதையே நிரூபிக்கிறான்’ என்றார் அவர். பவுல் முப்பது வருடங்கள் பிரசங்கம் செய்திருந்தபோதும் தொடர்ந்து புத்தகங்களுக்காக அலைந்தார் (2 தீமோ 4:13).  சமூகத்தில் படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் வாசிப்பை நண்பனாகக் கொண்டிராத பெரிய மனிதர்கள் இருந்ததில்லை. காமராஜர், அண்ணாவிலிருந்து வாசித்து வளர்ந்தவர்கள் நம்மினத் தலைவர்கள்.

ஒருபோதும் நூல்களை ஒப்புக்கு வாசிக்கக்கூடாது; சுவைத்து அனுபவித்து வாசிக்கவேண்டும். தரமான வாசிப்பு கற்ற விஷயங்களை ஒருநாளும் மறக்கச் செய்யாது. வாசிப்பில் அடைந்த அனுபவங்களைப் பிறரோடு பகிர வேண்டும். மனித வாழ்க்கை இன்று சிக்கலானதாக மாறிப் பெரும்பாலானோரை வாழ்க்கையில் வாசிப்பில்லாதபடிச் செய்திருக்கிறது. குறைந்தளவு நேரத்தைப் பயன்படுத்தி, குறைந்தளவு முயற்சி எடுத்து, மிகக்குறைவான செய்திகளைப் பகிர்ந்து வரும் காலமிது. முகநூல், வட்ஸ்அப், இன்ஸ்டகிரேமைத்தான் சொல்லுகிறேன். வாசிப்புக்கும், வாசிப்புப் பகிரலாகிய அனுபவத்திற்கும் அவை உதவாது.

வாசிப்புக்கு நேரம் ஒதுக்க வேண்டும். வேக வாசிப்பு நாளிதழுக்கு சரி. நல்ல நூல்களைக் கவனத்தோடு வாசிக்க வேண்டும். எல்லா நூல்களும் இலகுவானதாக இருந்துவிடாது. என் நண்பன் அலன் டன்னோடு சமீபத்தில் உரையாடிக்கொண்டிருந்தபோது, ‘நான் வாசித்துக்கொண்டிருக்கும் ஒரு நூல் கொஞ்சம் கஷ்டமானது; அதை முடிக்க சில நாட்கள் எடுக்கும்’ என்றான். அப்படித்தான் இருக்கும் சில நூல்கள். கார்ல் ட்ரூமன் எழுதிய, இக்காலத் தாராளவாதக் கருத்தியல் போக்குகள் பற்றிய ஒரு நூலை மின்நூலாக பதிவிறக்கம் செய்து கின்டிலில் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அது சிந்தித்து வாசிக்க வேண்டிய நூல். வேகவாசிப்பு அதற்கு உதவாது என்று தெரிகிறது. கின்டில் நூலானபடியால் ஐபேடில் தேவையான இடங்களில் ஹைலைட் செய்துகொள்ளும் வசதியிருப்பது மறுபடியும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய பகுதிகளுக்குப் போக உதவுகிறது. நூல் பெரிதோ, சிறிதோ, வாசிக்க இலகுவானதோ, கொஞ்சம் கஷ்டமானதோ, எப்படிப்பட்டதாக இருந்தாலும் வாசிக்கத் தெரிந்தவனால் வாசிக்காமல் இருக்கமுடியாது.

வாசிக்காதவர்கள் வாழத்தெரியாதவர்கள். வாழ்க்கையில் சராசரி மனிதனாக இருக்க நாம் ஒருபோதும் இடங்கொடுக்கக் கூடாது. அது நாம் ஆராதிக்கும் கர்த்தரை அவமானப்படுத்துகிற செயல். வாசிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றாலே, சராசரித்தனத்துக்கு முடிவுகட்ட ஆரம்பித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். நம்மினத்துக் கிறிஸ்தவம் சராசரிகளினால் உயரமுடியாது. வாசிப்பில் பருந்துபோல் உயரப் பறக்கவேண்டும்; குருவி உயரத்தில் இருக்கக்கூடாது. 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதம் சராசரிகளினால் உருவாகவில்லை. சீர்திருத்தவாதிகள் வாசிப்பில் மூழ்கியிருந்தார்கள். சமீபத்தில் கின்டிலுக்காக சபை வரலாற்றின் இரண்டாம் பாகத்தைத் திருத்தி முடித்திருந்தேன். அதில் சீர்திருத்தவாதிகளின் வாசிப்பனுபவத்தைப் பற்றி மறுபடியும் வாசிக்க நேர்ந்தது. வாழ்நாள் முழுவதும் எழுதிக்குவித்திருந்த ஜோன் கல்வின் உறங்கும் நேரத்தைத் தவிர ஏனைய நேரங்களை வாசிப்பதில் செலவிட்டிருக்கிறார். அதையே ஒவ்வொரு சீர்திருத்தவாதியும் செய்திருக்கிறார்கள். ‘வாசிப்பில்லாத சீர்திருத்த கிறிஸ்தவன்’ என்ற வார்த்தைப் பிரயோகம் தப்பானது; நடைமுறைக்கு முரணானது. எவரையும் திருப்திப்படுத்த நாம் வாசிக்கக்கூடாது; பெருமைக்காகவும் வாசிக்கக்கூடாது. அதன் அவசியத்தை உணர்ந்து உயிர்த்துடிப்போடு வாசிக்கவேண்டும். எத்தனை நூல்களை வாசிக்கிறோம் என்பது முக்கியமல்ல. வாசிக்க வேண்டும்; தொடர்ந்து வாசிக்கவேண்டும். அதுவே அவசியமானது.

தேடுங்கள் நூல்களை
தேர்ச்சிபெற வைக்கும்
அறிவில் . . .
கண்டெடுங்கள் நூல்களை
கண்டடைவீர்கள்
கல்விச் செல்வங்கள் . . .
வாசியுங்கள் நூல்களை
வளர்தெடுக்கும் அவை
உங்களை . . .
படியுங்கள் நூல்களை
பரிசுத்தமாக்கும்
உங்கள் எண்ணங்களை . . .
பகிருங்கள் நூல்களை
பலப்படுத்தும்
நட்பை பன்மடங்கு . . .
வாங்குங்கள் நூல்களை
விலைகொடுத்து
வீணாகாதவை ஒருநாளும் . . .

உரையாடல்

இன்றைக்குப் பேசிப்பழகுவதற்கு நாம் நேரம் கொடுப்பதில்லை. புத்தக வாசிப்பு பேசிப்பழகுவது போன்ற ஒரு அனுபவம். ஒரே அறையில் அமர்ந்திருந்து நான்குபேர் ஒருவரோடொருவர் அலைபேசியில் வாயே திறக்காமல் குறுந்தகவல் மூலம் பேசிக்கொண்டிருந்ததை நான் ஒரு முறை கவனித்திருக்கிறேன். என்னவாய் மாறியிருக்கிறது காலம்!

வாழ்க்கை சிக்கலானதாக இல்லாமலிருந்த காலத்தில் ஊர் மக்கள் மாலை வேளையில் கிராமத்து ஆலமரத்தடியில் அமர்ந்து செய்திகளையும், வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். அங்கே கருத்துப் பறிமாறல் நடந்தது. சிறுவனாக இருந்தபோது என் தாத்தாவின் ஊரில் அதை நான் கண்களால் கண்டிருக்கிறேன். வயதாகியிருந்த அந்த ஆலமரம் ஊருக்கு அடையாளம் போலிருந்து அவர்களுடைய கூடுகைக்கு மத்தியஸ்தம் வகித்தது. மரத்தைச் சுற்றி மேடுபோல் மண்ணால் இடுப்பளவுக்கு உயர்த்திக்கட்டப்பட்டு அதில் ஊர் மக்கள் சாவகாசமாக மர நிழலில் அமர வசதியாக இருந்தது. நாளிதழும், ரேடியோவும் மட்டுமே அன்று அவர்களுக்கு எந்தச் செய்திகளையும் பெறத் துணைபுரிந்தன. ஊரில் மின்சாரம் வர ஆரம்பித்திருந்த காலம் அது; எல்லோரும் அதிகமாய்ப் பேசிப்பழகிய காலம். ஊர் வாசகசாலையில் நாளிதழை நெடுநேரம் பலர் வாசித்தார்கள்; பேசினார்கள். வாசிப்பும், உரையாடலும் அப்போது அதிகமாக இருந்தது.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும், இரவுணவு முடிந்தபின் அப்பாவும் சில நண்பர்களும் எங்கள் வீட்டில் கூடுவது வழக்கம். வியாபாரத்தை முடித்துவிட்டு, நிர்வாகக் காரியங்களை நிறைவு செய்தபிறகு அவர்கள் கூடுவார்கள். ஒவ்வொரு முறையும் மொத்தமே நான்கு அல்லது ஐந்து பேர் இருப்பார்கள். நான் பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருப்பேன். அரைத்தூக்கந்தான்; காதுகள் அவர்களுடைய சம்பாஷனையில் பதிந்திருக்கும். ஊர் விஷயங்கள் அனைத்தையும் அவர்கள் தங்களுடைய இரசனைக்குத் தகுந்தபடி அந்தக் கூடுதலில் பகிர்ந்துகொள்ளுவார்கள். கூட்டம் கலகலப்போடு நடக்கும்; சிலவேளைகளில் சூடுபிடிக்கும். கூட்டத்திற்கு ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்காது. யார் ஒரு விஷயத்தை முதலில் ஆரம்பித்து வைக்கிறாரோ அதிலிருந்து சம்பாஷனை தொடரும். முதல் விஷயம் எப்போது முடிகிறதோ அதற்குப் பிறகு அடுத்த விஷயத்தை ஒருவர் ஆரம்பித்து வைப்பார். எது சம்பாஷனைக்கு விஷயமாக இருக்க வேண்டும் என்பதை எவரும் தீர்மானிப்பதில்லை. சம்பாஷனைக்குப் பொருந்திப் போகாத ஒன்று தானாகே சில நிமிடங்களில் நின்றுவிடும்.

இந்தக் கூடுதல்களில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு பார்வையாளனாக இருந்து எத்தனையோ விஷயங்களைக் கற்றிருக்கிறேன்; உள்ளுக்குள் சிரித்திருக்கிறேன், சில விஷயங்களில் அவர்களுடைய அறியாமையை நினைத்து. குறைந்தது நாலு அல்லது ஐந்து மணி நேரம்வரை அந்தக் கூடுதல் நிகழும். இடையிடையே காப்பி, டீ, பலகாரம் வந்து போகும். அம்மா என்னையும் எழுப்பி எனக்குக் கொடுக்க மறப்பதில்லை. அப்படி என்னைத் தொற்றியதே ஒரு நாளைக்குப் பலதடவைகள் தேநீர் அருந்தும் வியாதி! தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என்பார்கள். இதை எழுதும்போது ஜெயகாந்தனின் ‘சபை’ நினைவுக்கு வருகிறது. இதேபோல் ஜே. கே நண்பர்களோடு ஒரு கூடுதலை நடத்தி வந்திருக்கிறார். அதை ‘சபை கூடுதலாக’ அவர் வர்ணித்திருக்கிறார்.

நம்காலத்தில் உரையாடல் அருகிப்போய்விட்டது. அதற்குப் பொதுவான சாக்குப்போக்கு நேரமில்லை என்பதுதான். நேரத்தைப் பயன்படுத்தி என்ன செய்கிறோம்? மனித சகவாசம் குறைவடைந்து போகும்விதத்தில் பிரயோஜனமானவைகளைச் செய்து வருகிறோமா? நியாயமாக பதில் சொல்லப்போனால் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். மனித சகவாசம் குறையக் காரணம் என்ன தெரியுமா? அதை ஏனைய விஷயங்கள் திருடியிருப்பதுதான். கிறிஸ்தவ வேதம் ஒருவருக்கொருவர் ஐக்கியத்தில் வருவதைப் பற்றி அடிக்கடி சொல்லுகிறது. அந்த ஐக்கியத்தை ஆவிக்குரியவர்களோடு சகவாசம் இல்லாமல் செய்வதெப்படி? கலந்துரையாடலும், பிறரோடு சகவாசமும், வாசிப்பும் இல்லாமல் போகுமளவுக்கு வேறு விஷயங்கள் நம் நேரத்தைத் திருடிக்கொண்டிருக்கின்றன. மானுட குணாதிசயங்களை ஒருவரோடொருவர் நேரில் பகிர்ந்துகொள்ள உதவும் அத்தனையையும் நவீன மின்ணணு சாதனங்கள் தம்வசமாக்கியுள்ளன. மனித உறவுகள் அற்றுப்போக நாமே காரணமாகியிருக்கிறோம்.

உரையாடல் வாழ்க்கைக்கு அவசியமானது. அது மூளைக்கு வேலை தருகிறது. வாசிப்பே உரையாடல் சுவையானதாக அமைய உதவுகிறது. பேச விஷயமில்லாவிட்டால் உரையாடலுக்கு வழியில்லை. அறுபது, எழுபதுகளில் சாதாரணமாக குடும்பங்களில் ஜனரஞ்சகமான இலக்கிய இதழ்கள் சிலவாவது இருக்கும். அக்கால இதழ்கள் தரமானவையாக வெளிவந்து கொண்டிருந்தன. இன்றைக்கு எத்தனை வீடுகளில் இதழ் வாசிப்பு இருக்கின்றது? அதுவும் லௌகீக வாசிப்பு கூடாது என்று முட்டாள்தனமாக முடிவுகட்டியிருக்கும் கிறிஸ்தவ குடும்பங்களில் உப்புச்சப்பற்ற தியானச் செய்தித் துண்டுப் பிரசுரங்களைத் தவிர அறிவை வளர்க்கும் வேறு ஒன்றும் இருக்காது. உரையாடலுக்கு இவர்களிடம் எங்கே இடமிருக்கப்போகிறது? வாசித்து விஷயங்களை அறிந்து வைத்திருப்பவர்கள் வேதசத்தியம் மட்டுமில்லாமல் அநேக பொது விஷயங்களையும் பற்றி உரையாடக்கூடியவர்களாக இருப்பார்கள்.

பிரசங்கிகள்

இன்றைக்கு எந்தளவுக்கு உரையாடலோ அல்லது பேச்சோ சிறப்பான நிலையில் இல்லை என்பதற்கு தற்கால தமிழ் பிரசங்கிகளின் பிரசங்கங்களைக் கேட்டாலே போதும். முதலில், பெரும்பாலானவற்றில்  சத்தியம் விளக்கிப் போதிக்கப்படுவதில்லை. இறையியல் என்பதையே அதில் காணும் வாய்ப்பில்லை. அதுதவிர, விஷயஞானமிருந்து கோர்வையாக, தத்துவரீதியில் படிப்படியாக விஷயங்களைக் கேட்பவர்கள் முன்னிறுத்துகிற திறமையும் பெரும்பாலானோருக்கு இல்லை என்பதை அப்பட்டமாகப் பிரசங்கங்கள் சுட்டுகின்றன. அந்தளவுக்கு பிரசங்கிகளிடம் வாசிப்பும், பேச்சுத் திறனும் இல்லாமல் இருந்து வருகிறது. பேச்சிலும் பேசும் தமிழ் சுவையற்றிருக்கிறது. மேடைப் பேச்சு என்பது எவரும் செய்துவிடக்கூடிய இலகுவான காரியமல்ல. அவிசுவாசிகளுக்குக்கூட அது தெரிந்திருக்கிறது. மேடைப் பேச்சு ஒரு ஈவு; அதற்கு உடல் வாகு, குரல் வளம், பயிற்சியும் தேவை. பிரசங்கிகளுக்கான அறிவுரைகள் என்ற நூலில் அதுபற்றி ஸ்பர்ஜன் விளக்கியிருக்கிறார். அந்நூலில் முதற் பதிப்பில் படங்களோடு அதை விளக்கியிருக்கிறார். மேடையில் எவற்றைச் செய்யக்கூடாது என்பதையும் கேலிச்சித்திரமாக வரைந்திருக்கிறார். ஸ்பர்ஜனின் நகைச்சுவையுணர்வை அதில் காணலாம்.

வாழ்க்கையில் வாசிப்பைக் கொண்டிராதவன் எப்படித் திறமையான பிரசங்கியாக முடியும்? வாசிப்பில்லாமல் ஒருவனால் வெறும் வாய்ச்சமர்த்தை மட்டுமே கொண்டிருக்க முடியும்; அதில் அறிவுசெறிந்த விஷயங்களைவிட மூடத்தனமான சிந்தனையே அதிகம் இருக்கும். தமிழினத்தில் பிரசங்கம் என்ற பெயரில் இன்று மூடத்தனம் அநியாயத்துக்கு ஆட்சி செய்துவருகிறது. அதை உணரும் ஆவிக்குரிய பக்குவமில்லாதவர்களாக பெரும்பாலான ஆத்துமாக்கள் இருந்து வருகிறார்கள். இதெல்லாம் கிறிஸ்தவ சமுதாயத்தின் பின்தங்கிய நிலைக்கு அடையாளம்.

நம்மினத்தில் போதகர்கள் ஐக்கியம் என்று ஒரு கூடுகை பல இடங்களில் நடக்கிறது. அதில் அதிக நேரம் பாடல்களுக்கும், ஜெபத்திற்குமே இடமிருக்கும். அது நல்லதுதானே என்பீர்கள். நல்லதுதான்; இருந்தாலும் தெளிவான சத்தியவிளக்கமும், பகிரலும் இல்லாமல் எதற்காக ஜெபிப்பது? ஜெபங்கள் வார்த்தையின் அடிப்படையில் அமைந்து, பிறருக்கு ஆசீர்வாதமாக இருக்க, அது பொருள்ளதாக இருக்கவேண்டும். வாசிப்பும், வாசிப்புப் பகிரலும் வாழ்க்கையில் இல்லாதவர்களின் ஜெபம் எப்படி ஆசீர்வாதமாக அமைய முடியும்? திரும்பத் திரும்ப ஸ்தோத்திரம் சொல்லுவதும், வெறும் அல்லேலூயாக்களும், அதைக்கொடு, இதைக்கொடு என்று ஆண்டவரிடம் சத்தமாகக் கேட்பதுந்தானா ஜெபம்? பரிசேயர்களைப்போல வீண் வார்த்தைகளைக் கொட்டிப் புலம்பாதேயுங்கள் என்று ஆண்டவர் சொல்லவில்லையா? போதகர்கள் ஐக்கியம் அர்த்தமுள்ள கூடுகைகளாக இருக்கவேண்டும். அதில் தரமான, தேர்ந்த ஆவிக்குரிய, நுணுக்கமான உரையாடல் இருக்கவேண்டும். சிந்தனைக்குத் தீனி போடும் ஆத்மீகக் கூட்டங்களாக இருக்கவேண்டும். நல்ல நூல் வாசிப்பைப் பகிரும் வாய்ப்பு அங்கே இருக்கவேண்டும். அதெல்லாம் இல்லாத கூடுகையில் அங்கம் வகிப்பதைவிட ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது மேல்; அங்கே சரீரத்தையாவது வளர்க்கலாமே.

கிறிஸ்தவனை வேறுபடுத்திக் காட்டுவது அவனுடைய உரையாடல் என்கிறார் ஸ்பர்ஜன். ‘கிணற்றில் இருக்கும் நீரின் தரத்தை அதைக் கொண்டுவரும் பக்கெட்டில் இருந்து அறிந்துகொள்ளுவதுபோல் கிறிஸ்தவனின் தரத்தை அவனுடைய உரையாடலில் இருந்து அறிந்துகொள்ளுகிறோம் என்கிறார் அவர். 1858ல் ஒரு பிரசங்கத்தில் ஸ்பர்ஜன் சொல்லுகிறார், ‘இன்றைக்கு பிரசங்கத்தையும், ஜெபத்தையும்விட கிறிஸ்தவ உரையாடலே அதிகம் மோசமான நிலையில் இருக்கிறது’ என்று. மற்றவர்களுக்குப் பிடிக்காது என்று எண்ணி நாம் சத்தியத்தைப் பேசாமல் இருந்துவிடக்கூடாது என்கிறார் ஸ்பர்ஜன். சத்தியத்தில் முரண்பாடாகத் தோன்றும் விஷயங்களையும் பிறரோடு தைரியத்தோடு உரையாட வேண்டும் என்கிறார் அவர். பேசாமல் இருப்பதைவிட இது மேலானது என்கிறார் ஸ்பர்ஜன். கிறிஸ்துவின் வாழ்க்கையையும், பணியையும், தியாகங்களையும் எவர்தான் வெறுக்கமுடியும்; யாருக்கு அது பொருந்தி வராது என்று கேட்கும் ஸ்பர்ஜன், கிறிஸ்துவை நம் உரையாடல் மேன்மைப்படுத்த வேண்டும் என்கிறார். இந்த வாரம் ஒரு சபை அங்கத்தவரோடும், போதகரோடும் தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த உரையாடல் என் மனதுக்கு இதமளிப்பதாக, கர்த்தரை மகிமைப்படுத்துவதாக இருந்தது.

தரமான வாசிப்பும், உரையாடலும் நமக்கு நல்ல நண்பர்களைப்போல; அவை சாகும்வரையில் நம்மோடு இருக்கவேண்டியவை. அவை இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து என்னால் ஆதங்கப்படத்தான் முடிகிறது. வேறு என்ன செய்யமுடியும்? சொல்லுங்கள் பார்க்கலாம்.