பிரியாததும் இணையாததும்

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பற்றி இப்போது அடிக்கடி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அதற்குக் காரணம், சீர்திருத்த கிறிஸ்தவர்கள் (கிருபையின் போதனைகளை விசுவாசிக்கிறவர்கள்) சுவிசேஷம் சொல்லுவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற ஒரு அநியாயக் குற்றச்சாட்டுத்தான். இந்தக் குற்றச்சாட்டு சரியா? என்று சிந்தித்துப் பார்க்கிறேன். ஏன்? இது என்னையே நான் கேட்டுப் பார்க்க வேண்டிய கேள்வியும்கூட. இந்தக் குற்றச்சாட்டு சரியானதுதான் என்றவிதத்தில் நடந்துகொள்ளுகிற சில சீர்திருத்த கிறிஸ்தவ சபைகள் நிச்சயம் இருந்துவிடலாம். இருக்கமாட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், அதற்கு சீர்திருத்த கிறிஸ்தவம் காரணமில்லை என்பதில் மட்டும் எனக்கு முழு நம்பிக்கையுண்டு. அதை என்னால் ஆணித்தரமாகவும் சொல்ல முடியும்.

இப்படியான குற்றச்சாட்டுக்கு என்ன காரணம் என்று நிச்சயம் கேட்டுப்பார்க்கத்தான் வேண்டும்.

(1) முதலில் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தைப்பற்றி சரியாக அறிந்துகொள்ளாமல் சுவிசேஷம் சொல்லுவதைப் பற்றித் தாங்களாகவே ஒரு கருத்தைக் கொண்டிருப்பவர்கள் சாதாரணமாகவே இப்படிக் குற்றச்சாட்டுவது வழக்கம் – அதாவது, சுவிசேஷம் சொல்லுவது என்பது ஒரு கூட்டத்தைக் கூட்டி அதில் இயேசுவுக்காகக் தீர்மானம் எடுக்கிறேன் என்று ஆத்துமாக்களை சொல்லவைக்கும் வழிமுறையைப் பின்பற்றுகிறவர்கள் அப்படிச் செய்யாதவர்களை சுவிசேஷ வாஞ்சையில்லாதவர்கள் என்று நினைத்துவிடுகிறார்கள். அவர்களுடைய வழிமுறை வேதத்தில் காணப்படாததொன்று என்பது அவர்களுக்குத் தெரியாமலிருக்கிறது. அத்தோடு, உப்புச்சப்பில்லாமல் சுவிசேஷம் சொல்லுகிறோம் என்ற பெயரில் சுவிசேஷ சத்தியங்களை விளக்காமல் இயேசுவை விசுவாசித்தால் அவர் உனக்கு நிச்சயம் எல்லாம் கொடுப்பார் என்று சொல்லுகிறவர்களும் அல்லது அரிசி, பருப்பு பொட்டலத்தைக் கையில் கொடுத்து இயேசு பெயரில் ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ளுகிறாயா என்று சொல்லி அவர்கள் மனம்மாறிவிடுவதுக்குள் ஞானஸ்நானம் கொடுக்கின்ற சுவிசேஷ ஊழியம் செய்கிறவர்களும் அந்த வழிமுறையைப் பின்பற்றாதவர்களை சுவிசேஷ வாஞ்சையில்லாதவர்கள் என்று நினைத்துவிடுவதில் நாம் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. எவருடைய வாயிலிருந்தாவது உதிரும் ‘விசுவாசிக்கிறேன்’ என்ற வெறும் வார்த்தையை மட்டும் மந்திரமாக நம்பி அவர்களுக்கு எந்தக் கேள்வியும் கேட்காமல் ஞானஸ்நானம் கொடுக்கிறவர்களும், ஞானஸ்நானத்தையே இரட்சிப்புக்கு அடையாளமாக பார்க்கிறவர்களும் அந்த முறைகளைப் பின்பற்றாதவர்களைத் தப்பாக எண்ணுகிற சூழ்நிலை உண்டு. ஆகவே, இந்த அடிப்படையிலான குற்றச்சாட்டு நியாயமில்லாதது; அர்த்தமற்றது. ஒருவருடைய சுவிசேஷம் அறிவிக்கும் முறையை மட்டும் வைத்து மற்றவர்கள் அதைப் பின்பற்றாமலிருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷ வாஞ்சையில்லை என்று குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

rail track(2) ‘ஹைப்பர் கல்வினிசம்’ என்ற தவறான போதனைக்குள் விழுந்துவிடுகிறவர்கள், சுவிசேஷம் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கர்த்தரால் இரட்சிக்கப்பட்டவர்கள் அதை உணரும்வரை நாம்தான் காத்திருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். இந்தப் போதனை சீர்திருத்த கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாதது. கிருபையின் போதனைகள் இத்தகைய விளக்கத்தை அளிக்கவில்லை. சிலர் ஹைப்பர் கல்வினிசத்தை (அதில் கல்வின் பெயர் இருப்பதால்), அது என்ன என்ற உண்மை தெரியாமல் கிருபையின் போதனையைப் பின்பற்றுகிறவர்களைத் தவறாக எண்ணிவிடுகிறார்கள். இப்போது சொல்லுகிறேன் கேட்டுக்கொள்ளுங்கள், ஹைப்பர் கல்வினிசம் வேதத்தில் இல்லாதது, அதற்கும் சீர்திருத்தக் கிறிஸ்தவப் போதனைகளுக்கும், ஏன் கல்வினுக்கும்கூட எந்தத் தொடர்பும் இல்லை. கர்த்தரின் தெரிந்துகொள்ளுதலாகிய (Election) வேதபோதனையைத் தவறாகப் புரிந்துகொண்டவர்களே ஹைப்பர் கல்வினிஸ்டுகளாக மாறிவிடுகிறார்கள். இவர்கள் கர்த்தரின் தெரிந்துகொள்ளுதலாகிய போதனை சுவிசேஷம் சொல்லுவதை அவசியமற்றதாக்கியிருக்கிறது என்ற தவறான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கும் கிருபையின் போதனையைப் பின்பற்றுகிறவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

(3) கிருபையின் போதனையைப் பின்பற்றுகிற சிலர் கர்த்தரின் தெரிந்துகொள்ளுதலாகிய போதனைக்கும் சுவிசேஷம் அறிவிப்பதற்கும் இடையில் உள்ள தொடர்பைச் சரிவரப் புரிந்துகொள்ளாததால் ஒன்று மற்றதற்கு இடையூராகிவிடுமோ என்ற நினைப்பில் சுவிசேஷம் அறிவிப்பதில் அதிக அக்கறை காட்டாமல் இருந்துவிடுகிறார்கள். மனந்திரும்பு என்று அழுத்திச் சொல்லிவிட்டால் எங்கே, முன்குறித்தல், தெரிந்துகொள்ளுதலாகிய போதனைகளை மாசுபடுத்திவிடுவோமோ என்ற ஒருவித பயம் இவர்களுக்கு இருக்கிறது. இப்படிப்பட்டவர்களை நான் அதிகம் சந்தித்திருக்கிறேன். இவர்கள் சுவிசேஷத்தை அறிவிப்பது அவசியம் என்பதை நன்றாக உணர்ந்திருந்தபோதும் அதை எப்படி, எந்தளவுக்குப் போய்ச் செய்வது என்பதில் குழப்பத்தில் இருக்கிறார்கள். அதை அவர்கள் வெளியில் சொல்லாவிட்டாலும் அவர்களுடைய ஊழியம் அதை இனங்காட்டிவிடும். தெரிந்துகொள்ளுதலாகிய போதனையை சரியாக விளங்கிக்கொள்ளாமல் இருப்பதே இவர்கள் வைராக்கியத்தோடும், பாரத்தோடும் சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபடாமல் இருப்பதற்குக் காரணமாகிவிடுகிறது. இப்படிப்பட்ட சிலரால் நிச்சயம் கிருபையின் போதனைக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு, அதைப் பின்பற்றுபவர்கள் சுவிசேஷம் சொல்லுவதை நம்புவதில்லை என்ற தவறான எண்ணத்தைப் பலர் மனதில் ஏற்படுத்தி விடுகிறது.

(4) வேறு சிலர் சுவிசேஷ அறிவிப்பில் அதிக நாட்டம் காட்டினால் சபை வளர்ச்சி குன்றிவிடும் என்ற நினைப்பில் சுவிசேஷ அறிவிப்பில் ஆர்வம் காட்டுவதில்லை. ஓய்வு நாள் பிரசங்கத்தை மட்டுமே சுவிசேஷ அறிவிப்பாக இவர்கள் நினைத்துக்கொள்ளுகிறார்கள். இது பெருந்தவறு. சபை நிர்வாகத்திலும், அமைப்பிலும் மட்டும் கவனமாக இருந்து ஆத்மீக தாகமில்லாமல் இருக்கும் சபைத் தலைமை ஆவியில் முடமாக மட்டுமே இருக்க முடியும்.

உண்மையில் சீர்திருத்த கிறிஸ்தவம் சுவிசேஷ ஊழியத்தைப் பற்றிய எத்தகைய நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறது என்பதை நான் நிச்சயம் விளக்கியாக வேண்டும்:

(1) சீர்திருத்த கிறிஸ்தவம் கர்த்தர் இறையாண்மையுள்ளவர் என்பதை ஆணித்தரமாக நம்புவதாலும், அவர் தனக்கென மனுக்குலத்தில் ஒரு கூட்டத்தைத் தெரிந்துகொண்டிருக்கிறார் என்பதை விசுவாசிப்பதாலும், மத்தேயு 24:14ல் இயேசு கிறிஸ்து, “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என்பது சத்தியமான வார்த்தை என்று அறிந்திருப்பதாலும், வைராக்கியத்தோடு சுவிசேஷத்தை பாவிகளுக்கு சொல்லுவதை ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் இன்றியமையாத அங்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று நம்புகிறது. இந்தக் காரியத்தில் திருச்சபைக்குப் பெரும் பங்குண்டு என்பதை உணர்ந்திருக்கும் சீர்திருத்த கிறிஸ்தவம் சபையாக சுவிசேஷத்தை ஓய்வு நாளில் அறிவிப்பதையும், குடும்பங்களில் கர்த்தரை அறியாதவர்களுக்கு அறிவிப்பதையும், ஏனைய இடங்களிலும் ஏன், நாட்டிற்கு வெளியிலும் போய் அறிவிப்பதையும் சபையின் பெரும் பணியாகக் கருதுகிறது. ரிச்சட் பெக்ஸ்டர் என்ற போதகர் இங்கிலாந்தில் தான் பணிபுரிந்த கிடர்மின்ஸ்டர் என்ற இடத்தில் வாழ்ந்த குடும்பங்கள் அனைத்திற்கும் வினாவிடைப் போதனைகளைக் கற்றுக்கொடுத்து கிறிஸ்துவிடம் வழிகாட்டியிருக்கிறார். வினாவிடைப் போதனைகளை சுவிசேஷத்தை அறிவிக்கப் பயன்படுத்தியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அந்த ஊரில் அவருடைய சபையைச் சேராமல் இருந்தவர்கள் மிகக் குறைவு. அந்தளவுக்கு அவருடைய சுவிசேஷப் பணி இருந்திருக்கிறது. இது பொய்யாக இருக்குமானால் இந்த உலகம் ஒரு ஜோர்ஜ் விட்பீல்டையோ, டேனியல் ரோலன்டையோ, ஹொவல் ஹெரிசையோ, சீகன் பால்க்கையோ, வில்லியம் கேரியையோ, டேவிட் பிரெய்னாட்டையோ, ஹென்றி மார்டினையோ இன்னும் எத்தனையோ சீர்திருத்த சுவிசேஷகர்களையும், மிஷனரிகளையும் சந்தித்திருக்காது. சீர்திருத்த கிறிஸ்தவம் சுவிசேஷத்தை அறிவிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது தப்பான குற்றச்சாட்டு. சீர்திருத்த கிறிஸ்தவர்கள் என்று தங்களை இனங்காட்டிக்கொண்டு சுவிசேஷத்தை ஒரு சிலர் அறிவிக்காமல் இருக்கிறார்கள் என்பதற்காக சீர்திருத்த கிறிஸ்தவத்தைத் தவறாக எண்ணுவது சரியாகாது.

(2) சீர்திருத்தக் கிறிஸ்தவம் பாவியாகிய மனிதன் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை முழுமனத்தோடு விசுவாசிக்க வேண்டிய கடமைப்பாடுள்ளவனாக (பொறுப்புள்ளவனாக) இருக்கிறான் என்று ஆணித்தரமாக நம்புகிறது (மாற்கு 6:12; லூக்கா 13:3; அப்போ 17:30; மாற்கு 1:15; யோவான் 1:12; 3:16-18; 3:36). அதாவது மனந்திரும்புவதும் விசுவாசிப்பதும் மனிதனின் பொறுப்பே தவிர கடவுளின் கடமையல்ல என்பதை உணர்ந்திருக்கிறது சீர்திருத்த கிறிஸ்தவம். மனிதன் அதற்குப் பொறுப்பானாலும் அது அவனுடைய மாம்சத்தின் கிரியை அல்ல (எபே 2:8-10). பொறுப்பும், கிரியையும் வெவ்வேறானவை. இந்த விஷயத்தில்தான் ஹைப்பர் கல்வினிசத்தோடு சீர்திருத்த கிறிஸ்தவம் முரண்படுகிறது. ஹைப்பர் கல்வினிசம், மனந்திரும்புவதும், விசுவாசிப்பதும் மனிதனின் ‘பொறுப்பு’ இல்லை என்கிறது. அது முழுத் தவறான போதனை. கர்த்தர் தான் முன்குறித்து தெரிந்துகொண்டிருப்பவர்களை நிச்சயம் தன்னோடு இணைத்துக்கொள்ளுவார் என்ற வேத போதனையை விசுவாசிக்கும் சீர்திருத்த கிறிஸ்தவம், அப்படி முன்குறிக்கப்பட்டவர்கள் இந்த உலகத்தில் சுவிசேஷத்தைக் கேட்டுத் தங்களுடைய பாவத்தை உணர்ந்து, பாவநிவாரணத்திற்காக இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்று நம்புகிறது. மனந்திரும்புதலும், கிறிஸ்துவை விசுவாசிப்பதும் தேவ கிருபையினால் நிகழ்ந்தபோதும், அவற்றிற்கு மூலகாரணம் கர்த்தராக இருந்தபோதும், தன்னுடைய இரட்சிப்பிற்காக மனிதனே தன்னுடைய பாவத்திலிருந்து விலகிப்போய் பாவமன்னிப்புக்காகவும், இரட்சிப்புக்காகவும் இயேசுவை விசுவாசிக்க வேண்டிய பொறுப்புள்ளவனாக இருக்கிறான் என்கிறது சீர்திருத்த கிறிஸ்தவம். அதனால்தான் சுவிசேஷத்தை பகிரங்கமாக அறிவித்து பாவிகளை மனந்திரும்பும்படி அறைகூவலிடும் பணியைச் செய்கிறது சீர்திருத்த கிறிஸ்தவம். கர்த்தரின் முன்குறித்தலாகிய கிருபையின் செயல் சுவிசேஷத்தை அறிவிக்கும் கிறிஸ்தவனின் கடமைக்கோ அல்லது மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய பாவியின் கடமைக்கோ முரணானதும் எதிரானதும் அல்ல. பிரிந்து போகாமலும் இணையாமலும், சீராகவும் நேராகவும் ஓடிக்கொண்டிருக்கும் இரயில் தண்டவாளங்களைப் போல வேதத்தில் காணப்படும் இரு சத்தியங்களாக அவை இருக்கின்றன. அவற்றை நாம் பிரிக்கவும் கூடாது; இணைக்கவும் கூடாது. இந்த இரண்டு நிதர்சனமான, அவசியமான உண்மைகளையும் குழப்பத்திற்கு இடமில்லாமல் வேதம் விளக்குகிறது. நீங்களும் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை.

(3) சீர்திருத்த கிறிஸ்தவம் சுவிசேஷத்தை அறிவிப்பதில் சிலர் பின்பற்றும் தவறான முறைகளை நிச்சயம் பின்பற்றுவதில்லை என்பது உண்மைதான். எந்த ஆத்மீகக் கூட்டத்திலும் ‘இயேசுவுக்காகத் தீர்மானம் எடு’ என்றும், ‘இயேசுவை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றும் யாரையும் பார்த்து நாம் நிச்சயம் சொல்லுவதில்லை. ஏன், தெரியுமா? அப்படிச் சொல்லும்படி கர்த்தரின் வேதம் நமக்கு அனுமதி தராததால்தான். அரிசி, பருப்பைக் கொடுத்தும், சமூக சேவைகள் செய்தும் கர்த்தருக்கு நாம் ஆள் சேர்ப்பதில்லைதான். ஏன், தெரியுமா? கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அந்தமுறையில் கொச்சைப்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான். கிறிஸ்துவிலும், அவருடைய வல்லமையுள்ள சுவிசேஷத்திலும் அசையா நம்பிக்கை வைத்திருக்கும் நாங்கள் அவருடைய வார்த்தையைப் பயன்படுத்தி பரிசுத்த ஆவியானவர் பாவிகளுக்கு மனந்திரும்புதலைக் கொடுக்கக்கூடிய இறையாண்மையுள்ளவர் என்பதை நிச்சயமாக நம்புகிறோம். அப்படியிருக்கும்போது மனிதனுடைய உலகத் தேவைகளை மையப்படுத்தி சுவிசேஷம் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. இதற்காக மனிதனுடைய தேவைகளை நாம் அலட்சியப்படுத்துகிறோம் என்று நீங்கள் தவறாக எண்ணிவிடக்கூடாது. அதை நாம் நிச்சயம் ஆர்ப்பாட்டம் இல்லாமல், ஆரவாரமில்லாமல் சுவிசேஷப் பணியோடு கலக்காமல், மனிதாபிமானத்தோடு செய்து வருகிறோம்; செய்யவும் வேண்டும். இதையே நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் செய்திருக்கிறார்.

(4) சீர்திருத்த கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் அது சுவிசேஷப் பணியை சபையின் பணியாகக் கருதுகிறது. அதற்குக் காரணம் வேதம் அந்தமுறையில் சுவிசேஷப்பணியை விளக்குவதால்தான். (மத்தேயு 28:18-20). அதன் காரணமாக சீர்திருத்த கிறிஸ்தவ சபைகள் சபையாக சுவிசேஷத்தை சொல்ல முனைவதுடன், சபையாக சபை நிறுவும் பணியிலும் ஈடுபடுகின்றது. தனிமனிதனொருவன் எந்தச் சபைத்தொடர்பும் இல்லாமலும், சபையால் நியமிக்கப்படாமலும் சுயமாக தன்னை சுவிசேஷ ஊழியனாகக் கருதி அந்தப் பணியில் ஈடுபடுவதை சீர்திருத்த கிறிஸ்தவம் வேதபூர்வமானதாகப் பார்க்கவில்லை. சிலர், கர்த்தரின் பணியை எப்படிச் செய்தாலென்ன, செய்வதுதான் முக்கியமே தவிர எப்படிச் செய்யவேண்டுமென்பதில் அக்கறைக்காட்டத் தேவையில்லை என்பார்கள். ஆனால், தன்னுடைய பணிகளை நாம் எப்படிச் செய்யவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுவதற்காக இறையாண்மையுள்ள கர்த்தர் வேதத்தை நமக்குத் தந்திருக்கும்போது அதிகப்பிரசங்கித்தனமாக இந்த விஷயத்தில் எங்கள் சுயஞானத்தைப் பயன்படுத்தி கர்த்தரை அவமதிக்க நாங்கள் தயாராக இல்லை. வேதம் சத்தியமானது, அதிகாரமுள்ளது, எந்தவிஷயத்துக்கும் போதுமானது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

ஓர் ஆலோசனை . . .

சீர்திருத்த கிறிஸ்தவம் சுவிசேஷம் அறிவிப்பதை விசுவாசிக்கிறது, நம்புகிறது, அதைச் செய்கிறது என்பதற்கான விளக்கத்தை நான் தந்திருக்கும்போதும், சீர்திருத்த கிறிஸ்தவர்களுக்கு ஒரு ஆலோசனையைத் தர விரும்புகிறேன். திருச்சபை ஊழியத்திற்கு நாம் பெருமதிப்புக் கொடுப்பது அவசியந்தான். திருச்சபை மூலமாக அனைத்துப் பணிகளையும் செய்ய வேண்டியதும் அவசியந்தான். இருந்தபோதும் சுவிசேஷப் பணியை திருச்சபை சகல வாய்ப்புகளையும் பயன்படுத்தி நடைமுறையில் செய்யும்படியாகப் பார்த்துக்கொள்ளுங்கள். பிரசங்க மேடையில் சுவிசேஷம் அதிர வேண்டும். எந்த வேதப்பகுதியை எடுத்துப் பிரசங்கித்தாலும், சபைக்கும் வரும் ஆத்துமாக்களின் மத்தியில் ஒரு சில அவிசுவாசிகளே இருந்தாலும் சுவிசேஷத்தை அவர்கள் அறிந்துகொள்ளும்படித் தெளிவாகப் பிரசங்கியுங்கள். எல்லாப் போதனைகளிலும், எல்லாப் பிரசங்கங்களிலும் கிறிஸ்து பிரசங்கிக்கப்படாவிட்டால் உங்கள் பிரசங்கம் பிரசங்கமாக இராது. சகல போதனைகளிலும் கிறிஸ்து நிறைந்து காணப்பட வேண்டும்; அவற்றில் கிறிஸ்துவின் இரத்தம் தழுவியிருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஊர்பூராவுமே சபையாக சுவிசேஷத்தைச் சொல்ல சகல முயற்சிகளையும் எடுங்கள். போதகர்கள் படிப்பறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியந்தான்; பிரசங்க மேடையை மதித்து உழைத்துப் பிரசங்கிப்பதும் அவசியந்தான். இருந்தாலும் இதெல்லாம் சுவிசேஷத்தை உயிரைக்கொடுத்து எல்லா இடங்களிலும் அறிவிக்கத் தடையாக இருந்துவிடக்கூடாது. அத்தனைப் படிப்புப்படித்துப் பிரசங்கித்த லூத்தருக்கோ, கல்வினுக்கோ, ஜொனத்தன் எட்வர்ட்ஸுக்கோ அது தடையாக இருந்துவிடவில்லையே.

சுவிசேஷம் அறிவிப்பதில் நமக்கு வைராக்கியம் தேவை; பாரம் தேவை. அதெல்லாம் நடைமுறையில் கண்களால் பார்க்கும் விதத்திலும், உணரும் விதத்திலும் இருப்பதும் அவசியம். சுவிசேஷ வாஞ்சை இருதயத்தில் மறைந்து காணப்பட வேண்டிய ஒன்றல்ல; அது கொழுந்துவிட்டெரிந்து அனல்கக்க வேண்டிய வைராக்கிய வாஞ்சை. அருமையான சீர்திருத்த போதனையை நமக்கு கர்த்தர் அளப்பரிய கிருபை பாராட்டித் தெரிந்துகொள்ள வைத்திருக்கிறார். பிரசங்க மேடையின் பெருமையையும், உண்மையான ஊழியத்தின் அவசியத்தையும் பக்திவைராக்கியத்தோடு உணரும்படிச் செய்திருக்கிறார். இத்தனையும் இருக்கும்போது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை கர்த்தருக்கு இருக்கும் இருதய பாரத்தோடு சகல ஆத்துமாக்களுக்கும் அறிவிப்பதில் நமக்கு ஏனையோரைவிட அதிக வைராக்கியம் இருக்க வேண்டுமே. உங்களுடைய சபையாருக்கும், மற்றவர்கள் பார்வைக்கும் உங்கள் வைராக்கியம் தெரிகிறதா? இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை பாவிகள் மனந்திரும்பும்படி அறிவிப்பதில் ஊக்கத்தோடு ஈடுபட்டு வருகிறீர்களா?

நம்மில் சிலர் சபை வளர்ச்சியில்தான் ஊக்கம் காட்டுகிறார்களே தவிர சுவிசேஷத்தை அறிவிப்பதில் அல்ல. இவர்கள் சபை ஊழியத்துக்கு அதிக நேரத்தைக் கொடுக்கிறார்கள்; அது பாராட்ட வேண்டிய செயல்தான். ஆனால், சபை வளர வேண்டுமானால் சபையாரை ஊக்குவித்து சுவிசேஷத்தை ஊரெங்கும் அறிவிக்க வேண்டும். சவிசேஷ ஊழியம் சபை வளர்ச்சிக்கு ஒருபோதும் தடையாக இருக்காது. மாறாக சுவிசேஷப் பணியில் ஈடுபடாத சபையே ஒருக்காலும் வளரமுடியாது. சபையாருக்கு இருக்கும் ஈவுகளைக் கவனித்து அவர்களை உற்சாகப்படுத்தி சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபட வைக்க வேண்டும். சுவிசேஷம் அறிவிப்பது சபையின் கலாச்சாரமாக உருவாக வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அது நம் ரத்தத்தில் ஊறியிருக்க வேண்டும். சுவிசேஷ வாஞ்சையில்லாத சபை கர்த்தரின் சபையாக இருக்க முடியாது. பவுல் எபேசு சபைப் போதகராக இருந்த தீமோத்தேயுவைப் பார்த்து ‘சுவிசேஷ ஊழியத்தை செய்’ என்று சொல்லவில்லையா? ஒரு போதகன் பிரசங்கியாக மட்டுமல்லாமல், ஆத்தும கவனிப்பு செய்கிறவனாக மட்டுமல்லாமல், சுவிசேஷ ஊழியத்தில் வாஞ்சையோடு ஈடுபடுகிறவனாகவும் இருக்க வேண்டும். அந்த வாஞ்சையில்லாதவர்கள் சபைக்குடும்பங்களில் அவிசுவாசிகளாக இருப்பவர்களின் மனந்திரும்புதலுக்காகப் பிரசங்கிப்பதும், ஜெபிப்பதும் எப்படி முடியும்?

தடம் மாறா தண்டவாளங்கள்

பிரியாமலும் இணையாமலும்
இடைவெளி இறுகாமலும்
எதிரிகளைப் போல் தெரிந்தாலும்
நண்பர்களாய் நடைபோட்டு
தடம் மாறாமலும்
குழப்பத்திற்கிடமில்லாமலும்
தடதட வென்றோடும் இரயில்
தண்டவாளங்களைப் போல்
சீராய் சமநிலையில்
அகலக்கால் பரப்பியிருக்கும்
ஆத்மீக சத்தியங்கள்தான்
இறையாண்மையும் சுவிசேஷமும்

_____________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

3 thoughts on “பிரியாததும் இணையாததும்

  1. good advice. we clear more things about the importance of gospel. thanks. pls give many advice T.ANNADURAI, M.PRITHIVIRAJ, VEERIYAPALAYAM, KARUR.

    Like

மறுமொழி தருக