என்று வரும் இந்த சத்திய தாகம்?

‘சத்தியம் விடுதலையாக்கும்’ (Truth shall make you free) என்ற வேத உண்மையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதைச் சொன்னது இயேசுதான் (யோவான் 8:32). மனிதனுக்கு ஆத்மீக விடுதலை கொடுக்கக்கூடியது சத்தியம் மட்டுமே. பாவத்திலிருந்து அவனுக்கு விடுதலையளிப்பது மட்டுமல்லாமல் கடவுளின் வழிப்படி வாழவும் மனிதனுக்கு சத்தியம் அவசியம். சத்தியம் அந்தளவுக்கு முக்கியமானது. அவிசுவாசிகளுடைய உலகத்தில் சத்தியத்திற்கு இடமில்லை. அவர்கள் சத்தியத்தை வெறுக்கிறார்கள். ஏன், தெரியுமா? அது அவர்களுடைய இருதயத்தைத் தொடர்ந்து குத்திக் கொண்டிருப்பதால்தான். அதனால்தான், இன்றைய பின்நவீனத்துவ சமுதாயத்தில் மனிதன் ‘சத்தியம்’ (Truth) என்று ஒன்றில்லை என்று அறைகூவலிடுகிறான். ‘இதுதான் உண்மையானது, உண்மைக்கு வேறு அர்த்தம் இல்லை’ என்று நாம் சொல்லுவது அவனுக்கு காதுகளுக்குள் எரிகின்ற எண்ணெய்யைக் கொட்டுவது போல் போலிருக்கிறது. சத்தியத்தை இந்த உலகத்து மனிதன் வெறுக்கிறான் என்பதை ரோமர் முதலாவது அதிகாரம் எப்போதோ இனங்காட்டிவிட்டதே. ‘சத்தியத்தை அநியாயத்தினால் அடக்கிவைக்கிற’ (men, who suppress the truth in unrighteousness) மனிதனாக இந்த உலகத்து மனிதன் இருக்கிறான் (ரோமர் 1:18).

இந்த உலகத்து மனிதனுக்கு சத்தியம் பிடிக்காது; அதை அவன் வெறுக்கிறான் என்பது நமக்குத் தெரியும். ஆனால், சத்தியத்தை நமக்குப் பிடிக்காமல் இருக்க முடியுமா? இன்றைக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில், ‘சத்தியம் நம்மைப் பிரித்துவிடும்’, ‘சத்தியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அன்புக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும்’, ‘சத்தியம், சத்தியம் என்று அலையக்கூடாது’, ‘சத்தியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் சபை வளராது’, ‘சத்தியம் சத்தியம் என்று போனால் தேவபக்தி போய்விடும்’ என்றெல்லாம் அசரீரி போல் வரும் குரல்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். என் காதில் விழும் அசரீரிகள் உண்மையா? இயேசுவின் வார்த்தைகள் உண்மையா? ‘சத்தியம் விடுதலையாக்கும்’ (யோவான் 8:32) என்ற இயேசுவின் உறுதியான வார்த்தைகளை என்னால் மறுதளிக்க முடியாது. இயேசுவின் வார்த்தைகள் பொய்யாக முடியாது. பிரதான ஆசாரியரால் அனுப்பப்பட்ட வேவுகாரர்கள் இயேசுவிடம் வந்து, ‘போதகரே, நீர் நிதானமாய்ப் (உண்மையாய்) பேசி உபதேசிக்கிறீர் என்றும், முகத்தாட்சணியமில்லாமல் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்’ என்று சொன்னார்கள் (லூக்கா 20:21). இந்த மனிதர்களால் சத்தியத்தை உணர முடிந்ததே. அவர்களுக்கு இயேசுவின் வார்த்தைகள் சத்தியமாய்ப்பட்டனவே.

இன்றைய சமுதாயத்து கிறிஸ்தவர்களுக்கு சத்தியத்தின் மேல் ஏன் அத்தனை பயம்? சத்தியத்தைக் கண்டு அவர்கள் அஞ்சி விலகுவது ஏன்? மேலெழுந்தவாரியாக இயேசுவின் அன்பைப் பற்றியும், அவர் தரும் சமாதானத்தைப் பற்றியும், அவருடைய வாக்குத்தத்தங்களையும் மட்டும் கேட்க விரும்பி அதற்கு மேல் எந்த வேத சத்தியத்திலும் நாட்டம் காட்ட மனதில்லாமல் வாழ்ந்து வருவது ஏன்? சத்தியத்தைப் போதிக்கும் சபைகளை நாடிப்போக மனதில்லாமல் இருப்பது ஏன்? சத்தியத்தின் வழியில் சபை நடத்த போதகர்கள் பயப்படுவது ஏன்? சத்தியமென்ற வார்த்தையைக் கேட்டாலே கசப்பு மருந்து குடிப்பதுபோல் நடந்துகொள்வது ஏன்? இந்தக் கேள்விகளை என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

இந்தக் கேள்விகளுக்கு என்னால் இரண்டு காரணங்களைத் தான் பதிலாகக் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது.

1. நாம் வாழும் சமுதாயத்தின் ‘சத்தியத்தை அடக்கிவைக்கின்ற’ வாழ்க்கை முறை (Compromising life style) நம்மையும் ஆழமாகப் பாதித்திருக்கின்றது. இந்த சமுதாயம் சத்தியத்தை சத்தியமாகப் பார்க்கத் துளியும் விரும்பவில்லை. கடவுளின் கட்டளைகளை அது மீறி நடந்துகொள்ளும்போது அதை நாம் கவனிக்காமலும், சுட்டிக்காட்டி எதிராகப் பேசாமலும் இருக்கும்படி எதிர்பார்க்கிறது (உதாரணம்: தன்னினச் சேர்க்கை, திருமணமாகாமல் சேர்ந்து வாழுதல்). எதையும் வேத அடிப்படையில் அனுகாமல் உலகத்துக்கேற்றபடி விளக்கங்கொடுக்கும்படி எதிர்பார்க்கிறது (உதாரணம்: பாவம் வெறும் நோய் மட்டுமே, உண்மை என்று ஒன்றில்லை போன்றவை). எந்த விஷயமானாலும் அவற்றைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமலும், எவருடைய மனதையும் நோகப் பண்ணாமலும் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த முறையில் நடந்துகொள்ளுபடி எதிர்பார்க்கிறது. இந்த சமுதாயத்தின் இந்த எண்ணப்போக்கு கிறிஸ்தவர்களை நிச்சயம் ஆழமாகப் பாதித்திருக்கிறது என்றுதான் நான் சொல்வேன். பாவத்தைப் பாவம் என்று தெளிவாகப் பெயர் சொல்லி அழைக்க விரும்பாமல் அதை மென்மையாக வேறு பெயரில் கிறிஸ்தவர்கள் மாற்றி அழைப்பதற்கு என்ன காரணம்? கர்த்தரின் ஆராதனை பற்றிய போதனையாக இருந்தாலும் சரி, நிறைவாகி முடிந்துபோன வெளிப்படுத்தலோடு சம்பந்தமான ஆவிக்குரிய வரங்களாக இருந்தாலும் சரி, பத்துக் கட்டளைகளாக இருந்தாலும் சரி, ஓய்வுநாளைப் பற்றிய போதனையாக இருந்தாலும் சரி, லிபரல் கோட்பாடுகளாக (Liberalism) இருந்தாலும் சரி, இந்த சமுதாயத்து மனிதனின் கேவலமான வாழ்க்கை முறையாக இருந்தாலும் சரி, இவை எல்லாவற்றையும் தெளிவாக விளக்கி உள்ளதை உள்ளது போல் அப்பட்டமாகக் காட்டாமலும், விளக்காமலும் அடக்கி வாசித்து, மென்மையாக யாரையும் பாதிக்காமல் விளக்கங் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கிருந்து வருகின்றது? எலியா, எலிசா, யோவான் ஸ்நானன், இயேசு, பவுல் போல் பேசுவதும் நடந்துகொள்ளுவதும் அவர்கள் இருந்த காலத்துக்கு மட்டுந்தான் பொருந்தும் என்று நினைப்பது எங்கிருந்து வருகிறது? வேத சத்தியங்கள் அனைத்தையும் நாம் வாழ்கின்ற காலத்து பாவக் கலாச்சாரத்துக்கு ஏற்ற முறையில் மாற்றித்தான் விளக்கங்கொடுக்க வேண்டும், அதன்படிதான் நடந்துகொள்ள வேண்டும் என்ற சிந்தனை எங்கிருந்து வருகின்றது? இத்தனையையும் நான் விளக்கிய பிறகும் இக்காலத்து கிறிஸ்தவர்களை நம் சமுதாயத்து பாவ சிந்தனைகள் பாதிக்கவில்லை என்று உங்களால் எப்படிச் சொல்ல முடியும்? உலக சிந்தனை கிறிஸ்தவர்களை நிச்சயம் பாதித்து அவர்கள் இயேசுவைப் போலவும், பவுலைப் போலவும் சிந்திக்கவும், நடக்கவும் முடியாதபடி முடமாக்கி வைத்திருக்கிறது.

2. இரண்டாவதாக, நம்மினத்துக் கிறிஸ்தவம் தெளிவான சத்தியத்தின் அடிப்படையில் அமைக்கப்படவில்லை. ஆரம்பத்தில் இருந்தே மேலோட்டமான சுவிசேஷப் பிரசங்கத்தின் அடிப்படையில் அமைந்ததாக நம்மினத்துக் கிறிஸ்தவம் இருக்கிறது. ஆழமாகவும், தெளிவாகவும் சத்தியத்தை விளக்கிப் போதிக்கும் போதக ஊழியத்தையும் நம்மினத்துக் கிறிஸ்தவம் அறிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் இருந்திருக்கிறது. சபைகளும் சத்தியத்தை விட வேறு ‘விஷயங்களுக்கு’ முக்கியத்துவம் அளித்தே ஊழியங்களை இன்றும் நடத்தி வருகின்றன. சபை வரலாற்றிலும் இப்படியானதொரு இருண்டகாலம் இருந்திருக்கிறது. கத்தோலிக்க மதம் கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாத வேதத்திற்கு புறம்பான மதம் என்ற அடிப்படை உணர்வுகூட இல்லாத கிறிஸ்தவமாக நம்மினத்துக் கிறிஸ்தவம் இருந்து வருகின்றது. ஞானஸ்நானத் தண்ணீர் பாவத்தைக் கழுவுகிறதென்றும், அந்நிய பாஷை ஆவியைப் பெற்றிருப்பதற்கு அடையாளமென்றும், போதகரின் ஜெபம் சரீர சுகத்தையும், வாழ்க்கையில் சுபீட்சத்தையும் கொண்டுவரும் என்றும், வெகு சாதாரணமான ஒரு தீர்மானத்தை மட்டும் எடுத்துவிட்டால் போதும் சட்டென்று இயேசுவிடம் வந்துவிடலாம் என்றும், சுவிசேஷ நாயகன் பொருளாதார சுபீட்சத்தை அள்ளிக் கொட்டுவார் என்றும், சராசரிக் கிறிஸ்தவனாக இருந்துவிட்டால் போதும் பாவத்தைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லையென்றும் சர்வசாதாரணமாக எண்ணி நடந்து அதற்குக் கிறிஸ்தவம் என்று பெயர் கொடுத்திருக்கிறோம் நம்மினத்தில். சத்தியப் பஞ்சம் இன்று நம்மினத்தை சாப்பாட்டுப் பஞ்சத்தைவிடக் கொடூரமாக வாட்டிக் கொண்டிருக்கிறது.

‘சத்தியம் விடுதலையாக்கும்’ என்றார் இயேசு. சத்தியத்துக்கு இடம் கொடுக்காத இருதயத்தோடு வாழ்ந்து வந்தால் நமக்கு விடுதலை எங்கே கிடைக்கப்போகிறது?

“என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்னிருதயத்தில்” என்றேங்கினான் ஒரு தமிழ்க் கவி.

“என்று வரும் இந்த சத்திய தாகம் நம்மினத்திற்கு” என்றேங்கி நிற்கிறேன் நான்!

_____________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக