தொமஸ் வொட்சனின் ‘மனந்திரும்புதல்’

Thomas-Watsonதொமஸ் வொட்சன் (1620-1686) இங்கிலாந்தில் பிறந்தவர். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் இருந்த இம்மானுவேல் கல்லூரியில் ஆழமாகக் கல்வி பயின்று பட்டம் பெற்றவர். படிப்பை முடித்தபின் அவர் பியூரிட்டன் குடும்பமொன்றில் கொஞ்சக்காலம் வாழ்ந்து வந்தார். 1647ல் பியூரிட்டன் போதனைகளில் நம்பிக்கை வைத்திருந்த போதகர் ஒருவரின் மகளான அபிகேல் பீடில் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அடுத்து வந்த பதின்மூன்று வருடங்களில் அவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன; அவற்றில் நான்கை அவர்கள் வளரும்போதே பறிகொடுக்க நேர்ந்தது.

இங்கிலாந்தில் உள்நாட்டுப் போரின்போது வொட்சன் பிரெஸ்பிடீரியன் கோட்பாடுகளில் ஆர்வம்காட்ட ஆரம்பித்தார். நாட்டின் அரசனை அவர் சார்ந்து நின்றார். முதலாம் சார்ள்ஸ் கொலை செய்யப்படலாம் என்ற நிலை எழுந்தபோது அதை நிறுத்தும்படி ஒலிவர் குரோம்வெலைச் சந்தித்துப் பேசச் சென்ற பிரெஸ்பிடீரியன் போதகர்களில் ஒருவராக வொட்சன் இருந்தார். அரசனை மறுபடியும் நிலைநிறுத்த முயன்றவர்களில் ஒருவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கிறிஸ்டோபர் லவ், வில்லியம் ஜெங்கின்ஸ் போன்றோரோடு வொட்சன் 1651ல் சிறையில் தள்ளப்பட்டார். அவர் 1652ல் விடுவிக்கப்பட்டு வோல்புரூக்கில் இருந்த ஆங்கிலேய திருச்சபையின் புனித ஸ்டீவன்ஸ் சபையில் போதகராக நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் தேர்ந்த பிரசங்கத்தின் காரணமாக வொட்ஸனின் பெயர் நாடெங்கும் பிரசித்தி பெற்றது.

1662ல் அரசு ஒத்துழைப்புக் கட்டளைச் சட்டத்தைக் கொண்டுவந்தபோது, ஒத்துழையாமைப் பிரிவைச் சார்ந்து நின்ற காரணத்தால் வொட்சன் போதகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சபை நீக்கம் செய்யப்பட்ட ஒத்துழையாமைவாதிகள் நாட்டில் அதிக துன்பங்களை அனுபவித்தபோதும் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் வொட்ஸன் வீடுகளிலும், விவசாயக் கூடங்களிலும், காடுகளிலும் தொடர்ந்து பிரசங்கம் செய்தார். 1666ல் இலண்டனின் பெருந்தீ விபத்துக்குப் பிறகு, ஒரு பெரிய அறையை மக்கள் கூடிவந்து பிரசங்கம் கேட்பதற்காக வொட்சன் ஏற்பாடு செய்தார். அவர் கர்த்தரின் பணியில் சபைக்கு வெளியில் இருந்து ஆர்வத்தோடு ஈடுபட்டு வந்தார். 1672ல் மறுபடியும் பிரசங்கிப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற்று பிஷப் கேட், குரொஸ்பி ஹாலில் ஸ்டீபன் சார்நொக் அவரோடு இணைந்து பணிபுரியும்வரையும் மூன்று வருடங்களுக்குப் பிரசங்க ஊழியத்தில் ஈடுபட்டிருந்தார். ஸ்டீபன் சார்நொக் 1680ல் மரிக்கும்வரையும் இருவரும் இணைந்து ஊழியத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்பு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஓய்வு பெற்று எசெக்ஸில் வாழ்ந்து வந்தார். 1688ல் தனிஜெபம் செய்துகொண்டிருந்த வேளையில் வொட்சன் இறைபாதம் அடைந்தார். பார்ன்ஸ்டன் சபையைச் சார்ந்த கல்லறையில் அங்கு போதகராகப் பணிபுரிந்திருந்த அவருடைய மாமனார் புதைக்கப்பட்டிருந்த பகுதிலேயே புதைக்கப்பட்டார்.

தொமஸ் வொட்ஸன் பிரசங்கத்தில் வல்லமை பெற்ற நற்போதகராக இருந்தது மட்டுமல்லாமல் அநேக நூல்களை எழுதி எழுத்துப்பணியிலும் ஈடுபட்டு வந்தார். நிறைவான இறையியல் ஞானமுள்ளவராக, ஆழமான ஆவிக்குரிய அன்போடுகூடிய ஆத்துமாவைக் கொண்டவராக, தெளிவாகவும், தகுந்த உதாரணங்களைப் பயன்படுத்தியும், பயன்பாடுகளை அள்ளித்தந்தும் பிரசங்கிக்கக்கூடிய வல்லமை பெற்றவராக வொட்சன் இருந்தார். அவர் அருமையான பியூரிட்டன் பெரியவர்களில் ஒருவரும் பிரசித்தி பெற்றவருமாக இருந்தார். அவருடைய நூல்களில் சிறந்தவையாக Body of Divinity, Ten Commandments, The Beatitudes, The Lord’s Prayer, The Doctrine of Repentance போன்றவை கருதப்படுகின்றன. கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய பியூரிட்டன்களின் போதனையை அவருடைய Harmless Doves: A Puritan view of the Christian Life என்ற நூல் விளக்குகிறது. வொட்ஸன் சிறந்த எழுத்தாளர். ஏனைய பியூரிட்டன்களைப்போலவே அவருடைய எழுத்துக்களில் வேதம் எங்கும் வியாபித்துப் பரவிக்காணப்பட்டது. வேதத்தை அள்ளி, அள்ளித்தந்து தெளிவான விளக்கங்களோடு பயன்பாடுகளைப் பரவி விரிந்தோடும் வெள்ளப்பெருக்குபோல் தன் எழுத்துக்களில் ஓடவிட்டிருந்தார் வொட்ஸன்.

மனந்திரும்புதல்

repentance-3d-webஇந்த ஆக்கத்தை நான் எழுதுவதற்குக் காரணம் தமிழில் வெளிவந்திருக்கும் வொட்ஸனின் நூலொன்றை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காகத்தான். கடந்த வருடம் (2014) வெளியிடப்பட்ட இந்த நூல்பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டு நண்பரொருவர் மூலம் அதைப்பெற்று வாசித்தேன். அது வொட்சனின் ‘மனந்திரும்புதல்’ என்ற நூலின் தமிழாக்கம். ஆங்கிலத்தில் 119 பக்கங்களுடைய இந்நூல் தமிழில் 70 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. ஆங்கில நூலின் 11 அதிகாரங்கள் இதில் 9ஆக சுருக்கப்பட்டிருக்கின்றன. அதற்குக் காரணம் ஆங்கில நூலில்  முதல் அதிகாரம் இதில் முன்னுரையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கில நூலின் 3வது, 4வது அதிகாரங்கள் இதில் ஒரே அதிகாரமாக வந்திருக்கின்றன. ஆங்கில மூல நூலின் உள்ளடக்கம் முழுமையாகவே மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது.

நூலைப்பற்றி விளக்குமுன் அதனை வெளியிட்டிருப்பவர்களையும், நூலின் நடையையும் பற்றிய கருத்துத் தெரிவிக்காமல் இருக்க முடியாது. இதை வெளியிட்டிருப்பவர்கள் லேமென் இவெஞ்சலிக்கள் ஐக்கியம் எனும் பதிப்பகத்தார். லேமென் இவெஞ்சலிக்கள் கிறிஸ்தவ அமைப்பின் பதிப்பகத்தார் இவர்கள். ஆச்சரியமென்னவென்றால் இரட்சிப்பைப் பற்றிய போதனைகளில் ஆர்மீனியனிசப் போதனைகளைக் கொண்டிருந்து, கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய போதனைகளில் கெஸ்சிக் போதனைகளை ஒத்த கருத்துக்களைக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு அதற்கெல்லாம் முரண்பட்ட வேதபோதனைகளைக் கொண்டிருக்கும் சீர்திருத்தவாத பியூரிட்டன் எழுத்தாளரின் நூலொன்றை வெளியிட்டிருப்பதுதான். இவர்கள் வெளியிட்டிருக்கும் அத்தகைய நூல் இது ஒன்றுதான். நூலை ஏன் வெளியிட்டார்கள் என்பது பற்றிய எந்த விபரமும் நூலில் தரப்படவில்லை; தோமஸ் வொட்சனைப் பற்றிய விபரங்களும் இல்லை. நூலின் பிற்பக்கங்களில் அவர்கள் அறிமுகம் செய்திருக்கும் வேறு நூல்களும் சீர்திருத்தவாத பியூரிட்டன் இறையியல் போதனைகளோடு அடிப்படையிலேயே முரண்படுபவை. இருந்தபோதும் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இவர்கள் மூலம் தொமஸ் வொட்சனின் நூல் கிடைத்திருப்பது நல்லதுதான். பியூரிட்டன் கருத்துக்களோடு முரண்படுபவர்கள் இதை வெளியிட்டிருப்பதால் ஆங்காங்கு மாற்றங்களை நூலில் செய்திருப்பார்களோ என்ற அச்சத்தால் நூலைப் பல இடங்களில் சோதித்துப் பார்க்க வேண்டியிருந்தது. நல்லவேளையாக இதில் வொட்ஸனின் கருத்துக்கள் சிதைக்கப்படாமல் உள்ளவாறே தரப்பட்டிருக்கின்றன.

repentance-3d tamil-webநூலின் நடை தற்காலத் தமிழில் இல்லை. வடமொழித்தாக்கம் அதிகம் தெரிகிறது. கிறிஸ்தவ மொழி நடை பயன்படுத்தப்பட்டிருப்பது ஒரு முக்கிய குறைபாடு. எழுத்துக்கள் எப்போதுமே தடையின்றி வாசிப்பதற்கு சுவையாக அருவிபோல் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்; வாசகனை வாசிக்கும்படித் தூண்டவேண்டும். அந்தவிதத்தில் தமிழ்நடை அமையவில்லை. சில முக்கிய வார்த்தைகள் இன்று பயன்பாட்டில் இல்லை. பத்திகளில் வசனங்கள் மேலும் கவனத்தோடு அமைக்கப்பட்டிருந்திருக்கலாம். இது பொதுவாகவே தமிழில் காணப்படும் கிறிஸ்தவ நூல்களில் இருக்கும் முக்கிய குறைபாடு. இது நல்ல எண்ணத்தில் நான் கவனித்த குறை; அடுத்த வெளியீட்டில் இவை தீர்க்கப்பட்டால் பலருக்கும் பெரு நன்மையாக அமையும். பிரதி எடுத்து எனக்கு அனுப்பப்பட்டிருந்த நூலை நான் கணினியில் வாசித்தேன். அதிலும் அச்சிடப்பட்டிருக்கும் விதத்தை ஓரளவுக்கு அறிந்துகொள்ள முடிந்தது. அச்சுக்கோர்ப்பதில் இன்னும் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். மலிவுப் பதிப்புப்போன்ற தாளில் நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இன்னும் நல்ல முறையில் கவனத்தோடு அதை வெளியிட்டிருந்திருக்கலாம்.

இனி நூலின் கருப்பொருளைப் பார்ப்போமே. தொமஸ் வொட்சன் சீர்திருத்தவாத பியூரிட்டன்களுக்கே உரிய பாங்கில் மனந்திரும்பலாகிய கிருபை பற்றி நூலில் விளக்கியிருக்கிறார். மனந்திரும்புதல் பற்றி இந்த அளவுக்கு ஆழமாக ஒரு நூலை எழுதுமளவுக்கு பியூரிட்டன்கள் வேதத்தைக் கரைத்துக் குடித்திருந்தனர். பியூரிட்டன் பெரியவர்களின் சிறப்பான அம்சமே அவர்களுடைய வேதப்பாண்டித்தியந்தான். அதற்கு வொட்சனின் நூல் உதாரணமாக இருக்கிறது. தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்றைக்கு மனந்திரும்புதல் பற்றிய தெளிவான விளக்கம் இல்லாலிருக்கிறது. பெரும்பாலான பிரசங்கிகளுக்கே அதுபற்றிய வேதஞானம் இல்லாமலிருக்கிறது. மனந்திரும்பு, விசுவாசி என்று மீண்டும் மீண்டும் சொல்லுவதைத்தவிர வேறு எதையும் அவர்களால் சொல்லத் தெரியவில்லை. சடுதியாக, சுயமாக இருதயத்தில் இயேசுவுவைப் பின்பற்றுவதற்காக எடுக்கும் தீர்மானமாக மட்டும் மனந்திரும்புதலை அநேகர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இந்தக் குறைபாட்டை ஆவிக்குரியவிதத்தில் உணர்ந்து மனந்திரும்புதலைப்பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலுள்ளவர்களுக்கு இந்த நூல் பயன்தரும்.

தொமஸ் வொட்சன் நூலுக்கான முன்னுரையில் மனந்திரும்புதலின் அவசியத்தைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். மனந்திரும்புதல் என்பது கிறிஸ்தவனில் ஒருதடவை மட்டும் நடந்து முடிந்துவிட்ட காரியமல்ல. அப்படித்தான் அநேகர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அது மிகத் தவறு. வொட்சன் விளக்குவது இரட்சிப்பு அடையும்போது நம்மில் அடிப்படையில் நிகழ்ந்து, தொடர்ச்சியாக நடைமுறையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மனந்திரும்புதலைப் பற்றியது. மனந்திரும்புதலைத் தொடர்ச்சியாகக் கொண்டிருக்காத இருதயம் இயேசுவை அறியாத இருதயம் என்பது உங்களுக்குப் புரிகிறதா?

மனந்திரும்புதலைப் பற்றிய முக்கியமான இறையியல் உண்மைகளை வொட்சன் ஆரம்பத்திலேயே முன்னுரையில் தந்திருக்கிறார்:

  1. மனந்திரும்புதல் பக்திக்கு ஊக்கமளிக்கிறது. ஆவியின் அசைவாட்டத்தை மனந்திரும்புதலிலேயே நாம் காண்கிறோம். பாவத்தின் துக்கத்தை கிறிஸ்தவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று கூறும் வொட்சன் அதற்காக நாம் சந்தோஷமற்றவர்களாக இருக்க வேண்டும் என்றுகூற வரவில்லை. அவரைப் பொறுத்தவரையில் மனந்திரும்புதலின் துக்கமே நமக்கு துயரத்தை அகற்றுவதாயிருக்கிறது; ஆவியின் சந்தோஷத்தைக் கொடுப்பதாக இருக்கிறது.
  2. மனந்திரும்புதல் அடிப்படைக் கிருபை; அது சுவிசேஷத்தின் கிருபை; மனிதனின் கிரியை அல்ல. அத்தோடு மனந்திரும்புதல் எப்போதும் விசுவாசத்தோடு இணைந்து காணப்படுகிறது. எது முதலில் நிகழ்கிறது என்பது முக்கியமல்ல; ஒன்றில்லாமல் இன்னொன்று இருக்க வழியில்லை. மனந்திரும்புதல் இல்லாமல் எவரும் இரட்சிப்படைவதில்லை. உண்மையான மனந்திரும்புதல் நிகழ்ந்திருக்கும் இருதயத்தில் அதற்குத் தூபம் போட்டிருப்பதே விசுவாசத்தின் விதைதான். கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற ஒருவனில் வெளிப்படையாக முதலில் தெரிவது மனந்திரும்புதலே என்கிறார் வொட்சன்.
  3. மனந்திரும்புதல் எவ்வாறு நிகழ்கிறது என்பதை விளக்கும் வொட்ஸன் அது வார்த்தையினாலும், பரிசுத்த ஆவியினாலும் நிகழ்கின்றது என்று விளக்குகிறார். பிரசங்கிகள் கர்த்தரின் வெறும் ஊதுகுழல்களே. மனந்திரும்புதல் எல்லோரிலும் ஒரேவிதத்தில் நிகழ்வதில்லை எனும் வொட்சன், ஆவியானவர் தன் சித்தப்படி அதை ஆத்துமாக்களில் வெவ்வேறு விதங்களில் நிகழ்த்துகிறார் என்கிறார். மனந்திரும்புதலின் அனுபவத்திலும், அதை அடையும்விதத்திலுந்தான் ஒருவருக்கொருவர் மாற்றமிருக்குமே தவிர அதன் தன்மையில் அல்ல.

முன்னுரையாக மனந்திரும்புதல் பற்றிய அடிப்படை உண்மைகளை விளக்கியபின் முதலாவது அதிகாரத்தில் வொட்சன், போலி மனந்திரும்புதலைப்பற்றி விளக்குகிறார். இது அவசியந்தான். உண்மையில் நிகழ்காலத்தில் நிகழ்ந்துவரும் சுவிசேஷ ஊழியங்களில் போலித்தனமான மனந்திரும்புதல்களையே அதிகமாகக் காண்கிறோம். போலி மனந்திரும்புதல்களை அடையாளங் காண்பதற்கு உதவுமுகமாக அதுபற்றிய அறிகுறிகளை இந்த அதிகாரத்தில் வொட்சன் விளக்கியிருக்கிறார். (1) பாவத்தைப் பற்றிய தற்காலிகமான வெறும் பயமும், நடுக்கமும் மனந்திரும்புதலுக்கு அறிகுறியல்ல. (2) கசப்பான அனுபவங்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக பாவம் செய்யப்போவதில்லை என்று எடுக்கும் தீர்மானங்கள் மட்டும் மனந்திரும்புதலுக்கு அடையாளமில்லை. (3) சில பாவங்களை மட்டும் செய்யப் போவதில்லை என்று உறுதியோடு அவற்றை விட்டுவிடுவது மனந்திரும்புதலுக்கு அறிகுறியல்ல. ‘மனந்திரும்புதல் இல்லாமலும் பாவங்கள் செய்வதை விட்டுவிட முடியும்’ என்று எச்சரிக்கிறார் வொட்சன் (Sin may be parted with, yet without repentance). இவற்றின் மூலம் போலி மனந்திரும்புதலுக்கும் மெய்யான மனந்திரும்புலுக்கும் இடையில் உள்ள பெரும் வேறுபாட்டை விளக்க எத்தனிக்கிறார் வொட்சன். அடிப்படை இருதயமாற்றம் எதுவுமின்றி வெறும் உலகப்போக்கான ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மட்டும் கொண்டிருந்து பாவங்களைச் செய்யாமலிருப்பது மனந்திரும்புதலுக்கு அடையாளமாகாது என்கிறார் அவர். ‘நம்மில் நிகழ்ந்திருக்கும் கிருபையின் அடிப்படையில் பாவத்துக்கு நாம் விலகி நிற்கும்போதே மெய்யாக நாம் பாவம் செய்யாமல் இருக்கிறோம்’ என்கிறார் வொட்சன். ‘விசுவாசிக்கிறேன் என்ற வார்த்தை உன் நாக்கின் நுனியில் இருந்து குதித்தால் போதும் சாமி, ஞானஸ்நானம் எடுத்துக்கொள்’ என்று ஆத்துமாக்களைத் தேடி அலைந்துகொண்டிருக்கும் சுவிசேஷப் பிரசங்கிகள் எண்ணிக்கையற்றிருக்கும் இந்தக் காலத்தில் போலி மனந்திரும்புதலைப்பற்றிய வொட்சனின் எச்சரிக்கைகள் மிகவும் அவசியம்.

மெய்யான மனந்திரும்புதலின் மெய்த்தன்மையை அதற்கு அடுத்த அதிகாரத்தில் விளக்குகிறார் வொட்சன். ஆறு அம்சங்களை அத்தகைய மனந்திரும்புதல் கொண்டிருக்கும் என்கிறார் அவர். அவற்றில் ஒன்று குறைந்தாலும் ஒருவனில் மனந்திரும்புதல் இல்லை என்றுதான் அர்த்தம் என்கிறார் வொட்சன். இது மனந்திரும்புதல் மிகவும் கஷ்டமானது என்ற எண்ணத்தை ஒருவரில் உண்டாக்கலாம். ஆனால், அப்படி எண்ண வேண்டிய அவசியமில்லை. மனந்திரும்புதல் உங்களுடைய சொந்தக் கிரியையாக இருந்தால் நீங்கள் அப்படி எண்ணுவதில் நியாயமுண்டு. ஆனால், அது கிருபையின் செயலாக இருக்கிறது. அது ஆவியால் நம்மில் நிகழ்கிற காரியம்; நாம் நம்மில் உண்டாக்குகிற கிரியை அல்ல அது. அதனால், வொட்சன் விளக்கும் ஆறு அடையாளங்களும் நம்மில் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்ப்பதில் தவறில்லை. அவை இருக்குமானால் கர்த்தரிடம் இருந்து நாம் மனந்திரும்புதலைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்று ஆனந்தமடையலாம். ஒன்றை விளக்குவது இங்கு அவசியமாகிறது. வொட்சனின் ஆறு அம்ச விளக்கங்களை வாசித்துவிட்டு பவுலைப் போலவோ அல்லது கெட்ட குமாரனைப்போலவோ அல்லது சமாரியப் பெண்ணைப்போவோ நமக்கு மனந்திரும்புதல் ஆழமாக நிகழவில்லையே என்று ஆதங்கப்பட்டு, மனந்திரும்புதல் உங்களில் இல்லை என்ற தவறான முடிவுக்கு வந்துவிடாதீர்கள். அப்படி நினைத்துவிடக்கூடிய ஆபத்திருக்கிறது. வொட்சன் கூறும் மனந்திரும்புதலின் அம்சங்கள்தான் நம்மில் இருக்க வேண்டுமே தவிர அவை இன்னொருவரில் நிகழ்ந்திருப்பதைப்போல ஆழமாகவோ, அசாதாரண ரீதியிலோ அதேவிதமாக நம்மில் நிகழ்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிலர் இரட்டுடுத்திக் கதறி அழுது பாவத்துக்காக அதிக காலம் வருத்தப்பட்டிருப்பார்கள். அது அவர்களைப் பொறுத்தவரையில் கர்த்தர் தந்திருக்கும் அனுபவம். அதே பாவ வருத்தம் நம்மில் அத்தனை ஆழமாக நெடுங்காலத்துக்கு இருந்திராவிட்டாலும், நெஞ்சை நெகிழ வைக்குமளவுக்காவது நிகழ்ந்திருந்தாலே மனந்திரும்புதல் நிகழ்ந்திருக்கிறது என்றுதான் அர்த்தம்; அத்தகைய மனந்திரும்புதல் தொடர்ந்தும் நம்மில் காணப்பட வேண்டும். ஜோன் நியூட்டன் தான் செய்த பாவங்களுக்காக கண்ணீர்விட்டுக் கதறியிருக்கிறார்; கிறிஸ்துவிடம் வந்த பின்னும் அது அவரில் தொடர்ந்திருக்கிறது. எந்தளவுக்கு பாவத்தில் ஒருவர் விழுந்திருக்கிறாரோ அந்தளவுக்கு அவர்களுடைய மனந்திரும்புதலின் வெளிப்பாடும் இருக்கும். அதைத்தான் வொட்சன் விளக்கியிருக்கிறார்.

வொட்சன் விளக்கும், பாவத்தைக் குறித்த ஆறு அம்சங்களும் பின்வருமாறு: 1. பாவத்தைப் பாவமாகப் பார்த்தல். 2. பாவத்தைக் குறித்த துக்கம். 3. பாவத்தை அறிக்கையிடுதல். 4. பாவத்தைக் குறித்த வெட்கம். 5. பாவ வெறுப்பு. 6. பாவத்தைவிட்டு விலகியோடுதல். பாவத்தைப் பற்றி இத்தனை ஆழமாக விளக்கிப் பிரசங்கித்தும் எழுதியும் இருப்பவர்கள் சீர்திருத்த, பியூரிட்டன் பிரசங்கிகளே.

இக்காலத் தமிழ் சுவிசேஷப் பிரசங்கங்களில் மனந்திரும்புதலில் இருக்கவேண்டிய இத்தனை அம்சங்களையும் பற்றிய அறிவிருந்து விளக்கிப் பிரசங்கிப்பவர்கள் அரிது. அதற்குக் காரணம் என்ன தெரியுமா? முதலில், 19ம் நூற்றாண்டு சார்ள்ஸ் பினியின் கிறிஸ்துவுக்காக தீர்மானம் எடுக்கும் போலி சுவிசேஷ முறைகள் தமிழ் கிறிஸ்தவத்தைக் கோரமாக ஆக்கிரமித்திருப்பது. இரண்டாவது, மனந்திரும்புதலையும், பாவத்தையும் பற்றிய வேதஇறையியல் உண்மைகளை அநேகர் அறிந்திராமலிருப்பது. வெறுமனே இயேசுவுக்காக கையுயர்த்தும் சுவிசேஷத்திற்கு இத்தகைய இறையியல் உண்மைகள் அவசியமில்லைதான். ஆனால், இவற்றைப் புறந்தள்ளி கிறிஸ்துவின் சுவிசேஷத்தை ஒருபோதும் பிரசங்கிக்க முடியாது.

மேலே குறிப்பிடப்பட்ட ஆறு அம்சங்களையும் வொட்சன் தனித்தனியாக விளக்கிக்காட்டியிருக்கிறார். 1வது பாவத்தைப் பாவமாகப் பார்க்கும் அவசியத்தை வலியுறுத்துகிறது. இதை விளக்குவதில் பியூரிட்டன்களைப்போலக் கைதேர்ந்தவர்களில்லை. இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே ரால்ப் வென்னிங்கின் (Ralph Venning) The Plague of Plagues என்ற அருமையான நூல் நினைவுக்கு வருகிறது. 1669ல் முதலில் வெளியிடப்பட்ட இந்நூல் பாவத்தின் தன்மையைத் துல்லியமாக ஆராய்ந்து விளக்குகின்ற நூல். இந்தளவுக்கு பாவத்தை விளக்கும் நூல்கள் தற்காலத்தில் ஆங்கிலத்தில் அரிது. ரால்ப் வென்னிங்கும் ஒரு பியூரிட்டனே. இவரும் வொட்சனைப் போல ஒத்துழையாமைவாதியாக இருந்தவர்.

2வது அம்சமான பாவத்தைக் குறித்த துக்கத்திற்கு வொட்சன் நீண்ட விளக்கத்தை ஆழமாக சிந்தித்து அளித்திருக்கிறார். வெறும் உலகப்பிரகாரமான யூதாஸின் துக்கத்தில் இருந்து ‘தேவனுக்கேற்ற அல்லது பக்திக்குரிய துக்கத்தை’ வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார். அதேபோல் பாவத்தைவிட்டு விலகியோடுவதன் அவசியத்தைப் பற்றியும் விளக்கியிருக்கிறார். இந்தளவுக்கு பாவத்தின் தன்மைகளை விளக்கி, மெய்யான மனந்திரும்புதலுக்கு பாவத்தைப் பற்றிய அறிவும், உணர்தலும் அவசியமென்பதை சுட்டிக்காட்டி அதிலிருந்து விலகியோடுவதற்கு எத்தகைய இருதயம் தேவை என்பதைப் போதிக்கும் நூல்கள் தமிழில் அரிது என்றேகூற வேண்டும். இத்தகைய அருமையான பியூரிட்டன் வேத விளக்கத்தை தமிழ் கிறிஸ்தவர்கள் வாசிக்கின்ற வசதி ஏற்பட்டிருப்பது கர்த்தரின் கிருபையே.

கிறிஸ்தவர்களில் பொதுவாகவே இன்று தொடர்ச்சியான மனந்திரும்புதலைக் காணமுடியாதிருக்கிறது. தவறு செய்துவிட்டேன் என்ற உணர்வோடு கர்த்தரிடம் மட்டுமல்லாமல் மனிதர்களிடமும் மன்னிப்புக் கேட்கும் இருதயத்தைக் காணமுடியாதிருக்கிறது. விசுவாசத்தைப் பற்றியும், ஜெபத்தைப் பற்றியும் பேசுகிற அளவுக்கு பாவ உணர்வைப்பற்றியும், பாவத்துக்காக வருந்துவதையும், அறிக்கையிடுவதையும் கேட்கவும், காணவும் முடியாதிருக்கிறது. கர்த்தர் மன்னிக்கிறவர், மன்னித்துவிட்டார் என்ற போர்வையின் கீழ் ஒளிந்துகொண்டு இருதயத்தை வருத்தப்படுத்தாத தேவ செய்திகளை நாடிப் போலிவாழ்க்கை வாழ்வது அதிகரித்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் வொட்சனின் நூல் தமிழ் கிறிஸ்தவர்கள் வாசிக்கக்கூடியதாக வந்திருப்பது நல்லதே.

3ம் அதிகாரத்தில் வொட்சன் மனந்திரும்புதலை வற்புறுத்தும் மூன்று காரணங்களை சுட்டிக் காட்டியிருக்கிறார். அதற்கு அடுத்த அதிகாரம் மனந்திரும்புதலை வற்புறுத்தும் அறிவுரையாக அமைந்திருக்கிறது. 5ம் அதிகாரம் மனந்திரும்புவதை மேலும் வற்புறுத்தும் 16 பலமான காரணங்களை ஆணித்தரமாக முன்வைக்கின்றன. 6ம் அதிகாரம் துரிதமாக மனந்திரும்பும்படித் தூண்டுகிற விளக்கமாக, நான்கு காரணங்களை வாசகர்கள் முன்வைக்கின்றது. 8வது அதிகாரம் மனந்திரும்புவதில் ஏற்படும் பத்து முட்டுக்கட்டைகளை எவ்வாறு நீக்குவது என்பதை விளக்குகின்றது. இந்நூலின் கடைசி அதிகாரமான 9வது அதிகாரம் மனந்திரும்புதலுக்கான வழிமுறைகளை அலசி ஆராய்ந்து விளக்குகிறது. அதற்கான ஆறு வழிமுறைகளை விளக்கமாக இந்த அதிகாரத்தில் தந்திருக்கிறார் வொட்சன்.

இன்று நாம் பிரசங்கங்களில் கேட்கின்ற மனந்திரும்புதல் பற்றிய செய்திகளுக்கும் தொமஸ் வொட்சனின் போதனைகளுக்கும் பரலோகத்திற்கும் இந்த உலகத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளி இருக்கிறது. பாவத்தைப் பற்றியும் அதை இருதயத்தில் உணர்ந்து, வருந்தி, கண்ணீர்விட்டு, வெறுத்து, அறிக்கையிட்டு, அதைவிட்டு விலகியோடி, தொடர்ந்து அத்தகைய மனந்திரும்புதலை நடைமுறையில் கொண்டிருக்கும் கிறிஸ்தவத்தைப் பற்றி வொட்சன் விளக்குகிறார். ஆனால், மெஷின் வேகத்தில் விசுவாசத்தைப் பெற்று கண்ணிமைக்கும் நேரத்தில் ஞானஸ்நானத்தைக் கொடுக்கும் உலகரீதியிலானதொரு கிறிஸ்தவத்தையே நாம் சுற்றிவரப் பார்க்கிறோம். வேதம் ஒன்றைப் போதிக்க நடைமுறையில் அதற்கெதிராக செயல்பட்டு வரும் சபைகளையும், பிரசங்கிகளையும் எங்கும் காண்கிறோம்.

மனந்திரும்புதலைப் பற்றிய வொட்சனின் போதனைகளையே ஜோன் கல்ஹூனும் (1748-1827) தன்னுடைய நூலான மனந்திரும்புதலில் தந்திருக்கிறார். இதையே நாம் ஜோன் ஓவனிலும், ஜோன் பனியனிலும் ஏனைய சீர்திருத்தவாத பியூரிட்டன் பெரியவர்களின் நூல்களிலும், பிரசங்கங்களிலும் காணலாம். தற்கால தமிழ் கிறிஸ்தவம் மெய்யான வேத கிறிஸ்தவத்தை விட்டுவிலகியோடியிருக்கிறது. கிறிஸ்தவர்கள் வேதம் அறியாமலும், சத்தியங்களை உணரக்கூடிய ஆத்துமப் பக்குவமில்லாமலும் இருந்து வருகிறார்கள். தொமஸ் வொட்சனின் நூல் சபைகளில் போதிக்கப்பட வேண்டியது; பிரசங்கங்களில் வர வேண்டியது; இறையியல் மாணவர்கள் ஆராய்ந்து இருதயத்தை சோதித்துப் படிக்கவேண்டியது. இதன் பொருத்தமான பகுதிகளைத் திருவிருந்து காலங்களில் பகுதி பகுதியாக சபையில் வாசிப்பதுகூட ஆத்துமாக்களுக்குப் பலன் தரும். ஓய்வுநாளில் இதை வாசிக்கும்போது உலகக்காரியங்களையும் தள்ளிவைக்கலாம் இல்லையா?

தொமஸ் வொட்சன் போன்ற பியூரிட்டன் பெரியவர்கள் மனந்திரும்புதல் பற்றிய இத்தகைய ஆழமான, விரிவான விளக்கங்களைத் தருவதற்குக் காரணமென்ன? இதற்கு நான் ஒரு வரியில் பதில் தந்துவிட முடியாது. வொட்சன் இந்நூலில் மனந்திரும்புதலும் விசுவாசமும் இணைந்தே காணப்படும் என்று விளக்கியிருக்கிறார். இருந்தபோதும் அவர் மனந்திரும்புதலாகிய கிருபையை மட்டுமே தனியாக இந்நூலில் விளக்கியிருக்கிறார். விசுவாசமில்லாமல் இத்தகைய மனந்திரும்புதல் நிகழ வழியில்லை என்பதையும் விளக்கியிருக்கிறார். இருந்தபோதும் இந்த மனந்திரும்புதல் இல்லாமல் எவரும் இரட்சிப்படைய முடியாது என்கிறார் வொட்சன். ஆகவே, இரட்சிப்போடு தொடர்புடையதாக அதில் காணப்படும் பல கிருபைகளில் ஒன்று மனந்திரும்புதல் என்பதை அறிந்துகொள்ளுகிறோம். இரட்சிப்பின் பல கிருபைகளாக அழைப்பு, நீதிமானாக்குதல், மகவேட்பு, மறுபிறப்பு, மனந்திரும்புதல், விசுவாசம், பரிசுத்தமாகுதல், கிறிஸ்துவோடான இணைப்பு, மகிமையடைதல் ஆகியன உள்ளன. இறையாண்மையுள்ள கர்த்தரால் இரட்சிக்கப்படும்போது இந்தக் கிருபைகளை நாம் அனுபவிக்கிறோம். கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற மனிதன் இவற்றைக் கிருபையால் அடைகிறான். அவனடையும் இரட்சிப்பு எத்தனைப் பெரியது, சிறப்பானது என்பதை உணரவும், அந்த இரட்சிப்புக்கேற்ற கிறிஸ்தவ வாழ்க்கையை விசுவாசத்தோடும், கீழ்ப்படிவோடும் வாழவும் இந்தக் கிருபைகளைப்பற்றி ஆவிக்குரியவிதத்தில் விசுவாசி அறிவுபூர்வமாகவும், அனுபவபூர்வமாகவும் அறிந்திருக்க வேண்டும். ஆவிக்குரிய ஆத்மீக வாழ்க்கையை ஆண்டவரையும், அவருடைய செயல்களையும் பற்றிய ஆவிக்குரிய அறிவில்லாமல் வாழந்துவிட முடியாது. அதற்கு உதவுமுகமாகவே வொட்சன் இந்நூலை எழுதியிருக்கிறார்.

மனந்திரும்புதலில் இத்தனை விஷயங்கள் இருக்கின்றதா? என்று நூலை வாசிக்கிறவர்கள் ஆதங்கப்படலாம். மனந்திரும்புதல் பற்றி அதிகமான வேதவிளக்கமில்லாமல் இருந்து வந்திருக்கிறவர்களுக்கு இது ஆச்சரியத்தையும், ஆசுவாசத்தையும் கொடுப்பதில் ஆச்சரியமில்லை. இருந்தபோதும், மெய்யான மனந்திரும்புதல் இல்லாமல் இரட்சிப்பை அடைய முடியாது; இரட்சிப்புக்கேற்ற வாழ்க்கையை வாழவும் முடியாது. மெய்யான இரட்சிப்புக்குத் தேவையான வேதபூர்வமான மனந்திரும்புதலை அறிந்துகொள்ள தொமஸ் வொட்சனின் நூல் நிச்சயம் அநேகருக்குப் பயன்படும். நூலைப்பெற்று நேரத்தை ஒதுக்கி, அமைதியாக, சிந்தித்து, ஆராய்ந்து, ஆவியின் துணையோடு வாசியுங்கள். மெய்யான மனந்திரும்புதல் உங்களில் நிகழ்ந்திருக்கிறதா? தொடர்ந்தும் வெளிப்படுகிறதா என்பதை ஆராய்ந்து பாருங்கள். பரலோகத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதில் நமக்கு நிச்சயமும், உறுதிப்பாடும் அவசியம் இல்லையா; அது பெயரளவில் மட்டும் இருந்துவிட்டால் பேராபத்தாகிவிடுமே.

இந்நூல் தமிழ்நாட்டில் சுவிசேஷ இலக்கிய சேவை (ELS) நூல் நிலையங்களில் கிடைக்கிறது.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக