பழைய ஏற்பாட்டிலிருந்து பிரசங்கிப்பது ஏன் அவசியம்?

பழைய ஏற்பாடு வேதத்தின் ஒரு பகுதி. அதிலிருந்து பிரசங்கம் செய்ய வேண்டியது மிக மிக அவசியம். ஒரு கண்ணோடு மட்டும் எப்படி வாழ முடியாதோ அதேபோல் பழைய ஏற்பாடு இல்லாமல் வாழ முடியாது. இவ்விதழில் ஜெப்ரி தோமஸ் அதன் அவசியத்தை வலியுறுத்திக் காட்டுகிறார்.

பழைய ஏற்பாட்டிலிருந்து பிரசங்கிப்பது ஏன் அவசியம்?

1. இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டிலிருந்தே பிரசங்கித்தார்

எல்லாவிதமான சந்தர்ப்பங்களிலும் இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டிலிருந்தே பிரசங்கம் செய்தார். தான் பிசாசினால் சோதிக்கப்பட்டபோதும், தனது எதிரிகளுக்குப் பதிலளித்தபோதும், தன்னை விசுவாசிக்கும்படி மக்களை அழைத்தபோதும், தனது விசுவாசத்தை வலியுறுத்தவும், முக்கியமாக தமது பிரசங்கத்திற்கும் கிறிஸ்து பழைய ஏற்பாட்டையே பயன்படுத்தினார். பழைய ஏற்பாட்டின் அனைத்துப் பகுதிகளையும் கிறிஸ்து தனது பிரசங்கத்தில் பயன்படுத்தியுள்ளார். நமது ஆண்டவரின் பிரசங்கங்களில் பத்துவிகிதமானவை பழைய ஏற்பாட்டு நூல்களில் இருந்தே கொடுக்கப்பட்டன. இன்று அநேகர் கேள்விக்குரியதாகக் கருதும் பகுதிகளில் இருந்தும் அவர் பிரசங்கித்துள்ளார். உதாரணமாக ஆதியாகமம் 2, நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளம், லோத்து மனைவி உப்புத் தூணாக மாறுதல், யோனாவை மீன் விழுங்குதல் அத்தோடு நினிவே மக்கள் மனந்திரும்புதல் ஆகிய பகுதிகளை அவர் பயன்படுத்திப் பிரசங்கித்துள்ளார். இயேசு கிறிஸ்து ஐந்து பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளை நேரடியாக பெயரைக் குறிப்பிட்டு எடுத்துக் காட்டியுள்ளார்.

2. அப்போஸ்தலர்களும் பழைய ஏற்பாட்டிலிருந்தே பிரசங்கம் செய்தனர்.

பெந்தகோஸ்தே நாளில் எருசலேமில் நிகழ்ந்த மற்ற எல்லா நிகழ்ச்சிகளையும்விட மேலானதாக இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் ஒருவரான பேதுருவின் பழைய ஏற்பாட்டிலிருந்து கொடுக்கப்பட்ட பிரசங்கம் அமைந்திருந்தது. பேதுரு பழைய ஏற்பாட்டை சாதாரண மனிதர்களின் வார்த்தைகளாகக் கருதாமல், அவற்றை “தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்” என்று கருதினார் (2 பேதுரு 1:21). இதேபோல் பவுல் அப்போஸ்தலனும் பழைய ஏற்பாடு “தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்று நம்பினார் (2 தீமோத்தேயு 3:16). ரோமில் இருந்த அந்நியர்களைக் கொண்டதாக அமைந்திருந்த சபைக்கு எழுதிய நிருபத்தில், “முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது” என்று குறிப்பிட்டார் (ரோமர் 15:4), வனாந்தரத்தில் இஸ்ரவேலர்கள் மேல் வந்த கர்த்தரின் நியாயத்தீர்ப்பைப்பற்றி பவுல், கிரேக்கர்களை அதிகமாகக் கொண்டமைந்திருந்த கொரிந்து சபைக்கு எழுதிய நிருபத்தில் “இவைகளெல்லாம் நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டிருக்கின்றது” என்று கூறியுள்ளார் (1 கொரி. 10:11).

3. புதிய ஏற்பாட்டைவிட பழைய ஏற்பாட்டிலேயே சில சத்தியங்கள் முழுமையாக விளக்கப்பட்டுள்ளன.

படைப்பின் மூலம் அண்ட சராசரங்கள் எல்லாவற்றினதும் ஆரம்பம் பற்றி பழைய ஏற்பாட்டிலேயே முழுமையாக விளக்கப்பட்டுள்ளன. மனிதனுடைய படைப்பு, ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான உறவு, திருமண பந்தம், மனைவி ஏன் கணவனுக்கு கீழ்ப்படிந்து அவனது தலைமையை ஏற்று நடக்க வேண்டும் என்பவை பற்றிய உண்மைகள் பழைய ஏற்பாட்டிலேயே பூரணமாக விளக்கப்பட்டுள்ளது. பாவத்தின் தன்மை, அது எவ்வாறு உலகிற்குள் நுழைந்தது, மனிதனது வீழ்ச்சி என்றால் என்ன? கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் காணப்படும் இடைவெளிக்குக் காரணம் என்ன? அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் யாவை என்பதற்கான முழு விளக்கமும் பழைய ஏற்பாட்டிலேயே தரப்பட்டுள்ளது. கடவுளின் தன்மையும், அவரது குணாதிசயங்களும், வல்லமையும், பரிசுத்தமும், அவரது தன்மைக்கு முரணான பாவத்திற்கு எதிரான அவரது கோபம் ஆகியவை பழைய ஏற்பாட்டிலேயே விளக்கப்பட்டுள்ளன. கடவுள் மனிதனோடு தான் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையிலேயே செயற்படுகிறார் என்பதையும், வரப்போகும் மேசியா பற்றிய வாக்குத்தத்தத்தையும், லேவிய பலியீடுகளின் மூலமாக விளக்கப்பட்டுள்ள அவரது வருகைக்கான ஆயத்தங்கள் பற்றியும் பழைய ஏற்பாடு மட்டுமே விளக்குகின்றது. கர்த்தரை நாம் எவ்வாறு சங்கீதங்களாலும், கீர்த்தனைகளாலும், ஞானப்பாட்டுக்களாலும் ஆராதிக்க வேண்டும், நமது ஸ்தோத்திரங்களின் தன்மை, அமைப்பு ஆகியவை பற்றி பழைய ஏற்பாட்டின் சங்கீதப்புத்தகம் விளக்குகின்றது. வேதத்தின் அறுபத்தி ஆறு நூல்களில் இது மட்டுமே கீர்த்தனை நூலாக உள்ளது.

4. பழைய ஏற்பாட்டிலேயே கிறிஸ்தவ அனுபவங்களின் தன்மை முழுமையாக விளக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ வாழ்க்கையில் ஏற்படக்கூடிய போராட்டங்கள், சந்தேகங்கள், பிரச்சனைகள், வீழ்ச்சி, ஆவிக்குரிய மீட்சி மற்றும் கர்த்தர் நம்மைக் கைவிட்டுவிட்டார் என்றெண்ணி உணர்ந்து கதறும் அனுபவம், மறுபடியும் கர்த்தருடன் ஐக்கியத்தில் வரும்போது ஏற்படும் மகிழ்ச்சி ஆகியவற்றை பழைய ஏற்பாட்டிலேயே மிக விளக்கமாகப் பார்க்கலாம். இவற்றை சங்கீதப்புத்தகத்திலும், தீர்க்கதரிசனபுத்தகங்ளிலும் காணலாம். கடவுளுடைய மக்கள் எவ்வளவு தூரம் இருதயம் கடினப்பட்டு கர்த்தருக்கு எதிரானவர்களாக மாறலாம் என்றும், அவர்களைத் திருத்துமுகமாக கர்த்தர் எந்தவகையில் அவர்களைத் தண்டித்து திருத்துகிறார் என்றும் பழைய ஏற்பாடு அற்புதமாக விளக்குகின்றது. கர்த்தர் பழைய உடன்படிக்கையின் மக்கள் தவறிழைத்தபோது அவர்களைத் தண்டித்து மீட்ட அனுபவங்களில் இருந்தே நாம் எழுப்புதல் கோட்பாட்டினைப் பெற்றுக் கொள்கிறோம்.

5. பழைய ஏற்பாட்டின் வெளிப்படுத்தல் மூலமாகவே கர்த்தர் தம்மை உலகத்திற்கு வெளிப்படுத்தினார்.

கடவுள் திடீரென சடுதியாக கிறிஸ்துவின் தோற்றம், வாழ்க்கை, போதனை, மரணம், உயிர்தெழல் என்பவற்றின் மூலம் அல்லாது பழைய ஏற்பாட்டின் மூலமே முதலில் தன்னை வெளிப்படுத்தினார். புதிய ஏற்பாட்டின் மத்தேயு, மாற்கு ஆகிய புத்தகங்களின் ஆரம்ப அத்தியாயங்கள் பழைய ஏற்பாட்டு கிறிஸ்தவர்களைப் பற்றியே விபரிக்கின்றன. அத்தோடு இப்பகுதிகள் இயேசு கிறிஸ்துவின் வருகையை எடுத்துக் காட்டி அதற்கு அத்திவாரமிடுகின்ற பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களையே விபரிக்கின்றன. கிறிஸ்துவின் அரசாட்சி, தாழ்மை ஊழியம், நித்தியஜீவன், ஆசாரியத்துவம் என்பன போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் பழைய ஏற்பாட்டு உடன்படிக்கையையே ஆதாரமாகக் கொண்டுள்ளதோடு, பழைய ஏற்பாட்டிலேயே அவை உயிர்பெறுகின்றன. ஆகவே, இயேசு கிறிஸ்து இவ்வுலகில் தோன்றியபோது அவர் போதிப்பதற்குத் தயாராக இருந்தன. கடவுள் இவ்வாறே செயற்படுவதோடு, புதிய ஏற்பாடு இயற்கையாகவே பழைய ஏற்பாட்டை ஆதாரமாகக் கொண்டு வளர்ந்துள்ளது.

பழைய ஏற்பாட்டிலிருந்து பிரசங்கம் செய்வது மிகப் பெரிய பாக்கியமாகும். நமது வளரும் இளம் சபைகளில், ஆத்துமாக்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்குப் பயன்படும்படியாக யாத்திராகமம், பத்துக்கட்டளைகள் ஆகியவற்றில் இருந்து சிறு தொடர்பிரசங்கங்கள் செய்வது பயனுள்ளதாக இருக்கும். அத்தோடு தாவீதின் வாழ்க்கை, எலியா, எலிசா, யோனா, யோசுவாவின் புத்தகம், சங்கீதத்தின் சில பகுதிகள், தானியேல், சகரியா ஆகிய நூல்களின் ஆரம்ப அத்தியாயங்கள் ஆகியவற்றில் இருந்து சிறு தொடர்களாகப் பிரசங்கம் செய்வது மிகப்பயன் தரும். இவ்வேதப்பகுதிகளில் நாம் பார்க்கக் கூடிய வாழ்க்கைமுறை, விசுவாசப் பின்னணி, போராட்டங்கள் அனைத்தையும் 75% சதவிதமான உலகக் கலாச்சாரங்களில் இன்று பார்க்கக்கூடியதாக உள்ளது. பழைய ஏற்பாடு முடிவுக்கு வருமுன்பாக இவ்வுலகம் அழிந்து போகும்.

2 thoughts on “பழைய ஏற்பாட்டிலிருந்து பிரசங்கிப்பது ஏன் அவசியம்?

    • பிரசங்கத்தைப் பற்றி அதிகமாக இதழில் பல தடவைகள் எழுதியிருக்கிறேன். முந்தைய இதழ்களைத் தேடி வாசியுங்கள். அத்தோடு, பிரசங்கத்தைப் பற்றி ஒரு நூலையும் வெளியிட்டிருக்கிறேன். அதையும் பெற்றுப் பயனடையலாம்.

      Like

மறுமொழி தருக