நமக்கொரு பாலகன் பிறந்தார்

ஏசாயா தீர்க்கதரிசி நூலில் (9:6) ‘நமக்கொரு பாலகன் பிறந்தார்’ என்ற இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளை நாம் வாசிக்கிறோம். கிறிஸ்துமஸ் தினத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றபோது இந்த வார்த்தைகளை நான் சிந்தித்துப் பார்க்கிறேன். பலரையும் கிறிஸ்து இயேசுவின் பிறப்பை சிந்தித்துப் பார்க்க வைக்கும் நாளாகவும், இன்னும் அநேகருக்கு வெறும் களியாட்ட நாளாகவும் கிறிஸ்துமஸ் தொடர்ந்து இருந்துவருகிறது. அதையெல்லாம் ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு ஏசாயாவின் வார்த்தைகளை அளந்து பார்க்க விரும்புகிறேன். ஏசாயா இந்த இடத்தில் இயேசு கிறிஸ்துவின் முதலாவது வருகையைப் பற்றிய தீர்க்கதரிசன வார்த்தைகளை நம்முன் வைக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. வல்லமை கொண்ட வார்த்தைகள் இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள்; இவற்றின் அர்த்தங்கள் மிகவும் ஆழமானவை.

ஏன் ஏசாயா ‘நமக்கொரு பாலகன் பிறந்தார்’ என்று சொல்லியிருக்கிறார்? இவை பரிசுத்த ஆவியானவர் ஏசாயா மூலம் நமக்களித்திருக்கும் தீர்க்கதரிசன வார்த்தைகள். இயேசுவைப் பற்றி என்னென்னவெல்லாமோ சத்தியங்களை பரிசுத்த ஆவியானவர் இந்த இடத்தில் விளக்கியிருக்கலாம். ஆனால், அவர் குறிப்பாக ‘நமக்கொரு பாலகன் பிறந்தார்’ என்று இயேசுவின் பிறப்பைப் பற்றி விளக்குவதைக் கூர்ந்து கவனிக்காமல் இருக்கமுடியாது. இயேசு பாலகனாக, குழந்தையாக பிறக்க வேண்டியிருந்தது. கன்னி மேரியின் வயிற்றில் பரிசுத்த ஆவியானவரின் மூலம் அவர் பிறப்பிக்கப்பட்டார் என்கிறது வேதம். நமக்கு அவர் ஒரு பாலகனாக இந்த உலகத்தில் பிறந்தார். அந்த உண்மையை ஒருவராலும் மறுதலிக்கமுடியாது.

பாலகன் இயேசுவின் பிறப்பே பேரதிசயமானது. மாடமாளிகையில், பணிவிடை செய்யும் தாதியர் புடைசூழ ராஜ மரியாதைகளோடு பாலகன் இயேசு பிறக்கவில்லை. அதையெல்லாம்விட மேலான மரியாதைகளுக்கு அனைத்துத் தகுதியும் அவருக்கு இருந்தபோதும் வேதம் சொன்னபடி வெறும் சாதாரண ஆட்டுத்தொழுவத்தில், தாயும் தந்தையும் பக்கத்தில் இருக்க எளிமையான முறையில் இயேசு பாலகன் பிறந்தார். அத்தனை பெரிய வரலாற்று நிகழ்ச்சியை உலகம் அன்று அறிந்திருக்கவில்லை; கொண்டாடிக் களியாட்டத்தில் ஈடுபடவில்லை. உலகத்திற்கு சமாதானத்தையும், விடுதலையையும் தரக்கூடிய ஒரே தேவபாலகன் அன்று பிறந்திருந்தபோதும் அதெயெல்லாம் உணராது உலகம் உறங்கிக்கொண்டிருந்தது.

இயேசுவின் பிறப்பை, அது நடக்கவில்லை என்று உலகை நம்பவைக்க ஏரோது இராஜா என்னென்னவெல்லாமோ செய்து பார்த்தான் (மத்தேயு 2:1-6). பிறக்கப்போகும் குழந்தை இயேசுவால் தன் உயிருக்கும், உடமைக்கும், பதவிக்கும் ஆபத்து என்று கேள்விப்பட்ட அவன் தன் அதிகாரத்தையும் படைபலத்தையும் பயன்படுத்தி இயேசு பிறந்த நாளில் பிறந்த அத்தனை யூத ஆண்குழந்தைகளையும் கொன்றுகுவித்து இயேசு பிறக்கவில்லை என்று நிரூபிக்கப் பார்த்தான். இது வரலாற்றில் நிகழந்த பெருங்கொடுமை. தங்களுடைய குழந்தைகளை இழந்து யூதத்தாய்மார்கள் கதறி அழுத நெஞ்சையுருக்கும் நிகழ்வு இது. அன்று ஏரோது நினைத்தது நடக்கவில்லை. எப்படி நடக்க முடியும்? ‘நமக்கொரு பாலகன் பிறந்தார்’ என்ற வார்த்தைகள் சாதாரண மனிதர்களின் வார்த்தைகளா என்ன? இவை கர்த்தரின் தீர்க்கதரிசன வார்த்தைகள். தீர்க்கதரிசனங்கள் நிறைவேறாமல் போகாது. அதன்படி கர்த்தர் பாலகனாகிய இயேசுவைப் பாதுகாத்து வந்தார். யோசேப்புவுக்கும் மேரிக்கும் ஏற்கனவே நடக்கவிருக்கும் கொடுமையை விளக்கி அவர்கள் வேறு தேசத்தில் தப்பிப்போய் வாழ்ந்து ஏரோதின் கையில் அகப்படாமல் இருக்க வழிசெய்தார் பரத்தின் தேவன். விண்ணில் தோன்றிய நட்சத்திரங்கள் வழிகாட்ட சாஸ்திரிகள் பாலகனாகிய இயேசுவை சந்தித்துப் போற்றிப் பரிசுகள் அளித்தார்கள். நமக்கொரு பாலகன் பிறக்கத்தான் வேண்டும் என்று வேதம் ஆணித்தரமாக ஏசாயா மூலம் அறிவித்திருக்கும்போது அந்தப் பாலகனை ஏரோதோ இந்த உலகமோ எப்படி உதறித்தள்ள முடியும்?

ஏசாயா 7:14 சொல்லுகிறது,

இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.

எத்தனை அர்த்தமுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளிவை. இயேசுவின் தாய் மேரி ஆவியினால் கர்ப்பவதியாகி ஒரு பாலகனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடப்படும் என்கிறது வேதம். அந்தப் பெயரைக் கவனியுங்கள். தேவன் நம்மோடிருக்கிறார் என்பது அதற்கு அர்த்தம். இயேசு பிறப்பதற்கு 700 வருடங்களுக்கு முன்பே ஏசாயா இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளைத் தந்திருக்கிறார். பிறக்கப்போகும் பாலகன் சாதாரண குழந்தையல்ல; அவர் நம்மோடென்றென்றும் இருக்கப்போகும் தேவன்.

பிறக்கப்போகும் நம் பாலகன் எங்கு பிறக்கப்போகிறார் என்பதையும் வேதம் முன்னுரைத்திருக்கிறது. மீகா 5:1-2 ஆகிய வசனங்களைக் கவனியுங்கள்,

எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது.

பாலகன் இயேசு இஸ்ரவேலிலுள்ள பெத்லகேம் எனும் சிற்றூரில் பிறக்கப் போகிறார் என்பதை வேதம் முன்கூட்டியே நமக்கு தீர்க்கதரிசி மீகாவின் மூலம் அறிவித்திருக்கிறது. மத்தேயு 2:1-6 ஆகிய வசனங்கள் இந்தத் தீர்க்கதரிசனத்தின்படி இயேசு பெத்லகேமில் பிறந்ததை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.

பாலகன் இயேசு அரசன் தாவீதின் குலத்தின் வழியில் பிறக்கப்போவதையும் இஸ்ரவேலின் இராஜாக்களையெல்லாம்விட பேரரசனாக இருக்கப்போவதையும் ஏசாயா 11:1-10 வரையுள்ள வசனங்கள் விளக்குகின்றன. தாவீதின் தந்தையான ஈசாயின் வழியில் இயேசு பாலகன் பிறப்பார் என்கின்றன இவ்வசனங்கள். ஆவியினால் நிரம்பியிருக்கப்போகிற அவர் ஆளுகிறபோது பூமி கர்த்தரை அறிகிற அறிவினாலே நிறைந்திருக்கும் என்கின்றன இத்தீர்க்கதரிசன வசனங்கள். பாலகன் இயேசு பிறந்து ஆத்துமாக்களின் இருதயங்களை ஆளப்போகிற வரலாற்று நிகழ்வை விளக்குகின்ற இன்னும் ஏராளமான பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசன வசனங்களை நம்மால் எடுத்துக்காட்ட முடியும். எந்த மனிதனும் மறுதலிக்க முடியாதபடி இத்தீர்க்கதரிசனங்களின்படி பாலகன் இயேசு பிறந்ததை மத்தேயுவும், லூக்காவும் புதிய ஏற்பாட்டில் விளக்கியிருக்கிறார்கள்.

இயேசு பிறந்த வரலாற்று நிகழ்ச்சியை மறுதலிக்க லிபரல் உலகம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கிறிஸ்துமஸ் தினத்தை நினைத்துப் பார்க்கக்கூடாது என்று ஒரு கூட்டம் அமெரிக்காவில் கிளம்பியிருக்கிறது. கிறிஸ்துவின் பெயரே இல்லாத ஒரு ‘கிறிஸ்துமஸ்’ அவர்களுக்கு வேண்டுமாம். இன்னும் ஒரு பகுதி ஏனைய மதத்தவர்களின் மனதைப் புண்படுத்தும் என்பதற்காக பொது இடங்களில் கிறிஸ்துமஸ் சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்கிறது. மதசுதந்திரத்தைத் தன்னுடைய சட்ட அமைப்பில் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கே இன்று இந்த நிலை. இதற்கு எதிராக கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறப்பை நினைத்துப் பார்க்க அந்நாட்டில் பாடுபட்டுவருகிறார்கள். நமக்கொரு பாலகன் பிறந்தார் என்பதை மறுதலித்துவிட்டால் கிறிஸ்தவத்தை பலவீனப்படுத்திவிடலாம் என்று நினைக்கிறது லிபரல் உலகம். இயேசுவின் பிறப்பை மட்டுமல்ல, அவர் மரித்து உயிர்த்தெழுந்ததையும் மறுதலிக்க, அவரை ஏற்றுக்கொள்ள மறுத்த யூத உலகம் அன்று பெருமுயற்சிகளைச் செய்யவில்லையா? அதேபோல் இன்றும் இயேசுவுக்கு எதிரானவர்கள் கிளம்பியிருக்கிறார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை.

நமக்கொரு பாலகன் பிறந்தார்; நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் என்ற ஏசாயாவின் வார்த்தைகள் நம் காதுகளுக்கு எத்தனை இன்பத்தைத் தருகின்றன தெரியுமா? இந்த வார்த்தைகளை ஏசாயா அறிவித்த காலத்தில் வட இஸ்ரவேலரின் காதுகளுக்கு அவை தேனாக இருந்தன. அவர்கள் கர்த்தரின் வார்த்தையைப் புறக்கணித்து அதன் பலாபலன்களை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். அசீரிய அரசனின் கட்டுப்பாட்டின் கீழ்வந்து செபுலோனும், நப்தலியும் சமாதானத்தை இழந்து வாழ்ந்திருந்தார்கள். இப்போது ஏசாயா தீர்க்கதரிசி அப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருந்த அதே பிரதேசத்தில், கலிலேயா கடற்கரைப் பகுதியில் கர்த்தர் அனுப்பும் மேசியாவாகிய பாலகன் பிறக்கப்போகிறார் என்று அறிவிக்கிறார். அந்தப்பகுதியில் காணப்படும் இருட்டை அகற்ற மேசியா வரப்போவது மட்டுமன்றி முழு உலகுக்கும் ஒளிவீசச் செய்ய அவர் வருகிறார் என்கிறார் ஏசாயா.

கர்த்தருக்கெதிராகப் பாவத்தைச் செய்து அதைத்தொடர்ந்து கொண்டிருக்கும் உலகத்தை நியாயமாகவே கர்த்தர் அழித்துவிட முடியும்; அப்படிச்செய்வது நியாயமானதுதான். இருந்தபோதும் அநியாய உலகை அழித்துவிடாமல் அதன் விடுதலைக்கு வழிகோள தன்னுடைய ஒரே குமாரனாகிய இயேசுவைக் கர்த்தர் அனுப்பினார்.

யோவான் 3:16

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

2 கொரிந்தியர் 4:6

இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.

ஏசாயா சொல்லுகிறார், நமக்கொரு பாலகன் பிறந்தார்; நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் என்று. இந்த வார்த்தைகளின் பொருள் நம்மை மலைக்கச் செய்யவேண்டும். இயேசு நமக்குக் கொடுக்கப்பட்ட சமாதானமும் விடுதலையுமாகும். வேறு வழிகளில் நமக்கு விடுதலை கிடைக்க முடியாது. நம்மால் நம்மைப் பாவத்தில் இருந்து விடுவித்துக்கொள்ள வழியில்லை. பாவ உணர்வற்றவர்களாக நாம் வாழ்ந்து வந்திருக்கிறோம். நாம் இந்த உலகில் நாடுகின்ற விடுதலை பாவத்தைத் தொடர்ந்து செய்வதற்காக மட்டுமே இருக்கமுடியும். மனித இனம் சுயநலம் கொண்டது. தன்னைப் பற்றியும் தன் சுகத்தைப் பற்றியும் மட்டுமே அதற்குக் கவலை. நம்மைப் படைத்தவரைப்பற்றி அது என்றுமே கவலைகொள்ளுவதில்லை. பாவத்தின் தன்மையை மனிதன் உணராதிருப்பதற்குக் காரணமே பாவம் அந்தளவுக்கு அவனை ஆளுவதுதான். தன்னைத் தானே விடுவித்துக்கொள்ள வழியில்லாத பாவச்சிறையில் வாழ்ந்துகொண்டிருக்கிறான் மனிதன். இந்தச் செய்தி கூட மனிதனுக்கு சிரிப்பை உண்டாக்கும். அந்தளவுக்கு பாவ உணர்வற்றவனாக மனிதன் இருக்கிறான்.

மனிதனின் இந்தத் தன்மையைத்தான் வேதம் இயலாமை என்று வர்ணிக்கிறது. மனிதனின் இயலாமையை மனிதன் அறியாமல் இருக்கும்படி பாவம் அவனை ஆண்டுகொண்டிருக்கிறது. கிருபையின் தேவன் மனிதன் மேல் இரக்கங்காட்டி அவனுக்காக, அவனுடைய விடுதலைக்காக ஒரு பாலகனை அனுப்பி இந்த உலகத்தில் பிறக்கும்படிச் செய்தார். அவருடைய ஒரே குமாரனை கிருபையாய் அனுப்பி வைத்தார். தேவனுடைய கிருபையின் அடையாளமே இயேசு கிறிஸ்து. அவர் நமக்காகப் பிறந்த தேவகுமாரன்; நமக்காகக் கொடுக்கப்பட்ட தேவகுமாரன். நாம் பாவவிடுதலை அடைந்து முழு சமாதானத்தோடு கர்த்தரோடு உறவாட அவர் நமக்காகப் பிறந்தார்.

பாலகனாக இயேசு நம்மத்தியில் பிறந்ததன் அர்த்தத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். நமக்கு பாவவிடுதலை பெற்றுத்தர இயேசு எடுக்கவேண்டியிருந்த நடவடிக்கைகள் அநேகம். முதலில் தேவனாகிய அவர் மனித உருவெடுத்து முழுமானிடத்தைத் தன்னில் கொண்டிருக்க வேண்டியிருந்தது. அது பாலகனாக அவர் பிறவாமல் நடக்க முடியாது. நம்முடைய பிறப்புக்கும் அவருடைய பிறப்புக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது. நாம் பாவத்தில் பிறந்தோம்; அவர் பாவமில்லாமல் பிறந்தார். அவருடைய மானுடத்தில் பாவத்திற்கு இடமிருக்கவில்லை. அவருடைய பிறப்பும் பரிசுத்த ஆவியினால் மேரியின் வயிற்றில் நிகழ்த்தப்பட்ட கிரியை. தேவனும் மனிதனுமாய் இயேசு பாலகன் பிறந்தார்.

அவர் தேவகுமாரனாக இருந்தபோதும் எல்லா மனிதர்களையும் போல வாழவும் வளரவும் வேண்டியிருந்தது. மானுடத்தில் எந்தக்குறையும் இல்லாது அவர் எல்லோரையும் போல வளர்ந்து வாழ்ந்தார். பாவத்தின் கோரத்தை அவர் அறிந்திருந்தபோதும் அவரில் பாவம் இல்லாதது மட்டுமல்ல, அவர் பாவத்தை செய்ய முடியாதவராக முழுப்பரிசுத்தத்தோடு இருந்தார். இருந்தபோதும் எல்லாவிதத்திலும் நம்மைப்போல அவர் சோதனைக்குள்ளானார். எந்தச் சோதனையிலும் அவர் தோல்வியடையவில்லை. அத்தகைய பூரண தெய்வீகத்தையும் மானுடத்தையும் தன்னில் கொண்டு நம் பாலகன் பிறந்தார். இதெல்லாம் வேதத்தில் தீர்க்கதரிசனமாக சொல்லியிருந்தபடி அவரில் நிகழ்ந்தன. அவர் நியாயப்பிரமாணத்தை பாலகனாக இருந்து வளர்ந்து வருகின்றவரையிலும் தொடர்ந்து தன்னில் நிறைவேற்றவேண்டிய கடமைப்பாட்டைக் கொண்டிருந்தார். அத்தனையையும் பிதாவின் சித்தப்படி அவர் முழுமையாக நிறைவேற்றியதாக வேதம் சொல்லுகிறது.

எத்தனை அருமையான நற்செய்தியை ஏசாயா நமக்கு நினைவுறுத்துகிறார். நமக்கொரு பாலகன் பிறந்தார். வரப்போகிற கிறிஸ்துமஸ் தினம் இந்தச் செய்தியைத்தான் நமக்குத் தருகிறது. இஸ்லாமிய தீவிரவாதத்தாலும், ஐசிலின் அக்கிரமச் செய்கைகளாலும், பாவத்தின் கோரத்தாலும் மனிதகுலம் தள்ளாடித் தடுமாறி எப்படியிருக்கப்போகிறதோ புதிய வருடமென்று அதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில், வரப்போகும் கிறிஸ்துமஸ் நம்மத்தியில் பிறந்து வாழ்ந்து மரித்து உயிர்த்தெழுந்து விண்ணில் வீற்றிருக்கும் ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவான நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருமைப் பிறப்பை நினைவூட்டி அவர் மட்டுமே அளிக்கக்கூடிய கிருபையின் சமாதானத்தை எண்ணிப்பார்க்க நம்மை இருகரம் நீட்டி அழைக்கிறது.

நம்மத்தியில் பிறந்து வாழ்ந்திருக்கும் நம் பாலகன் எத்தகையவர் தெரியுமா? ஏசாயா சொல்லுகிறார்,

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

பாலகனாகிய இயேசுவின் தோளின் இருக்கிறது கர்த்தத்துவம். ஈடு இணையில்லாப் பெயர்களுக்கெல்லாம் சொந்தமான வல்லமையுள்ள தேவன் அவர். அந்த சமாதானப்பிரபு இலவசமாக, கிருபையின் மூலம் அளிக்கின்ற தேவ சமானத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? அல்லது கலக்கமும், குழப்பமும், துன்பமும் தொடர்ந்து உங்கள் இருதயத்தை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கின்றனவா? இந்தக் கிறிஸ்துமஸ் தினம் உங்களுக்குக் கொண்டுவருகிறது நல்ல செய்தி. நம் பாலகன் இயேசு தரும் சமாதானத்தை அவரை ஆண்டவராக விசுவாசித்து உங்கள் பாவங்களுக்கெல்லாம் அவரிடமிருந்து மன்னிப்புப்பெற்று ராஜாதி ராஜாவான அவருடைய ஆளுகைக்குள் வாருங்கள். வீணான உலகத்திற்கும் அதன் சுகங்களுக்கெல்லாம் புறமுதுகு காட்டி பாலகனாகப் பிறந்து நமக்கு வாழ்வளிக்க வந்திருக்கும் இயேசு கிறிஸ்துவிடம் அவர் தரும் அன்பை ருசிக்கப் பறந்தோடி வாருங்கள். என்னிடத்தில் வருகிறவர்களைத் தள்ளிவிட மாட்டேன் என்று சொல்லியிருக்கிறபடி இயேசு கிறிஸ்து உங்களைத் தன் கிருபையால் போஷித்து நித்திய வாழ்வளிப்பார்.

நமக்கொரு பாலகன் பிறந்தார்
நல்லதைச் செய்ய முடியாத நம்மைக்காக்க
நமக்கொரு குமாரன் தரப்பட்டார்
நரகத்திலிருந்து நித்திய விடுதலையளிக்க

இயேசு பாலகனை இனிதே நினைப்போம்
பாவவிடுதலைக்காக அவர் பாதம் பணிவோம்
மனந்திரும்புவோம்; மன்னிப்பு அடைவோம்
மகிழ்வோடு அவர் தரும் இரட்சிப்பை ருசிப்போம்

நாட்களைக் கடத்தி நேசரைத் துறந்து
பாவத்தைத் தொடர்வதால் பலன் நமக்கில்லை
காலத்தைப் போக்காது கிறிஸ்துவை விசுவாசித்தால்
மலரும் நம் வாழ்வு; மரகதப்பூப்போல.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 30 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக