நரேந்திர மோடியின் குஜராத்!

குஜராத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பாகிஸ்தானை ஒட்டிக்கொண்டு இந்தியாவின் மேற்குப் பகுதியில் இருக்கும் மாநிலம் குஜராத். காந்தி பிறந்த மாநிலம் என்பது அநேகருக்கு மறந்து போயிருக்கும். அறுபது கோடி மக்களுக்கு மேல் வாழும் இந்தியாவின் பணச் செழிப்புள்ள மாநிலம் இது. பெட்ரோலும், வைரக்கல் வியாபாரமும், விவசாயமும் மாநிலத்தை செழிப்பாக்கியிருக்கின்றன. குஜராத்தியர் வியாபாரத்தில் கைதேர்ந்தவர்கள். உலகம் பூராவும் குஜராத்திகள் குடியேறி வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தற்போதைய மாநில முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி தன் நிர்வாகத் திறமையால் மாநிலத்தை பணச் செழிப்புள்ளதாக்கியிருக்கிறார். அநேக தொழிலகங்கள் உருவாக வழிவகுத்து முதலீடுகளுக்கு ஊக்கங் கொடுத்திருக்கிறார். இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தைப் பெற்றிருக்கும் குஜராத் மின்சார உற்பத்தியிலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னணியில் இருக்கிறது.

குஜராத்தின் கிராமங்கள் தமிழ்நாட்டுக் கிராமங்களைவிட வித்தியாசமானவை. கிராம வீட்டுத் சுவர்கள் மாட்டுச் சாணமும், மண்ணும் சேர்ந்த கலவையால் எளிமையாக அதிக தடிப்பில்லாமல் கட்டப்பட்டிருக்கும். வீடுகள் பெரிய அறைகளைக் கொண்டு இருப்பதோடு தரை முதல் அனைத்தும் துப்புறவாக கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். அதில், எளிமை, துப்புறவு, ஒழுங்கு இம்மூன்றையும் கவனிக்காமல் இருக்க முடியாது. ஒவ்வொரு வீட்டுக்கு முன்னும் ஒரு எருமை மாட்டையாவது காணலாம். தமிழ்நாட்டு எருமையைவிட உருவத்தில் இந்த எருமைகள் பெரிதானவை. அதுவும் மிகச் செழிப்பாகவும் இருக்கும். ஒவ்வொன்றும் 30,000 ரூபாய் என்று கேள்விப்பட்டேன். ஒரு நாளைக்கு பத்து லீட்டர் பால் தரும், ரூபாய் 450 வரும்படி. இரண்டு அல்லது மூன்று எருமைகள் இருந்தால் அதுவே பணத்தை அள்ளித்தரும். ஐந்து, ஆறு எருமைகள் நிற்கும் வீடுகளையும் அடிக்கடி பார்த்திருக்கிறேன். செட்டிலைட் டீ. வி இல்லாத வீடுகளே இல்லை. சில வீடுகளில் மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்தி வீட்டு விளக்கேற்றும் வகையில் மின்சார உற்பத்தி செய்யும் எளிமையான ஜெனரேட்டர்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டு கிராமத்தான் இந்தளவுக்கு முன்னேறவில்லையே! கிராமத்து வீதிகளும் நல்ல தார்ரோடுகள். மோடிதான் இத்தனைக்கும் காரணமா? அப்படி இருந்தால் பாராட்டத்தான் வேண்டும். இன்னொன்று தெரியுமா? குஜராத்தில் மதுவுக்கு இடமில்லை. மாநிலமெங்கும் மதுவிலக்கு அமுலில் இருக்கிறது.

குஜராத்தில் யாரோடும் பேசுவதென்றால் தொல்லைதான். பெரும்பாலும் ஆங்கிலம் பேசுபவர்கள் மிக மிகக் குறைவு. எங்கும் சைகை பாஷைதான் எனக்குக் கைகொடுத்தது. ஸ்டார் ஹோட்டல் கவுன்டரில் இருப்பவர்களுக்குக்கூட ஆங்கிலம் பேசத் தெரியவில்லை. பல்கலைக் கழக பட்டதாரிகளும், டாக்டர்கள், என்ஜினீயர்களாக இருப்பவர்களும்கூட ஆங்கிலம் அதிகம் பேசத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். பணம் மாற்றப் போனபோது நல்ல ஆங்கிலம் பேசிய ஒரு முஸ்லீம் வியாபாரியை சந்தித்தேன். என் முதல் கேள்வியே எப்படி இவ்வளவு நன்றாக ஆங்கிலம் பேசுகிறீர்கள்? என்பதுதான். அந்த மனிதர் அதற்கு ஒரு பெரிய விளக்கமே கொடுத்துவிட்டார். சவுதி அரேபியாவில் மெக்கானிக்கல் என்ஜினீயராக வேலை பார்க்கப் போனபோது ஆங்கிலத்தைப் பேசக் கற்றுக்கொண்டதாக சொன்னார். வெள்ளையர்கள் இந்தியாவுக்கு வந்தபோது முதலில் கிழக்குப் பிரதேசத்திற்கு வந்திறங்கி அங்கு கவனம் செலுத்தி வெகு காலத்துக்குப் பிறகே மேற்குப் பகுதிகளுக்கு வந்தார்களாம். குஜராத்தியர் ஆரம்பத்திலிருந்தே ஆங்கிலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்களாம். சுதந்திரத்துக்குப் பின் வந்த அரசுகளும் நாற்பது ஆண்டுகளுக்கு ஆங்கில எதிர்ப்புத் திட்டத்தின் அடிப்படையிலேயே மாநிலத்தை வளர்த்திருக்கின்றன. குஜராத்திகள் என்றாலே பணம் என்றுதான் அர்த்தம் என்றும், பட்டேல்கள் என்றால் ஓட்டல் இன்டஸ்ட்ரீ என்றும் சுவாரஸ்யமாக அந்த வியாபாரி பேசினார். குஜராத்தியர் ஆங்கிலம் இல்லாமலேயே வர்த்தகத்தையும், தொழில்களையும் வளர்த்து மாநிலத்தை மேம்படுத்தி இருக்கிறார்கள் என்றார். இப்போது வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக நரேந்திர மோடி ஆங்கிலத்தை ஒரு பாடமாக பாடசாலைகளில் வைத்திருக்கிறார் என்றும் அடுத்த ஜெனரேஷன் ஓரளவுக்கு ஆங்கிலம் பேசக்கூடியதாக இருக்கும் என்றார்.

ஒன்று தெரியுமா? தமிழ் நாட்டில் இருப்பது போல் கண்ணில்பட்ட இடமெல்லாம் நான் கோயில்களைக் குஜராத்தில் பார்க்க முடியவில்லை. அது ஆச்சரியமாக இருந்தது எனக்கு. அது ஏன் என்று கேட்டபோது நண்பரொருவர் சொன்னார், ‘குஜராத்தில் மதவெறி தான் இருக்கிறது, மதப்பற்றில்லை’ என்று. சிந்திக்க வேண்டிய விஷயம்தான். குஜராத்தை பி.ஜே.பி அரசு ஆண்டு வருகிறது. மாநில முதல்வர் மோடி ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்தவர் என்பதால் பலருக்கும் அவர் மீது சந்தேகந்தான். 2002ம் ஆண்டு முல்லீம்கள் படுகொலையும் அவருக்கு எல்லார் மத்தியிலும் வரவேற்பைக் கொடுக்கவில்லை. இருந்தபோதும் அவரைப் பிடிக்காத குஜராத்தி இந்துக்களும், ஆதிவாசியினரும்கூட தங்களுக்கு அவர்தான் பாதுகாப்பு என்று நம்புகிறார்கள். பாகிஸ்தானுக்கு பக்கத்தில் குஜராத் இருப்பதும் அஜானுபாகுவான, அதிகாரத்தோனி கொண்ட, இந்துத்துவா கோட்பாடுடைய மோதி மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. மோடியின் பெயர் வருங்கால பிரதமர் பட்டியலிலும் முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவின் பிரபல நாவலாசிரியரும், சமூக, அரசியல், பொருளாதார மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிறவருமான அருந்ததி ராய், ‘சரியாக சிந்திக்கின்ற எந்த மனிதன் மனதில் இத்தகைய எண்ணம் தோன்ற முடியும்?’ என்று அங்கலாய்க்கிறார்.

இத்தனைக்கும் மத்தியில் குஜராத்தில் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களோடு சேர்ந்து சிறுபான்மையினராக இருந்து வருகிறார்கள். மதமாற்ற சட்டம் மாநிலத்தில் அமுலில் இருந்து வருகிறது. சர்வ லோகத்துக்கும் அதிபதியாக இருந்து வரும் நம்மாண்டவர் குஜராத்திலும் தன் சபையைக் கட்டாமலில்லை. எதிர்ப்புகளுக்கும், தொல்லைகளுக்கும் மத்தியில் வளர்வது தானே கர்த்தரின் சபை. அது குஜராத்தில் மட்டும் வளராமல் இருந்து விடுமா என்ன? அமைதியாக கர்த்தரின் சுவிசேஷம் அந்த சமுதாயத்து மக்களுக்கும் ஆத்மீக விடுதலை கொடுத்து வருகிறது. கிறிஸ்தவ கீர்த்தனைகளைத் தங்களுடைய மொழியில் அழகாக ராகத்தோடு பாடுகிறார்கள் குஜராத்தி கிறிஸ்தவர்கள். மிஷனரிமார்கள் ஆங்கிலத்திலிருந்து அநேக கீர்த்தனைகளை மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவற்றை குஜராத்தி மொழியில் அவர்கள் பாடுகிறபோது வித்தியாசமே தெரியவில்லை. இந்திய மொழிகளெல்லாமே வடமொழிக் கலப்புள்ளவையாக இருப்பதால் அநேக வார்த்தைகளின் பொருளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவற்றை நாம் அடிக்கடி தமிழில் பயன்படுத்துகிறோம். அவர்கள் ஆண்டவரைப் ‘பிரபு’ என்கிறார்கள். ஜெபத்திற்கு ‘பிரார்த்தனா’ என்று பெயர். இப்படி இன்னும் பல. நான்கு மாதங்கள் இங்கிருந்தால் குஜராத்தி மொழி பேசக் கற்றுவிடலாம் போலிருக்கிறது.

கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்வது தானே மெய்க் கிறிஸ்தவம். அதை நான் குஜராத்தில் பார்க்கிறேன். நான் சந்தித்த கிறிஸ்தவர்கள் என்னை விருந்தோம்பலில் திக்கு முக்காட வைத்தார்கள். எளிமையான வாழ்க்கை முறைகொண்ட அவர்களுடைய அன்பு பெரியது. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன் குஜராத்தி வெஜிடேரியன் சாப்பாடு எனக்கு ஒத்துவரவில்லை. அது மட்டும்தான் பிரச்சனை. சப்பாத்தியை ஒரு வகை காரமோ, புளிப்போ இல்லாமல் சாடையாக இனிப்பு மட்டும் இருக்கும் உருளைக்கிழங்கு கறியோடு அவர்கள் சந்தோஷமாக சாப்பிடுகிறார்கள். நாம் வெள்ளைப் பொங்கல் செய்யப் பயன்படுத்தும் அரிசியையே சாப்பாட்டிற்கு பயன்படுத்துகிறார்கள். தொல்லைகளுக்கு மத்தியில் வளரும் மெய்கிறிஸ்தவம் இந்த உலகத்து சுகத்தை நாடாது என்பது உண்மைதான். கிறிஸ்தவர்களுக்கு குஜராத்தில் பலவகைத் தொல்லைகள் உண்டு. ஆனால், அதை அவர்கள் முகத்தில் பார்க்க முடியாது. இயேசு தரும் சந்தோஷத்தை அவர்களில் பார்க்கலாம். வேலைக்கு நூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, சபை வேண்டும் என்பதற்காக வேலை செய்யும் ஊருக்கு குடும்பத்தை மாற்றிக்கொள்ளாமல் சபைக்கு விசுவாசமாக இருக்கும் குஜராத்தி கிறிஸ்தவனில் கிறிஸ்துவின் தாழ்மையையும், அர்ப்பணிப்பையும் பார்க்கிறேன். இந்த அர்ப்பணிப்பும், தாழ்மையும், தியாகமும் தான் கிறிஸ்தவத்தை கிறிஸ்தவமாக இனங்கான உதவுகின்றன. இவை இருக்கும்போது எந்த சக்தியால் அதை அழித்துவிட முடியும். ஒன்றும், இரண்டும், பத்தும், நூறுமாக அது குஜராத்தில் வளரத்தான் செய்யும். நிலைத்து நிற்கவும் செய்யும்.

_____________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

2 thoughts on “நரேந்திர மோடியின் குஜராத்!

மறுமொழி தருக